பெருமாள் முருகனின் படைப்புலகம் -2

கூளமாதாரி (2000) :

    ஆடு மேய்க்கும் சக்கிலியச் சிறுவர்களின் தனிமைப்பாடுகளைப் பதற வைக்கும் உயிர்த் துடிப்புள்ள பதிவுகளாகப் புனைந்துள்ள நாவல் ‘கூளமாதாரி’. இந்நாவலிலும்,     ‘ஏறுவெயில்’ போலவே, ‘கவுண்டர் – சக்கிலியர்’ என்ற இரு சமூகத்தாரின் வாழ்வுச் சிக்கல்களும், கூளமாதாரியிலும் துல்லியமாகப் பதிவு பெற்றுள்ளன. காலங்காலமாகக் காடுகள் கவுண்டர்களுடையவை; இந்தக் காடுகளில் பண்ணயத்துக்கு உழைப்பவர்கள் சக்கிலியர்கள்; இவர்களால் கவுண்டர்களை எதிர்க்க இயலாது; கவுண்டர்களாலோ இந்தச் சக்கிலியர்களை விலக்கிவிட்டு எதையும் செய்ய இயலாது. இவ்வகையில், கவுண்டர்களின் காடுகளைச் சார்ந்தே சக்கிலியர்களின் ‘அன்றாடப் பாடு’ அமைவதைப் போலவே, சக்கிலியர்களின் உழைப்பைச் சுரண்டித்தான் கவுண்டர்களின் வாழ்வும் உள்ளது என்பதைக் கூளமாதாரிவழிப் பெருமாள்முருகன் காட்டுகிறார்.

    புழுதி, கொழிமண், வறள் என மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ள இந்நாவல், ஏறுவெயிலுக்கு முற்பட்ட ஒரு காலத்தைச் சித்திரிப்பதாகும். இதில் வரும் கவுண்டர் பையன் செல்வனின் நீட்சியை ஏறுவெயிலில் வரும் பொன்னையன் மற்றும் அவன் அண்ணனிடத்தும், ஓரளவுக்குக் காணலாம். ஏறுவெயில், கூளமாதாரி, கங்கணம் என்ற மூன்று நாவல்களிலுமே, பனையேறியாகக் ‘கந்த மூப்பன்’ சுட்டப்படுகிறான்; ‘காடைக் கூட்டம்’ பற்றிப் பேசப்படுகிறது; ஒரு குறியீட்டுப் பாத்திரம்போல ‘நாய்’ வருகிறது. இந்த நாவல்களின்  ‘கதைக் களம்’ பொது என்றாலும், ஒரே களத்தின் வெவ்வேறு வகைப்பட்ட சித்திரிப்புகளாகப் புனையப்பட்டுள்ளமையால், தம்முள் இவை நுட்பமாக வேறுபட்டுமுள்ளன.

    நிழல் முற்றத்தில் எவ்வாறு சினிமாக் கொட்டகைப் பையன்களின் உலகம் பதிவு பெற்றுள்ளதோ, அதே அளவுக்குச் செறிவாகவும் விரிவாகவும், கூளமாதாரி நாவலில் கூளையன், வவுறி, மொண்டி, செவிடி, நெடும்பன், செவிடியின் தங்கச்சி, வவுறியின் அண்ணன் என ஆடு மேய்க்கும் சிறார்களின் உலகம் சித்திரிப்புப் பெற்றுள்ளது. எட்டு முதல் இருபது வயதுக்குட்பட்ட இளந்தளிர்களின் வாழ்விருப்பைச் சித்திரிப்பதில் தனித்திறனுடன் பெருமாள்முருகன் தொழிற்பட்டுள்ளதற்குக் கூளமாதாரியும் நிழல் முற்றமும் சான்றுகளாகின்றன. ஏறுவெயிலிலும், பொன்னையன் மற்றும் ‘திருவிழா நாடகம்’ போடும் இளைஞர்கள்வழி, இதே சிறார் உலகத்தின் சற்று முதிர்ந்த பதிவைக் காணலாம். ‘கூளமாதாரி’ காட்டும் ‘ஆடு மேய்க்கும்’ பிள்ளைகளின் உலகம், பொது வாசகரிடம் ஒரு திடுக்கிடலையும் பதற்றத்தையும் ஏற்படுத்துவதாகும். பரிவையும் கண்ணீரையும் கோருவதாகும். நாட்டுச்சிறையைப் போலக் காட்டுச்சிறையாக விரியும் உலகம் அது. புற நெருக்கடிகளால் சூழப்பட்ட அந்த உலகத்திலும்கூடச் ‘சிறிது நேர இளைப்பாறல்களோடும் –  மனச்சோர்வை விரட்டியடிக்கும் புதுவிளையாட்டுகளோடும் – இயற்கையளிக்கும் ஆசுவாசங்களோடும் – கூடிப் பகிர்ந்துண்ணும் பரவசங்களோடும்’, ஏதோ ஒரு நம்பிக்கையுடனும்தான் அவர்களும் வாழ்வை எதிர்கொள்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு நாளும் அவர்களின் நம்பிக்கை சிதறடிக்கப்படுகிறது; அவர்களின் ஒவ்வோர் அசைவும் கண்காணிக்கப்படுகிறது; மேலதிகாரம்வழித் தொடர்ந்து அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள்; நாளடைவில் ஆடு ஓட்டும் எந்திரங்களாக்கப்படுகிறார்கள். இந்த அவலத்தைத்தான், நெஞ்சுருக்கும் கதைமொழியில் ‘கூளமாதாரி’ பேசுகிறது.

