பெருமாள்முருகனின் படைப்புலகம் -3

ஏறுவெயில்

நேற்றைய காலத்தைப் பற்றிச் சித்திரிக்க முனையும் இன்றைய படைப்பு இலக்கியங்கள், இயல்பும் மீறலுமாய்க் கடந்தகால வாழ்வைக் கலைத்துப் போட்டுப் பிரதிக்குள்ளாவது இருப்பின் கட்டுக்கோப்பைச் சிதறடித்துப் புனைவு வெளிக்குள் அடிப்படைகள் சார்ந்த புதிய பரிமாணங்களைக் கொண்டுவந்து சேர்க்கவேண்டாமா? இதற்குப் பதிலாகத் தட்டையான நேர்க்கோட்டுச் சித்திரங்களாகப் பழைய வாழ்வின் அப்பட்டமான சாட்சி நகல்களாகத் தத்துவ தரிசனங்களற்ற ஆனால் உண்மைநடப்பின் உணர்வுத்தெறிப்புகளாகச் சமகால நோக்குகளின் சாரங்களைக் கணக்கிலெடுக்காத வெறும் அனுபவவாதப் பதிவுகளாக மட்டும் அவை தொழிற்பட இயலுமா?

இது இப்படித்தான் என்ற இறுகிய வரையறையுடன், எதையும் மாற்ற இயலாது என்ற திட்டவட்டமான புரிதலுடன், ‘பகுதியே முழுமை’ என்ற ஒரு தோற்ற மயக்கத்துடன், பிரத்தியேகமான பார்வை என ஏதும் இல்லாமல், உலகியல் நிகழ்வுகளை அவை உள்ளவாறே தற்படம் பிடிக்கத் துணியும் படைப்பாக்கத்தால் வாழ்தலுக்கான நியாயங்களை மேலும் விசாலப்படுத்த இயலுமா? அகப்புறப் பொருண்மைகள் சார்ந்த மாற்றங்களைத் தொடர்ந்து எதிர்கொண்டு வாழ்வு வேலிகளைப் புனரமைத்துப் ‘பிரபஞ்சத்தில் நடைபெறும் உயிர்களின் இயக்கம்’ பற்றிய முழுமையான விசாரணையைப் பகுதிகளைப் பிரதானப்படுத்தும் உண்மைச்சாயல் புனைவுகளால் மேற்கொள்ள முடியுமா? ஊற்றுக்கண்கள் தொடர்பான விழிப்பற்றுப் ‘படைப்பு’ புறக்காட்சிகளிலேயே தன்னைத் தொலைத்துக்கொள்ளப் படைப்பாளி அனுமதிக்கலாமா?

புனைவியம் – யதார்த்தவாதம் – விமர்சன யதார்த்தவாதம் – இயல்பு வாதம் – இலட்சிய வாதம் – நவீனத்துவம் – மாய யதார்த்தவாதம் – பின் நவீனத்துவம் என அணிவகுத்து நிற்கும் இக்கோட்பாட்டு வெளியைக் கண்டும் காணாமல், ‘படைப்பெழுச்சியே எழுத்தைத் தீர்மானிக்கிறது; கோட்பாட்டுப் புரிதலன்று’ எனக் கூறிப் பழகிய பழைய பாணியிலேயே எழுதிச் சலித்த அவற்றையே ஒரு படைப்பாளி திரும்பத் திரும்ப உறுத்தலற்றுப் படைத்துக் கொண்டிருக்க முடியுமா? மாறாகக் கோட்பாட்டையே முதன்மைப்படுத்திப் படைப்பூக்கத்தின் பரவசவெளித் தரிசனங்களைத் தவறவிடலாமா? இவற்றின் இணைவாகப் புனைவை உருவாக்கச் சாத்தியப்பாடுகள் உள்ளனவா?

உலகமயமாதலின் விளைவுகளால் முற்றிலுமாக மாறிவிட்ட ‘மானுட வாழ்க்கை மற்றும் அதன்வழிப்பட்ட இலக்கிய எழுதுமுறை’யை உட்செரித்துக் கொள்ளாமலும், ஒன்றிலொன்று கலவாமலும் ஒன்றையொன்று தழுவாமலும் தம்மைத் தாமே சிதைத்தும் மீறியும் செல்லாமலும், புனைவியமோ யதார்த்த வாதமோ இலட்சிய வாதமோ நவீனத்துவமோ பின்நவீனத்துவமோ – அவை எவை ஆயினும் – இவற்றுள் ஒன்றை மட்டும் பிரதானப்படுத்திப் பிறவற்றின் சிறு தடயங்களும் இல்லாமல், அந்த ஒன்றாக மட்டுமே, கறாரான இலக்கு நோக்கிய பயணமாகப் புனையப்படும் ஒரு படைப்பு, ‘இன்றைய இலக்கியமாக’ அர்த்தப்பட முடியுமா? இக்கேள்விகள் பொருத்தமற்றவையா? அல்லது இவை பொருத்தப்பாடுடையவையா? இவற்றுக்கான எதிர்வினைகளையே தற்காலம் கோருகிறது. நிகழ்காலத்தின் தேவையாகவும் அறைகூவலாகவும் விரியும் இவற்றை விவாதிப்பதற்கு, வேறெந்த இலக்கிய வடிவத்தை விடவும், நாவல் இலக்கியமே பெரிதும் உகந்ததும் இடமளிப்பதும் ஆகும் என்பதால், தமிழ்ப் புனைவெழுத்தாளர்களின்மீது இப்போது நெருக்கடி முற்றுகிறது.

தொண்ணூறுகளில் நிகழ்ந்த ஒரு மாபெரும் துக்க நிகழ்வாகச் சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சி அமைந்தது. இந்த ருஷ்ய வீழ்ச்சி என்பது, உலகம் முழுதிலும், மனித வாழ்விலும் அவனால்  படைக்கப்படும் இலக்கியத்திலும், ஒருவகை வெறுமையையும் போதாமையையும் உண்டு பண்ணிவிட்டது. இன்னொரு புறத்தில், திறந்து விடப்பட்ட சந்தை வாய்ப்புகளும், தனிப்பட்ட இயல்பான அடையாளங்களுக்கு இடம் மறுத்துத் திரளும் ‘உலகமயமாதல்’ சிதைவுகளும் சேர்ந்துகொண்டன. இவற்றின் எதிர்விளைவாக அமுக்கப்பட்ட உணர்வுகளும், முடக்கப்பட்ட குரல்களும் இலக்கிய வெளியில் புழக்கத்திற்கு வந்தன.

