ஊரை அழித்த உறுபிணிகள்- அத்தியாயம் 13

கொசுக்களால் பரவும் வைரஸ் நோய் என்றால் தமிழர்களுக்கு உடனடியாக நினைவுக்கு வருவது டெங்கு காய்ச்சல் தான். சமீபகாலமாக சாதாரண மக்களால் கூட அறியப்பட்ட டெங்கு உறுபிணிக்கு நீண்ட வரலாறுப் பின்னணி கிடையாது.

1778ல் ஸ்பெயினில் பரவிய உடல் வலியுடன் கூடிய காய்ச்சல் “டெங்கு” என அழைக்கப்பட்டது. ஆப்ரிக்க சுவாஹிலி மொழியில் கை கால்களை முடக்கும் கெட்ட ஆவி எனும் பொருள் கொண்ட “கா டிங்கா பெப்போ” என்ற வார்த்தையில் இருந்து “டெங்கு” எனும் வார்த்தையை ஸ்பானியர்கள் பயன்படுத்தியிருக்கலாம். அதிக உடல் வலியை உண்டாக்குவதால் “எலும்பை நொறுக்கும் காய்ச்சல்” என்ற பெயரும் டெங்குவிற்கு உண்டு.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சீன மருத்துவப்புத்தகங்களில் கொசுக்கள் மூலம் பரவும் காய்ச்சல் தீவிர உடல்வலியை உண்டாக்குவதைப் பதிவு செய்து வைத்துள்ளனர்.

ஆயினும் கொசுக்கள் மூலம் பரவி காய்ச்சல், உடல்வலியை உண்டாக்குவது டெங்கு வைரஸ் மட்டும் தான் என நினைக்க வேண்டாம். பின்வரும் பெரிய பட்டியலை மேலோட்டமாகப் பாருங்கள்.

பர்மா காட்டு வைரஸ், (மியான்மர் அல்ல, ஆஸ்திரேலியாவில் இருக்கும் காடு), சிக்குன் குன்யா வைரஸ், மயரோ வைரஸ், உனா வைரஸ், ராஸ் நதி வைரஸ், ஓ ங்யோங்யோங் வைரஸ், செம்லிகி காட்டு வைரஸ், எவர்கிளேட் வைரஸ், வெனிசுலா குதிரை மூளைக்காய்ச்சல் வைரஸ், கிழக்குப் பகுதி குதிரை மூளைக்காய்ச்சல் வைரஸ், மேற்குப் பகுதி குதிரை மூளைக்காய்ச்சல் வைரஸ், டோனேட் வைரஸ், முகாம்போ வைரஸ், சிண்ட்பிஸ் வைரஸ், ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வைரஸ், கோகோபெரா வைரஸ், முர்ரே சமவெளி மூளைக்காய்ச்சல் வைரஸ், ரோசியோ வைரஸ், புனித லூயி மூளைக்காய்ச்சல் வைரஸ், உசுட்டு வைரஸ், மேற்கு நைல் வைரஸ், மஞ்சள் காய்ச்சல் வைரஸ், ஜிகா வைரஸ், லெபோம்போ வைரஸ், ஒருங்கோ வைரஸ், டகயுமா வைரஸ், பட்டாய் வைரஸ், புன்யம்விரா வைரஸ், கேச்சி சமவெளி வைரஸ், ஷெர்மன் கோட்டை வைரஸ், ஜெர்மிஸ்டான் வைரஸ், குவாரோ வைரஸ், இலெஷா வைரஸ், மகுவாரி வைரஸ், ஞாரி வைரஸ், ஷோக்வி வைரஸ், வாம்பா வைரஸ், பொங்கோலா வைரஸ், கலிபோர்னியா மூளைக்காய்ச்சல் வைரஸ், இன்கூ வைரஸ், ஜேம்ஸ்டவுன் கேன்யான் வைரஸ், லா கிராஸ்ஸி வைரஸ், லம்போ வைரஸ், தஹினா வைரஸ், ஏப்யூ வைரஸ், காராபாரு வைரஸ், இட்டகி வைரஸ், மேட்ரிட் வைரஸ், மரிடுபா வைரஸ், முருடுகு வைரஸ், நெபுயோ வைரஸ், ஒரிபோகா வைரஸ், ஒஸ்ஸா வைரஸ், ரெஸ்டான் வைரஸ், கேட்டு வைரஸ், குவாமா வைரஸ், கேன் கேன் வைரஸ், ட்ரூபானமான் வைரஸ், நியாண்டோ வைரஸ், வியோமியா வைரஸ், டாடாஜினி வைரஸ், ரிஃப்ட் சமவெளி வைரஸ், பன்னா வைரஸ், தோரி வைரஸ், சந்திபுரா வைரஸ், பைரி வைரஸ்

