பெருமாள் முருகன் படைப்புலகம் -4

இச்சமூகத்தில், குடும்பம் என்னும் ‘சுயநலம்’ பேணும் அமைப்பு, அவ்வளவு எளிதாக அசைக்கப்பட முடியாத வகையில், சாதி மத இன மொழி பேதங்களையும் உள்ளடக்கிய (inclusive) ஒன்றாக, மிக மிக வலிமையாகக் கட்டப்பட்டுள்ளது. இதில் சாத்திரம் சடங்குகள் சம்பிரதாயம் என்பனவற்றுக்கும் பெரும் பங்குண்டு. எனினும், இங்குப் பிறக்கும் குழந்தைகளின் நல்வாழ்விற்கான பாதுகாப்பரணாக, இக்குடும்பமே அமைகிறது. இக்குடும்ப அமைப்புடன் இணக்கமாகப் பொருந்திப் போகவே முடியாத ஆண்களாலும் பெண்களாலும் (இதற்கு வறுமை, இயலாமை, முயலாமை, கயமை, பொருந்தாமை, பிடிக்காமை, பொறுப்பேற்காமை, ஒன்றாமை, நோய்மை, வன்முறை, விழைவு வெறி, தற்காதல், மீறல், பிறழ்வு, முறிவு, திரிதல்…. எனப் பல்வேறு வகைக் காரணங்கள் இருக்கலாம்). அன்றாட வாழ்வியல் செயல்பாட்டில் – நடைமுறை ஒழுங்குகளில் – பற்பல பிளவுகளும் சிதைவுகளும் தோன்றுகின்றன. இவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, மிகச்சிறு வயதிலேயே குழந்தைகள் உதிரிகளாகின்றனர். உழைக்கும் மக்கள் சமூகத்தில்,இது பெரும்பாலும் குடிவெறியாலும் வறுமையாலுமே ஏற்படுகிறது. வாழ்க்கையின் எதிர்பாராத விபத்துகளைச் சமாளித்துத் தாங்கிப் பிடித்து முன்னுக்கு நிற்கப் ‘பொருளாதார வலிமை’ அவசியமாகிறது. அதுவும் இல்லாதபோது, குடும்பங்களிலிருந்து குழந்தைகள் உதிரிகளாவதைத் தவிர்ப்பதற்கில்லை. அன்பையும் அரவணைப்பையும்கூடப் பால்யத்திலேயே இழக்கும் இச்சிறார்கள், தம் வாழ்வைத் தம் உழைப்பால் தாமே கட்டியெழுப்பும் அன்றாட நெருக்கடிக்கு உள்ளாகின்றனர். குடும்பச் சுமையும் இவர்கள் மீது தண்டனையாக விழுகிறது. இவ்வாறு ‘வாழ்க்கை தொடங்கும் முன்பே’ சிதைக்கப்பட்டுவிடும் சிறார்களை மையப்படுத்திப் பெருமாள் முருகன் எழுதிய நாவல் நிழல் முற்றமாகும். இது சினிமாக் கொட்டகைகளைச் சார்ந்து சீரழியும் பதின்பருவப் பையன்களின் ‘உயிர் வாழ்க்கைப்’ போராட்டத்தைத் துண்டுபட்ட சம்பவக்கோவைகளினூடே காட்சிப்படுத்த முனைகிறது.

