ஊரை அழித்த உறுபிணிகள் – 12

பிரெஞ்சு மக்கள் அதை “நேப்பிள்ஸ் நகரவாசிகளின் நோய்” என்றனர், இத்தாலியர்கள் அதை “பிரெஞ்சு நோய்” என்றனர், ரஸ்யர்கள் “போலந்து நோய்” என்றனர், போலந்து மக்கள் அதை “ஜெர்மன் நோய்” என்றனர், ஜெர்மானியர்கள் “பிரெஞ்சு நோய்” என்றனர். இப்படி கால்பந்தைப் போல சிபிலிசை ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி உதைத்துக் கொண்டனர்.  கடைசியில் அந்தப் பந்து அமெரிக்க பூர்வகுடி மக்களின் கணக்கில் எழுதப்பட்டது. ஏனென்றால் சிபிலிஸ் நோய் உருவாக்கிய அருவருப்பு அத்தகையது. உடலுறவின் மூலம் பரவும் சிபிலிஸ், உடல் முழுக்க நாற்றமெடுக்கும் சீழ்வடியும் புண்களை உண்டாக்கும். முக எலும்புகளை சிதைத்து முகத்தை கோரமாக்கும். இதை யார் சொந்தம் கொண்டாடுவார்?

சிபிலிஸ் எனும் பெயர் வந்தது ஒரு சுவாரசியமான கதை. பிரெஞ்சுப் படையினர் இத்தாலியின் நேப்பிள்ஸ் அரசை 1494ஆம் ஆண்டு முற்றுகையிட்டனர். இரண்டு நாட்டினருமே பணத்திற்காக சண்டை போடும் வேறுநாட்டு அடியாட்களை அதிக அளவில் தங்கள் படைகளில் சேர்த்திருந்தனர். இந்த அடியாட்கள் விலைமாதர்களிடம் செல்வதையும் போரில் தோல்வியடைந்த தரப்பின் பெண்களை வன்கொடுமை செய்வதையும் பழக்கமாகக் கொண்டிருந்தனர்.

பிரஞ்சுப் படையினரின் நேப்பிள்ஸ் முற்றுகை தொடங்கி சில நாட்கள் கழித்து, 1495 ஆம் ஆண்டு நேப்பிள் நகரம் முழுவதும் அதுவரை கண்டிராத ஒரு விசித்திரமான நோய் தாக்கியது. உடல் அழுகியது போல நாற்றத்துடன் புண்கள் வந்து, சீழ் வடிய நின்ற இரு நாட்டுப் படைகளையும் அந்த நாட்டினரே அருவருப்பாக பார்த்தனர். இத்தாலியைச் சேர்ந்தவர்கள் பிரெஞ்சுப் படையினர்தான் இந்த நோயை கொண்டு வந்ததாகக் கூறி “பிரெஞ்சு நோய்” என்றனர். பிரெஞ்சுப் படையினரோ இத்தாலி நேப்பிள்ஸ் நகர மக்களிடம் இருந்து தங்களுக்கு நோய் வந்தது எனக் கூறி “நேப்பிள்ஸ் நகர நோய்” என்றனர். கி.பி 1530 வரை அனைவரும் தங்களுக்குப் பிடிக்காத நாட்டு பெயரைக் கூறி அந்த நோயை அழைத்தனர்.

1530ஆம் ஆண்டு இத்தாலியைச் சேர்ந்த கிரொலமோ ப்ரகாஸ்டோரோ எனும் கவிஞர் கிரேக்க புராணங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு கதையை எழுதினார். அந்தக்கதையில் சிபிலஸ் எனும் ஆடு மேய்க்கும் சிறுவன் தன் நாட்டிற்கு பஞ்சத்தை கொடுத்த அப்போலோ தெய்வத்தை வணங்க மறுத்துவிடுகிறான். இதனால் கோபமடைந்த அப்போலோ தெய்வம் அவனது பெயரிலேயே ஒரு நோயை உண்டாக்கி பரப்புகிறது. இந்தக்கதை எழுதப்பட்டு புகழடைந்த பிறகு அந்த சிபிலஸ் சிறுவனின் பெயரால் சிபிலிஸ் என்று இந்த நோய் அழைக்கப்பட்டது. அதுவே நிலைத்துவிட்டது.

இந்த சிபிலிஸ் உறுபிணி எங்கிருந்து தொடங்கியது என்பதற்கு இரண்டுவகை கருத்தாக்கங்கள் உள்ளன. கொலம்பியன் கருத்தாக்கம், கொலம்பியனுக்கு முற்பட்ட கருத்தாக்கம்.

அமெரிக்க பூர்வகுடி மக்களிடம் சிபிலிஸ் வியாதி இருந்தது என்றும், கொலம்பஸ் அமெரிக்காவை கண்டறிந்து மீண்டும் ஐரோப்பா திரும்பிய போது அவருடன் வந்தவர்கள் மூலம் ஐரோப்பாவில் பரவியதாகவும் கூறுவது கொலம்பியன் கருத்தாக்கம்.

