ஒவ்வொரு வாரக்கடைசியிலும் ஒரு பெருநகரம் பார்த்தல் என்னும் திட்டத்தில் ஒக்கலகாமா, ஆஸ்டின், சான் அண்டனியோ, ஹூஸ்டன் எனப்பார்த்து முடித்தபோது வரப்போகும் நீளும் வாரக்கடைசிக்கான பயணத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டது. அத்திட்டப்படி இந்தியாவிலும் அமெரிக்காவிலும் கனடாவிலும் இருக்கும் குடும்ப உறுப்பினர்களின் சந்திப்பும், எங்களின் மணநாள் கொண்டாட்டமும் உள்ளடக்கப்பட்டது. 

1982 ஜூன் 30 இல் நடந்த திருமணத்திற்கு இப்போது வயது 41. நாற்பதாவது திருமண நாளில் நானும் எனது மனைவியுமே ஒரு இட த்தில் இல்லை. மகனுக்குப் பெண் குழந்தை பிறந்திருந்தால் அவர்கள் குடும்பத்தோடு இருக்கவேண்டும் என்பதால் கனடாவில் இருந்தார். நான் புதிதாக ஒரு பொறுப்பைக் குமரகுரு பன்முக க்கல்லூரியில் எடுத்திருந்த நிலையில் கோவையில் இருந்தேன். இந்நிலையில் தான் நாற்பத்தியொன்றாவது மணநாளை அனைவரும் சேர்ந்து கொண்டாடுவது எனத் திட்டம். இந்தக் கொண்டாட்டத்தைத் திட்டமிட்டதில் மருமகனின் விருப்பம் அதிகம். மகள், பேரன்  ஆகியோருடன், டல்லாஸ் நகரிலிருந்து 10 மணி நேரக் காரோட்டப் பயணம் செய்து வந்து சேர்ந்திருந்தோம். அதேபோல் மகன் குடும்பம் கனடாவின் ஒட்டாவிலிருந்து விமானப்பயணம், கார்ப்பயணம் என 18 மணி நேரத்துக்கு முன்பு கிளம்பி அங்கு வந்து சேர்ந்திருந்தார்கள். 

****************

 பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய எனக்கு ஜூன், 30 கோடை விடுமுறையின் கடைசி நாளாக இருக்கும். அந்தக் கொண்டாட்டத்திற்கென எடுத்த புத்தாடை அணிந்துகொண்டு – ஜூலை முதல் தேதியில் புதிய கல்வியாண்டின் பணிகளைத் தொடங்குவேன். பிள்ளைகள் வேலைக்குப் போனபின்பு நானும் மனைவியுமாக மட்டுமே கொண்டாடுவோம். பணி ஓய்வுக்குப் பின் கடந்த நான்காண்டுகளாக அந்த நிலையும் இல்லை. ராகுலன் அமெரிக்காவிலும் கனடாவிலுமாகக் கடந்த ஒன்பது ஆண்டுகளாக வெளிநாட்டு வாசம். மகள் குடும்பம் சென்னையில் இருந்தவரை அவர்கள் நெல்லைக்கு வருவார்கள். சிலநேரங்களில் நாங்கள் சென்னையில் கொண்டாடிவிட்டு ரயிலேறி நெல்லை போவோம். இவையெல்லாமே கோவிட் பெருந்தொற்றால் தடையானது. அத்தோடு மகள் குடும்பமும் புனேவுக்கு இடமாறி, அமெரிக்காவின் டல்லாஸுக்குப் பெயர்ந்துவிட்டார்கள். அதனால் இந்த ஆண்டு மணநாள் கொண்டாட்டம் சிறப்பான ஒன்றாக மாறிவிட்டது. 