    கதையல்லாத கதையாகக் ‘கூளமாதாரி’ புனையப்பட்டுள்ளது. இக்கட்டுரையில், அதன் கதையமைப்பின் அடிப்படையில், இதை வாசிக்காதவரும்கூடத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்காகப் பின்வரும் ‘விரிவான கதைக் குறிப்புகள்’ அளிக்கப்படுகின்றன. இக்குறிப்புகள் விரிக்கும் கதைச்சித்திரம்வழிக் கூளமாதாரியின் சாரத்தை ஒருவாறு உள்வாங்கிக்கொள்வது எளிதாகலாம். ‘ஆளுக்காரப்பையனாய்க் காட்டில் ஆடுகளோடு அவதிப்படும் கூளையன் – கட்டுத்தரைச் சாணியை அள்ளிவிட்டுக் காட்டுக்கும் ஆடு ஓட்டி வரும் வவுறி – ஒண்டியாய் ஓரியாய் ஆடு மேய்க்கும் வவுறியின் அண்ணன் சொரக்காயன் – நொட்டுச்சொல் கூறித் தாறுமாறாய் வவுறியை ஏசும் கவுண்டச்சி – வவுறியின் கன்னத்தைக் கிள்ளி நிமிண்டும் கவுண்டர் பையன் – நோயாளியான கவுண்டச்சியின் குழந்தையைக் கணமும் நீங்காமல் இடுப்பில் சுமந்தபடி, கூட்டிப் பெருக்கிப் பாத்திரமும் கழுவி வைத்துப் பிறகு காட்டுக்கும் வரும் செவிடி – படுத்த படுக்கையாய்க் கிடக்கும் பெரிய கவுண்டரின் மல மூத்திரத்தை எடுத்துக் கொட்டி விட்டுச் சுட்டெரிக்கும் உச்சி வெயிலில் ஆடு ஓட்டி வரும் நெடும்பன் – கவுண்டர் வீட்டு வேலையும் வெளிவேலையும் பார்த்துவிட்டு, நேரம் பிந்திப் ‘பெரும்பட்டி’ ஓட்டி வரும் மொண்டி – பெரிய மனுஷியாகிப் பண்ணயத்திலிருந்து தப்பிவிடும் செவிடிக்குப் பதிலாக வந்து சிக்கிக்கொள்ளும் அவள் தங்கச்சி பொட்டி – இவர்களை அதிகாரம் செய்தும், ஏசி இழிவுபடுத்தியும், அதட்டி விளையாடியும் பொழுது போக்குவதற்காகப் பள்ளிக்கூடம் விட்ட பிறகான மாலைகளில் சில போது வரும் கவுண்டர் வீட்டுப் பையன்கள்… (செல்வன், மணி, குஞ்சாள்)’. இவர்களே கூளமாதாரியின் கதை மாந்தர். இவர்களோடு, இவர்களின் ‘கவுண்டச் சாமிகளையும்’ பாத்திரங்களாக வைத்துத்தான் ‘கூளமாதாரி’ புனையப்பட்டுள்ளது.கவுண்டர்கள் சாமிகள்; சக்கிலியர்கள் ஆசாமிகள்கூட இல்லை என்ற யதார்த்தத்தோடேயே இவர்கள் அன்றாடம் உழன்றுகொண்டுள்ளார்கள். இப்படிப்பட்ட யதார்த்தத்திற்குள்ளும், கூளையனுக்கும் வவுறிக்கும், மொண்டிக்கும் செவிடிக்கும், அவரவர்களுக்கேயான ஓர் உலகமுள்ளது. இந்த மிகச்சிறிய உலகத்தின் ‘பங்கு பெறாத’ பார்வையாளனாக நெடும்பன் இருக்கிறான். மேயக்கூடாததை மேய்ந்து ஆடு செத்துப்போனால்,கவனக்குறைவால் ஆடு களவாடப்பட்டால், நோயிலோ பிரசவ அவஸ்தையிலோ தானாகவே ஆடு இறந்துவிட்டால்… எப்படியாயினும் இவர்கள் பாடு திண்டாட்டம்தான். இவர்களுக்கு இன்னுமோர் ஆபத்து, இவர்களைத் தேடி வந்து ஏசி வதைக்கும் கவுண்டப்பையன் சாமிகள்!

