ராஜா கைய வச்சா – 3

சமீபத்தில் கர்னாடகா மாநிலத்தில் நமது ஜல்லிக்கட்டுபோல் நடக்கும் கம்பளா ரேஸ் போட்டியில் அம்மாநிலத்தின் குக்கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாச கௌடா என்னும் இளைஞர் உசேன் போல்ட்டுடன் ஒப்பிடும் அளவுக்கு அதிவேகமாக ஓடி அனைவரையும் வியப்பிலும் திகைப்பிலும் ஆழ்த்தினார். ஒரு துறையில் மேதைகள் சிலரது வருகையும் பலரை இதுபோன்றே நம்ப முடியாத வியப்பில் ஆழ்த்தும். எந்தப் பின்புலமும் முறையான பயிற்சியும் இன்றிக் களத்தில் இறங்கிய கொஞ்ச காலத்திலேயே உலகைத் தம்பக்கம் திரும்பிப் பார்க்க வைப்பார்கள்.

இசைஞானி இளையராஜாவின் திரையுலகப் பிரவேசமும் அப்படித்தான் பலரைத் திகைப்பில் ஆழ்த்தியிருக்கும். 1976 இல் வெளியான அன்னக்கிளி தொடங்கி அதே ஆண்டு பத்ரகாளி திரைப்படத்திலும் அடுத்த ஆண்டு தீபம் திரைப்படப் பாடல்களிலும் தனது மேதமையைக் கோடிட்டுக் காட்டியவர் 1977 ஆம் ஆண்டு ஒரு பாடலில் திரையுலக இசையில் ஒரு புதுப்பாய்ச்சலைப் புகுத்தி இருப்பார்.

அதற்கு முன்பும் திரை இசையில் கர்னாடக சங்கீத மரபில் அமைந்த ராகங்களைப் பயன்படுத்தி வந்தனர். தியாகராஜ பாகவதர் காலத்தில் கர்னாடக சங்கீதக் கீர்த்தனைகள் அமைந்த மெட்டுக்களிலேயே பாடல்களை அமைத்திருப்பார்கள். உதாரணத்துக்கு ‘நாத தனுமனிசம்’ என்ற சித்த ரஞ்சனி ராகக் கீர்த்தனையைப் பி.யு.சின்னப்பா ‘காதல் கனிரசமே’ என்று பாடுவார். அதன்பின் வந்த இசையமைப்பாளர்கள் மோகனம், கல்யாணி, சிந்துபைரவி போன்ற ராகங்களை எளிமைப் படுத்தி மெல்லிசையாக்கி ஜனரஞ்சகமாகத் தந்தனர்.

இசைஞானியின் பாணியோ அவர்கள் போட்ட பாதைகளின் எல்லைகளை விரிவாக்கிப் பல புதுப் பாதைகளை வகுத்தது. அதுவரை திரையிசையில் உபயோகப்பட்டிராத ராகங்களைக் கற்பனை செய்ய முடியாத வடிவத்தில் மேற்கத்திய அல்லது நாட்டுப்புறப் பாணியில் இசைக்கருவிகளின் துணையோடு
புதிய பரிமாணத்தில் படைத்திருப்பார்.

அப்படி அவரது பாணியை ஆரம்பத்திலேயே அழுத்தமாக நிரூபித்த பாடல் தான் 1977 இல் வெளிவந்த கவிக்குயில் திரைப்படத்தில் வந்த அப்பாடல். அதுவும் கர்னாடக இசை உலகின் ஜாம்பவானான பாலமுரளிகிருஷ்ணாவை அழைத்துப் பாட வைத்திருப்பார். பல்லவியைக் கேட்டதும் பாலமுரளிகிருஷ்ணா நிச்சயம் திகைத்திருப்பார். ஏனென்றால் அந்தப் பாடலுக்கு ரீதிகௌளை என்ற ராகத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். அதுவரை கர்னாடக இசையில் மட்டுமே பயன்பட்டு வந்த ராகம் அது.திரையிசையில் அப்போதுதான் முதன்முறையாகப் பயன்படுத்தப் படுகிறது.

இந்த ராகத்தின் அமைப்பு கொஞ்சம் இறுக்கமானது. அதை வளைத்துப் புதிது புதிதாக உருவாக்க வேண்டுமானால் அபார கற்பனைத்திறன் வேண்டும். இந்த ராகத்தின் ஆரோகணம் என்று சொல்லப்படும் ஏறு வரிசை ‘ஸகரிகமநிநிஸா ‘ என்று இடக்கு மடக்காக இருக்கும். அந்த ஸ்வர வரிசையை அப்படியே பாடலின் முதல்வரியில் பயன்படுத்தி இருப்பார். எந்த இசைக் கருவியில் ‘ஸகரிகமநிநிஸா’ என இசைத்தாலும் ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான் ‘ என அப்பாடலின் பல்லவி பாய்ந்து வரும்.

