பெருமாள் முருகனின் படைப்புலகம் -1
….தொடக்கமாக….
‘மணிக்கொடி’ படைப்பாளி ஆர்.சண்முகசுந்தரம், க.ரத்னம், கு.சின்னப்பபாரதி, சி.ஆர்.ரவீந்திரன், சூரியகாந்தன், பெருமாள்முருகன் எனக் கொங்கு வட்டாரத்தைத் தமிழ் நாவல் வெளிக்குள் பல படைப்பாளிகளும் சேர்ந்து காத்திரமாகக் கொண்டு வந்திருந்தாலும், அந்த வட்டாரத்தின் மிக முக்கியப் படைப்பாளியாகப் பெருமாள் முருகனே உருவெடுத்துள்ளார். இதற்குப் பெருமாள்முருகனைப் பற்றி மேற்கிளம்பி வந்த அந்த உலகப் புகழ் பெற்றுவிட்ட வீண் சர்ச்சை மட்டும் காரணமன்று. முப்பதாண்டுக்கும் மேலாகத் தொடர்ச்சியாகக் கொங்கு வட்டாரத்தைக் களமாகக் கொண்டு தம் புனைவுகளை அவர் உருவாக்கிவருவதே முதன்மைக்காரணமாகும். குறிப்பாக ஏறுவெயில் (1991), நிழல் முற்றம் (1993), கூளமாதாரி (2000), கங்கணம் (2007), மாதொருபாகன் (2010), ஆளண்டாப் பட்சி (2012), பூக்குழி ( 2013), ஆலவாயன் (2014), அர்த்தநாரி (2014), பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை (2016), கழிமுகம் (2018) எனக் கொங்கு வட்டாரத்தைப் பற்றிய பதினொரு நாவல்களைப் பெருமாள்முருகன் இதுவரை புனைந்துள்ளார். கொங்கு வட்டாரத்தின் நிலப் புவி அமைப்பையும் (topography), தட்பவெட்பத்தையும்(climate) உட்செரித்துக்கொண்டுவிட்ட ‘வட்டாரவியல் நாவல்களாக’ இவை விளங்குகின்றன. இவற்றில் வரையப்பட்டுள்ள துல்லியமான நில அமைப்பின் கோட்டோவியங்கள், இவற்றின் தனித்துவமான வட்டாரச் சார்புக் குணாம்சங்களைப் (பின்புலம், பண்பாடு, பேச்சுமொழி, மனிதர்கள், சிக்கல்கள், கட்டமைப்பு) புலப்படுத்துகின்றன. யதார்த்தவாதக் கோட்பாட்டின் செல் நெறியில் இவற்றைப் புனைந்ததன் மூலம், கொங்கு வட்டாரத்தின் தனிப்பெரும் படைப்பாளியாகப் பெருமாள்முருகன் பெரும் முக்கியத்துவம் பெறுகிறார். அவரின் படைப்புகளை மாதொருபாகன் வரை, மாதொருபாகனுக்குப் பின் என இரண்டாகப் பிரித்துக் காணவேண்டும். இதில் முதல் பகுப்புக்குரியதாக அமையும் முதல் ஐந்து நாவல்களைப் பற்றியும் விரிவாக ஆராய்வதுதான் என் நோக்கமாகும். இந்த முதல் ஐந்து நாவல்களை அவை நூலாக வெளிவந்த காலத்தின் சொல்லிய வரிசையைச் (அதாவது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பதை முல்லை, குறிஞ்சி, பாலை, நெய்தல், மருதம் என்பதாய்) சொல்லாத முறையால் சொல்லிப் பார்க்கும் ஒரு முயற்சியாக, அதாவது மாதொருபாகன், கூளமாதாரி, ஏறுவெயில், நிழல் முற்றம், கங்கணம் என்பதாகச் சிறிது மாற்றி, இந்நாவல்களின் கதைக் களத்துக்குள் செயல்படும் ஒரு பிரத்தியேகக் கால வரிசையை உளங்கொள்வதாக, என் விமர்சனப் புரிதலை முன்வைத்துப் பொது வாசகர்களுடன் நான் விவாதிக்க விரும்புகிறேன். அதன் முதல் முன்னெடுப்பாக, ‘மாதொருபாகன்’ ஆராயப்படுகிறது.
‘மாதொருபாகன்’ பெருமாள்முருகனின் ஐந்தாவது நாவலாகும். 2010இல் இந்த நாவல் வெளிவந்தாலும், இந்திய விடுதலைக்கு முந்தைய காலமே, இதன் களமாக விரிகிறது. 1966இல் பிறந்தவரான பெருமாள்முருகன், அவர் பார்த்தறியாத ஒரு காலத்தை, பழகிப் புரியாத மனிதர்களை, பிறந்த ஊரின் ரகசிய ஊற்றுக்களைத் தேடித் துருவித் திருச்செங்கோடு தொடர்பான கள ஆய்வுகள் மூலம் கண்டறிந்த வாய்மொழித் தவல்களைப் புனைவுவெளிக்குள் புகுத்திக் கோவில் விழாவையும் குழந்தைப் பேற்றையும் இணைத்துக் காலங்காலமாக வரும் ஒரு ‘வழமொற’யைப் பதிவுசெய்யும் நாவலாக ‘மாதொருபாகனை’ உருவாக்கியுள்ளார்.
நுனிக்கொம்பில், கற்பின் இறுக்கத்தைத் தொடர்ந்து பேணும் தமிழ்ச் சமூகம், அதன் அடிவேரில், இந்த இறுக்கத்தின் புழுக்கத்தைத் தணிக்கும் வகையிலான சில நெகிழ்வுகளையும் – திறப்புகளையும் கொண்டிருப்பதும் இயல்புதான். இப்படியோர் இயல்பான ‘வழமொற’யாகத்தான் திருச்செங்கோடு திருவிழாவும், பதினான்காம் நாளன்று ‘சாமி’ மலையேறலும் ‘மாதொருபாக’னில் சித்திரிக்கப்படுகின்றன. இந்தச் சித்திரிப்பினூடே, ‘காளி – பொன்னா’ வாழ்வு, மானுட இருப்பின் அடிப்படையான இச்சைகளுள் ஒன்றான ‘பாலுணர்வின்’ ஒழுங்கையும் மீறலையும் பற்றிய புனைவாக விரிகிறது. ‘நாகரீகமடைதல்’ என்ற பெயரில் நெடுந்தூரம் முன்னேறி வந்துவிட்டிருக்கும் ‘குடும்ப மனிதனை’க் குறிப்பாகக் ‘காளி’ என்ற ஓர் ஆணைக் குழந்தையின்மையின் காரணமாகத் தொன்மையின் ஆழத்துக்குள் பின்னகர்த்திப் பொன்னாவின் சுதந்திர விரிவை எதிர்கொள்ளவே இயலாமல் அவன் சிறுத்துச் சிதைவதாகப் பெருமாள்முருகன் காட்சிப்படுத்தியுள்ளார். இந்நாவலின் முக்கியக் கூறுகளைப் பொது வாசகர்களுக்காகக் கீழ்வருமாறு வரிசைப்படுத்திக்கொள்ளலாம்.