    ‘ஆடையைக் கழற்றி வைத்துவிட்டுப் பேய் மழையில் நிர்வாணமாக நனையும் மொண்டி – அவன் சாமர்த்தியத்திற்காகச் சாமியார் கற்றுத் தரும் பேயைக் கட்டும் மந்திரம் – இக்கதையைச் சொல்லிப் ‘பாடம்’ போட்டுப் பிறரிடம் மொண்டி பெறும் மரியாதை – சக ஆடோட்டிகளை ஏவி மகிழும் அவன் அதிகாரம் மற்றும் அழும்புகள் – பனங்கிழங்கு பொறுக்கிச் சாயபுவிடம் விற்றுப் பணம் (ஐம்பது ரூபாய்) சேர்க்கும் கூளையன் – அதைப் பெருந்தன்மையுடன் அனுமதிக்கும் அவன் ‘கவுண்டச் சாமி’ – பெரிய கவுண்டருக்குப் ‘பீ மூத்திரம்’ அள்ளக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமெனக் கூறி, நெடும்பனைத் தேற்றுவதற்கு முனையும் அவனின் பாட்டி – இன்னொருவனை மணந்துகொண்டு, அதே ஊரில் வாழும் நெடும்பனின் அம்மா – தொடுதல், தலைதட்டி,  கல்லெடுப்பான், அச்சாங்கல், கிணற்றில் மூழ்கிக் குளித்தல்… எனும் விளையாட்டுகள் – பகிர்ந்துண்ணும் கல்லக்காய், நுங்கு, இளநீர், வெள்ளரி, பனம்பழம், கள் மற்றும் களி, கம்மஞ்சோறு, நெல்லாஞ்சோறு…. – செம்முனியிடமிருந்து கூளையனைப் பாதுகாக்கும் ‘வீரன்’ என்கிற கிடா ஆடு – முனியப்பன் பொங்கலுக்கு அது வெட்டப்பட்டுப் பலி போடப்படல் – அந்தக் கிடாய்க் கறியைத் தின்ன மறுத்து மனம் வருந்தும் கூளையன் – குத்துக்காலில் ஆட்டைக் கட்டிக் கூடும் மொண்டி- அவனின் பாசத்திற்குரிய ‘பூச்சி’ என்கிற நாய்’ எனக் ‘கூளமாதாரி’ முழுவதும் பல்வேறு காட்சிகள் விரிகின்றன. இந்தக் காட்சிகளின் வாயிலாகக் கவுண்டர்களின் முகங்களும், ஆடு மேய்க்கும் சக்கிலியச் சிறுவர்களின் முகங்களும் வேறு வேறாகத் துல்லியமாகத் தோற்றம் கொள்கின்றன.

    இத்தோற்றத்தின் குரூர ‘யதார்த்த’ வடிவங்களைப் பின்வரும் குறிப்புகள்வழித் தெளியலாம். ‘ஆட்டுப்பட்டியின் ராக்காவலைச் செல்வனின் வற்புறுத்தலால் விட்டு விட்டுக் கூளையன் சினிமாவுக்குப் போதல் – பட்டியிலிருந்து ஆட்டுக் கிடா திருடப் படல் – செல்வனுக்குத் தொடர்பற்றுப் ‘பழி’  கூளையன் மீது மட்டும் சுமத்தப்படல் – கூளையனுக்குக் கவுண்டர் 100 ரூபாய் தண்டம் போடல் – பொடங்குப் பயிர்களைத் தின்று இறக்கும் நெடும்பனின் மூன்று ஆடுகள் – கவுண்டருக்குப் பயந்து திருச்செங் கோட்டுக்கு நெடும்பன் ஓடிப் போதல் – அங்குக் கடையில் பன்றிக் கறி விற்று அவன் பிழைத்தல் – ஈரோடு, சேலம் எனச் செல்லத் திட்டமிடும்போது நெடும்பன் பிடிபடல் – கவுண்டரால் அடித்து நொறுக்கப்படல் – மீளவும் பண்ணயத்திலேயே கிடந்துழல்தல் – தோப்புக்காட்டுக் கவுண்டரின் தோட்டத்தில் தேங்காய் திருடிக் கூளையன் மாட்டிக் கொள்ளல் – கூளையனின் முதலாளி மசக்கவுண்டரைத் தோப்புக்காட்டுக் கவுண்டர் தாறுமாறாய்த் திட்டுதல் – கூளையனைக் கட்டித் தலைகீழாகக் கிணற்றுக்குள்ளே தொங்கவிட்டு மசக்கவுண்டர் தண்டித்தல் – விளையாட்டுச் சாக்கில் கூளையனையும் வவுறியையும் மூச்சுத் திணறக் கிணற்று நீரில் அமுக்கிச் செல்வன் மகிழ்தல் – உடன் எழும் சின வெறியால் உந்தப்பட்டுச் செல்வனைக் கிணற்று நீருக்குள் அமுக்கிக் கூளையன் கொன்றுவிடல் – பிறகு தானும் மூழ்கிப் போதல்…’ என, இவ்வாறு எதிர் பாராமல் நிகழ்ந்துவிடும் ஒரு கொலையுடனும், அதனுடைய தொடர்ச்சியாக நிகழும் தற்கொலையுடனும் ‘கூளமாதாரி’ முடிகிறது. இக்கொலை மற்றும் தற்கொலையைப் பற்றிச் சற்றுப் பின்னால் விரிவாக விவாதிக்கலாம். இப்போது ‘கூளமாதாரி’ பற்றிப் பொதுவாகச் சிலவற்றை ஆராய முனையலாம்.

