எல்லாமே எப்போதுமே -6 

WATCHING A MOVIE SHOULD BE LIKE HUNTING. OUT OF CCONTEXT, EVERY IMAGE OF THE CINEMA IS YOURSS FOR A SPLIT SECOND. TAKE THEM BEFORE THEY BURY IT- JOHN WATERS

ஊர் ஊராக வண்டி ஒன்று புகுந்து புறப்பட்டுக் கடக்கும். அதிலிருந்து எக்கச்சக்கமாக பிட் நோடீஸ்கள் இறைக்கப்படும். அதை எடுத்து அவரவர் ஒன்றிரண்டை வைத்துக் கொண்டு மற்றவர்களுக்கும் தருவார்கள். அந்த நோட்டீஸில் வர இருக்கிற சினிமா குறித்த கண்கவரும் வாசகங்கள் இடம்பெறும். சினிமாவின் சிறப்புக்கள் என்ன ஏன் அதைத் தவறவிடக் கூடாது என்றெல்லாம் அதில் விளக்கங்கள் இருக்கும். அப்படியான போஸ்டர் தாங்கி வண்டிகள் பிற்பாடு நோட்டீஸ்கள் இல்லாமல் இரண்டு ஸைடிலும் வெறுமனே போஸ்டர்கள் மட்டும் ஒட்டப்பட்டு ஊர்வலம் வந்தன. அதன் பிறகு ஒவ்வொரு தியேட்டருக்கும் போஸ்டர் ஒட்டுவதற்கென்று மாற்று ஏற்பாடுகள் ஆகின. ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டுவதற்கென்று கோருவார் அற்ற சுவர்கள் இருந்தன.கூடவே தனியாருக்குச் சொந்தமான சுவர்களும் கூட ஒப்பந்தமாகின. டெண்ட் எனப்படுகிற ட்யூரிங் டாக்கீஸ்கள் மெல்ல கூரை அமைக்கப்பட்டு தற்காலிகரூப நிரந்தரமும் ஆகின. போஸ்டர்கள் ஒட்டுவதற்கு ஈடாக சில இடங்களில் பாஸ்கள் வழங்கப்பட்டன. எனக்கெல்லாம் ரஜினி என்ற மூன்றெழுத்தைக் கண்ட மாத்திரத்தில் உடம்பெல்லாம் எதுவோ செய்யும். என் பால்ய காலத்தில் பல பத்திரிகைகளும் பாட்டுப் புத்தகங்களும் பெருக்கமெடுத்திருந்தன. சினிமாவுக்கென்று பல பத்திரிகைகள் இருந்தன. ஆனாலும் அவையெல்லாம் பதின்ம வயது வரை கைக்கு எட்டாக் கனிகள் தான்.

பொம்மை, ஜெமினிசினிமா, ஃபிலிமாலயா,சினிமா எக்ஸ்பிரஸ், இவை தவிர நக்கீரன் குழுவிலிருந்து அப்பொழுது ரஜினி ரசிகன் என்று தனிப் பத்திரிகை ரஜினி ரசிகர்களுக்கென்றே வெளியானது. அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. சக்தி சிவம் தியேட்டர் ஏரியாவில் என் தூரத்து உறவினர் அவர் பேரே ரஜினி குமார் தான். வெறும் குமார் என்று அழைத்தால் திரும்ப மாட்டார். ரஜினிஸார் என்றெல்லாம் சிலர் விளித்ததைக் கண்டிருக்கிறேன். நல்ல சிவந்த மேனியும் பூனைக் கண்களுமாய் பார்க்க வசீகரமாக இருப்பார். அவருக்கு டவுன் தியேட்டர்கள் எல்லாவற்றிலும் ஆளிருந்தார்கள். அப்பாவும் அவரும் கிசுகிசுவென்று பேசிக் கொள்வார்கள். எனக்குப் பதின்மூன்று வயது. அவர்களோடு அலையவும் இயலாது. என்னை புறக்கணிக்கவும் முடியாது அதற்கு ஒரு உபாயம் செய்தார்கள். என்னை அழைத்துக் கொண்டு போய் செண்டிரல் தியேட்டரில் சேவகன் என்ற படத்திற்கு மாடி ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கட் எடுத்து தந்தார் குமார் மாமா. அப்பா என் தோளை அழுத்தி அதெல்லாம் தனியாத் தானே ஸ்கூலுக்கெல்லாம் போயிட்டு வந்திட்டிருக்கான். அதெல்லாம் பயப்பட மாட்டான் என்று குற்ற உணர்வு கலந்த தைரியத்தை சிந்தினார்.

