பெருமாள் முருகனின் படைப்புலகம்-6

இன்று வரையிலுமான தமிழ்க் கவிதையின் கொடுமுடியாகச் சங்க இலக்கியம் கருதப்படுவது போல, நவீனத் தமிழின் உச்சமாகச் சிறுகதைகளே அறியப்படுகின்றன. பாலை பாடிய பெருங்கடுங்கோவும் குறிஞ்சிக்கபிலனும் ‘அகவன் மகளே’ ஔவையும் ‘ஞாயிறு காயும்’ வெள்ளிவீதியும் ‘தொடுவுழி’ப் பரணர் முதலிய சங்கப் புலவரும் எவ்வாறு எல்லைக்கல்களாகத் தமிழ்க் கவிதையில் நிற்கிறார்களோ, அப்படித்தான் புதுமைப்பித்தனும் கு.ப.ராஜகோபாலனும் மெளனியும், கு.அழகிரிசாமி தி.ஜானகிராமன் ஜெயகாந்தன் சுந்தரராமசாமி கி.ராஜநாராயணன் முதலியோரும் தமிழ்ச் சிறுகதையில் தொடுவானாகத் தொடர்ந்து நிலைபெற்றிருக்கிறார்கள். ஒரு மகத்தான கலை வடிவம், அது தொடங்கும் அக்காலத்திலேயே ஆகப்பெரும் வீச்சுடன் வெளிப்படுவது, தமிழில் நவீனக்கவிதையிலும் சிறுகதையிலும்தான் நிகழ்ந்திருக்கிறது. இதன் மறுவிளைவாக, இம்மொழியில் கவிதையும் சிறுகதையும் எழுத முன்வருகின்றவர்கள் யாராயினும், அடிப்படையிலேயே அவர்கள், மகத்தான பல முன்மாதிரி ஆக்கங்களோடு மோதி, அவற்றைக் கடந்து முன்செல்லும் படைப்பு நெருக்கடிக்கு முகந்தரவேண்டியுள்ளது. இந்நெருக்கடியைத் தம்மை வழிநடத்தும் அறைகூவலாக ஏற்றுக்கொண்டே, சிறு பத்திரிகை மரபுவழி நவீனத் தமிழ்ப் படைப்புலகிற்குள் நுழைவோர், பெறுமதியான சிறுகதைகளை உருவாக்கும் மிகப்பெரும் பணியில் மலையேறும் உத்வேகத்துடன் உற்சாகமாக ஈடுபட்டுள்ளனர். சமகாலச் சூழல் என்பது எவ்வளவு பாதகமானதாகவும் நம்பிக்கையளிக்காததாகவும் இருந்தபோதிலும், உரியவாறு தம்மைப் பொருட்படுத்திக் கண்டுகொள்ளாத பெருந்திரள் வாசகர்களின் பாராமுகத்திற்கிடையிலும், மானுட வாழ்வைத் தொடர்ந்தும் ஆழ்ந்தும் கவனித்துப் புனையும் காத்திரமான சிறுகதைக் கதைஞர்களுள் ஒருவராகத் தம் தனித்துவத்துடன் பெருமாள்முருகன்  பெறும் முக்கியத்துவத்தைத் துலக்கிக் காட்ட முனைவது, இக்கட்டுரையின் இலக்காகும்.

    தீண்டுசாதிகளுக்கும் தீண்டாச் சாதிகளுக்குமான வர்க்க இணக்கத்தையும் சாதிப் பிணக்கத்தையும் எழுதுபவையாகப் பெ.மு.வின் சிறுகதைகளை வரையறுக்கலாம். சக மனிதர்களே சக மனிதரிடம் ஏற்படுத்தும் நீங்கா வடுக்களையும் புரையோடிப் போன புண்களையும் பெ.மு. தடங்காட்டுகிறார்.  குரூப்-1 தேர்வெழுதிய இரு மாணவர்களில் ஒருவனுக்கு வெற்றி; குரூப்-2 முடிவுக்குக் காத்திருக்கிறான் மற்றவன். இருவருக்கும் ஆசி வழங்குகிறார் ஆசிரியர். அவர் வீட்டில் ஒரு தகர நாற்காலியும் ஒரு பெஞ்சுமே இருக்கின்றன. குரூப்-1இல் தோற்றவன், நாற்காலியில் அமர்ந்துவிடுகிறான். வெற்றி பெற்றவனுக்கோ பெஞ்சுதான் கிடைக்கிறது. அப்படியில்லை; இயல்பாக நடந்த ஒரு சம்பவத்தைப் படிநிலைச் சமூகத்தின் முக்கியப் பிரதிநிதியான ஆசிரியரின் மனம் இப்படிப் பேத உணர்வுடன் அசைபோடுகிறது. இது இப்புனைவில் வெளிப்படையாகச் சுட்டப்படாமல், உள்ளுறையும் குறியீட்டுத் தொனியாகவே முன்வைக்கப்படுகிறது. ‘டீ’ போட்டு எடுத்து வருவதற்காக ஆசிரியர் உட்சென்றுவிட்டு, மீண்டும் அறைக்குள் அவர் சின்னப் பீங்கான் தேநீர்க் கோப்பைகளுடன் வந்தபின் காட்சி மாறிவிடுகிறது. வெற்றி பெற்றவன் தகர நாற்காலிக்கும், தோற்றுப்போனவன் பெஞ்சுக்கும் இடம்மாறி அமர்ந்து விட்டிருக்கின்றனர். இது இயல்பாக நடந்த ஒன்றில்லை என்றாலும், ஆசிரியருக்கு இம்மாற்றமே ஆசுவாசமளிப்பதாயுள்ளது. பொருளைவிட மகிழ்ச்சிதான் பெரிது என்பது மனித மனதுக்குத் தெரிவதில்லை என்றும், சம்பவங்களோடு தொடர்புபடும்போதே பொருளுக்கு அர்த்தம் உருவாகிறது என்றும், தேவையைப் பொருள் அதிகரித்து விடுகிறது என்றும் ஆசிரியர் யோசிக்கிறார். இது திட்டவட்டமான ஒரு வர்க்கப் பார்வை ஆகும். ‘மாலை நேரத் தேநீர்’ என்ற இந்தச் சிறுகதை, சாதிரீதியாக மேலிருந்து கீழே அடுக்கப்பட்ட ஓர் ஆண் முதன்மைச் சமூகத்திலும், அதிகாரம் சார்ந்த வர்க்க உணர்வு எவ்வளவு உளவியல் அழுத்தத்தைத் தொடர்புடைய தனிமனிதர் மீது தூண்டிவிடுகிறது என்பதைத் துல்லியமாய்ப் புலப்படுத்தும் பண்பாட்டு ஆவணமாகியுள்ளது.

    தொட்டுப் பொட்டிடத் தூண்டும் தன் கருப்பு நிறத்தால் தொடர்ந்து பிறரால் சீண்டப்படுவதை முறியடிக்கச் செக்கச் சிவந்த அரவிந்த்சாமியைத் தன் வழிபாட்டு நாயகனாக்கிக் கொள்கிறாள் சரஸ்வதி. தன் கல்லூரிக் காலத்திலிருந்து தொடங்கி, ஆசிரியை வேலை பார்க்கும் இப்போது வரையிலும், அரவிந்த்சாமி பற்றிய சரஸ்வதியின் பெருமிதம்தான், பிறரின் நிற இழிவுப் பேச்சிலிருந்து அவளைக் காத்து வருகிறது. ‘தார்ல போட்டுப் பொரட்டி எடுத்தாப்ல எங்கடி இப்பிடி வந்து பொறந்த?’ எனப் பெற்ற தாயே கேட்கிறாள். மூன்று தங்கைகளுக்கும் தம்பிக்கும் மணமாகிவிட்ட பின்னும், கல்யாணமாகாத ஒரு முதிர்கன்னியாகத் தன்னுடைய குடும்பத்திற்காகவே உழைத்துத் தேய்ந்துகொண்டிருக்கிறாள் சரஸ்வதி. மாசுமருவற்ற உருண்டை முகம் கொண்ட அரவிந்த்சாமியைப் போன்ற செக்கச் சிவந்தவனைக் கணவனாக அடையும் கனவே, அவளுக்கு மேற்கொண்டு படிக்கவும் உற்சாகமாக முன்னேறவும் கைப்பிடித்து வழிகாட்டவும் உதவியும் ஊக்கமுமளிக்கிறது. ‘இனி அவள் திருமணம் செய்துகொள்ள மாட்டாள் என்று ஒருவழியாய் முடிவெடுத்து எல்லாரும் நிம்மதியானார்கள்’ என்று ஒரு வரி, இக்கதையில் வருகிறது. நாற்பது வயதானவளின் உள்ளத்தில், வளரிளம் பருவத்திலேயே எழுதப்பட்டுவிட்ட அரவிந்த்சாமியின் அழகிய வாலிப முகம் அழியாது நிலைத்துவிடுகிறது. வயதான அரவிந்த்சாமியைப் பத்திரிகைகளிலும் திரையிலும் பார்ப்பதைச் சரஸ்வதி தவிர்க்கிறாள். ஆனால், அரவிந்த்சாமியின் ரீ-என்ட்ரி பற்றிய சக ஆசிரியர்களின் வம்புப்பேச்சால், பத்தாண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் அவள் அகம் கிளர்ச்சியுறுகிறது. ஒருமுறை பத்திரிகையில் முதுமையுற்ற தன்னுடைய நாயகனின் முகத்தைப் பார்த்துவிட்டால், பிறகு தன் உள்ளத்தில் எழுதிக்கொண்ட இளம்முகம் சிதைந்துபோகும் என நினைக்கிறாள். மாலைநேர இலவச டியூஷன் சேவையை மறந்து, பத்திரிகைக்காக நடக்கையில், ஆறாம் வகுப்பு வகிதா எதிர்ப்பட்டு, ‘இன்னைக்கு டூசன் இல்லையா டீச்சர்?’ என்கிறாள். அருகிலிருக்கும் இந்தப் பிஞ்சு முகத்தைப் பிடித்துக் கொண்டு, அரவிந்த்சாமியின் முகத்தை உதறிவிடுகிறாள்‌. வகிதாவின் கருமுகத்தில் இன்னொரு சரஸ்வதி தெரிந்திருக்கலாம். இதை வர்க்க இணக்கமென்றும், இயங்கியல் நோக்கிலிருந்து நீட்டிக்கொள்ளலாம்.