    கவுண்டர்களின் காடுகளில் ஆடுகளோடு ஆடுகளாய்க் காற்றையும்வெளியையுமே பேச்சுத்துணையாக்கித் தம்மைத் தாமே தேற்றியவாறு பாடுபடுகிறார்கள் சக்கிலியச் சிறார்கள். அன்பறியா வாழ்வில் வரும் அன்றாடப் பாடுகளையே அனுபவ வரவாக்கிக் காட்டில் உழன்றுவரும் ‘மனிதர்களாகக்கூட அறியப்படாத’ அந்த ஆடோட்டிகளின் உள்மனக்கோலங்களையும், வெளியலைவுகளையும் ஆவணப்படுத்தும் வகையில்,  ‘கூளமாதாரி’, ஒரு முக்கியமான ஆக்கம்தான். இருந்தபோதிலும், பிரதானமான ஒரு பிரச்சினையாகக் கூளமாதாரியில் மேற்கிளம்புவது, எதிர்வினையைக் கூர்மையாகப் புனைவில் வெளிப்படுத்தியாக வேண்டிய தருணங்களில்கூடப் பூசிமெழுகிப் போக்குக் காட்டிவிட்டுப் ‘பிரதி’ மெல்ல நழுவிச் சென்றுவிடுவதுதான். இப்பூசிமெழுகல்களை, யதார்த்தவாதச் சித்திரிப்பின் விளைவுகளாக அடையாளப்படுத்தலாம்தான். ஆனால், இதற்குள் இருப்பின் சமனைக் குலைக்காத ‘பூதாகர மௌனம்’ பதுங்கியுள்ளதையும் தவறவிடலாகாது.பின்நிகழும் உரையாடலையும் பேச்சு வார்த்தையையும் மதிப்பிட்டு, இது தொடர்பாக விவாதிப்பது, வாசகர்களின் நுண்புரிதலுக்கு வழிவகுக்கலாம்.

  1. இரண்டு கவுண்டர்களுக்கிடையில் நிகழும் உரையாடல்

“சீக்கு மாட்ட வித்துப் பணம் சேக்கறவனுக்கெல்லாம் கட்டலுக் கேக்குதா?”

“சீக்குனு தெரிஞ்சு வாங்குனீங்க. உங்க வைத்தியத்த வெச்சி லாபம் கொட்டுமினு பாத்தீங்க. என்ன மாமா ஆச்சு. இன்னமே ஆரும் உங்க கிட்ட வைத்தியம்னு வர முடியாத பண்ணிட்டீங்களே”

“வைத்தியத்தப் பத்தி உனக்கு என்ன மயராடா தெரியும்”

“வார்த்தைய அளந்து பேசுங்க மாமா… அடா புடாவெல்லாம் வேண்டாம்”

“ஏமாத்துத் தாயோலிக்கு என்னடா வரிச வேண்டிக் கெடக்குது?”

“பேராச புடிச்ச நாய்க்குப் பேச்சப் பாரு”

“எரநூறு என்ன மயிரு… பிச்சக்காசு… போனாப் போவுது”

“சும்மாவா குடுத்தான்…. எச்சக்கலத் தாயோலி”

