பெருமாள் முருகனின் படைப்புலகம் -5

    இந்த நாவலில், ‘திருமணம்’ என்ற மானுட வாழ்வின் மிக இன்றியமையாத ஒரு செயல்பாடு, மையப்பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. பதினைந்தாண்டுகளாகத் தேடிப் பார்த்தும், சரியான ஒரு பெண் கிடைக்காமல் போவதால், திருமணமேயின்றி ஆனால் வயதேறிக்கொண்டே போகும் முதிர் இளைஞன் ஒருவனின் உடல் மற்றும் மன அவஸ்தைகளைப் பொருட்படுத்தி இந்நாவல் விவாதிக்கிறது.விறுவிறுப்பான ஒரு நடையோட்டமும், இயல்பான பல சம்பவங்களும், வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும் காட்சித் தன்மையும் இதன் சிறப்புகள். வாசிப்பின் சுகானுபவத்தைக் கடைசிவரையில் தக்கவைத்துக்கொள்ளும் ஒரு புனைவிது.

    கவுண்டர் சாதிப் பையனான மாரிமுத்துவுக்குப் பல ஆண்டுகளாகத் திருமணம் தள்ளிப்போகிறது. தோற்றப்பொலிவும் உடல்நலமும் சொத்தும் குடும்பப் பெருமையும் நெருங்கிய உறவுகளுமிருந்தாலும், தொடர்ந்து ஏதேதோ அற்பக் காரணங்களுக்காகத் திருமணம் நடக்காமல் போகிறது. இறுதியில் மாரிமுத்துவுக்குத் திருமணம் கைகூடும் போது, அதைப் பார்க்க முடியாமல், அவனின் பாசத்திற்குரிய பாட்டி, தன் கையில் மாரிமுத்து ‘கங்கணம்’ கட்டிக்கொண்ட அம்முதல் நாளிரவிலேயே செத்துப்போகிறாள். இதுதான் ‘கங்கணம்’ நாவலின் கதை. இக்கதையினூடே, மாரிமுத்து ஏழாம் வகுப்பில் படிக்கும்போது தி.மு.க.விலிருந்து பிரிந்து வந்த எம்.ஜி.ஆர். தனிக்கட்சி தொடங்கிச் சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்ததைப் பற்றியும், மாரிமுத்து தொலைக்காட்சி பெட்டி வாங்கி அதற்கு கேபிள் இணைப்புப் பெற்றதைக் குறித்தும் வரும் சில குறிப்புகளைக் கொண்டு, 1970களின் தொடக்கம் முதல் 1990களின் முன்பாதி வரையிலுமான ஒரு காலத்தில் இந்நாவலின் ‘கதை’ நிகழ்வதாகக் கொள்ளலாம்.

    ‘முப்பதாண்டுகளுக்கும் மேலாகப் பண்ணயத்தில் உழலும் சக்கிலி குப்பன் – மகன் திருமணச் செலவுக்காக ஐயாயிரம் ரூபாய் முன்பணம் கேட்டல் – பதினேழு வயதுப் பையனுக்குப் பதினைந்து வயதுப் பெண்ணோடு கல்யாணமாவதைச் சகித்துக்கொள்ள முடியாத மாரிமுத்து, உடனே பணம் தர மனம் வராமல், ஆறு மாதத்திற்குச் சக்கிலிப் பையனின் கல்யாணத்தைத் தள்ளிப்போடல் – மாரிமுத்து பார்க்கும் பெண்களெல்லாம் கைநழுவிப் போதல் – கல்யாணத் தரகு வேலை பார்க்கும் சக்கிலிச்சி பூடுதிக்கும், வெத்தலைப்பொட்டி வாத்தியாருக்கும் ‘காரியம்’ கைகூடாமலேயே கைக்காசை அள்ளி விடுதல் – ‘செக்ஸ்’ புத்தகங்கள் படித்துச் சலித்தல் – கிளி ஜோதிடம் உட்பட எல்லா உத்திகளையும் பரிசோதித்துப் பார்த்தல்…’

கோவில்களுக்குப் போதல் – பரிகாரங்கள் செய்தல் – அப்பன் அம்மா அம்மாயி ஆகியோரோடு பேச்சு முறித்தல் – தற்கொலைக்கு மாரிமுத்து துணிதல் – ஆவணி இருபதாம் தேதிக்குள் கல்யாணம் குதிராவிட்டால், குப்பனுக்குப் பணம் தந்துவிட்டுத் தானும் எல்லாவற்றையும் முடித்துக்கொள்ள வேண்டியதுதான் எனத் தனக்குத் தானே மாரிமுத்து கடைசிக்கெடு குறித்துக்கொள்ளல் – சக்கிலி ராமனின் வழிகாட்டலை ஏற்றுத் தந்தையின் பெயர் தெரியாத ஒரு பெண்ணை மணக்க இசைதல் – மண்டபம் பார்த்தல் – பத்திரிகை அடித்தல் – இரண்டு வீட்டாருக்கும் துணியெடுத்தல் – கூடிக் குடித்தல் – நிலம் பங்கீடு செய்து, பத்திரப் பதிவை முடித்தல் – செல்வராசுவுடன் ‘தொலவு’ சேர்தல் – பெண் வீட்டார் வந்துசேரப் பேருந்து ஏற்பாடு செய்தல் – கங்கணம் கட்டிக்கொள்ளல் – பாட்டியின் சாவு – அதை மறைத்துத் திருமணம் முடித்தல்’ என, ‘மாரிமுத்துவின் மணம்’ என்ற ஒற்றை இலக்கை நோக்கிப் பரபரப்பாக நகரும் ‘கதைப் பயணமாக’ இந்நாவலை நாம் விளக்கலாம். இறுதியாக மாரிமுத்துவிற்குத் திருமணம் நிகழ்வதற்கு முன்வரையிலும், மிகப் பல பெண்களை அவன் பார்க்க நேர்கிறது. இது தொடர்பாகப் பதினான்கு ‘சுவையான நிகழ்வுகள்’, நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றைப் பின்வருமாறு தொகுக்கலாம்.