    முழுக்கிராம வாழ்வோ, முழுநகர வாழ்வோ பெ.மு.வின் சிறுகதைகளில் இல்லை. நகரம் குறுக்கிடும் கிராம வாழ்வும், கிராமம் நீங்கிவிடாத நகர வாழ்வுமே பெரிதும் சித்திரிக்கப்படுகின்றன. நகரம் என்று சொல்லும்போது, புறநகரம் அல்லது நகர்ப்புறம் என்றே பொருள் கொள்ளவேண்டும். பெ.மு.வின் கதைகளில் பெருநகரங்களில்லை; அப்படியே வந்தாலும் வெறும் பெயர்சுட்டலாக மட்டுமே அவை வருகின்றன. கொங்கு வேளாண் வாழ்வின் நினைப்பின்பக் களிப்புகளும் துயரங்களின் ஞாபக மீட்டல்களுமே பெ.மு.வின் சிறுகதைகளில் பேசப்பட்டுள்ளன. வழிவழியாக மாறிவரும் உள்ளூர்ப் பண்பாடும் வெளிக்கலப்புப் பண்பாட்டின் தலைநீட்டல்களும் யதார்த்தத் தர்க்கத்துடன் முரண்படாதவாறு கதைக்கோலம் பூண்டுள்ளன. சாதி, மதம், குடும்பம், ஊர், நாடு முதலிய அதிகார அமைப்புகள் எவ்வளவு வன்முறையைத் தம்முள் பொதிந்துவைத்துக் கொண்டுள்ளன என்பதையும் கூட்டுவாழ்வின் ஒற்றுமை எவ்வாறு சிதைக்கப்பட்டுத் தனிநபர் சுயநலன்களின் அகக்குறுக்கல்களாகத் தேய்ந்துள்ளன என்பதையும் பெ.மு. விண்டுகாட்டுகிறார். பொருளைப் பயன்படுத்திவிட்டுத் தூர எறிந்துவிடும் பண்பாட்டை விரும்பி உலகமே வரித்துக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், சக மனிதர்களுக்கே மரியாதையில்லாதபோது, வேளாண் வாழ்விற்குத் துணைநின்று கிழடுதட்டிவிட்ட எருமைக்கெல்லாம் கறிவெட்டும்வரை உபயோகமிருக்கிறதே என்றெண்ணித் திருப்திப் பட்டுக்கொள்ளச் சொல்கிறார்கள் பொருள்வயிற்பட்டோர். அவ்வளவு வலிமை பழகாத குடும்பத் தாய், கிழட்டெருமையை விற்பதற்கும்கூடத் தன் எதிர்ப்பைத் தெரிவிக்கிறாள். ‘எருமப் பைத்தியம் புடிச்சே இவளக் கொண்டோயிரு மாட்டம்’ என்கிறார் கணவர். அவள் மடப்பம், இவருக்குக் கேலிப்பொருளாகிறது. பல கன்றுகள் ஈன்ற அந்த எருமை, கடைசியில் ஒருபடிப் பாலோடு, ஏவாரிக்கு விற்கப்படுகிறது. சனிச் சந்தைக்குப் போன எருமை, சில நாளில் எப்படியோ மீண்டும் இவர்கள் வீட்டைத் தேடிவந்துவிடுகிறது. இது ஒரு சாதாரண விஷயமில்லை என்கிறது ஊர். இது வெறும் எருமை பற்றிய கதைதானா? வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தோர் நினைவுகளிலும்கூட இத்தகைய எருமைகளே அசைபோட்டபடி படுத்துறங்குகின்றன! இந்த உள்மன எருமைகளை உசுப்பிவிடும் ஒரு கதை எனப் பெருநகரத்தானின் பார்வையிலிருந்தும், இக்கதையை மேலும் அகலப்படுத்தலாம். ‘வித்த எருமை எங்கட்டுத்தரயத் தேடித் தானாவே வந்திருச்சு. நான் வளத்த சீமாட்டி அவ. என்னய உட்டுப் போவ மாட்டீங்கறா. தேடி வந்து கட்டுத்தரயில நின்னவள வெரட்டி உடமாட்டன். வாங்குன பணத்தத் திருப்பிக் குடுத்தர்றன். வாங்கிக்கிட்டுப் போவச் சொல்லுங்க. எருமதான் வேணுமின்னா எஞ்சவத்து மேல ஏறிப் போயிப் புடிச்சுக்கிட்டுப் போவட்டும்’ என்கிறாள். இக்கதைக்குப் பெ.மு., ‘எருமைச் சீமாட்டி’ எனப் பொருத்தமாய்த் தலைப்பிட்டுள்ளார். 15.05.2013இல் எழுதப்பட்ட இக்கதை, குடியேற்ற உரிமைப் பிரச்சனை பற்றியெரியும் இந்த 2021இல், வேறொரு நுண்பரிமாணம் பெற்றுவிடுவதையும் வாசகர்கள் கவனிக்கவேண்டும்.

    ஒரு நாடோடிக் குடும்பம். தாத்தா பாட்டியுடன், பெரியப்பன் குடும்பமும் சித்தப்பன் குடும்பமுமாய் 12, 13 பேர்கள். ஏழெட்டு வயதுச் சிறுவன் குமரேசன் தாத்தனோடு தொத்திக்கொண்டு பன்றிக்கறிக்குச் செல்கிறான். ‘ஊர் முழுக்கக் குடியானவர்கள் வசித்தனர். அந்தப் பெண்கள் பன்றிக்கறி சமைக்கவும் மாட்டார்கள். சாப்பிடவும் மாட்டார்கள். ஆனால், ஆண்களை அப்படிச் சொல்ல முடியாது. அவர்கள் பன்றி வெறியர்கள்’ என்ற பின்னணியுடன், ‘வறுகறி’ கதைக்குள் நுழையும்போதே, கிராம வாழ்வின் ‘இரட்டை மனநிலை’யை விளங்கிக்கொண்டுவிட முடியும். ‘பன்றிக்கறி தின்பவனைத் தாழ்த்தியும் பேசவேண்டும்; பன்றிக்கறியை ருசிக்காமலும் விட்டுவிடக் கூடாது’ என்ற சாதிய உள்முகத்தின் சிதிலமே இக்கதை. வெள்ளையனுக்கும் செல்லையனுக்குமான வேம்புத் தகராறைத் தீர்த்துக்கொள்ளும் களமாகிறது பன்றியைக் கூறுபோடும் இடம். பன்றியைத் தேர்வு செய்வதிலும், விலைபேசி வாங்குவதிலும், அதைத் தூக்கிவருவதிலும், வெட்டிக் கூறுபோடுவதிலும் பேருதவியான தாத்தனைப் ‘பூச்சி’ என்றே ஊரார் விளிக்கின்றனர். வெள்ளையனுக்குப் பின்நிற்கும் இந்தப் பூச்சி, அவர் எது சொன்னாலும், ‘அது செரி சாமி’ என்பது தவிரப் பிறிதேதும் பேசுவதில்லை. பெ.மு.விடம் விமர்சன யதார்த்தவாதம் குறைவாகவும் சாதிய யதார்த்தவாதம் அதிகமாகவும் உள்ளதைப் பல கதைகளிலும் காண்கிறோம். இது பெ.மு. கதைகளுக்குப் பெரும் நம்பகத்தன்மையளிக்கிறது என்பதையும்கூடத் தீர ஆலோசிக்காது புறந்தள்ளி விடுவதற்கில்லை.பன்றியைக் கட்டித் தோளில் தூக்கிச்செல்லும் பாடையைப் ‘பல்லக்கு’ என்றே பன்றி விற்கும் ரங்கன் சொல்வான் என்ற விளிம்புநிலை அழகியலின் குரலும் இக்கதையினுள் பதிவாகியுள்ளது. ‘நிழல்போல வெளிச்சம் பரவியிருந்தபோது, பன்றிப் பல்லக்கை அவர் ஒருபக்கமும் தாத்தன் ஒருபக்கமும் தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள்’ என்ற ருசிகர விவரிப்பால், விளிம்புநிலையினரின் நோக்கிலிருந்தே கதைசொல்லி இயங்குவதைத் தெரிந்துகொள்கிறோம். ஆனால், வெள்ளையனுக்கும் செல்லையனுக்குமான சண்டையில், ‘வேண்டாஞ் சாமீ!’ எனக் கைநீட்டிக் குறுக்கிடும் தாத்தனின் தோளில் ஆழ இறங்கும் கத்தி யாருடையது? அது செல்லையனின் கத்தி எனச் சுலபமாய்ச் சொல்லித் தப்பித்துக்கொண்டுவிட முடியாது. அது ஒடுக்குபவனின் கத்தி. மேலிருப்போர் போடும் சண்டைகள் கீழிருப்போரையே அதிகம் பாதிக்கிறது என்ற சமூகவியல் உண்மையின் நிஜக் காட்சியே இக்கதை.