    இந்த உரையாடலில், அவரவர் உணர்வுநிலையிலிருந்து, இரண்டு கவுண்டர்களும் கோபப்பட்டு ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வதைக் காணலாம். ஆனால், எத்தனை திட்டினாலும், ஒரு மனிதனை இன்னொரு மனிதன் திட்டுவதான சித்திரிப்பே இது. கூளையனின் தந்தைக்கும் கூளையனின் மசக்கவுண்டருக்குமான பின்வரும் திட்டுகள் அப்படியானவை இல்லை. இது சீக்கு மாடு எனச் சொல்லி விற்ற மசக்கவுண்டரின் பண்ணயத்து ஆளுக்காரனான கூளையன், அதைக் குணப்படுத்தி நல்ல விலைக்குப் பின் விற்று விடலாம் என நம்பிச் சீக்கு மாட்டை வாங்கி ஏமாந்து போன தோப்புக் காட்டுக் கவுண்டரின் தோட்டத்தில் தேங்காய் திருடுவதற்காகத் தென்னை மரமேறி மாட்டிக்கொள்கிறான். கையும் களவுமாகப் பிடிபட்ட கூளையனை அடித்துதைப்பதுடன் மட்டும் தோப்புக்காட்டுக் கவுண்டர் திருப்தியடைந்து விடுவதில்லை; மசக்கவுண்டர் சொல்லித்தான் கூளையன் திருடியதாக ஊரெங்கும் பழிச்சொல்லும் பரப்பிமகிழ்கிறார். இதன் விளைவாக, மனம் புண்படும் மசக்கவுண்டர், தோப்புக்காட்டுக் கவுண்டர் மீதான தம் கோபம் முழுவதையும் கூளையனின் மேல் திருப்புகிறார்.‘சேந்து கயிறு’ எடுத்துக் கூளையனைச் சுற்றி வரிந்து கட்டிக் கிணற்றுக்குள் தலைகீழாக இறக்கிச் சித்ரவதைப் படுத்துகிறார். மறுநாள், கூளையனின் அப்பனும் அம்மாவும் அலறியடித்துக்கொண்டு ஓடிவருகிறார்கள். இப்போது நடக்கும் பின்வரும் பேச்சுவார்த்தையைக் கவனியுங்கள்.

  1. மசக்கவுண்டருக்கும் கூளையனின் தந்தைக்குமான பேச்சுவார்த்தை

“என்னடா ஆயிப் போச்சுன்னு ரண்டுபேரும் வந்து நிக்கறீங்க. உம் பையன் ஒழுக்கமா இருந்தான்னா, நானெதுக்கு அவனக் கைதொடறன்… சொல்லு…”

“அதுக்குனு ஒரு அளவில்லீங்களா சாமீ… அறியாப்பையன்…. அவனப் போயிக் கெணுத்துல கட்டித் தொங்க உட்டிருக்கறீங்களே…. இதே உங்க பையனா இருந்தா இப்படிச் செய்வீங்களா… நாங்க எரந்து குடிக்கறவங்கதான் சாமீ…. அதுக்குனு இப்பிடியா?……”

    இக்கேள்வியைக்கூடச் சாராயம் குடித்துவிட்டு வந்துதான் கூளையனின் அப்பன் கேட்பதாகப் பெருமாள்முருகன் காட்டுகிறார். பிறகு மசக்கவுண்டர், தம் பால்யத்தில், சந்தையில் தாம் ‘கொலுமிச்சங்காய்’ திருடி வீட்டுக்குக் கொண்டுவந்ததற்காகத் தம் தந்தை ‘பறையனுக்குப் பிறந்த தாயோலி’ எனத் தம்மைத் திட்டிக் காலில் கயிறு கட்டி விட்டத்தில் தொங்கவிட்டுத் தலைக்குங்கீழ் நெருப்புப் பத்த வெச்சு அதுல மொளகாயப் போட்டுப் பொவச்சுத் திருத்திய ‘கதை’யைக் கூறிக் கூளையனுக்குத் தாமளித்த தண்டனையை நியாயப்படுத்துகிறார்.

“பசங்கள, இந்த வயசுல, ஒரு படிமானத்துக்குக் கொண்டாந்ரோணும்டா… அது எம் பையனா இருந்தாலும் செரி…. உம் பையனா இருந்தாலும் செரி…. இன்னமே கூளையன் எதுனா கையில தொடுவானா… இப்பத்தான் அவன என்னமோ பண்ணீட்டாப்புல ரண்டு பேரும் வந்துட்டீங்க”