‘மாமனார் வீடு – புதுமருமகன் காளி – வாசலில் நடும் பூவரசஞ்கொம்பு – மருமகன் சீர் என மாமனார் கேலி பேசல் – உடன் ஆடு மேய்த்த ‘சேக்காளி’ மச்சான் முத்து – அவன் நட்பால் கிடைத்த மனைவி பொன்னா – பன்னிரண்டு வருடக் குடும்ப வாழ்க்கை – இன்னும் குழந்தை பிறக்காத மனக்குறை – பூத்துக் குலுங்கும் பூவரச மரம் – எத்தனையோ வேண்டுதல்கள் – குறி கேட்டல் – அறுபதாம்படி முருகன் மற்றும் காட்டுவாசிப் பெண்ணின் சாபங்கள் – வம்ச சாபத்திற்கான பரிகாரங்கள் – பாவாத்தா பூசை – திருச்செங்கோடு திருவிழா – மச்சான் அழைத்துப்போகும் தனியிடங்கள் – கல்யாணமே செய்துகொள்ளாத நல்லுப்பையன் சித்தப்பா – அவருடனான ‘கவலையற்ற’ பேச்சுகள் – கோயிலாட்டம் – கள்ளும் சாராயமும் – தொண்டுப்பட்டியே கதியாய்க் கிடத்தல் – குத்தல் பேச்சுகள் – பழிச்சொற்கள் – பொன்னா படும் அவமானங்களும் அழுகையும் – இரண்டாம் கல்யாணப் பேச்சுகள் – தத்தெடுக்கப் பிடிக்காமை…’
‘மாமியாரின் ‘சாமி பிள்ளை’ யோசனை – அம்மாவின் அறிவுறுத்தல் – பொன்னாவோடு பேசிப் பெறும் ஏமாற்றம் – பொன்னாவைச் சந்தேகப்படல் – மச்சானின் வருகை – தேர்த் திருவிழா அழைப்பு – முதலில் பொன்னாவை மட்டும் அனுப்பிவிட்டுப் பதினாலாம் நாளில் காளியும் போதல் – முத்துவின் தந்திரத்தால், பொன்னாவைத் தனியே விட்டுவிட்டுக் காளி முத்துவுடன் ‘தனியிடம்’ தேடி வெளியேறல் – வண்டி கட்டித் திருநாளுக்குப் பெற்றோருடன் பொன்னா போதல் – வயிறு முட்டத் தென்னங்கள் குடித்துக் காளியும் முத்துவும் உறங்கல் – திருவிழாவில் ‘சாமி’ ஒருவனைப் பொன்னா தேர்ந்தெடுத்தல் – பாதி இரவில் காளி விழித்தல் – பொன்னாவைத் தேடி ‘மாமனார்’ வீடு வருதல் – பூட்டப்பட்ட வீட்டைப் பார்த்துத் திடுக்கிடல் – ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து தொண்டுப்பட்டிக்கு மீள்தல் – பூவரசங்கிளையில் காளி தூக்கிட்டுத் தொங்க நினைத்தல்’எனக் ‘காளி – பொன்னா’ வாழ்வு, குறைவான சொற்களில் – குறிப்புணர்த்தும் கதை மொழியில் – உரையாடல்களும் இடைவெளிகளும் நிரம்பிய நாவலுக்குரிய நடையில் – கூர்மையான காட்சிகளுடன் கூடிய யதார்த்தப் புனைவாகப் பதிவாகி உள்ளது. இப்பதிவினூடே, ‘மாதொருபாகன்’ என்னும் பழஞ்சைவத் தொன்மம், புதுப் பொருள் விரிவும் பெறுகிறது.
இது தொடர்பாக, “உன்னைப்போல அவனும் என்னைத் தன் உடம்பிலேயே வைத்துக்கொள்ள விரும்புகிறவன். பிய்த்தெடுத்து வேறு ஒருவருக்குக் கொடுக்க அவன் ஒருபோதும் விரும்பமாட்டான்” எனக் காளியைச் சிவனுடன் ஒப்பவைத்துப் பொன்னா யோசிப்பதாகப் பெருமாள்முருகன் காட்டுகிறார். இந்தச் சித்திரிப்புவழிப் ‘பெண்ணை வெளியே விட்டால் ஆபத்து’ என்னும் அச்ச உணர்வால் தூண்டப்பட்டுத்தான், அதாவது தொடர்ந்து அவளைக் கண்காணிக்கும் நோக்குடனேயே, தன் இடப்பக்க மார்பில் ‘மாது ஒரு பாகனாக’ச் சிவன் தோற்றம் காட்டுவதாகவும், இப்பழந்தொன்மத்தைப் புதுப்பொருள் விரிவில் வைத்து விளக்கவியலும்.
‘காளி – பொன்னா’ இணையருக்குத் திருமணமாகிப் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தையில்லை. இதற்காகப் பொன்னா விழுங்கும் வேப்பிலைச் சாறும், செய்து பார்க்கும் பூசைகளும், பரிகாரங்களும், வறடிக்கல் தாண்டலும், மடியேந்தி எலுமிச்சங்கனி வாங்கலும், விளக்குப் போடலும், பிரார்த்தனைகளும் எதுவும் பலிப்பதில்லை. ‘குழந்தை வரம்’ கிடைக்கவில்லையே தவிர, மற்றபடி காளியும் பொன்னாவும் வாழும் களிப்புப் பூரிக்கும் குடுத்தனத்தில், வேறு குறை ஒன்றும் இல்லை. ஆனால், ‘குழந்தையில்லாமை’ என்ற ஒரு குறையே, அவர்களது வாழ்வின் அனைத்து மகிழ்ச்சியையும் பறிக்கும் நச்சாகி விடுகிறது. இதிலிருந்து விடுபட்டுச் சகமனிதர்களைப்போலப் பதற்றமின்றி இயல்பாக வாழ்வது எவ்வாறு என்பது, காளிக்கும் பொன்னாவுக்கும் முதன்மையான நெருக்கடியாகிறது. நவீன மருத்துவ வசதிகள் பெருகியுள்ள இன்றைய உலகச் சூழலில், செயற்கையாகக் கருத்தரித்தல் மூலம் ‘குழந்தை பெறல்’ இயற்கையாகிவிட்ட அண்மைக்காலத்தில், நேற்றைய வாழ்வில் பூதாகரமாகக் காணப்பட்ட ‘குழந்தையில்லாமை’ என்ற ஒரு பிரச்சினை, வெகுவாகத் தீர்ந்துபோன வாழ்நிலையைக் காணலாம். இக்காலத்தில், “என்ன இருந்தாலும், என் வவுத்துல பொறக்கற கொழந்த மேல வெக்கறாப்பல அந்தக் கொழந்த மேல பிரியம் வெக்க முடியாது” எனத் தத்தெடுத்தல் பற்றிப் பொன்னா புலம்பத் தேவையில்லை. ஒரு குறிப்பிட்ட வட்டாரச் சூழலில் வாழ நேரும்போது, சொந்தக்காரர்களின் அல்லது நாம் அறிந்தவர்களின் பிள்ளைகளைத் தத்தெடுப்பதில் சிக்கலுண்டு.
குழந்தையைத் தத்தெடுத்தாலும் ‘வறடன் – வறடி’ என்ற ஊர்ப்பழி நீங்காது. ஆனால், பெற்றோர் முகம் அறியாத பிள்ளைகளை, ஊர் பேர் சாதி மத அடையாளங்களற்ற குழந்தைகளைத் தத்தெடுப்பதும்கூட இன்று சாத்தியம்தான். “எங்காச்சும் கண் காணாத எடத்துல இருந்து ஒரு கொழந்தயக் கொண்டாந்து எங்கிட்டக் குடு வேண்ணா வளத்தறன்” என்றும், “எங்கயாச்சும்போயீ ஒரு கொழந்தயக் கொண்டா. தீண்டாச்சாதி ஊட்டுல எடுத்துக்கிட்டு வந்தாலுஞ் செரி. காசுக்கு வாங்கிக்கிட்டு வந்தாலுஞ் செரி” என்றும் பொன்னா கதறுவதற்கு இன்று தீர்விருக்கிறது; பலவகைப்பட்ட மாற்றுவழிகளும் உள்ளன.ஆனால், இந்திய விடுதலைக்கு முந்தைய காலத்தில், இது ஒரு மாபெரும் பிரச்சினை. இந்தப் பிரச்சினையை மையப்படுத்திப் பலதரப்பட்ட வாழ்வியல் விவாதங்களைப் பொது வாசகப் பரப்பிற்குள் கிளறி மேற்கிளப்பும் வகையில், ஆனால் ‘யதார்த்த மீறலாக’ அல்லாமல், ‘யதார்த்தப் பதிவாக’ ‘மாதொருபாகன்’ புனையப்பட்டுள்ளது.