எண்ணற்ற அதிர்வலைகளைப் படிப்போரிடையே இந்நாவல் எழுப்புகிறது. உண்டு உறங்கி இடர் செய்து செத்திடும் கலகப் பூச்சியான மானுடன், அதற்கான வாழ்விட வெளியும்கூட மறுக்கப்பட்டு, என்ன நிகழ்கிறது என்பதையேகூட அறியாதவனாகித் தொடர்ந்து சுரண்டப்பட்டுப் ‘பால்யம்’ சிறுத்துப் போகுமாறு சிதைக்கப்படுகிறான். பிறர் நிம்மதிக்காகவும் அவர்களின் ஏற்றத்துக்காகவும் மட்டுமே, தன்னுடைய வாழ்வைப் பதின்பருவத்தில் அவன் பலியிட வேண்டியுள்ளது. இவ்வாறு பதின்பருவச் சிறார்கள், தம்மிச்சையான வாழ்வின் இயக்கத்திலிருந்து முற்றுமுழுதாகத் துண்டிக்கப்பட்டுத் தண்டிக்கப்படுகிறார்கள்; ஒருபோதும் பெருவிரிவை அறியமுடியாதவாறு தடுக்கப்பட்டு இருள்வெளிக்குள் முடக்கப்படுகிறார்கள். இந்தச் சித்ரவதை வாழ்வைக் குரலெழுப்பாத அடங்கிய ஒரு தொனியில், ஆனால் வாசகர்களைத் தொந்தரவு செய்து அவர்களின் நிம்மதியான உறக்கத்தைப் பறித்துக்கொள்ளும் கதை மொழியில் ‘நிழல் முற்றமாக’ப் பெருமாள்முருகன் பதிவுசெய்துள்ளார். இந்த யதார்த்தப்பதிவில் நேர்மையும் துணிவும் இருக்கின்றன; ஆற்றாமையும் கோபமும் உள்ளன. அவ்வளவாகத் தெரிய வராத ஓர் உலகத்தை – எண்பதுகளின் ‘வளர்ந்து பெரிதாகும்’ ஊர் ஒன்றின் சினிமாக் கொட்டகைச் சூழலை – வதைபடும் பருவ வயதுப் பையன்களின் அவல இருப்பை – பூதன், நடேசன், மணி, கணேசன், வத்தன், சக்திவேல், பெரியசாமி, சண்முகன், விசுவன் ஆகியோரின் அன்றாட உயிர் அவத்தைப் பாடுகளாகப் பெருமாள்முருகன் புனைந்துள்ளார். இப்புனைவில் உள்ளுறை மௌனங்களும், வெளிச்சொல்லாமலேயே விடப்படும் இடைவெளிகளும், வாசித்துணர்ந்து அவிழ்க்க வேண்டிய முடிச்சுகளும், சிதைவுண்ட காட்சிவெளிகளும் அதிகம். பண்ணை அடிமைகளுக்குப் பதிலாகத் தியேட்டர் உதிரிகளாகச் சிறுத்துப்போகும் வளரிளம் பருவத்துச் சிறார்களின் அற்ப ஆறுதல்களையும், வாழும் வெறியால் உந்தப்படும் பிறழ் நடத்தைகளையும், பிறர் கைப்பாவைகளாகிச் சிதையும் நசிவுகளையும், விடுபட இயலாமல் திரும்பத் திரும்பச் சூழ்நிலைக் கைதிகளாய்ச் சிக்கிக்கொள்ளும் புற நெருக்கடிகளையும், வன்முறையின் எதிர்விளைவான தெருமொழியில் ‘நிழல் முற்றம்’ உக்கிரமாகப் பதிவு செய்துள்ளது.

‘சோடாவும் தின்பண்டங்களும் விற்றல் – பந்தயம் வைத்துச் சீட்டாடல் – டிக்கெட் கிழித்தல் – மேனேஜரிடம் திட்டும் அடியும் வாங்கல் – தாயச் சூதாட்டம் – சோடாக் கடை – பீடாக் கடை – டீக்கடை – போண்டாக் கடை – எல்லா முதலாளிகளாலும் சுரண்டப்படல் – பட்டாணியும் பரோட்டாவும் தின்று பசியாறல் – மாத்திரை மற்றும் கஞ்சாத் தூள் போடல் – கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொள்ளல் – அடித்துதைத்துக் கொள்ளல் – பொணமாட்டம் தூங்கல் – சுற்றிலும் மல்நாற்றமடிக்கும் தண்ணீர்த் தொட்டியில் முகம் கழுவல் – ‘பொம்பளச் சட்டி’ முத்தம்மா – கூட்டுகிறவளை அடைய நடேசன் துடித்தல் – சோடாக் கடைக்காரரின் மகன் முத்துவின் இழிவு படுத்தல்கள்….’ என விரிகிறது ‘நிழல் முற்றம்’ காட்டும் ‘தியேட்டர் உலகம்’. இந்த உலகத்தில், அன்றாடப்பாடுதான் வாழ்வின் அறத்தைத் தீர்மானிக்கிறது. வாழ்வதற்குப் பயன்படும் அனைத்துமே அறம்தான் இங்கு. இதைப் படிப்பவர்க்குச் சமூகக் கோபம் பொங்கும் வகையில், இந்நாவலில் பல சம்பவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. திரையில் விரியும் உலகம் ஒன்றாகவும்,அதைக் காணும் மக்களின் உலகம் வேறு ஒன்றாகவும், வியாபாரிகள் மற்றும் முதலாளிகளின் உலகம் பிறிது ஒன்றாகவும், இவர்களிடம் சிக்கிக்கொண்டுள்ள உதிரிச்சிறார்களின் உலகம் பிடிப்பெதுவுமற்ற நிழல்வெளியாகவும் தோன்றித் திரிந்து உருமாறிச் சிதைந்து போவதைப் பின்வரும் கதைக்குறிப்புகள்வழி அறியலாம்.

