ஊரை அழித்த உறுபிணிகள் அத்தியாயம் 15

லுக் மாண்டெக்னர், பிரான்சு நாட்டைச் சேர்ந்த இவரது பெயர் சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. வைரஸ் ஆராய்ச்சியாளரான இவர், கோவிட் நோயை உண்டாக்கும் கொரொனா வைரஸ் ஒரு செயற்கை வைரஸ் எனும் பகீர் குற்றச்சாட்டை வைத்தார். இந்த கொரொனா வைரஸின் மரபணுவில் மலேரியா நோய் கிருமிகளின் மரபணுவும், எயிட்ஸ் நோயை உண்டாக்கும் எச் ஐ வி வைரஸின் மரபணுவும் காணப்படுகிறன்றன, இது இயற்கையாக நிகழ வாய்ப்பே இல்லை என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டை யாரோ ஒருவர் தெரிவித்திருந்தால் யாரும் கவனித்திருக்க மாட்டார்கள். லுக் மாண்டெக்னரின் கூற்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இவர் வைரஸ் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு வாங்கியவர்.  ஆயினும் மற்ற ஆராய்ச்சியாளர்கள் லுக்மாண்டெக்னரின் கூற்றில் பிழை இருப்பதாக கூறுகின்றனர். தற்போதைய கோவிட்19 கொரொனா வைரஸ் மட்டுமல்லாமல் மற்ற கொரொனா வைரஸ்களிலும் அந்த மரபணுக்கள் இருப்பதாகவும், அவை இயற்கையாகவே ஏற்பட்டிருக்கும் வாய்ப்புகள் தான் அதிகம் என்றும் கூறுகின்றனர். இப்போது அவரது கூற்றையே உளறல் என முற்றிலும் நிராகரித்துவிட்டனர்.

ஆனால் 1983ல் லுக் மாண்டெக்னர் கூறிய கூற்றை யாராலும் நிராகரிக்க முடியவில்லை. அவர் கண்டறிந்த புதிய வைரஸ் உலகையே அச்சுறுத்தும் வைரஸாக உருவெடுத்தது. கடந்த நூற்றாண்டின் மரண நோயாகக் கருதப்பட்ட எயிட்ஸ் நோயை உண்டாக்கும் எச்.ஐ.வி வைரஸை கண்டறிந்தவர்தான் லுக் மாண்டெக்னர்.  அதற்காக அவருக்கும் அவரது சக ஆராய்ச்சியாளரான பிரான்கோய்ஸ் பாரேசினுசி என்பவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1981ல் அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கையாளர்களிடம் ஒரு புதுவிதமான நோய் பரவியதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அவர்களின் நோய் எதிர்ப்புத் திறன் மிகவும் குறைந்து, சாதாரணமாக மனிதனைத் தாக்காத நோய் கிருமிகள் எல்லாம் அவர்களைத் தாக்கியதைக் கண்டறிந்தனர். க்ரிட் நோய் (GRID – Gay Related Immune Deficiency) என்று ஆரம்பத்தில் அழைக்கப்பட்டது. சில நாட்களிலேயே போதை ஊசிப்பழக்கம் உடையவர்களிடமும் இது கண்டறியப்பட்டது.

1982ல் அமெரிக்க நோய்த் தடுப்புத்துறை இந்நோய்க்கு எயிட்ஸ் (AIDS – Acquired immune deficiency syndrome) எனப் பெயர்வைத்தது. இது பற்றிய ஆராய்ச்சிகளை முடுக்கிவிட்டது. 1983ல் லுக்மாண்டெக்னர், குழுவினர் எச்.ஐ.வி வைரஸைக் கண்டறிந்தனர்.

எச்.ஐ.வி வைரஸ் கண்டறியப்பட்ட பின்னர் உலக அளவில் ஆராய்ச்சியாளர்கள் பலரும், பழைய கால நோயாளிகளின் சேமிக்கப்பட்ட திசு மாதிரிகளை சோதனை செய்ய ஆரம்பித்தனர்.  1959 ஆம் ஆண்டு எயிட்ஸ் அறிகுறிகளை ஒத்த அறிகுறிகளைக் கொண்ட நோயால் இறந்த “டேவிட் கார்” என்பவரின் திசு மாதிரியில் எச்.ஐ.வி கிருமி இருப்பதாகக் கண்டறியப்பட்டது. ஆனால் அடுத்து வந்த ஆராய்ச்சிகளில் அது தவறென நிரூபிக்கப்பட்டது. ஆயினும் இந்த நிகழ்வு பழைய நோயாளிகளின் திசுக்களை சோதனை செய்யும் ஆர்வத்தை அதிகப்படுத்தியது.