    இவ்வாறு மசக்கவுண்டர் பேசுவதற்குப் பதிலாக,“கவுண்டர் இப்படிச் சொன்னபிறகு, என்ன பேசுவது? கூளையனின் அப்பனுக்கும் அம்மாளுக்கும் வாயடைத்துப்போய் விட்டது” எனப் பெருமாள் முருகன் ‘யதார்த்தமாக’ எழுதுகிறார். இங்குக் கூளையனின் பெற்றோருக்கு ஏன் வாயடைத்துப் போகவேண்டும்? இந்தப் ‘பூசி மெழுகல்’ தேவை தானா? இது ஒரு பாத்திரச் செய்கைதான். என்றாலும், மகன் பட்ட வலியும் ரணமும் இழிவும் அவமானமும் கண்டும், நாக்கைப் பிடுங்கிக்கொள்வதுபோலக் கவுண்டரை நோக்கிச் சூடாக நாலு வார்த்தைகள் கேட்கக் கூளையனின் தந்தை ஏன் பிரதிக்குள் அனுமதிக்கப்படவில்லை? கேட்டிருந்தால், அப்படி என்னதான் ‘பெரிய ஒரு பிரளயம்’ அங்குப் புறப்பட்டிருக்கப் போகிறது? மகனுக்கு விழுந்த அதே அடி உதைகள் இன்னும் கொஞ்சம் கூடுதலாகத் தந்தைக்கும் விழுந்திருக்கும். அவ்வளவுதானே! பிறகு மகன் போலவே தந்தையும் ‘மன்னிக்கப்பட்டு’ அல்லது பண்ணய வேலையிலிருந்து தூர விரட்டப்பட்டு அல்லது தண்டம் போடப்பட்டு…. இவ்விதமாகத்தானே இதுவும் நடந்து முடிந்திருக்கும்? ஆனால், அக்கணத்திலாவது மனிதனாகக் கவுண்டருக்கு முன்னால் கூளையனின் அப்பன் நிமிர்ந்து எழுந்திருந்திருப்பானே! இதற்கு எதிர்மாறாகப் பின் வருமாறு மிகத்தாழ்வாகக் கூளையனின் அப்பன் பேசுவதாகவும், அதை ஒரு பெரிய மனிதனின் பெருந்தன்மையுடன் மசக்கவுண்டர் ஏற்று ஆறுதல் உரைப்பதாகவும்தான், இப்பிரதியில் காட்டப்படுகிறது.

“என்னமோ உங்கள நம்பித்தான் பையன பண்ணயத்துக்கு உட்டிருக்கறன்… எதுவானாலும் நீங்கதான் பாக்கோணும்….”

“பின்ன பாக்காம உட்ருவனா…. அதெல்லாம் நிய்யொன்னும் பயப்படாத…. நா பாத்துக்கறன்……”

    மசக்கவுண்டர் தரும் இந்த உறுதியில், கூளையனின் பெற்றோர் திருப்தியடைந்து திரும்பிவந்துவிடுகிறார்கள். இரண்டு நாள் பையனை வீட்டுக்குக் கூட்டிப் போகிறோம் எனத் தயங்கி அவர்கள் கேட்பதையும்கூடக் கவுண்டர் ஏற்பதில்லை.

“இந்த மாதிரி செஞ்சாப் பழக்கமாயிரும்டா..”

எனக் கூறி மறுத்துவிடுகிறார். இதைக் கூளையனின் பெற்றோர், அப்படியே எப்படி ஏற்றுக்கொண்டிருக்க இயலும்? அவர்களின் மனத்தளவிலாவது ஒரு சிறு ஒவ்வாமை இருந்திருக்கத்தானே செய்யும்? இதைப் பிரதிக்குள் ஏன் பூசி மெழுக வேண்டும்?

    முதலாவதாகக் காட்டப்பட்ட இரண்டு கவுண்டர்களின் உரையாடலுக்கும், இந்தப் பேச்சுவார்த்தைக்கும் இடையில்தான் எவ்வளவு வித்தியாசம்! கடுமையான வசவுகள் கலந்திருந்தாலும்,முன்னது உண்மையானது. அளந்து பேசும் குறைந்த சொற்களையே கொண்டிருந்தாலும், பின்னது பாசாங்குத்தனமானது. இந்தப் பாசாங்கைக் கவுண்டரும் கூளையனின் அப்பனும் அறிந்தே செய்கின்றனர். இவ்விதமாகப் பேசுவதைத் தவிர அவர்களுக்கு வேறுவழியில்லாததைப் புனைவு அம்பலப்படுத்துகிறது. இப்பாசாங்கைக் கடந்து, இதிலிருந்து சிறிதேனும் வெளியேறி, இதற்குப் பின்னான நிகழ்வுகளிலும் ‘இருப்பின் சமனைக் குலைக்க’ப் புனைவு ஏன் முனைவதில்லை? கவுண்டருடன் பேசி முடித்துப் பதினைந்து இருபது நாள் கழிந்தபிறகு, ஒருநாள் மாலையில், கவுண்டரிடம் கேட்டுக்கொண்டு மகன் கூளையனைக் கூட்டிப் போவதற்காகக் கூளையனின் அப்பன் மீண்டும் வருகிறார்.

“இப்பக் கூட்டியோயிட்டுக் காத்தாலக்கிக் கொண்டாந்து உட்றனுங்க….”

