ஊரை அழித்த உறுபிணிகள் – அத்தியாயம் 7
கொள்ளை நோய் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது “பிளேக்” தான். தாவர எண்ணெயின் நெய் எந்த நிறுவன தயாரிப்பாக இருந்தாலும் நம்மவர்கள் “டால்டா” என அழைப்பதைப் போல, கொள்ளை நோய் எனும் சொல்லிற்கு பதிலாகக்கூட பிளேக் எனும் சொல்லே பயன்படுத்தப்படும் அளவு பாதிப்பை ஏற்படுத்திய நோய். 1347 ஆம் ஆண்டு உறுபிணிக்கு முன், 48 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை உறுபிணிக்குப் பின் 35 கோடிக்கும் கீழ் குறைந்துவிட்டது என்றால் எத்தகைய பாதிப்பு ஏற்பட்டது எனப் புரிந்து கொள்ளலாம். பழைய மக்கள் தொகையை மீண்டும் அடைய உலகிற்கு 200 வருடம்* ஆனதாம். (*Work from home இல்லாமல்)
சைமன் கியூவின் எனும் பெல்ஜிய நாட்டு ஜோதிடர் “சனியின் திருவிழாவில் சூரியனின் தீர்ப்பு” என்று ஒரு கவிதை எழுதினார். அந்தக் கவிதையில் தான் முதன்முதலாக, 1347 ஆம் ஆண்டு தொடங்கிய பிளேக் உறுபிணியை “கறுப்புச் சாவு” என்றழைத்தார். அதன் பிறகு கறுப்புச் சாவு என்ற பெயரும் “பாய் பெஸ்டி” போல வைரல் ஆனது. ஜோதிடர் எழுதிய கவிதையில் இருந்து உறுபிணிக்கு ஒரு பெயர் கிடைத்தது.
தற்போதைய கொள்ளை நோய்களில் உலகின் மாசுபாடு குறைந்ததாக செயற்கைக்கோள் படங்கள் வந்ததல்லவா? அதுபோல அப்போது உலகின் மக்கள் தொகை திடீரென குறைந்ததால் காடுகளின் பரப்பளவு அதிகரித்து உலகின் வெப்ப நிலையே 0.5 டிகிரி செல்சியஸ் குறைந்ததாம். “குட்டிப் பனியுகம்” எனப்படும் Little ice age ஏற்பட கறுப்புச் சாவும் ஒரு காரணமாக கருதப்படுகிறது.
கறுப்புச் சாவு
காலம் : கி.பி 1347-1351, அதன் முன்னும் பின்னும் சிறிய அளவில்
நோய் : பிளேக்
நோய்க்கிருமி : யெர்சினியா பெஸ்டிஸ்
ஆரம்பித்த இடம் : சீனா அல்லது மத்திய ஆசிய நாடுகள்
இறந்தவர்கள் எண்ணிக்கை : 10-20 கோடி மக்கள்
நோயின் இன்றைய நிலை : அரிதாக ஏற்படுகிறது. சிறந்த சிகிச்சை இருப்பதால் உயிரிழப்பு குறைவு.
மங்கோலிய அரசர் செங்கிஸ்கான் காலத்தில் சீனாவில் இருந்து மத்தியத் தரைக்கடல் நாடுகள் வரை அவரது ஆளுகைக்குக் கீழ் இருந்தன. அவர் இறந்த பிறகு அவரது வாரிசுகள் மிகப்பெரிய நிலப்பரப்பை தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டர். அவர்களின் வழி வந்த மங்கோலிய அரசர் ஜானி பெக் மத்திய தரைக்கடல் பகுதிகளை ஆட்சி செய்து வந்தார். அப்போது கிரீமியாவின் காஃபா துறைமுகம் இத்தாலியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. சீனாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் பட்டுப்பாதையின் முக்கியத் துறைமுகமாக காஃபா விளங்கியது. பட்டுப்பாதையில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த விரும்பிய ஜானி பெக் காஃபாவை கடல் வழியாக முற்றுகை இட்டார். அப்போது அவரது படையினரை விநோதமான நோய் தாக்கியது. நோயினால் இறந்தவர்களின் உடலை காஃபா நகரத்தின் கோட்டைச் சுவரைத் தாண்டி உள்ளே எறிந்தனர் மங்கோலியப் படையினர். இதனால் காஃபா நகரத்திற்குள்ளும் நோய் பரவியது. இதனால் நோயுற்ற இத்தாலி வீரர்கள் கப்பலில் இத்தாலிக்கு திரும்பினர். இவர்கள் மூலம் இத்தாலிக்குள் நோய் பரவ ஆரம்பித்தது. கிரீமியப் பகுதிகளில் இருந்து வரும் கப்பல்கள் மூலம் நோய் பரவுவதை கண்டுகொண்ட இத்தாலிய துறைமுக நகரங்கள் அதன் பிறகு வந்த கப்பல்களை அனுமதிக்கவில்லை. இதனால் தாமதமாக வந்த கப்பல்கள் பிரான்சு, இங்கிலாந்து நாடுகளுக்குச் சென்றன. அங்கும் வியாதி பரவியது. இப்படியாக ஒரு சில மாதங்களில் ஐரோப்பா முழுவதும் பிளேக் பரவியது.