1959 ஆம் ஆண்டு இறந்த காங்கோ நாட்டைச் சேர்ந்த மனிதர் ஒருவரின் திசுக்களில் எச்.ஐ.வி வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டது. இப்போது வரை உறுதிப்படுத்தப்பட்ட பழமையான எச்.ஐ.வி நோயாளி இவர் தான்.

அதன் பிறகு காங்கோ நாட்டில் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பழைய நோயாளிகளின் மருத்துவ அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டன. 1920ல் இருந்தே காங்கோ நாட்டில் எச்.ஐ.வி பரவல் இருந்திருக்கலாம் என கருதுகின்றனர்.

 

எயிட்ஸ்

நோய் – பெறப்பட்ட நோய் எதிர்ப்புத் திறன் குறைபாடு (எயிட்ஸ்)

நோய் கிருமி – மனித நோய் எதிர்ப்பை குறைக்கும் வைரஸ் (Human immunodeficiency Virus)

நோய் பரவும் முறை – பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம், குருதிப்பரிமாற்றம் மூலம், தாயிடம் இருந்து சேய்க்கு.

இறப்பு – சுமார் 35 மில்லியன் (1981 முதல்)

நோயின் தற்போதைய நிலை – உலகம் முழுவதும் 37.9 மில்லியன் மக்கள் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் (2019 கணக்கீடு)

வருடத்திற்கு 1.7 மில்லியன் புதிய தொற்றுகள் ஏற்படுகின்றன. 

இரத்தத்தில் இருக்கும் நோய் எதிர்ப்பு வெள்ளையணுக்களில் முக்கியமானவை T லிம்போசைட் எனும் செல்கள். T லிம்போசைட்டின் உட்பிரிவு T உதவியாளர் செல்கள். அவற்றின் மேற்பரப்பில் இருக்கும் “சிடி4” எனும் புரதம் தான் எச்.ஐ.வி வைரஸின் “விசா”. ஐஐடி தேர்வு முடிவுகள் வந்த மறுநாள் அமெரிக்க தூதரக வாசலில் நிற்பது போல உடலுக்குள் நுழையும் எச்.ஐ.வி வைரஸ் நேராக இந்த “டி உதவியாளர்” செல்களைத் தான் தேடும்.

எச். ஐ.வியின் மரபணுக்கள் ஆர்.என்.ஏ-ஆல் ஆனவை. நமது மரபணுக்கள் டி.என்.ஏ-ஆல் ஆனவை. இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. டி.என்.ஏ வங்கிக் கணக்கு என்றால், ஆர்.என்.ஏவை யு.பி.ஐ பேமேண்ட் உடன் ஒப்பிடலாம்.  ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனை பயனர் பெயர், கடவுச்சொல்லைக் கொடுத்து, ஆயிரத்தெட்டு கேப்சாக்களைத் தாண்டி உள்நுழைந்து ஓடிபி கொடுத்து பணப்பரிமாற்றம் செய்வதைப் போன்றது டி.என்.ஏ. அதன் எளிமைப்படுத்தப்பட்ட வடிவமாக எடுத்தவுடமே “ப்ரோசீட் டூ பேமெண்ட்” என யுபிஐ போலச் செல்வது ஆர்.என்.ஏ. ஆயினும் ஆர்.என்.ஏ, டி.என்.ஏ இரண்டின் பணிகளும் ஒன்று தான், தகவல்களை முந்தைய தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்துவது.

மனித உடலின் செல்லுக்குள் நுழைந்த உடன் தனது ஆர்.என்.ஏவை டி.என்.ஏவாக பிரதி எடுத்து மனித டி.என்.ஏ உடன் பிணைத்துவிடும்.  யுபிஐயை வங்கிக் கணக்குடன் இணைப்பதைப் போல. செல்லில் இருக்கும் நொதிகளைக் கொண்டு இந்த புதிய டி.என்.ஏவில் இருந்து ஆயிரக்கணக்கில் புதிய வைரஸ் ஆர்.என்.ஏக்கள் பிரதி எடுக்கப்படும். வங்கிக் கணக்கில் இருந்து யுபிஐக்கு பணம் அனுப்புவதைப் போல. ஒவ்வொரு ஆர்.என்.ஏவும் தன்னோடு கொஞ்சம் புரதத்தைச் சேர்த்துக் கொண்டு ஒரு புதிய வைரஸாக செல்லில் இருந்து வெளியேறும்.

