ஊரை அழித்த உறுபிணிகள்
(கொள்ளை நோய்களின் கதை)

 அத்தியாயம் 6

ஒரு நவம்பர் மாத குளிர் வாட்டும் நாளில் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் ஃபோசான் நகரத்தில் ஒரு புது வித நோய் பரவியது.

சாதாரணமாக காய்ச்சல், தலைவலி, உடற்சோர்வு எனத் தொடங்கிய அந்த நோய் திடீரென மூச்சுத் திணறலை ஏற்படுத்தி உயிரைப் பறித்தது. காரணம் கண்டறிய முடியாமல் மருத்துவர்கள் திணறினர். நோயாளிகளுக்கு மருத்துவம் செய்த மருத்துவர்களுக்கும் மருத்துவப்பணியாளர்களுக்கும் நோய் உடனடியாகப் பரவியது.

சீன அரசாங்கம், இது சாதாரணக் காய்ச்சல் தான் எனக் கூறி பத்திரிக்கைகளில் செய்தி வெளியிடுவதைத் தடுத்தது. சர்வதேச அமைப்புகளுக்கும் எந்த செய்தியையும் சீன அரசு தர மறுத்தது. பிறகு, உலக நாடுகளின் கடும் கண்டனத்தைத் தொடர்ந்து தன் நிலையை மாற்றிக் கொண்டது. நோய் பாதித்த பலரும் சிகிச்சைப் பலனின்றி இறந்தனர். சீன மக்கள் அனைவரின் மொபைல் போன்களிலும் இது பற்றிய குறுஞ்செய்திகள் தொடர்ந்து வந்தன. மக்கள் அனைவரும் முகவுறை அணிய ஆரம்பித்தனர். மாஸ்க்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. விமான நிலையங்களில் மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்றன.

பொறுங்கள்!!! பொறுங்கள்!!!

இவை அனைத்தும் நடந்த காலம் 2002 -03 ஆம் வருடங்களில். “சார்ஸ்” எனப்படும்  உடனடி கடும் மூச்சுத் திணறல் உறுபிணி பரவிய போது நடந்தவை.

வரலாறு எவ்வளவு சீக்கிரம் திரும்புகிறது!!!

சார்ஸ்: 

காலம் : கி.பி 2002-2004

நோய்க்கிருமி : சார்ஸ் கொரோனா வைரஸ் (SARS-CoV)

ஆரம்பித்த இடம் : ஃபோசான், சீனா

பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : சுமார் 8000 பேர்

இறந்தவர்கள் எண்ணிக்கை : 774

நோயின் இன்றைய நிலை : 2004க்கு பிறகு ஒரு நோயாளியும் கண்டறியப்படவில்லை.

தடுப்பூசி : பயன்பாட்டில் கிடையாது. சோதனையில் உள்ளது.

2003 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த  பேராசிரியர் லியூ ஜியான்லுன் என்பவரும் அவரது மனைவியும் தங்கள் உறவினர் திருமணத்திற்காக ஹாங்காங் சென்று ஒரு ஹோட்டலில் தங்கினார்கள்.  அவர்கள் தங்கியிருந்த ஒன்பதாம் தளத்தில் கனடாவைச் சேர்ந்த தம்பதியினர், அமெரிக்கவைச் சேர்ந்த தொழிலதிபர், ஷாங்காய் சுற்றுலாப் பயணி, சிங்கப்பூர் பெண் என பல நாட்டவரும் தங்கியிருந்தனர். திடீரென பேராசிரியர் லியூவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நோய் அதே தளத்தில் தங்கியிருந்த மற்ற நாடுகளைச் சேர்ந்த பலருக்கும் பரவியது. அவர்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பிய போது அந்த நாடுகளுக்குள்ளும் சார்ஸ் வைரஸ் நுழைந்தது. மொத்தம் 26 நாடுகளில் சார்ஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டனர். ஹோட்டலில் தங்கியிருந்த பேராசிரியர் லியூ, ஹாங்காங் மருத்துவமனையில் உயிரிழந்தார். மருத்துவமனை ஊழியர்களுக்கும் நோய் பரவியது. ஹாங்காங் மருத்துவமனையில் வேலை பார்த்த ஒருவர் தங்கியிருந்த அப்பார்ட்மெண்ட் கட்டிடத்தில் இருந்த 200 பேருக்குத் தொற்று ஏற்பட்டது. இப்படி சங்கிலித் தொடராக சார்ஸ் நோய் பரவியது.