 1. மாரிமுத்துவைக் காட்டிலும் இரண்டு வயது மூத்தவளாக இருப்பதால், பாட்டி ‘பாவாயி’ பார்க்கும் பெண் ‘பவளாயி’, மாரிமுத்துவுக்குக் கிட்டாமல் போகிறாள்.
 2. தொட்டிப்பாளையத்துப் பெண்ணான நீளக் கூந்தல்காரி, மாரிமுத்து ஏறிக்கொண்டு வரும் ‘புல்லட்டை’ ஓர் எருமைக் கடாவாகக் கண்டு வெறுத்து, மாரிமுத்துவை ஏற்க மறுத்துவிடுகிறாள்.
 3. சோளக்காட்டில் ‘தானாவதித் தாத்தா’ கண்டுபிடித்துக் கூட்டிவரும் பெண்ணான ‘அட்டக்கரிக்காரி’யின் அப்பன், மாரிமுத்துவின் வீட்டில் தாகத்துக்குக் கேட்கும் ‘மோர்’ கிடைக்காததால், ‘மோருக்குப் பஞ்சமுள்ள வீட்டில் பெண் கொடுக்க மாட்டேன்’ எனக் கோபித்துக்கொண்டு சென்றுவிடுகிறான்.
 4. தன் ஜாதகக் குறிப்பில், குருபலன் கூடி வந்தவுடன், மாரிமுத்து சென்று பார்த்த அந்த முதல்பெண் ‘கருப்பி’ ராசாமணியை, ஐம்பது பவுனும் ஐம்பதாயிரம் ரொக்கமும் சேர்த்துத் தருவதாக அவள் அப்பன் சொன்னபோதிலும், ‘ஒரு வண்டி வேண்டும்’ எனக் கேட்டு அடம்பிடித்து மாரிமுத்துவின் அம்மா தட்டிக்கழித்துவிடுகிறாள்.
 5. மாரிமுத்து முதன்முதலாக முத்தமிட்ட பள்ளித்தோழி வசந்தி மூலநட்சத்திரக்காரி என்பதால், மாமனாரோ மாமியாரோ இல்லாத குடும்பத்தில்தான் அவள் வாழ்க்கைப் படவேண்டுமென ஜோதிடம் கூறுவதால், அவளையும் மாரிமுத்து மணக்க முடியாது போய்விடுகிறது.
 6. கல்யாணத்தரகரான வெத்தலைப்பொட்டி வாத்தியார் கொடுக்கும் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் எட்டுப்பொருத்தமும் கூடியிருந்தாலும், அந்த ‘மோளியப்பள்ளி’க்காரியைத் தேடி மாரிமுத்து போகும்போது, மணமாகிக் கைக்குழந்தையுடன் அவள் இருக்கிறாள்.
 7. குழந்தைப்பருவத்தில் தன்னுடன் விளையாடிய பாட்டியின் அண்ணன் பேத்தியைக் கட்ட முனையும்போது, ‘குஷ்டம் புடிச்சவ பெண்ணைக் கட்டிப் பரம்பரையே குஷ்டம் பிடித்துக் கிடக்க வேண்டுமா?’ எனக் கேட்டுப் பெண்ணைத் தயவு தாட்சண்யமின்றி நிராகரித்துவிடுகிறாள் மாரிமுத்துவின் அம்மா.
 8. குமரமங்கலத்துப் பெண்ணை மணந்துகொள்ள இரண்டு ஏக்கர் நிலத்தை அவள் பெயருக்கு எழுதிவைக்கவேண்டும்; ஒன்பது பவுனில் தாலிக்கொடி போடவேண்டும்; கல்யாணச்செலவில் பாதியைத் தரவேண்டும். இத்தகைய நிபந்தனைகளை மாரிமுத்து ஏற்றாலும், மாரிமுத்துவைவிட அதிக வசதியுள்ள ‘ரிக்’ முதலாளியின் பையனுக்கே அந்தப் பெண் கிடைக்கிறாள்.
 9. ‘நெட்டாலம்பாளையம்’ பெண்ணுக்கும் மாரிமுத்துவுக்குமான திருமணப் பேச்சு, ‘மொடாக் குடியன்’ என மாரிமுத்துவைப் பற்றிப் பெண்ணின் அப்பனுக்கு ஒரு ‘சேதி’ போவதால், இடையிலேயே முறிந்துபோய்விடுகிறது.
 10. கல்யாணத்தரகு வேலை செய்யும் சக்கிலிச்சி பூடுதி, மூன்று மாதங்கள் மட்டுமே கணவனோடு வாழ்ந்துவிட்டுப் பின் விதவையாகிவிட்ட இருபது வயது இளம்பெண் ஒருத்தியைக் கொண்டுவந்து காட்டி, மாரிமுத்துவுக்கு அவளைத் திருமணம் முடித்து வைக்க முனைகையில், மாரிமுத்துவின் அப்பன், “ஒரு தேவிடியாள மருமகளாகக் கொண்டாந்து வெக்கலாம்னு நெனச்சினா, நா நாணுகிட்டுச் செத்துருவம்” என மிரட்டி, மாரிமுத்துவின் மணப்பேச்சைக் கெடுத்துவிடுகிறான்.
 11. டி.வி. இல்லாத வீட்டில் அவள் வாழ்க்கைப்பட மாட்டாள் எனப் பூடுதி சொன்ன ஒருத்திக்காகத் தொலைக்காட்சியை வாங்குவதுடன், கேபிள் இணைப்பும் வீட்டுக்குக் கொடுக்கிறான் மாரிமுத்து. அப்படியும் அந்தப் பெண் அவனுக்கு வாய்ப்பதில்லை.
 12. பாட்டியின் சொந்த ஊர்த் தோழியான பாவாத்தாவின் பேத்தி, சிறுவயதில் அவள் கண்ணில் விழுந்த தூசியைப் பாட்டி எடுத்து உதவியதற்குப் பலனாக, அப்பாட்டியின் பேரனான மாரிமுத்துவுக்குத் துணைவியாகப் பாவாத்தாவால் வாக்களிக்கப்படுகிறாள். ஆனால், அந்தப் பெண்ணுக்குள்ள திரண்ட சொத்துகளுக்கு ஆசைப்பட்டுப் பெண்ணின் பெரியம்மா பிள்ளையே இரவோடிரவாய் அவளைத் தூக்கிப்போய் மலைக்கோவிலில் வைத்துத் தாலிகட்டிவிடுகிறான்.
 13. கடலைக் காட்டில் களை வெட்டும் நேரத்தில், கோவணம் கட்டியவாறு, ‘மெனை பிரித்து’ மாரிமுத்து வெட்டிக்கொண்டிருக்கும்போது, அவனைத் தேடிப் ‘பூடுதி’ அனுப்பி வைத்த ‘பெண் வீட்டார்’ இருவர் வந்துவிடுகின்றனர். மாரிமுத்துவின் மண் புழுதியில் தழுவிய உடலையும், அவனின் கோவணக் கோலத்தையும் கண்டு மனம் வெருண்டு, திருமணம் பேசும் விருப்பமின்றி அவர்கள் இருவரும் திரும்பிவிடுகின்றனர். அதனால் அந்தப் பெண்ணும் மாரிமுத்துவுக்கு அமைவதில்லை.
 14. டிராக்டர் வாங்கித் தினமும் வாடகைக்கு மாரிமுத்து ஓட்டி வந்த ஒரு காலத்தில், அவனுக்குப் பழக்கமான ‘மண்ணள்ளும் ஒட்டர் சாதிப் பெண்ணான’ சரோஜாவைப் பற்றிய மாரிமுத்துவின் முதல் நினைப்பு வளர்ந்து கனியும்முன், அந்த ஊரை விட்டே அவள் காணாமல் போய்விடுகிறாள். தனக்குப் பிடித்த பெண்ணான சரோஜாவைத் தன் குடும்பத்தாரே விரட்டி அடித்திருக்கக்கூடும் என்றும் மாரிமுத்து ஐயுறுகிறான்.

