ஊரை அழித்த உறுபிணிகள் -அத்தியாயம் 14
“தட்டம்மை” எனப் பாடப்புத்தகங்களில் அழைக்கப்பட்டாலும் மீசல்ஸ் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பெயரால் அழைக்கப்படும். எங்கள் ஊரில் “மணல் வாரி அம்மை”. நெறுநெறுவென இருக்கும் ஆற்று மணலை வாரி இறைத்தது போல உடல் எங்கும் வேர்க்குரு போன்ற தடிப்புகள் வருவதால் இப்பெயர்.
“கொப்பளிப்பான்” எனப்படும் சின்னம்மையுடன் ஒப்பிடும் போது மணல்வாரி தொல்லை குறைவான அம்மையாக கருதப்படுகிறது. ஆனால் அதன் தொற்று விகிதம் மற்ற அனைத்து வியாதிகளையும் விட அதிகம். காற்றின் மூலம் பரவும் தட்டம்மை காட்டுத்தீ போல பரவவல்லது. ஒரு கூட்டத்தில் இருக்கும் 100 பேரில் 10 பேருக்கு எதிர்ப்பு சக்தி இல்லையென்றாலும் அவர்களைத் தேடித் தாக்கும் அளவு பரவும் தன்மை உடையது.
உலகவரலாற்றில் பல கொள்ளை நோய்கள் மீசல்ஸ் எனப்படும் தட்டம்மையால் ஏற்பட்டுள்ளன. ஆனால் தட்டம்மைக்கும், சின்னம்மைக்கும், பெரியம்மைக்கும் இருக்கும் நோய் அறிகுறி ஒற்றுமையால் எந்த நோய் எனக் குறிப்பாகக் கண்டறிவதில் சிரமம் உள்ளது.
மீசல்ஸ் எனும் தட்டம்மை பற்றி முதன்முதலில் தனியாக விவரித்து எழுதியவர் பாரசிக மருத்துவர் முகம்மது இபின் சக்காரியா அல் ராஸி. இவருக்கு முன்னரும் சில சீனப் புத்தகங்களில் தட்டம்மை பற்றி சிறிய குறிப்புகள் இருந்தாலும் முழுமையாக விவரித்து எழுதியவர் இவர்தான். “ராஸஸ்” என அழைக்கப்பட்ட இவர் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அதுவரை பின்பற்றப்பட்டு வந்த மருத்துவக் கொள்கைகளை கேள்விக்கு உள்ளாக்கினார். 23 பாகங்களில் பல்வேறு மருத்துவ விசயங்களை நூல்களாக எழுதினார். இவரது மருத்துவ நூல்கள் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் அந்தக்காலத்தில் பாடமாக்கப்பட்டது. லத்தின் உட்பட பெரும்பாலான ஐரோப்பிய மொழிகளில் இவரது புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டன. நவீன மருத்துவத்துறையின் சிந்தனைப் போக்கை மாற்றியதில் முக்கியமானவர் ராஸஸ். இவரது பெயரில் ஈரானில் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டுவருகிறது.
இவரது “அல் ஜுதாரி வ அல் ஹஸ்பா” (பெரியம்மையும் தட்டம்மையும்) எனும் நூல் தான் முதன்முதலில் தட்டம்மையை பெரியம்மையிடம் இருந்து வேறுபடுத்தி எழுதப்பட்ட நூல். இன்றும் தட்டம்மையை அரபு மொழியில் “ஹஸ்பா” என்று தான் அழைக்கின்றனர்.
தனது அதிக தொற்றுத்தன்மை காரணமாக தட்டம்மை, பலமுறை உறுபிணியாக பரவியுள்ளது. கொலம்பஸ் குழுவினர் அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்ற பல வியாதிகளில் தட்டம்மையும் ஒன்று. பூர்வகுடி அமெரிக்கர்களை அழித்ததில் தட்டம்மையின் பங்கும் அதிகம். அங்கு மட்டுமல்ல பிஜி தீவுகள், பிரித்தானிய காலனிகள் என எங்கெல்லாம் புதுக் குடியேற்றம் நடந்ததோ அங்கெல்லாம் பரவி பலத்த இழப்பை உண்டாக்கியது.