‘கணக்குப் பிசகிய சோடா பாட்டிலைத் திருடி விற்றுத் தின்னல் – சந்தைக்குச் சென்று சுற்றல் – தென்னங்கள் குடித்து மகிழ்தல் – கிணற்றில் மூழ்கிக் குளித்துத் திளைத்தல் – தாயை விட்டு வேறொருத்தியோடு ஓடிப்போன பூதனின் தந்தை – குட்டம் பிடித்த பிறகும் பாசமாய் மகனைத் தேடிவந்து பணம் தரும் சக்திவேலின் அப்பன் – தசைவெறிக்குச் சக்திவேலைப் பயன்படுத்தும் படத்துக்காரன் – பழங்கதை பேசும் வாட்ச்மேன் தாத்தா – பகல் முழுதும் அஞ்சல் துறையிலும், மாலையில் சினிமாக் கொட்டகையில் டிக்கெட் கொடுக்கும் வேலையும் செய்யும் தபால்காரர் – சினிமா க்யூவில் நிற்பவனிடம் பிக்பாக்கெட் அடித்தல் – நியாயம் கேட்பவனை அடித்து உதைத்தல் – நடேசனுக்குச் சோறும் ரசமும் கொண்டு வரும் பாட்டி – நன்றி விசுவாசமில்லாமல் (காசு கொடுக்காமல்) அவளைத் துரத்தும் நடேசன் – பரிந்து பாட்டிக்கு உதவும் சக்திவேல் – பாட்டியின் பெண்ணைக் குறிவைக்கும் விசுவன் – ஊரெங்கும் போஸ்டர் ஒட்டல்…’ என, ‘நிழல் முற்றம்’ காட்டும் உலகம் குரூரமானது. எந்திரங்களிடமிருந்து மனிதச் சிறார்களை வேறுபடுத்தும் விருப்பமில்லாத கடை முதலாளிகளிடம் மாட்டிக்கொண்டு, ‘நிழல் முற்றத்தில்’ வரும் சிறார்கள் மூச்சுத் திணறுகிறார்கள். இதிலிருந்து விடுபட இவர்களுக்கே வழியே இல்லையா? என்ற கேள்விக்குப் பெருமாள்முருகன் அளிக்கும் பதில், ‘இல்லை’ என்பதுதான். இவர்கள் திருடுமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்; வன்பாலுறவுகளுக்கு வற்புறுத்தப்படுகிறார்கள்; எதையேனும் செய்து உயிர் பிழைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்; அடிமை மனோபாவத்துக்குப் பழக்கப்படுத்தப்படுகிறார்கள்; இவர்களை இப்படி எந்திரங்களாகச் சித்திரிப்பதன்றி, இதிலிருந்து இவர்களுள் மிகச் சிலராவது வெளியேறி மனிதர்களாகச் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பது பற்றி நாவல் எதுவும் பேசுவதில்லை! யதார்த்தப் பதிவாக அமைவதன்றி, விமர்சன யதார்த்தப் புனைவாகச் சிதைவுகளுக்கிடையிலும் ‘நம்பிக்கையை’ அழித்துவிடாத நாவலாக ‘நிழல் முற்றம்’ உருப்பெறவில்லை.