‘பொதுமை’ என்ற அந்த ஒன்றே முற்றிலும் இல்லாமலாகி, ஓரங்களும் சாய்வுகளும் மனிதனின் இருப்பையும் மதிப்பையும் தீர்மானித்தன. அறத்தின் இடத்தைக் கேளிக்கையும் கொண்டாட்டமும் நிரப்பின. ‘அவனவன் அளவில் அவனவன் அரற்றுக’ என்பது, ஒரு வாழும் நெறியாயிற்று. ஒழுக்கமும் உண்மையும் பிற விழுமியங்களும் அதிகாரங்களாகப் பார்க்கப்பட்டன; திரிபும் பிறழ்வும் மீறலும் இயல்புகளாகக் கருதப்பட்டன; தெளிவின்மையும் நடுவு நில்லாமையுமே பெறற்கரிய பெரிய வரங்களாகிப் போற்றப்பட்டன; மாட்சியிற் பெரியோரை இகழ்தலும் சிறியோரைப் புகழ்தலும் புதிய மரபுகளாகின! என்ற போதிலும், புனிதங்களாக நம்பி ஏற்கப்பட்டவற்றின் போலி முகங்களும்கூட அம்பலமாகின; உன்னதங்களாகப் பொதுபுத்தியில் படிந்துவிட்டவை யாவும் கட்டுடைக்கப்பட்டுச் சிதைந்தன; திரு உருக்கள் அனைவரும் காலாவதியாகிப் போயினர்; அவர்தம் உயர்தனிப் பெருமைகளும் அழிந்தொழிந்தன.

தொடர்ந்து வந்த ஓட்டம், ஒரு தேக்கத்தை அடைந்ததும் நின்று, பிறகு புதுவிசைகள் தூண்ட, முன்னைக் காட்டிலும் வேகமாய்ப் பெருக்கெடுத்தபோது, மலரும் மலமும் கலந்துதான் வந்தன. இது நிதானப்பட இன்னும் சில காலம் பிடிக்கலாம். இந்த மாறுதல் காலத்தில், மனித வாழ்க்கையைப் போலவே, இலக்கியத்திலும்கூடச் சில இருட்டான பகுதிகள் வெளிச்சத்திற்கு வந்தன.  பாரம்பரிய மதிப்பீடுகள் கேள்விக்குள்ளாகிப் புதிய பார்வைகள் செல்வாக்குப் பெற்றன. எளிய வரையறைகளுக்குள் அடங்கிவிட மறுக்கும் இப்பன்மைக் குரல்களை, ‘1990-2010’ எனும் இருபதாண்டுக் காலத்திற்குரிய தமிழ் நாவல்கள் பரவலாக எதிரொலிக்க முனைந்தன.

ஒன்றேகால் நூற்றாண்டைக் கடந்துள்ள ‘தமிழ் நாவல்’ களத்தில், முதல் முறையாக ‘மேல்தட்டு வாழ்வியலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்சாதி எழுத்தாளர்கள்’ செல்வாக்கிழந்த காலமாகவும், பெண்ணிய – தலித்திய – பின் நவீனத்துவ எழுத்துகளின் செல்வாக்கு ஓங்கிய காலமாகவும், நாவலுக்கான வாசகப்பரப்பு மிகவும் விரிவடைந்த காலமாகவும், அளவில் நீண்ட ‘பெரு நாவல்கள்’ பெருகிய ஒரு காலமாகவும் இதனை அவதானிக்கலாம். இதுகாறும் பரிசோதிக்கப்படாத புதிய களங்கள் மற்றும் கருத்துவெளிகளைச் சித்திரிப்பது என்பது, இக்காலகட்டத்தின் குறிப்பிடத்தக்க படைப்பாக்கப் பண்பாயிருந்தது.

நவீனத் தமிழிலக்கிய வரலாற்றில், தொண்ணூறுகளுக்குப் பிறகான காலம், பலவகைகளிலும் மிகவும் முக்கியமானதாகும். குறிப்பாகத் தமிழ் நாவல் உலகில், இக்காலத்தில்தான் (1990-2010), பல்வேறு புதிய எழுத்தாளர்களின் ‘வரவு’ நிகழ்ந்தது. தோப்பில் முகமது மீரான், ஜெயமோகன், சாரு நிவேதிதா, கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், எம்.ஜி.சுரேஷ், சிவகாமி, பாமா, இமையம், சோ. தர்மன், பெருமாள்முருகன், ஜோ- டி- குரூஸ், சு.தமிழ்ச்செல்வி, சல்மா போன்ற பலரின் முதல் நாவல்கள் இக்காலப் பகுதியில்தான் வெளிவந்தன. மேலும் சுந்தர ராமசாமி, நீல.பத்மநாபன், சா.கந்தசாமி, அசோகமித்திரன், எம்.வி.வி., பிரபஞ்சன், பொன்னீலன், நாஞ்சில் நாடன் போன்ற மூத்த எழுத்தாளர்களின் சில நாவல்களும் களம் புகுந்தன. எனினும், மூத்தோரின் படைப்புகளை விடவும், இளையோரின் ஆக்கங்களே ‘தீவிரவாசகரின்’ பரவலான கவனத்தைப் பெற்றன. இவ்வாறு ‘கவனிப்புப் பெற்ற’ நாவலாசிரியர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் பெருமாள்முருகன். அவர் புனைந்த பல நாவல்களின் அடிப்படையில், இன்றுவரையிலுமான யதார்த்தவாதத் தமிழ் நாவலாசிரியர்களின் வரிசையில் முக்கியமான ஒருவராகப் பெருமாள்முருகனை மதிப்பிடலாம்.