    இவ்வளவு பெண்கள் மாரிமுத்துவின் அருகில் நெருங்கி வந்தாலும், இவர்களுள் ஒரே ஒருத்தியைக்கூட மாரிமுத்துவால் மணந்துகொள்ள முடியாமல் போவது ஏன்? இங்குச் சுட்டிக் காட்டப்பட்ட அற்பக் காரணங்களைத் தாண்டியும், இது பற்றி யோசிக்க வேண்டியுள்ளது.“நாமாகத் தீர்மானிக்கிற அவஸ்தையில்லாமல், யாரோ தீர்மானிக்கிற விதத்தில் நடப்பது தொந்தரவில்லாத விஷயம்” என மாரிமுத்துவே நினைப்பதுதான், இதற்கு முக்கியக் காரணமாயிருக்க வேண்டும். ‘அப்பா – அம்மா – அம்மாயி – பாட்டி’ எனத் தன் குடும்பத்தாரைச் சார்ந்தும், அவர்கள் பொறுப்பிலுமே தன் கல்யாணத்தை மாரிமுத்து விட்டுவிடுவதே, அவன் வாழ்வின் வாய்ப்புகளைப் பறிக்கிறது. கவுண்டச் சாதியின் வட்டத்தை விட்டு வெளியே வருவதற்கு அவன் தயங்குவதும்கூட, அவன் திருமணத்தைத் தாமதப்படுத்துகிறது. ‘பன்னி’ வளர்க்கும் ஒட்டர் சாதிப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் முடிக்கத் திட்டமிடும் சித்தப்பா மகன் செல்வராசுவின் மனத் துணிவு, அதேவித வாய்ப்பைத் தானும் பெற்றிருந்தும்கூட, ஏன் மாரிமுத்துவுக்கு வர மறுக்கிறது? அவன் சார்ந்துள்ள ‘குடும்பம்’ மற்றும் ‘சாதி’யின் யதார்த்த நடப்பை மீறிச் சிறிதும் மாரிமுத்துவால் செயல்பட முடியாமையே, இதற்குக் காரணமாகும்.

    ‘தன்னைப்போல் இந்த உலகில் எந்த ஆணும் துக்கம் கொள்ளக்கூடாது’ என்று நினைத்துப் ‘பத்துப் பெண் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதற்கு’ மாரிமுத்து ஆசைப் படுகிறான். ஆனால், விடியலில் கூவும் சேவலைக் கண்டதும், ‘கோழிகளின் உடல் கிடைப்பதில் எந்தக் கஷ்டமுமில்லாத சேவலாகத் தான் பிறந்திருக்கக்கூடாதா?’ எனச் சிந்திக்குமளவில்தான், அவன் வாழ்க்கை இருக்கிறது. ஏழேழு பிறவிப் பாவங்களைத் திரட்டிக்கொண்டு வந்திருக்கும் பரிதாப ஜென்மமாகத் தன்னைக் காணும் மாரிமுத்து, ‘ஜோதிடம் – பரிகாரம் – கோவில் – கடவுள் – விதி – சாதி’ என அனைத்து வழியையும் பின்பற்றி, எப்படியாவது ‘ஒரு பெண்ணை’ப் பிடித்துவிடத் துடிக்கிறான். தான் பார்த்த பெண்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காகத் தன் புல்லட்டை ‘ஹீரோ ஹோண்டா’ வண்டியாக மாற்றிக்கொள்கிறான்; குடிப்பதை நிறுத்திவிடுகிறான்; வீட்டில் எப்போதும் மோர் வைத்திருக்கச் சொல்கிறான். தொலைக்காட்சி வாங்குவதுடன் மட்டுமல்லாமல்,  ‘கேபிள்’ இணைப்பையும் ஏற்படுத்திக்கொள்கிறான். மூல நட்சத்திரக்காரியை மணந்து கொள்வதற்கு வாய்ப்பாகத் தந்தையோ தாயோ செத்தொழிந்திருக்கக்கூடாதா என்றும் புலம்புகிறான். தன் விருப்பப்படி அப்பா – அம்மாவைத் தேர்வு செய்யும் உரிமையைத் தனக்குக் கடவுள் அளிக்காததற்காக வருந்துகிறான். பெண்ணுக்காகச் சாதி மாறிவிட முடியாதபடிக்குப் ‘பாழாய்ப்போன சாதிக் கௌரவம்’ வந்து குறுக்கே நிற்கிறதே எனக் குமுறுகிறான். முப்பது வயதைக் கடந்துவிட்ட பின்னும் வீட்டில் ஒருவன் தவியாய்த் தவித்துக்கொண்டிருக்கையில், தொலைக்காட்சி பார்க்க வரும் ஊர்ப் பெண்டுகளிடம், ‘பன்னிரண்டு வயதில் புருஷனோடு குலாவிய கதை’யைக் கூறி அம்மாயிக் கிழவி கூத்தடிப்பதாகச் சீறுகிறான். “எதாச்சும் தொடுப்பு கீது வெச்சிருக்கறயா” எனச் சக்கிலித் தோழன் ராமன் கேட்பதற்கு, “அப்படியிருந்தா அப்புறம் எவன் பொண்ணுக் குடுப்பான்?” எனப் பதறுகிறான் மாரிமுத்து.