‘அடிக்கடி மாறும் ‘பசையான’ ஆண்களுடன் சினிமாவுக்கு வரும் ‘கருவாச்சி’ – அவளைப் பீடாக் கடைக்காரருக்குக் கூட்டிவைக்கும் சக்திவேல் – அவனுக்கும் அவள் முத்தமளித்துச் சூடாற்றல் – அவள் கூட்டிவந்த குடிகாரன் மயங்கிக் கிடத்தல் – அவன் பாக்கெட்டில் கைவிட்டுச் சக்திவேல் ஏமாறல் – பீடாக் கடைக்காரரும் கருவாச்சியும் இணைவதைத் திருட்டுத்தனமாய்க் கண்டுரசிக்கும் ‘சினிமாக் கொட்டகை’ப் பையன்கள் – அதைக் கண்டுபிடித்து உதைக்கும் பீடாக் கடைக்காரர் – அவரின் சின்னஞ்சிறு குழந்தை சக்திவேலிடம் காட்டும் பாசம்- பந்துபோலக் குழந்தையைச் சக்திவேல் மேலே தூக்கிப் போட்டுப் பிடித்து விளையாடல் – பார்த்தவுடன் பிடரியில் அறைந்து சாத்தும் பீடாக் கடைக்காரர் – சக்திவேலுக்காக அழும் குழந்தை – சினிமா பார்ப்பவன் செருப்பைச் சக்திவேல் திருடல் – அதைச் சோடாக் கடைக்காரர் கொண்டு போதல் – அவருக்கும் அவர் பங்காளிக்குமான பாதைத் தகராறுக்குத் ‘தியேட்டர் பசங்க’ உதவச் செல்லல் – அங்கு நடேசன் கொல்லப்படுதல் – இறுதியாகச் சோடாக் கடையில் திருடி விட்டுப் பூதனும் வத்தனும் ஓடிப் போதல் – நண்பர்களை இழந்த பின்னும், எதுவும் செய்ய இயலாமல் அழும் சக்திவேல் – மீட்சிக்கு வழியற்றுத் தியேட்டருக்கு மீண்டும் அவன் இரையாதல்—-’ என, இப்படிச் சினிமாக் கொட்டகையைக் களமாக வைத்து விரியும் ஓர் உலகம் – வெறும் பெயருக்குத்தான் இது ஒரு நிழல் உலகம்; இந்தக் கொட்டகையைச் சார்ந்துள்ள விடலைப் பையன்களுக்கு இதுதான் நிஜமான உலகமே! நிழலோ நிஜமோ எல்லாமே அவர்களுக்கு ஒன்றுதான். இரண்டிலுமே ‘வாழ முடியாத ஒவ்வாமைதான்’ அவர்களின் மீது பெரும்பாரமாகச் சுமத்தப்பட்டுள்ளது. இவர்களின் ‘வாழ்க்கை’ ஏன் இப்படியானது? இதற்கான காரணங்கள் எவை? இவ்வினாக்களைப் பெருமாள்முருகன் வெளிப்படையாக இந்நாவலில் விவாதிக்காவிட்டாலும், குறிப்பாகச் சிக்கலின் மையத்தைத் தொட்டுக்காட்டத்தான் செய்கிறார். சிக்கலைச் சுட்டித் தீர்வைப் பொது வாசகர்களிடமே விட்டுவிடுகிறார். எந்த நிலையிலும் இந்நாவல், பிரச்சாரம் செய்ய முனைவதில்லை. சகித்துக்கொள்ள இயலாத ஓர் இருப்பின் அவலத்தைக் குறிப்புணர்த்திச் சிறிது சிறிதாகச் சிதைக்கப்படும் ‘சிறார் உலகத்தை’க் கவனப்படுத்த மட்டுமே செய்கிறது. எனினும், இத்தகையதான ஒரு யதார்த்தச் சித்திரிப்பின்போதும், இந்நாவலில் வெளிப்படும் ‘நம்பிக்கை வறட்சி’ விமர்சனத்துக்குரியதாகும்.

