ஊரை அழித்த உறுபிணிகள் – அத்தியாயம் 11 

எபோலா – கொரொனாவிற்கு முன்பு வரை இப்படி ஒரு நோய் இருப்பதே இந்தியாவில் நிறைய பேருக்குத் தெரியாது. மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கும், அது சார்ந்த செய்திகளைத் தொடர்பவர்களுக்கும் மட்டுமே தெரிந்திருந்தது.  அந்த எபோலா நோய்ப் பரவலின் போது பின்பற்றப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்மாதிரியாக வைத்து தான் கொரொனாவின் போது பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.  ஆரம்பத்தில் கொரொனா பரவும் முறை, அதன் இறப்பு விகிதம் போன்றவைத் தெளிவாகத் தெரியாத போது எபோலாவை எதிர்கொண்ட விதிமுறைகளை அடிப்படையாக வைத்து தான் மருத்துவ உலகம் கொரொனாவை அணுகியது. இப்போது அனைவருக்கும் பரிச்சியமான PPE, N95 மாஸ்க் போன்றவை எல்லாம் எபோலா சிகிச்சையில் இருந்த மருத்துவர்கள் அன்றாடம் பயன்படுத்திய கருவிகள். செய்திகளில் பரவு நோய் ஆராய்ச்சியாளர்கள் எபோலாவை ஒப்புமைப் படுத்தியே கொரொனாவைப் பற்றி பேசுவதை கேட்டிருப்போம். அது என்ன எபோலா?

ஆப்ரிக்க கண்டத்தின் மத்தியில் அடர்ந்த காடுகளுக்கு நடுவே தங்கப் பதக்கம், தங்கப்ப தக்கம் என்பது போல இரண்டு நாடுகள். காங்கோ ஜனநாயக குடியரசு, காங்கோ குடியரசு.  Democratic Republic of Congo (DRC), Republic of Congo (RC).  இந்த இரண்டு நாடுகளையும் பிரிப்பது காங்கோ நதி. உலகின் ஆழமான நதி. அமேசான் நதிக்குப்பிறகு அதிக நீர்வரத்தைக் கொண்ட இரண்டாவது பெரிய நதி. ஆழம் என்றால் 50 அடி, 100 அடி ஆழம் இல்லை. சில இடங்களில் 720 அடிக்கும் அதிகமான ஆழம் கொண்ட நதி. மேட்டுர் அணையின் ஆழமே 120 அடிதான் என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் இதன் பிரம்மாண்டம் புரியும்.  இந்த நதிக்கு பிரம்மாண்ட அளவில் நீரைக் கொண்டு வரும் பல பெரிய துணை நதிகளில் ஒன்று மொங்காலா ஆறு. அந்த ஆற்றின் மூலநதியாக,  காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டின் அடர்ந்த காடுகளில் ஓடிவருவது தான் எபோலா ஆறு. எபோலா என்றால் வெள்ளைத் தண்ணீர் என்று பொருள்.

எபோலா நதிக்கரையில் இருந்த “யம்புக்கு”  என்ற ஊரில் 1976ஆம் ஆண்டு  இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. அந்த ஊரின் பெயரை வைத்தால் அவ்வூர் மக்கள் ஒதுக்கப்படுவார்கள் என நினைத்த ஆராய்ச்சியாளர்கள் எபோலா ஆற்றின் பெயரை அந்த வைரஸுக்கு வைத்தனர்.

கண்டறியப்பட்டதில் இருந்து இதுவரை 38 முறை மனிதர்களிடையே எபோலா வைரஸ் பரவியுள்ளது. பெரும்பாலான முறைகளில் ஒற்றை அல்லது இரட்டை இலக்க எண்ணிக்கையிலேயே கட்டுப்படுத்தப்பட்டாலும், 2013-16 ஆண்டுகளில் பெரும் கொள்ளை நோயாக  பரவியது. மேற்கு ஆப்ரிக்க நாடுகளான லைபீரியா, கினி, சியாரா லியோன் நாடுகளில் 28,646 நோயாளிகளைத் தாக்கி 11323 மரணங்களை ஏற்படுத்தியது. இப்போதும் காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா நோயாளிகள் உள்ளனர்.

 

எபோலா வைரஸ் நோய்

நோய் கிருமி – எபோலா வைரஸ்

ஆரம்பித்த இடம் – காங்கோ ஜனநாயகக் குடியரசு, ஆப்ரிக்கா

இறப்பு விகிதம் – சுமார் 50%

இதுவரை ஏற்பட்ட இறப்புகள் – சுமார் 12,000

பரவும் முறை – நேரடித் தொடுதல் மூலமாக

தடுப்பூசி – சோதனை முறையில் பயன்படுத்தப்படுகிறது. 

தங்கப் பதக்க காங்கோ நாடுகளின் அடர்ந்த காடுகளில் இருக்கும் பழந்தின்னி வௌவால்களிடம் இருந்து மனிதர்களுக்கு இந்த எபோலா வைரஸ் பரவியிருக்கலாம் எனக் கருதுகிறார்கள்.

நோயுற்ற மனிதர்களின் இரத்தம், எச்சில், சிறுநீர், வியர்வை போன்ற உடல் திரவங்கள் மற்ற மனிதர்களின் கண், வாய், மூக்கு, உடற் காயங்கள் மீது படும் போது நோய் தொற்று பரவுகிறது. சுத்தம் செய்யப்படாத ஊசிகள் மூலமும், பாதுகாப்பற்ற உடலுறவு மூலமும் பரவக் கூடியது.