    ‘மனித வம்சத்தின் மீது கொலை வெறி கொண்ட ஒருவனால், மானுடர்களைப் பழிவாங்குவதற்காக உருவாக்கப்பட்டதே கல்யாண முறை’ என்று ஓர் எதிர்மறைப் பார்வையுடன் மாரிமுத்து எண்ணினாலும், இந்த நாவலில் அவன் ஏங்குவது அந்தக் கல்யாணத்துக்காகத்தான் என்பதையும் நாம் புரிந்துகொள்ளவே வேண்டும். தன் மகன் கல்யாணத்துக்குப் பணம் கேட்கும் பண்ணயத்தாள் குப்பனுக்குப் பணம் தர மாரிமுத்து பின்னிசைவதற்கு, அப்படித் தான் பணம் தந்தாலாவது, ஆவணியில் தான் வைக்கச் சொன்ன குப்பன் மகன் கல்யாணத்திற்குள் தன் திருமணமும் நடந்துவிடாதா என்ற நப்பாசையே தூண்டுதலாகும். முப்பதாண்டுக்கும் மேலாகக் குறைப்பட்டுக் கிடக்கும் மூன்றரை ஏக்கர் நிலமான செம்மாங்காட்டைச் சித்தப்பன் பிள்ளைகளுடன் இப்போது ‘பங்கு’ பிரித்துக்கொள்ள மாரிமுத்து முன்வருவதற்கும், அவனது ‘கல்யாண ஆசையே’ உந்துதலாகிறது. இந்நிலம் குறையாகக் கிடக்கும் ‘சாபத்தீடுதான்’ தனக்குக் ‘கல்யாண யோகத்தை’க் கொண்டுவரவில்லை எனத் தானாவதித் தாத்தா கூறுவதைக் கருதிப் பார்த்தே, நிலப்பிரிப்பிற்கும் மாரிமுத்து உடன்படுகிறான். ஆனால், தன் ‘பெண் தேடும் படலத்தில்’ தொடர்ந்து அவன் பெறும் ஏமாற்றங்கள், அவனைக் குறுக்கி விடுகின்றன. பெரிய எதிர்பார்ப்புகளே இல்லாத நிலையிலும், அவனுக்குப் பெண் குதிர்வதில்லை. இதன் விளைவாக மனம் கசந்து, “எல்லாப் பொம்பளையும் ஒரே மாதிரிதாண்டா. அப்பிடி இப்பிடின்னு யோசிக்காத. வத்தலோ தொத்தலோ ஒரு பொத்தலு இருந்தாப் போதும்டா” எனப் பாட்டன் பேசும் ‘கொச்சையான’ யதார்த்த வாதத்துடன் சமரசப்பட்டு, எப்படியோ பெண் கிடைத்தால் போதும் என்ற ஒரு சராசரி ‘ஆண்’ மனநிலைக்கும் தள்ளப்பட்டுவிடுகிறான் மாரிமுத்து. ‘ஒரே ஒரு பெண்ணைத் தனக்குத் தந்துவிட்டுக் கவுண்டச் சாதி எப்படியோ போய்த் தொலையட்டும்’ என்றும் அவன் நினைக்கிறான். இங்குத் தன் ‘சுய சாதி அழிவது’ பற்றிக் கவலையே இல்லாததுபோல மாரிமுத்து பேசினாலும், அவனுக்குக் கவுண்டச்சிதான் வேண்டும்!

    தன்னைச் சுற்றியுள்ள உறவுகள் யாவும் – தன்னிருப்பைப் பொருட்படுத்தாமல் – தத்தம் சுக துக்கங்களுடன் வாழ்வதாக மாரிமுத்து உணர்ந்துகொள்ளும்போது – அவன் மன வெளியில் ஒரு வெறுமை எழுகிறது. ஒருநாள் அதிகாலையில் – ‘மாசி இருபது’ – ‘தனிமையின் துக்கம்’ தாளமுடியாதவனாகி, மொட்டை மாடியிலிருந்து கீழே குதிக்க முயற்சி செய்துவிட்டுப் பின் மனம் மாறிவிடுகிறான். இந்த மனமாற்றத்திற்கும், ‘மண வாழ்வில்’ மாரிமுத்துவுக்குள்ள நியாயமான ஓர் ஆசையே காரணமாகிறது. எனினும், இந்த ஆசைக்கு, ‘ஆவணி இருபது’ என்பதைக் கடைசிக் காலக் கெடுவாக்கிக்கொண்டு, அதற்குள்ளே தனக்குத் ‘திருமணம்’ கூடிவராவிட்டால், குப்பனுக்குப் பணம் கொடுத்து விட்டுத் தன் வாழ்வைப் போக்கிக்கொண்டுவிடுவதென மாரிமுத்து முடிவெடுக்கிறான்.  இதுவே மாரிமுத்துவின் மனநிலை – கல்யாணத்துக்காக வெகுவாக ஏங்கித் தவிக்கும் பரிதவிப்பு மனநிலை. இந்த மனச் சிடுக்கைத்தான் இந்நாவலும் விவரிக்கிறது. இதற்கு எதிர்மாறாக, “இதை வாசித்து முடிக்கையில், திருமணம் என்பதே ஓர் அபத்தம் என உணரும்வகையிலான அனுபவத்தைத் தவிர்க்கவியலாது” என நாவலின் பின்னட்டை கூறுவதை ஏற்கவியலவில்லை. மாரிமுத்துவைப் பொறுத்தவரையில் – திருமணம் என்பது ஒருபோதும் அபத்தமன்று; அவனின் தனிமைத்துயரத்தைத் தீர்த்துக்கொண்டு விடுவதற்கான ஓர் இன்பத்திறப்பே அது. அதனால்தான், கல்யாணநாளின் விடியலுக்கு முன்னான இரவில் இறந்துபோகும் பாட்டிக்காகக் கதறியழும்போதுகூடக் காலையில் தான் மணக்கப்போகும் தன் மணப்பெண்ணான ராசாமணியின் உதடுகள் தன் வாயைத் தொடுவதுபோலக் கண்ணீருக்கிடையிலும் மாரிமுத்து உணர்கிறான். பாட்டியின் சாவு பெருந்துக்கம்தான். ஆனால், அதைத் தணிவிக்கும் ஆற்றல் தன் ராசாமணிக்கு உண்டு என்பதுதான், ‘திருமண வாழ்வு’ பற்றிய மாரிமுத்துவின் ஆரோக்கியமான புரிதலாகும். இத்தகைய புரிதலைக் கண்டுணராத அபத்தமாகக் குறுக்கிக்கொள்ளத் தேவையில்லை; மாரிமுத்துவுக்கு ‘வாழ்வு’ அர்த்தப்படுவதே அவனின் திருமணத்தால்தான் என்பதைத் தயக்கமின்றி நாம் ஏற்கத்தான் வேண்டும்.