நினைவில் இருக்கும் அந்த நாளில்  குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட இந்த ஆண்டின் நீளும் வாரக்கடைசி நாளொன்றைத் தேர்வு செய்தார்கள் பிள்ளைகள். அதனைக் கொண்டாடத் தேர்வு செய்யப்பட்ட இடம் ஐரோப்பியர்களின் வருகைக்கு முந்திய அமெரிக்கர்களின் நினைவுச்சின்னம் இருக்கும் தாவோஸ். நியூமெக்ஸிகோ மாநிலத்தின் இருக்கும் தாவோஸ் ஒரு மலைக்கிராமம். மண்ணைப் பிசைந்து, மக்காச்சோளத்தாளில் கலந்து உருவாக்கப்பட்ட சாந்தினால் ஆன கலவைக்கொண்டு உருவாக்கப்பட்ட வீடுகளில் வாழ்கிறார்கள் அந்நிலத்தில் பூர்வகுடிகள். 

பூர்வகுடிகளின் வீடுகளைப் பார்க்க வருவதைச் சுற்றுலாச் சிறப்பாக ஆக்கியிருக்கிறது அமெரிக்கச் சுற்றுலாத்துறை. தாவோஸ் கிராமம் இப்போது ஒரு சிறு நகரம். அந்நகரத்தின் ஒவ்வொரு கட்ட டமும் தாவோஸ் பழங்குடிகளின் குடியிருப்புப் போலவே மண்சாந்துகளைக் கொண்டு கட்டப்பட்டுள்ளன. தேவாலயம் தொடங்கி, அங்கிருக்கும் வீடுகள், அங்காடிகள், விடுதிகள், உணவுச்சாலைகள், பூங்காங்கள், வணிக நிறுவனங்கள் என எல்லாமே அதன் சாயலில் வடிவம் கொண்டுள்ளன. அந்த நகரத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கிருக்கும் மெக்ஸிகன் உணவகத்தில் இரவு விருந்தை முடித்துக்கொண்டு பனிக்குளிர்மை கூடிய கேக் ஒன்றைப் பங்கிட்டுத் திறந்து வெளியில் நின்று கொண்டாடினோம். கொண்டாடும்போது மணி 9. ஆனாலும் மஞ்சள் நிறச் சூரியன் மலையுச்சியில் மறையாமல் இருந்தது. இந்தக் கோடையில் சூரியன் மறையும் நேரம் ஒன்பது மணிக்குப் பின்புதான். 

2023, ஜூலை ஒன்றுக்குரிய சூரியன் இன்னும் வந்து சேரவில்லை. தாவோஸ் மலை உச்சிக்குச் சூரியன் வந்து சேர்ந்தவுடன் புத்தாடையோடு அமெரிக்கப் பூர்வகுடிகளின் நினைவிடத்தைப் பார்க்கச் செல்ல வேண்டும். 1982, ஜூன் 30 இல் நடந்த திருமணம், 41 ஆண்டுகளைக் கடந்து விட்டது. இந்த ஆண்டுக்கொண்டாட்டம் புதிய இடத்தில் அனைவரும் – மகள் சிநேகலதா,மருமகள் பிர்ஜித்,பேரன் ஹர்ஷித் நந்தா,  மகன் ராகுலன், மருமகள் பானுரேகா, பேரன் முகிலன், பேத்தி ஆர்கலி என அனைவரும் சேர்ந்து கொண்டாடிய மகிழ்ச்சிக்குரிய ஒன்றாக நிகழ்ந்துவிட்டது.

******

நீளும் வாரக்கடைசி என்னும் சொல்முறைமை

மணநாள் கொண்டாட்டத்தைத் தாவோஸில் கொண்டாடுவதோடு நிறைவடையாமல், அமெரிக்க, கனடப் பண்பாட்டில் இருக்கும் நீளும் வாரக்கடைசிகளில் செல்லும் நீண்ட பயணங்களாகத் திட்டமிட்டார்கள் பிள்ளைகள். ஜூன் 29 தொடங்கி ஜூலை 3 வரையிலான 5 நாள் திட்டம் அது. 

7 ஆண்டுகளுக்கு முன்னால் 2016 மே மாதம் 30 ஆம் தேதி   அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இருந்தேன்.  அன்று, ஒவ்வொரு கம்பத்திலும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடியை ஏற்றித் தேசப்பற்றைக் காட்டிக் கொள்ளும் அமெரிக்கர்கள், தேச முக்கியத்துவம் வாய்ந்த யாராவது இறந்ததைக் கொடியை இறக்கி அடையாளப்படுத்துகிறார்களோ என்ற ஐயத்தோடு இணையத்திற்குள் நுழைந்தபோது அப்படியொன்றும் நடக்கவில்லை என்பது புரிந்தது.  அரைக்கம்பத்தில் கொடியை இறக்கிப் பறக்கவிடுவது நினைக்கப்படும் ()நாளின் அடையாளம் என்பது புரிந்தது.