    ‘சீமைச்சரக்கும் சிகரெட்டும்’ கதையில் வரும் குமரேசனும், இதனினும் நுண்ணிய வன்முறையை, வேறுவகையில் அவனுக்குத் தெரியாமலேயே எதிர்கொள்பவன்தான். கல்லூரியில் ‘மாணவர் பேரவைத் தேர்தல்’ நடக்கிறது. அப்போது புது மாணவனாகச் சேரும் குமரேசன், போட்டியிடுவோர் தருபவற்றைக் கணக்கு வழக்கின்றிப் பெற்றுக் கொள்கிறான். அவர்களின் செலவிலேயே உணவு முதலியவற்றையும் அவன் முடித்துக் கொள்கிறான். தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பாக, பெரிய அணி ஒன்றால் அழைத்துச் செல்லப்பட்டு, நகரத்துக்கு வெளியே ஒரு சிறு குன்றின் அடிவார மண்டபத்தில் தங்க வைக்கப்படுகிறான். சீனியர் அண்ணனிடம் தயவாக நயந்து, குன்று மீதுள்ள முருகன் கோவிலுக்குச் சூடமும் தேங்காயும் வைத்து, ‘நம்மாளு ஜெயிக்கணும்’னு வேண்டிக் கொள்வதாய்ச் சொல்லிப் பத்து ரூபாயை அடித்துவிடுகிறான். ஒவ்வொரு இரவிலும் வயிறுமுட்டக் குடித்துக் கறியும் சோறும் தின்றுவிட்டுப் படுத்துறங்குகிறான். ஒரு வாரம் முழுக்க இதேதான் நடக்கிறது. ஆனால், ஒரே ஒரு பிரச்சனைதான். ஒவ்வொரு இரவிலும் குமரேசன் குடம் குடமாய் வாந்தி எடுத்ததாய்ப் சொல்லிக் காலையில் அந்த இடத்தைச் சுத்தம் செய்ய வைக்கிறார்கள். தேர்தல் நாளன்று, அதன் சூட்சுமத்தைக் குமரேசனின் நண்பன் செல்வன் போட்டுடைக்கிறான். ‘நாஞ் சொன்னன்னு யாருக்கும் தெரியக்கூடாது, என்ன?… நல்லாக் குடிச்சுச் சாப்புட்டுட்டு நீ படுத்துத் தூங்கினியே தவிர, ஒருநாளும் வாந்தி எடுக்கல. ஒவ்வொரு நாளும் எவனெவனோ வாந்தி எடுத்தான். வாந்தி கிடந்த எடத்துல உன்னயக் கொண்டுபோயிப் போட்டுட்டாங்க… சுத்தம் பண்ண ஓராளு வேணுமில்ல?’ என்கிறான். சமுதாய அமைப்பின் அடியில் இருப்பவர்கள், எவ்வளவு மேல்விவரமாய் அமைப்பால் வரும் நலன்களை ருசிக்கப் பார்த்தாலும், அவர்களுக்கே தெரியாமல் அமைப்பு அவர்களைத் திறமையாகப் பயன் கொண்டுவிட்டு உதறிவிடும் என்பதற்குக் குமரேசனை வகைமாதிரியாகக் கருதலாம்.

    தலைமயிரைக் கொத்தாகப் பிடித்துத் தலையைக் கீழே அழுத்தி இடக்கையால் முதுகில் அறையும் அம்மாவிடமிருந்து தப்பி, வளத்தித் தென்னை மீதேறிக் குருத்தில் முதுகு சாய்த்துக் கால்களைக் கவையாக்கி மட்டைகளில் அகட்டி ஊன்றிச் சுகமாகத் தூங்குபவனைப் பேய்க்காற்றும் பெருமழையும் உடன்சேர்ந்துவந்து எழுப்பிவிடுவதை ‘உச்சிக்காற்று’ படம்பிடிக்கிறது. குடும்ப உறவுகளில் நிலவும் வன்முறை மனோபாவம், இளம்பிள்ளைகளை எவ்வளவு தூரத்திற்குப் பாதிக்கிறது என்பதையும், அதிலிருந்து மீள இயற்கையே அவர்களுக்கு உதவமுடியும் என்பதையும் இக்கதை விவரிக்கின்றது. மனிதர்களால் செய்யமுடியாத சாந்தப்படுத்தலை இயற்கையாலேயே செய்யமுடியும் என்பதைக் குமரேசனின் முகத்தில் விழும் அம்முதல் மழைத்துளியால் உணர்கிறோம். இக்கதையில் வருபவனின் பெயரும் குமரேசன்தான். இவன், இதே பெயரில், இன்னும் ஐந்தாறு சிறுகதைகளிலும் வருகிறான். இவற்றைத் தொகுத்துக் கொஞ்சம் கூடுதலாகச் சேர்த்தெழுதினால், ஒரு பெரிய நாவலே கிடைத்துவிடும் என்னுமளவிற்குக் ‘குமரேசன் கதைகள்’, பெ.மு.வின் எழுத்தில் விரிந்தும் நிறைந்துமுள்ளன.

    ‘மன்றோ’ என்ற வெள்ளைக்காரத் துரை, முப்போகம் நெல் நடும் அளவுக்குப் பெரிய ஏரி ஒன்றைப் பொதுமக்களுக்காகக் கட்டியெழுப்புகிறார். ‘ஏரி என்றால் சாமான்யப்பட்ட ஏரி அல்ல; சமுத்திரம்’. துரை பேரை வைத்து, ‘மன்றோ சமுத்திரம்’ என்றழைக்கப்படும் அந்தப் பெரிய ஏரி, காலப்போக்கில் மருவித் திரிந்து, ‘மன்னா சமுத்திரம்’ என, ஊருக்கே பெயராகிவிடுகிறது. ஒருசமயம் பேய்மழை அடிக்கிறது. தன் காட்டில் முத்தான் கடலை போட்டிருக்கிறான். ஏரி நிறைந்து, காடு முழுக்கத் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டால், ஓர் ஏக்கரில் பூத்துச் செழித்திருக்கும் முத்தானின் கடலைக்கொடி யாவும் அழுகி நீர்ச் சமாதியாவதைத் தவிர வேறு வழியில்லை. முத்தான் சோளம் போட்டிருக்கலாம் என யோசிக்கிறான். அது பற்றி இனி யோசித்து என்ன ஆகப்போகிறது? துணிந்துவிடுகிறான்; ஏரியின் மதகை உடைக்கக் கடப்பாறையையும் தூக்கிவிடுகிறான். ஆனால், அவன் மனைவி செல்லாயி குறுக்கிட்டு, முத்தானைத் தடுக்கிறாள். அவளை முத்தான் விரட்ட, முனியப்பன் கோவிலுக்குள் செல்லாயி ஓடுகிறாள். ஆனால், கோயிலுக்குள் நுழைந்த பின்னர் பார்த்தால், செல்லாயியைக் காணோம். மின்னல் ஒளியில், ‘மன்றோ’ சாமி சிலையின் கையிலிருக்கும் துப்பாக்கி, முத்தானையே குறிபார்க்கிறது! இங்கும் சமூக நன்மைக்காகச் சுயநலத்தை விட்டுத்தரும் பொறுப்பு, எளியவனான முத்தானின் மீதே சுமத்தப்படுகிறது. நீரில் மூழ்கிவிடும் அவனின் கடலைக் கொடிகளுக்கான இழப்பீட்டை யாரும் தரப்போவதில்லை; ஆனால் அவனோ சமூக விழுமியங்களுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தாக வேண்டியுள்ளது. இப்படிப் பெ.மு. உத்தேசித்தாரா என்பதைவிடவும், ஒரு வாசகப்பிரதியாக இதை நீட்டிக்கொள்ளப் போதுமான இடம் இக்கதையிலிருப்பதே முக்கியமாகும்.

