பிப்ரவரி 19 ஆம் தேதி, வடக்கு இத்தாலியில் உள்ள மிலன் நகரம் அத்தனை கோலாகலமாய் இருக்கிறது. நகரத்தின் அத்தனை சாலைகளிலும் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. சாலைகள் மட்டுமல்ல உணவகங்கள், மதுக்கூடங்கள் எங்கும் மக்கள் நிறைந்திருக்கிறார்கள். மிலன் நகரமே திருவிழா கோலத்தில் இருக்கிறது. காரணம், அன்று நடக்கும் ஐரோப்பிய லீக்கின் ஸ்பெயினின் வெலான்சியாவிற்கும், அட்லாண்டிக் அணிக்கும் இடையேயான கால்பந்தாட்ட போட்டி.  அந்த கால்பந்தாட்ட போட்டியை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் ஸ்பெயினில் இருந்து வந்து குழுமியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது இத்தாலியின் பல்வேறு நகரங்களில் இருந்தும் கிட்டத்தட்ட நாற்பாதாயிரம் இத்தாலியர்களும் வந்திருந்தார்கள். பெர்கமோ நகரத்தின் மேயர் “கால்பந்தாட்ட மைதானம் நிரம்பி வழிந்தது. மைதானத்தில் மட்டுமல்லாமல் நகரத்தின் சிறு சிறு சந்துகளில் கூட எண்ணற்ற மக்கள் அலையலையாய் வந்து போய்க்கொண்டிருந்தார்கள்” என்கிறார்.

அந்த கால்பந்தாட்ட போட்டி முடிந்து சரியாக இரண்டாவது நாள், மிலன் நகரத்தில் இருந்து ஐம்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கொடோங்கோ நகரத்தில் 39 வயதுள்ள நபருக்கு இத்தாலியின் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. இத்தாலியில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை ஆறாயிரத்தை தொட்டபோதுதான் சுகாதாரத்துறை அலுவலர்கள் பிப்ரவரி 19 அன்று கால்பந்தாட்டம் நடந்தபோதே மிலன் நகரத்தில் 388 பேருக்கு கொரோனா தொற்று இருந்திருக்கிறது என்பதை கண்டறிந்து சொல்லியிருக்கிறார்கள். கால்பந்தாட்டம் நடந்து முடிந்த அடுத்த ஒரு வாரத்திற்குள்  கொடோங்கோ நகரத்திலும் அதன் அருகில் உள்ள இத்தாலிய நகரங்களிலும் மிக வேகமாக கொரோனா பரவத் தொடங்கியிருக்கிறது.

இத்தாலியில் மட்டுமல்ல வெலான்சியாவில் இருந்து வந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் கொரோனா மிக வேகமாகப் பரவத்தொடங்கியது. பிப்ரவரி 27 ஆம் தேதி வெலான்சியா நகரத்தில் ஆறு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. சில நாட்களில் வெலான்சியாவில் இருந்து போர்ச்சுக்கல் சென்ற நபருக்கும் நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டது அதன் பிறகு ஸ்பெயின் முழுக்க கொரோனா ஒரு காட்டுத்தீயைப் போல பரவத்தொடங்கியது. இன்று ஸ்பெயின், இத்தாலி நாடுகள் கொரோனா தொற்று எண்ணிக்கையில் உலகளவில் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் இருக்கின்றன. நேற்று ஒரு நாள் மட்டும் ஸ்பெயினில் 5000 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இறப்பின் எண்ணிக்கை இரண்டு நாடுகளிலும் பத்தாயிரத்தை தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. கொரோனா தொற்று நோயால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இரண்டு நாடுகளிலும் அதற்கு முக்கியமான காரணமாக அந்த கால்பந்தாட்ட போட்டியே சொல்லப்படுகிறது. இரண்டு நாடுகள் மட்டுமல்ல இன்று ஐரோப்பா முழுவதும் இவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதற்கு தடையின்றி நடந்த கால்பந்தாட்ட போட்டிகள் மிக முக்கிய காரணம். ஆனால் எந்த நாட்டிலும் அந்த கால்பந்தாட்ட போட்டிக்குச் சென்று வந்தவர்களின் மீது துளி வெறுப்போ, வன்மமோ இல்லை. அரசாங்கமோ, மக்களோ இதுவரை அவர்கள் மீது எந்த குற்றசாட்டையோ, பழியையோ போடவில்லை. பாதிக்கப்பட்டவர்களை மிக கருணையாகவும், கண்ணியமாகவுமே அந்தந்த நாட்டு சுகாதார துறைகள் நடத்துகின்றன.

