ராஜா கைய வச்சா – 4
சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்திருந்த போது கஷ்டப்பட்டு ‘சுச்சின் டென்டூல்கர்’ என்றெல்லாம் பேசி நம்மைக் கவர முயன்றார். இதுபோல் வெளிநாட்டவர்கள் நம் ஊருக்கு வரும்போது குங்குமம் வைத்துக் கொள்வது, வேஷ்டி உடுத்துவது, புடவை கட்டிக் கொள்வது, ‘அநாய்வருக்கும் வண்க்கம்’ கூறுவது என்றெல்லாம் முயற்சித்துப் பார்ப்பார்கள். அவர்களின் நோக்கம் நல்லதாக இருந்தாலும் அவர்கள் செய்யும் விஷயங்கள் கோமாளித்தனமாகவும் நகைச்சுவையாகவும் போவதுண்டு.
இரண்டு மாறுபட்ட கலாச்சாரங்கள் இணையும்போது இதுபோல் பொருந்தாமல் போவதுமுண்டு. இசையிலும் அப்படி நடப்பதுண்டு. ஜூகல்பந்தி என்ற பெயரில் நடக்கும் பரிசோதனை முயற்சிகள் சில சமயங்களில் பாயாசத்தை பாகற்காய் சூப்போடு சேர்ப்பதுபோல் இருக்கும். ஆனால் சமயங்களில் அது ஐஸ்கிரீமீல் கலந்த குளோப் ஜாமூன் போல் இரட்டிப்புச் சுவையாவதுண்டு. அதுதான் இசைஞானியின் பாணி!
மேற்கத்திய இசைக் கருவிகளை, மேற்கத்திய இசையமைப்பு பாணியை நமது செவ்வியல் மற்றும் நாட்டுப்புற மரபிசைக்குப் பயன்படுத்துவது , செவ்வியல் இசை ராகங்களை மேற்கத்திய பாணியில் இசைக்கோர்வை ஆக்குவது என ஃப்யூஷன் எனப்படும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு இனிமை மாறாமல் தந்திருக்கிறார் இளையராஜா. இந்தச் சேர்க்கை என்பது ‘தண்ணீருக்கும் மண்ணெண்ணைக்கும் கல்யாணமாம்’ என்பதுபோல் அல்லாமல் ‘செம்புலப் பெய நீர் போல்’ கலந்திருக்கும்.
அதிலும் வயலின் என்னும் மேலைனாட்டு இசைக்கருவி இரண்டு நூற்றாண்டுகளாக இந்தியச் செவ்வியல் இசையான கர்னாடக இசையோடு கலந்து முக்கியமான துணைக்கருவி ஆகிவிட்டது.பியானோ, கிதார் போல் அல்லாமல் வயலின் மிகவும் நெகிழ்வுத்தன்மை உடைய இசைக்கருவி. விரும்பிய ஸ்வரங்களை இசைக்கோர்வைகளை வாசிக்க ஏற்றது. அதிலும் ஒரு ஸ்வரத்திலிருந்து இன்னொரு ஸ்வரத்திற்கு மென்மையாகப் போகும் கமகம் எனப்படும் சமாச்ச்சாரத்திற்கு மிகவும் ஏற்றது. ஆகவே மேற்கத்திய, இந்திய செவ்வியல் பாணி ஆகிய இரண்டுக்கும் ஏற்ற வயலின் இசைஞானியின் இசையில் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது.
அதிலும் திரைப்படத்தின் கதாநாயகனே வயலின் கலைஞனாக இருந்தால்? அதுவும் பார்வையற்றவனாய் ஒலியை மட்டுமே துணையாகக் கொண்டிருந்தால்? ஒரு அபார இசைக் கலைஞனின் கற்பனை ஊற்றைப் பீறிட வைக்கும் தருணம். அத்திரைப்படம் 1981இல் வெளிவந்த ராஜபார்வை. கமலின் நூறாவது படம் என்ற பெருமையோடு வெளிவந்த படம். படத்தின் தொடக்கத்திலேயே ஒரு திரைப்படத்துக்கு பின்னணி இசை எவ்வளவு முக்கியம் என்பதை ஒரு திரைப்படத்தின் டப்பிங் வேலை நடைபெறுவதைக் காட்டிச் சித்தரித்திருப்பார்.
படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே வார்த்தைகள் இல்லாமல் வெறும் இசையை மட்டும் வைத்துக் கொண்டு வயலினில் ஒரு பெரிய விருந்தே படைத்திருப்பார். மாதவி பார்வையற்ற கமலைத் தவறாகப் புரிந்து கொண்டு சண்டை போட்டுப் பின் உண்மை தெரியவந்து வருந்துகிறார். கமல் பார்வையற்றோர் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் வயலின் வாசிக்கிறார் என்பதை அறிந்து மாதவி அங்கு வருகிறார்.
அப்போது கமல் வயலினில் வாசிக்கும் இசைத் துணுக்கு ஒரு உச்சகட்ட இசைச் சாதனை. இந்த இசைக்காக இளையராஜா தேர்ந்தெடுத்தது சுத்தமான நெய்யால் செய்த பந்துவராளி என்னும் ராகம். கர்னாடக இசையில் புகழ்பெற்ற அந்த ராகத்தை மேற்கத்திய பாணியில் வயலினில் கொடுக்க வேண்டும் என்று ஒருவர் யோசிப்பதே மிகப்பெரிய விஷயம். அதிலும் பாஹ், மொசார்ட் போன்ற மேலைநாட்டு இசை மேதைகள் அமைத்த சிம்பனியைப் போல் ஆர்கெஸ்ட்ராவை அமைத்திருப்பது அவரது மேதமையைக் காட்டுகிறது.
பந்துவராளி ராகம் மெல்லிய சோகம், பக்தி போன்ற உணர்வுகளுக்கு ஏற்ற ராகம். ‘ஏழுஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் என்ற எம் எஸ் வியின் பாடல் ( அபூர்வ ராகங்கள்) பாடலின் தொடக்கம் இந்த ராகம்தான். ‘ ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்’ என நினைவெல்லாம் நித்யா (1982) வில் இசைஞானி மெல்லிசையாய் அமைத்த ராகம்.
ராஜ பார்வைக்குத் திரும்புவோம் .இந்த இசை ஆரம்பிப்பதுகர்னாடக இசை பாணியில். கமல் வயலினில் பந்துவராளி ராகத்தை ஆலாபனை செய்வார். அடிவயிற்றைப் பிசைவது போன்ற ஒரு இனம்புரியாத சோகம் கிளம்பும். பின் வீணை,மிருதங்கம் ஆகிய கருவிகளோடு சேர்ந்து ஒரு கொடுக்கல் வாங்கல் போட்டி நடைபெறும். சரவெடிபோல் படபடவென்று விறுவிறுப்பாக ஸ்வரங்கள் வயலினிருந்து வெடித்துச் சிதறும். அதிபயங்கர வேகத்தில் வயலினிலிருந்து ஸ்வரங்கள் கிளம்பும். இளையராஜாவிடம் இருந்த வி.எஸ் .நரசிம்மன் போன்ற அபாரமான வயலின் கலைஞர்களாலேயே இசைஞானி எண்ணத்தில் இருப்பதை இதுபோல் இசையில் கொண்டுவர முடியும்.
கொஞ்சம் கொஞ்சமாக இசை வளர்ந்து திடீரென்று வெடித்துப்பொங்குவதுபோல் ஸ்வரங்கள் கொப்புளிக்கின்றன. ஏதோ ஒரு அணை உடைந்து வெள்ளம் பெருகுகிறது.பின் அப்படியே மேற்கத்திய பாணியில் வயலின் ஒலிக்கிறது. யோஹான் செபாஸ்டியன் பாஹ் என்னும் ஜெர்மனியைச் சேர்ந்த இசை மேதை பல சிம்பொனிகளை உருவாக்கியுள்ளார். அவர் நமது ராஜாவுக்கு மிகவும் ஆதர்சமானவர். அவரது பாணியில் இந்த ராகத்தை இந்த இசைத் துணுக்கில் வயலின்கள் முழங்க அமைத்திருக்கிறார். அச்சு அசலான பந்துவராளி அம்பி அந்நியன் ஆவது போல் நமது கண்களுக்கு (காதுகளுக்கு) முன்பே மேற்கத்திய பாணிக்கு மாறும் விந்தை எத்தனை எளிதாக நடக்கிறது!