    இயல்பில் பெ.மு. ஒரு கவிஞர் என்பதைக் காட்டும் பல நுட்பமான தொடர்கள், அவர் சிறுகதைகளிலுள்ளன. ‘சுவரில் துருத்திக்கொண்டிருக்கும் கல்லொன்று பெயர்ந்து விழுவதைப்போல நீரில் படாரென விழுந்தான். வயிற்றில் நீர்ச்சாட்டை பளீரென வெளுத்துவாங்கியது. உடலெங்கும் அச்சத்தின் மின்துகள்கள் பாய்ந்தன’; ‘வயல்களிலும் சாலையின் நீண்ட இடைவெளிகளிலும் எங்காவது தென்படும் மனிதர்கள், கண்டறியாத பறவை போன்றவர்கள். ஆச்சர்யமாய்த் தோன்றிச் செடிகொடிகளுக்குள் கரைந்து போவார்கள்’; ‘ஆலம்பழம் ஒன்று சொத்தென்று அவள் மூட்டைமேல் விழுந்து தேங்கி நின்றது’; ‘ஜன்னல் பலகையில் அழுந்தக் காதை வைத்துக்கொண்டு கேட்டாள். படபடவென்று பலகையில் பெருந்துளிகள் மோதுகிற சத்தம். கேட்கக் கேட்கப் பரவசமாய் இருந்தது’; ‘சுருண்ட முடிக்கற்றைகளை ஒருகோணமாய்ச் சாய்த்து ஒதுக்கிக் கொண்டு சிரித்தாள். ஓசைப்படாமல் நெஞ்சை உள்ளிழுத்து நழுவும் சிரிப்பு’; ‘ஒரு வயல் ஒருத்தியாகவே களைவெட்டி வந்த மாதிரி சந்தோஷம்’; ‘விடியற்காலை காக்கைகளின் கத்தல்போல் பெண்களின் குரல்கள் விடாமல் கேட்டுக் கொண்டேயிருந்தன’; ‘வெள்ளாமை எடுத்துவிட்ட காடு மாதிரி வெறுமை’; ‘எல்லா வழிகளும் டீக்கடைகளைச் சென்றடைகின்றன’; ‘அவன் பிணமானான்;மீண்டும் பிணம் அவனாகிவிட்டது; வேறுபாடு ஒன்றுமில்லை’; ‘திருடனைப் பார்த்து இப்போது பயமில்லை ராசுவுக்கு; அடித்தவனைப் பார்க்கப் பயமாயிருந்தது’; ‘மனித நடமாட்டம் அருக அருக, சாலைக்குப் பிணத்தின் முகம் வந்துவிடுகிறது’; ‘அம்மாவுக்கு உடம்பெங்கும் கண்கள். இருளைத் துளைக்கும் கண்கள். எப்படியான இரவிலும் தேடி அப்பனைக் கண்டுபிடித்துவிடுவாள்’ எனப் பல தொடர்களைப் பெ.மு.வின் கவிநடைக்குச் சான்று காட்டலாம். குறிப்பாக உச்சிக்காற்று’, ‘வேட்கை’, ‘கெக்கலி’, ‘மழைக்குருவி’, ‘நீர் விளையாட்டு’ முதலான சிறுகதைகளில் பெ.மு.வின் மொழி கவிதைக்குக் கிட்டத்தட்ட நிகராவதைக் கருதவேண்டும்.

    ‘இறக்கை விரித்து ஒற்றைக்காலில் உட்கார்ந்திருக்கும் ஆளண்டாப் பட்சிபோல் வேப்பமரம் தோன்றியது’ என்கிறார். இவ்வேம்பினடியில் கட்டில் போட்டுத் தூங்கும் தகப்பனுக்கும், தொட்டில் குழந்தைக்குமான சின்னச் சின்னப் பரிமாற்றங்களைச் ‘சிறிது நிழல்’ பேசுகிறது. ‘பாங்கிழடு’ சாவுத் துக்கம் கேட்க, அவள் போயிருக்கிறாள். இரவு நெடுநேரம் கழித்தே இவனால் மீள வீட்டுக்கு வரமுடியும் என்பதால், பகல் தூக்கமே  இவனுக்குப் பெரும் ஆறுதல். இடையிடையே குழந்தையையும் கவனிக்க வேண்டி வருவதால், இவன் தூக்கம் தடைப்படுகிறது. மனைவியின் மீதும் கோபம் பொங்குகிறது. ‘ஆய்’ போய்விட்ட குழந்தையைக் கண்டு சீறி அடித்துவிடுகிறான். இவன் கால்களைக் கட்டிக்கொண்டழும் குழந்தையின் நிராதரவில் மனம் கனிந்து, ‘வாடா கண்ணு… வாடிச் செல்லம்’ எனக் கொஞ்சிச் சட்டென வாரியணைத்து அழுகிறான். இந்த அழுகை, ஓர் ஆணின் அழுகை. இப்படி ஆண் அழும் கதை தமிழில் எத்தனையுண்டு? எனக் கேட்டுக் கொண்டால்தான், இக்கதையின் அருமை விளங்கும். அதுவும் இது எதன் பொருட்டான அழுகை? பெண்ணால் பேணப்படுபவன் அவளில்லாத ஒரு சிறிய இடைவெளியில்கூட எவ்வளவு மிருக உணர்ச்சி கொண்டுவிடுகிறான் என்பதையே, இது முன்வைக்கிறது. அதைச் ‘சிறிது நிழல்’ என்கிறார். கு.ப.ரா.வின் ‘சிறிது வெளிச்சம்’போலச் ‘சிறிது நிழல்’ இது எனக் கொண்டுகூட்டிக்கொள்ளலாம். ‘இன்பம் நமக்கு எதிரில் வந்து கைகொடுத்துக் கூப்பிட்டாலும் அதை ஏந்திக்கொள்ள உடலும் மனமும் தயாராக இருக்கவேண்டும். பிணத்திற்கு முன் பெருவிருந்துச் சோற்றை வைத்து என்ன பயன்?’ என்கிறார் பெ.மு. இத்தகைய தத்துவச்சரடு ஊடாடும் கவித்துவ வரிகளைப் பெ.மு.வின் தனித்துவமாக நாடிபிடிக்கலாம். ஆனால், இவை நடைமுறை வாழ்வியலினூடாகப் புலப்படுவதன்றித் தும்பறுத்தோடும் மனக்கன்றின் மேய்ச்சல் திமிறல்களாகப் புலப்படுவதில்லை.

    கோம்பைச் சுவர்’ கதையில் வரும் பின்விவரிப்பைப் பாருங்கள். ‘அட! ஊட்டுக்கு உள்ள போவையில செருப்பயும் போட்டுக்கிட்டா போறம்? வெளிவாசல்ல கழட்டி எறிஞ்சுட்டுத்தான் போறம். அது மாதிரிதான். கட்டல்ல ஏர்றதுக்கு முன்னாலயே கவல எல்லாம் எறக்கி வெச்சரோனுமப்பா’ எனத் தூக்கம் வராதோருக்குப் படுத்ததும் மாயம் போலத் தூங்கிவிடும் முத்துப்பாட்டார் வழிகாட்டுகிறார். இது ஒரு தந்திரோபாயமாக அல்லாமல், உலகியல் ஞானமாகப் பெ.மு.வின் கதைகளில் வெளிப்படக் காண்கிறோம். ‘பெண்டாட்டி கோபித்துக்கொண்டு போனால், அவள் அம்மா வீட்டில் இருப்பாள். நான்கு நாள் விட்டுப்பிடித்துப் போய்க் கெஞ்சிக் கொஞ்சிக் கூட்டிவந்துவிடலாம். தூக்கம் எங்கே போய்த் தொலைந்தது என்று எப்படிக் கண்டுபிடிப்பது?’  இத்தகைய பல விவரிப்புகள், இளம் பருவத்தில் கிராம வாழ்வை ஊன்றிக் கவனித்தமையால் வரும் திறப்புகளாகும். பெண் சினத்தை ஆண் சமூகம் எவ்வாறு எளிதாகக் கையாண்டு வென்றது என்பதற்கான சாட்சியமாகவும் இது திகழ்வதாகத் தற்கால வாசிப்பையும் மேற்கொள்ளலாம். ஆனால், இக்கதை என்ன சொல்கிறது? கிராமமோ நகரமோ, மனிதர்கள் பொறாமையாலேயே தூக்கத்தை இழக்கிறார்கள் என்கிறது கதை. கிராம மனிதர்கள் மேன்மையானவர்கள் என்ற பொதுபுத்திப் புரிதலுக்குப் பெ.மு. வலுச்சேர்ப்பதில்லை. இளைஞன் முருகேசன் கட்டும் ஓட்டுவீட்டுக் கோம்பைச் சுவரைக் குத்திச் செங்கல்லைச் சரியச்செய்தபின்தான், கிழவர் முத்துப்பாட்டாருக்குப் பறிபோன பலநாள் தூக்கம் மீள வருகிறது. மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கைதான், உலகெங்கும் பெரிதும் நடக்கின்றது. இந்த வித மன விகாரங்களைப் பெ.மு.வின் சிறுகதைகள் அடிக்கோடிடுகின்றன. நூற்றுக்கணக்கான எறும்புகளில் ஓர் எறும்பு மட்டும் முன்செல்ல முயன்றால், அதைப் பார்த்துப் பழம் தின்று கொட்டையும் போட்ட கிழ எறும்பு சும்மா விடுமா என்ன? பண்பட்ட மனங்கள் அல்ல; பண்படாத மனங்களின் உள்வெளி மோதல்களே பெ.மு.வின் கைவண்ணத்தில் வாசகர்களின் மனசாட்சியைத் தொந்தரவு செய்யும் சிறுகதைகளாகின்றன.