இவ்வளவு பெயர்களை எழுதுவதற்கு எனக்கே அயர்ச்சியாகத் தான் இருக்கிறது. ஆனால் எந்தப் பிள்ளைப்பூச்சிக்கு எப்போது கொடுக்கு முளைக்கும் என்று தெரியாதே. பிற்காலத்தில் இதில் ஏதாவது ஒன்று பரவினால் “அப்பவே சொன்னேன்” என பெருமை பேசிக்கொள்ளலாம் அல்லவா? இவற்றில் பெரும்பாலான வைரஸ்களை பரப்பக்கூடிய அனொபிலஸ், கியூலெக்ஸ், ஈடிஸ் வகை கொசுக்கள் நம் நாட்டில் ஏராளமாக உள்ளன என்பதையும் கணக்கில் கொண்டால் நான் ‘துண்டு’ போட்டு வைப்பதன் பொருளை உணர முடியும்.

நுண்ணுயிரியலில் அதி நவீன சாதனங்கள், எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் போன்றவை கண்டறியப்பட்டவுடன் தான் இத்தனை வகை வைரஸ்கள்  பிரித்தரியப்பட்டன. இவற்றின் நோய் அறிகுறிகள் எல்லாமே கிட்டத்தட்ட ஒரேமாதிரியானவை. இப்போதும் வெறும் அறிகுறிகளை மட்டும் வைத்து இதில் எந்த நோய் எனப் பிரித்தறிவதி சிரமம்

எனவே சீனப்புத்தகத்தில் கூறப்பட்ட நோய் டெங்கு தானா என்றால் நம்மால் உறுதியாக கூறமுடியாது. 18ம் நூற்றாண்டில் ஸ்பெயினைத் தாக்கிய “டெங்கு” என அழைக்கப்பட்ட நோயும் வெறும் அறிகுறிகளை வைத்து மட்டுமே உறுதி செய்யப்பட்டது. 1906 ஆம் ஆண்டு தாமஸ் லேன் பான்கிராப்ட் என்பவர், டெங்கு ஈடிஸ் எஜிப்டி வகை  கொசுக்களால் பரவுவதைக் கண்டறிந்தார். 1943ல் தான் டெங்கு வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பிறகு தான் டெங்கு பற்றிய புரிதல்களில் முன்னேற்றம் ஏற்பட்டது.

 

டெங்கு

நோய்க்கிருமி – டெங்கு வைரஸ் (நான்கு வகை)

பரவும் முறை – கொசுக்கடி மூலமாக (பெரும்பாலிம் ஈடிஸ் எஜிப்டி பெண் கொசு, வெகு அரிதாக அல்போபிக்டஸ் எனும் கொசுக்கள் மூலமாக)

ஆரம்பித்த இடம் – 1778ல் ஸ்பெயினில் முதல் பதிவு செய்யப்பட்ட பரவல். இன்று வரை உலகம் முழுவதும், குறிப்பாக ஆசியநாடுகளில்.

உலக சுகாதார நிறுவன அறிக்கைப்படி உலகம் முழுவதும் ஏறத்தாழ 390 கோடி மக்கள் டெங்கு பாதிப்புக்கு ஆளாகும் ஆபத்தான பகுதியில் வசிக்கின்றனர். 10 முதல் 40 கோடி டெங்கு தொற்றுகள் ஒரு வருடத்திற்கு ஏற்படுகின்றன. கணக்கில் வராத மர்மக் காய்ச்சல்களை இதில் சேர்க்கவில்லை. டெங்கு நோய் தொற்று கடந்த 20 ஆண்டுகளில் 15 மடங்கு அதிகரித்துள்ளது என்றால் இது எத்தகைய உறுபிணியாக மாறிவருகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

காய்ச்சல், உடல்வலி, வயிறுவலி, இரத்தக்கசிவு போன்றவை தான் டெங்குவின் அறிகுறிகள். சில நேரம் சாதாரண காய்ச்சலாக வந்து சரியாகலாம். சில நேரம் உயிரை பாதிக்கும் இரத்தக்கசிவு நோயாக தீவிரம் ஆகலாம்.  12 வயதிற்கு மேற்பட்டோருக்கு அதிக பாதிப்பை விளைவிப்பதில்லை. குழந்தைகளே பெரும்பாலும் தீவிர பாதிப்பிற்கு ஆளாகின்றனர். நான்கு வகை டெங்கு வைரஸ்களில் ஒரு வகை பாதித்தபின் அடுத்த வகை தாக்கினால் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக டெங்கு 1 வகை வைரஸ் தாக்கிய பின் டெங்கு 2 வகை வைரஸ் தாக்கினால் தீவிர பாதிப்பு ஏற்படும்.