ஐரோப்பாவில் பரவுவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னரே சீனாவிலும், வட இந்தியாவிலும் பரவி பெரும் இழப்பை பிளேக் உண்டாக்கியிருந்தது. மத்திய ஆசியாவில் வசிக்கும் ஒரு வகை “எலி ஈக்கள்” பிளேக்கைப் பரப்பும் முக்கிய உயிரினம். ஜானி பெக் படையினர் சென்ற கப்பலில் மத்திய ஆசியாவைச் சேர்ந்த எலிகளும் ஈக்களும் இருந்ததே அவர்களுக்கு பிளேக் நோய் ஏற்பட காரணம்.
பிளேக்கை உருவாக்கும் யெர்சினியா பெஸ்டிஸ் பாக்டீரியா, எலி ஈக்களின் வயிற்றுப் பகுதியில் வசிக்கும். ஈக்கள் எலியிடம் இருந்து இரத்ததை உறிஞ்சும் போது அந்த இரத்தத்தை பாக்டீரியா உடனடியாக உறைய வைத்து விடும். இதனால் இரத்தத்தைச் சீரணிக்க முடியாமல் கடிவாயிலேயே ஈக்கள் வாந்தி எடுக்கும். அதில் யெர்சினியா பெஸ்டிஸ் பாக்டீரியம் வெளியேறி எலிகளுக்கு நோயை உண்டாக்கும். உணவை செரிக்க முடியாததால் பசி அடங்காத ஈக்களோ வெறி கொண்டு மற்ற எலியையோ மனிதனையோ கடிக்கப் புறப்படும். எத்தனை பேரைக் கடித்தாலும் ஈயின் பசி அடங்காது. ஆனால் அத்தனை பேருக்கும் பிளேக் பரவிவிடும். நோயுற்ற எலியை கடிக்கும் மற்ற ஈக்களுக்கும் பரவிவிடும். தம்மாத்துண்டு பாக்டீரியா, தான் பரவுவதற்கு எத்தனை தந்திரோபாயங்களைப் பின்பற்றுகிறது?
கறுப்புச் சாவு உறுபிணியில் பெரும்பாலும் ஏற்பட்டது நிணநீர்க்கட்டி பிளேக். அக்குள், தொடையிடுக்கில் உள்ள நிணநீர் சுரப்பிகள் வீங்கும். பிறகு அவை உடைந்து சீழும் இரத்தமும் துர்நாற்றத்துடன் வெளியேறும். கடுமையான காய்ச்சல் இருக்கும். நோய் தொற்றிய ஏழு நாட்களில் அறிகுறி தெரிய ஆரம்பித்துவிடும். நோயாளியின் உடலில் இருந்து வெளியேறும் திரவங்கள் மூலமாகவும் பரவும். சிகிச்சையில்லை என்றால் 60-80% பேருக்கு மரணத்தை விளைவிக்க வல்லது இந்த நிணநீர்கட்டி பிளேக். இது தவிர நுரையீரலைத் தாக்கும் நிமோனிக் வகை பிளேக்கும், இரத்தத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் செப்டிசீமிக் வகை பிளேக்கும் சிறிய அளவில் பரவின.
ஐரோப்பிய நாடுகளில் முதன்முதலில் அதிக இழப்பைச் சந்தித்தது இத்தாலி. சீனாவில் ஆரம்பிக்கும் நோய் இத்தாலியை அழிப்பது வழக்கம் போல. நோய் பரவுதல் அதிகமானதால் மிலன் நகரத்தில் நோயுற்ற மக்களின் வீட்டு வாசலை செங்கல் வைத்து அடைத்து அவர்களை வெளியேற விடாமல் செய்தார்களாம்.
யெர்சினியா பெஸ்டிஸ் பற்றி அறிந்திராத மக்கள் கெட்டுப் போன காற்றினால் பிளேக் நோய் ஏற்படுவதாக கருதினர். வியாழன் கிரகமும் சனி கிரகமும் தவறான கிரகநிலையில் இருந்து கெட்ட காற்றை அனுப்பி நோயை உண்டு செய்வதாக நம்பினர்.
