எல்லாமே எப்போதுமே 12
நிஜமெனும் நல்லாள்
ஒரு காணொளி
தொண்ணூறு வருடங்களுக்கு முந்தைய மதுரையை பதிந்த ஒரு பழைய வீடியோ துணுக்கை பார்க்க நேர்ந்தது. அந்த இடங்கள் அப்படியே இல்லை. அதில் தென்பட்ட அத்தனை மனிதர்களும் அவர்களது இறந்த காலத்தின் இறவாக் கண்களும் மனதை என்னவோ செய்தன. நான் என் நாம் நம் என்று காலத்தோடு தொடர்புடைய அத்தனை சொற்களையும் சேர்த்துக் கொண்டு தானே அத்தனை மனிதகுலமும் அந்தந்தக் காலத்தில் வாழ்கிறது..?யாருடைய நிழற்படமாகவும் ஞாபகமாகவும் எஞ்சப் போகிறோம் நாம்..? MY GOD தற்கணம் தருணம் என்பதெல்லாம் யார் நிமித்தக் காணொளி..?
நன்றி:
ஒரு பதார்த்தம்
சால்னா குஸ்கா தாழ்ச்சா இந்த மூன்று சொற்களையும் சொல்லும் போதே மனசெல்லாம் மணக்கும். பிரியாணி மெல்ல மெல்ல இந்திய நிலத்தைத் தன் பிடியின் கீழ்க் கொண்டு வந்த பதார்த்த ராட்சஸன். எனக்குத் தெரிய நிறையப் பேர் தங்கள் தினசரி உணவாகவே பிரியாணியை சலிக்காமல் சாப்பிடுவதைப் பார்க்கிறேன்.மைதா வேண்டாம் என்று பலமுறை எடுத்துச் சொன்னாலும் புரோட்டாவின் பின்னால் மனசு அலைவது இன்னொரு கதை.குஸ்கா என்ற பண்டம் பிரியாணியின் எந்த உள்ளடக்கமும் இருந்தும் இல்லாமலும் அதே மஸால் அதே வாசனை என்று பட்டை கிளப்பும். குஸ்காவில் முட்டை வைத்தால் பிரியாணி என்று வேடிக்கையாக சொன்னால் கூட அப்படி அல்ல. முதல் முதலில் குஸ்கா என்ற பண்டத்தை என்னமோ ஏதோ என்று சாப்பிட்டேன். அதுவும் சால்னா என்கிற மாமிசம் எதுவுமற்ற குழம்பும் சேரும் போது செமை காம்பினேஷன்.
மதுரை தவிட்டு சந்தையில் ஒரு கடை குஸ்கா புரோட்டா சால்னா எல்லாமே எதிர்பாராத நன்மை போல பட்டையைக் கிளப்பும். பள்ளி காலத்தில் காலி டிஃபன் பாக்ஸை வீட்டிலிருந்து எடுத்துச் சென்று சால்னாவில் புரோட்டாவை ஊற வைத்து பல மணி நேரம் கழித்து அதனைத் திறந்து சாப்பிட்ட போது ஜென்மாந்திர புளகாங்கித பேரின்ப ரசவாதங்கள் நிகழ்ந்த ஞாபகம் இன்னும் மறக்கவில்லை. தாழ்ச்சா என்பது பிரியாணியோடு சேர்த்துப் பரிமாறப் படுகிற நற்குழம்பு. மாங்காய் கத்திரிக்காய் எல்லாம் போட்டு கறியும் சாம்பாரின் உள்ளடக்கங்களும் ஒருங்கிணைய வினோத காம்போவில் அயர்த்தும்.பள்ளிக்கூட நண்பன் ஹாரூண் வீட்டில் பிரியாணியைத் தொட்டுக் கொண்டு தாழ்ச்சா சாப்பிட்டிருக்கிறேன். இப்போது கடைகள் பெருகி எல்லா ஊர்களிலும் எல்லா நேரமும் கிடைக்கிற உணவுவகையாகவே பிரியாணி மாறி இருக்கிறது என்றாலும் முந்தைய காலத்தின் அதே சொர்க்க ஃபார்முலாப்படி அவற்றைத் தயாரிக்கிற கரங்களும் வழங்குகிற இடங்களும் அபூர்வமாகவே தென்படுகின்றன.
