ஊரை அழித்த உறுபிணிகள்
(கொள்ளை நோய்களின் கதை)

அத்தியாயம் 1

ஒரு கத சொல்லட்டா சார்?

ஒரு ஊரில் இரண்டு ராஜா இருந்தனர். ஆம் உண்மையிலேயே அந்த ஊருக்கு இரண்டு ராஜாக்கள்தான். ஒருவர் உள்நாட்டில் இருந்து ஆட்சி செய்தால் மற்றொருவர் படையெடுத்துப் போய் அண்டை நாடுகளைக் கைப்பற்றுவார். அவர் சோர்வடைந்தால் இவர் படையெடுத்துச் செல்வார். வலிமையான எதிரி என்றால் இருவருமே செல்வர். அப்படி இரண்டு ராஜாக்களும் சேர்ந்து ஒற்றுமையாக ஒரே நாட்டை ஆட்சி நடத்தி வந்தனர். அவர்களது வீரத்தாலும் நிர்வாகத் திறத்தாலும் உலகின் அசைக்கமுடியாத பேரரசு எனும் நிலையை அந்நாடு அடைந்தது. அவர்களின் காலத்தில் அப்பேரரசு வீழ்ச்சி அடையும் என்பதே கற்பனைக்கெட்டாத ஒன்றாக இருந்தது, அந்த உறுபிணி பரவும் வரை.

பேரரசை வீழ்த்திய உறுபிணியின் கதைதான் நம் தொடரின் முதல் கதை.

இக்கதையில் இடம்பெற்ற பேரரசு மத்தியத் தரைக்கடல் பகுதியைக் கட்டி ஆண்ட, வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ரோமானியப் பேரரசு’.
அந்த இரு மன்னர்கள் அழியாப் புகழ்பெற்ற ‘மார்கஸ் ஆரிலியஸ்’ மற்றும் ‘லூசியஸ் வெருஸ்’.

அசைக்கமுடியாத ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கு அடிகோலிய அந்த உறுபிணி அந்தோனைன் பிளேக் என அழைக்கப்பட்ட ‘பெரியம்மை’

அந்தோனைன் பிளேக்
காலம் : கிபி 165 முதல் 180 வரை
நோய் : பெரியம்மை
நோய்க்கிருமி : வேரியோலா வைரஸ்
இடம் : ரோம், மத்தியத் தரைக்கடல் பகுதிகள்
இறந்தவர்கள் எண்ணிக்கை : சுமார் 50 இலட்சம் மக்கள்
இறப்பு விகிதம் : 30%
குறிப்பிடத்தக்க மரணம் : லூசியஸ் வெருஸ், ரோமப் பேரரசர்
நோயின் இன்றைய நிலை : தடுப்பூசிகளால் ஒழிக்கப்பட்டுவிட்டது.

ரோமப் பேரரசை அப்போதெல்லாம் இரு மன்னர்கள் சேர்ந்து ஆளும் வழக்கம் இருந்துள்ளது. ரோமப் பேரரசின் பொற்காலமாக மார்கஸ் ஆரிலியஸ், லூசியஸ் வெருஸ் ஆகியோர் காலத்தைக் கூறலாம். இவர்கள் காலத்தில் பரவிய பெரியம்மை நோயை, அம்மன்னர்களின் குடும்பப் பெயர் அந்தோனினஸ் நினைவாக அந்தோனைன் பிளேக் என வரலாற்றாளர்கள் அழைத்தனர்.

பிளேக் என அழைக்கப்பட்டாலும் அந்நோய் ‘தற்கால பிளேக் நோய்’ அல்ல என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. பிளேக் என்றால் லத்தீன் மொழியில் அடிபட்ட காயம் என்று பொருள். பெரியம்மை வந்து உடல் முழுக்க அடிபட்டதுபோல் காயம் ஏற்பட்டதால் பிளேக் என அழைக்கப்பட்டிருக்கலாம். தற்போது நாம் பிளேக் எனக் கூறும் வியாதி அல்ல அந்தக் கொள்ளை நோய்.

அந்நோய் பற்றிய பல விவரங்களை, ரோமப் பேரரசின் அரசவை மருத்துவராக இருந்த காலன் (Galen) என்பவர் எழுதிய குறிப்புகள் மூலமே அறிந்துகொள்ள முடிகிறது. தற்போதைய துருக்கியின் பெர்கோமான் எனும் ஊரில் பிறந்த காலன், ரோமப் பேரரசின் தலைசிறந்த மருத்துவராக விளங்கினார். அவரது மருத்துவ சிந்தனைகள் மேற்கத்திய மருத்துவத்தில் சுமார் 1300 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தின. உடற்கூறியல், உடல் இயங்கியல், நோய்க்கூறியல், மருந்தியல் என முதன் முதலில் மருத்துவப் பாடத்திட்டத்தை வகுத்தவரும் அவர்தான்.