மற்ற வைரஸ் நோய்களைப் போலவே டெங்குவையும் பிசிஆர் முறைப்படி கண்டறியலாம். நோய் எதிர்ப்புப் புரதங்களான ஆண்டிபாடி சோதனைகள் மூலமும் கண்டறியலாம்.

நோய்க்கான சிகிச்சை என்பது ஆதரவு மருத்துவம் தான். காய்ச்சலை குறைப்பதும், நீர்ச்சத்தை பராமரிப்பதும், இரத்தக்கசிவுகளுக்கான மருத்துவமும் தான். சிறப்பான மருத்துவம் கிடைத்தால் இறப்பு  1%க்கும் குறைவு தான்.

டெங்கு காய்ச்சலின் போது இரத்ததில் இரத்தத்தட்டுகளின் எண்ணிக்கை குறைவதால் இரத்தக்கசிவு நேரலாம். அதற்கு குருதிதானம் பெற்ற இரத்ததில் இருந்து இரத்தத்தட்டுகளை மட்டும் பிரித்து ஏற்றுவார்கள்.

டெங்கு நோயை தடுப்பது என்பது கொசுக்களை அழிப்பதில் இருந்து தொடங்க வேண்டும். ஈடிஸ் எஜிப்டி வகை கொசுக்கள் அங்கங்கு முட்டைகளை இட்டுக் கொண்டே செல்லும். இந்த முட்டைகள் பல மாதங்கள் வரை கூட சாகாமல் தாக்குப் பிடிக்க வல்லன. எப்போது தண்ணீர் கிடைக்கிறதோ அப்போது முட்டைகளில் இருந்து கொசுக்கள் உருவாகின்றன.

கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழிப்பதும், நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதும் முக்கியம். அதேபோல கொசு வலை பயன்படுத்துவது, கொசு எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்துவது போன்றவற்றின் மூலம் கொசுக்கடியில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவதும் சிறந்த முறை.

டெங்கு நோய்க்கான தடுப்பூசிக்கு சில நாடுகளில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. சிங்கப்பூரில் 12-45 வயது வரையிலானோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக நம்ம ஊரில் இருந்து சிங்கப்பூர் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எல்லாம் உள்ளனர். கூடிய விரைவில் இந்தியாவிலும் டெங்கு தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரலாம்.

பெரிய கோட்டிற்கு அருகில் சின்ன கோடாக கொரொனாவால் டெங்கு தற்போது கவனம் இன்றி உள்ளது. ஆயினும் அடுத்து வரும் பருவமழைக் காலங்களில் நமக்கு டெங்கு ஒரு அச்சுறுத்தல் தான்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. எயிட்ஸ்:நோய் எதிர்ப்பைக் கொல்லும் நோய்-சென் பாலன்
 2. தவிக்கவைத்த தட்டம்மை (measles)- சென் பாலன் ( ஓமான்)
 3. சிபிலிஸ்: பதறவைக்கும் பால்வினை நோய்
 4. எல்லை தாண்டாத எபோலா- சென் பாலன்
 5. கொசுக்கள் பாடும் மரண கானா : மலேரியா- சென் பாலன்
 6. பஞ்சாய் பறந்த உயிர்கள் : பம்பாய் பிளேக்- சென் பாலன்
 7. ஹிஸ்பானியோலாவின் காலன் ஆன கோலன் – சென் பாலன்
 8. கலங்க வைத்த 'கறுப்புச் சாவு ' : பிளேக்- சென் பாலன்
 9. சார்ஸ்: ‘கொரோனோ’ என்ற திகில் படத்தின் ட்ரைலர்- சென் பாலன்
 10. ஸ்பானிஷ் ஃப்ளூ - சென்பாலன்
 11. நடன பிளேக் உறுபிணி - சென்பாலன்
 12. பேதிமேளா - இந்தியன் காலரா உறுபிணி - சென் பாலன்
 13. ஏதன்ஸ் பிளேக் - சென் பாலன்
 14. அந்தோனைன் பிளேக் / காலன்ஸ் பிளேக் - சென் பாலன்