எல்லாமே எப்போதுமே- 10 

ஒவ்வொருவருக்கும் எதாவதொரு பலவீனம் இருக்கும். எண்பதுகளில் பலரும் பொடி போடுவார்கள். எங்களோடு சுற்றுகிற பலருக்கும் வேறு பழக்கங்கள் இருந்தனவே தவிர பொடிப்பழக்கம் யாரிடமும் இருந்ததில்லை. அது முந்தைய காலத்தின் பற்றுதல். ஆனால் ஒருவன் மட்டும் எங்கே எப்படிக் கற்றானோ பொடி போடுவான். சீட்டாட்டத்தில் எந்த ஒரு எண்ணும் எதிர்பாராமல் ஒரு ஆட்டத்துக்கு மட்டும் ஜோக்கராகத் தேர்வாகும் அல்லவா அப்படி எங்கள் கூட்டத்தில் பொருந்தியும் பொருந்தாமலும் இருந்தவன். சற்றே சப்தமாகப் பேசுவான். அதனாலேயே தனித்துத் தெரிவான். ஸ்பீக்கர் என்று அவனுக்கு ஒரு பெயர் வழங்கப்பட்டது அதனால் தான். ரயில்வே ட்ராக்கை ஒட்டிய வீடு என்பதால்   குடும்பத்தின் இயல்பான உரையாடல் தொனியே மிகுந்த சப்தம் தான் என்பதால் எல்லா இடங்களிலுமே கத்திப் பேசுவது வழக்கமாயிற்று போல. எப்டிய்யா நைட்டெல்லாம் தூக்கம் வரும் என்றால் ரயில்ல அடிக்கடி போறவனுக்கு அந்த பயணசத்தம் கேட்காதில்லையா அப்பிடித் தான்யா…பழகிரும் என்பான். அந்தப் பழகிரும் என்ற வார்த்தை கேட்கிற நமக்குத் தான் வலிகளுடன் ஒலிக்கும். கையில் இருக்கும் இரண்டு ரூபாயை இரண்டு கோடிக்கான சந்தோஷமாக மாற்றிக் கொள்ளத் தெரிந்தவன். அதிக சினிமாக்களைப் பார்க்கும் போட்டி எதாவதிருந்தால் இப்போது அழைத்தாலும் வந்து ஜெயித்துவிடக் கூடியவன்.

நிஜ நாமகரணம் வினோத். யார் கேட்டாலும் பேரை “விநோத்து” என்று மட்டுமே சொல்வான்.பாடல்களை ஒரு விதமாகப் பாடுபவன் அதாவது நான் காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் என்ற பாடல் உண்டல்லவா அந்தப் பல்லவியின் சந்தம் முழுவதற்கும் நான் காற்று வாங்கப் போனேன் என்கிற நாலே வார்த்தைகளை மட்டும் ரிபீட் செய்தபடி பாடுவான். எந்த இடத்திலும் அட்சரம் பிசகாமல் மீட்டருக்குள் லாவகமாகப் பாட்டைப் பொருத்தி விடுவான். ஒரு நாள் அப்படி பல்லவி முழுவதையும் அடக்கியவனிடம் சரிடா தொடர்ந்து சரணத்தைப் பாடு என்றதற்கு வேற பாட்டுப் பாடுறேன் என்று ராசாத்தி ஒன்னை காணாத நெஞ்சு பாடலை பல்லவி அனுபல்லவி இரண்டு சரணங்கள் என எல்லா வரிகளையுமே இந்த நாலே சொற்களைக் கொண்டு பாடித் தீர்த்தான். அசந்து போனோம். அன்று முதல் அவனுக்கு சிங்கர் என்றொரு பேர் கூடிற்று.