போரில் இறந்தவர்களை நினைத்துக்கொள்ளும் இந்த நாளை 1971 முதல் ஐக்கிய அமெரிக்காவின் தேசியவிடுமுறை தினங்களில் ஒன்றாக மாற்றியுள்ளார்கள். அதற்கு முன்பு உள்நாட்டுப் போரில் உயிர்விட்ட ராணுவ வீரர்களை நினைத்துக்கொள்ளும் நாளாகவே இருந்தது. அதன் தொடக்கம் 1868 மே 30 ஆக இருந்தது.  அதன் பிறகு மேமாதத்தின் கடைசித் திங்களை நினைத்துக் கொள்ளும் நாளாக அறிவித்துள்ளார்கள். 1971 முதல் மேமாத த்தின் கடைசித் திங்கள்  ஐக்கியக்குடியரசின் அனைத்து மாநிலங்களும் விடுமுறை அளிக்கின்றன. அதுமுதல் மேமாதத்திற்கான நீண்ட வாரக்கடையாக மாறியிருக்கிறது. அன்றிலிருந்து இந்நாட்டரசின் ஆணையை ஏற்று உலகநாடுகளெங்கும் சென்று போரிட்டு மரித்துப் போன அமெரிக்கர்களை இந்தநாளில் நினைத்துக் கொள்கிறார்கள். 

எல்லாவற்றையும் பகுத்தறிவுக் கொண்டும் தர்க்கரீதியாகவும் அணுகிப் பார்ப்பதாக நம்பும் அமெரிக்கர்களைப் போரை ஏற்க வைத்திருக்கும் அரசுகளின் திறமையைப் பாராட்டத்தான் வேண்டும். உள்நாட்டுப் போரை நடத்தியதை நினைவுகொள்வதில் அர்த்தமிருக்கிறது. அதே நேரத்தில் உலகத்தின் அனைத்துப்பரப்பிலும் உருவாக்கும் அநீதிகளை – அநீதிகளுக்கான தலைமையை அழித்து நீதியை நிலைநாட்டும் பொறுப்பு அமெரிக்க அரசுக்கு இருக்கிறது என்பதை எப்படி ஏற்கிறார்கள் என்பதுதான்  தெரியவில்லை.அந்நிய நாடுகளில் தலையிட்டுப் போரை நடத்தும் அரசின் செயல்பாடுகளால் உள்நாட்டில் பலவிதமான நன்மைகள் பெரும்பாலான மனிதர்களுக்குக் கிடைக்கிறது. முன்னாள் ராணுவ வீரர் என்பதற்காகத் தனிநபருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வாரிசுகளுக்கும் கிடைக்கும் சலுகைகள் பலவிதமானவை. வேலைவாய்ப்பு முன்னுரிமை தொடங்கி வீடு,வாகனம், நிலம், உணவுவிடுதிகளில் சிறப்புரிமையென எல்லாவற்றிலும் முன்னுரிமைகள் உண்டு.இப்போதெல்லாம் உலகப் போர்களில் உயிர்நீத்தவர்களோடு இணைத்து வியட்நாம், லத்தீன் அமெரிக்கா, லிபியா, வடகொரியா, ஈராக், ஆப்கானிஸ்தான், எனப் பலநாடுகளுக்கும் சென்று போரிட்டு மறைந்த அமெரிக்க ராணுவவீரர்களுக்கான கல்லறைகளில் சின்னச்சின்னக் கொடிகளையேற்றி நினைவுகொள்கிறார்கள். 