    பல தமிழ்நாட்டுக் கிராமங்களில் சாதி எவ்வளவு வேரோடியிருக்கிறது என்பதற்கு, ‘மாப்புக் குடுக்கோணுஞ் சாமி’ கதையைச் சான்றாகக் காட்டலாம். ஊரில் பால் மாடுகள் வரிசையாகச் சாகின்றன; மூன்று வாரத்தில் ஆறு மாடுகள்! ஆள்குடிக்குத் தாராளமாகக் கறிக்கூறு கிடைக்கிறது. மாடுகளின் சாவுக்குப் பன்னாட்டுப் பாட்டாராலும் காரணம் கண்டுபிடிக்க முடிவதில்லை.ஏதோ ஒரு புதுவித நோய் மாடுகளைத் தாக்கியிருக்கிறது. ஆனால், உழுகுடி வேறு மாதிரி நினைக்கிறது. ‘நம்மளுக்கு வவுத்துவலி; அவங்களுக்கு ராசபோகமா?’ எனக் குமுறுகிறார்கள். ஒருமாதம்முன், செங்கானின் காட்டுக் கிணற்றில் ஆளில்லாதபோது இறங்கி நீச்சலடித்ததற்காகக் கையையும் காலையும் கட்டிச் சாட்டை வாரால் விளாசித் தள்ளப்பட்ட ராமனின் பையன் ராசுதான், ‘டே! செங்கான்… என்னய அடிச்சிட்ட இல்ல. உன்னயப் பாத்துக்கறண்டா’ என்று கத்தியபடியே ஊரை விட்டு ஓடிய அதே ராசுதான், பழிமுடிக்க மாடுகளுக்கு எதையோ வைத்துத் தீர்த்துக் கட்டுகிறான் எனச் சாட்சியமின்றிப் பெரியோர்களும்கூட யூகிக்கிறார்கள். ஆள்குடிவளவில் புகுந்து கறிச்சட்டிகளை முதலில் உடைத்துப் பின் பெண்களின் கால்களையும் முதுகுகளையும் குழந்தைகளையும் ஓடமுடியாத வயசாளிகளையும் பதம்பார்க்கின்றன முரட்டுத்தடிகள். ‘அய்யா சாமீகளா… என்னய்யா செஞ்சம்? எதுனாலும் மாப்புக் குடுங்கய்யா. அடிச்சுக் கொல்லாதீங்கய்யா’ எனத் தடிகளின் கால்களைப் பற்றிக் கெஞ்சுகிறார்கள், வளவின் ஆண்கள். ஆனால், தடி வெறியோ அடங்கிய பாடாயில்லை! ‘ஒன்னும் தெரியாது சாமீ… மாப்புக் குடுக்கோணும் சாமீ…’ என்ற இறைஞ்சலைத் தவிர, வேறு எதுவும் செய்ய முடியாதவர்களாய் ஆள்குடிகள் தொடர்ந்து அடிபடுகிறார்கள். இதுவே கள யதார்த்தம் எனப் பெ.மு. வாதிடலாம். எதிர்ப்பில்லாத வெற்றிட வளவில் வன்முறை பாய்வதைக் காட்டுவதில், பல்லாண்டுக்காலச் சாதிய உளவியல் அப்படியே தக்கவைக்கப்படுகிறது என்ற விமர்சனத்துக்குப் பெ.மு. வாதம் சரியான பதிலாகாது என்றுதான் தோன்றுகிறது. எதிர்க்கமுடியாததும் உடைக்க முடியாததுமாகச் சாதியைப் பிருமாண்டப்படுத்துவதற்கு மாறாக, இனி இக்காட்சிகளை அரங்கேற்றவியலாத புதிய காலம் தோன்றிவிட்டதைச் சமிக்ஞைப்படுத்தும் இடத்திற்குப் பிரச்சாரமாக அல்லாமல் சூசனையாகப் பிரதியைக் கொண்டுசெலுத்தியிருக்கலாம் என்பதைத் தவிர்த்துவிட்டுப் பிரதியை வெறுங்கதையாக மட்டுமே படிப்பதற்கில்லை. இப்பிரதிக்குள், ‘இப்பிடிக் கேட்டாச் சொல்லுவானுங்களா? கையக் கால முறிச்சுப் போட்டுக் கேளுங்க’ எனப் பெண் குரல் ஒன்றும், ஆணினும் அதிகமான வன்முறையை ஏவுவதாகக் காட்டும் பெ.மு.வுக்குத் துல்லியமான ஒரு கள வட்டாரச் சித்திரிப்பு என்பதைத் தாண்டிக் குறிப்பான ஒரு சிறிய எதிர்ப்பைக்கூட ஏன் வெளிப்படுத்த முடியாது போகிறது? என்பதே வினா. வெறும் ஒரு பரிதாபம் மட்டும் போதாது; பிரதிக்குள்ளே புனைவுத் தர்க்கம் இன்னும் கூர்மையுறுதலும் அவசியமாகும்.

    ஒழுங்குக்கு எதிரான குரலைப் பெ.மு.வின் பல சிறுகதைகள் ஒலிக்கின்றன. படிப்பு, வேலை, குழந்தை, கல்யாணம் எனக் ‘குமரேசனின் அதிர்ஷ்டங்கள் நான்கு’ என்கிறார். இந்த அதிர்ஷ்டம் அனைத்தையும், மிதமிஞ்சிய ஒழுங்கால் தொலைக்க இருந்தவன், தன் குழந்தையின் பார்வைவழி உலகைக் கற்கத் தொடங்கி, ‘ஒழுங்கற்று இருப்பதே ஒழுங்கு’ என்பதைக் கண்டடைந்துவிடுகிறான். இதிலும் ஆணே கதையை அடைத்தபடி நிற்கிறான். ‘வா, போ, எடு, போடு, வை, படு, கழற்று, ஊற்று’ என்ற ஏவல் வினைச் சொற்களுக்குப் பயன்படும் எதிர்த்துப் பேசவே பேசாத இன்னொரு புழங்குபொருளாகவே குமரேசனின் மனைவி காட்டப்படுகின்றாள். ஏன்? குமரேசனின் தாயும் தங்கையும்கூடக் கதையில் இரண்டாம்தரப் பிரஜைகளாகவே உலவுகின்றனர். பெ.மு. கதைகளில், ‘பெண் நோக்கு’ என்பதை, மிக அரிதாகவே காணமுடிகின்றது. அப்படியே காணப்பட்டாலும்கூட, அவையும் கற்பிதமானதும் மரபானதுமான சில வரம்புகளுக்குள்ளேயே சுழல்வதன்றிப் பெருவெடிப்பேதும் கொள்வதில்லை. ‘தனித்தமிழில் சொன்னால் புணர்வறை’ என்ற சிறுகதையிலும், ‘நான் பாவம் பண்ணிட்டண்டா’ என ஈற்றடியில் சண்முகம் பதறிக் கதறினாலும், ஆணின் விடலை விழியே கதை முழுதிலும் வலம்வருகிறது. ‘பதினொரு வரிசை அடுக்கு மொடாக்கள்’ என்ற அத்தனையையும் இழந்து கண்ணீர் பெருக்கும் பெருமாயியின் கதையிலும், புறக்கணிக்கப்பட்ட பழம்பெண்ணின் பழகிவிட்ட சித்திரமே பதிவாகியுள்ளது. அதிலும் பெருமாயியை அவள் பெண்ணே தள்ளிவிட்டுக் கல்லைக் கடைசி மொடா மீதும் போடுவதாகக் காட்டுவதிலிருந்து, அவள் கணவனும் மகன்களும் மட்டுமல்லர், பெற்ற பெண்ணாலுமே பெருமாயியைப் புரிந்துகொள்ள முடியவில்லை, வீட்டில் யாருக்கும் தேவைப்படாத மொடாபோல்தான் வயதேறிய பெண்ணும் என்ற ஓர் எல்லைக்குப் பெ.மு. நகர்ந்துவிடுகிறார்.

    பெ.மு.வின் சிறுகதைகளில் அம்மாக்களே மனத்தில் வலுவாக வந்து நிற்கிறார்கள். அப்பாக்கள் நினைவுகளிலும் நீடிப்பதில்லை. மனைவிகளும் மகன்களும்கூடப் பெரிதாக ஒட்டுவதில்லை. பெருமாயியைப் போலவேதான் பாவாத்தாளும் நிர்க்கதிப்படுகிறாள். கருப்பனாருக்குக் கிடா வெட்டப் பதினேழு முறைகள் வேண்டினாலும், ஒருமுறைகூட அவள் வாழ்நாளில் ஒரு கிடாவைப் பாவாத்தாவால் வெட்டிப் பலியிட முடிவதில்லை. கணவன் இறந்தபோது கழற்றிய காதணிப் பவுனை விற்றுக் கிடாவின் பலிக்கு நாள் குறிக்கிறாள். அதன் கழுத்தில் வெட்டு விழப்போகும்போது, அது தப்பியோடிவிடுகிறது. நிறைவேறாத நேர்த்திக் கடனுக்காகக் கழுத்தை வெட்டித் தலையும் முண்டமுமாய்த் தன்னையே பாவாத்தாள் பலியிடுகின்றாள். குடும்பம் பெண்களையே உறிஞ்சுகின்றது; ஆண்கள் எதற்கும் பொறுப்பேற்பதில்லை; பெண்களே குடும்பத்தேரின் அச்சாணிகள்; பெண் துக்கம் நீங்காத துக்கம் என்பதன் குறியீடாகிறது, ‘உனக்கு என்ன வேணுமய்யா?’ என்ற இக்கதை. வழிபாட்டு நம்பிக்கை என்பது எளிய உழைக்கும் மக்களின் வாழ்வில் எவ்வளவு ஆழமாக வைரம் பாய்ந்துள்ளது என்பதற்கும் பாவாத்தாளே சான்றாகின்றாள். தன் வாழ்வில், என்னதான் கண்டாள் அவள்? அவளைத் தொடர்ந்து வாழவைத்த ஒரு பண்பாட்டு நம்பிக்கையைப் பாதுகாப்பதற்குக் கடைசியில் வேறுவழியின்றித் தன்னைத் தானே பாவாத்தாள் பலி கொடுத்துத்தான் தீரவேண்டியுள்ளது. இங்கும் பெண்ணே பலிப் பொருளாவதைப் பெ.மு.வின் சிறுகதைகளில் மீளமீள நேரும் பெண்ணிலையின் துக்கச் சுழற்சியாகக் காணலாம். பாவாத்தாளை ஒத்தவளே, ‘வேப்பெண்ணைய்க் கலயம்’ என்ற சிறுகதையில் வரும் பாட்டியும்.