கொலம்பஸ் காலத்திற்கு முன்னரே இருந்தது. ஆனால் அதைப்பற்றி யாரும் அறியாததால் தொழுநோய் உள்ளிட்ட நோய்களுடன் குழப்பி, பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வரலாற்றில் சரியாக பதியப்படாமல் இருந்தது. இதனால் கொள்ளை நோயாகப் பரவிய போது புது நோயாக கருதப்பட்டது, என்று கூறுவது கொலம்பியனுக்கு முற்பட்ட கருத்தாக்கம்.

ஒரு தரப்பு ஆராய்ச்சியாளர்கள் கொலம்பியனுக்கு முற்பட்ட கருத்தாக்கத்தையும், மற்றொரு தரப்பு ஆராய்ச்சியாளர்கள் கொலம்பியன் கருத்தாக்கத்தையும் ஆதரித்து கட்டுரைகளை வெளியிட்டுள்ளனர். இப்போதைக்கு கொலம்பியன் கருத்தாக்க ஆதரவாளர்கள்  பெரும்பான்மை பெற்றுள்ளனர்.

1495 இத்தாலி சிபிலிஸ் உறுபிணி

நோய் – சிபிலிஸ்

நோய்க்கிருமி – டிரிபோனிமா பலிடம்

ஆரம்பித்த இடம் – நேப்பிள்ஸ், இத்தாலி

பலி எண்ணிக்கை – அறியமுடியவில்லை

பரவும் முறை – முறையற்ற உடலுறவு, இரத்தம் செலுத்துதல் மூலம், தாயிடம் இருந்து சேய்க்கு

சிகிச்சை – தற்போது மருந்துகள், சிகிச்சை முறைகள் உள்ளன

இன்றைய நிலை – இன்றும் பரவுகிறது.

ஷாம்பெயின் பாட்டில்களை திறக்க உதவும் “கார்க் ஸ்க்ரூ” போன்ற வடிவத்தை கொண்ட ஸ்பைரோகீட் வகை பாக்டீரியம் டிரிபோனிமா பலிடம்.  இதே ஸ்பைரோகீட் வகையைச் சேர்ந்தது தான் எலிக்காய்ச்சலை உண்டாக்கும் லெப்டோஸ்பைரா பாக்டீரியமும்.

டிரிபோனிமா பலிடம் கிருமி இனப்பெருக்க உறுப்புகளின் கோழைசுரப்பு செல்களின் (mucous membranes) வழியாக உடலுக்குள் நுழையும். தோலில் சிறுகீறல் இருந்து நோயுற்ற நபரின் உடல் திரவங்கள் பட்டாலும் பரவும். உடலுக்குள் சென்ற சில மணி நேரங்களில் நிணநீர் ஓட்டத்துடனும், இரத்த ஓட்டத்துடனும் கலந்து உடலில் தனக்கு வசதியான இடமாகப் பார்த்து அமர்ந்து கொள்ளும். அங்கிருந்தபடியே கணக்கற்ற வகையில் பல்கிப் பெருகும். போதுமான அளவு கிருமிகளாகப் பெருகிய பின் தன் வேலையைக் காட்டும். 4 முதல் 6 வாரங்களில் இனப்பெருக்க உறுப்பில் அல்லது கிருமி உள்நுழைந்த இடத்தில் வலியில்லாப் புண் உண்டாகும். ஆறு வாரங்கள் கழிந்த பின் அந்தப்புண் ஆறத் தொடங்கும். இது முதல்நிலை சிபிலிஸ் என்று அழைக்கப்படும்.

இரண்டாம் நிலை சிபிலிஸ் 10 வாரங்களில் தொடங்கும். உடலெங்கும் கொப்புளங்கள் தோன்றும். நிணநீர் சுரப்பிகள் வீங்கும். தொடர் காய்ச்சல், பசியின்மை, உடல் எடைகுறைவு ஏற்படும். கல்லீரல், சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகள் பாதிக்கப்படலாம். ஆறுமாதங்கள் கழித்து இரண்டாம்நிலை சிபிலிஸ் தன்னாலேயே குறையத் தொடங்கும்.

இதன் பிறகு எந்த அறிகுறியும் இல்லாமல் உடலுக்குள் சிபிலிஸ் கிருமி இருக்கலாம். இரத்தப்பரிசோதனை மூலம் மட்டுமே கண்டறியப்படலாம். அதை மந்தநிலை சிபிலிஸ் என்று அழைப்பர். இவர்களிடமிருந்து மற்றவருக்கு பரவும் வாய்ப்புள்ளது.