    சக்கிலிச்சிகளைக் கெட்டுப்போகிற பெண்களாகவும், கவுண்டச்சிகளைக் கற்பரசிப் பெண்களாகவும் ‘ஏறுவெயில்’ சித்திரிப்பதாகக் கோச்சடை விமர்சித்திருக்கிறார். (நிழல் முற்றம், 1993, ப.70.) இதற்குப் பதிலளிக்கும் வகையில், கங்கணத்தில் வரும் பாவாயிப் பாட்டி, “கந்தா நிய்யும் இப்பிடிப் படுத்துக்க வா…… கவுண்டரு ஒன்னும் சொல்ல மாட்டாரு, படுத்துக்க” எனப் பனையேறி கந்த மூப்பனைப் படுக்கைக்கு அழைப்பதாகக் காட்டப்படுகிறது. இது உண்மையாக இருக்கலாம்; அமுக்கப்பட்ட உணர்வுந்தலாகவும் இருக்கலாம். ஏனெனில், இன்னும் நிகழாத மாரிமுத்துவின் கல்யாணத்துக்குப் ‘பந்தக் கெடா’ வெட்டப்பட்டதாகவும், ‘குண்டாவக் கொண்டாந்து சக்கிலிச்சியும் பறைச்சியும் வேணுங்க முட்டும் வாங்கிக்கிட்டுப்’ போனதாகவும்கூடப் பாட்டி கதைக்கிறாள். புத்தி மாறாட்டத்தில் தடுமாறும் பொழுதிலேயே பாட்டி இவ்வாறெல்லாம் பிதற்றுவதாகப் புனைவில் காட்டப்பட்டாலும், பாவாயியின் ஆழ்மனப் பதிவே இப்படி வெளிப்படுகிறது என்னுமளவில், இதுவும்கூட முக்கியத்துவமுடையதாகிறது. பாட்டியின் பிதற்றலைக் கேட்பவனாகச் ‘சக்கிலி’ ராமன் முன்னிறுத்தப்பட்டாலும், பண்ணயத்துச் சக்கிலியுடன் இல்லாமல், பனையேறிக் கந்தமூப்பனுடனேயே பாட்டிக்கு இப்படிப் ‘பழக’ முடிகிறது என்றும் இதை விமர்சிக்க இடமுண்டு. இப்படிப்பட்ட பாட்டிக்குப் பேரனாகப் பிறந்து, ‘ரொம்பவும் ஒழுக்கம் பார்ப்பவனாகவும், ஒரு பயந்தாங்கொள்ளியாகவும்’ அறியப்படும் மாரிமுத்துவின் வாழ்வில் – கல்யாணத்துக்கான அவனின் போராட்டத்தில் – முக்கியத் திருப்புமுனையாளனாகச் ‘சக்கிலி’ ராமனே அமைகிறான். ‘பெற்ற தாயின் இடுப்பைக் கட்டிக்கொள்ள நினைத்த அயோக்கியன்’ எனத் தன் அந்தரங்கத்தை ராமனிடம் திறந்து காட்டிக் குற்றவுணர்வால் குமுறியழுகிறான் மாரிமுத்து. இதனைக் கேட்டுச் சிரிக்கும்    ‘சக்கிலி’ ராமன், தனது மாமனார் ஊரில் ‘அம்மாவை வைத்திருக்கும் மகன்’ பற்றியும், அவனுக்குக் ‘கல்யாணம் பண்ணக்கூடாது’ எனத் தடுக்கும் ‘அம்மா’ பற்றியும் எடுத்துக் கூறித் தன் தோழன் மாரிமுத்துவின் இறுக்கத்தைத் தணித்து ஆசுவாசப்படுத்துகிறான். மேலும், “ஒவ்வொரு மனுசனும் மனசுக்குள்ள பெரிய அயோக்கியன் தாய்யா” என்றும் கூறிக் குழம்பித் தவிக்கும் மாரிமுத்துவைத் தெளிவிக்கிறான்.

    தன் பால்யத்தில் ‘மாரிமுத்துவின் வீட்டுப் பண்ணயத்தில்’ ராமன் வேலை செய்த போது, இருவருக்கும் கூடியிருந்த நட்பின் நெருக்கம், பல வருடங்களுக்குப் பின்னும், பசுமை மாறா பழைய நினைவுகளோடு தொடர்கிறது. இந்நட்பின் நெருக்கத்தால்தான், மாரிமுத்துவுக்குப் ‘பெண்’ பார்த்துத் தருகிறான் ராமன். எவ்வளவுதான் நெருக்கமாக மாரிமுத்துவும் ராமனும் ஒட்டி உறவாடினாலும், அவர்களுக்குள்ளும் ஒரு விலகலும் இருக்கத்தான் செய்கிறது. ராமனைப்போல் ஒரே மூச்சில் மாரிமுத்துவால் குடிக்கவே முடிவதில்லை. குடிமயக்கில், “உங்காலக் காட்டுறா… கும்புட்டுப் படுக்கோணும்” எனக் கெஞ்சினாலும், ‘ஆட்டுக்கறி’ தின்னும் மாரிமுத்துவால், ராமனைப்போல ‘மாட்டுக்கறி’ தின்ன முடிவதில்லை. எனினும், இவ்வேறுபாடுகளைப் பொருட்படுத்தாத ஒருவகைப் புரிதலுணர்வும் அவர்களிடமுள்ளது. “நாஞ் சொல்றதக் கேட்டா எண்ணிப் பதனஞ்சே நாள்ல உங் கலியாணம்” என ராமன் கூறுவதைத் தட்டாமல் மாரிமுத்து ஏற்றுக் கொள்வதற்கும், பால்யத்தின் தொடர்ச்சியாக வரும் புரிந்துகொள்ளலே காரணமாகும். இவ்வாறு தானே உருவாக்கிய கூண்டுக்குள் புகுந்து பூட்டிக் கொண்டு வெளியே வர இயலாமல் தவிக்கும் மாரிமுத்துக் கவுண்டனுக்குக் கூண்டை உடைத்தெறிந்துவிட்டுக் களிப்பும் சுதந்திரமுமுள்ள ஒரு மனிதனாக அவன் வெளிப்படுவதற்குரிய ‘கல்யாண வழியை’ச் சக்கிலி ராமன் காட்டி உதவுவதாகப் பெருமாள்முருகன் சித்திரித்துள்ளது, எவ்வகைக் கோணத்திலிருந்து அணுகினாலும் மிகவும் முற்போக்கானதேயாகும்.