கவுண்டன் பொழப்பப் பாத்துச் சக்கிலி சிரிக்க, சக்கிலி பொழப்பப் பாத்துக் கவுண்டன் சிரிக்க (கங்கணம்) எனச் சிரிப்பாய்ச் சிரிக்கும் கொங்கு வட்டார வாழ்க்கைதான், பெருமாள் முருகனின் படைப்புலகமாகும்.  ஏறுவெயில் (1991), நிழல் முற்றம் (1993), கூளமாதாரி (2000), கங்கணம் (2007), மாதொருபாகன் (2010) என அவர் படைத்த பல நாவல்களிலும், கவுண்டர்களும் சக்கிலியர்களும்தான் கதாமாந்தர்கள். களமும் ஒன்றுதான். ஆனால், கதைச் சூழல்கள் மட்டும் சிறிது வேறுபட்டவை. ‘காட்டிலிருந்து காலனிக்குக் குடியேறல், உதிரிகளாக்கப்பட்டுச் சீரழிக்கப்படும் விடலைப்பையன்களின் வாழ்க்கை, ஆடு மேய்க்கும் வளரிளம் பருவத்துக் குழந்தைகளின் சிக்கல்கள், முதிர்இளைஞன் ஒருவனின் திருமணப் போராட்டம், குழந்தைப்பேறு தொடர்பான பிரச்சினை’ எனப் பலவிதமாகக் ‘கதை’கள் புனைய முனைந்துள்ளார். எனினும், இந்நாவல்களின் மாந்தர்களிடம் ‘ஒருவகைக் குடும்பச்சாயல்’, பல தமிழ் நாவலாசிரியர்களின் படைப்புகளிலும் இருப்பது போலவே காணப்படத்தான் செய்கிறது.

தொண்டுப்பட்டி, கள் குடித்தல், நாயோடு பேசல், கோவில் திருவிழா, குழந்தையைத் தூக்கிப்போட்டுப் பிடித்தல், இரண்டாமாட்டம் சினிமாவுக்குப் போய் வருதல், கிணற்று நீருக்குள் மூழ்கிக் குளித்தல், பனையேறி கந்த மூப்பன், கிளி ஜோதிடம், சாவு…. எனப் பொதுவான பல செய்திகள் இந்த நாவல்களில் திரும்பத் திரும்பச் சித்திரிப்புப் பெற்றுள்ளன. ஏறுவெயிலில் வளர்ப்பு நாயின் மரணம், நிழல் முற்றத்தில் நடேசனின் கொலை, கூள மாதாரியில் செல்வனின் கொலை மற்றும் கூளையனின் தற்கொலை, கங்கணத்தில் பாட்டியின் சாவு, மாதொருபாகனில் காளியின் தற்கொலை எனப் பெருமாள்முருகனின் நாவல்களில் ‘சாவு’வழிக் கதையிலிருந்து பாத்திரங்கள் ‘தப்பி வெளியேறல்’ என்பது வழமையான ஓர் உத்தியாதலைக் காணலாம். இவற்றுள்ளும் கங்கணத்தில் வரும் பாட்டியின் ‘சாவு’,  தமிழ் சினிமாத்தனமானதாயுள்ளது.

‘நிகழ்காலத்துக்குள் விரிவாகப் பயணப்பட முடியாத இயலாமை’ என்பது, பெரும்பாலான தமிழ்ப் படைப்பாளிகளுக்குப் பொதுவாக நேர்வதுதான். இந்தப் பொதுவியல்புக்குப் பெருமாள் முருகனும் விதிவிலக்கல்லர். இப்போது நாம் எதிர்கொள்ளும் அண்மைக்கால நிகழ்வுகளை விடவும், கடந்து வந்துவிட்ட இறந்தகாலத்தின் நினைவுகளே அவர் நாவல்களிலும் ‘கதைகளாக’ப் பல்கி விரிகின்றன. இதை இன்னும் விரிப்பதானால், பல தமிழ் நாவலாசிரியர்களைப் போலவே, பால்யத்தையும் பழங்காலத்தையும் சித்திரிப்பதிலேயே பெருமாள் முருகனும் சிறந்துள்ளதாகக் கருத்துரைக்கலாம். அவர் கதைகளில், தமிழ் நாவல்களில் வழக்கமாகச் சித்திரிக்கப்படும் ‘அசட்டுக் காதல்’ இல்லை. ஆனால், வலுவான ‘பெண்’ சித்திரிப்பும் இல்லை. பெரும்பாலும் பெண்கள், எதிர்மறைக்குணம் உள்ளவர்களாகவே புனையப்பட்டுள்ளனர். ‘யதார்த்தத்தைப் பிரதிபலிப்பது’ என்பதுதான், இந்நாவல்களின் ‘வரையறுக்கப்பட்ட நோக்கமாக’ உள்ளது.

தமக்குள் தாமே முரண்படும் பன்மைக் குரல்கள், நவீனத் தமிழிலக்கியப் பரப்பிற்குள் முனைப்புற்று ஒலிக்கும் இந்தக் காலகட்டத்திலும், பெருமாள் முருகனிடம் யதார்த்தவாதமே செல்வாக்குச் செலுத்துவது என்பது வியப்புக்கு உரியதாகும். அவற்றுக்கு இடமளிக்கும் சமூகச் சூழல்கள் அப்படியே உள்ளன என்பதால், நவீனத்துவம் மட்டுமல்ல யதார்த்தவாதமும் தமிழில் இன்னும் சாகவில்லை என்பதும் உண்மைதான்.ஆனால், இதற்குப் பொருள், ஐம்பதுகளின் அறுபதுகளின் அல்லது எழுபதுகளின் யதார்த்தவாதமாக அது இன்றும் தொடரமுடியும் என்பதன்று. இங்குப் படைப்புக்குள் ‘யதார்த்தவாதம்’ பேசப்படக் கூடாது என்பதை மிகையாக அழுத்துவது நோக்கமன்று; மாறாகப் பழைய பாணியிலான ‘உள்ளதை உள்ளவாறே’ சித்திரிக்க முனையும் யதார்த்தவாதக் கோட்பாட்டின் போதாமையைச் சுட்டிக் காட்டுவதும், குறைந்தபட்சம் அந்த இடத்தில் விமர்சன யதார்த்த வாதத்தையாவது ஒரு பதிலியாகப் பொருத்திப் பார்க்கலாகாதா என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்துவதுமே நோக்கமாகும்.