ஒரு கவிதை
காதலற்ற முத்தங்களைச்
சுவைக்க நேரும் தருணங்கள்
தனிமை படர்ந்த
இராத்திரியின் நீளத்தை விட
கொடியது
மனுஷி பாரதி (குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள்)
96 என்ற படம் வந்தாலும் வந்தது. எக்கச்சக்கமான அலும்னி சந்திப்புகளை ஆர்வமாக மேற்கொள்வதற்கான கதவுகளைத் திறந்து வைக்கிறது.என் கல்லூரிக் கால நண்பர்களை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் சந்திப்பதால் எங்களுக்குத் தனித்த பண்டிகைகளைக் காத்திருக்கத் தேவை வரவில்லை. அப்படித் தான் ஒரு சந்திப்பில் மனோவும் நானும் ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தோம் ந்யூட்ரானைப் பார்த்தேண்டா என்றதும் அவன் முகம் ரசிக்கவில்லை என்று தெரிந்தது. படிக்கும் போது மனோவும் ந்யூட்ரானும் நெருக்கமான கூட்டாளிகள். இடையில் என்னவோ நடந்திருக்கிறது என யூகிக்காமல் புரிந்தது.
அவனே சொன்னான்.” ஏம்பா எதுல பொய் சொல்றதுன்னு வரைமுறை கிடையாதா..? தலைபோவுற விஷயத்துல அவனால ரெண்டு மூணு மாசம் வெட்டியா வேஸ்டாப் போனது தான் மிச்சம். அவன் சங்காத்தமே வேணாம்னு ஒதுங்கிட்டேன் என்றான். இதுதான் விஷயம். மனோவின் சித்தப்பா தன் வீட்டோடு ஒட்டியிருக்கும் நாலு செண்ட் இடத்தை விற்கப் போவதாக பேச்சுவாக்கில் சொல்லியிருக்கிறான் மனோ. ந்யூட்ரான் அவனிடம் எதுக்குப்பா வெளில முடிக்கிறே எங்கண்ணன் இப்ப மெட்ராஸ்ல வாத்தியார் வேலை பார்க்குறாப்ல இல்லியா அவரு நல்ல இடமா பார்த்திட்டிருக்காரு நீ ஜெராக்ஸ் குடு. நமக்குள்ளயே முடிச்சிக்கிட்டா ப்ரோக்கர் கமிஷன்லேருந்து பலதும் மிச்சம்ல என்றிருக்கிறான்.நல்ல முறையில் பேச்சு நகர்ந்து ஜெராக்ஸ் தந்து விலை விவரங்கள் தெரிவித்து
இருபது நாட்கள் சரி தெரிந்த இடத்தில் முடித்தால் சீக்கிரம் முடியும் என மனோவின் வீடே காத்திருந்த பிறகு அண்ணன் இன்னும் நாலு நாள்ல வந்திருவாரு.வர்ற ஞாயித்துக் கெழமை பேசிடலாம்னு சொல்லிருக்காரு என்று ந்யூட்ரான் சொல்ல கிட்டத் தட்ட மனத் தூறல் மழையாகவே மாற எல்லாம் நன்றாகத் தான் போயிருக்கிறது.
அந்த வாரம் சனிக்கிழமை மாட்டுத் தாவணிக்கு யாரையோ இறக்கி விடப் போன மனோ அப்போது தான் வந்திறங்கிய ந்யூட்ரானின் அண்ணன் செல்வத்தைப் பார்த்து தன்னோடு வண்டியில் அழைத்து வருவான் என்பது தான் ந்யூட்ரான் எதிர்பாராத ட்விஸ்ட். வழியில் விசாலம் காஃபி ஸ்டாலில் காஃபியை ருசித்துக் கொண்டே பேச்சுவாக்கில் சொன்னானா அண்ணே நம்ம இடத்தைப் பத்தி என்று ஒரு வரி சொல்லி இருக்கிறான் மனோ ஆமாப்பா சொன்னான் நான் சென்னையில வேலை பார்க்குறதால ஊர்ல வேண்டாம் சென்னையில மதுரவாயல்ல ஒரு கிரவுண்டு வாங்கப் போறேன்னு பதினஞ்சு நாள் முன்னாடியே சொல்லிட்டனே. முந்தா நேத்து ரெஜிஸ்ட்ரேசனும் முடிச்சிட்டு தான் ஊர்ப்பக்கம் வந்தேன் என்று சொல்ல அதை மௌனமாகக் கடந்து விட்ட மனோ அன்றைக்கு மாலை ந்யூட்ரானை யதேச்சையாகப் பார்க்கிறாற் போல் என்ன சொல்றாரு அண்ணன் என்று கேட்க அறியாச்சிறுவனான ந்யூட்ரான் புதன் கெழமை நாள் நல்லா இருக்காம் அன்னிக்கு இடத்தைப் பார்த்துரலாம்னு சொன்னாப்லப்பா என்றதும் இவன் சட்டையை ஏற்றிப் பிடிக்க இருவருக்கும் ரசாபாசமாக மாறிவிட்டது. கைய எடுய்யா கத்தியக் காட்டியா இடத்தை விப்பே,..? எங்கண்ணன் ஒரு இடம் வாங்குனா இன்னொண்ணு வாங்க மாட்டாப்லயா..? உனக்கு நல்லது பண்ண நெனச்சா என்னைய வெய்யிறியா?. என் ஒருத்தனை நம்பியா நீ பொறந்தே.? நீ நூறு பேர்ட்ட சொல்லிருப்பே நான் நூறு எடம் பார்த்திருப்பேன் என்னமோ உன் காசுபணத்தை ஏமாத்திட்டாப்ல பெரிய வார்த்தையெல்லாம் பேசுறே..?உன் பழக்கமே வேணாம்யா என்று அப்போதும் தன் மீது பிழையே இல்லை என்று வீறாப்பாகக் கிளம்பிப் போயிருக்கிறான்.