காளிக்கும் பொன்னாவுக்கும் ஏற்படும் உள்மன நெருக்கடிக்குப் பொன்னாவின் தாயும் மாமியாரும் சேர்ந்து தீர்வொன்றைக் கண்டுபிடிக்கிறார்கள். திருச்செங்கோடு கோவில் திருவிழாவின் பதினான்காம் நாள் நிகழ்வின்போது – சாமி மலையேறும் போது – பொன்னாவின் குறைக்குத் தீர்வு ஏற்படும் எனப் பொன்னா மற்றும் காளியின் அம்மாக்கள் நம்புகிறார்கள். அவர்களது நம்பிக்கைக்குப் பின்வரும் ‘விழா நடப்புகள்’ காரணமாகச் சுட்டப்படுகின்றன. “…….நாலாந் திருவிழாவின்போது மலை இறங்கிவரும் கடவுள்கள் பதினான்காம் திருவிழாவின்போது மலை ஏறுவார்கள். அந்த இரண்டு நாட்கள் இரவும் சாமி பார்க்கவெனப் பெருங்கூட்டம் திரளும். சாமி மலையிறங்கும்போதைவிட மலையேறும் நாள் திருவிழாவின் உச்சம்…. கொண்டாட்டத்தின் உச்சத்தில் வரைமுறைகள் எல்லாம் தகர்ந்து போகும். அந்த இரவே சாட்சி. இணங்கும் எந்த ஆணும் பெண்ணும் உறவு கொள்ளலாம். சந்துகளிலும் ஊரைச் சுற்றி இருக்கும் நிலங்களிலும் மலை மண்டபங்களிலும் பாறை வெளிகளிலும் உடல்கள் சாதாரணமாகப் பிணைந்து கிடக்கும். இருள் எல்லா முகங்களுக்கும் திரை போட்டுவிடுகிறது. ஆதி மனிதன், இந்தத் திருவிழாக் கொண்டாட்டத்தில் உயிர்க்கிறான். திருமணமாகாத பெண்களை யாரும் அனுப்ப மாட்டார்கள். முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களை எங்கும் பார்க்கலாம். ஆண்களிலோ இளைஞர் கூட்டம் அதிகமாய்த் திரியும். அந்த இரவில் எத்தனை பெண்களோடு முடியுமோ அத்தனை பெண்களை ஈர்க்க முயலும் இளைஞர்கள். பல இளைஞர்கள் அங்குதான் உறவின் முதல் சுவையை அறிவார்கள். கற்றுக் கொடுப்பவர்களாகப் பெண்கள்” என்கிறார் கதைசொல்லி.
இப்பதினான்காம் நாள் நிகழ்வுக்குக் குழந்தையில்லாத பொன்னாவை அனுப்பி வைத்துக் குறையைத் தீர்த்துக்கொள்ளப் பொன்னாவின் அம்மா திட்டமிடுகிறாள். இத்திட்டத்தைக் காளியின் தாயும் ஏற்றுக்கொள்கிறாள். காளியிடம் இதை அவளே சொல்லி, இதற்கு இசைவு பெறவும் ஏற்பாடாகிறது. ஆனால், இந்த யோசனையைக் காளியால் சகித்துக்கொள்ள இயலவில்லை. ஆணான அவனின் இருப்பையே கேள்விக்குட்படுத்தும் ஓர் அசிங்கமான விவகாரமாக, இதைக் காளி பார்க்கிறான். சிறுவயதிலேயே தந்தையை இழந்துவிட்ட காளிக்கு, அவன் அம்மாதான் எல்லாமே. அவளே இவ்வாறு பேசுவதைக் கேட்கும்போது, இதற்குப் பதிலாக, ‘தனக்கு நினைவு தெரியாதபோதே அவள் தன்னைக் கொன்றிருக்கலாமே’ என நினைத்துக் காளி புழுங்குகிறான். எனினும், காளியின் அம்மாவுக்குக் குழப்பம் எதுவுமில்லை. தெளிவாய்த்தான் அவள் பேசுகிறாள். “நாஞ் சொல்றன்னு எதுவும் நெனக்காத. ஒரு தாயி மவன் கிட்டப் பேசற பேச்சில்ல இது. ஆனாலும் நான் பேசறன்னு துணிஞ்சிட்டன். தப்பா நெனக்காத கேளு… உங்கிட்டக் கொறையோ அவகிட்டக் கொறையோ தெரியாது. கொறையின்னு வந்தாச்சு. அதுக்கு ஒருவழி இருக்குது. எத்தனையோ பொம்பளைங்க அப்படி இப்படி இருக்கறாங்க. ஆருக்குத் தெரியுது? தெரிஞ்சாலும் பாத்தும் பாக்காமப் போறாங்க. எதையும் மறப்பா செஞ்சாத் தப்பில்லையிங்கறாங்க. இதுவும் அப்படி மறப்புத்தான். ஆனா, உனக்குத் தெரிஞ்சு, நீ ஒத்துக்கிட்டுத்தான் செய்யோணும். வெச்சுப் பொழக்கறவன் நீ ….. பதினாலாந் திருநா அன்னைக்குத் திரசங்கோட்டுல காலடி எடுத்து வைக்கற ஆம்பளைங்க எல்லாரும் சாமிதான். கொடுக்கறது சாமிதான. சாமிய நெனச்சுக் கிட்டாப் பிரச்சினை ஒன்னுமில்ல. எந்தச் சாமி எந்த மூஞ்சியோட வரும்னு ஆருக்குத் தெரியும். மூஞ்சி தெரியாம கொடுத்திட்டுப் போறதுதான் சாமி. நீ சொல்லு. இந்த வருஷமே போயர்லாம்…. நல்லா யோசிச்சுச் சொல்லு. உங்கைல தான், நம்ம பொழப்பே இருக்குதுடா சாமி” எனப் பெற்ற தாயே அறிவுறுத்துவதைக் கேட்டுக் காளி நெஞ்சுடைந்து போகிறான். தான் ‘பெரிய பொண்’ ஆனதிலிருந்து பதினாலாம் திருநாளுக்குத் தான் போனதில்லை என்றும், தன்னைத் தன் வீட்டார் அனுப்பியதில்லை என்றும், தனக்குத் தெரிந்தும் தெரியாமலும் எத்தனையோ வருடம் காளி போயிருப்பதைச் சுட்டிக் காட்டியும், இந்த வருடம் பொன்னாவைத் திருநாளுக்கு அனுப்ப வலியுறுத்தியும் காளியின் தாய் வாதிடுகிறாள். இதைக் காளியால் ஏற்க முடிவதில்லை. ‘பெத்த பிள்ளையக் கூட்டிக் குடுக்கத் திட்டம் போட்டுட்டு அதையும் வெக்கமில்லாம’ தன்னிடம் வந்து கூறும் பெரியவர்களின் இழிவாகவே, இதைக் காளி காண்கிறான். ‘மானங்கெட்டுப் போவதைவிடக் குழந்தை வேண்டாம்’ என்பதுதான், அவனுக்குச் சரியாகத் தோன்றுகிறது. இந்த முடிவைப் பொன்னாவிடம் சொல்லி, அதற்கு அவள் இசைவையும் பெற்றுத் ‘திரு நாளுக்குப் போகமாட்டேன்’ என அவளை மறுக்க வைத்து, அதன்வழித் தன் மனத்தை ஆறுதல்படுத்திக் கொள்ளக் காளி நினைக்கிறான். “உங்கம்மா எங்கம்மா எல்லாம் சொல்றப்ப நீ சாமி மலையேர்ற அன்னிக்குப் போறியா?” என்கிறான் காளி. “இந்தக் கொழந்தச் சனியனுக்காக நீ போன்னு சொன்னாப் போறன்” என்கிறாள் பொன்னா.