ஏறுவெயில் (1991)

மிக இளம்வயதில் – 25ஆம் வயதில் – பெருமாள் முருகன் எழுதிய முதல் நாவல் இது. இந்நாவலில், நிலவுடைமையாளர்களான கொங்குக் கவுண்டர்கள் மற்றும் பண்ணயக்கூலிகளாகக் கவுண்டர்களிடம் சிக்கியுழலும் சக்கிலியர்கள் ஆகியோரின் ‘நகர்மயமாதல்’ சார்ந்த வாழ்வியல் போராட்டங்கள், உள்ளதை உள்ளவாறே சித்திரிக்கும் ‘யதார்த்தவாத’ நோக்கிலிருந்து மிகத்துல்லியமாகப் பதிவாகியுள்ளன. கொங்கு வட்டாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ‘வட்டார மொழி’ நாவலில் பரவலாகப் பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டுள்ள போதிலும், பொதுவாசகர்களுக்கு அம்மொழி புரியாமையையும் அந்நியத்தன்மையையும் ஏற்படுத்துவதில்லை. இவ்வகையில் பெருமாள்முருகனின் இந்நாவல், அவரின் பிற வட்டார நாவல்களிலிருந்து பெரிதும் வேறுபட்டதாகும். மிக எளிமையும் செறிவும் கூடிய சரளமான வழக்குமொழியைத் தனித்துவத்துடனும் வட்டாரப் பண்புடனும் திறமையாகப் பெருமாள் முருகன் கையாண்டுள்ளார். தமக்கு நன்றாகத் தெரிந்த களத்தைப் பாசாங்கற்ற உண்மையழகோடும், நூறுசதவிகித நம்பகத்தன்மையோடும் சித்திரித்துள்ளார். ‘இது அப்படியே நடந்த கதை’ என்ற எண்ணத்தைப் பெருமளவில் இந்நாவல் ஏற்படுத்துவதைப் படைப்பாளனின் வெற்றியாகவே கொள்ளவேண்டும்.

‘வெள்ளாமைக்காடு’ அரசால் விழுங்கப்பட்டுக் ‘காலனியாக’ மறு உருவாக்கம் பெறுகிறது; காட்டை இழந்துவிட்டுக் காலனிக்கருகில் ‘வளவில்’ குடியேறுகிறது கவுண்டர் குடும்பம்; அங்குக் கிராம வாழ்க்கை மெல்ல மெல்ல அழிந்து ‘நகர் மயம்’ பெருகும் சூழலைப் பதற்றத்துடன் அது எதிர்கொள்கிறது; இத்தகைய ஓர் எதிர்கொள்ளல்வழிக் குடும்பத்தின் கௌரவத்தையும் அதன் மூலமாகச் சமூக மதிப்பையும் தக்கவைத்துக்கொள்ளத் தொடர்ந்து போராடுகிறது; இக்களப் போராட்டமே – பழக்கப்பட்ட ஒரு வாழ்விலிருந்து மற்றொரு வாழ்விற்கு எளிதாக மாறிக்கொள்ள முடியாத துயரமே – இந்நாவலின் கருப்பொருளாகும். இந்தக் கருப்பொருளைக் கவுண்டர்களும் சக்கிலியர்களும் பின்னிப் பிணைந்து கிடக்கும் ‘கொங்கு’ கிராமியச் சூழலைக் களமாக்கித் தமிழ் மண் சார்ந்த ஒரு வகைமாதிரிக் கதையாகப் புனையப் பெருமாள்முருகன் முயன்றிருக்கிறார். இது மிதமான உணர்ச்சிச் சித்திரிப்புகளுடன், இயல்பான உரையாடல்களுடன், இலட்சியவாதத்திலிருந்து வெகு தூரம் விலகிய நடப்பியல் தன்மைகளுடன், தத்துவக் குழப்பங்களைச் சிறிதும் அனுமதிக்காத உலகியல் சார்புகளுடன், மிக நேரடியான விவரணைகளுடன், எளிய அப்பட்டமான மனிதர்களுடன் நாவலில் வெளிப்பட்டுள்ளது.தம் ஏறுவெயிலைக் கிராம வாழ்வின் நம்பகமான ஆவணப் பதிவாகப் பெருமாள்முருகன் உருவாக்கியுள்ளார்.

சொந்தக்காட்டைக் காலனிக்காக இழக்கும் கவுண்டர் குடும்பம், அதற்கு இழப்பீட்டுத் தொகையாகக் கிடைக்கும் இருபத்தைந்தாயிரத்தைக் கொண்டு, நாலு ஏக்கர் நிலம் வாங்குகிறது. ஆனால், இந்த நிலத்தை நம்பி மட்டும் வாழ முடிவதில்லை. லாபம் பார்ப்பதற்கு, வேறு எதையாவதுதான் செய்ய வேண்டி இருக்கிறது. நிலவுடைமைச் சமூகத்தின் வீழ்ச்சிக்கும், முதலாளித்துவச் சமூகத்தின் எழுச்சிக்கும் அடிப்படைக் காரணமே இந்த லாப நோக்குத்தான். லாபம் – மேலும் லாபம் – மேலும் மேலும் லாபம்! வாய்க்கும் வயிற்றுக்குமே ‘வெள்ளாமை’ சரியாக இருப்பதால், கூடுதல் லாபமும் சுகங்களும் வேண்டி, மூலதனத்தைப் பெருக்கிப் பிறரைச் சுரண்டித் தின்னும் ‘தொழில் வாய்ப்பு’த் தேடிப்போவது தவிர்க்கவியலாததாகிறது.கூடாத சில சேர்க்கைகளுக்காட்படும் மூத்த மகனால் நிர்ப்பந்திக்கப்பட்டு, வாங்கிய நாலு ஏக்கர் நிலத்தில் இரண்டை இஷ்டமில்லாமலேயே கவுண்டர் விற்கிறார். விற்று வந்த பணத்தைப் பெருகி வழியும் பெரிய வட்டிக்கு ஆசைப்பட்டுப் ‘பைனான்சில்’ போடுகிறார். ஊரார் பணத்தைத் திரட்டிக் கூடுதல் முதலீடும் செய்கிறார். மிக விரைவிலேயே ‘பைனான்சு’ மூழ்குகிறது. மிஞ்சியுள்ள இரண்டு ஏக்கரையும் விற்றுத்தான் தம் கடனடைத்துப் பிக்கல் பிடுங்கலிலிருந்து விடுபடக் கவுண்டரால் முடிகிறது. எஞ்சும் பணத்தில், முன்பு தாம் வெறுத்த அந்தக் காலனியிலேயே, இப்போது ‘பாதுகாப்பாய்’ வீடு வாங்கிக் கவுண்டர் குடும்பம் குடியேறுவதுடன், ஏறுவெயில் நாவல்  முடிகிறது.