    பருவப்பெண்களைவிடக் கிழவிகளையே சிறப்பாகப் பெ.மு. கவனப்படுத்துகின்றார். அம்மா, பாட்டி, பழுத்த கிழங்கள் எனப் பெரும் பெண்டுகளின் தனிமையுற்ற இறுதிக் காலத்தையும் அன்புக்கு ஏங்கும் அவர்களின் உளவியலையும் பரிவுடன் எழுதுகின்றார். ‘ரண்டுல ஒண்ணாச்சும் – எனக்குப், பொண்ணாப் பொறந்திருந்தா, நாலு வேல நடந்திருக்கும் – எனக்கு, நல்ல கெதி கெடச்சிருக்கும்’ எனத் தாய் கதறும் ‘நல்ல கெதி’ கதையில்கூடப் பெண்குழந்தைகள் குடும்ப வேலைக்காகவே வரவேற்கப்படுகிறார்கள். இப்படிப் பேசுவதும்கூட அன்னையரே. அப்பன்கள் எப்படிப் பேசுகின்றார்கள்? ‘எனக்குப் பொறக்கறதும் பையந்தான்; எம்மாடுக போடறதும் காளைகதான்’ என்பதே,அப்பன்களின் பெருமிதமாயுள்ளது. இவ்வாறு பெரிதும் ஆண்நோக்குப் பிரதிகளிலிருந்து வேறுபட்டுப் பெண்குரலை வலுவாக ஒலிக்கும் வித்தியாசமான கதையாக, ‘இசை நாற்காலி’யைச் சொல்லலாம். இதில் சமரசப்படாத, தன்னுரிமையையும் விட்டுத்தராத ஒரு விழிப்பான பெண்ணை நேர்ப்படுகிறோம். ‘அவன் தலைமயிரைப் பிடித்துத் தூக்கி நாற்காலியை உருவினாள்’ என்கிறார். இதுதான் – இப்படிப் போராடுவதுதான் – பெண் விடுதலைக்கு ஒரே வழி. இங்கு மேலாதிக்கம் செய்யும் ஆணோடு போராடிப் பெறப்படும் சம உரிமை, இயல்பாக அல்லது எளிதாகப் பெண்ணுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டு விடுவதில்லை. அவளாகவேதான் தன் நாற்காலியை அவனிடமிருந்து பிடுங்கிக்கொள்கிறாள்.

    பெ.மு.வின் அனுபவக் கிடங்குக்குள் ஆயிரமாயிரம் நினைவுகள், முன்பின் அல்லது பின்முன்னாக முண்டி வரிசைகட்டி அலைமோதிக்கொண்டே இருக்கின்றன. வேம்பு என்றோ, பூவரசு என்றோ, சோளம் என்றோ, கடலை என்றோ, பனை என்றோ, அம்மா என்றோ, பாட்டி என்றோ ஒரே ஒரு சொல்லை எழுதிவிட்டாலே போதும், வெள்ளமாய்ப் பிற சம்பவங்கள் யாவும் பெ.மு.வுக்குப் பொங்கிவந்து விழுந்துவிடுகின்றன. அவரின் பால்யத்திலிருந்தும் கிராம வாழ்விலிருந்தும் எழுத, அவருக்கு எத்தனையோ உள்ளன. தம் கருப்பொருளை உள்ளிருந்து இழைந்தும், தேவைப்படும்போது வெளியிலிருந்து ஒதுங்கியும் அணுகும் ஒரு விவேகம் பெ.மு.வுக்குக் கைகூடியிருக்கிறது. ஓய்வறியாத கடின உழைப்பும் இயல்பாய்த் தடையின்றிப் பொங்கும் உணர்வுமே அவர் கதைகளில் கருவாய்ச் சுழல்கின்றன. உச்ச ஒலியிலான எதிர்ப்புக்குரல்களை விடவும், உற்றறிந்து தற்காத்துக்கொள்ளும் நெளிவுசுளிவையே பெ.மு. பின்னுகிறார். ‘கொட்டு’ப் போன்ற சில கதைகளில், கட்டுக்கடங்கா எதிர்ப்புணர்வும் படமெடுத்தாடுகிறது. ஆனால், ஒவ்வொரு கதைக்குப் பின்னாலும், ஒரு வலுவான கருத்திருக்கிறது. முதுகு சொறிந்து கொடுக்கும் எழுத்தில்லை இது.

    இரவுக் காவலன் ராஜூவின் வாழ்வைப் பேசும் ‘ஆந்தைகள் அலறலை நிறுத்திய இரவு’ கதையில், பால்யத்தில் தன் வீட்டை விட்டு ராஜூ வெளியேற, ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அம்மா வைத்த முட்டைக்குழம்பில், அப்பனுக்கு என்றிருந்த பங்கு முட்டையையும் ராஜூ சாப்பிட்டுவிட்டதுதான் அக்காரணம். ‘ஐஞ்சுதலைப் பாம்பு என்பான் அப்பன், ஆறுதலை என்று மகன் கூறிவிட்டால், பின் நெடுநாள் இருவரும் நெஞ்சு பிரிந்திடுவார்’ என்பாரே பாரதி, அதுவே இங்கும் நடக்கிறது. பெண் வாசனையே காணாமல் இளமையைக் கடந்துவிடப்போகும் ராஜூ, பல வருட அலைச்சலுக்குப் பின், சற்றே நிம்மதியுடன், ஒரு பண்ணை வீட்டில் வேலைக்கமர்கிறான். அங்குப் பெண் பேய் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. நேரில் காணமுடியா அப்பேயை நினைத்து முதலில் ராஜூ பயந்தாலும், நாள் செல்லச்செல்ல, அவனுக்குப் பேயின் நினைவும் பழகிப் பின் அதுவே இனித்துக் காதலியாகப் பின்தொடரும் மனநிழலாகிவிடுகிறது. இரவெல்லாம் அவளோடு பேசுவதாய்ப் பாவித்துத் தனக்குத்தானே பேசித்திரிகிறான் ராஜூ. ஒருநாள் இரவில் கிறுக்கன்போல் இவன் தன்னந்தனியே பேசுவதைக் கேட்டு எஜமானிக் கிழவி நடுங்குகிறாள். ‘இரவில் இப்படிப் பேசுவதை உடனடியாக நிறுத்த முடியாவிட்டால், வேலையிலிருந்து விலகிவிடு’ என்கிறார் மேனேஜர். யாருமற்ற அந்நிய மனிதனின் கொல்லும் தனிமையைப் பேசும் கதை இது. இவ்வித உதிரிகள் மிகப் பலர், பெ.மு.வின் கதைகளில் நடமாடுகின்றார்கள். இவர்களின் சீர்குலைவையும் கையறுநிலையையும் நுணுகிப் பெ.மு. எழுதுகின்றார். இதில் இயக்கமுறும் ஓர் அழகியல், வசீகர உருவ அமைதியாலும் விரிவடையும் நம்பகத்தன்மையாலும் சேர்ந்தே கட்டமைக்கப்படுகிறது. இடைத்தொய்வின்றிப் பிரதியை விறுவிறுப்பாய் வாசித்துக்கொண்டேயிருக்கலாம். ஒரு நாவலின் அத்தியாயங்கள் போலவே பல கதைகளும் தம்முள் பெரும் அக விரிவைக் கொண்டுள்ளன. ஏதாவது ஒரு சிறிய முரணின் அடிப்படையில் சட்டென்று இக்கதைகள் முடிவடையும்போது, இவற்றின் கருத்தியல் விளக்கங்களோ, நுண்வாசிப்பின் பின்னான இடையறாத சிந்தனையலைகளோ மேலெழுவதில்லை. இவற்றினுள்ளே வினைப்படும் நிலவியல் பின்னணியும், பாடுபழமைகளின் பண்பாட்டுக் குரல்களும், வகைமாதிரிப் பாத்திரங்களும், சாதிகள் பின்னிய சமூக அசைவியக்கத்தின் எதிர்மறையம்சங்களுமே மூளைக்குள் ஆழப்புகுந்து வாள்வீசுகின்றன.