இவற்றைத் தவிர இன்னொரு பெயர் ஸ்பானர். ஆம், மெகானிக் ஷாப்களில் பல்வேறு அளவுகளில் ஸ்பானர் இருக்குமல்லவா அவற்றில் ஒன்றான எட்டுக்கு ஆறு என்கிற ஸ்பானரை சினிமா பார்க்கும் போது கொண்டு வந்திருந்தான்.மணி தியேட்டரில் எங்கள் குழுவுக்கும் வேறொரு ஏரியா பசங்கள் தரப்புக்குமான வாய்ச்சண்டை சாதாரண கைகலப்பாக மாறி முடிந்திருக்க வேண்டியதை கையில் இருந்த ஸ்பானரால் எதிராளியின் தலையில் லேசாய் ஒத்தி எடுத்ததில் பிரச்சினை பெரிதாகி கடைசியில் பேசி முடித்துச் சமாதானம் ஆவதற்குள் போதும் போதுமென்றாகியது. அந்தச் சம்பவத்துக்குப் பிறகே அன்னாருக்கு ஸ்பானர் என்று பெயர் வழங்கலாயிற்று. அவர் தான் பொடி போடுவதைத் தன் பழக்கமாகத் தெரியப்படுத்தியதில் அவருடைய புத்தம் புதிய பெயர் பொடி என்றானது. எல்லாப் பெயர்களிலும் அவனுக்குப் பிடித்த பெயர் சிங்கர் என்பது தான் அதில் என்ன டீசன்சியைக் கண்டானோ ஸ்பானர்னு சொல்லாத சிங்கர்னு சொல்லு என்று கறார் காட்டுவான்.

செல்வத்துக்கும் அவனுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். செல்வம் வினோத்தைப் பொடி என்பான். அவன் பதிலுக்கு செல்வத்துக்கு எதாவதொரு பேரை வைத்து விடலாம் எனப் பெரிதும் முனைவான். செல்வத்துடைய வீக்னஸ் எது என்று அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதல்ல விஷயம் அதற்கு அவன் பெரிதாக முனையவில்லை.

அவனுடைய பலவீனம் அந்தப் பழக்கம் அல்ல. எதைப் பேசினாலும் ஒரு புள்ளியில் திகைத்து அப்படியே நிற்பான். சொல்பிசகு அல்ல. அது வினோதமான வேறொன்று உதாரணத்துக்கு நாங்கள் எல்லோரும் அமர்ந்து முந்தைய தினம் நிகழ்ந்து முடிந்த கிரிக்கெட் மேட்ச்சைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம் என வைத்துக் கொண்டால் எங்கிருந்தோ வருவான் சிங்கர் ஒரு நளினமான சந்தர்ப்பத்தில் அந்த உரையாடலுக்குள் நுழைந்து ரோஜர் பின்னி இருக்கானே அவன் மிகப்பெரிய என்பான். சொல்ல வந்தது என்னவோ திக்கிக் கொள்ளும் போலும் அப்படியே நிறுத்தி விடுவான். இப்படி அவன் ரோஜர் பின்னி தொடங்கி ரஜினி கமல் தொட்டு ஜாக்கி சான் வரை மிகப்பெரிய என்று சொல்லி அதோடு தொடராமல் போன வாக்கியங்கள் பல இருக்கும்.இதை எல்லாரும் இயல்பாகக் கடந்து விட்டாலும் கூட செல்வம் மட்டும் மனதில் குறித்துக் கொண்டே இருந்தவன் வேறொரு தினம் தானும் சிங்கர் போலவே வெஸ்ட் இண்டீஸ் ப்ளேயர் மால்கம் மார்ஷல் ஒரு மிகப்பெரிய என்று அதோடு நிறுத்திக் கொண்டான். இதைக் கேட்டதும் எல்லோரும் சிரித்து விட்டோம். சிங்கர் அதை கவனிக்காதவன் போல கடந்து விட்டாலும் அன்றைக்கெல்லாம் பழைய உற்சாகம் துளியும் இல்லாதவன் போல இருந்தான். அதற்குப் பிறகு செல்வம் என்றைக்கெல்லாம் வருகிறானோ அன்றைக்கெல்லாம் எங்களோடு சரிவரப் பேசாமல் மௌனிக்க ஆரம்பித்தான். யார் என்ன பேசினாலும் எதுவுமே பேசாமல் மௌனமாகவே இருப்பான். அவனுடைய பாடல்கள் முழுவதும் தீர்ந்து போயின. எல்லோரையும் சிரிக்க வைக்கும் நகைச்சுவைகள் மொத்தமாய் நின்று போயின. அதன் பிறகு ஒரு பெருங்காலம் தன் முந்தைய இயல்புகள் எதுவுமே தோன்றத் தராமல் வேறொரு அன்னியனைப் போலவே புதுக்கணக்கைத் தொடங்கி நடத்திக் கொண்டிருந்தான்.