‘ஏறுவெயில்’ – மிக ஆழமான, கவித்துவம் கூடிய ஒரு தலைப்பு. வாழ்வின் வெக்கை, மனிதர்களின்மீது மேன்மேலும் உக்கிரமாக ஏறிக்கொண்டேயுள்ளது. இந்தக் கடும் வெக்கையில் எப்போதும் கிடந்து புழுங்கிச் சுதந்திரக்காற்றுக்குத் தவிக்கும் மனிதர்களின் அகப்புற வாட்டம், ஏறுவெயிலில் தத்ரூபமாகப் பதிவாகியுள்ளது. எதற்காக இழந்தோம் என்பதையே அறியாமல், காட்டையும் சுயேச்சைத்தன்மையையும் இழந்துவிட்டு, நிலம் சார்ந்த தம் வாழ்விலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுக் காலமாற்றத்தில் தடுமாறும் சிதைவுகளைப் பதற்றத்துடனும் பீதியுடனும் எதிர்கொள்ள வேண்டியுள்ள கவுண்டர் குடும்பம் ஒன்றின் துக்கத்தையே ‘ஏறுவெயில்’ பேசுகிறது. உயிர்வாழ்வின் பாதுகாப்பை நாளும் நாளும் உறுதிசெய்துகொள்வதையே ஆகப்பெரிய வாழ்வனுபவமாகக் கருத வேண்டிய அவலம், வெள்ளாமையை விட்டு விலகிய மனிதர்களுக்கு நேர்கிறது. இந்த அவலத்தைப் பூச்சுகளற்ற எளிய மொழியில் – அலட்டலோ, ஆரவாரமோ, மிகைப்புனைவோ இல்லாமல் – தற்படம் பிடிக்கிறார் பெருமாள் முருகன்.

‘காசு கொடுத்துக் காடுகளைக் கவர்மெண்ட் வாங்கல் – காலனி உருப் பெறல் – வெள்ளாமை குறைதல் – பெண்டாட்டியை அடித்து உதைத்தல் – குடி வெறிக்கு இளைஞர்கள் பலியாதல் – வயசுக் கோளாறில் கெட்டுப் போதல் – விசைத் தறிப் பட்டறைகளின் பெருக்கம் – நிலங்கள் வீடுகளாக மாறிவிடுதல் – பரவும் சினிமா மோகம் – சினிமாக் கொட்டகைகள் – மாட்டு வண்டி ஓட்டிப் பிழைத்தல் – காரை வேலைகளுக்குச் செல்லல் – இந்தி எதிர்ப்புப் போராட்ட நினைவுகள் – நிலம் வாங்கி விற்றல் – தரகு வணிகம் செய்தல் – சோடாக் கடை போடல் – தேர்த் திருவிழா – கோவில் கும்பாபிஷேகம் – லாரி, ரிக் சர்வீஸ்கள்…..’ என, வேகவேகமாக ‘ஊரின் முகம்’ மாறுகிறது. இம்மாற்றத்தைக் கவுண்டர்களும் சக்கிலியர்களும் வெவ்வேறுவிதமாகவே எதிர்கொள்கிறார்கள். கவுண்டர்களுக்கு நிலம்சார் ‘வளமான வாழ்வு’  போகிறது; சக்கிலியர்களுக்கோ ‘பிழைப்பே’ பறிபோகிறது. உருச்சிதையும் பழைய வாழ்விலிருந்து பெயர்ந்து புது வாழ்வுக்குள் சென்று நிலைபெறுவதற்கு, இருவருமே தடுமாறுகிறார்கள். இத்தடுமாற்றத்தைப் பின்வரும் குறிப்புகள்வழி அறியலாம்.

‘பறையனுடன் கவுண்டப் பெண் ஓடிப் போதல் – ஓடிப் போனவளைப் பிடித்துதிழுத்து வந்து மனைவியை இழந்த கவுண்டனுக்கு இரண்டாம்தாரமாக மணமுடித்தல் – திருமண வாழ்த்து மடல் – நாடக நோட்டீசு – எம்.ஜி.ஆர்., சிவாஜி ரசிகர்களின் பேச்சுகள் – தி.மு.க., அ.தி.மு.க., சர்ச்சைகள் – போலிச் சாமியார் – காலனிக்குள் ‘ஊடு பூந்து அடி தின்னும்’ தலைவன் – சாராயக்கடை – சுடுகாட்டுச் சாதி மோதல் – புஷ்பா தங்கதுரை தொடர்கதை – சினிமா நடிகைப் பேச்சுகள் – ‘ஜட்டி’ போடப் பழகும் (பத்தாவது படிக்கும்) மகனைத் தாய் பழித்தல் ……..’ என, அரசியலும் சாதியும் சினிமாவும் சேர்ந்துகொண்டு, வெள்ளாமைக் காடுகளிலிருந்து மெல்ல மெல்ல வெளியேறிக் காலனிக்குள் குடியேறும் மக்களின் வாழ்வை விடாது ஆக்கிரமித்துக் குலைக்கின்றன. இந்த இருப்புப் போராட்டத்தில், தாக்குப்பிடிக்கவே முடியாதவர்கள் உருத்தெரியாமல் சிதைந்துபோகிறார்கள். நுகர்வுவெறியும் லாபங்களுமே வாழ்வாகிவிடும்போது, இவ்வாறு நேர்வதும் இயல்புதானே!

