ஊரை அழித்த உறுபிணிகள் – அத்தியாயம் 10

புதைபடிம ஆராய்ச்சியாளர்கள் 30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மரத்தில் இருந்து வடிந்து உறைந்து போன பிசினைக் கண்டுபிடித்தார்கள்.  அந்த பிசினை ஆராய்ந்து பார்த்ததில் 30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அதற்குள் சிக்கி உயிரைவிட்ட ஒரு கொசு கிடைத்தது. அந்த கொசுவின் வயிற்றுப்பகுதியில் மலேரியாவை உண்டாக்கும் கிருமியின் மரபணுக்கள் கண்டறியப்பட்டன. மலேரியாவை உலகின் பழமை வாய்ந்த உறுபிணிகளில் ஒன்றாகக் கருதலாம். கூறப்போனால் மனித இனம் தோன்றுவதற்கு முன்னரே தோன்றிய நோய். நம்மை விட மூத்த நோய். நம் மூதாதையர் குரங்குகளைத் தாக்கிய நோய்.  இன்று வரை சற்று அசந்தாலும் ஆளைச் சாய்த்துவிடும் வலிமையுடன் இருக்கும் நோய். மனித இன வரலாற்றில் இத்தனை வருடங்களாக அதே வலிமையுடன் அலற வைக்கும் நோய் என்றால் மலேரியாவைத்தான் கூறலாம்.

ஆப்ரிக்காவில் மனிதன் உருவாவதற்கு முன்னரே இருந்த மலேரியா, மனிதன் உருவாகி பிற கண்டங்களை நோக்கி இடம்பெயர்ந்த போது அவனோடு பரவியது எனக்கருதப்படுகிறது. இன்றும் 90% மலேரிய நோயாளிகள் ஆப்ரிக்கக் கண்டத்தில்தான் உள்ளனர்.

சீன தேசத்திற்கும் மலேரியாவிற்கும் இருக்கும் தொடர்பும் பல சுவாரசியமான வரலாறுகளைக் கொண்டது. சீன கலாச்சாரத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் “ஹுவாண்டி” என்கிற மஞ்சள் பேரரசர். இவர் தாவோயிசத்தில் ஒரு கடவுளாக வணங்கப்படுபவர். சீன நாட்காட்டி முதல் சீன தத்துவங்கள், சீன மருத்துவம் என அனைத்தும் இவரால் தான் மக்களுக்கு வழங்கப்பட்டன எனச் சீனர்கள் கருதுகின்றனர். தங்களை ஹூவாண்டி தெய்வத்தின் வழிவந்தவர்களாகத் தான் சீனர்கள் கூறிக் கொள்கின்றனர். இவரை அரசர் என்பதா, தெய்வம் என்பதா என்பதிலேயே குழப்பம் நிகழ்வதால் தெய்வ அரசர் எனலாம். இந்த தெய்வ அரசர் எழுதிய மிக முக்கிய மருத்துவ நூல் “ஹுவாண்டி நெய்ஜிங்”. இது தான் சீனப் பாரம்பரிய மருத்துவத்தின் ஆதார நூல். இந்நூலில், விட்டு விட்டு குளிர் நடுக்கத்துடன் வரும் காய்ச்சலில் மண்ணீரல் வீக்கம் ஏற்படுவதைப் பதிவு செய்துள்ளார் ஹூவாண்டி. இந்நூல் கிறிஸ்து பிறப்பதற்கு 2700 வருடங்கள் முன்பானது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சீன புராணங்களில் அப்போதே மலேரியா பற்றிய குறிப்புகள் காணக் கிடைப்பதில் இருந்து அதன் 5000 வருடங்களாக சீனாவில் மலேரியா இருப்பதை உணரலாம். அதேபோல சீன பாரம்பரிய மருத்துவத்தில் அந்தக் காய்ச்சலுக்கு மருந்தாகக் கூறப்பட்ட மூலிகைச் செடியில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஆர்ட்டிமிசின் எனும் மருந்து தான் தற்போது நவீன அறிவியல் மருத்துவத்தில் மலேரியா நோயைக் குணப்படுத்தப் பயன்பட்டுவருகிறது. மலேரியா நோயைக் குணப்படுத்தும் இந்த ஆர்டிமிசின் மருந்து கண்டுபிடிப்பிற்கு 2015ல் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

மலேரியா

காலம் : மனித இனம் தோன்றியதில் இருந்து (தோன்றுவதற்கு முன்பிருந்து)

நோய்க்கிருமி : பிளாஸ்மோடியம் எனும் ஒட்டுண்ணி

இறப்பு : கணக்கிடமுடியாத அளவு

ஆரம்பித்த இடம் : ஆப்ரிக்கா

நோயின் தற்போதைய நிலை : வளரும் நாடுகளில் இன்றும் மரணத்தை விளைவிக்கிறது

மலேரியா எனும் சொல் mal + aria என்ற இரு சொற்களில் இருந்து உருவானது. அதாவது கெட்ட காற்று எனும் பொருள் உடையது. பழங்காலத்தில் மலேரியா கெட்ட காற்றின் மூலம் உருவாவதாக கருதப்பட்டது. ஹிப்போகிரேட்டஸும் அவ்வாறு தான் கருதினார்.  ஆனால் மலேரியா ஒரு ஒட்டுண்ணியால் உண்டாகும் நோய் என்பது பின்னர் கண்டறியப்பட்டது.