நாம் முதல் அத்தியாயத்தில் படித்த மருத்துவர் காலனின் வழிமுறையைப் பின்பற்றிய மருத்துவர்கள், உடலில் கெட்ட இரத்தம் அதிகரிப்பதால் பிளேக் வருவதாகக் கருதினர். நோயுற்றவர்களின் உடலில் இருந்து இரத்தத்தை வெளியேற்றுவதை மட்டும் தான் மருத்துவமாகச் செய்தனர். துர்நாற்றத்தை மறைக்க நிறைய மலர்களை நோயாளிகள் உடையில் வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். ஊர் முழுவதும் இருக்கும் நாற்றத்தை மறைக்க ஊரின் பொது இடத்தில் வைத்து நறுமண மூலிகைகள் எரிக்கப்பட்டன.
எவ்வளவு முயற்சி செய்தும் இறப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நான்காண்டுகளில் பெரும் எண்ணிக்கையிலான மக்களைக் கொன்றுவிட்டுதான் பிளேக் நோயின் தாக்கம் குறைந்தது. அதன் பிறகும் அவ்வப்போது சிறிய எண்ணிக்கையில் கொள்ளை நோயாகப் பரவியது. \
இலக்கியத்திலும் கறுப்புச் சாவு பெரும் மாற்றத்தை உண்டாக்கியது. அதுவரை அன்பு, காதல் என அகநானூறாக இருந்த கவிஞர்களும் எழுத்தாளர்களும் சமகால நிகழ்வுகளின் கொடூரத்தைப் பற்றி எழுத ஆரம்பித்தனர்.
ரிங்கா, ரிங்கா ரோசஸ் எனும் குழந்தைப் பாடல் கூட பிளேக் காலத்தைப் பற்றி பாடுவது தான். எலி ஈக்கள் கடித்த இடம் சிவப்பு நிறத்தில் வட்டமாக இருக்கும், நோயாளிகள் உடலில் இருந்து வரும் துர்நாற்றத்தை மறைக்க போசஸ் மலரை வைத்திருப்பர், அஸ்ஸா புஸ்ஸா என மூச்சுவிட சிரமப் பட்டு விழுந்து இறப்பர் என்று குழந்தைகள் பாடும் பாட்டாக எழுதப்பட்டது.
கடவுளின் தண்டனை தான் பிளேக் என மதகுருமார்கள் பிரச்சாரம் செய்தனர். ஆனால் சிந்தனைவாதிகளோ தவறே செய்யாத மனிதர்களும் ஏன் துன்பப்பட்டு இறந்தனர் எனும் கேள்வியை எழுப்பினர். ஐரோப்பிய சிந்தனை ஓட்டத்தில் கறுப்புச் சாவு ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சொர்க்கம், நரகம் போன்றவை விவாதத்திற்குள்ளாயின.
தொழிலாளர்களின் எண்ணிக்கை திடீரெனக் குறைந்ததால் பற்றாக்குறை ஏற்பட்டது. தொழிலாளர்களுக்கு அதிக சம்பளமும் அதிக உரிமைகளும் கிடைத்தன.
கறுப்புச் சாவில், 1347-1352 வரை ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை இரண்டு உலகப் போர்களினால் இறந்தவர்களை விட அதிகம் எனக் கணக்கிடப்படுகிறது. சமூகம், மதம், கலை என அனைத்திலும் தன் தாக்கத்தை ஏற்படுத்திய கறுப்புச் சாவு வரலாற்றின் கொடுமையான உறுபிணியாக இன்றும் கருதப்படுகிறது.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- எயிட்ஸ்:நோய் எதிர்ப்பைக் கொல்லும் நோய்-சென் பாலன்
- தவிக்கவைத்த தட்டம்மை (measles)- சென் பாலன் ( ஓமான்)
- 'கா டிங்கா பெப்போ' எனும் கெட்ட ஆவி- சென் பாலன்
- சிபிலிஸ்: பதறவைக்கும் பால்வினை நோய்
- எல்லை தாண்டாத எபோலா- சென் பாலன்
- கொசுக்கள் பாடும் மரண கானா : மலேரியா- சென் பாலன்
- பஞ்சாய் பறந்த உயிர்கள் : பம்பாய் பிளேக்- சென் பாலன்
- ஹிஸ்பானியோலாவின் காலன் ஆன கோலன் – சென் பாலன்
- சார்ஸ்: ‘கொரோனோ’ என்ற திகில் படத்தின் ட்ரைலர்- சென் பாலன்
- ஸ்பானிஷ் ஃப்ளூ - சென்பாலன்
- நடன பிளேக் உறுபிணி - சென்பாலன்
- பேதிமேளா - இந்தியன் காலரா உறுபிணி - சென் பாலன்
- ஏதன்ஸ் பிளேக் - சென் பாலன்
- அந்தோனைன் பிளேக் / காலன்ஸ் பிளேக் - சென் பாலன்