“ அப்பிடி என்னடா ஒரு ராத்திரியில உம் பையன் வந்து சாதிக்கப் போறான்…”

“அதெல்லாம் ஒன்னுமில்லீங்க. கறி போட்டாங்கன்னு எடுத்துக் காச்சறம். பையன் வந்தான்னா, ஒருவா சோறு தின்னுட்டு வருவான். அதுக்குத்தான்…”

“செரி செரி கூட்டிக்கிட்டுப் போ. காத்தாலக்கி இருட்டா இருக்கவே கூட்டியாந்து உட்ரோணும். அப்பறம் அங்கப் போனான் இங்கப் போனான்னு ஆள நிறுத்திக் கிட்டயின்னாப் பாரு….”

எனப் ‘பெரிய ஆடான’ மாட்டுக் கறி தின்னச் சொந்த வீட்டுக்குக் கூளையன் சென்று வருவதற்குக் ‘கண்டிப்புடன்’ கவுண்டர் அனுமதிக்கிறார். இதற்கு அவர் ஒத்துக்கொள்வதே, கூளையனுக்கும் அவன் அப்பனுக்கும் ‘பெரிய விஷயமாக’ப் போய் விடுகிறது! திடீரென மாடு செத்துப்போனதால் கிடைக்கும் பங்குக்கறியைச் சக்கிலியர் தின்பதுகூடக் கவுண்டருக்குப் பொறுக்கவில்லை.

“மாட்டுக்காரனுக்குத் திண்டாட்டம்… உங்களுக்குக் கொண்டாட்டம்டா”

எனக் குத்தலாகப் பேசித்தான் கூளையனைக் கவுண்டர் விடுவிக்கிறார். எதையோ பேசிக்கொள்ளட்டும், வீட்டுக்குப் போக விட்டுவிட்டால் போதும் என்ற நினைப்புத்தான் கூளையனுக்கும் அப்பனுக்கும்! “தாயோலி பண்ணயத்துக்கு உட்டா ஒழுங்கா இருக்க முடியில…. இந்த வயசுல வேலைக்குப் பயப்பட்டா ஆவுமாடா” என்று அப்பனும், “வேலையுண்டு நீயுண்டுன்னு இருடா கண்ணு” என்று தாயும் அறிவுறுத்துகின்றனர். வீடு வந்துவிட்டுப் பின் மீண்டும் பண்ணயம் திரும்பும் கூளையனை, மேற்கண்டவாறு அறிவுறுத்துவதன்றிக் கவுண்டரை எதிர்கொள்வதற்கு வேறு சொற்களே அவர்களிடம் இல்லையா? கவுண்டரை எதிர்க்கும் கூற்றாய், “அவன் நாசமாப் போவ…. அவன் கையில புழுவுப் புழுக்க… அவனூடு எருக்கல மொளச்சுப் பாழாப் போவட்டும்….” எனப் பாசக்காரப் பாட்டியின் ‘வெள்ளந்திச் சாபம்’ மட்டும்தான் நாவலில் பதிவாகியுள்ளது. இதைக் கேட்டுக் கூளையனுக்கே நாவலில் சிரிப்புத்தான் வருகிறது!

    பெற்றோர் உட்படத் தன்னைக் காப்பாற்ற யாருமில்லை என்பதைக் கூளையன் அனுபவபூர்வமாக அறிந்துகொள்கிறான். இந்த யதார்த்த அறிதல், அச்சத்துக்குப் பதில் துணிவையே அவனுக்குத் தருகிறது. ஆனால், இத்துணிவை மேன்மேலும் கொண்டு செலுத்தித் தன் வாழ்வை மறுநிர்மாணம் செய்துகொள்ளப் போதுமான அளவிற்குப் புனைவில் அவனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆடோட்டியின் அரவணைப்பற்ற அலைச்சலில் தேவையே இல்லாமல் குறுக்கிட்டுக் கூளையனின் இருப்பை மேலும் சிக்கலாக்கப் பரபரக்கும் கவுண்டப்பையன் செல்வத்தைக்கூடத் திட்டமிடாமல் திரளும் திடீர்க் கோபத்தின் வசப்பட்டே, கிணற்று நீருள் அமுக்கிக் கூளையன் கொன்றுவிட நேர்கிறது. ஒரு விபத்தைப்போலக் கண்மூடித் திறப்பதற்குள் நிகழ்ந்து முடிந்துவிடும் இக்கொலைக்குப் பின், நெடும்பனும் வவுறியும் எவ்வளவோ வற்புறுத்தியபோதிலும், வேறெங்கும் ஓடிப்போகக் கூளையன் இஷ்டப்படுவதில்லை. இந்த உலகத்திலிருந்தே அவன் விடைபெற்றுக்கொண்டு போய்விடுகிறான். இப்படித்தான் ‘கூளமாதாரி’ நாவல் முடிகிறது. இவ்வாறான கொலையும் தற்கொலையுமே எதிர்ப்புணர்வின் உயர்ந்தபட்ச வடிவங்களா? அல்லது ‘மனிதனாக ஓர் ஆடோட்டி வாழ’ச் சின்னஞ்சிறுவெளிகூட மறுக்கப்படுவதன் அபத்தக் குறியீடா இவை?