    படையாச்சியுடன் ஓடிப் போனவளாகவும், பண்ணயத்துச் சக்கிலியுடன் கூடி ஓடிப் போனவளாகவும் பலவாறாகப் பேசப்பட்டுப் பெற்றோராலும் கைவிடப்பட்ட கவுண்டப் பெண்ணின் ‘அப்பன் பேர் தெரியாத ஒரு பொண்ண’த்தான் மாரிமுத்துவுக்குப் பேசி முடிக்கிறான் ராமன். அந்தக் ‘கரட்டுப்பாளையம்’ பெண்ணின் பெயர் ‘ராசாமணி’ எனத் தெரிந்தவுடன், முதன்முதலாகத் தான் பார்த்து மயங்கியவளின் பெயரும் அதுதானே என்ற தனியோர் இன்ப நினைவுடன், உடனடியாகத் திருமணத்திற்கு மாரிமுத்துவும் இசைகிறான். இதற்குப் பெற்றோரின் எதிர்ப்புக் கிளம்பும்போது, முன்போல இப்போதும் மாரிமுத்து பேசாதிருப்பதில்லை. “ஆமா, இப்படியே சொல்லிக்கிட்டிருங்க. எனக்கும் முப்பத்தஞ்சு வயசாவுதில்ல. பனியிலயும் குளிர்லயும் நாங் கைல புடிச்சுக்கிட்டுக் கெடக்கறன். கெழவனும் கெழவியும் ஆன பொறவும் உள்ள போயித் தாழப் போட்டுப் படுத்துக்கங்க” எனக் குரூரமாகப் பேசுவதன்வழிப் பெற்றோரின் எதிர்ப்பைச் சிதறடித்து ஒன்றுமில்லாமல் நொறுக்கிவிடவே மாரிமுத்து முனைகிறான். ஆனாலும், அவனின் அம்மாவின் வாய் கொஞ்சமும் ஓய்வதாயில்லை. “பெத்த தாய் தகப்பனைப் பாத்துப் பேசற வார்த்தையாடா…. அப்பிடித்தான் எங்கம்மாளச் சொல்லி அவளத் தொரத்துன. இப்ப என்னயும் தொரத்திட்டு எவளயாச்சும் இங்கக் கொண்டாந்து வெச்சுக்கலாம்னு பாக்கறயாடா….” எனக் கேட்டு, மாரிமுத்துவின் கோபத்தை மேலும் கிண்டிவிடுகிறாள். அடுத்த அம்பையும், தன் அம்மாவைக் குறிபார்த்து எய்ய மாரிமுத்து தவறுவதில்லை. “எடுபட்டதோ எழவெடுத்ததோ எதும் உனக்கு ஆவாதுங்கறயே… நீ என்ன நெனச்சுக் கிட்டு இருக்கற? நடு ஊட்ல மெத்த விரிச்சுப் படுத்துக்கிட்டு நீயே கெடக்கலாம்னு தான் பாக்கற. போற போக்கப் பாத்தா… அங்க இங்கப் பொண்ணுப் பாக்க ஏண்டா போற…. நானிருக்கறன் போதாதான்னு சொல்லுவ….” என்கிறான் மாரிமுத்து. இவ்வாறு எங்குத் தான் அடித்தால் அவளுக்கு வலிக்குமோ, அங்குச் சொற்கள் வீசி மாரிமுத்து விளாசுவதற்குப் பின்வருமாறு மாரிமுத்துவின் தாய் பதிலடி தருவதாகப் பெருமாள் முருகன் காட்டுகிறார். “அடப்பாவி….வாய் புழுத்துப் பேசறாப்பலப் பேச எங்கடா கத்துக் கிட்ட? சக்கிலி சவகாசம் மானக் கேட்டுலதான் முடியும்னு சும்மாவா சொல்றாங்க….” எனத் ‘தாய் -மகன்’ சண்டையைத் தந்திரமாகச் சக்கிலியின் பக்கம் திருப்பிவிடுகிறாள். (இதற்கு எதிராக மாரிமுத்து ஏதும் பேசுவதாகப் பெருமாள்முருகன் காட்டவில்லை.) இவ்வாறு அப்பட்டமாகப் பேசிவிடுவது மாரிமுத்துவின் இயல்புதான் என்பதைத் தன் அம்மாயிக் கிழவியைப் புண்படுத்தி அவன் பேசியது வழியேயும் தெளிவாக அவள் அறிந்திருந்தாலும், இங்குச் சக்கிலி ராமன் மீது அவள் பழிபோடுவது ஏன் நிகழ்கிறது? அவ்வளவு வலுவான ஒரு பாத்திரமாகக் கங்கணத்தின் கதையோட்டத்தினூடே ராமன் மேற்கிளம்பிவிடுவதுதான் காரணமென்று தோன்றுகிறது. இதற்கு மேலும்கூட நகர்ந்து, “ஒரு மொழக் கவுறுதான் இன்னமே எங்கதி” எனத் தன் தாய் வாய்ச் சொல்லளவில் மிரட்டுவதற்கும் ஓர் எதிர்வினையாகச் செயலளவில் தூக்குப் போட்டுக் கொள்ளவும் மாரிமுத்து துணிந்துவிடுகிறான். இங்கேயே, ‘இக்குடும்ப நாடகமும்’, ஒரு முடிவுக்கு உடனே வந்துவிடுகிறது. “எஞ்சாமீ … உன்னோட விருப்பப்படி பண்ணிக்கடா” எனத் தாயின் ‘அருள் வாக்கு’ம் மாரிமுத்துவுக்குக் கிடைத்துவிடுகிறது. இதற்குப் பின்னும், “காடு வர்ற நேரம் பொண்டாட்டியும் வர்றா, நெலமும் பொண்ணும் சேத்து எனக்குடா” எனத் துள்ளும் மாரிமுத்துவைப் பின்வருமாறு ‘பச்சையாக’ ராமன் நக்கலடிப்பதாகப் பெருமாள்முருகன் புனைகிறார். “அது மட்டுமில்லய்யா. அப்பம் பேரு தெரியாத பொண்ணுன்னு சொன்னீல்ல. உனக்காட்டம் ஆருக்கய்யா மாமியா வாய்ப்பா? பாத்தீ இல்ல. இன்னம் பொண்ணுக்கு அக்கா மாதிரிதான் அந்தக் கவுண்டிச்சி இருக்குது. அப்பப்ப…. மாமியாளையும் பாத்துக்கலாமய்யா. வயசுபோயிக் கலியாணம் ஆனாலும் அதிருஷ்டம்தான்யா உனக்கு…..”

