காலத்தின் மேல் வரைந்த கோடுகள் -1

ஓவியம்: நோட்டர் டாம்     Notre-Dame(oil Canvas)

ஓவியர்: எட்வர்ட் லியான் கோர்டஸ்  Edouard leon Cortes(France)

(1882-1969)

நோட்டர் டாம்     என்பது பாரிஸின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தேவாலயம்.இது Cathedral என்றும் குறிப்பிடப்படுகிறது.இதன் கட்டுமானப்பணி 1163 ஆம் ஆண்டு ஏழாம் லூயி அவரது மேற்பார்வையில் ஆரம்பித்து 1345 ல் முழுமையாக கட்டி முடிக்கப் பட்டது.இந்த தேவாலயம்(Gothic Architechture)கோதிக் எனும் கட்டிடக்கலைக்கு ஆதாரமாக விளங்குகிறது. பாரிஸின் முக்கியக் குறியீடுகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த கட்டிடத்தை ஓவியமாக தீட்டுவதற்கு மற்றும் பார்வையாளர்கள் என வருடத்திற்கு 13 மில்லியன் மக்கள் வந்து செல்கின்றனர் என்று கூறுகிறது நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை.

இவ்வளவு தொன்மை மிக்க சிறப்பு வாய்ந்த கட்டிடத்தில் கடந்த 2019 ஏப்ரல் 15 ஆம் தேதியன்று பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது.பாரீஸ் முழுவதும் இந்த செய்தி பெரும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியது.இதற்கு முன்னரே 1831ஆம் ஆண்டு ஏற்பட்ட பிரெஞ்சுப் புரட்சியின் போது இந்த கட்டிடம் பெரிதும் சேதமடைந்தது. இதன் ஆயுள் முடிந்தது என்று பலர் முடிவு செய்து விட்டனர்.ஆனால்,அதையும் தாண்டி மறுசீரமைப்பு செய்யப்பட்டு இன்னமும் பாரீஸுக்கு புகழாரம் சூட்டிக் கொண்டிருக்கிறது Notre-Dame.இப்படி நிறைய வரலாற்று சிறப்புகளை தன்னுள் அடக்கியுள்ளது இந்த புகழ் பெற்ற தேவாலயம்.தற்போது கொரோணா காரணமாக இந்த தேவாலயம் மூடப்பட்டிருக்கிறது.

பிரான்சில் பிறந்த எட்வர்ட் லியான் கோர்டஸ்  இளம் வயதில் அவரது தனது தந்தை நடத்திய ஸ்டூடியோவிலேயே அதிக நேரம் செலவிட்டுள்ளார்.

சாலை ஓரங்களில் அமர்ந்து இவர் வரையும் ஓவியங்கள் பின்னால் உலகப் புகழ் பெற்ற ஓவியங்களாக மாறும் என்று நடைபாதையில் அவரை கடந்து சென்ற மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.இவரது நவீன ஓவியங்களின் பாணி (City scapes)நகர வீதிகளின் காட்சிகள் என்று குறிப்பிடப்படுகிறது.வான்கோ,மோனட் இவர்களைப் போன்றே எட்வார்ட் கோர்ட்ஸும் ஒரு விதமான Post Impressionism என்ற நுட்பத்தினை பயன்படுத்தி வண்ணங்களை தீட்டியுள்ளார்.இந்த ஓவியத்தைப் பற்றி பார்க்கலாம்.

நோட்டர் டாம்     கட்டிடத்தின் முன்னே அன்றாடம் நிகழும் சாதாரணமான நாட்களில் ஒரு நாளின் மாலைப் பொழுதில் இந்த ஓவியம் தீட்டப்பட்டிருக்கிறது.கட்டிடத்திற்குப் பின்னால் தீட்டிய வண்ணங்கள் சூரிய அஸ்தமனத்தைக் குறிக்கிறது.அதே போல அது மழைக்காலத்தின் அந்தி நேரமாக இருந்திருக்கக் கூடும்.மேகங்கள் இருள் சூழ்ந்துள்ளது.சாலையில் மழையின் ஈரம் காயாமல் பிம்பங்கள் எதிரொலிப்பதை நாம் துல்லியமாக காணலாம்.அங்கு நடந்து செல்லும் யாவரும் குடை பிடிக்கவில்லை.அதனால்,மழை சிறிது நேரத்திற்கு முன்பாகவே நின்றிருக்கக் கூடும் என நினைக்கிறேன்.