‘காடுகளைக் கவுண்டர்களும், பண்ணயப் பிழைப்பைச் சக்கிலியர்களும் இழத்தல் – பங்காளிச் சண்டை – சகோதரச் சண்டை – மாமியார் மருமகள் பூசல் – பிள்ளைகளால் கைவிடப்படும் கிழடுகள்- ‘ஊர் வளவு மற்றும் காலனி’  இளைஞர் சச்சரவுகள் – மேடைப் பேச்சுகள் – நில ஆக்கிரமிப்பு – காலேஜ் அட்மிஷன் – ஹாஸ்டல் ராகிங் – மோசடிப் பேர்வழிகள் – அரசியல் எத்தர்கள் –போதை வெறியில் பாட்டியின் ஓலைக்கொட்டகையைத் தீப்பிடிக்க வைக்கும் பேரன் – மகனிடம் அடிபடும் தந்தை – கணவன் மனைவிச் சண்டை….’ என, எழுபதுகளில் மிக விரைவாகப் பரவத் தொடங்கிய நகர்மயமாதல் வினையின் எதிர்விளைவான ‘கிராம வாழ்வின் சீரழிவுகள்’, அதன் அத்தனை விதமான சாத்தியப்பாடுகளோடும்கூடி ‘ஏறுவெயில்’ நாவலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நகர்மயமாதலின் மிகச்சாதகமான அம்சமாகச் ‘சாதி மேலாதிக்கம்’ உடைபடத் தொடங்குவதையும், ஓரளவுக்கு இந்நாவல் ‘பதிவு’ செய்துள்ளது. எனினும், நேர்நிலை அம்சங்களினும், எதிர்நிலைக் கூறுகளுக்கே நாவலில் முதன்மை அளிக்கப்பட்டுள்ளதையும் காண முடிகிறது.

‘ஊர் முழுக்க முளைக்கும் பைனான்சுகள் – காடு விற்றுக் காசு போடல் – வட்டிமேல் குட்டிபோடும் வட்டிக் கனவுகள்- பழக்கமாகும் ஆரவார வாழ்க்கை – முழுகிப்போகும் முதல்கள் – ‘தொழில்’ செய்யும் சக்கிலிச்சிகள் – பணம் கொடுத்துப் போய்வரும் கவுண்டப் பையன்கள் – சினிமாவுக்குப் போய் மீண்டு வந்து ‘நாடகம்’ போடும் சக்கிலியப் பையன் சக்திவேல் – வசை மழையாய் வந்து விழும் ‘கெட்ட கெட்ட வார்த்தைகள்’ – தாத்தாவின் சாவு – வளர்ப்பு நாயின் மரணம் – கடைசிக் காட்டையும் விற்றுக் கடனடைத்துக் காலனியில் வீடு வாங்கிக் குடியேறல்…….’ எனத் தமிழ் மண் சார்ந்த அனைத்துச் சித்திரங்களும் விசித்திரங்களும், காட்டிலிருந்து காலனிக்குப் பெயரும் ஒரு கவுண்டக் குடும்பத்தை முன்வைத்துப் ‘பொன்னையன்’ என்ற இளைஞனின் பார்வையிலிருந்து ‘நுண்மையாக’ விவரிக்கப்பட்டுள்ளன.

இந்த வாழ்க்கை இவ்வளவு இழிவாகவா இருக்கிறது? இந்த மனிதர்கள் இவ்வளவு அற்பமானவர்களாகவா இருக்கிறார்கள்? என ஓர் அதிர்வுணர்வைச் செயற்கையாக அல்லாமல் மிக மிக இயற்கையாகப் பெருமாள்முருகன் தம் நாவலில் எழுப்புகிறார். பதின்வயசுக் கோளாறில் பெண்ணுடல் தேடி இருட்டுப் பிரதேசத்தில் சேக்காளிகளுடன் ஒதுங்கும் பொன்னையக் கவுண்டன், அங்குத் தன்னை இடுப்பில் தூக்கிவைத்து வளர்த்த சக்கிலிச்சி ராமாயியைக் கண்டு, தன்னை அவள் பார்த்துவிடாதபடிக்குப் பின்னோடிப் போய் நழுவிவிடுகிறான். குழந்தைப் பருவத்தில் பாசத்தைத் தன்மீது தாய்போல் கொட்டிய ராமாயி, இப்போது காசுக்காகத் தன் உடலை விற்று ‘இருப்பை’த் தள்ள வேண்டியுள்ள இழிவைக் காணச் சகியாமல் குமுறும் பொன்னையனின் ரத்தக்கொதிப்பைப் பின்வரும் வாக்கியம்வழி அறியலாம். “எப்படி இருந்தவள், இன்றைக்குத் திருட்டுத்தனமாய் உடலை விற்றுப் பிழைக்கிற நிலைக்கு வந்துவிட்டாளே. யார் காரணம்? காட்டை எடுத்த கவர்ன்மென்ட்டா? இவர்களை உதறிவிட்டு ஓடிய நாங்களா? வேறுவேலை தேடிக்கொள்ள முடியாமல் போன அவளேவா? அத்தனையையும் மௌனமாய் ஏற்றுக்கொண்டு, காரணமாயும் அமைகின்ற குப்பாடியா? அவளை விட்டுவிட்ட புருஷனின் கையாலாகாத்தனமா? பிள்ளையின் வயிற்றுத் தேவையா?  ஏன் இப்படி ஆனாள்? ……….. ராமாயீ……… நீ எனக்கு என்னவாக இருந்தாய்? அந்த இருட்டினூடே என்னைக் கவனித்து இருந்தால், என்ன நினைப்பாய்? மகனுக்கு மடி விரிக்க வந்துவிட்ட விதி என்றா? இல்லை, சின்னக் கவுண்டருக்கு உடல் கொடுக்கும் பாக்கியம் கிடைத்ததே என்று சந்தோஷப்பட்டிருப்பாயா? அடிக்கடி வா என்றிருப்பாயா? உன் வறுமை உன்னை எப்படியும் நினைக்கத் தூண்டும்தான், எனக்கு உடல் கொழுப்பு….. கழிசடைகள் நக்கும் எச்சில் இலையா நீ? அத்தனை வறுமையா உனக்கு? எனக்குத் தெரியும். இந்தக் குளிர்ந்த நீரைப் பழிக்கலாம். உன்னைப் பழிக்க முடியாது….. எங்காவது வீட்டு வேலைக்குப் போயிருக்கலாமே நீ? சக்கிலிச்சியை யார் வீட்டு வேலைக்கு வைத்துக்கொள்வார்கள்? உனக்கென்று வேலையே இல்லாமல் போனதா? உன்னை ஆதரிக்கும் சக்தி எனக்கு இல்லாமல் போனதே. இங்கேயும் நீ சக்கிலிச்சிதான். ஆளுக்காரிச்சிதான். பண்ணயத்தில் கிடந்த அடிமைதான். அம்மா வெளாரில் அடிக்க அடிக்க மௌனமாய்த் தாங்க வேண்டியிருந்ததுதான். உனக்கு எது பிடித்திருக்கிறது? அடிமை வாழ்க்கையென்றாலும் அன்பும் பாசமும் தழைத்த அந்த வாழ்க்கையா? உடலைக் கொடுத்துவிட்டுப் பணத்தை வாங்கிக்கொண்டால் நீ யாரோ நான் யாரோ என்று பிரிந்தோடி இஷ்டப்படி இருக்கும் இப்போதைய வாழ்க்கையா? எதுவும் பிடிக்கவில்லையா உனக்கு? உன் விருப்பங்கள் என்ன? அதைப் பற்றியெல்லாம் யோசிப்பதே இல்லையா?”