விஷயம் இதுதான்.என்னை அங்கே எங்கேஜ் செய்துவிட்டு என் தகப்பனும் குமாரும் மது அருந்தப் போவது அவர்கள் திட்டம். அது எனக்குத் தெரியாது. நான் தான் சினிமா என்றால் கண் இமைக்காமல் பிளந்த வாய் மூடாமல் பார்ப்பேன் அல்லவா..?அப்படிப் பார்த்து முடித்து விட்டு வீட்டுக்குத் திரும்பினேன். கிட்டத் தட்ட செண்டிரல் தியேட்டரில் இருந்து எங்கள் வீடிருக்கும் குறிஞ்சி நகர் பத்து கிலோமீட்டர்கள். பஸ் பிடித்து ஒருவழியாய் சென்றாயிற்று.அம்மாவிடம் நான் அன்றைக்கு வெளியான புதுப்படம் பார்த்தேன் என்று சொன்னதும் அவளுக்கு சந்தோஷம் சரித்தான் அப்பாவும் பய்யனும் படத்துக்குப் போய்விட்டு வந்திருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டாள்,அதெல்லாம் கழிந்து ஒருவாரத்திற்கு அப்பால் என்னை அறியாமல் நான் மட்டும் தான் சினிமா பார்த்தேன் என்று சொன்னது தான் தாமதம் அப்பாவுக்கு ஒரு மணி நேரம் விடாமல் திட்டு விழுந்தது. ஏன்யா அறிவு இருக்கா குழந்தையை யாராச்சும் ஹிப்னடைஸ்  செய்து கூட்டிப் போயிட்டாங்கன்னா நா என்ன செய்வேன் என்று அழுதாள் அம்மா. அப்போது ஹிப்னாடிஸம் என்பது பயமும் வெறுமையுமான சொல்லாய் எனக்குள் புகுந்து கொண்டது.அதற்கடுத்து சில தினங்களிலேயே மதுரையின் வேறொரு தியேட்டருக்குள் நான் ஸ்டைலாக தனியாக நுழைவதைப் பின்னாலிருந்து பார்த்துத் தன் தலையிலேயே அடித்துக் கொண்டதாக அப்பா அம்மாவிடம் போட்டுக் கொடுத்தார்.இந்த முறை மாண்புமிகு அம்மா அவர்களின் கருணை மிகுந்த விளக்குமாறு என் மீது பாய்ந்தது.

அப்போதெல்லாம் நடுவகிடு எடுத்த தர்மத்தின் தலைவன் ரஜினி சுகாசினி  புன்னகை மன்னன் ரேவதி கமல் எனப் பல திரை நட்சத்திரங்களின் ஃபோட்டோ கார்ட்கள் படம் ஒன்று ஐம்பது பைசா விலையில் சிவகாசியில் அச்சாகி எல்லா இடங்களிலும் விலைக்குக் கிடைத்தன. இம்மாதிரியான படங்கள் பசங்களுக்கான வஸ்துக்கள் கிடைப்பதற்கென்றே கடைகள் இருந்தன. அங்கெல்லாம் சென்று விதவிதமாய் ரஜினி படங்களை வாங்கி மாபெரிய கத்தரிக்கோல் கொண்டு அவற்றை வெட்டி வரிசையாக அடுக்கி ரப்பர் பேண்ட் போட்டு வீட்டில் ஒரு மறைவிடத்தில் ஒளித்து வைப்பேன். ஒரு கட்டத்தில் ரீடெய்ல் அலுத்துப் போய் மதுரையில் இம்மாதிரி படங்களுக்கென்றே இருக்கும் ஹோல்சேல் கடைகளான சங்கு கம்பெனி நவோதயா போன்ற இடங்களுக்கு சென்று மொத்த விலைக்கு கொள்முதல் செய்து கொள்வேன். எனக்கு ரஜினியும் அவருக்கு நானுமாய் கழிந்தது காலம். மொத்தமாய் வாங்கும் போது ஒன்பது படங்கள் நாலு ரூபாய் ஆக அதிலொரு ஐம்பது பைசா லாபம் இருக்கும்.