விடுமுறைக் காலம் ஒன்றில் பலரும் வெளியூர்களுக்குச் சென்று விட நாலே நாலு பேர் மட்டும் விடாமல் கூடிப் பேசிக் கொண்டிருந்தோம். அவர்களில் செல்வமும் இல்லை என்பதால்  முன் ஜென்ம ஞாபகம் திரும்பிய கருப்பு வெள்ளைப் படக் கதாபாத்திரம் போல  மீண்டும் சிங்கரின் பழைய முகம் தெரியத் தொடங்கியது. எதிர்பாராத தருணத்தில் முரளி கேட்டான் ஏன் சிங்கரு மிகப்பெரிய அப்டின்னு சொல்றப்ப அப்டியே ஸ்ட்ரக் ஆயி நின்னுடுறே ? அதுவா என்று சன்னமான குரலில் பதில் சொன்னான். படிப்பில நான் ரொம்ப சுமார்தான். எப்டியோ தட்டித் தடுமாறி ஏழாவது வரைக்கும் வந்திட்டேன். பரீட்சையில நாலஞ்சு இடத்துல தேவையில்லாம மிகப்பெரிய அப்டின்னு எதோ எளுதிட்டு அப்டியே பூர்த்தியாகாம விட்டிருந்தேன் போல வாத்தியார் எல்லாருக்கும் மத்தியில என் பேப்பரை வேறொரு பய்யனை விட்டு வாசிக்க சொன்னாரு. பசங்கல்லாம் சிரிச்சாங்க. எனக்கென்னவோ ஒரு மாதிரி ஆய்டிச்சி. எனக்குப் படிப்பே வராதுன்னு அதை ஒட்டித் தான் முடிவு செய்தேன். அப்பறம் நா பள்ளிக்கூடத்துக்கே போகலை. கெடச்ச வேலையெல்லாம் பார்க்க ஆரம்பிச்சி அஞ்சாறு வருசமா எலக்ட்ரானிக் சாமான்களெல்லாம் ரிப்பேர் பண்ற வேலைல செட் ஆய்ட்டேன். மிகப்பெரிய அப்டின்ற வார்த்தை என் வாழ்க்கையில யாரோ செய்வினை வெச்சாப்ல என்னையக் கேவலப்படுத்திடுச்சி.. அதை என்னயறியாம சொல்றப்பல்லாம் அந்த ஞாபகம் வந்து தான் அப்டியே உறைஞ்சிர்றேன் என்றவன் நிசமாகவே கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டான்.