சிபிலிஸ் கிருமி மூளை நரம்பு மண்டலத்தை தாக்கி நரம்பு மண்டல சிபிலிஸாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். நரம்பு மண்டலத்தை தாக்கினால் இருபது, முப்பது வருடங்கள் கழித்து கூட அறிகுறிகள் தெரியலாம். இதேபோல இதயத்தையும், எலும்பு, சதைகளையும் தாக்கலாம்.

இரத்தத்தில் சிபிலிஸ் நோய் எதிர்ப்புப் புரதங்களைக் கண்டறியும் VDRL (வெனிரல் டிசீஸ் ரிசர்ச் லேபாரடரி) எனும் சோதனை தான் நோயைக் கண்டறிய பெருமளவு பயன்படுகிறது. நுண்ணோக்கியில் கிருமியைக் கண்டும் நோயை உறுதிப்படுத்தப்படுத்தலாம்.

சிபிலிஸ் உறுபிணிக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி பல நூறு ஆண்டுகளாக நடந்து வந்தது. கெட்ட இரத்தத்தால் சிபிலிஸ் வருகிறது என்று கருதி அதை வெளியேற்ற வயிற்றுப்போக்கை உண்டாக்கும் பொருட்களை வைத்து ஆரம்ப காலத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் பாதரச மருந்துகள் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆர்சனிக்கில் பாக்டீரியங்களைக் கொல்லும் தன்மை இருப்பதை அறிந்து ஆர்சனிக் மூலமும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இவை அனைத்துமே பயனளிக்கவில்லை. ஆர்சனிக், பாதரச நச்சுகள் உடல்நிலையையும் பாதித்தன.

ஆனால் பெனிசிலீன் கண்டுபிடிக்கப்பட்ட பின் நிலைமை அப்படியே மாறியது.

அதன்பிறகு எத்தனையோ மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் பெனிசிலீன் மருந்துதான் இன்றும் சிபிலிஸ் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. நோயின் ஆரம்பநிலையில் ஒரே ஒருமுறை பெனிசிலீன் ஊசி போட்டால் போதும். மந்திர மருந்தைப் போல செயல்பட்டு சிபிலிஸ் கிருமியை அழித்துவிடும்.  எண்ணற்ற இறப்புகளையும், அருவருப்பையும் உண்டாக்கிய சிபிலிஸ் நோயின் தாக்கம் பெனிசிலீன் கண்டுபிடிப்பிற்கு பிறகு பெருமளவு குறைந்தது. நோய் பரவல், இறப்புகள், உடல் பாதிப்புகள் பெருமளவு குறைந்துவிட்டன.

ஆயினும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட தன்பாலின ஈர்ப்பாளர்களிடம் சிபிலிஸ் நோய் இன்றும் அதிக அளவில் காணப்படுகிறது. ஹெச்.ஐ.வி தொற்றுடன் சிபிலிஸ் தொற்றும் சேர்ந்து ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பது மிகவும் சிரமம்.

கர்ப்பிணிகளுக்கு சிபிலிஸ் தொற்று ஏற்பட்டால் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு மிகத் தீவிர பாதிப்புகளை உண்டாக்கும்.

இன்றளவும் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்னரும்,  வெளிநாடுகளில் வேலைக்குச் சேரும் முன்னரும், இராணுவப் பணிகளுக்கு முன்னரும் சிபிலிஸ் சோதனை கட்டாயமாகச் செய்யப்படுகிறது. ஏனென்றால் வரலாறு கற்றுத்தந்த பாடம் அப்படி.

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. எயிட்ஸ்:நோய் எதிர்ப்பைக் கொல்லும் நோய்-சென் பாலன்
 2. தவிக்கவைத்த தட்டம்மை (measles)- சென் பாலன் ( ஓமான்)
 3. 'கா டிங்கா பெப்போ' எனும் கெட்ட ஆவி- சென் பாலன்
 4. எல்லை தாண்டாத எபோலா- சென் பாலன்
 5. கொசுக்கள் பாடும் மரண கானா : மலேரியா- சென் பாலன்
 6. பஞ்சாய் பறந்த உயிர்கள் : பம்பாய் பிளேக்- சென் பாலன்
 7. ஹிஸ்பானியோலாவின் காலன் ஆன கோலன் – சென் பாலன்
 8. கலங்க வைத்த 'கறுப்புச் சாவு ' : பிளேக்- சென் பாலன்
 9. சார்ஸ்: ‘கொரோனோ’ என்ற திகில் படத்தின் ட்ரைலர்- சென் பாலன்
 10. ஸ்பானிஷ் ஃப்ளூ - சென்பாலன்
 11. நடன பிளேக் உறுபிணி - சென்பாலன்
 12. பேதிமேளா - இந்தியன் காலரா உறுபிணி - சென் பாலன்
 13. ஏதன்ஸ் பிளேக் - சென் பாலன்
 14. அந்தோனைன் பிளேக் / காலன்ஸ் பிளேக் - சென் பாலன்