ஓவியத்தின் இடதுபுறம் ஒருவர் கை வண்டியினை இழுத்துச்செல்கிறார்.அதன் அருகே ஒரு தாய் தனது மகனுடைய கைகளைப் பிடித்தவாறு சாலையைக் கடக்கிறார்.பாரிஸின் பாரம்பரியமான உடையை அவர் அணிந்திருக்கிறார்.யாருடைய முகபாவனைகளும் காட்டப்படவில்லை.ஆனால்,மழை காரணமாக அவசரமாக செல்வது போல உள்ளது.

ஓவியத்தின் மத்தியில் தான் பாரிஸின் சிறப்பு வாய்ந்த Notre-Dame என்ற கட்டிடம் அமைந்துள்ளது.இந்த கட்டிடத்திற்கு மிகப்பெரிய வரலாறே உள்ளது.அதைப் பற்றி முன்னமே பார்த்தோம்.தேவாலயத்திற்கு முன்பு பச்சை நிற(Tram vehicle)டிராம் வண்டி ஒன்று இயங்கி கொண்டிருக்கிறது.இதன் வேகம் வெறும் 15 கி.மீ மட்டும் தான். ஆனால் 18ஆம் நூற்றாண்டில் சாலைப் போக்குவரத்தில் அதிகவேகம் கொண்டது இது தான்.வண்டியினுள் மஞ்சள் நிற விளக்கு எரிகின்றது.மற்றும் டிராம் வண்டிக்கு வலது பக்கம் நடைபாதையில் ஒருவர் நடந்து செல்கிறார்.

ஓவியத்தின் வலது புறத்தில் இருவர் சாலையைக் கடந்து செல்லும் காட்சி உள்ளது.அதில் பின்னால் நடந்து வரும் கருப்பு நிற உடை அணிந்தவர் ஒரு குச்சியை கையில் பிடித்தவாறு வருகிறார்.அவரது முகமும் நேராக இல்லாமல் கீழ் நோக்கிய வண்ணம் உள்ளது.அவரது நடையும் வித்தியாசமாக உள்ளது.அவர் பார்வையற்றவர் என்பதை அற்புதமாகக் காட்சிப் படுத்தியுள்ளார்.

சாலையின் ஓரத்தில் தெருவிளக்கு ஒன்று உள்ளது.ஆனால் அந்த விளக்கு ஒளியூட்டப்பட வில்லை.அதனை ஒட்டிய நடைபாதையை தாண்டி ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது.கட்டிடத்தின் எல்லா அடுக்குகளிலும் மின் விளக்குகள் ஒளிர்கின்றன.கட்டிடத்தின் இரண்டாம் அடுக்கில் உள்ள ஜன்னல் திறந்து வைக்கப்பட்டுள்ளது.அதனால் ஒளியின் அளவு அதிகமாக இருக்கிறது.அதே போல்,அந்த மூன்றாம் அடுக்கு கட்டிடத்தைப் பாருங்கள்.ஜன்னல் மூடப்பட்டுள்ள காரணத்தால் ஒளியின் அளவு மங்கி வெளிச்சம் குறைவாக காணப்படுகிறது.மூன்றாம் அடுக்கின் வெளிப்புறத்தில் பால்கனியும் உள்ளது.

அடுக்குமாடிக் கட்டிடத்திற்கு முன்னால் ஒருவர் வண்டி நிறைய பூக்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்து கொண்டிருக்கிறார்.அங்கு ஒரு பெண் தனது அங்கி மழையில் நனைந்து விடுமென கைகளால் தூக்கிப்பிடிடித்தவாறே சாலையைக் கடக்க முற்படுகிறாள்.நெடிதுயர்ந்து வளர்ந்த ஒரு மரமும் உள்ளது. பூக்கள் நிறைந்த வண்டிக்குப் பின்னால் நன்னகைந்து பேர் நின்று கொண்டிருக்கிறார்கள்.முன்னாள் வண்டியை நோக்கி ஒருவர் சென்று கொண்டிருக்கிறார்.மிகவும் நுட்பமாக ஒரு மலை நாளின் அந்தியை எண்ணெய் வண்ண ஓவியமாக தீட்டியுள்ளார் எட்வார்ட் கோர்ட்ஸ்.lamp light(1903)paris Evening(1905) இன்னும் பல புகழ் பெற்ற ஓவியங்களை வரைந்துள்ளார்.