கடுமையான காய்ச்சல், சோர்வு, மூட்டுவலி, உடல்வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை ஆரம்பகட்ட அறிகுறிகள். நோய் முற்றிய நிலையில்  சிறுநீரகம், கல்லீரல் போன்றவை பாதிக்கப்பட்டு இரத்தக்கசிவு ஏற்படும். உடல் உள்ளுறுப்புகள் செயலிழந்து மரணம் நேரும்.

இந்த வைரசைக் கொல்லும் நேரடி வைரஸ் எதிர்ப்பு மருந்து இதுவரைக் கண்டறியப்படவில்லை. பல கூட்டு மருந்துகள் சோதனையில் உள்ளன. உடலின் நீர்ச்சத்தை பேணுவது, அறிகுறிகளுக்கு மருத்துவம் பார்ப்பது தான் தற்போதைய சிகிச்சை முறை. சிகிச்சை இல்லையெனில் 90% பேருக்கு இறப்பு நேரிடுகிறது. நல்ல சிகிச்சை கிடைத்தால் இறப்பு சதவிகிதம் 25% தான்.

கொரொனாவைப் போலவே பிசிஆர் எனப்படும் மரபணு சோதனை மூலம் இந்நோயை உறுதிப்படுத்தலாம். ராபிட் ஆண்டிஜென் விரைவுப் பரிசோதனைக் கருவிகளும் உள்ளன.

எபோலா பரவலைக் கட்டுப்படுத்த ஆப்ரிக்க நாடுகளில் பல தற்காலிக மருத்துவமனைகளை உலக சுகாதார நிறுவனம் அமைத்தது. எபோலா பரவலின் போது ஆப்ரிக்கா நாடுகளுக்கு சிகிச்சை அளிக்கச் சென்ற உலக சுகாதார நிறுவன மருத்துவக் குழுவினர், எப்படி பாதுகாப்பு உடைகளை அணிய வேண்டும் என்பதை விளக்க எடுக்கப்பட்ட வீடியோக்கள் தான் கொரொனா காலத்தில் பல அமைப்புகளால் பயன்படுத்தப்பட்டன.  ஆப்ரிக்காவுடன் தொடர்பில் இருந்த  நாடுகள் விமான நிலையங்களில் எபோலா நோய் கண்ட பகுதியில் இருந்து வருபவர்களை  சோதனை செய்தே அனுமதித்தன. எபோலா ஆப்ரிக்க நாடுகளைத் தாண்டி பரவவில்லை. இத்தாலி, ஸ்பெயின் அமெரிக்கா, போன்ற நாடுகளில் ஆப்ரிக்காவில் இருந்து திரும்பிய ஓரிரு நபர்களிடம் கண்டறியப்பட்டாலும் அதற்கு மேல் பரவவில்லை.

இப்போது சில தடுப்பூசிகள் சோதனை முறையில் பயன்பாட்டில் உள்ளன. நோய் அதிகம் பரவ வாய்ப்புள்ள ஆப்ரிக்க தேசங்களில் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

எபோலா வைரஸ் 1976ல் கண்டறியப்பட்டாலும் 2013ல் தான் கொள்ளை நோயாகப் பரவியது. 2013ல்  உலகநாடுகளின் எதிர்வினைகளைக் கண்ட  சுகாதாரத் துறை நிபுணர்கள் அப்போதே எச்சரித்தனர். உலகில் எந்த நாடும் ஒரு பாண்டமிக் உறுபிணியை எதிர்கொள்ள தயாராக இல்லை, எந்த நாடும் மற்ற நாடுகளோடு சேர்ந்து ஒற்றுமையாகப் போராட முன்வரவில்லை என்பதை சுகாதாரத் துறை ஆராய்ச்சியாளர்கள் அப்போதே கூறினர். பெரும்பாலான வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களுக்குத் தொற்று நோய்களை விட தொற்றா நோய்கள்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருதின. தொற்று நோய் சுகாதாரப் பாதுகாப்பில் கவனக் குறைவாகவே இருந்தன. நோய் தடுப்பூசி ஆராய்ச்சி போன்றவற்றிற்கு அதிக நிதி ஒதுக்கப்படவில்லை. நம்பிக்கை அளிக்கும் விதமாக 2013 எபோலா உறுபிணி ஆப்ரிக்காவைத் தாண்டி பரவவில்லை.

எபோலா  RNA மரபணுவைக் கொண்ட வைரஸ். விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவிய வைரஸ். கொரொனோவும் RNA வைரஸ்தான், விலங்குகளிடம் இருந்து பரவிய வைரஸ்தான். இதனால் உலகின் முக்கிய நிர்வாக அமைப்பில் இருந்தவர்களின் எண்ண ஓட்டம் எபோலா போன்று கொரொனாவும் அதன் கண்டறியப்பட்ட இடத்தைத் தாண்டி பரவாது என்பதாகவே இருந்தது. அதன் வெளிப்பாடாகத் தான் டிரம்ப் கூட அமெரிக்காவிற்கு கொரொனா வராது என்று நம்பிக்கையாக பிப்ரவரி மாதம் பேட்டி அளித்தார். ஆனால் அதன் பின் நடந்தவற்றை உலகம் அறியும்.

எபோலாவைப் போல எல்லை தாண்டாத வைரஸாக கொரொனா இல்லை. உலகத் தலைவர்களின் பேச்சை கொரொனா வைரஸ் மதிக்கவே இல்லை. கொரொனாவை விட பயம் தரும் கற்பனை ஒன்று உண்டு. ஒருவேளை எபோலா எல்லை தாண்டினால்?