மலேரியாவை உண்டாக்கும் பிளாஸ்மோடியம் என்பது பாக்டீரியாவோ, வைரசோ அல்ல. அது புரோட்டோசோவா எனப்படும் ஒட்டுண்ணி. கொசுக்கள் வாயில் இருந்து உமிழப்படும் திரவம் மூலம் உடலுக்குள் நுழையும். இரத்த ஓட்டத்தில் கலந்து கல்லீரலுக்குள் நுழையும். கல்லீரலில் கலவியற்ற இனப்பெருக்கம் செய்யும். ஒட்டுண்ணிகள் கணக்கற்ற வகையில் பல்கிப் பெருகும். ஓர் ஒட்டுண்ணி 30,000 புதிய ஒட்டுண்ணிகளாக குறைந்த காலத்தில் பிரியும். இந்த காலகட்டம் வரை எந்த அறிகுறியும் தெரியாது.

கல்லீரல் செல்களை அழித்து வெளியேறும் ஒட்டுண்ணி இரத்த சிவப்பணுக்களைத் தாக்கும். சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபினை தின்று கொழுத்து ஆண் உயிரியாகவும், பெண் உயிரியாகவும் பிரியும். இந்த ஆண் பெண் ஒட்டுண்ணிகள், அம்மனிதனைக் கடித்து இரத்தம் உறிஞ்சும் பெண் அனோபிலஸ் கொசுக்கள் உடலினுள் நுழையும். அங்கு கலவி இனப்பெருக்கம் செய்து பெருகும். மீண்டும் மனிதனைக் கடிக்கும் போது மனித உடலில் நுழையும்.

இரத்த ஓட்டத்தில் கிருமி இருக்கும் காலகட்டம் தான் அறிகுறிகளை உண்டாக்கும் காலம் ஆகும். கடுமையான காய்ச்சல், குளிர் நடுக்கம், உடல்வலி, சோர்வு போன்றவை ஏற்படும். தீவிர தொற்றில் மூளை, நுரையீரல், சிறுநீரகம் போன்றவற்றைத் தாக்கி மரணத்தை விளைவிக்கும்.

காய்ச்சல் இருக்கும் போது எடுக்கப்படும் இரத்தத்தில் நுண்ணோக்கி வழியே இந்த ஒட்டுண்ணிகளைக் காண்பதன் மூலம் மலேரியா நோயை உறுதி செய்யலாம். இரண்டு கண்ணாடித் தகடுகள், கொஞ்சம் சாயம், ஒரு நுண்ணோக்கி இருந்தால் போதும் மலேரியாவை கண்டறிந்து விடலாம்.  தமிழ்நாட்டு பொது சுகாதாரத்துறையில் வேலை பார்க்கும் சற்று வயதான அனைவருக்கும் இந்த மலேரியா திக் ஸ்மியர் (Thick smear) சோதனை செய்யத் தெரியும். தமிழ்நாட்டின் மலேரியா நோய் தடுப்பு திட்டம் பல வரலாறுகளைக் கொண்டது. எண்ணற்ற ஊழியர்கள், மருத்துவர்களின் உழைப்பால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதைப்பற்றி தனிப் புத்தகமே எழுதலாம்.

இப்போது இருக்கும் மனிதர்கள் அனைவருமே மலேரியா நோயில் இருந்து தப்பிப் பிழைத்தவர்களின் வாரிசுகள் தான். மலேரியாவை எதிர்கொள்ள நமது மரபணுக்கள் எத்தனையோ மாற்றங்களை அடைந்துள்ளன. கதிர் அரிவாள் இரத்தசோகை, தாலசீமியா போன்ற மரபணு நோய்கள் மலேரியாவில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள  நமது மரபணுக்கள் நெகிழ்ந்து கொடுத்ததால் ஏற்பட்டவைதான்.