“சிரிக்கைல நீ ஜொலிக்கறைடா சத்தி…. கொட்டாயில இருக்கிற பசங்கள்லயே உன்னயத் தாண்டா எனக்கு ரொம்பப் புடிச்சிருக்குது…. சத்தீ…. எம் பொண்டாட்டி கைல சோறு தின்னு, எத்தன நாளாச்சு தெரீம்டா…. ரண்டு மாசம்டா… பள்ளிப் பளையங் கட்டித் திருச்செங்கோட்டுல இருந்து ஊர் ஊராச் சுத்தறன்டா நான்…. ஊடு வாச… பிள்ள குட்டி ஒண்ணயும் பாக்கறதுக்கில்ல…. இது ஒரு பொழப்பா… நாற பொழப்புடா… எவன்டா இப்படி மாடாட்டம் வேல செய்வான்… இத்தனைக்கும் பொச்சுத் தொடக்கக் கூட ஆவாத சம்பளம்… எந்தலையெழுத்துடா… எம் பொண்டாட்டி மூஞ்சியக்கூடச் செரியாப் பாக்கலீடா… ஒரு முத்தங்கூடக் குடுக்கலீடா… டே சத்தீ… நெசமேச் சொல்றன்டா… எம் பொண்டாட்டி மூஞ்சியாட்டமே உனக்குடா… குண்டு மூஞ்சி… பொது பொதுன்னு கன்னம்டா… லேசா வந்திருக்குதே மீச… அது மட்டும் இல்லாட்டி நீ அவளே தான்டா…. சத்தி… எங்கண்ணு… டேய்….” என, இவ்வாறுதான் தியேட்டரில் படத்துக்காரனுக்குச் சக்திவேல் இரையாகிறான். இங்குச் சக்திவேலுக்காகக் கண்ணீர் சிந்துவதா? இந்தப் படத்துக்காரனுக்காக நாம் பரிதாபப்படுவதா? இல்லை, இது கண்டு அவன் மீது கோபப்படுவதா? பெருமாள்முருகனின் சொற்களிலேயே விவரிப்பதானால், ‘விலக்கவே முடியாத இருள்’தான் இது. இந்த இருட்டைக் கசப்பைத் துன்பத்தைச் சீரழிவைப் பொறுப்புணர்வுடன் சித்திரிக்கும் புனைவாக்கமாக, ‘நிழல் முற்றத்தை’க் காணலாம். எனினும், எவ்வளவுதான் ‘நடைமுறை வாழ்வியல் இதுதான்’ என்று நாம் வாதிட்டாலும், இக்குழந்தைச் சிறார்களுக்கு மீட்சியே இல்லை என்ற தொனிப்பொருள் தோன்றும்வகையிலான சித்திரிப்பைப் பெருமாள்முருகன் தவிர்த்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.ஏனெனில், எப்போதும் ஓர் எதிர்மறைப்பார்வையை அழுத்திக்கொண்டே இருப்பதும்கூட, ஒருவகையில் படைப்பிலக்கியத்தின் தன்னியல்பான மலர்ச்சியைத் திட்டமிட்டுத் திசைமாற்றுவதுதானே! இப்படித் திசைமாற்றினாலும், இந்த நாவல் ஒரு முக்கியப் பணியைச் செய்திருக்கிறது. பதின்பருவத் தொழிலாளர் பிரச்சினைகளைப் பற்றித் தமிழில் செய்யப்பட்டுள்ள ஆகக் காத்திரமான புனைவுப் பதிவாக, இந்நாவல் பங்களித்திருக்கிறது. இது பெருமாள்முருகன் என்ற யதார்த்தவாதப் படைப்பாளியின் சமூகப் பொறுப்புணர்வின் சாட்சியமாகவும் வெளிப்பட்டிருக்கிறது. யதார்த்தவாதம் வரையறுக்கும் குறிப்பிட்ட சில எல்லைகளுக்குள்ளேயே உறுதியாக நின்றுகொண்டு, தம் மனிதநேயப் பார்வையைக் குறிப்பாக மட்டுமே புலப்படுத்தியுள்ளது இப்புனைவு  என்பதைக் குறையாகக் காண்பதற்கில்லை.ஆனால், இந்நாவல் மட்டும் ஒரு விமர்சன யதார்த்தவாதப் பதிவாகப் போராட்டக் குணத்துடன் கூடிய எதிர்ப்புணர்வின் கலைப் பிரதியாக உருப்பெற்றிருந்தால், அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்திருக்கும் என்ற ஏக்கப் பெருமூச்சையும் தவிர்த்துவிடுவதற்கில்லை.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. பொதுபுத்தியின் மனக்கோணலை நிமிர்த்தும்  'கழிப்பறையின் கிரகப்பிரவேசம்' :பெருமாள்முருகனின் சிறுகதைகள்: கல்யாணராமன் 
  2. கங்கணம் (2007) : பாடு பழைமை பேணும் புனைவு : கல்யாணராமன்
  3. யதார்த்தவாத மெளனம் - கல்யாணராமன்
  4. யதார்த்தவாதத்தின் போதாமையும் ஆவணப்பதிவின் நம்பகத்தன்மையும் - கல்யாணராமன்
  5. மாதொருபாகன் (2010) : திசைதிருப்பப்பட்ட பிரச்சினை =:கல்யாணராமன்