    இவ்வாறாகக் ‘கங்கணத்தில்’ சக்கிலி ராமன் பேசுவதற்கான தேவைதான் என்ன? ‘யதார்த்தத்தில் ராமன் அப்படித்தான்’ என, இதற்குப் பதிலளிப்பது எளிதுதான். ஆனால், பெண்ணைக் கொச்சைப்படுத்தாத மாற்றுப் புனைவுக்கான ஒரு சமூகத்தேவை இங்குத் தோன்றவேயில்லையா? இப்பேச்சைத் தானாவதித் தாத்தாவோ, தம்பி செல்வராசுவோ பேசுவதாக ஏன் காட்டப்படவில்லை?தன் தாயைத் தவறாகக் காணும் மாரிமுத்துவின் நினைப்பு, கந்த மூப்பனைப் படுக்கைக்குக் கூப்பிடும் பாட்டியின் அந்தரங்க உளறல், விவகாரமான அம்மா – மகன் உறவு, முற்சுட்டிய மாப்பிள்ளை – மாமியார் பிறழ்வு எனச் சக்கிலி ராமனை முன்வைத்தே இம்முடிச்சுகள் அனைத்தும் அவிழ்க்கப்படுவது எதற்காக? அடித்தட்டு மக்களிடம் ‘மன மறைவுப் பிரதேசங்களே’ இல்லை என்பதைப் புனைவில் இப்படித்தான் வெளிப்படுத்திக் காட்டியாக வேண்டுமா என்ன? இறுதியாகச் சுட்டிக் காட்டப்பட்ட ‘மாப்பிள்ளை – மாமியார்’ தொடர்பான சக்கிலி ராமனின் பேச்சு, ஆணாதிக்கச் சமூகமொன்றின் உச்சபட்சமான கொச்சையாக அர்த்தப்படவில்லையா? இதைத் தவிர்த்திருந்தால், ராமனின் பாத்திரப் புனைவாக்கம் மேலும் தனிப்பொலிவு பெற்றிருந்திருக்கக்கூடும். ஒழுக்கம் பேணும் நடுத்தட்டுவர்க்கப் பார்வையாக,இதனைக் கருதுவதை விடவும், ‘சக்கிலி இப்படித்தான்’ என்ற சித்திரிப்புப் பற்றிய விமர்சனமாகக் கொள்வதுதான் பொருத்தமுடையதாகும்.

    ‘மாரிமுத்து – ராசாமணி’ கல்யாண வேலைகளும், அது தொடர்பான சடங்குகளும், சாதி வழக்கங்களும், உறவு சார்ந்த சண்டைகளும், மிகவும் விரிவான முறையில் ‘கங்கணம்’ நாவலின் பின்பகுதியில் ‘பதிவு’ செய்யப்பட்டுள்ளன. இப்பதிவுகளினூடே, ‘மாரிமுத்து – ராமன்’ நட்பு என்பது, எவ்வாறு சாதிக்குள் சிக்கி உறவும் விலகலுமாய்த் தொடர்கிறது என்பதற்கான சில தடயங்களையும் காணலாம். தன் கல்யாணத்துக்கு மண்டபம் முன்பதிவு செய்யத் தான் அனுப்பி உள்ளே போகும் ராமனை, “….சக்கிலிய அனுப்புனா யாருன்னு நெனக்கறது….. பெரிய பன்னாட்டு மயராட்டம் கேக்கறான்” என மண்டபத்துக்காரி இடித்துப் பேசுவதற்குப் பதிலாக, “அப்புடீங்களா. நான் கண்டிச்சு வெக்கறனுங்க” என்றுதான் மாரிமுத்துவால் பதிலுரைக்க முடிகிறது. இதைக்கூடப் பெற்ற தாயிடம் அவனால் சொல்ல முடியவில்லை என்பதும், முன்பே சுட்டப்பட்டது. மேலும், அம்மாவின் ஏகடியத்துக்குப் பயந்து, கல்யாணத் துணியைக்கூட ரகசியமாகத் தான் ராமனுக்கு மாரிமுத்து எடுத்துத்தருகிறான். பண்ணயத்துக்கு ஆளுக்காரனாக வர மறுத்துவிடும் ராமனுக்குப் பிரிவினையாகி வரும் தன் செம்மங்காட்டைத் தருவதாகக் ‘கறி’ தின்னும் ருசியில் முதலில் சொல்லிவிட்டுப் பிறகு தனியாகச் செல்வராசுவிடம் பேசுகின்ற போது, ராமனைப் பின்வருமாறு இகழ்ந்துரைக்கிறான் மாரிமுத்து. “அவன் பெரிய மசுராட்டம் பண்ணயத்துக்கு வரமாட்டங்கறான். அவன் பேர்ல காட்டயா எழுதி வெக்க முடியும்? கைச்செலவுக்குக் காசு குடுக்கறன். கலியாணத்துக்கு அவனூட்ல எல்லார்க்கும் துணிமணி எடுத்திருக்கறன். குஞ்சு குளுவானுக்குக்கூட எடுத்துத் தந்து இருக்கறன். இன்னம் என்ன செய்யறது? காட்டுக்கு முட்டுவழி போடக்கூடக் காசு இல்லாதவனக் கொண்டாந்து வெக்கறதும் ஒன்னுதான். கொற போடறதும் ஒன்னு தான்” என்கிறான் மாரிமுத்து. எனவே, தம்பி செல்வராசுவுக்கே செம்மங்காட்டைத் தர நினைத்திருப்பதாகவும் வாக்களிக்கிறான். இங்குச் ‘சாதி’சார் விலகல் இருக்கத்தானே செய்கிறது? ஓட்டலில் ராமனுக்குக் ‘கள்ளும் கறியும்’ வாங்கித் தந்தபோதிலும், அவன் விரும்பும் காடைக்கறியைத் தின்னுவதற்கு மாரிமுத்து அவனை அனுமதிப்பதில்லை. “டேய் வேண்டாண்டா….எனக்காவ வேண்டாண்டா… வேற என்ன கேட்டாலும் வாங்கித் தர்றண்டா. காட எங்க சாமீடா…” என்றும், “டேய் அப்பம் பேரு தெரியாத பொண்ணக் கட்டுனாலும் கட்டுவனே தவிர, காடையத் திங்கமாட்டன். காடை எஞ்சாமீடா….” என்றும் மாரிமுத்து ஒப்புதல் வாக்குமூலமளிக்கிறான். தானும் ‘காடைக் கூட்டத்தைச் சேர்ந்த கவுண்டன்’ என்ற தனது உள்நினைவைக் குடிவெறியில் உளறும்போதும்கூட மாரிமுத்து மறக்காததிலிருந்து, அவனது சுய சாதிப் பற்றின் ஆழத்தை அறிகிறோம்.