‘அடிப்படையான மானுட உணர்வுகள்’ சில பல சொற்களாலோ, ஒரு நிகழ்வாலோ, சிந்தனை அரற்றலாலோ மீட்டப்படும்போதுதான் படைப்பெழுச்சி சாத்தியமாகிறது. இந்தப் படைப்பெழுச்சியால் வாசகர் மனம் அதிர்வுறுகிறது. இந்த அதிர்வால்தான், ஆதி அந்தமற்ற பெருவெளியில் கலப்புண்டு, மானுட வாழ்க்கையும்கூட அர்த்தப்படுகிறது. இத்தகைய அர்த்தத்தை ஓரளவுக்கேனும் சாத்தியப்படுத்துவதாக, மேற்கண்ட சித்திரிப்பைக் கூறலாம். எனினும், அரை நிலவுடைமைச் சமூகத்து வாழ்வை ‘அன்பும் பாசமும் தழைத்த வாழ்வாக’க் கொண்டாடுவதிலும், அரை முதலாளித்துவச் சமூகத்து வாழ்வை ‘இஷ்டப்படி இருக்கும் இப்போதைய வாழ்வாக’ச் சித்திரிப்பதிலும் ‘யதார்த்தவாத’ அரசியல் ஊடுருவியுள்ளதைக் குறிப்பிட்டுக் கடுமையாக விமர்சிக்கத்தான் வேண்டும். ‘அன்பும் பாசமும் தழைத்த வாழ்க்கை’ என்பது யாருக்கு? ராமாயியின் அன்பையும் பாசத்தையும் அறுவடை செய்துகொண்ட கவுண்டர் குடும்பம், பதிலுக்கு அவளுக்குக் கொடுத்தவை எவை? தின்று மீந்த மிச்சமும், வெளாரு விளாசலும், ‘சக்கிலிச்சி’ என்ற சாதி இழிவும்தானே! உடல் வியாபாரத்திற்குள் ராமாயி விழுந்துவிட்டது கொடுமையானதுதான்; ஆனால், அவளின் அந்தப் ‘பண்ணைய வாழ்வு’ அழிந்துவிட்டதற்காக வருத்தப்படுவதும் பொருந்தாதது இல்லையா? அது அழிய வேண்டியதுதான்; இதுவும் அழிய வேண்டியதுதான்; இவை இரண்டுமே முற்றிலுமாக அழிந்தால்தான் ராமாயிகளுக்குப் புதுவாழ்வு பிறக்க முடியும் என்பதுதானே இன்றைய சம காலத்தின் பார்வையாக இருக்க முடியும்? ‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்பதாகத்தான், ராமாயிக்கு ‘இவ்விரு வாழ்க்கையுமே’ என்ற உண்மையைப் புனைவில் மறைக்கத் தேவையில்லை!

இந்நாவலில், உள்ளூரில் ‘நாடகம்’ எழுதத் தெரிந்த ஒரே ஓர் ஆளாகக் காட்டப்படும் சக்கிலிய இளைஞனான சக்திவேல், கோவில் திருவிழாவுக்குக் கவுண்டப் பையன்களுடன் சேர்ந்து ‘நாடகம்’ போடுகிறான். நாடகத்துக்குத் தலைமை தாங்கி நடத்தும் ‘தலைவர்’ கே.கே.முருகய்யக் கவுண்டருக்குப் பிறர் போட்ட பழைய மாலையையே திரும்பப் போட்டு வாழ்த்திய குற்றத்துக்காகக் கவுண்டச்சாதி இளைஞர்களால் அடித்துதைக்கப்படுகிறான் சக்திவேல். அடுத்து வரும் ஆண்டுக்குக் கவுண்டப் பையன்களே நாடகம் எழுதிக்கொள்வதாகவும் தீர்மானமாகிறது. கடுமையாகத் தாக்கப்பட்ட சக்திவேல், “டேய்… சாதியச் சொல்லியாடா அடிக்கறீங்க? ஒருநாளக்கிச் சினிமாவுல பெரிய ஆளாயி உங்களையே கைகாட்டி நிக்க வெக்கல… நா எங்கப்பனுக்குப் பொறக்கல டோய்…..” எனச் ‘சுய மரியாதையுடன்’ சவால் விடுகிறான். அதற்குப் பதிலாகப் பின்வருமாறு மனம் புண்படும் வகையில் ‘கேலி’ செய்யப்பட்டுச் சக்திவேல்  பழித்துரைக்கப்படுகிறான். “‘இப்ப மட்டும் உங்கொப்பனுக்கா பொறந்த நீ? எங்கப்பனுக்கோ பாட்டனுக்கோ’ என்று கத்தி, ‘ஓய்’ என்று வாந்தி எடுக்கிற மாதிரி சிரித்தார்கள்”  எனப் பெருமாள்முருகன் எழுதுகிறார். இத்தகைய ஏச்சும் இழிவுபடுத்தலுமான வாழ்க்கைதான், அன்பும் பாசமும் தழைத்த வாழ்க்கையா எனக் கேள்வி எழுப்பாதிருக்க இயலவில்லை. இத்தகைய கடுமையான ஏச்சுப் பேச்சுக்குச் சக்திவேலிடமிருந்து எந்த ஒருபதிலும் வெளிப்படுவதாக நாவலில் காட்டப்படவில்லை. இங்குப் பிரதிக்குள் செயல்படும் யதார்த்தவாத ‘மௌனம்’ பொருத்தமானதாகத் தோன்றவில்லை.இவ்விடத்தில்தான் சக்திவேல் உரத்துப் பேசியிருக்கவேண்டும்.இங்கே சக்திவேல் பேசாதிருக்கும்போது, இந்த இழிவை அவன் ஏற்பதாகவும், பதிலுக்குப் பதிலாகச் சொற்களை அவன் வீசாததன்வழிக் கவுண்டர்களைச் சொற்களாலும் தொட்டுவிடமுடியாத தீண்டாமையைப் பிரதி உட்கொண்டிருப்பதாகவும் விமர்சிக்க இடமேற்படுகிறது. இந்த மெளனத்தைப் பெருமாள்முருகன் தவிர்த்திருக்கலாம்.