அப்படி மைக்கேல் மதன காமராஜன் படத்தின் போது எங்கள் ஏரியாவின் கமல் பிஸ்தாவான சுடலைமுத்து விதவிதமாய் அந்தப் படத்தின் ஸ்டில்ஸை வைத்திருந்தான். எனக்கு அவை கிடைக்கவில்லை. அப்போது மூன்றாவது ஸ்டாப்பில் ஒரு கடையில் எல்லா புஸ்தகங்களும் கிடைக்கும். அங்கே ஒரே ஒரு பேசும்படம் வந்திருந்தது. பேசும் படம் பத்திரிகையில் மட்டும் சிறப்பம்சம் என்னவென்றால் புத்தம் புதிய படங்களின் கலர் விளம்பரங்களை முன் அட்டையில் வெளியிடுவார்கள். அப்படி அந்த இஷ்யூவில் மைக்கேல் மதன காமராஜன் படத்தின் விளம்பரம் மில்க் க்ரீன் பேக்ட்ராப்பில் இப்போதும் வீட்டில் எதோவொரு மூலையில் அந்த அதே மில்க் க்ரீன் ப்ரதி பழுப்பேறிய வெர்ஷனாகக் கிடைக்கக் கூடும். விளம்பரத்தைப் பார்த்த நிமிடத்திலேயே படம் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பைத் தூண்டியது மைக்கேல் மதனகாம ராஜன். ரஜினிஸாரிடம் மானசீக மன்னிப்பைக் கேட்டுக் கொண்டு நான் பார்த்த பால்ய சில கமல் படங்களில் அது ஒன்று.இன்னொரு மனம் திருடிய கமல் அபூர்வ சகோதரர்களில் வரும் அப்பு.

அதென்னவோ சினிமா ரைவல்ரியாகவே எப்போதும் பேணப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. அப்பா எம்ஜி.ஆர் பக்தர். சித்தப்பா சிவாஜி வெறியர். நான் ரஜினி ரசிகன். என் சிற்றப்பா மகன் பாலாஜி கமல் ரசிகனில்லை ஆனாலும் வேண்டுமென்றே ரஜினியை பற்றி எதாவது சொல்லி என்னைக் கடுப்பேற்றிக் கொண்டே இருப்பான்.பத்தாம் வகுப்பு லீவில் இருபத்தைந்து கிலோமீட்டருக்கு அப்பால் தெரளி என்ற இடத்தில் பாரமவுண்ட் ஆலையில் தினக்கூலிக்கு சேர்ந்தேன். அதென்னவோ லீவை உருப்படியாகக் கழிக்கவேண்டும் என்ற யோசனையெல்லாம் சரியாய்த் தான் இருந்தது. மொத்தம் பன்னிரெண்டு நாட்கள் அந்த வேலைக்குப் போனதாக ஞாபகம்.அங்கே ஒருவர் குமார் என்று பேர் ஹார்வி பட்டியிலிருந்து வருவார். அவருடைய பேரே கனகா குமார் தான். அவர் நடிகை கனகாவின் ரசிகர். அப்படித் தன்னை அறிமுகம் செய்துகொண்டதைப் பிற்காலத்தில் பல முறை ஆச்சர்யத்தோடு எண்ணி இருக்கிறேன்.அவரவர் சினிமாவைத் திறப்பதற்கு அவரவர் சாவிகள். குமாரின் கனவுகளைத் திறப்பதற்கான சாவி கனகா.