அமெரிக்க அரசு விடுமுறை நாட்களாக அறிவித்துள்ள நாட்கள் ஒவ்வொன்றும், அந்தந்த    மாதத்தில் நீளும் வாரக்கடைசிக் கொண்டாட்டங்களாக நீட்டித்துக்கொள்வதற்கு ஏற்றபடி அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டின் சுதந்திர தினமாகக் கொண்டாடப்படும் ஜூலை 4, கிருஸ்துமஸ் நாளான டிசம்பர் 25 மட்டுமே நிலையான விடுமுறை நாட்கள். அவை என்ன கிழமையில் வருகிறதோ அன்று விடுமுறை. மற்ற விடுமுறை நாட்களெல்லாம் அந்தந்த மாதத்தின் நீண்ட வாரக்கடைசி நாட்கள் என்பதாக முறைப்படுப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்திலும் ஏதாவதொரு சனி, ஞாயிறோடு முன்னொட்டாகவோ, பின்னொட்டாகவோ சேர்த்து நீண்ட வாரக் கடைசிகளை உருவாக்கித் தருவதன் மூலம் மாதத்தில் ஒருவாரக்கடைசி விடுமுறை  இரண்டு நாளென்பதற்குப் பதில் மூன்றாகிறது. அமெரிக்காவில் பின்பற்றப்படும் விடுமுறைக் கணக்குகளும் கனடாவிலும் பெரிதாக மாற்றமில்லாமல் பின்பற்றப்படும்.   

வாரக்கடைசிக் கொண்டாட்டங்கள் 

வாரக்கடைசிகள் கொண்டாட்டத்திற்குரியன என்பது அமெரிக்காவில் மட்டுமல்லாமல் ஐரோப்பிய நாடுகளின் மேற்குல வாழ்க்கையில் கட்டமைக்கப்பட்ட  சிந்தனை. கொண்டாட்டங்கள் குடும்பவெளிக்குரியன அல்ல என்பதும் அதன் தொடர்ச்சியில் புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒன்று. இரண்டு நண்பர்கள் சந்தித்துக் கொண்டாடுவதற்குக்கூட பொதுவெளிகளையே தேர்வு செய்வார்கள் அவர்கள். காதலெனும் அந்தரங்கச் செயல்பாட்டை முடித்துக் கணவன் – மனைவி பாத்திரத்தை ஏற்கும் புதிய ஏற்பாட்டிற்குக் கூட ஒரு கேளிக்கை விடுதியையோ, பரபரப்பான பெருஞ்சாலையையோ தேர்ந்தெடுத்து முட்டிபோட்டுக் காதல் விடுத்து, “கணவனாக ஏற்றுக் கொள்” எனச் சொல்வதில் ஒருவித மயக்கத்தை அடைவதுண்டு. அதனை நேரில் பார்த்திருக்கிறேன்.  

இந்தியர்களுக்கு வாரக்கடைசி நாட்கள் என்பன அப்படி ஒன்றும் குறிப்படப்பட வேண்டிய நாட்கல்ல. 300 ஆண்டுகளுக்கும் மேலான பிரிட்டானியரின் காலனி ஆதிக்கத்தில் இருந்தபோதும், இந்தியர்களின் வாழ்வியலுக்குள் ஐரோப்பியப்பண்பாடு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதற்கு இவையெல்லாம் சான்றுகள். குடும்பம், வீடு – என்ற இரண்டு சொற்களையும் ஒருபொருட் பன்மொழிபோல இந்தியர்களாகிய நாம் பயன்படுத்துகிறோம். வீடு இடப்பெயர். இந்தியத் தந்தையாதிக்கத்தின் அதிகாரமான நிலப்பெயர். குடும்பம், வீட்டோடு தொடர்புடைய கருத்தாகவும் அமைப்பாகவும் இருக்கும் பெயர்ச்சொல்.  தந்தைமை/ ஆண் அதிகாரம் செல்லுபடியாகும் கருத்தியல் தளம். ஒரு வீட்டின் உரிமையாளராக இருக்கும் தந்தை, குடும்பத்தலைவராக நம்பப்படுகிறார். வீடு என்னும் இடத்தின் உரிமை காரணமாகக் குடும்பத்தின் மீது அதிகாரம் செலுத்தும் அதிகாரம் அவருக்கு இருப்பதாக அவர் நம்புகிறார். அந்த வீட்டின் ஒவ்வொரு அங்குளத்திலும் அவரது உழைப்பும் சம்பாத்தியமும் இருக்கிறது என நம்புவதால் அந்த வீட்டின் ஒவ்வொரு அறைக்குள் இருப்பவர்களும் தனது கட்டுப்பாட்டுக்குள், கண்காணிப்புக்குள் இருக்க வேண்டியன என்பதும் அந்த நம்பிக்கையின் நீட்சி.