இந்தப் பதிலைக் காளி எதிர்பார்க்கவில்லை. இதனால் மனத்தளவில் அவன் மேலும் உடைந்துபோகிறான். கல்யாணத்திற்குமுன் ‘பதினாலாம்நாள் திருநாளுக்கு’ அவன் போனதற்கான பழிவாங்கலாய், இதைக் கணநேரம் உணர்கிறான். அதன்பின் வரும் இரண்டு திருவிழாக்களுக்குப் பொன்னாவைக் காளி அவள் வீட்டுக்கு அனுப்புவதில்லை. விளைவாகப் பொன்னாவின் அண்ணன் முத்து காளியைத் தேடி வருகிறான். உடன் ஆடு மேய்த்த சிறுவயதுச் சேக்காளியான அவன் பேச்சைக் காளியால் தட்ட முடிவதில்லை. திருவிழாவுக்குப் பொன்னாவை முத்துவின் வீட்டிற்கு அனுப்ப மட்டுமே ஒப்புக்கொள்கிறான். முதல் நாள் காலையிலேயே பொன்னாவும் முத்துவும் ஊருக்குச் செல்வதாகவும், திருவிழாவின் பதினாலாம் நாள் காலையில் காளி வந்து சேர்வதாகவும் முடிவாகிறது. ஆனால், முத்துவுக்குத் திட்டம் வேறு. காளியின் ஒப்புதலைப் பதினாலாம் திருநாளுக்குப் பொன்னா சென்று வருவதற்கான இசைவாகத் திரித்துப் பொன்னாவிடம் சொல்லி, அவளை முத்து தயார்படுத்திவிடுகிறான். “பொன்னா….. மாப்ள கிட்ட எல்லாம் பேசிட்டன். காத்தால உன்னய ஊட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போவ மாப்ள சரின்னு சொல்லிட்டாரு…. மாப்ள… நீயே சொல்லு மாப்ள… நீ சொன்னாத்தான் பிள்ள நம்பும். எம் பேச்செல்லாம் இப்ப எங்க செல்லுபடியாவுது?” என்கிறான் முத்து. “பொன்னா, காத்தாலக்கி உங்கண்ணங் கூடவே போயிரு. நான் சாமி மலைக்குப் போறன்னிக்கு வர்றன். பாத்துக்கலாம்” என்கிறான் காளி. இங்குக் காளிக்கும் பொன்னாவுக்கும் இடையில் ஒரு கூரிய விவாதம் நடைபெறுவதைப் புனைவு தவிர்க்கிறது. ‘எல்லாம் பேசிட்டேன்’ என்று அண்ணன் சொன்னதும், ‘பாத்துக்கலாம்’ எனக் காளி சொன்னதும் ஒன்றுதானா என்ற ஐயம் பொன்னாவுக்குள் சிறிது நிழலாடினாலும், அதை வெளிப்படையாகக் காளியிடம் கேட்டுத் தெளிவு பெற அவள் நினைப்பதில்லை. “இதுல யோசிக்க என்ன இருக்குது. சாமி காரியம். உனக்கு யாரு சாமியாத் தெரியறாங்களோ அவுங்களோட இருக்கப் போற. சாமியே உனக்கு எல்லாம் காட்டும்…. பதினாலாந் திருநா தந்த சாமி பிள்ள…. எத்தனையோ வருஷமா நடந்துக்கிட்டு வர்ற வழமதான் பொன்னா. நீ ஒன்னுக்கும் கவலப்படாத. சாமிய நெனச்சுக்க போதும் ” என விலாவாரியாக மாமியார் சொல்வதும், “மாப்ள எல்லாத்துக்கும் செரின்னுட்டாரு பொன்னா. சாமி காரியம்னு எடுத்துச் சொல்லி ஒத்துக்க வெச்சிட்டன். அவருக்கு உம் மேல அத்தனை பிரியம் போ” எனக் குறிப்பாக அண்ணன் சொல்வதும் அவளுக்குப் போதுமானதாயுள்ளன. ஒரு நாடகக் காட்சியாக, இவர்களது கூற்றைப் பொன்னா உள்வாங்கி மெய்யாக்கிக்கொள்கிறாள். ‘சாமி காரியம்’, ‘சாமி பிள்ள’ என்ற பூச்சுகளில் தன்னை ஒளித்துக்கொண்டு, காளியோடு நேராக இது பற்றிப் பேசாமலிருப்பதையே, அவளும் விரும்புகிறாள். பதினான்காம் நாள் திருவிழாவுக்குப் பொன்னா போகப்போகும் அந்த நாளிலும், தான் சொன்னபடியே பொன்னாவின் வீட்டுக்குக் காளி காலையிலேயே வந்து விடுகிறபோதும், அப்போது அங்கு முத்து இல்லாதபோதும்கூடப் பொன்னாவுக்கும் காளிக்குமிடையில் ‘சாமி பிள்ள’ பற்றிய பேச்சேதும் நடப்பதில்லை. கணவனையும் மனைவியையும் நெருக்கமாக அருகிருக்க விடாமல், தனியே பேசும் சந்தர்ப்பங்கள் நேராதவாறு, இருவரையும் பொன்னாவின் அம்மா கண்காணித்துக் கொள்கிறாள்.
திட்டமிட்டுத் தாமதமாக வரும் முத்து, பேச்சுத்துணைக்குக்கூட ஆளில்லாமல் பூவரச மரத்தின் அடியிலேயே காளியை நெடுநேரம் அமரவைத்துச் சோர்வடையச் செய்கிறான். பிறகு சோறு தின்று முடித்தவுடன், ‘எங்காவது போனால் தேவலை’ எனக் காளியை நினைக்க வைத்துத் தந்திரமாக அவனைக் கிளப்பிக்கொண்டு, வீட்டை விட்டு வெளியேறுகிறான். இந்த வெளியேறலின் போதும், பார்வைப் பரிமாற்றம் அல்லாமல், வேறு பேச்சு வார்த்தை ஏதும் காளி – பொன்னா இடையே நிகழ்வதில்லை. இவ்வாறு தம் வாழ்வின் முக்கியமான பிரச்சினையாகப் போகும் ‘சாமி பிள்ள’ பற்றித் தமக்குள் கூடி விவாதித்து முடிவெடுக்கும் வாய்ப்பு, பிரதிக்குள் காளிக்கும் பொன்னாவுக்கும் மறுக்கப்படுகிறது. அப்பா, அண்ணன், அம்மா, மாமியார் என அனைவரும் கூடி முடிவு செய்வதைப் பொன்னா ‘குழந்தைச் சனியன்’ கருதி ஏற்றாக வேண்டியுள்ளது. இதைக் கடுமையாக எதிர்க்கும் காளியோ, முத்துவின் தந்திரத்திற்கு முழுமையாகப் பலியாக நேர்கிறது. இருவரும் விரும்பி எடுக்காத ஒரு முடிவால், தந்திரமாகப் பிறர் திட்டமிட்டுச் செயல்படுத்தும் தீர்வால், காளி – பொன்னா வாழ்வு முற்றிலுமாகச் சிதைந்து போகும் அவலம்தான் ‘மாதொருபாகன்’ நாவலாகியுள்ளது. சூழலின் கைதிகளாக மட்டுமே, இங்குப் பொன்னாவும் காளியும் உள்ளனர். தம் சூழலை மாற்றும் வல்லமை அவர்களுக்கில்லை. ‘இதுதான் வாழ்வின் யதார்த்தம்‘ எனப் பிற மனிதர் சொல்வதைக் கேள்வியின்றி ஏற்கும் அவலநிலையே அவர்களுக்குள்ளது.