    ஆடு திருடர்களாக ‘வெள்ளி மீன்’ சிறுகதையில் வரும் பூபதியும் முருகேசனுமாய் இருக்கட்டும், குலைதிருடிகளாகப் ‘புஞ்சை வாழை’யில் வரும் அத்திருடர்களாகட்டும், திருட்டைக் கலையாகப் பழகிய இரட்டையர்களாகவே காட்டப்படுகிறார்கள். ஆட்டைத்  திருடிப் பூபதி மாட்டிக்கொள்வதில்லை; வாழைத்திருடிகள் இருவரில் ஒருவன் மட்டும் மாட்டிக்கொள்கிறான். இங்குப் பெ.மு.விடம் ஒழுக்கநோக்குச் செயல்படுவதில்லை; மனிதாபிமான நோக்கே பொங்குகிறது. எத்தனையோ அநீதிகளை நீரூற்றி வளர்த்துப் பேணிவந்திருக்கும் நமது சமூகத்தில், நம்மைப் போலவே வாழ, இயற்கை நீதியின் அடிப்படையில் திருடர்களுக்கும் உரிமையுண்டு என்கிறார். இப்பார்வை, ‘சமூகவியல் நோக்கில்’, மிகவும் தீவிர அர்த்தமுடையதாகும். சட்டம் போட்டுத் திருடும் கூட்டமும், திட்டம் போட்டுத் தப்பிக்கும் கூட்டமும் பெருகிவிட்ட ஒரு சமூகத்தில், ‘பிழைப்பு உரிமை’யைத் திருட்டாகக் காண்பது எப்படிச் சரியெனப் பெ.மு. கூசுகிறார். பொது அறம் என்பதற்கான அகண்ட பொருளை அவரவர் வாழ்வியலே தீர்மானிக்கிறது என்கின்றார். பெ.மு.வின் இப்பார்வை, அமுக்கி நசுக்கப்பட்ட விளிம்பின் நியாயத்தைப் பேசுவதாகும். இந்த மனிதாபிமானப் பார்வைக்கு நேர்முரணாகப் ‘பெருவழி’ எழுதப்பட்டிருக்கின்றது. தன்னைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளச் சொல்லித் தொடர்ந்து வற்புறுத்தும் தனது அன்புத் தாயைத் தொலைதூரக் கிராமம் ஒன்றிற்குப் பிரக்ஞையுடன் வேண்டுமென்றே பேரூந்தில் தவறாக ஏற்றிவிட்டுப் பரோபகாரிகள் யாராவது இறங்கும் ஊரில் அவளுக்கு உதவுவார்கள் எனச் சமூகத்தின் தலையில் தன் பாரத்தை இறக்கிவைத்துச் சமாதானம் செய்துகொள்ளும் குரூர இருத்தலியலில் மிதக்கும் மகனைப் ‘பெருவழி’ தீட்டுகின்றது. ஞாயிற்றுக்கிழமையின் பரிபூரணச் சுதந்திரத்தை அனுபவிக்கத் தாயைத் தடையாக நினைப்பவனின் நகரியத் தனிமனிதவாதத்தைக் காட்டிக் கலாச்சார மனங்களுக்குப் பெ.மு. அதிர்ச்சியளிக்கின்றார். இது மெல்ல வளர்ந்து அந்நியமாதலாகவும் விரிவதை, ‘அந்தரக்கயிறு’ வெளிப்படுத்துகிறது. இந்த அந்நியமாதல் உணர்வுக்குள் குற்றநினைவும் சேர்ந்துகொண்டால், அதைத் தாங்கும் மனித மனம் எவ்வளவு அவதியுறும் என்பதை, ‘நிலவு ததும்பும் சாலைகள்’ கதைவழி அறியலாம்.

   அண்ணனுக்குப் பெற்றோரிடமுள்ள முக்கியத்துவம் தனக்கும் இல்லையே எனச் சினந்து சண்டைபிடிக்கும் தம்பி, கக்கூஸ் கட்டும்வரை புகுந்தவீட்டுக்கு வரமாட்டேன் எனக் கோபித்துக்கொள்ளும் மனைவி, புறக்கணிப்பாகத் தன் மகள் சொன்ன ஒரே ஒரு சொல்லால் சீண்டப்பட்டுப் படுக்கையில் தான் மலமூத்திரம் கழிப்பவளாகிவிடக்கூடாது என்பதற்காகச் சாப்பாடு மறுத்துச் செத்துப்போகும் பாட்டி, நாற்றம் சகித்துக் கக்கூஸ் காவலனாக வேலைபார்த்துப் பெற்றோருக்குப் பணமனுப்பும் அறியாப்பையன், ஓடும் பேருந்தை நிறுத்த வழியின்றிச் சீட்டுமேல் பாட்டி வைத்த பேப்பரில் மலம் கழிக்கும் சிறுவன், அரிசியைத் தின்று சாகக்கிடக்கும் வெள்ளாடு, இருபது ரூபாயைக் கறாராய்க் கேட்கும் கம்பவுண்டர், காறப்பல்லுக்காக நிராகரிக்கப்பட்டுக் கல்யாணமாகாது பித்துப் பிடிக்கும் நீலாக்கா, வெட்கங்கெட்ட காட்டுமிராண்டியாய்த் தாய் திரிவதாய்க் கருதி உலர்ந்து தொங்கும் அவள் முலைகளை ரவிக்கை போட்டு மூடப்பார்க்கும் டாக்டர் மகன், பால் இன்ஸ்பெக்டரைச் சாபமிடும் எருமை வளர்ப்பவள், பத்திரிகை ஆபீஸில்  எடிட்டருக்கு எதிராகப் பயமின்றிக் கலகம் செய்பவன் எனப் பல்வேறு வித்தியாசமான மனிதர்களைத் தம் சிறுகதைகளில் பெ.மு. புனைந்துள்ளார்.

    பல மார்க்சிய ஆதரவுப் போக்குடைய சிறுகதைகளைப் பெ.மு. எழுதியிருந்தாலும், ‘தோழர் பி.எம்.மின் வெற்றி’ என்ற சிறுகதையில் வெளிப்படும் கூரிய பகடி, மார்க்சியச் சித்தாந்தத்திலிருந்து மெல்லப் பெ.மு. விடுபடத் தொடங்கிவிட்டதன் வெளிப்படையான சாட்சியாகியுள்ளது. முரணைத் தீவிரப்படுத்திக்கொள்வதற்குப் பதிலாகப் பகடியானது எளிமைப்படுத்தவே இங்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. கறாரானவர்களை வடிகட்டிய முட்டாள்களாகப் பிரதி ஏகடியம் செய்கின்றது. இப்படியாக மரபு மார்க்சியரை ஏசுவது வழமையாகிவிட்ட பின்நவீனத் தமிழ்ச் சூழலில், சுத்தக் கலையின் அக்மார்க் குரல் இக்கதையினுள் ஒலிப்பதைக் கண்டுபிடிப்பதொன்றும் கடினமானதன்று. தொடக்ககாலப் பெ.மு.வின் சிறுகதைகளில் செயல்படும் முற்போக்கு அழகியல், அவரின் பிற்காலச் சிறுகதைகளில் மிக மிக உள்ளமுங்கியுள்ளதைக் காண்கின்றோம். ஆனால், முழுநிலை அகவெளிக் கதைகள்,  பெ.மு.விடம் முற்றாகக் காணப்படுவதில்லை. அவர் பிரதிகளில், இச்சமூகம் தொடர்ந்து ஊடாடிக்கொண்டேதான் இருக்கிறது. மொழியிலும் நடையிலும் பார்வையிலும் கருவிலும் தொனியிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களிருந்தாலும்கூட, அடிப்படையில் இவற்றைச் சமூக உணர்வுள்ள ஒரு கலைஞனின் ஆழ்மன அதிர்வுகள் என்பதாகவே வாசித்தறிகிறோம். ‘பெரிதினும் பெரிது’, ‘புகலிடம்’ முதலிய குழந்தைகள் பற்றிய கதைகளிலும், பொதுக் குழந்தைப் பிராயத்தை விவரிக்கும் கதைகள் என்பதைத் தாண்டிப் பால்யத்தை மீளவும் அடைய விழையும் தீராத நினைவேக்கமும் புழுக்கமும் அவற்றில் தவிர்க்கவியலாமல் வெளிவழிந்திருப்பதையும் கண்ணோடுகிறோம்.