இந்தியத் தந்தையாதிக்கத்தின் அதிகார வெளியான ‘வீடு’போல மேற்குலக வாழ்க்கையில் வீடு இருப்பதில்லை. ஒரு வீடு முழுவதுக்குள்ளும் செல்லும் உரிமையை யாரும் விரும்புவதில்லை. வீட்டிற்குள் இருக்கும் ஓரறை மட்டுமே அவர்களது உரிமை. பொது அறைகளான குளியலறை, கழிப்பறை, சமையலறை, சரக்கறை போன்றனவற்றைப் பயன்படுத்த வரிசையில் நிற்கவேண்டும். ஒருவர் பயன்படுத்தியபின் இன்னொருவர் அனுமதிபெற்று நுழையலாம். காக்க வைத்ததற்காக மன்னிப்புக் கேட்கவேண்டும். அனுமதி தந்ததற்கு நன்றி சொல்ல வேண்டும். மகளின் அறையில் அம்மா நுழைவதற்கும், தந்தையின் அறையில் தனயன் நுழைவதற்கும்கூட அனுமதி வேண்டும்.  ‘மன்னிக்க,  நன்றி’ போன்ற வார்த்தைகள் திரும்பத்திரும்பப் பயன்படுத்தப்படும் சொற்கள். வரிசையில் முதலில் நின்று கதைவைத் திறப்பவர் அனைவருக்கும் உள்ளே செல்ல அனுமதிப்பவராக நாகரிகம் காட்டினால் மதிக்கப்படுவார். வரிசையில் வரும் இன்னொருவர் அவரை அனுப்பிவிட்டுத் தான் கதவைத் தாங்கி நின்றால் பெருந்தன்மையோடு நன்றி கூறிப்படுவார். இவையெல்லாம் மேற்கின் பண்பாட்டு அடையாளங்கள்.  

தங்கும் அறையின் தேவைக்காகச் சேர்ந்து வாழத்தொடங்கியபின், அவனையே காதலனாக ஆக்கிக் கொண்ட ஒருத்தி எனது மாணவியாக இருந்தாள் வார்சாவில். அவனை என்னிடம் அறிமுகம் செய்வதற்கு முன்னால் ஆரத்தழுவி முத்தமிட்ட பின்பே என்னிடம் அறிமுகப்படுத்தினாள்.  அவளது தந்தையின் வீடு (அவள் அப்படித்தான் சொன்னாள் ) பால்டிக் கடல் ஓரத்தில் ஒரு பண்ணைவீடாக இருக்கிறது. எனக்கு வார்சாவின் விடுதி வாழ்க்கை பிடிக்கவில்லை. அதனால் வீடுதேடினேன். இவன் தன் தாத்தாவின் வீட்டில் உள்ள இரண்டு அறைகளுக்குச் சொந்தக்காரன். ஒரு அறையை வாடகைக்குக் கொடுக்கத் தயாராக இருந்தான். அந்த அறையை எனது படிப்புக்கால அறையாகப் பயன்படுத்தத் தயாரானேன். இரண்டு ஆண்டுகளாக அந்த அறையில் இருக்கிறேன். வாடகை கொடுக்கிறேன். ஓராண்டாகக் காதலிக்கிறோம். இப்போது சேர்ந்து வாழ்கிறோம். எப்போதாவது இருவரும் சேர்த்திருக்கலாம் என நினைத்தால்,    இன்னொருவர் அறையில் அனுமதியோடு நுழைவோம். மற்றபடி தனித்தனி தான்.