சார்ஸ் நோயில் 2 முதல் 7 நாட்களில் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். கடுமையான காய்ச்சல், உடல் வலி, அசதி, பசியின்மை, வயிற்றுப்போக்கு ஆகியன ஏற்படும். வறட்டு இருமல், மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படலாம். பெரும்பாலான கொரோனா வைரஸ்களுக்கு நுரையீரல் தான் பிடித்தமான உறுப்பு போல. இதுவரை வந்த சார்ஸ், மெர்ஸ், கோவிட்19 என அனைத்து கொரோனா வைரஸ்களும் நுரையீரலைத் தான் தாக்குகின்றன.

விமானங்கள் நடுவானில் பறந்த போது சார்ஸ் நோயாளிகள் பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டன.  விமானப் பயணங்களுக்கு முன் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது. சந்தேகத்திற்கு இடமான நோயாளிகள் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. சிங்கப்பூர் அரசு நோய் தாக்குதலுக்கு ஆளான பகுதிகளுக்கு சென்று திரும்பியவர்களை தனிமைப்படுத்தியது. அதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தன.

இதற்கு முன் இப்படி ஒரு நோயை எதிர் கொண்ட அனுபவம் இல்லாததால், இது என்ன வகை நோய் என்று அறியவே பல நாட்கள் ஆனது. கிளாமைடியா எனப்படும் ஒருவகை பாக்டீரியாவால் வரும் நிமோனியா என ஆரம்பத்தில் கருதப்பட்டது. மருந்துகளுக்கு எதிர்ப்புத்திறன் பெற்ற காசநோயாக இருக்கலாம் எனவும் கருதப்பட்டது. பலகட்ட ஆராய்ச்சிகளுக்குப் பின் வைரஸ் நோயாக இருக்கலாம் என யூகிக்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் நோய் பரவ ஆரம்பித்து 5 மாதங்களுக்குப் பிறகு தான் வைரஸின் மரபணு வரிசை அறியப்பட்டது. அதன் பிறகு நோயைக் கண்டறியும் சோதனைகள் எளிதாக மேற்கொள்ளப்பட்டன. உலகம் முழுவதும் விமான நிலையங்களில், பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வருபவர்களுக்கு சோதனைகள் செய்யப்பட்டன.

சார்ஸ் வைரஸ் நேரடியாக நோயாளியைத் தொடுவதன் மூலமும், அவர் பயன்படுத்திய பொருட்களைத் தொடுவதன் மூலமுமே அதிகம் பரவியது. மிக அதிக வைரஸ் தாக்குதல் இருப்போரிடமிருந்து மட்டுமே சுவாசப்பாதை சளித்துகள் மூலம் பரவியது. இதனால் நோயாளிகளுடன் நேரடித் தொடர்பில் இருந்தோர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். சார்ஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதில் இது சாதகமான அம்சமாக அமைந்தது. ஒப்பீட்டளவில் தொற்றும் தன்மை குறைவாக இருந்தாலும், சார்ஸ் நோயினால் ஏற்படும் இறப்பு விகிதம் மிக அதிகமாக இருந்தது. கிட்டத்தட்ட 10% நோயாளிகளுக்கு மரணம் நேர்ந்தது.