இந்த Notre-Dame தேவாலயத்தினை சுற்றி La Serie என்ற நதி ஓடுகிறது.Edouard Corts அவர்கள் அந்த ஆற்றங்கரையில் அமர்ந்து இந்த ஓவியத்தை வரைந்திருப்பார் என்பது எனது யூகம்.பச்சை,மஞ்சள்,நீலம், வெள்ளை,கருப்பு இன்னும் பல நிறங்களை உபயோகப்படுத்தியுள்ளார்.

notre-Dame போன்ற ஒரு புகழ்பெற்ற தேவாலயம் தமிழ்நாட்டிலும் கட்டப்பட்டுள்ளது.மதுரையிலிருந்து மானாமதுரை செல்லும் வழியில் வைகையின் வடகரையில் அமைந்திருக்கும் இடைக் காட்டூர் என்ற சிற்றூரில் இந்த தேவாலயம் அமைந்துள்ளது.

ர்டினட் சிலோ என்ற பிரெஞ்சு பாதிரியார் ஒருவரின் முயற்சியில் இந்த தேவாலயத்திற்கான வரைப்படமும்,அமைப்புத் திட்டங்களும் 1894 ஆம் ஆண்டு பாரிஸிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளது.அதற்கான நிதியையும் கூட அவரே பாரிஸிலிருந்து திரட்டி திருப்பணியை மேற்பார்வை செய்துள்ளார்.

அதன் வெளிப்புறத்தோற்றமும்,உள்கட்டமைப்பும் கிஞ்சித்தும் மாறாத வண்ணம் பாரிஸின் அதே கோதிக் கட்டிடக்கலையின் மறுவுருவமாக இன்னும் நிலைத்து நிற்கிறது.மேலும் இந்த தேவாலயம் மதுரையில் உள்ள கட்டிடடக்கலை நிபுணர்களின் மேற்பார்வையில் உருவாகி உள்ளது இன்னமும் சிறப்பு. இந்த தேவாலயத்தினைப் பற்றி எழுத்தாளர் எஸ்.ரா அவர்கள் தனது “காற்றில் யாரோ நடக்கிறார்கள்” என்ற கட்டுரைத் தொகுப்பில் ‘பிரார்த்தனைக்கு அப்பால்’ என்ற தலைப்பில் பயணக்கட்டுரை ஒன்றை விரிவாக எழுதியுள்ளார்.அவருடைய இணையதளத்திலும் இந்த கட்டுரையினை வாசிக்கலாம்.

http://www.sramakrishnan.com/?p=365

தேவாலயத்தின் சிறப்புகள் மற்றும் அது சார்ந்து எடுக்கப்பட்ட சில திரைப்படங்களையும் எஸ்.ரா அறிமுகப்படுத்துகிறார்.தமிழ் நவீன இலக்கியத்தின் தீவிர வாசகரான சுந்தர் என்பவரும் தனது பிளாக்கில் இந்த தேவாலயத்தின் பயண அனுபவத்தினை பகிர்ந்துள்ளார்.

maduraivaasagan.wordpress.com

இப்படி பல சிறப்புகளையும்,நுண்வேலைப்பாடுகளையும் கொண்ட இந்த தேவாலயத்தினை நாமும் ஒரு முறை சென்று பார்வையிடலாம்

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. ஓவியர்: ராஜா ரவிவர்மா : ஓவியம்: சடாயுவின் வீழ்ச்சி(1895) - எம்.சரவணக்குமார்
  2. கனாவில் நிகழ்ந்த திருமணம் : எம்.சரவணக்குமார்
  3. டெறேன்ஸ் கஃபேவின் அழகிய மாலைப் பொழுது : எம்.சரவணக்குமார்
  4. மாவீரன் நெப்போலியன் முடிசூடும் விழா : எம்.சரவணக்குமார்
  5. இருளை வரைந்த ஓவியன்-எம்.சரவணக்குமார்