வார நாட்களில் நான் எனது அறைக்குப் போகும்போது அவன் வேலைக்குப் போயிருப்பான். அவன் வரும்போது நான் பல்கலைக்கழகத்துக்கு வந்திருப்பேன். இருவரும் சந்தித்துக் கொள்ள வேண்டுமென்றால் வெளியில் தான் சந்தித்துக் கொள்ளமுடியும். வாரக்கடைசிநாட்களில் நண்பர்களோடு வெளியில் செல்வதே விருப்பமானது. அறையில் அடைந்து கிடப்பது சோகம். வாரக்கடைசிகளை வீட்டின் புறத்தே நின்று கொண்டாட வேண்டுமென நினைப்பது  அவர்களின் பண்பாட்டு அடையாளம் என்பதை அவள் தான் எனக்குக் கற்பித்தாள். அப்போது அவள் ஆசிரியை; நான் மாணவன்.  முத்தத்தை அந்தரங்கமாக நினைக்கும் இந்திய மனநிலைக்குமாறாகப் பொதுவெளிக்குரியதாக மேற்குலகம் வைத்திருப்பதை நாம் புரிந்துகொண்டால் மற்றவற்றைப் புரிந்துகொள்ளலாம்.

வாரக்கடைசிப் பொருளாதாரம்

வாரக்கடைசியைக் கொண்டாட்டத்தின் அடையாளமாக மாற்றியதின் பின்னணியில் சுற்றுலாப் பொருளாதாரமும் இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக உருவாகும் நுகர்வுப் பண்பாடும் இருக்கிறது. சுற்றுலாவும் பண்ட நுகர்வும் மேற்குலகில் தனியார் வசம் இருக்கின்றன. வாரக் கடைசிக் கொண்டாட்டங்களைப் பேரங்காடிகளின் விற்பனைச் சலுகைகள் கட்டமைக்கின்றன. நீண்ட நாள் தேங்கி நிற்கும் துணிகள் உள்ளிட்ட பண்டங்களைக் கழித்துக்கட்டும் விற்பனைச் சலுகைகளை அவை வழங்குகின்றன.. பணப்பரிவர்த்தனையை மாற்றிக் கடன் அட்டைகளாகவும் சேமிப்பு அட்டைகளாகவும் மாற்றிவிட்ட பின்னை முதலாளியம் நினைவு தினங்களைக் கொண்டாட்ட தினங்களாகவும், விற்பனைப் பெருக்க நாட்களாகவும் மாற்றி வைத்திருக்கிறது. நம்மூர்ச் சந்தையில் ஆடிக்கழிவு என்னும் பெயரில் நடக்கும் சலுகைகளை நினைத்துக்கொள்ளலாம்.

நீளும் வாரக்கடைசியின் நீண்ட பயணங்களாக அமெரிக்க மாநிலங்களான நியூமெக்ஸிகோவும், கொலராடோவும் இருந்தன. சமவெளிகள், காடுகள், மணல் வெளிகள், அருவிகள், ஆறுகள், பனியுச்சி, மணல் திட்டைகள் என நான்கு நாட்கள் அலைந்து திரிந்தபின், கனடாவுக்குள் ஆயிரம் தீவுகள் வழியாக நுழைந்தோம். அந்தப் பயண நாட்களைத் தொடர்ந்து எழுதுவேன்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. மேற்கின் மேற்கே 7 : ஹூஸ்டன்: தமிழ் இருக்கையும் நாசாவும் - அ.ராமசாமி
  2. மேற்கின் மேற்கே 6 : ஆஸ்டினும் பேரவைக்கூடமும் அலாமோ போர்க்காட்சி நினைவுகளும் - அ.ராமசாமி
  3. மேற்கின் மேற்கே 5 :சான்அண்டோனியோ: நதியோடும்நகரம் ….. – அ.ராமசாமி
  4. மேற்கின் மேற்கே 4 : நெடுங்கொம்பு மாடுகள்: டெக்சாஸின் அடையாளச்சின்னம் - அ.ராமசாமி
  5. மேற்கின் மேற்கே 3 : ஒக்கலகாமா:  திரும்ப நிகழ்த்தும் பயங்கரம் - அ.ராமசாமி
  6. மேற்கின் மேற்கே 2 : மாறியது திசை; மாற்றியது - அ.ராமசாமி
  7. மேற்கின் மேற்கே - 1 : கிழக்கென்பது திசையல்ல. மேற்கென்பதும். - அ.ராமசாமி