குழந்தையில்லாமையைக் குறையாக ஏன் ஏற்கவேண்டும்? குழந்தை இல்லாத இருவர்,சந்தோஷமாக இருக்கவே இயலாதா? வாழ்விற்குப் பொருள் மறு உற்பத்தி மட்டும்தானா? கற்பும் தாய்மையும் எப்போதுமே கொண்டாடப்பட வேண்டிய விழுமியங்களா? சமூகக் கற்பிதங்களுக்கு வளைந்து கொடுக்காமல் மனிதனால் வாழவே முடியாதா? வாழ்வின் வெறுமைக்குக் குழந்தையே மருந்து என்பது உண்மைதானா? இக்கேள்விகளைத் தமக்குள் ஆழமாகக் காளியும் – பொன்னாவும் கேட்பதற்கான வாய்ப்புகளைப் பிரதி உருவாக்கவில்லை. அன்றாட வாழ்வின் பொதுப்படுத்தப்பட்ட சித்திரங்களையே அது அளிக்கிறது; மாறும் வாழ்வின் புதிய முகங்களைப் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது.அன்பும் இன்பமும் பொங்கும் உற்சாகத் துடிப்புள்ள வாழ்வையே, காளியும் பொன்னாவும் வாழ்கிறார்கள்.ஒருவரை ஒருவர் மதித்தும் புரிந்தும் ஒத்தும் வாழும் அவர்களிடம், ‘குழந்தையில்லாமை’ என்பது மட்டுமே ஒரே குறையாயிருக்கிறது. நாளடைவில் இக்குறையையும்கூடத் தம் அளவில் அவர்கள் ஏற்றுக்கொண்டு, ஒருவரையொருவர் ஆறுதல்படுத்திக்கொண்டு வாழப் பழகிவிடுகிறார்கள். ஆனால், அவர்களைச் சுற்றியுள்ள யதார்த்த உலகம், அதாவது இந்தச் சமூகம், அவர்களை அப்படி நிம்மதியாக இருக்க விடுவதில்லை. வாய்ப்பு நேரும் ஒவ்வொரு தருணத்திலும், குத்தலும் கேலியும் பழிச்சொல்லும் சூழ்ந்து வந்து, அவர்களைக் கிழித்துப் போடுகின்றன. இதிலிருந்து எப்படித் தப்பி விடுபடுவதென்ற ஒற்றை யோசனையே, அவர்களுக்கு வாழ்வாகிப் போகிறது. இதன் விளைவாகவே, பிறர் சதிக்கும் அவர்கள் இரையாகின்றனர்.இப்படியும் இந்த நாவலை வாசிக்கவியலும்.
ஒவ்வொரு நாளும் ஊராரின் தூற்றல்கள்வழி எவ்வளவோ அவமானங்களைப் பொன்னா சந்தித்தாலும், ஒருநாளும் காளியை அவள் குறை சொல்வதில்லை. பதினாலாம் திருநாளில், தன்னைச் சுற்றும் இருவரைப் புறந்தள்ளிவிட்டுச் ‘சாமி’ ஒருத்தனைத் தேர்ந்துகொள்ளும்போதும், காளியைப் பொன்னாவால் புறந்தள்ளிட முடிவதில்லை. அவ்வுருவை நோக்கித் ‘தயவுசெய்து காளியை ஞாபகப்படுத்தாமல் இரேன்’ என்றுதான் அவளால் யோசிக்க முடிகிறது. அந்த இரவில், அவள் முன் தேர்ந்தெடுப்பதற்கு எத்தனையோ வாய்ப்புகள் இருந்தபோதிலும், தெரிந்ததிலிருந்து விடுபட்டுத் தெரியாததை நோக்கிப் போவதற்கு அவள் நினைத்தாலும், அவளைச் சுற்றிச் சுற்றிக் காளியின் நினைவுகளே சுழல்கின்றன. எண்ணிக்கையைக் கூட்டும் சாதனை மமதையில் கையைப் பற்றும் ஒருவனைத் தனக்கான சாமி இவன் இல்லை என்று விலக்கிவிட்டுக் கூத்துப் பார்க்கப் போய்ப் புதிய ஒரு சாமியைத் தேடுகிறாள். அருகில் அமரும் ஒருவனின் முகச்சாயல், பொன்னா பெரியவளான போது அவர்கள் வீட்டுப் பண்ணயத்தாளாக இருந்த சக்தியைப் போலிருக்கிறது. காளிக்கு முன் தன் மனத்தில் இடம் பெற்றிருந்த அந்த முகத்தின் எந்தச் சாயலும் இனி வேண்டாம் என்று தீர்மானித்துப் ‘புது முகத்தோடு எனக்குத் தரிசனம் கொடு’ எனப் பொன்னா வேண்டுவதாகப் பெருமாள்முருகன் சித்திரிக்கிறார். இங்குச் சக்தியின் ‘சக்கிலிய’ முகச்சாயலே, அவளுக்கு ஒரு பிரச்சினையாகிறது என்றும் யூகிக்கலாம். இதற்கு முன், தேர்த் திருவிழாவுக்குக் குடும்பத்தோடு நடந்துவரும் சக்கிலி ஒருவர், இவர்கள் இசைவைப் பெற்று, இவர்களின் வண்டியோட்டியாகி விடுகிறார். அப்பனும் அவரும் பேசத் தொடங்கும்போது, தனக்கு எத்தனை பிள்ளைகள் எனப் பேச்சுவாக்கில் அவன் கேட்டுவிடுவானோ எனப் பொன்னா பதறுகிறாள். “ஒரு சக்கிலிக்கு முன்னால்கூட நமக்குக் கேவலந்தான்” என, அவள் நினைப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. இதே நினைப்பைக் காளியிடமும் காணலாம். மச்சான் முத்துவுடன், ‘சாமி பிள்ள’ பற்றித் தீவிரமாகக் காளி விவாதிக்கும்போது, அவன் மன ஆழத்தில் ஒளிந்துள்ள சாதியுணர்வு, அப்பட்டமாக வெளிப்படுகிறது. இந்நாவலின் மையமாக இவ்விவாதம் அமைவதால், இதைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
“ நீ சொல்லு. உனக்குப் பிள்ள இல்லாத இருந்தா, உம் பொண்டாட்டியக் கண்டவனோட அனுப்புவியா?”
“மாப்ள… கண்டவனோடன்னு சொல்லாதடா… எல்லா ஆம்பளையும் அன்னைக்கு ராத்திரிச் சாமீடா”
“நானும் நீயும் போனமே… அப்ப நாம சாமியாடா. கொஞ்சம் பாக்கறதுக்கு லட்சணமாக் கெடச்சாப் போட்டுட்டு வரலாமின்னுதான எண்ணமிருந்தது. சாமின்னு நீ உன்னய நெனச்சிருக்கறயா?”