ஃபூ இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்ற முரளி இதை நா சால்வ் பண்றேன்யா..என்றவன் நீ எதுக்கு இந்த வார்த்தைக்கு கையக் கட்டிப் பயப்படுறே..? அதைக் கால்ல போட்டு மிதிய்யா அப்பத் தான் சரியாவும். நீ இன்னையிலேருந்து ஒண்ணு ரெண்டில்ல நூறு தடவை மிகப்பெரியன்னு சொல்றே. சொல்லிட்டே இரு..திணறி நிக்கிறது தான் உன் தப்பு. நாங்க யாரும் இனி கேலி பண்லை சரியா ஒரே ஒரு கண்டிஷன்…நீ பொடி போடுறதை விட்டுறு…அது தான் நீ எங்களுக்கு செய்ற மிகப்பெரிய உதவி என்றான். சொன்ன மாதிரியே மிகப்பெரிய ரயில் கடல் ஆறு மலை என கிடைத்த இடத்திலெல்லாம் பந்தைத் திருப்பி சிக்ஸர் அடிப்பவன் போல் அந்தச் சொல் மீதான ஒவ்வாமையைப் பாம்பு சட்டையை உரித்தாற் போல் களைய உதவினான் முரளி. சொன்னபடி பொடியைத் தூர எறிந்தான் வினோத்.

அடுத்த பருவத்தின் முதல் விடுமுறை நாளில் மறுபடி எல்லோரும் கூடிப் பேசிக் கொண்டிருந்த போது வந்து சேர்ந்தான் செல்வம் பேச்சு வாக்கில் எதற்கோ வினோத்தை அவன் பொடி என்றழைக்க பதிலுக்கு அவனை வினோத் “உன்னை மாதிரி வருமா நீ மிகப்பெரிய செல்வமாச்சே” என்றான். செல்வத்துக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இந்த முறை அவன் பேச்சை மாற்றி மௌனிக்க வேண்டியிருந்தது.

அவமானத்தில் கூனிக் குறுகி இனிப் படிக்கச் செல்லமாட்டேன் என்ற புள்ளிக்கு வருவது மிகப்பெரிய கொடுமை. அப்போது பிசகுகிற சாலையை மறுபடி நேராக்கப் பல காத தூரம் சென்று திரும்பவேண்டும். வினோத்தை மறுபடி தொலைதூரக் கல்வியில் சேரச் செய்து படித்தே ஆகவேண்டும் என்று நற்கொடுமை செய்தான் முரளி. ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் இருக்கும் இல்லையா.? முரளிக்கி அப்படி வினோத் இழந்த கல்வியை அவனுக்கு மீட்டுத் தருவதில் ஒரு ஆனந்தம். அதுவும் சாதாரண ஆனந்தமல்ல. மிகப்பெரிய ஆனந்தம்.

முரளி செய்தது வேலையோ உதவியோ அல்ல. அது மனவளக்கலையின் ஒரு பகுதி. அன்பெனும் சொல்லாதல் எளிது. அன்பென்ற பொருளாதல் கடினதவம். சீரற்றுத் ததும்புகிற மனித மனங்களை இனம் காண்பதும் அவர்களை மெல்ல மீட்டெடுத்து நல்லிடம் சேர்ப்பதும் ஒரு கலை. மேலதிகமாய்ச் சொல்வதானால் சமூகமெனும் மரத்தின் மீது தூவ முனைகிற நன்னீர் மழை போன்றது. சிறப்பான காரியம். நாம் எல்லாருமே வினோத்களாகவும் செல்வங்களாகவும் இருந்துகொண்டே இருப்பதன் பிசகு நேராய்த் தருவதை விட நிழலாய்த் தரும்போது பிழையும் குறையும் பெருகும். ஆகவே நாம் முரளிகளாக நம்மை உணர்வதும் அங்கனம் அப்படி மாறுவதுமே நலன் பயக்கும்.