அனாடமி எனும் உடற்கூறியலின் முன்னோடியாக அவர் கருதப்படுகிறார். குரங்கு, பன்றிகளை அறுத்து உடல் உறுப்புகளைப் பற்றி ஆய்வு செய்தார். அதேபோல ரோமப் பேரரசின் கிளாடியேட்டர் சண்டைகளைக் கவனித்து சண்டையில் குத்திக் கிழிக்கப்பட்டு வெளியே தெரியும் உள்ளுறுப்புகளைக் கவனித்தும் குறிப்புகள் எழுதி வைத்தார்.

சித்த மருத்துவத்தில் வாதம், பித்தம், கபம் என இருப்பதுபோல, காலனும் கபம், இரத்தம், மஞ்சள் பித்தம், கருப்பு பித்தம் ஆகியவற்றின் மாறுபாடுகளே நோய் உருவாகக் காரணம் எனக் கூறினார். இந்த நான்கையும் சீராக மாற்றுவதுதான் மருத்துவம் எனவும் கூறினார்.

மருத்துவத்துறையில் இவரது புதிய சிந்தனைகள் பழமைவாத மருத்துவர்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கின. மக்கள் ஆதரவும், மன்னர்கள் ஆதரவும் இருந்தாதால் இவரை அவர்களால் எதுவும் செய்யமுடியவில்லை. 161ஆம் ஆண்டு இரு மன்னர்களும் மேற்கு நோக்கிப் படையெடுத்துச் சென்றுவிட்டனர். அதன்பிறகு பழமைவாத மருத்துவர்களால் கொல்லப்படுவோம் என அஞ்சி, ரோம் நகரில் இருந்துதான் பிறந்த பெர்கோமான் நகருக்கே வந்துவிட்டார் காலன்.

மேற்கு நோக்கிச் சென்ற மார்கஸ் ஆரிலியஸும், லூசியஸ் வெருஸும் அப்போதைய மெசபடோமியா (தற்போதைய ஈராக் பகுதி) வரை படையெடுத்து வந்து வெற்றி பெற்றனர். மெசபடோமியாவின் டைகரிஸ் நதிக்கரையில் உள்ள செலுசியா எனும் நகரைக் கைப்பற்றி அங்குள்ள கோவில்களின் பெருஞ்செல்வத்தைக் கொள்ளை அடித்து நாட்டிற்குத் திரும்பினர். திரும்பும் வழியிலேயே நிறைய படைவீரர்கள் உடல் நலம் குன்றினர். அவர்கள் ரோம் நகரை அடைந்தபிறகு ஊரையே கொள்ளை நோய் தாக்கியது. கொத்துக் கொத்தாக மக்கள் மடிந்தனர். தினமும் 2000 பேர்வரை ரோம் நகரில் அவ்வியாதியால் மாண்டனர்.

செலுசியா நகரில் இருந்த அப்போலோ மருத்துவ தெய்வத்தின் கோவிலை ரோம வீரர்கள் கொள்ளை அடித்ததால், அப்போலோ தெய்வம் கோபமடைந்து இந்நோயை ஏவிவிட்டதாக மக்கள் நினைத்தனர். ஆனால், கொள்ளை அடிக்கப்பட்ட செல்வங்களில் பெரியம்மை நோயால் இறந்த மனிதர்களின் சவப்பெட்டி இருந்திருக்கலாம். அதிலிருந்து பெரியம்மை நோய் பரவி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அக்காலத்திலும் அப்போலோவில் சிசிடிவி கேமரா கிடையாதாம். அதனால் இதுதான் காரணம் என உறுதியாகக் கூறமுடியவில்லை.

பரவிய நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் மார்கஸ் ஆரிலியஸும், லூசியஸ் வெருஸும் திணறினர். பெர்கோமானில் இருந்து மருத்துவர், காலனை வரவழைத்தனர். அவராலும் நோயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பெரியம்மை நோய்க்கு ரோமப் பேரரசின் மன்னர்களில் ஒருவரான லூசியஸ் வெருஸும் பலியானார். அதன் பிறகு மார்கஸ் ஆரிலியஸ் நீண்ட காலம் தனியாகவே அரசாண்டார். கடைசி காலத்தில் தனது மகனை இன்னொரு மன்னனாக அரியணை ஏற்றினார்.

நோயைக் கட்டுப்படுத்த முடியாத மருத்துவர் காலன் நோய் பற்றி பல குறிப்புகளை எழுதி வைத்தார். தொடக்கத்தில் தொண்டைவலி, காய்ச்சல் ஏற்படும், ஒன்பதாவது நாளில் தோலில் கொப்புளங்கள் தோன்றும், கருப்பு நிறத்தில் வயிற்றுப்போக்கு ஏற்படும் என இவர் எழுதிவைத்த குறிப்புகள்தான் அந்நோய் பெரியம்மையாக இருக்கலாம் என ஊகிக்கக் காரணமாக அமைந்தன. இதனால் இந்நோய் காலன்ஸ் பிளேக் எனவும் அழைக்கப்பட்டது.