சீனாவிலும் வூஹான் மாநகரத்தின் கடலுணவு சந்தையில் இருந்துதான் கொரோனா பரவியது. வூஹானின் அந்தச் சந்தை மிகப் பிரபலமானது. எப்போதும் ஏராளமான மக்கள் வந்து செல்லக்கூடிய ஒன்றாக இருந்தது. மீன், நண்டு, இறால் மட்டுமல்லாமல் பாம்பு, நத்தை, கடல்பூச்சிகள் என சீனாவின் பிரத்யோக கடல் மாமிசங்களை கொண்டது அந்த சந்தை. சீனாவில் கொரானா கோரத்தாண்டவம் ஆடியபோதும்கூட சீனா மக்கள் யாரும் வூஹான் நகர மக்களுக்கு எதிராக எந்தப் பிரச்சாரத்திலும், வெறுப்பிலும், வன்மத்திலும் இறங்கவில்லை. ஒரு முறை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொரானா வைரஸை “சீனா வைரஸ்” என சொன்னபோது அதற்கு உலக சுகாதார நிறுவனம் கடுமையான கண்டனம் செய்தது. “வைரஸை நாடு, இனம், மொழி, மதம் என பிரிக்க முடியாது, இது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் எதிரான போர், அதில் இதுபோன்ற பிரிவினையூட்டும், வெறுப்பூட்டும் பேச்சுக்களுக்கு இடமில்லை” என்றார் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர்.

இன்றைய சூழலில் இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இன்று இந்தியாவில் கொரோனா பரவலுக்கான ஒட்டு மொத்த பழியும் இஸ்லாமியர்களின் மீது போடப்படுகிறது. டெல்லியில் நடந்த ஒரு இஸ்லாமிய மாநாட்டை முன்வைத்து கொரானாவைத் திட்டமிட்டு பரப்புவதற்கென்றே அந்த மாநாட்டைக் கூட்டியது போல பேசத்தொடங்கிவிட்டனர். அதைத் தொடர்ந்து இஸ்லாமியர்களின் மீது தொடர்ந்து ஒரு வெறுப்பு பொது சமூகத்தில் விதைக்கப்படுகிறது. இத்தனைக்கும் அந்த மாநாடு கூடியது ஊரடங்கிற்கு முன்பாக. அப்போது எந்த தடையும் இல்லை என்னும் நிலையிலே இந்தப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.  இந்தியா முழுக்க இதுபோன்ற பல்வேறு சமூக கூடல்கள் நடந்த தினங்களில்தான் இதுவும் ஒன்றாக நடந்திருக்கிறது. ஆனால் இன்று ஒட்டுமொத்த கவனமும் இந்த மாநாட்டின் மீது மட்டும் திரும்பிவிட்டது. யார் யாருக்கெல்லாம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற ICMR இன் பரிந்துரைகளையும் மீறி நோய் அறிகுறிகள் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி டெல்லி மாநாட்டிற்குச் சென்று வந்த அனைவருக்கும் மின்னல் வேகத்தில் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வருகின்றன.

இதே பரிசோதனை முறையை தான், அதாவது “நோய் அறிகுறிகள் இல்லாதவருக்கும், வெளிநாட்டிற்குச் சென்று வந்தாலும் வராவிட்டாலும் நோய் அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கும் பரிசோதனை செய்து தனிமைப்படுத்த வேண்டும் அப்போதுதான் கொரோனாவின் பரவலை கட்டுப்படுத்த முடியும்” என  நிறைய மருத்துவ அமைப்புகளும், உலக சுகாதார நிறுவனமும் சொன்னபோதுகூட “அது இந்தியாவிற்குப் பொருந்தாது” என சொன்ன அரசாங்கம் டெல்லி மாநாட்டிற்குச் சென்று வந்தவர்களுக்கு மட்டும் அனைவருக்கும் உடனடியாகப் பரிசோதனை செய்தது எதை காட்டுகிறது? எப்போதோ காவல்துறையினரிடம் நடந்த வாக்குவாதத்தில் ஒரு இஸ்லாமிய இளைஞன் துப்பிய வீடியோவை இப்போது பகிர்ந்து இஸ்லாமியர்கள் கொரோனாவைப் பரப்புவதற்காக அனைவரின் மீதும் துப்பிக்கொண்டிருக்கின்றனர் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. உண்மையில் பிப்ரவரி மாதத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞனை சாப்பிட அனுமதிக்காததால் அப்படி நடந்துகொண்டதாக பிபிசி தமிழ் இணையதளம் இதன் உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. ஆனால் இந்த உண்மை மறைக்கப்பட்ட இஸ்லாமியர்களின் மீதான வெறுப்பை இதுபோன்ற வீடியோக்களின் வழியாக காட்டுத்தீ போல மக்களிடம் பரப்பப்படுகிறது. மக்களும் அதை உடனடியாக நம்பி விடுகிறார்கள்.  ஏனென்றால் இந்த நோய் தனக்கு வந்துவிடுமோ என்ற அச்சம் விலகி இஸ்லாமியர்களிடம் இருந்து விலகி இருந்தால் வராது என்று நம்புவது அவர்களுக்கு ஆசுவாசமாக இருக்கிறது. பொதுப்புத்தி ஒன்று இப்படித்தான் இங்கே கட்டமைக்கப்படுகிறது.