 

ஒரு திரைப்படம்

இருட்டிண்டே ஆத்மாவு

அம்முக்குட்டிக்கும் முதிய செல்வந்தர் ஒருவருக்கும் திருமணம் நடைபெறப் போவதை அறியும் வேலாயுதன் தன்னைப் பிணைத்திருக்கும் இரும்புச் சங்கிலியை ஆவேசத்தோடு சுத்தி கொண்டு உடைத்து எறிகிறான்.அங்கேயிருந்து திருமணம் நடக்கும் இடத்தை நோக்கிச் செல்லும் வழியெல்லாம் சிறுவர்கள் அவனைத் துரத்தித் துரத்திக் கற்களால் அடிக்கிறார்கள்.என்றபோதும் தளராமல் திருமணம் நடக்கும் இடத்தை நெருங்குகிறான். சோகமே உருவாக அக்கினி முன் அமர்ந்திருக்கும் அம்முக்குட்டியைப் பார்த்ததும் உணர்ச்சி பொங்க அம்முக்குட்டி என்று விளித்தபடியே அங்கே இருக்கும் மங்கலப் பொருட்கள் சிலவற்றைக் கலைக்கிறான். அடுத்த கணம் அவனைப் பார்த்து ப்ராந்தன் என்று ஒற்றைச் சொல்லை உதிர்க்கிறாள் அம்முக்குட்டி.விதிர்விதிர்த்தபடியே அந்த இடத்திலிருந்து நீங்கித் தனதிடம் திரும்பும் வேலாயுதன் தடிகளோடு காத்திருக்கும் கூட்டத்தின் முன் சரிந்து வீழ்ந்து இரு கரங்களையும் தூக்கி “எனிக்கி ப்ராந்தாணு…என்னச் சங்கிலிக்கிடு” என்கிறான். அவனை நோக்கிக் குனியும் கூட்டம் அவனுக்குக் கதகளியாட்டத்தின் பாத்திரங்களாகவே உருமாறுவதோடு இருண்டு நிறைகிறது படம். எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய கதை அற்புதத்தைத் திரைப்படுத்தினார் இயக்குனர் பாஸ்கரன்.

அம்முக்குட்டியாக  ஊர்வசி சாரதா தோன்றினார். ப்ரேம் நஸீர் எனும் மகா கலைஞனின் நடிப்புத் திறனை எடுத்துச் சொல்லும் ஒரு துளி உதாரணமாக இந்தப் படம் 1967 ஆமாண்டு வெளியானது.பிற பிரச்சினைகளைப் பேசும் சிறந்த படமாக தேசிய விருது பெற்றது. ப்ரேம் நஸீர் தன் 62 ஆம் வயதில் சென்னையில் காலமான மலையாளத்தின் எவர்க்ரீன் சூப்பர்ஸ்டார். 1979 ஆமாண்டு ப்ரேம் நஸீர் நடிப்பில் 41 படங்கள் வெளியானது கேரள சாதனை. எழுநூறுக்கும் அதிகமான படங்களில் நடித்த நஸீர் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை வண்ணக்கிளி போன்ற தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார் சிவாஜியுடன் பாலும் பழமும் பாவை விளக்கு போன்ற படங்களில் கவுரவத் தோற்றங்களை ஏற்ற நஸீர் மலையாளத்தின் திரை கம்பீரம்.

 

 

தொடரலாம்

 

 

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. குஸ்கா பிரியாணியும் சால்னா பரோட்டாவும் - ஆத்மார்த்தி
 2. அழகர் கோயில் தோசையின் அழியாத சுவை
 3. ஜெயன் என்னும் மறக்க முடியாத நடிகர் - ஆத்மார்த்தி
 4. வேடத்திலிருந்து வெளியேறுதல் -ஆத்மார்த்தி
 5. மதுரையில் மறைந்த திரையரங்குகள் -ஆத்மார்த்தி
 6. சினிமா பித்து- ஆத்மார்த்தி
 7. நகரத்தின் கண்கள்- ஆத்மார்த்தி
 8. மெலிய மறுக்கும் யானை - ஆத்மார்த்தி
 9. கனவான் குணவான் - ஆத்மார்த்தி
 10. பெஸ்டியை இழத்தல் - ஆத்மார்த்தி
 11. வயலட் விழியாள் - ஆத்மார்த்தி