“நாம நெனச்சிருக்கறது இல்லீடா. அதனால அந்தப் பொம்பளக்கிக் கொழந்த கெடச்சா அவுங்களுக்கு நாமதான் சாமி”
“ஆமாமா. ஒவ்வொருத்தன் மூஞ்சியிலும் சாமி கள பொங்கி வழியுது. எல்லாம் கைல புடிச்சிக்கிட்டு வீதிவீதியா அலயறானுங்க. எதோ அந்தக் காலம் மசக்காலம். அனுப்புனாங்க. இப்ப அனுப்புவாங்களா? உம் பொண்டாட்டிய நீ அனுப்புவியாடா?”
“………. நாலு பேருக்கு முன்னால நாமளும் ஆளுன்னு நிக்கோனும். அதுக்கு இதுதான் வழியின்னா அனுப்புவன்டா”
“நீ அனுப்புவ. நான் ஒத்துக்க மாட்டன்டா. உனக்குன்னு வந்தா நிய்யும் அனுப்ப மாட்ட. இப்பப் பேச்சுக்குச் சொல்ற. அந்தக் காலத்துல பையன் பொடுசா இருக்கறப்பவே பெரிய பிள்ளையக் கட்டி வெச்சிருவாங்க. பையனோட அப்பந்தான் அந்தப் பிள்ளைக்குப் புருஷனாட்டம் இருப்பான். பையன் பேருக்குப் புருஷன். இன்னைக்கு இது ஒத்து வருமா. அது மாதிரிதான்டா”
“அப்பிடியில்லீடா. தெரிஞ்சும் தெரியாமப் போற பொம்பளைங்க எத்தனையோ பேரு. இது அப்பிடியில்லீடா. சாமி பண்டிகையில சாமியே குடுக்கற வரம்….”
“நீ அந்தக் காலத்து ஆளாட்டமே பேசறீடா. ஒரு பொம்பள சாதிக்குள்ள எத்தன பேரு கிட்டப் போனாலும் தப்பில்ல. பொழங்கற சாதிக்காரனோட போனாக்கூடப் பொறுத்துக்குவாங்க. தீண்டாச் சாதியோட போனா அவ்வளவுதான். ஊர உட்டே ஏன் சாதிய உட்டே தள்ளி வெச்சிருவாங்க. இன்னைக்கு அப்பிடியா? சாதிக்கு உள்ளயே ஒருத்தனோடதான் இருக்கோனுங்கறம். அப்பறம் எப்படி? வீதியில் சுத்தறதுல பாதிக்குமேல திரியறது தீண்டாச்சாதித் தண்டுவப் பசங்கதான். அதுக்கப்புறம் என்னால பொன்னாளத் தொடவே முடியாது. கொழந்த பிறந்தாலும் தொட்டுத் தூக்க முடியாது போ. எதுக்கு இதெல்லாம்…. எனக்கு வேண்டாம். அப்பிடி ஒரு கொழந்த எனக்கு வேண்டாம். அதுமில்லாத அப்புறம் எல்லாரும் ‘வறடன்’னு என்னயப் பாத்துச் சிரிப்பாங்க. வேண்டாம் உடு”
இவ்விவாதம்வழிப் பதினாலாம் நாள் திருவிழாவுக்குப் பொன்னாவைக் காளி அனுப்ப மறுப்பதற்குத் ‘தன் மனைவி தனக்கு மட்டும்தான்’ என்ற ஆணாதிக்க உடைமையுணர்வும், வீதியில் திரியும் ‘தீண்டாச் சாதியானோடு கூடிப் பொன்னா குழந்தை பெற்று விடுவாளோ’ என்ற சாதி மேலாதிக்க உணர்வும், ‘வறடன்’ என ஊரார் கேலிக்குத் தான் இரையாகி விடுவோமோ என்ற தாழ்வு மனப்பான்மையும் காரணங்களாகலாம். இவற்றுள் வலுவாகக் காளியின் மனத்தைப் பிடித்தாட்டுவது, தீண்டாச்சாதியானுடன் கூடிப் பொன்னா பெறும் குழந்தை பற்றிய சித்திரமாகும். பொன்னாவுக்குச் ‘சக்கிலி’ சக்தியின் முகமாகி, உருத்திரண்டு விலகிப் போகும் இந்தச் சித்திரம், காளிக்குத் ‘தீண்டாச்சாதி’ தொடர்பான நினைவாகிறது. இதற்குச் சமாதானமாக, “அரசல் புரசலாப் போற பொம்பள எந்தச் சாதிக்காரனோட போறான்னு சொல்லறது? எதும் வெளிய தெரிஞ்சாத்தான் தப்பு மாப்ள. தெரியாத வெரைக்கும் எதும் தப்பில்ல..” என்ற முத்துவின் யதார்த்தவாதக் குரல், நாவலில் ஓங்கி ஒலிக்கிறது. இக்குரலைத்தான், பொன்னாவின் அப்பா அம்மா மாமியார் என அனைவரும் ஒலிக்கிறார்கள். இக்குரலைப் பொன்னாவும் ஓரளவுக்கு ஒத்துக் கொள்ளத்தான் செய்கிறாள். இந்தக் குரலைப் பிறரைப் போலவே காளியாலும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தாலும், ஒரு சராசரி ஆணாக வாழ மட்டுமே அவன் விரும்புவதன் காரணமாக, இதைக் கடுமையாக அவன் எதிர்க்கிறான். இந்த எதிர்ப்பைப் பொன்னா அறிந்திருந்தாலும், “எங்கே போனாலும் தீட்டுப்பட்டுவிடுமோ என்று ஒதுங்கி நிற்கும் தீண்டாச்சாதி மனுசர்போல ஒரு ஓரமாக நிற்க வேண்டி இருக்கிறதே. ஒதுக்குகிற ஆட்களுக்கு முன்னால் நாங்களும் ஒரு மனுஷர்தான் என்று காட்டினால் போதும்” என்ற தெளிவுடனும், நான்கு பேருக்கு முன்னால் காளியைத் தலைநிமிர்ந்து நிற்கச் செய்துவிடும் பெருங்காதலுடனுமே, ‘புருசனுக்கு மனப்பூர்வமான சம்மதம் இல்லாத’ காரியத்தைச் செய்யப் பொன்னா துணிகிறாள். மேலும், இந்தத் துணிச்சலால் அவள் மரபை மீறுகிறவளைப்போலத் தெரிந்தாலும், உண்மையில் அவள் ‘வழி தெரியாத’ ஒரு சராசரிப் பெண்தான். ஓரிடத்தில் காளி யோசிப்பதுபோல, எல்லாம் தந்தும் கணவனின் கைப்பிடிக்குள் அடங்குபவள்தான்; அதனால்தான், அந்தத் ‘திருநாள் சாமி’யின் கைப்பிடி அவளுக்கு ஆறுதலளிக்கிறது; தன்னை இனி அவனே வழிநடத்தட்டும் என்றும் அவள் தீர்மானிக்கிறாள். இப்படிப்பட்ட பொன்னாவின் ‘மரபு’சார் மனத்தைக் குழந்தை பெற்றுக் ‘குடும்ப வேலிக்குள்’ விரும்பி அடைபடத் துடிக்கும் தாய்மையுணர்வைக் காளி மட்டும் எப்படிப் புரிந்துகொள்ளாமல் போகிறான்?