‘ரீதி’ என்றால் முறையாக என்று பொருள். அனுபவரீதியாக என்று சொல்கிறோம் அல்லவா? கௌளை என்றால் வடக்கு ஆந்திரா ஒரிசா பகுதி மேய்ச்சல் நிலம். அப்பகுதியில் வாழ்ந்த மக்களின் இசையில் இந்த ராகத்தின் வேர்கள் இருந்திருக்கலாம். ஆயர்குலத்தோர் பயன்படுத்திய ராகம் என்பதால் இசைஞானி இந்த ராகத்தில் புல்லாங்குழலை அதிகம் பயன்படுத்தியிருப்பார் .

சின்னக் கண்ணன் அழைக்கிறான் பாடலிலும் புல்லாங்குழல் புகுந்து விளையாடி இருக்கும். ஆரம்பத்தில் குழலில் ரீதிகௌளை ராக ஆலாபனை ஒலிக்கும். கேட்டதுமே இப்பாடல் நம் மனச்செவிகளில் ஒலிக்க ஆரம்பித்துவிடும். பின்னர் சந்தூரில் கிண்கிணியாய் ஒலிக்கும் நாதம். சின்னக் கண்ணன் அழைக்கிறான் எனக் குழலில் இசைப்பதைத்தொடர்ந்து பாலமுரளிகிருஷ்ணாவின் மென்குரலில் வரும் பல்லவி. சரணங்களுக்கு இடையேயான இசைத்துணுக்குகளிலும் புல்லாங்குழலை அபாரமாகப் பயன்படுத்தி இருப்பார். ரீதிகௌளை என்னும் இந்த ராகத்தின் வரலாற்றுப் பாதையில் ஒரு மைல்கல்லாக அமைந்திருக்கிறது இப்பாடல் . இப்பாடலைக் குறிப்பிடாமல் இந்த ராகத்தைப் பற்றிய எந்த உரையாடலும் நிறைவுறாது.

இசைவாழ்வின் ஆரம்பத்திலேயே தனது முத்திரையைப் பதித்த இசைஞானி பிற்காலத்தில் இப்பாடலைத் தூக்கிச் சாப்பிடும் விதத்தில் இன்னொரு பாடலை இந்த ராகத்தில் அமைத்திருப்பார். அது 1983 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஒரு ஓடை நதியாகிறது’ என்ற படத்தில் வரும் ‘தலையைக் குனியும் தாமரையே’ என்ற அபாரமான பாடல்தான்.

சின்னக் கண்ணனில் ரீதிகௌளையை எளிமையாக்கி மெல்லிசையாய்த் தந்தார் என்றால் இப்பாடலில் ரீதிகௌளைக்கு அலங்காரம் எல்லாம் பண்ணி ஆளையே மாற்றியிருப்பார். அதில் புல்லாங்குழல் என்றால் இப்பாடலில் மேற்கத்திய பாணியில்
வயலினில் இந்த ராகத்தின் வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தியிருப்பார். அதிலும் பாப் இசையில் அக்காலத்தில் பயன்படுத்திய ஃப்ளாஞ்சர் எஃபக்ட் எனப்படும் ஒலிஅமைப்பில் இப்பாடலில் வயலினைப் பயன்படுத்தியிருப்பார்.

பாடலின் தொடக்கத்தில் நாதஸ்வரத்தில் அக்மார்க் ரீதிகௌளையை இசைத்துச் சந்தூர் ஜலதரங்க சமேதராக வயலினில் ஆரம்பித்திருப்பார். இந்த ராகத்தின் ஆரோகணத்தைச் சின்னக்கண்ணன் அழைக்கிறானில் பல்லவி ஆக்கினார் என்றால் அவரோகணம் எனப்படும் இறங்கு வரிசையை அப்படியே ‘ஸாநிதமபாமகரிஸா’ என்பதை அப்படியே பல்லவி ஆக்கியிருப்பார். ‘பூ மலர்ந்திட’ என்னும் ‘டிக் டிக் டிக்’ படப் பாடலிலும் வயலினை இதேபோல் பயன்படுத்தியிருப்பார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலில் இழைத்து இழைத்துப் பாடல் ஆரம்பிக்கிறது. முதல் சரணத்துக்கு முன் புல்லாங்குழலும் சந்தூரும் கிதாரும் கோடு போட வயலினில் மிக ஸ்டைலாக மேற்கத்திய பாணியில் ரோடு அல்ல ராஜபாதையே போட்டிருப்பார். அந்த ஃப்ளாஞ்சர் ஒலியமைப்பில் வயலினின் ஓசை மிக வித்தியாசமாக ஒலிக்கும். சரணத்தில் ‘நீ தீர்க்க வேண்டும். வாலிப தாகம் ‘என்னும் இடத்தில் உடன் பாடும் ராஜேஸ்வரி இந்த ராகத்தில் ஒரு சிறந்த ஆலாபனையை ஆரம்பிப்பார்.