ந்யூட்ரான் போன்ற சிலர் தன்னை உணராத தற்பிழையாளர்கள்.இப்படியானவர்கள் பொய் சொல்வார்கள். அவற்றால் என்ன விளையும் என்பதைப் பற்றிய அறிதல் பலமுறை அவர்களது வாழ்வில் உதாரணங்களாகத் திரும்பிய போதிலும் அதிலிருந்து பெறவேண்டிய வைரமான அறிதலைப் பெற்றிருக்க மாட்டார்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் அனேகமாக மிக ஒழுங்கான நேர்கோட்டுப் பரவலைக் கடைப் பிடிக்கிறவர்களாகவே இருப்பார்கள்.நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை யாரிடமாவது தந்து விட்டு ஒரு கதையின் அடுத்தடுத்த அத்தியாயங்களைப் போல அதனை வளர்த்துச் செல்வார்கள். தவிர்க்க முடியாத ஒரு கட்டத்தில் எப்படி சமாளிப்பதென்று தெரியாத நிலை வரும்போது இரண்டு கைகளையும் வான் நோக்கி உயர்த்தி விட்டு “ஸாரி நான் எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால் முடியாமற் போச்சு” என்று யூ டர்ன் அடிப்பார்கள். அப்போதும் நான் நல்லவன். என் எண்ணம் உனக்கு நன்மை செய்வது தான். என் முயற்சிகள் பலனளிக்காமல் போயிருக்கலாம். ஆனால் நான் ஒன்றும் வேண்டுமென்றே செய்யவில்லையே என்று சொல்லித் தன்னால் ஏன் முடியாமற் போயிற்று என்பதை விளக்கி கன்வின்ஸ் செய்யப் பார்ப்பார்கள்.அதன் பிறகான உறவாடலில் முன்பு சொதப்பிய அந்தத் தலைப்பு எங்கெல்லாம் தட்டுப் படுகிறதோ அங்கெல்லாம் நாசூக்காக விலகிப் போவதன் மூலமாக மீண்டும் ஒரு வாக்குவாதமாகவோ முரணாகவோ அந்த விஷயம் மாறுவதைத் தான் விரும்ப வில்லை என்பதை நிறுவத் தலைப்படுவார்கள். இதெல்லாம் சரி எல்லா மனிதர்களுக்கும் இது சகஜம் தானே ஒருவர் உண்மையாகவே உதவ எண்ணியதும் பிறகு முடியாமற் போவதும் வாழ்க்கையின் யதார்த்தத்தில் நிகழக் கூடிய எளிய இயல்பான ஒன்று தானே மேற்படி விஷயத்தில் எது பொய் அல்லது எது குற்றம் எனக் கேட்கத் தோன்றும். இருங்கள் வருகிறேன் அது தானே சொல்ல வந்த விஷயம்
முதல் புள்ளி இருக்கிறதல்லவா தன்னிடம் ஒரு கோரிக்கை வரும் போது அதனை முடிக்கக் கூடிய சக்தி தனக்கு இருப்பதாகவும் தன்னால் எளிதில் முடிந்து விடக் கூடிய ஒன்று தான் அந்தக் கோரிக்கை எனவும் ஒரு நம்பிக்கையை நிகழ்த்தியது பிழையின் முதற்துளி. பிறகு அந்தச் செயல்பாட்டை மெல்ல வளர்த்து பல கட்டங்கள் கொண்ட அந்த வினை தற்போது ஒழுங்கான திசையில் தான் சென்று கொண்டிருக்கிறது என்றும் எப்படியும் குறிப்பிட்ட காலத்தில் அது முடிந்து விடும் என்றும் முந்தைய நம்பிக்கையின் அடுத்த அத்தியாயத்தை ஏற்படுத்துவது பிழையின் அடுத்த சதுக்கம். பிறகு ஒவ்வொரு கட்டமாக எங்கே அந்தக் கதையை முடிக்க சரியான சமயம் வாய்க்கிறதோ அங்கே சட்டென்று இழையை அறுத்து மணிகளை உதிர்ப்பதன் மூலமாக கதையை நிறைத்து விடுவது. மேற்படி நபர் செய்தது மாபெரும் குற்றமல்ல ஆனால் நம்பிக்கை துரோகம். தன் பிம்பத்தை குறிப்பிட்ட