பொன்னாவின் தாயும் அப்பனும் அண்ணனும் மாமியாரும் ஏற்கும் ஒன்றைக் காளியால் ஏன் ஏற்க முடியவில்லை? பதினாலாம் நாள் திருவிழாவுக்கு வரும் ‘எல்லாப் பொம்பளைங்களும் இன்னைக்குத் தேவடியாதான்’ எனக் கோவிலுக்கு எதிரேயுள்ள ‘தேவடியாள் தெருப் பெண்கள்’ பேசிச் சிரித்ததைக் கேட்டவன்தானே காளி! அப்படியிருந்தும், ‘அந்த நாள் குழந்தை இல்லாத பெண்களுக்குத் திருநாள்’ என்பது, காளியின் புத்தியில் எவ்வாறு பதியாமல் போகிறது? தென்னங்கள் குடிக்க முத்து கூட்டிப்போகும் சாயபுத் தோப்பில், கள்ளூற்றும் மண்டையனிடம், அவன் குழந்தையைத் தத்துக் கொடுக்குமாறு காளி கேட்கிறான். “கவுண்டரூட்ட சானாப் பிள்ள வளர முடியுமா” என ‘யதார்த்த நிலைமை’ சுட்டப்பட்டுக் காளியின் வேண்டுகோள் ‘மண்டையனின் மனைவியால்’ மறுக்கப்படுகிறது. அப்போது அவன் அடையும் ‘நிராதரவான அந்தத் துக்கத்தை’ப் பலமுறை அனுபவபூர்வமாகப் பொன்னாவும் உணர்ந்ததால்தானே, முகப் பரிச்சயமற்ற ஒரு ‘திருநாள் சாமி’யிடம் ‘பிள்ளை’ கேட்டுப் பொன்னா போக வேண்டியுள்ளது! அவ்வாறு திருநாளுக்குச் செல்லும்போதும்,“இந்த முறை எனக்கு வழிகாட்டாவிட்டால் அந்த உச்சியிலிருந்து விழுவதைத் தவிர வேறுவழியில்லை” என்றுதான் பொன்னாவும் நினைக்கிறாள். மேலும், முன்பொரு நாள், தன்னெதிரில் இளிப்புடன் வந்து நோட்டமிட்டுப் பேச முனைந்த கருப்பண்ணனை முன்னிட்டு, “எனக்கு ஒரு பிள்ள இல்லைன்னுதான எல்லாரும் இப்படிப் பாக்கறாங்க. எனக்கு அந்தக் கொடுப்பின வாச்சுதுன்னா இந்தக் கேவலம் வருமா? முட்டுச்சந்துல நிக்கற கல்லுன்னு என்னய நெனச்சு எந்த நாய் வேண்ணாலும் வந்து மண்டுட்டுப் போலாம்னு நெனக்குதுவ மாமா” எனக் காளியிடம் முறையிட்டுக் கதறியழுதவள்தானே பொன்னா! இப்படிப்பட்டவளே வேறு வழியின்றித் ‘திருநாள் சாமியிடம்’ போகத் துணிந்து விடுகிறபோது, அவள் உணர்வைக் காளி மதித்து நடப்பதுதானே நியாயம்? “பெத்து வளத்து ஆளாக்கிக் கலியாணம் பண்ணிச் சொத்துச் சேத்துக் கஷ்டப்பட்டுச் சாகறது ஒரு பொழப்பா” எனக் காளியிடமும், “கொழந்தயக் கொஞ்சறதும் வளக்கறதும் நம்மளுக்குத் தேவையா இருக்குது. அதுக்குத்தான் பெத்துக்கறதும் வளக்கறதும். அப்பறம் எதுக்கு வயசான காலத்துல பையன் என்னயப் பாக்கல, பிள்ள என்னயப் பாக்கலீன்னு பொலம்பறது? அதெல்லாம் புத்திகெட்ட நாய்ங்க செய்யறது…..” எனப் பொன்னாவிடமும், மானுட வாழ்க்கையைப் பற்றிய தம் வேறுபட்ட பார்வையைச் சித்தப்பா முன்வைக்கிறார். இப்பார்வையின் விளைவாகக் காளியும் பொன்னாவும், ஓரளவுக்கேனும் தங்களை எப்போதும் ஆக்கிரமித்துச் சித்திரவதைப்படுத்தும் ‘குழந்தையில்லாமை’ப் பிரச்சினையிலிருந்து வெளியேறிவரவும் வழியேற்படுகிறது. எனினும், இந்தச் சித்தப்பாவுடன், ‘சாமி பிள்ள’ பற்றிக் காளி விவாதிப்பதற்கு, ஏன் இந்நாவலில் இடமளிக்கப்படவில்லை? கல்யாணம் என்று ஏதும் பண்ணிக் கொள்ளாமல், தனக்கு இஷ்டப்பட்டபடி மிதமிஞ்சிய சுதந்திரத்துடன், தனிக்காட்டு வாழ்க்கை நடத்தும் ’நல்லுப்பையன் சித்தப்பா’வைக் காளி புரிந்துகொள்ளாமலா இருக்கிறான்? “கல்யாணம் பண்ணிக்காமலேயே பொம்பள சொகம் தாராளமாக் கெடைக்கும்னா, எவன்டா கலியாணம் பண்ணிக்குவான்?” எனத் தம் வாழ்வை அவர் நியாயப்படுத்திக்கொள்வதைக் கேட்டுக் குழந்தைத் துக்கத்தைக் கொஞ்சம் மறந்து காளியும் உற்சாகம் பெறத்தானே செய்கிறான்?
நாவலில் காளிக்கும் சித்தப்பாவுக்கும் அந்தரங்க உரையாடல் நடந்திருந்தால், ஒருவேளை திருநாளுக்குப் பொன்னா சென்று வருவதற்குக் காளி இசைந்திருக்கக் கூடும். ஏனெனில், நாவலில் வரும் நல்லுப்பையன் சித்தப்பா, ‘கல்யாணம் – குடும்பம் – குழந்தை – பாலுறவு’ தொடர்பாகப் பொதுப்புரிதலிலிருந்து வேறுபட்ட வித்தியாசமான கருத்துடையவராகப் புனையப்பட்டுள்ளார். ஆனால், சொத்தை எல்லாம் காளி பேருக்கு எழுதி வைக்கப்போவதாகப் பாசம் கொட்டும் அவரிடமும் ‘பதினாலாம் நாள் திருவிழா’ பற்றிக் காளி வாய் திறப்பதில்லையே, அது ஏன்? எவ்வளவு யோசித்தாலும், இதற்குப் பதில் ஒன்றுதான். நாவலின் யதார்த்தத்தளம், அப்போது முற்றிலுமாகச் சிதைந்திருக்கும். பொன்னாவும் – அவளின் வீட்டாரும் சேர்ந்து, தன்னை ஏமாற்றி வஞ்சித்துவிட்டதாக, அப்போது காளி கூக்குரலிட்டிருக்க மாட்டான். குழந்தை பெற்று வரும் பொன்னாவை ஏற்று வாழ்ந்தால்தான் என்ன என்று ‘ஆண் திமிர்’ அடக்கிச் சிறிதேனும் யோசித்திருப்பான்! இதைப் போலவே, அண்ணனின் பேச்சை நம்பாமல், கணவனின் இசைவைக் கேட்டுப் பொன்னா வெளிப்படையாகக் காளியிடம் பேசியிருந்தாலும், உடன்படுகிறானோ இல்லையோ, நாவலின் இறுதியில் காளி தற்கொலையாவது செய்யாமல் இருந்திருக்கக் கூடும். உக்கிரமான வாழ்க்கைப் பிரச்சினையிலிருந்து கதாபாத்திரத்தைத் தப்பிக்கவைக்கும் ஒரு யதார்த்தவாதத் தீர்வாவது, பிரதிக்குள் தவிர்க்கப்பட்டிருக்கக்கூடும். மாறாக, ‘மாதொருபாகனில்’ நடந்திருப்பது யாது? “ஏமாத்திட்டா ஏமாத்திட்டா….கண்டாரோலி போயிட்டயாடி. எம் பேச்ச மீறிப் போயிட்டயாடி.. எல்லாஞ் சேந்து என்னய ஏமாத்திட்டீங்களேடி.. தேவிடியா முண்ட…. ஏமாத்திட்டயேடி.. நீ தவிச்சுக் கெடக்கோனும்டி. ஏமாத்திட்டயேடி தேவடியா முண்ட….” எனச் சுய பச்சாதாபத்தின் கொடுமுடி தொட்டு, தன் சொல் பேச்சைப் பொன்னா மீறிவிட்ட ஏமாற்றத்திற்காக, ஆயுள்காலத்திற்கும் அவளைப் பழிவாங்கும் வன்மத்துடன், நாவலின் இறுதிக் காட்சியாகப் பூவரசங்கிளையில் தூக்குப்போட்டுச் சாகத் துணிகிறான் காளி. அவன் தூக்குப்போட்டுச் சாவதைவிடவும் அதிர்ச்சியளிப்பது, அவனது இயலாமையின் வெளிப்பாடாக வன்மத்துடன் தெறிக்கும் “நீ தவிச்சுக் கெடக்கோனும்டி” என்ற நாச்சுடும் வடுதான்.