அந்தோனைன் பிளேக் உறுபிணிக்கு ரோமப் பேரரசில் இருந்த சுமார் 50 இலட்சம் மக்கள் மாண்டனர். படைவீரர்கள் கொத்துக்கொத்தாகச் செத்தனர். அதனால் படை வலிமை குறைந்தது. அடிமைகள் விடுவிக்கப்பட்டு படையில் சேர்க்கப்பட்டனர். அண்டை நாட்டு பழங்குடி மக்கள் படையில் சேர்க்கப்பட்டனர். அதற்குப் பிரதிபலனாக அவர்களுக்கு நிலத்தை ஆளும் உரிமை வழங்கப்பட்டது. இதனால் ரோமப் பேரரசின் வலிமை குறைந்தது. வரி கட்டும் பொதுமக்களும் நோயில் மாண்டதால் வரி வருமானமும் குறைந்தது. நாட்டில் கலவரங்கள் வெடித்தன. வீழ்த்தவே முடியாத ரோமப் பேரரசை கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி கலங்கடித்தது. அப்போது யூடூப் இல்லாததால் யாரும் ‘ரோம்மீது ஈராக் தொடுத்த பயோ-வார்’ என வீடியோ வெளியிடவில்லை.

தெய்வங்களின் கோபம்தான் பெரியம்மை வரக் காரணம், உடல் உறுப்புகளை வெட்டிப் பலி கொடுத்து தெய்வங்களின் கோபத்தைக் குறைத்தால் உயிரையாவது காப்பாற்றலாம் என மத குருமார்கள் கூறினர். பெரியம்மை வந்தவர்களின் கை, கால்கள் வெட்டப்பட்டன. நோயாளிகள் சித்திரவதைக்குள்ளாகி இறந்தனர். கை கால்களை வெட்டச் சொன்ன பேகானிய மத குருமார்கள்மீது மக்களுக்கு வெறுப்பு வந்தது. அப்போது தோன்றிய ஒரு புதிய மதத்தைச் சேர்ந்த மத குருமார்கள் நோயாளிகளை அன்புடன் கவனித்தனர். மக்களிடையே அம்மதத்தின் செல்வாக்குப் பெருகியது. அதனால் கோபமடைந்த ஆட்சியாளர்கள் அப்புதிய மதத்தைச் சேர்ந்த மத குருமார்களைத் தேடித்தேடிக் கொன்றனர்.

வழக்கம்போல, அரச எதிர்ப்புக்கு உள்ளான புதிய மதம் வேகம் கொண்டு வளர்ந்தது. கிறித்துவம் எனப் பெயர் கொண்டு உலகம் முழுவதும் பரவியது. உறுபிணிகள் கலாச்சார மாற்றத்தையும் ஏற்படுத்தவல்லவை என்பதற்கு சாட்சியாக நின்றது.

ஆட்சியாளரையும் மக்களையும் பலிகொண்ட பெரியம்மை 15 ஆண்டுகளுக்குப் பிறகு சற்றே தீவிரம் குறைந்தது. ஆயினும் அது ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து ரோமப் பேரரசு மீளவே இல்லை. வரலாற்றில் ஒரு முக்கியக் கொள்ளை நோயாக, இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்தும் கிலி ஏற்படுத்தும் உறுபிணியாக ‘அந்தோனைன் பிளேக்’ இடம்பெற்றுவிட்டது.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. எயிட்ஸ்:நோய் எதிர்ப்பைக் கொல்லும் நோய்-சென் பாலன்
  2. தவிக்கவைத்த தட்டம்மை (measles)- சென் பாலன் ( ஓமான்)
  3. 'கா டிங்கா பெப்போ' எனும் கெட்ட ஆவி- சென் பாலன்
  4. சிபிலிஸ்: பதறவைக்கும் பால்வினை நோய்
  5. எல்லை தாண்டாத எபோலா- சென் பாலன்
  6. கொசுக்கள் பாடும் மரண கானா : மலேரியா- சென் பாலன்
  7. பஞ்சாய் பறந்த உயிர்கள் : பம்பாய் பிளேக்- சென் பாலன்
  8. ஹிஸ்பானியோலாவின் காலன் ஆன கோலன் – சென் பாலன்
  9. கலங்க வைத்த 'கறுப்புச் சாவு ' : பிளேக்- சென் பாலன்
  10. சார்ஸ்: ‘கொரோனோ’ என்ற திகில் படத்தின் ட்ரைலர்- சென் பாலன்
  11. ஸ்பானிஷ் ஃப்ளூ - சென்பாலன்
  12. நடன பிளேக் உறுபிணி - சென்பாலன்
  13. பேதிமேளா - இந்தியன் காலரா உறுபிணி - சென் பாலன்
  14. ஏதன்ஸ் பிளேக் - சென் பாலன்