மூத்த மருத்துவர் ஒருவருடன் தொலைக்காட்சி விவாதத்திற்குச் சென்றபோது அவர் மிக இயல்பாகச் சொன்னார் “டெல்லிக்குப் போய்ட்டு வந்த முஸ்லீம்களால்தான் இந்தியாவில் கொரோனா பரவுகிறது, இல்லையென்றால் இந்தியாவில் கொரோனாவே வந்திருக்காது” என்றார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு மருத்துவர் அதுவும் அவரின் துறையில் மிகுந்த அனுபவமும் முதிர்ச்சியும் பெற்றவர் அவருக்கே இந்த எண்ணவோட்டம் தான் இருக்கிறது. ஒரு உலகளாவிய கொள்ளை நோயை ’பான்டமிக்’ என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட ஒரு தொற்று நோயை எப்படி கம்யுனலைஸ் செய்ய முடிகிறது? அதுதான் இந்தியாவின் சராசரி மனம்.

ஆனால் உண்மையில் இன்றைய நிலையில் லண்டனில் கொரோனாவிற்கு பலியான ஐந்து மருத்துவப் பணியாளர்களும் இஸ்லாமியர்கள் என்பது நமக்கு தெரியாது. லண்டனில் சிறுபான்மையினரே கொரோனா தொற்றுக்கான பிரிவில் முன்னணியில் இருக்கிறார்கள் என்கிறது அல்ஜசீரா இணையதளம்.

அறிவுபூர்வமாக ஒரு நோயை அணுகும்போது நாம் அந்த நோயின் தன்மைகளை, ஆபத்தை உள்ளது உள்ளபடியே புரிந்துகொள்ள முடியும். ஆனால் அறிவுபூர்வமான அணுகுமுறையை தடுப்பது எது? சராசரி இந்தியர்களின் மனதில் ஊறியிருக்கும் வெறுப்பே அறிவியல் கண்ணோட்டத்தைத் தடுக்கிறது. இதுபோன்ற நெருக்கடி நிலைகளில் சட்டென்று வெறுப்பின் கண் மட்டும் இந்தியர்களுக்குத் திறந்து கொள்கிறது. அதனால் அவர்களால் எதையும் முழுமையாக, நேர்மையாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை. மாறாக, அந்த வெறுப்பின் வழியாகவே புரிந்து கொள்கிறார்கள். அப்படி புரிந்துகொள்ளும்போது தான் மிகச் சாதாரணமாக ஒரு சமூகத்தின் மீது குற்றச்சாட்டை அவர்களால் வைக்கமுடிகிறது.

இப்போது நோய் தொடர்பான அத்தனை அச்சங்களும், முன்னெச்செரிக்கைகளும் மாறிப்போய் வெறுப்பு மட்டுமே பிரதானமான ஒன்றாக நமது மனதில் குடிகொண்டுவிட்டது. இந்த மனநிலையில் கொரோனா தொடர்பாகச் செய்ய வேண்டிய நம் மீது திணிக்கப்படும் அத்தனை நிர்பபந்தங்களின் போதும் நமது கோபம் சுலபமாக இஸ்லாமியர்களின் மீது திரும்பிவிடும். அரசாங்கம் தனது இயலாமைகளையும் போதாமைகளையும் மிகச் சுலபமாக இந்த வெறுப்பின் பின்னால் மறைத்துக்கொண்டு விடுகிறது. ஏனென்றால் நியாயமாக இதற்கெல்லாம் அரசாங்கத்தின் மீதுதானே மக்கள் கோபப்பட வேண்டும். மக்களின் இந்த வெறுப்பு மனநிலை ஆள்பவர்களுக்கு சாதகமாக இருப்பதால்தான் இந்த வெறுப்பை அணையவிடாமல் அவர்களும் பார்த்துக்கொள்கிறார்கள்.