ஒரு சென்னை பயணத்தில் வாடகை ஊர்தியில் பயணிக்கும் போது டேஷ் போர்டில் இந்தி நடிகர் ஜிதேந்திராவோடு அந்தக் காரின் ட்ரைவர் நிற்கிற படம் ஒட்டியிருந்தது. ஜிதேந்திரா ரசிகரா என்று கேட்டேன். வெகு இயல்பாக கேட்ட அந்த வினாவுக்கு ட்ரைவர் மெல்லிய குரலில் ரசிகன் மட்டுமில்ல ஸார். நானொரு ஸ்டண்ட் மேன். எயிட்டீஸ் எண்ட்லேருந்து இருபது வருஷம் நெறைய்ய இந்தி தெலுங்குப் படத்துலல்லாம் நடிச்சிருக்கேன்.ஒரு ஆக்சிடெண்ட் ஆயிடிச்சி. அதுக்கப்பறம் உடல்நிலை ஒத்துக்கலை.அதான் சென்னைக்கே வந்திட்டேன் என்றார். அதற்கப்புறம் கொஞ்ச நேரம் நாங்கள் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. மீண்டும் அவராகவே ஜிதேந்திரா ஸார் ரொம்ப நல்ல டைப். நெறைய்ய ஹெல்ப் பண்ணிருக்கார் என்றார். எனக்கும் அவரை ரொம்பப் பிடிக்கும் என்றேன். அப்போதுவரை எப்படியோ அதற்கப்புறம் ஜிதேந்திரா வரும்போதே அந்த டாக்ஸி ட்ரைவரையும் ஞாபகத்துணையாக அழைத்துக் கொண்டு தான் வருகிறார்.

carl sifakis தொகுத்திருக்கும் the dictionary of crime terms ஒரு சுவாரசியமான அகராதி. குற்றங்களின் உலகத்தை சற்றே நெருக்கமாய்ச் சென்று தரிசிக்க உதவுகிற திரை மறைவு சன்னல். பிஸ்கட் என்றால் துப்பாக்கி எனப் பொருள் கேண்டிமேன் என்பது போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுப்ட்டிருக்கும் தெருவோர வியாபாரிக்கான சங்கேதப் பெயர் don எனும் சொல் இத்தாலியின் தெற்குப் பிராந்தியத்தில் சிஸிலியில் ஏன் ஸ்பெயினிலெல்லாம் மரியாதைக்குரிய பட்டமாகவே வழங்கப்பட்டு வந்திருக்கிறது. எப்படியோ அமெரிக்காவில் இதே சொல்லாடல் குற்ற உலகத்தில் பட்டமகிஷருக்கு வழங்கப் படத் தொடங்கி இந்தியாவில் 1978 ஆமாண்டு இந்தியில் எடுக்கப் பட்ட டான் அமிதாப் நடித்த படம். அது தான் பிறகு தமிழில் பில்லாவானது. டானை பில்லா விஞ்சியது என்றால் ஹிந்திவாலாக்கள் ஒப்புக்கொள்ள மறுக்கலாம். ஆனால் பில்லா தான் அல்டிமேட் என்னைப் பொறுத்தளவில். குற்றங்களின் நிழல் உலகம். ஒருபுறம் நாடுகளும் சட்டங்களும் இன்னொரு புறம் சக தொழில் போட்டியாளர்கள் என எல்லாத் திசைகளிலும் எதிர்களோடு விளையாடும் மயிர்க்கூச்செறியும் கதாபதி தான் டான். என்ன ஒன்று இந்திய சினிமாவின் விசேஷ குணமே எதாவதொரு விஷயத்துக்கு வரவேற்பு இருக்கிறது எனத் தெரிந்து விட்டால் அதன் பல பிரதிகள் அடுத்தடுத்த முயல்வுகள் வந்து சலித்து போதும் அய்யா போதும் என்றால் தான் விடுவார்கள். அப்படித் தான் டான் படங்கள் என்ற பேரில் தென் இந்தியாவின் நூற்றுச்சொச்ச படங்களைப் பார்த்தால் நிஜ டான்களுக்கு நிஜ ரத்தம் கொதிக்கக் கூடும்.