    பெரிய மனுஷியாகி விடும் செவிடியைக் கவுண்டரும் கவுண்டச்சியும் கெஞ்சியும் மிஞ்சியும் எவ்வளவோ கேட்டுக்கொண்ட பின்னும், பண்ணயத்தில்விட அவள் அப்பன் உடன்படுவதில்லை. இதேபோல் கூளையனையும், ‘திருட்டுப் பழி சுமத்தப்பட்டபோதே’  பண்ணயத்திலிருந்து அவன் தகப்பன் ஏன் விடுவித்திருக்கக்கூடாது? இதற்கு முன்பே பண்ணயத்திலிருந்து திருச்செங்கோட்டுக்குத் தப்பியோடிக் கடையில் பன்றிக் கறியை விற்றுப் பிழைக்க முனையும் துணிச்சல்கார நெடும்பனும், மசக்கவுண்டரின் அக்கா மகனால் பிடிக்கப்பட்டுப் பண்ணயத்துக்குத் திரும்பக் கொண்டு வரப்படுவதாகத்தான் நாவலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தப்பியோடிய நெடும்பன் அவ்வாறு தப்பியோடிய மனிதனாகவே இந்நாவலில் ஏன் விடப்படுவதில்லை? இறுதியில் கூளையன்கூட ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்? எங்குப் போனாலும் தப்பிக்கவே வழியில்லை என்று அவன் நினைப்பதுதானே காரணம்? இக்கேள்விக்கெல்லாம் விடை ஒன்றுதான். பெருமாள்முருகன் பின்பற்றும் யதார்த்தவாதமே, அவரை இவ்வாறெல்லாம் புனையச் செய்கிறது! (காலங்காலமாகக் கூளையன்களும், அவர்களின் அப்பன் ஆத்தாள்களும் இப்படியேதான் இருந்தார்களா?அவர்கள் அன்று எப்படியாக இருந்தார்களோ, அப்படியே அவர்களைச் சித்திரித்திருக்கிறார் என்ற ஒருவாதமும் ஓரளவுக்குச் சரிதான். ஆனால், விமர்சன யதார்த்தவாத நோக்கைக் கையிலெடுத்து இன்னும் சிறிது எதிர்ப்புணர்வைச் சொற்களிலாவது பெருமாள்முருகன் வெளிப்படுத்தியிருக்கலாகாதா என்ற என் வாசக ஆதங்கத்தையும் என்னால் கூறாமலிருக்க முடியவில்லை.)

    இத்தகைய இயல்புவாதச் சித்திரங்கள், ஒருபுறத்தில் யதார்த்தவாதத்தின் காலப் போதாமையைக் குறிப்புணர்த்தினாலும், மறுபுறத்தில் அக்காலத்து மனிதர்கள் உழன்ற ‘மேல் – கீழ்’ அதிகார நுண்களம் சார்ந்த ஆவணப் பதிவின் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்துகின்றன என்பதுதான், பெருமாள்முருகன் எழுத்தின் தனிவலிமையாகும். இவ்வலிமையைத் தக்கவைத்துக்கொள்ள விழிப்பாக அவர் முனையும்போது, தவிர்க்க இயலாத முறையில், பழக்கங்களின் தடத்தில் சரிந்துவிடும் முனைப்பு முறுக்கேறாத பயணமாகச் ‘சம்பவ அடுக்குகளுக்குள்’ சென்று ‘நாவல்’ சிக்கிக்கொண்டுவிடநேர்கிறது. இச்சம்பவ அடுக்குகளூடே இறுதியில் எஞ்சுபவை – உண்மையின் அடிப்படையிலான உணர்வுத் தெறிப்புகளும், ‘வட்டார வாழ்வு’ சார்ந்த ஆற்றாமைப் பதிவுகளுமேயாகும்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. பொதுபுத்தியின் மனக்கோணலை நிமிர்த்தும்  'கழிப்பறையின் கிரகப்பிரவேசம்' :பெருமாள்முருகனின் சிறுகதைகள்: கல்யாணராமன் 
  2. கங்கணம் (2007) : பாடு பழைமை பேணும் புனைவு : கல்யாணராமன்
  3. சமூகப் பொறுப்புணர்வின் சாட்சியம்:நிழல் முற்றம் (1993) : கல்யாணராமன்
  4. யதார்த்தவாத மெளனம் - கல்யாணராமன்
  5. மாதொருபாகன் (2010) : திசைதிருப்பப்பட்ட பிரச்சினை =:கல்யாணராமன்