இந்த நிகழ்வு தொடர்ச்சியாக நடப்பதால் உடலில் T உதவியாளர் செல்களின் எண்ணிக்கை குறையும். நோய் எதிர்ப்புத் திறனுக்கு முக்கியமான T உதவியாளர் செல்கள் குறைவதால் நோய் எதிர்ப்புத் திறனும் குறையும். சாதாரணமாக மனிதனைத் தாக்காத சோப்ளாங்கி கிருமிகள், பூஞ்சைகள் கூட தாக்க ஆரம்பிக்கும், புற்றுநோய்கள் ஏற்படும். இந்த நிலையைத் தான் “எயிட்ஸ்” என்கிறோம்.

மனித விரோதிகள் தேசபக்தி வேடம் போடுவதைப்போல, மனித மரபணுக்களுடன் தனது மரபணுக்களையும் மேக்கப் போட்டு இணைக்கும் யுக்தியால் தான் எயிட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பது மிகவும் கடினமான செயலாக உள்ளது. வைரஸ், சிடி4 செல்லுடன் இணைவதைத் தடுக்கும் மருந்துகள், ஆர்.என்.ஏ பிரதியெடுப்பை தடுக்கும் மருந்துகள் போன்றவை தற்போது எச்.ஐ.வி சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன.

HAART – Highly active anti retro viral therapy எனும் முறையில் பல வைரஸ் எதிர்ப்பு மருந்துகளைக் கலந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சையின் மூலம் நோயாளிகளின் வாழ்நாள் கணிசமாக அதிகரித்துள்ளது. நோய் தொற்று ஏற்பட்டவர்கள் கிட்டத்தட்ட இயல்பான வாழ்க்கையை மேற்கொள்ளும் நிலையை எட்டியுள்ளனர். நோய்க்கான மருந்துகளில் இத்தகைய சிக்கல் இருப்பதால் எயிட்ஸைப் பொருத்தவரை வருமுன் காப்பதே சிறந்த நடவடிக்கை. “ஜீரோ புதிய தொற்றுகள்” எனும் நிலையை நோக்கி உலக நாடுகள் அனைத்தும் எயிட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் உள்ளன. 2000-2010 காலகட்டத்துடன் ஒப்பிடும் போது 2010-2020 காலத்தில் புதிய தொற்றுகளின் எண்ணிக்கையும் குறைந்து வருவது, இந்த உறுபிணியை வெல்ல முடியும் எனும் நம்பிக்கையை அளிப்பதாக உள்ளது.

ஊரை அழித்த உறுபிணிகள் என்ற இத்தொடரை பிப்ரவரி மாதம் எழுத ஆரம்பித்தேன். ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்துவிட்டு வாட்ஸ் ஆப்பிலும், முகநூலிலும் நண்பர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். நான் பெரிதும் மதிக்கும் மருத்துவர்களும், எனது ஆசிரியர்களும் தனிச்செய்தியில் பாராட்டினர். இத்தொடருக்கு கிடைத்த வரவேற்பு என்னை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவ அறிவியல் தொடர்பான கட்டுரைகளுக்கு தமிழ் வாசிப்பு உலகம் இத்தகைய வரவேற்பை அளிக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. புதுமுக எழுத்தாளரான என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய உயிர்மை குழுவினருக்கும், அன்பின் ஆசிரியர் மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன். இத்தொடரின் வெற்றியை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். உறுபிணிகள் தொடரில் இருந்து விடைபெற்று, வேறு ஒரு புதிய தொடர் மூலம் உயிர்மையில் மீண்டும் சந்திப்போம். 

நன்றி

சென் பாலன்

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. தவிக்கவைத்த தட்டம்மை (measles)- சென் பாலன் ( ஓமான்)
 2. 'கா டிங்கா பெப்போ' எனும் கெட்ட ஆவி- சென் பாலன்
 3. சிபிலிஸ்: பதறவைக்கும் பால்வினை நோய்
 4. எல்லை தாண்டாத எபோலா- சென் பாலன்
 5. கொசுக்கள் பாடும் மரண கானா : மலேரியா- சென் பாலன்
 6. பஞ்சாய் பறந்த உயிர்கள் : பம்பாய் பிளேக்- சென் பாலன்
 7. ஹிஸ்பானியோலாவின் காலன் ஆன கோலன் – சென் பாலன்
 8. கலங்க வைத்த 'கறுப்புச் சாவு ' : பிளேக்- சென் பாலன்
 9. சார்ஸ்: ‘கொரோனோ’ என்ற திகில் படத்தின் ட்ரைலர்- சென் பாலன்
 10. ஸ்பானிஷ் ஃப்ளூ - சென்பாலன்
 11. நடன பிளேக் உறுபிணி - சென்பாலன்
 12. பேதிமேளா - இந்தியன் காலரா உறுபிணி - சென் பாலன்
 13. ஏதன்ஸ் பிளேக் - சென் பாலன்
 14. அந்தோனைன் பிளேக் / காலன்ஸ் பிளேக் - சென் பாலன்