இசை ஞானியின் மேதமைக்குச் சான்றாக பத்து இசைக் கோர்வைகளைக் கேட்டால் அந்தப் பட்டியலில் நிச்சயம் இடம்பெறும் இந்த இசையமைப்பு. வார்த்தைகளே இல்லாமல் வெறும் இசைதான் இங்கு. வார்த்தைகளின் மொழி ஒதுங்கிச் செல்ல உணர்வுகளின் ஆதிமொழியான ஒலி மட்டுமே இங்கு போதுமானதாக இருக்கிறது. கொஞ்சம் கண்களை மூடி அந்த இசையை ஒரு நாலு நிமிடம் கேளுங்கள். சொர்க்கவாசல் கதவின் டோர் நம்பரெல்லாம் தெரியும்.
படத்தில் இந்த இசை உச்சத்தைத் தொட்டு முடிந்தவுடன் பார்வையாளர்கள் ஒரு கணம் கைதட்டக் கூட மறந்து திகைத்து நிற்பார்கள். அதுபோல் நமக்கும் ஒரு வினாடி உலகமே ஸ்தம்பித்த உணர்வு ஏற்படும்.
https://www.youtube.com/watch?v=y9oIYXmHQIc
இசைஞானி 1986 இல் அவரது இசை வாழ்வின் மகத்தான சாதனையான How to name it ? என்னும் ஆல்பத்தை வெளியிட்டார். அது கர்னாடக இசையை மேற்கத்திய இசை பாணியில் கலந்து ஒலிக்க வைக்கும் அற்புதமான படைப்பு. அந்த ஆல்பம் பற்றி விரிவாகப் பின்னர் பார்க்கலாம்.அந்த ஆல்பமே மேலே குறிப்பிட்ட இசைக்கலைஞர் செபாஸ்டியன் பாஹ் மற்றும் கர்னாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகையய்யர் ஆகிய இருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்பதை அடிப்படையாகக் கொண்டது. அந்த ஆல்பத்திலும் இதே பந்துவராளி ராகத்தில் ஒரு அருமையான ஃப்யூஷன் இசையை நமக்கு அளித்திருக்கிறார்.
ஒலி என்பது மனிதனின் ஆதி மொழி. இசைக்கு மொழி மற்றும் கலாச்சார வேற்றுமைகள் கிடையாது. குறிப்பாக இசை எழுப்பும் உணர்வுகள் மனித இனத்துக்கே பொதுவானது. ஆக இசையில் மேற்கு கிழக்கு என்ற திசைகளெல்லாம் கிடையாது. இதுதான் ராகங்களைப் பற்றிய ராஜாவின் பார்வையாக இருக்கிறது. அதுவே ராஜ பார்வையின் இந்த இசையமைப்பில் வெளிப்படுகிறது.
ராஜ பார்வையில் ராஜா பார்வையில் மிளிர்ந்து ஒளிரும் இன்னொரு வைரமும் இருக்கிறது. அது.. அடுத்த கட்டுரையில்.
முந்தைய தொடர்கள்:
3.‘தலையைக் குனியும் தாமரையே’ – https://bit.ly/2IUS4gv
2.என்றைக்குமே இந்த ஆனந்தமே! – https://bit.ly/39YlZAa
1. இசையில் தொடங்குதம்மா… – https://bit.ly/3b6w7H7
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- '' மோகம் என்னும் தீயில் என் மனம்''- டாக்டர் ஜி ராமானுஜம்
- ’நதியில் ஆடும் பூவனம் ’ சௌந்தர்ய ஆராதனை- டாக்டர் ஜி.ராமானுஜம்
- சுந்தரி கண்ணால் ஒரு சேதி-டாக்டர் ஜி.ராமானுஜம்
- இளையராஜா: நம் காலத்து நாயகன்- டாக்டர். ஜி.ராமானுஜம்
- கமலம் பாத கமலம்!- டாக்டர் ஜி.ராமானுஜம்
- பார்த்தவிழி பார்த்தபடி-டாக்டர். ஜி.ராமானுஜம்
- "காற்றில் எந்தன் கீதம்"- டாக்டர் ஜி. ராமானுஜம்
- "தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி"- டாக்டர் ஜி. ராமானுஜம்
- 'தூங்காத விழிகள் இரண்டு' -டாக்டர். ஜி.ராமானுஜம்
- “அந்தி மழை பொழியும் வசந்த காலம் '' : டாக்டர் ஜி.ராமானுஜம்
- 'தலையைக் குனியும் தாமரையே' - டாக்டர் ஜி.ராமானுஜம்
- என்றைக்குமே இந்த ஆனந்தமே! - டாக்டர் ஜி.ராமானுஜம்
- இசையில் தொடங்குதம்மா... - டாக்டர்.ஜி.ராமானுஜம்