    ‘காக்கைச்சிறகினிலே’ என்ற பாரதியின் இனிய பாடலும், ‘யாருக்குத்தான் தெரியாது காக்கையை?’ என்ற ஞானக்கூத்தனின் கவிதையும் வாசகருக்கு மிகப் பரிச்சயமானவை. இளம்பிராயம் முதல் கல்யாணமாகும்வரை, பத்துப் பன்னிரண்டாண்டுக்கும் மேலாகச் சிறுவன் ஒருவனை விடாமல் துரத்தித் தலையில் அலகால் கொத்தும் காக்கையைப் பெ.மு. வரைகின்றார். இவனை விடாதுதுரத்திக் காக்கை ஏன் கொத்துகிறது என்பதற்குக் கதையில் எக்காரணமும் கூறப்படவில்லை. ஆனால், தன் கல்யாணப் பத்திரிகையுடன்  இவன் ஊருக்குள்ளே நுழையும்போது, நீருக்குள் இறக்கையை விரித்தடித்துக் கழுத்து முங்கிக் ‘காக்கை’ குளித்துக்கொண்டிருக்கிறது. இப்போது அது கண்டுகொள்வதில்லை இவனை எனக் கதை முடிகின்றது. இது குறித்து எப்படியும் வாசகர்கள் யோசிக்கலாம். அவ்வளவு திறந்தநிலைப் பிரதி; லேசில் மறக்கமுடியாத ஒரு கதை! செத்துவிட்டதாகக் கருதிப் பாடையில் பிணமாய் படுக்கவைக்கப்பட்டவன், உயிரோடு மீண்டெழுகின்றான். பிணமாயிருந்தவன் உயிரோடு கிளம்பி நடமாடுவதை உறவினரும் ஊராரும் சிறிதும் விரும்புவதில்லை. அவன் முகத்தில் அவன் மனைவியும் மக்களுமே விழிப்பதில்லை. ஊரைவிட்டு வெளியேற்றப்படுகின்றான். இடுகாட்டில் தோட்டம் வைத்துப் பிசாசுகளைக் கற்பனையில் தோழமைகொள்கிறான். அதாவது அவனே பிசாசாகித் தோட்டத்திற்குப் பேராவேசத்தோடு நீர்ப்பாய்ச்சிச் செழிக்கச் செய்வதைப் பெ.மு.வின் ‘எருக்கஞ்செடிகள்’ புலப்படுத்துகின்றன. ‘ஊரே கூடி ஒலிக்க அழுதிட்டு, பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு, சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு, நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தனரே’ என்ற திருமூலரை நினைவூட்டும் சிறுகதை இது. இங்குப் பிணமாகாமல் பாடையிலிருந்து எழுந்துகொள்பவன், ஊராரின் நினைப்பைத் தன்னிடமிருந்து முற்றும் ஒழித்துவிடுவதே ஒரே வேறுபாடு.

    ‘மன ஓசை’யில் பெ.மு. எழுதிய கதைகளில் வறுமை, வேலையின்மை, சுரண்டல், அதிகாரத் துஷ்பிரயோகம், குடி, சினிமா மோகம், ஆண் வல்லாண்மை, பெண் துன்பம் எனச் சமுதாயச் சிக்கல்களின் பன்முகங்களும் பாடுபொருளாயிருந்தன. இவற்றை ஒரு வலுவான இடதுசாரிப் புரிதலுடன் பெ.மு. முன்வைத்தாலும், இக்கேடுகளுக்கு எளிய மாற்றுகளைப் பரிந்துரைக்கும் பிரச்சாரப்போக்கு, தொடக்கம் முதலே அவரிடமில்லை. பேதங்களைக் கட்டமைத்து, வன்முறையைத் துணைக்கழைத்து, மேலாண்மையைத் தொடர்ந்து நிறுவிக்கொள்ளும் முதலாளியச் சக்திகளுக்கு முன்னால் கூனிக் குறுகிக் கையறுநிலையில் உழைக்கும் மக்கள் கூசிமுடங்குவதையே அக்கதைகள் சித்திரித்தன. மன ஓசைக் காலத்திலிருந்து, எவ்வளவோ தூரம் இன்றவர் விலகிவந்திருந்தாலும்கூட, பெ.மு.வின் அடிப்படை மனிதாபிமான நோக்கை இக்கதைகள் கைவிட்டுவிடவில்லை. இவ்வகையில், சமூகப்பிரக்ஞையுடன் கூடிய அழகியல் கதைகளை உருவாக்கியுள்ள புதுமைப்பித்தன், த.ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, வண்ணநிலவன், பூமணி, கந்தர்வன் முதலியோரின் வரிசையில் இன்னுமொரு முக்கியப் படைப்பாளியாய்ப் பெ.மு.வும் இணைகிறார். இவர்களின் வழித்தடத்தில் இயங்கினாலும், இந்தப் பொதுநீரோட்டத்தில் அப்படியே ஒன்றியுருகிக் கலந்துவிடாது, கி.ராஜநாராயணன்போல் வட்டாரப் பின்னணி மங்காத தனித்துவத்துடன் கொங்கு மக்களின் பண்பாட்டாவணமாகப் படைப்புகளை உருவாக்கியதைப் பெ.மு.வின் உயர்தனிச் சாதனையாகக் கொண்டாடலாம்.

    பெ.மு. கதைகளின் குறிப்பிடத்தக்க பண்பாய், பரிசுத்தத்தின் மீதான அருவருப்பைத் தூண்டிவிட்டுப் பச்சை உண்மைகளைத் துணிந்து பேசும் காத்திரமான தணிக்கையற்ற சித்திரிப்பைக் குறிப்பிடவேண்டும். திறந்தவெளியில் மலங்கழித்தல், கட்டணக் கழிப்பிட அவலங்கள், பொதுக்குளிப்பறைகள், மனிதக்கழிவு சுத்திகரிப்பில் ஒருசாராரை மட்டும் ஈடுபடுத்தி இழிவுபடுத்தும் பொதுச்சமூகத்தின் குரூர மனோபாவங்கள் பற்றியெல்லாம் நுணுக்கமாகப் பெ.மு. எழுதியுள்ளார். அவரின் பீக்கதைகள், இன்னும் ஒருபடி மேலே சென்று, மலமள்ளும் அடித்தட்டு உழைப்பாளிகளின் மனவியலையும் அதற்கு வெளியே நின்றபடி அதைக் காணாததுபோலவே கடந்துவிட விழையும் அதிகாரக் கருத்தியலைத் தூக்கிச்சுமக்கும் மனிதர்களையும் எதிரெதிரே நிறுத்திப் பேசுகின்றன. புனிதம் × தீட்டு என்றும், சுத்தம் × அசுத்தம் என்றும், உயர்வு × தாழ்வு என்றும், நாகரீகம் × அருவருப்பு என்றும் சக மனிதர் கட்டமைத்திருக்கும் அன்றாடச் செயல்பாடுகளுக்குப் பின்னாலுள்ள ‘தன்னை நேசித்துப் பிறரை ஒதுக்கும் மேட்டிமைத் திரிபை’ப் பெ.மு. அறவுணர்வுடன் அம்பலப்படுத்துகின்றார். ஒன்றை மறைப்பதால் உருவாக்கப்படும் தாழ்வுணர்வையும், அதன் நீட்சியாகும் வெறுப்பும் கசப்பும் கூடிய அருவருப்புணர்வையும் கடந்துசெல்லத் தடுக்கப்பட்டவற்றைப் பகிரங்கப்படுத்தலே மிக அவசியமாவதைப் பெ.மு.வின் கதைகள் வெளிச்சமிடுகின்றன. மனித வாழ்வில் மற்றமையைப் பொருட்படுத்தாததே அசிங்கம் என்றும் அவமானம் என்றும் சொல்லித் தணிக்கைக்குட்படும் அனைத்திற்குப் பின்னும் சிலரின் அதிகாரமும் வன்மமும் ஒளிந்துள்ளதைக் கடுமையாக விமர்சித்து, அனைத்து மனிதச் செயல்பாடுகளையும் அவையவற்றுக்குரிய தேவை மற்றும் பயன்கள் கருதியே அளவிடவேண்டும் என்கின்றார். இங்குப் பெ.மு.விடம் அடித்தட்டு மக்கள் மீதான பரிவு மட்டுமல்லாது, விளிம்புநிலை வாழ்வியல் சார்ந்த உடன்பாட்டுப் பார்வையும் அரசியல் வீச்சுடன் வெளிப்பட்டுள்ளதாகத் துணியலாம். ஒரு சிறுகதையில் பெ.மு. பயன்படுத்தும் ‘கழிப்பறையின் கிரகப்பிரவேசம்’ என்ற பதச்சேர்க்கையை எத்தனை புனைவாளர்களால் சிந்திக்கமுடியும் என்பது ஒருபக்கமிருக்க, இதை எத்தனை வாசகர்களால் மிகச் சிறிய முகச்சுளிப்புமின்றிப் படிக்கமுடியும் என்றும்கூட வினவலாம். வாசகர்களின் சொகுசைக் குலைத்துப்போடும் கதைகளை எழுத ஒரு பெருந்துணிச்சல் வேண்டும். இவ்வகையில் பெ.மு.,பொதுபுத்தியின் மனக்கோணலை நிமிர்த்தும் எதிர்ப்பெழுத்தைச் சாதித்துவிட்டார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. கங்கணம் (2007) : பாடு பழைமை பேணும் புனைவு : கல்யாணராமன்
  2. சமூகப் பொறுப்புணர்வின் சாட்சியம்:நிழல் முற்றம் (1993) : கல்யாணராமன்
  3. யதார்த்தவாத மெளனம் - கல்யாணராமன்
  4. யதார்த்தவாதத்தின் போதாமையும் ஆவணப்பதிவின் நம்பகத்தன்மையும் - கல்யாணராமன்
  5. மாதொருபாகன் (2010) : திசைதிருப்பப்பட்ட பிரச்சினை =:கல்யாணராமன்