எனக்குப் பிடித்த குற்ற உலகம் குறித்த 10 ஹாலிவுட் படங்கள்

Antoine fuqua  இயக்கிய Training Day 2001
Martin Scorsese  இயக்கிய Mean Streets (1973) Goodfellas (1990) Casino (1995)
க்விண்டெய்ன் டாரண்டினோ இயக்கிய pulp fiction 1994 Reservoir Dogs (1992)
Brian De Palma இயக்கி அல்பஸீனோ நடித்த Scarface 1983 untouchables 1987
Fernando Meirelles இயக்கத்தில்  City Of God (2002)
Tony Scott இயக்கத்தில் True Romance (1993)

தமிழ்வாணன் மணிமேகலைப் பிரசுரத்தை நிறுவியவர் கல்கண்டு பத்திரிகையின் உயிர் நாடியாக விளங்கியவர். சென்ற நூற்றாண்டின் தமிழ் எழுத்துலகத்தின் ஆக சுவாரசியமான மனிதர் என்று தமிழ்வாணனைச் சொல்லலாம். எழுத்து பத்திரிகை என்பனவற்றின் சகல சாத்தியங்களையும் சதா முயன்றபடி நிறை வாழ்க்கையை வாழ்ந்தார் தமிழ்வாணன். அவர் உருவாக்கிய சங்கர்லால் இந்திரா கத்திரிக்காய் மாணிக்கம் என எல்லாப் பாத்திரங்களுமே ரசிக்கப் பட்டன. கதைகளிலிருந்து அடுத்த கதைகளை நோக்கிப் பயணிக்கிற பாத்திரத் தொடர்ச்சியை மற்ற

யாரையும் விட தமிழ்வாணன் அதிகம் நிலைநிறுத்தியவர்.அடிக்கடி தேநீர் அருந்தும் சங்கர்லால் சோர்வுறும் போதெல்லாம் ஹார்லிக்ஸ் மாத்திரை உண்பது தொப்பி கறுப்புக் கண்ணாடி என்று கலக்கினார். தன்  புனைவுப் பாத்திரங்களின் வரிசையில் தன்னையும் கொண்டு சென்று நிறுத்தியது தான் தமிழ்வாணனின் முதன்மையான சாதனை. புனைவுக்கும் நிசத்துக்கும் இடையே ஒரு இருபுறக் கண்ணாடி போலத் தன்னை செருகிக் கொண்டார்.இந்த இரட்டைத் தன்மையை நிரந்தரப் படுத்தியதன் மூலமாகக் கண்ணறியா மாய இழைகளைக் கொண்டு வாழ்க்கையைக் கதைகளோடு இறுகப் பிணைத்துக் கட்டினார். அவருடைய துப்பறியும் கதைகள் பலருக்கும் புதிரான மற்றும் வழிபாட்டுக்குரிய மகா மனிதராக அவரைப் பல காலத்துக்கு வைத்திருந்தது.எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ்வாணனின் கதாமொழியும் வேற்று மொழிச்சொற்கள் கலக்காமல் பல தளங்களுக்கும் விரிந்து நகர்ந்த அவற்றின் பரவலும் இன்றைக்கு எழுதுகிற புதிய எழுத்தாளர்களுக்கு தேடிப் படிக்க வேண்டிய முன்னோடி எழுத்தாளராக புதிதாய் அறியத் தொடங்குபவர்க்குக் குன்றாத  சுவாரசியமாக தமிழ்வாணன் விளங்குகிறார்.

ஒரு கவிதை
**************
அந்த
நிலவைப் பிடித்துக்
குதறிச் செரிக்க
நினைத்துக் குரைத்தது
தெரு நாய்-
அவள்
நினைவைத் தழுவி
நிமிண்டித் துய்க்க
நெகிழ்ந்து கிளர்ந்தது
மனநாய்

நா.விஸ்வநாதன்
கணையாழி
மே 1971

தொடரலாம்
அன்போடு

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. குஸ்கா பிரியாணியும் சால்னா பரோட்டாவும் - ஆத்மார்த்தி
  2. அழகர் கோயில் தோசையின் அழியாத சுவை
  3. அன்பென்ற பொருளாதல்
  4. ஜெயன் என்னும் மறக்க முடியாத நடிகர் - ஆத்மார்த்தி
  5. வேடத்திலிருந்து வெளியேறுதல் -ஆத்மார்த்தி
  6. மதுரையில் மறைந்த திரையரங்குகள் -ஆத்மார்த்தி
  7. நகரத்தின் கண்கள்- ஆத்மார்த்தி
  8. மெலிய மறுக்கும் யானை - ஆத்மார்த்தி
  9. கனவான் குணவான் - ஆத்மார்த்தி
  10. பெஸ்டியை இழத்தல் - ஆத்மார்த்தி
  11. வயலட் விழியாள் - ஆத்மார்த்தி