இத்தாலியின் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. யாருக்கு வைத்தியம் செய்வது, யாருக்கு செய்யாமல் இருப்பது என்ற முடிவை மருத்துவர்களே எடுத்துக்கொள்ளுமாறு அரசாங்கம் கூறிவிட்டது. மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தாலும் நோயாளிகளுக்கு இடமில்லையென்றாலும், வைத்தியமே செய்யாமல் மருத்துவமனைக்கு வெளியிலே நோயாளிகள் இறக்கும் நிலையில் இருக்கும்போதும் அங்கு இதுவரை ஒரு வன்முறை சம்பவங்கள் கூட மருத்துவமனை மீதோ அல்லது மருத்துவர்கள் மீதோ இதுவரை நடக்கவில்லை. இதே நிலை இந்தியாவில் வந்தால் இப்படிப்பட்ட வன்முறைகளற்ற சூழல் இருக்குமா? இன்று இஸ்லாமியர்களின் மீதிருக்கும் வெறுப்பும் வன்மமும் நாளை மருத்துவமனைகளின் மீதும், மருத்துவர்களின் மீதும் திரும்பும் அபாயமிருக்கிறது.

ஒரு நெருக்கடி நிலையில் மக்கள் நிதானமாகவும், சூழ்நிலையைப் புரிந்து கொள்ளக்கூடியவர்களாகவும், தங்களது பொறுப்பை உணர்ந்தவர்களாகவும் இருப்பது மிகமிக அவசியமாக ஒன்று. ஆனால் அந்த மனநிலை இங்கில்லை என்றுதான் சொல்வேன் அதற்கு காரணம் இயல்பாகவே நாம் மிக உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாகவும், உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே சூழலைப் புரிந்துகொள்ளக்கூடியவர்களாகவும், உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே முடிவுகளை எடுக்கக்கூடியவர்களாகவும் இருக்கிறோம். அதனால் நிதானமாக, அறிவிற்கு உட்பட்டு நடப்பதை பகுத்தாய்கிற திறன் நமக்கு இல்லாமல் இருக்கிறது. அதனால்தான் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் வெறுப்பையும், வன்முறைகளையும் மிக எளிதாக நமது மக்கள் மனதில் பரப்ப முடிகிறது.

இரண்டு தினங்களுக்கு முன்பு, மதுரையில் ஒரு இஸ்லாமிய இளைஞருக்கு கொரோனா நோய் அறிகுறி இருந்திருக்கிறது. அந்தப் பகுதியில் உள்ளவர்கள் பரபரப்பாக ஒரு திறந்த வேனில் வைத்து அவரை உடனடியாக பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறார்கள். அவர் அந்த வேனில் ஏறுவதை படம் பிடித்து சமூக வலைதளங்களில் ’கொரோனா நோயாளி’ என பரப்பியிருக்கிறார்கள். மருத்துவமனையில் அவருக்கும் பரிசோதனை செய்து கொரோனா இல்லை என சொல்லி வீட்டிற்கு அனுப்பியிருக்கிறார்கள். திரும்ப வீட்டிற்கு வரும்போது அந்த பகுதியில் உள்ள மக்கள் ஒன்று சேர்ந்து, அவர் வந்தால் தங்களுக்கும் நோய் வந்துவிடும் என்று சொல்லி அவரை அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள். காவல்துறை தலையிட்டு பாதிக்கப்பட்டவரை அவரது வீட்டில் தனிமைப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் தொடர்ச்சியாக சுற்றியுள்ளவர்கள் கொடுத்த மனவுளைச்சலால் அந்த இளைஞர் அடுத்த நாள் காலை தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதுதான் இந்தியாவின் உண்மையான நிலை. கொரோனாவை விட இங்கு ஆபத்தானது மக்களின் மனநிலையும், வெறுப்புணர்வு, பிரிவினைகளும், பாகுபாடுகளும்தான். இந்த மனநிலை தான் இங்கு ஆபத்தானது.

இந்தியாவின் சீதோஷ்ண நிலை, வெப்பநிலை எல்லாம் நமக்கு சாதகமானது அதனால் இங்கு கொரோனா பெரிதாக பரவாது என்கிறார்கள். ஆனால் என்னை பொறுத்த வரையில் இந்திய மக்களின் மனநிலை கொரானாவிற்கு மிக சாதகமானது உலகத்தில் எங்கும் இந்த மனநிலையையும், வெறுப்பையும் கொரோனா பார்த்திருக்காது. அதனால் இவர்களை அழிக்க நாம் தேவையில்லை இவர்களின் வெறுப்பு மனநிலையே போதும் என இந்நேரம் கொரோனா முடிவு செய்திருக்கும்.