நோயின் தன்மையாலும், உலக நாடுகளின் நடவடிக்கைகளாலும் நோய் பரவுதல் கட்டுப்படுத்தப்பட்டது. வைரஸ் எதிர்ப்பு மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படாமலே நோய் பரவுதலைத் தடுப்பதன் மூலம் மட்டுமே கொள்ளை நோய் முறியடிக்கப்பட்டது. கொள்ளை நோய்  முடிவுக்கு வந்த போது சுமார் 8000 பேரைத் தாக்கி, 774 மரணங்களை ஏற்படுத்தியிருந்தது.

ஒப்பீட்டளவில் குறைந்த பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும் சார்ஸ் நோய் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தது.

  1. புதுவகையான நோய் பரவும் போது அதை எதிர்கொள்ளும் மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் கட்டாயம் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தான் அணுக வேண்டும்.
  2. நோயின் பரவலை அரசியல் காரணங்களுக்காக மூடி மறைப்பது கொள்ளை நோயாக மாறவே வழிவகுக்கும்.
  3. உலகமயமாக்கல் உச்சத்தில் இருக்கும் நிலையில் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு நோய் பரவுவது மிகவும் எளிது.
  4. தன்னைத் தானே மாற்றிக் கொள்ளும் வைரஸ்களால் எப்போது வேண்டுமானாலும் புதுவகை நோய்கள் தாக்கலாம்.
  5. ஒரு நாட்டின் பொது சுகாதாரத் துறை வலிமையாக இருப்பது நோய் தடுப்பில் மிகவும் அவசியம்.

இது போன்ற பல பாடங்களைக் கற்றுத் தந்தது சார்ஸ் நோய். இப்பாடங்களின் முக்கியத்துவத்தை இப்போதைய கோவிட் கொரோனா உறுபிணியில் நாம் கண்கூடாகக் காண்கிறோம். தற்போதைய கோவிட் 19 நிகழ்வுகளை சார்ஸ் நிகழ்வுகளுடன் ஒப்பிட்டால், முழுநீள திரைப்படத்திற்கு முன் வரும் டிரைலர் போலவே இருப்பது ஆச்சரியமான ஒற்றுமைதான்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:

5.ஸ்பானிஷ் ஃப்ளூ – https://bit.ly/2QqTyDp
4.நடன பிளேக் உறுபிணி – https://bit.ly/2QqTnIf
3.பேதிமேளா – இந்தியன் காலரா உறுபிணி – https://bit.ly/2J0uEq6
2.ஏதன்ஸ் பிளேக் – https://bit.ly/33syIZm
1.அந்தோனைன் பிளேக் / காலன்ஸ் பிளேக் –https://bit.ly/2IUryDY

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. எயிட்ஸ்:நோய் எதிர்ப்பைக் கொல்லும் நோய்-சென் பாலன்
  2. தவிக்கவைத்த தட்டம்மை (measles)- சென் பாலன் ( ஓமான்)
  3. 'கா டிங்கா பெப்போ' எனும் கெட்ட ஆவி- சென் பாலன்
  4. சிபிலிஸ்: பதறவைக்கும் பால்வினை நோய்
  5. எல்லை தாண்டாத எபோலா- சென் பாலன்
  6. கொசுக்கள் பாடும் மரண கானா : மலேரியா- சென் பாலன்
  7. பஞ்சாய் பறந்த உயிர்கள் : பம்பாய் பிளேக்- சென் பாலன்
  8. ஹிஸ்பானியோலாவின் காலன் ஆன கோலன் – சென் பாலன்
  9. கலங்க வைத்த 'கறுப்புச் சாவு ' : பிளேக்- சென் பாலன்
  10. ஸ்பானிஷ் ஃப்ளூ - சென்பாலன்
  11. நடன பிளேக் உறுபிணி - சென்பாலன்
  12. பேதிமேளா - இந்தியன் காலரா உறுபிணி - சென் பாலன்
  13. ஏதன்ஸ் பிளேக் - சென் பாலன்
  14. அந்தோனைன் பிளேக் / காலன்ஸ் பிளேக் - சென் பாலன்