இத்துடன் நாவல் முடிந்தாலும், இங்கிருந்துதான் வாசகர்களின் மனத்தில் அது தொடங்குகிறது. அல்லும் பகலுமாய்ப் பன்னிரண்டு வருடங்கள் ஒன்றாகப் பின்னிப் பிணைந்திருந்த ஆசை மனைவியைக் ‘கண்டாரோலி’ என்றும், ‘தேவிடியா முண்ட’ என்றும் ஏசும் ஒரு கணவன், அந்த மனைவியால் மதிக்கப்படுவதற்குரிய ஒருவன் தானா? ‘இவனும் சாமியில்லை; திருவிழாவில் கூடிய அவனும் சாமியில்லை; இப்படியான எல்லா ஆண்களும் வெறும் ஆசாமிகளே’ என்ற புரிதலைப் பொன்னா வந்தடைவதற்கு, இன்னும் எவ்வளவு காலமாகும்?
இதுதான் மாதொருபாகனைப் பார்த்து அனைவரும் கேட்க வேண்டிய கேள்வி. ஆனால், இந்தக் கேள்வியைக் கேட்கவிடாமல், அடிப்படைவாதிகள் இடைப்புகுந்து, இதைக் கவுண்டர் சாதிப் பெண்களைச் சிறுமைப்படுத்தும் நாவலாகத் திசைதிருப்பி விட்டுவிட்டார்கள். இது ஒன்றும் பெண்களுக்குப் பாலியல் சுதந்திரம் கோரும் ஒரு தீவிரப் பெண்ணிலைவாதப் பிரதியில்லை. கல்வியுரிமையும் சொத்துரிமையும் தொடர்ந்து பறிக்கப்பட்டுப் பண்பாட்டின் பெயரால் பெண்களைக் குடும்பத்திற்குள் அடக்கி ஒடுக்கப் பார்க்கும் பழைய கால நிலைமைகளில் ஓரளவுக்கு இன்றைக்கு உடைப்புகள் நேர்ந்துள்ளன. எனினும்கூடப் பெண்ணை ஆணுக்கு இணையான சம உயிரியாகப் பார்க்கும் பார்வை என்பது, ஆண்கள் எழுதும் இலக்கியப் பிரதிகளில் தொடர்ந்து பன்னெடுங்காலமாக இல்லவேயில்லை. இந்தப் புனைவு யதார்த்தம், மாதொருபாகனிலும் பெரிதாக மீறப்பட்டு விடவில்லை. இதிலும்கூடச் சமூகத்தின் முன் தன் ஆண் வல்லாண்மையை நிறுவிக்கொண்டுவிட முடியாத தோல்வியின் கசப்பே வலுவாகவே பின்னப்பட்டுள்ளது. ‘பெண் ஆணின் உடைமை’ என்ற ஒரு பாரபட்சமான ஆண் நோக்கின் அநீதியை விமர்சிக்க வாய்ப்பளிக்காமல், தன்னோடு படுத்தவள் இன்னொருவனோடும் படுப்பதா அல்லது தன்னால் தர முடியாததான குழந்தைப் பேறைத் ‘திருவிழா நாள் சாமி’ தருவதா என்ற ஆணின் உளவியல் அச்சத்தின் வடிகாலாகவே காளியின் தற்கொலையும் புனைவில் பூதாகரமாகிறது. திருவிழாவில் இப்படி நடந்ததா? அதாவது, ‘சாமி பிள்ளை’ எனச் சொல்லப்படும் மீறல்கள் உண்மையிலேயே நடந்தனவா? எனக் கேட்பதா இன்றைய நம் தேவை? இதன் உண்மையான பிரச்சனை என்ன? காலங்காலமாகப் பொன்னாக்களைப் பதற அடித்துவிட்டுக் காளிகள் மட்டும் தங்களை எப்படிப் புனிதமான அப்பாவிகளாக நிறுவிக்கொள்ள முடிகிறது என்கிற அந்த வினாதானே இங்கு மேலெழுந்திருக்க வேண்டும்? பொன்னாக்கள் என்றாவது தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்களா? வாழும்போதே கொல்லப்பட்டு விடுகிறவர்கள், பின்னர் எதற்காகத் தற்கொலையும் செய்துகொள்ள வேண்டும் என்றா கேட்கிறீர்கள்? பலே. அருமையான கேள்விதான். இன்றைய ஜனநாயக காலத்தில், குடும்பம் என்ற மரபான அமைப்பு எவ்வளவு சமத்துவமானதாகக் கட்டமைக்கப்பட வேண்டும் என்ற கேள்வி, மாதொருபாகன் மூலம் ஒரு பொது விவாதமாகிவிடக் கூடிய வாய்ப்பைக் கொன்றழிப்பதற்காகத் தானே,இயற்கையான (!) பெண் கற்புப் பற்றிய (ஆணுக்குக் கற்பு இயற்கையில்லை) காலப் பொருத்தமற்ற வீண் சர்ச்சையாகப் பொன்னாவின் செயல் பண்பாட்டு அடிப்படைவாதிகளால் வசைபாடப்படுகிறது? இவர்கள் இவ்வாறு பிரச்சனையை எவ்வளவு திசைதிருப்பினாலும், காளிகளின் காலம் முடிந்து பொன்னாக்களின் காலம் உலக நடைமுறையில் (வரலாற்றில் இல்லை!) தொடங்கிவிட்டது என்பதே இன்றைய உண்மையாகும். இந்த நுண்ணுண்மையைப் பெண்ணின் நோக்கிலிருந்து அல்லாமல்,ஆணின் நோக்கிலிருந்து முன்வைக்கிறது மாதொருபாகன் என்பதுதான் அதன் பிரச்சினை.ஆனால், இதற்கே இவ்வளவு பெரிய கூப்பாடுகள் என்றால்,பெண் நோக்கிலிருந்தும் இப்பிரச்சனை புனைவாக்கப்பட்டிருந்தால், இன்னும் என்னென்ன கூத்தெல்லாம் இங்கு நடந்தேறியிருக்குமோ!
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- பொதுபுத்தியின் மனக்கோணலை நிமிர்த்தும் 'கழிப்பறையின் கிரகப்பிரவேசம்' :பெருமாள்முருகனின் சிறுகதைகள்: கல்யாணராமன்
- கங்கணம் (2007) : பாடு பழைமை பேணும் புனைவு : கல்யாணராமன்
- சமூகப் பொறுப்புணர்வின் சாட்சியம்:நிழல் முற்றம் (1993) : கல்யாணராமன்
- யதார்த்தவாத மெளனம் - கல்யாணராமன்
- யதார்த்தவாதத்தின் போதாமையும் ஆவணப்பதிவின் நம்பகத்தன்மையும் - கல்யாணராமன்