1874 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு அருகில் உள்ள பிஜி தீவுகளின் அரசர் “ககொபாவு” இங்கிலாந்து நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்காக ஆஸ்திரேலியா வந்தார். அங்கு அவருக்கும் அவர் உடன் வந்தவர்களுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதைப் பொருட்படுத்தாமல் ஒப்பந்தததை இறுதி செய்து 1875ல் மீண்டும் பிஜி தீவு திரும்பினர். அவர்களோடு தட்டம்மையும் நுழைந்தது. அதுவரை தட்டம்மையையே பார்த்திராத பிஜி தீவு பூர்வகுடி மக்களிடம் உறுபிணியாக பரவியது. அப்போது பிஜிதீவுகளில் சுமார் 1,50,000 மக்கள் இருந்தனர். நொடியில் பரவிய தட்டம்மை அவர்களில் 50,000 பேரை அதாவது மூன்றில் ஒரு பங்கு மக்களை கொன்றது. பிஜித்தீவில் ஏற்பட்ட இந்த உறுபிணி உலகின் மிக அதிக பாதிப்பை ஏற்படுத்திய மீசல்ஸ் உறுபிணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இன்றும் உலகில் வருடத்திற்கு 2 கோடிப் பேரை மீசல்ஸ் தாக்கி வருகிறது. பெரும்பாலானோர் ஆப்ரிக்க, ஆசிய கண்டத்தவர்.
தட்டம்மை
நோய் – தட்டம்மை (மீசல்ஸ்)
நோய்க்கிருமி – தட்டம்மை வைரஸ்
பரவும் முறை – காற்றின் மூலம்
தடுப்பூசி – உள்ளது
இன்றைய நிலை – தடுப்பூசி எதிர்ப்பு மூடநம்பிக்கை காரணமாக இன்றும் அவ்வப்போது உறுபிணியாகத் தாக்குகிறது.
பழங்காலத்தில் எல்லா அம்மையும் தெய்வ குற்றத்தால் உருவாகிறது என்று நம்பி வந்தனர். அப்படி நம்பாத ஜான் எண்டர்ஸ், தாமஸ் பீபில்ஸ் ஆகியோர் ஆராய்ச்சி செய்து தட்டம்மையை உருவாக்கும் மீசல்ஸ் வைரஸை 1954 ஆம் ஆண்டு கண்டறிந்தனர்.
மீசல்ஸ் வைரஸின் பரவும் சக்தி அளவுக்கு அதிகமானது. நோயாளியின் மூச்சுக் காற்றில், சளி இருமலில் வெளியேறும் கிருமி 2 மணி நேரங்கள் வரை காற்றில் மிதக்கும். அதை சுவாசிக்கும் பிற நபர்களுக்கு பரவும். எந்த வயதினரை வேண்டுமானலும் தாக்கும் என்றாலும் குழந்தைகளைத்தான் அதிகம் தாக்கும்.
தட்டம்மை அறிகுறிகள் நோய் தொற்றிய பத்தாம் நாளில் இருந்து ஆரம்பிக்கும். கடுமையான காய்ச்சல், உடல்வலி, சளி, இருமல், கண் சிவத்தல் போன்றவை இருக்கும். அதற்கடுத்த நான்கு நாட்களில் வாயின் உட்புறம் கொப்புளங்கள் தோன்றும், அதை “காப்ளிக் ஸ்பாட்” என அழைப்பர். நோயைக் கண்டறிவதில் காப்ளிக் ஸ்பாட் முக்கியமானது. அதன் பிறகு உடலில் அரிப்பு கொப்புளங்கள் தோன்றும். முதலில் கழுத்து, காதுப்பகுதியில் தோன்றும் கொப்புளங்கள் பிறகு உடல் முழுவதும் பரவும். பிறகு மெதுவாக மறையத் தொடங்கும். முதலில் தோன்றிய கொப்புளங்கள் முதலில் மறையும்.
தட்டம்மையால் ஏற்படும் இறப்பு, அதன் தீவிர நிலையில் பாக்டீரியத் தொற்றும் சேர்ந்து வருவதால் நிகழ்கிறது. பாக்டீரியத் தொற்று நுரையீரலைத் தாக்கி நிமோனியாவை உருவாக்கி இறப்பை ஏற்படுத்தும். அதேபோல சிலநேரம் தட்டம்மை மூளை நரம்பு மண்டலத்தைத் தாக்கி நிரந்தர முளைக் குறைபாடுகளையும் ஏற்படுத்தும். காதுகளையும் பிற உள்ளுறுப்புகளையும் சிலநேரம் தாக்கும்.