காலம் தானே பேருருவாய்த் தரிசிக்க அடுத்தவர் வாழ்வில் ஆடிப் பார்க்கும் சுய அரித்தல் ஆட்டமே அன்றி வேறில்லை. சொல்லிருக்கேன் எப்படியும் நடந்திடும் முடிஞ்சுடும் என்றெல்லாம் சொல்லும் போது நன்றாகத் தெரியும் இது நமக்கு ஆகாத வேலை நம்மால் இதை ஒருபோதும் செய்வதற்கு இயலாது என்று முன்பே தெரிந்த தானறிந்த ரகசியத்தை வெளிப்படையாகச் சொல்லாமல் கொஞ்சம் பாஸிடிவாக சொல்லிப் பார்ப்போமே இதனால் என்ன ஆகப் போகிறது என்று பிடிபடப் போவதில்லை என்பது தெரிந்ததும் செய்து பார்க்க விழையும் கல்மிஷக் குற்றம். இது பலரிடமும் இருக்கிற மலிந்த குணம்.மனிதன் மகத்தானவன் என்பது அவன் அணிகிற ஆடைகளில் தெரிவதே இல்லை. மாறாக அவன் கொண்ட எண்ணங்களில் இருக்கின்றது. நாம் யார் என்பதை நாம் கடைப்பிடிக்கிற கொள்கைகள் தான் நிறுவுகின்றன. இதுவா என்னால முடியாதே என்று ஒதுங்குவோர் சிறந்தவர்கள் என்றால் நிசமாகவே தன்னால் முடியக் கூடிய காரியத்தைக் கூட உயர்ந்தோர் சிலர் நான் முடிஞ்சவரைக்கும் முயற்சிக்கிறேன் என்று தான் சொல்வார்கள். ஆனால் அவர்களுக்குத் தெரியும் நம்மை நம்பி வந்தவர்களுக்கு இழப்பின் வலியைத் தருவது கூடாது என்ற நல்லெண்ணத்தில் அதனை முடித்து காரியபலிதத்தின் நிறைவை நிம்மதியைத் தருவதையே தன் குறிக்கோளாக வைத்திருப்பார்கள்.
நம்மை நோக்கி வரக் கூடிய கோரிக்கை யாருடைய பிரார்த்தனையாக இருந்தாலும் சரி நம்மால் ஆகுமென்றால் நாமே கடவுளின் இருக்கையில் அமர்ந்து அதனை நிறைவேற்றலாம். ஒருவேளை முடியாமற் போனால் கருணையற்ற நீதிபதியாக அதனைக் கையாண்டு உடனே நம் மறுப்பை அவர்களுக்கு அறியச் செய்வது ஒன்று தான் சிறந்ததே ஒழிய வேறேது செய்தாலும் அது பிழை.
ஒரு நடிகர்
That love at first sight should happen to me, was Life’s most delicious revenge on a self-opinionated fool.
– Charles Boyer
தன் 79 ஆம் வயதில் தற்கொலை செய்து கொண்ட ஹாலிவுட் நடிகரான சார்லஸ் போயர் தான் தமிழ்த் திரையின் நகைச்சுவை சக்கரவர்த்தி ஜேபி சந்திரபாபுவின் மனம் கவர்ந்த நடிகர்.நான்கு முறை ஆஸ்கர் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப் பட்டவர். பல மொழிகளில் பேசவும் பாடவும் தெரிந்த பன்முக ஆளுமையான போயர் தனக்கென்று தனித்த நடிகபாணி ஒன்றைக் கட்டமைத்த நல் நடிகர்
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- அழகர் கோயில் தோசையின் அழியாத சுவை
- அன்பென்ற பொருளாதல்
- ஜெயன் என்னும் மறக்க முடியாத நடிகர் - ஆத்மார்த்தி
- வேடத்திலிருந்து வெளியேறுதல் -ஆத்மார்த்தி
- மதுரையில் மறைந்த திரையரங்குகள் -ஆத்மார்த்தி
- சினிமா பித்து- ஆத்மார்த்தி
- நகரத்தின் கண்கள்- ஆத்மார்த்தி
- மெலிய மறுக்கும் யானை - ஆத்மார்த்தி
- கனவான் குணவான் - ஆத்மார்த்தி
- பெஸ்டியை இழத்தல் - ஆத்மார்த்தி
- வயலட் விழியாள் - ஆத்மார்த்தி