பின் இரண்டாவது சரணத்துக்கு முந்தைய இசைக் கோர்வையிலும் வயலின் தனி ராஜாங்கமே நிகழ்த்தியிருக்கும். இரண்டாவது சரணமும் முதல் சரணம் போல் இல்லாமல் வேறு விறுவிறுப்பான மெட்டில் ‘காத்திருப்பேன் அன்பே’ என ஆரம்பித்துக் களைகட்டும். பாடல் முழுதும் பக்கபலமாக இருப்பது தபேலாவின் அபார தாளம்தான். மொத்தத்தில் கற்பனைக்கும் எட்டாத அளவில் பிரமிப்பூட்டும் இசைக்கருவிகளின் ஒருங்கிணைப்பாக ஒலிக்கிறது இப்பாடல். ஒருமுறை கேட்டுப் பாருங்கள்!

இதே ராகத்தில் இன்னொரு அற்புதமான பாடல் சிப்பிக்குள் முத்து (1985) படத்தில் வரும் ‘ராமன்கதை கேளுங்கள்’ என்னும் பாடல். எஸ்பிபியின் குரல்தான் பாடலின் முதுகெலும்பு. ‘சீதையின் சுயம்வரம் நிச்சயிக்கப்பட்ட நாளிலே’ என ஆரம்பித்துக் கதா காலட்சேப பாணியில் தொகையறாவாகப் போய் ‘ புலிகளின் பலங்கொண்ட புருஷர்கள் அங்கிருந்தார்’ என்று ஸ்வரங்களெல்லாம் போட்டுப் பிரமாதப்படுத்திப் பின்னர் அதிரடியாக ‘ தசரத ராமா ஜனகன் உன் மாமா’ என ஜனரஞ்சகமாகி இளையராஜாவும் எஸ்பிபியும் பின்னியிருப்பார்கள்

பின்னாளில் ‘அழகான ராட்சசியே’ என ஏ.ஆர்.ரஹ்மானும் ‘கண்கள் இரண்டால் என ஜேம்ஸ் வசந்தனும் தீண்டத் தீண்ட என யுவன்சங்கர் ராஜாவும் இதே ரீதிகௌளை ராகத்தில் நல்ல பாடல்களைத் தந்திருக்கிறார்கள்.
(தேவர் மகன் சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்) ஆனால் விதை…?

முந்தைய தொடர்கள்:

2.என்றைக்குமே இந்த ஆனந்தமே! – https://bit.ly/39YlZAa
1. இசையில் தொடங்குதம்மா… – https://bit.ly/3b6w7H7

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. '' மோகம் என்னும் தீயில் என் மனம்''- டாக்டர் ஜி ராமானுஜம்
 2. ’நதியில் ஆடும் பூவனம் ’ சௌந்தர்ய ஆராதனை- டாக்டர் ஜி.ராமானுஜம்
 3. சுந்தரி கண்ணால் ஒரு சேதி-டாக்டர் ஜி.ராமானுஜம்
 4. இளையராஜா: நம் காலத்து நாயகன்- டாக்டர். ஜி.ராமானுஜம்
 5.  கமலம் பாத கமலம்!- டாக்டர் ஜி.ராமானுஜம்     
 6. பார்த்தவிழி பார்த்தபடி-டாக்டர். ஜி.ராமானுஜம்
 7. "காற்றில் எந்தன் கீதம்"- டாக்டர் ஜி. ராமானுஜம்
 8. "தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி"- டாக்டர் ஜி. ராமானுஜம்
 9. 'தூங்காத விழிகள் இரண்டு' -டாக்டர். ஜி.ராமானுஜம்
 10. “அந்தி மழை பொழியும் வசந்த காலம் '' : டாக்டர் ஜி.ராமானுஜம்
 11. 'ராகங்களைப் பார்த்த ராஜா பார்வை!' - டாக்டர்.ராமானுஜம்
 12. என்றைக்குமே இந்த ஆனந்தமே! - டாக்டர் ஜி.ராமானுஜம்
 13. இசையில் தொடங்குதம்மா... - டாக்டர்.ஜி.ராமானுஜம்