பெரும்பாலான வைரஸ் நோய்களைப் போலவே தட்டம்மைக்கென தனியாக வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் இல்லை. நோயின் போது ஆதரவு மருத்துவமே செய்யப்படுகிறது. பாக்டீரியத் தொற்றும் சேர்ந்து ஏற்பட்டால் அதற்கான ஆண்டிபயாடிக் மருந்துகள் தேவைப்படும். தட்டம்மையைப் பொறுத்தவரை வருமுன் காப்பதே சிறந்தது.
1960களில் தட்டம்மை தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டபின் தட்டம்மை பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது. சிலநாடுகளில் தனியாகவும், சில நாடுகளில் மம்ப்ஸ் (பொன்னுக்கு வீங்கி அம்மை), மீசல்ஸ், ருபெல்லா (புட்டாலம்மை) மூன்று நோய்களுக்கும் சேர்த்து முத்தடுப்பு ஊசியாகவும் வழங்கப்படுகிறது. இந்தியாவில் பிறந்த 9,15ஆம் மாதங்களில் முத்தடுப்பு ஊசியாக வழங்கப்படுகிறது.
மீசல்ஸ் தடுப்பூசி கண்டறியப்பட்டபின் மரணங்களும் நோய் பரவலும் பெருமளவு குறைந்தன. 2000-18 ஆம் ஆண்டு வரை 18 வருடங்கள் போடப்பட்ட தடுப்பூசிகளால் 2.3 கோடி மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. தட்டம்மை நோயையே உலகில் இருந்து தடுப்பூசி மூலம் ஒழித்து விடலாம் எனும் நம்பிக்கை பிறந்த போது, சில விஷமிகளால் தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. இவர்களின் பொய்களால் சிலர் தடுப்பூசி போடுவதைத் தவிர்த்தனர். இதனால் கட்டுக்குள் இருந்த தட்டம்மை மீண்டும் பரவி இறப்புகளை உண்டாக்கியது.
அமெரிக்காவில் 2000 ஆம் ஆண்டில் மீசல்ஸ் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இருந்தும் பிற தேசங்களில் இருந்து வருபவர்கள் மூலமாக கிருமி அவ்வப்போது உள்ளே வந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசியை மறுக்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக 2018ஆம் ஆண்டில் மீண்டும் மீசல்ஸ் அமெரிக்காவில் பரவியது. மீசல்ஸ் மீண்டும் வந்ததற்கு தடுப்பூசி எதிர்ப்பு பிரச்சாரம் தான் காரணம் என சுகாதார அமைப்புகள் குற்றம் சாட்டின.
இன்று பல்வேறு நாடுகள் மீசெல்ஸ் தடுப்பூசியை கட்டாயமாக்கியுள்ளன. தடுப்பூசி பற்றி வதந்தி பரப்புவோர் மீது கடும்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசின் விதிமுறைகளை ஒழுங்காகப் பின்பற்றினால் பெரியம்மை, போலியோ போன்று தட்டம்மையையும் முழுவதுமாக ஒழிக்க முடியும். இன்றைய கொரொனா சூழ்நிலையில் மீசல்ஸ் தடுப்பூசி வழங்குவதில் சிரமம் இருப்பதால் மீண்டும் பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- எயிட்ஸ்:நோய் எதிர்ப்பைக் கொல்லும் நோய்-சென் பாலன்
- 'கா டிங்கா பெப்போ' எனும் கெட்ட ஆவி- சென் பாலன்
- சிபிலிஸ்: பதறவைக்கும் பால்வினை நோய்
- எல்லை தாண்டாத எபோலா- சென் பாலன்
- கொசுக்கள் பாடும் மரண கானா : மலேரியா- சென் பாலன்
- பஞ்சாய் பறந்த உயிர்கள் : பம்பாய் பிளேக்- சென் பாலன்
- ஹிஸ்பானியோலாவின் காலன் ஆன கோலன் – சென் பாலன்
- கலங்க வைத்த 'கறுப்புச் சாவு ' : பிளேக்- சென் பாலன்
- சார்ஸ்: ‘கொரோனோ’ என்ற திகில் படத்தின் ட்ரைலர்- சென் பாலன்
- ஸ்பானிஷ் ஃப்ளூ - சென்பாலன்
- நடன பிளேக் உறுபிணி - சென்பாலன்
- பேதிமேளா - இந்தியன் காலரா உறுபிணி - சென் பாலன்
- ஏதன்ஸ் பிளேக் - சென் பாலன்
- அந்தோனைன் பிளேக் / காலன்ஸ் பிளேக் - சென் பாலன்