ஏறுவெயிலில் ஓரளவுக்கு விழிப்புற்ற சக்கிலியனாகப் புனையப்பட்டுள்ள சக்திவேலின் கோணத்திலிருந்து, யதார்த்தத்தில் நிலவும் சாதி வேறுபாட்டைக் குலைப்பதற்கான வலுவான எதிர்ப்புச் செயல்பாடு எதுவும், நாவலில் இடம் பெறுவதில்லை. அவனது மேடைப்பேச்சு வாயிலாகவும், அங்கங்கே தரப்படும் சிறுசிறு குறிப்புகள் மூலமுமே சக்திவேலைப் பற்றிய சித்திரத்தை வாசகர்கள் தீட்டிக்கொண்டாக வேண்டியுள்ளது. இந்நாவலில் சக்திவேலின் கருத்திலிருந்து ஓர் அத்தியாயமாவது எழுதப்பட்டிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்கவியலவில்லை.‘ஏறுவெயில்’ நாவல் முழுவதும் ‘பொன்னையன்’ எனப்   பிறரால் விளிக்கப்படும் கவுண்ட இளைஞனின் வாய்மொழியாகவே, அவனை மையப்படுத்தியே நகர்த்தப்பட்டுள்ளது. ‘பொன்னையன் – சக்திவேல்’ என்ற இருவரிடையே நெருக்கமான ஒரு கலந்துரையாடலோ, கருத்து மோதலோ, சக்திவேல் பற்றிப் பரிவாகச் சிறிய அளவிலேனும் பொன்னையன் யோசித்து அவனைப் புரிந்துகொள்ளத் தன்னாலான முயற்சிகளைச் செய்வதாகவோகூட,  நாவலில் எவ்விதக் குறிப்புமில்லை.

எழுபதுகளிலும் எண்பதுகளிலும் தமிழ்நாட்டுக் கிராமங்கள் எவ்வாறு இருந்தன என்பதற்கான சமூக ஆவணமாகக் குறிப்பாகக் கொங்கு வட்டாரம் சார்ந்த ‘யதார்த்த நிலைமைகளின்’ தத்ரூபமான ஒரு பதிவாக, ‘ஏறுவெயில்’ அமைகிறது. வயசாளிகளின் பார்வையில் அல்லாமல்,  இளைஞன் ஒருவனின் பார்வையிலிருந்து இந்நாவல் விரிந்து செல்வதும், மிகவும் குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.ஆனால், தன் கல்லூரிப் படிப்பிற்குள் நுழைபவனாகக் காட்டப்படும் அந்த இளைஞன், சாதியுடன் சிறிதும் முரண்படாதவனாகவும், இடதுசாரிச் சிந்தனைகள் பற்றிய ஒருமேலோட்டமான அறிமுகம்கூட இல்லாதவனாகவும் காட்டப்படும் அந்தக் கள ‘யதார்த்தத்தை’த்தான் நம்மால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இந்நாவலில் வரும் பெண்கள், வலுவற்ற பாத்திரங்களாகப் புனையப்பட்டுள்ளதும் விமர்சனத்துக்குரியதாகும். குறிப்பாக ‘அம்மா’ பாத்திரம் எதிர்மறைப் பண்புடனும், ‘அப்பா’ பாத்திரம் பொன்னையனின் அனுதாபத்திற்கு உரியதாகவும் அமைவதைச் சுட்டிக் காட்டித்தானாக வேண்டும். பெரும்பாலும் ‘கவுண்டர் x சக்கிலியர்’ என்ற சமூக முரணைக் ‘கவுண்டர் – சக்கிலியர்’  எனச் சமதளத்தில் வைத்துக் காணப் பெருமாள்முருகன் பெருமுயற்சி செய்துள்ள போதிலும், குறிப்பிட்ட மிகச்சில இடங்களில், கவுண்டர்களைச் சார்ந்தே அவர் வாழ்க்கைப் பார்வை வெளிப்பட்டுள்ளதையும் மறுப்பதற்கில்லை.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. பொதுபுத்தியின் மனக்கோணலை நிமிர்த்தும்  'கழிப்பறையின் கிரகப்பிரவேசம்' :பெருமாள்முருகனின் சிறுகதைகள்: கல்யாணராமன் 
  2. கங்கணம் (2007) : பாடு பழைமை பேணும் புனைவு : கல்யாணராமன்
  3. சமூகப் பொறுப்புணர்வின் சாட்சியம்:நிழல் முற்றம் (1993) : கல்யாணராமன்
  4. யதார்த்தவாதத்தின் போதாமையும் ஆவணப்பதிவின் நம்பகத்தன்மையும் - கல்யாணராமன்
  5. மாதொருபாகன் (2010) : திசைதிருப்பப்பட்ட பிரச்சினை =:கல்யாணராமன்