வரலாற்றில் போர்களின் வெற்றியை தீர்மானிப்பதில் மலேரியா பெரும் பங்கு வகித்துள்ளது. மலேரியாவிற்கு மருந்து கைவசம் உள்ள படைகள் வெல்லும், மலேரியா மருந்து இல்லாத படைகள் தோற்கும் என்பது தான் எழுதப்படாத விதி. எகிப்திய பாரோக்கள் முதல் இரண்டாம் உலகப்போர் வரை மலேரியா பலி கொண்ட ஆட்சியாளர்கள் ஏராளம். இந்தியாவிற்கு படையெடுத்து திரும்பிய அலெக்ஸாண்டர் மலேரியா அல்லது டைபாய்டு நோயால் தான் மாண்டார் என்று கருதப்படுகிறது.

மலேரிய நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி காலங்காலமாக நடந்து வருகிறது. ஒரு முறை பெரு தேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது சின்கோனா எனும் மரங்கள் சாய்ந்து ஏரிகளில் விழுந்தன. இதனால் அந்த ஏரிநீரே கசந்து குடிக்க முடியாதாக மாறிவிட்டது. நிலநடுக்கத்தின் பின் பெரு நாட்டில் மலேரியா வேகமாக பரவியது. நோயுற்ற மக்கள் அதிக தூரம் சென்று நீர் எடுக்க முடியாமல் அந்த ஏரி நீரைப் பருகினர். ஆச்சரியமாக அவர்கள் அனைவருக்கும் மலேரியா சரியானது. அதேபோல சுரங்கத்தில் வேலை பார்க்கும் மக்கள் தூக்கம் வராமல் இருக்க கசப்புச்சுவை உடைய சின்கோனா மரப்பட்டைகளில் இருந்து தேநீர் தயாரித்து பருகியுள்ளனர். அவர்களுக்கு மலேரியா நோய் தாக்கவில்லை. இப்படியாக காய்ச்சல் மரம் எனும் பெயரைப் பெற்றது சின்கோனா மரம்.

லத்தீன் அமெரிக்க நாடுகளை ஆக்கிரமித்திருந்த ஐரோப்பிய தேசங்கள் இந்த மருத்துவப் பயனைக் கண்டு சின்கோனா மரத்தை கப்பல் கப்பலாக ஐரோப்பாவிற்கு கொண்டுவந்தனர். அதன் விதைகளை தங்கள் காலனி ஆதிக்க நாடுகளில் எல்லாம் பயிரிட்டு மலேரிய எதிர்ப்பு மருந்தாகப் பயன்படுத்தினர். இந்த மருந்து அவர்கள் காலனி விரிவாக்கப் போரில் நேரடியாக உதவியது. மலேரிய எதிர்ப்பு மருந்து இல்லாத படைவீரர்கள் செத்து விழுந்தார்கள். கொசுக்களைக் கண்டு பெரும் படைகள் அஞ்சின. இதனால் சின்கோனா அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மரமாகக் கருதப்பட்டது.

 

இந்த சின்கோனா மரத்தில் இருந்து எடுக்கப்படும்  “ஹைட்ராக்ஸி க்ளோரோகுயினைன்” எனப்படும் மலேரிய மருந்து தான் தற்போது மீண்டும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மருந்தாக உருவெடுத்துள்ளது.

மூன்று கோடி ஆண்டுகள் வரலாற்றை உடைய நோயை ஒரு கட்டுரையில் அடக்கி விட முடியாது. அதன் மருத்துவ அறிவியலும், அரசியலும், வரலாறும் பேசப்பேச வந்து கொண்டே இருக்கும். இங்கு எழுதியது ஒரு சிறு பகுதிதான்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. எயிட்ஸ்:நோய் எதிர்ப்பைக் கொல்லும் நோய்-சென் பாலன்
 2. தவிக்கவைத்த தட்டம்மை (measles)- சென் பாலன் ( ஓமான்)
 3. 'கா டிங்கா பெப்போ' எனும் கெட்ட ஆவி- சென் பாலன்
 4. சிபிலிஸ்: பதறவைக்கும் பால்வினை நோய்
 5. எல்லை தாண்டாத எபோலா- சென் பாலன்
 6. பஞ்சாய் பறந்த உயிர்கள் : பம்பாய் பிளேக்- சென் பாலன்
 7. ஹிஸ்பானியோலாவின் காலன் ஆன கோலன் – சென் பாலன்
 8. கலங்க வைத்த 'கறுப்புச் சாவு ' : பிளேக்- சென் பாலன்
 9. சார்ஸ்: ‘கொரோனோ’ என்ற திகில் படத்தின் ட்ரைலர்- சென் பாலன்
 10. ஸ்பானிஷ் ஃப்ளூ - சென்பாலன்
 11. நடன பிளேக் உறுபிணி - சென்பாலன்
 12. பேதிமேளா - இந்தியன் காலரா உறுபிணி - சென் பாலன்
 13. ஏதன்ஸ் பிளேக் - சென் பாலன்
 14. அந்தோனைன் பிளேக் / காலன்ஸ் பிளேக் - சென் பாலன்