    கங்கணத்தை நாம் வாசித்து முடித்தபின், சாதிக்கும் திருமண உறவுக்குமிடையில் நிலவும் வலுவான அகப்பிடிப்பைப் பற்றியும் நன்கறிந்துகொள்கிறோம். தனி வாழ்வில் குறுக்கிடும் சுய சாதியின் தலையீட்டைத் தன்னளவில் ‘தொந்தரவாக’வே மாரிமுத்து உணர்ந்திருந்தாலும்கூட, அதனைத் தகர்க்க நினைக்காமல், அதன் இறுக்கத்தைத் தன் நலன்களின் ஒரு பாதுகாப்பரணாகப் புரிந்துகொண்டு, அதற்குள்ளே சென்று சுகமாகப் பதுங்கிக்கொள்வதையே ‘நிம்மதி’க்கான சூத்திரமாகக் கண்டுபிடித்துக்கொள்கிறான்.  சாதியால் மிகவலுவாகக் கட்டப்பட்டுள்ள கொங்குக் கவுண்டர் சமூகத்தில், மாரிமுத்து முதலியோரின் வாழ்வு சிக்கலாவதற்குப் ‘பாடு பழைமை’ பேணக் கருதும் அவர்களின் ‘சுய லாப’த் திருமணக் கணக்குகளே காரணம். கல்யாணமாவதற்கு மாரிமுத்துவுக்குத் தான் நாவலுக்குள் எத்தனை எத்தனை வாய்ப்புகள்! சிறிதே அவன் துணிந்திருந்தால், சற்றேனும் அவன் எதிர்த்துப் போராடியிருந்தால், எப்போதோ முடிந்து போயிருக்க வேண்டிய அவன் திருமணம், இறுதியில்கூட அவன் பாட்டி சாவை மறைத்துத்தான் நிறைவேறியாக வேண்டியுள்ளது.அப்போதும்கூட, யதார்த்தவாதியான நம் மாரிமுத்து, கவுண்டச்சி பெத்த ‘அப்பன் பேரு தெரியாத’ பெண்ணை, வேறு வழியே இல்லாத ஒரு நிலையில்தான் (மாற்று வாழ்வை முன்னெடுக்கும் நோக்கோடு இல்லை!), கல்யாணம் செய்துகொள்ள இசைகிறான். (அந்தப் பெண்ணுக்கு மாரிமுத்துவின் வயதில் பாதிதான் ஆகிறது!) இவ்வகையில், ‘சாதி x திருமணம்’ எனப் பரந்த ஒரு தளத்தில் விரிந்திருக்க வேண்டிய இந்தப் புனைவு, மாரிமுத்துவின் தனிமனிதப் பிரச்சினையாகிக் குறுகிய ஒரு தளத்தில் கட்டுண்டு, அதற்குத் தீர்வாகப் பெண்ணொருத்தியைக் கண்டுபிடித்த அக்கணத்துடனேயே, ‘யாவும் முடிந்துபோகிற நிம்மதியுடன்’ நின்றுபோய்விடுகிறது.

…முடிவாக…

    துல்லியமான களச் சித்திரிப்பு – நம்பகமான தகவல் பதிவு – லகுவான ஆனால் செறிவான மொழிப் பயன்பாடு – இதுகாறும் தமிழ் நாவல் வெளிக்குள் மையப்படுத்தப் படாத மக்களின் வாழ்வியலைப் பேச முனைதல் – உண்மை மனிதரையும் உண்மை நிகழ்வுகளையும் பற்றிக் கூடுமானவரையில் உள்ளதை உள்ளவாறே எழுதிவிடத் தயங்காத துணிவு – கதைப்பொருளுடன் தொடர்புடைய சிறிய சிறிய செய்திகளையும் பொறுப்பாகச் சேகரித்துக் கட்டுக்கோப்புச் சிதையாது கதைக்குள் அவற்றைப் பின்னிப் பிணைத்துவிடும் நுண்மை – கதைச்சுவையை விடவும் கதையனுபவம் என்பதையே முதன்மைப்படுத்தும் விழிப்பான புனைவு – இவை  பெருமாள்முருகனின் நிறைகள்.

    உள்ளிழுக்கும் சுய அனுபவ வட்டத்தின் வரையறுக்கப்பட்ட எல்லைகளை மீற முடியாமை – புனைவெழுத்தின் விரிந்த சாத்தியப்பாடுகளைப் பரிசோதிக்காமை – தத்ரூபமாகச் சித்திரித்துக் காட்டும் வர்க்கமுரண்களைக் கூர்மைப்படுத்திக் காட்டாமை – பெண் சித்திரிப்பில் போதிய கவனமின்மை – பாத்திரங்களின் புற இயக்கத்துக்குத் தரும் முக்கியத்துவத்தை, அதே அளவிற்குப் பாத்திரங்களின் அக இயக்கத்துக்கும் அளிக்காமை – சக்கிலியர்களின் நோக்கிலிருந்து கவுண்டர்களின் வாழ்வியலைத் தீவிரமாக விமர்சிக்காமை – துக்க முடிவு கொண்டவையாகத் தம் நாவல்களைத் தொடர்ந்து ஒரே விதமாகப் புனைதல் – இவை பெருமாள்முருகனின் குறைகள்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. பொதுபுத்தியின் மனக்கோணலை நிமிர்த்தும்  'கழிப்பறையின் கிரகப்பிரவேசம்' :பெருமாள்முருகனின் சிறுகதைகள்: கல்யாணராமன் 
 2. சமூகப் பொறுப்புணர்வின் சாட்சியம்:நிழல் முற்றம் (1993) : கல்யாணராமன்
 3. யதார்த்தவாத மெளனம் - கல்யாணராமன்
 4. யதார்த்தவாதத்தின் போதாமையும் ஆவணப்பதிவின் நம்பகத்தன்மையும் - கல்யாணராமன்
 5. மாதொருபாகன் (2010) : திசைதிருப்பப்பட்ட பிரச்சினை =:கல்யாணராமன்