தினசரி நடக்கும் ஒன்று

சூரியன் வருவதும்; மறைவதும்.

சூரியன் உதித்துவரும் திசை கிழக்கு. 

கிழக்கைப் பார்த்து நின்று கைகள் இரண்டையும் விரி.

உன் முதுகுக்குப் பின்னால் இருக்கும் திசை மேற்கு

உன் சோத்தாங்க்கை காட்டும் திசை தெற்கு . 

அதேபோல் உன் பீச்சாங்கை காட்டும் திசை வடக்கு

TN edu dept's circular for employees working in same place for 3 yrsநான் படித்த முதல் பாடம். உத்தப்புரம் ஊராட்சி மன்றத் தொடக்கப் பள்ளியின் இச்சிமரத்து நிழலில் நிறுத்தி அந்தப் பாடத்தை நடத்திய ஆசிரியை கிருஷ்ணவேணி. மறந்துபோகாத இந்த பாடத்தை நடத்திய கிருஷ்ணவேணி டீச்சரின் முகம் நிழலாக இருக்கிறது மறந்துபோகவில்லை.

நான்கு திசைகளின் பெயரை அறியச் செய்யும் அந்தப் பாடத்தை அந்த ஒரு நோக்கத்தில் மட்டும் நடத்தவில்லை. அனைவரையும் சூரியனை நோக்கி நிறுத்தி, அதன் இளஞ்சூட்டை உணரச் செய்து உடலின் உறுப்புகளை அசைக்கச் செய்யும் உடற்பயிற்சிகள் அதற்குள் இருந்தன.  அந்தப் பயிற்சிகளை ஒவ்வொருவரும் தினசரி காலையில் எழுந்ததும் கிழக்கு நோக்கி நின்று செய்யவேண்டும் என்று கற்றுத்தந்த பாடம் அது. அந்தப் பாடத்தைத் தான் பின்னர் யோகாவில் ஒரு பாடமாக முதல் பாடமாக  சூர்ய நமஸ்காரம் என்று கற்றுத்தந்தார்கள். 

அந்தப் பாடம் திசைகளின் பெயர்களை மட்டும் சொல்லித் தரவில்லை. மனித உடலின் உறுப்புகளை ஒவ்வொன்றாக உணரச்செய்து, அதன் பெயர்களை அறியச்செய்தது. அந்த அறிதல் கைகளையும் கால்களையும் மடக்கமுடியும்; இடுப்பை வளைத்துக் குனியமுடியும்; கழுத்தை இடவலமாகவும் வலமிடமாகவும் திருப்பமுடியும்; கண்களை உருட்ட முடியும்; விரல்களை மடக்கி நிமிர்த்துவதன் மூலம் பொருட்களைப் பற்றிப் பிடிக்க முடியும் என்று உடலின் இயக்கத்தைச் சொன்ன பாடம் அதுவாக இருந்தது.பிடித்துக் கொள்ளுதலே எல்லா வேலைகளுக்கும் ஆதாரம் என்பதும் உள்ளார்ந்து உணர்த்தப்பட்ட செய்தி.

அந்தப் பாடத்தில் சோத்தாங்கை என்றொரு சொல்லையும் பீச்சாங்கை என்றொரு சொல்லையும் சொன்ன ஆசிரியை சோறு சாப்பிடுவதற்குப் பயன்படும் கையைச் சோத்தாங்கை என்று சொல்கிறோம். ஆனால் அந்தக் கைக்கு வலதுகை என்று பெயர் என்று விளக்கினார். உடலின் கழிவாக வெளியேறும் பீயைக் கழுவுவதற்குப் பயன்படும் கை. அதை பீச்சாங்கை என்று எல்லாரும் சொல்கிறார்கள். அந்த வேலையைச் செய்யும் கைக்கு இடதுகை என்று பெயர் என்றும் சொன்னார். மக்களின் பயன்பாட்டின் இருக்கும் சொற்கள் வேறாகவும், அனைவருக்குமான பொதுச்சொல் – பொது மொழி இன்னொன்றாகவும் இருக்கிறது என்று அப்போது ஆசிரியை விளக்கிச் சொல்லவில்லை. ஆனால் சோத்தாங்கை, பீச்சாங்கை என்ற சொற்கள் மக்களிடம் வழக்கில் இருக்கும் சொற்கள் என்று சொல்லித் தந்தார். அச்சொற்களுக்கு வலதுகை, இடது கை என வேறு சொற்கள் இருக்கின்றன என்று உணரச் செய்தார். அத்தோடு வலதுகையால் சாப்பிடவேண்டும்; இடது கையால் குண்டி கழுவ வேண்டும் அதுதான் வழக்கம் என்று சொல்லித் தந்தார். 

எல்லா மனிதர்களும் இப்படிச் செய்வதைக் கொண்டே பழக்கவழக்கங்கள் உருவாகியுள்ளன என்று சொல்லித் தந்த அந்த ஆசிரியைக்குச் சவால் எங்கள் வகுப்பிலேயே இருந்தது. அதையும் ஆசிரியைதான் கவனித்து எங்களுக்குச் சொன்னார்.பள்ளியின் வாசல் அருகில் இருந்த மண்பாட்டத்திலிருந்து குடிக்கத் தண்ணீர் எடுத்துவரச் சொல்லி அந்தப் பெண்ணை அனுப்பினார். அவள் சென்று எடுத்துவந்தாள். குடித்துவிட்டுச் செம்பைத் தந்தார் ஆசிரியர். அவள் வாங்கிப் போய் அது இருக்கவேண்டிய இடத்தில் வைத்துவிட்டு வந்தாள். வந்து அமர்ந்தவுடன், அவளை எழுந்து நிற்கச் சொல்லி அவளது எல்லா வேலைகளுக்கும் இடது கையையே பயன்படுத்துகிறாள் என்பதைச் சுட்டிக்காட்டினார். உடல் உறுப்புகள்  வேலை செய்யத்தொடங்கும்போது இப்படியொரு மாற்றம் சிலருக்கு நடந்து விடுகிறது. அவர்களும் அதையே தொடர்கிறார்கள். அதுவே பழக்கம் ஆகிவிடுகிறது. வலது கை செய்யவேண்டிய வேலைகளை இடது கையால் செய்கிறார்கள். அதில் அவர்களின் தவறு என்று ஒன்றும் இல்லை. இடது கைப்பழக்கம் என்பதும் ஒரு பழக்கம் தான் என்று சொல்லி அவளைத் தனியாக நினைக்கவேண்டியதில்லை; இவையெல்லாம் தொடர்ச்சியான செயல்களால் உருவாவது என்று விளக்கினார்அப்படியொரு மாற்றம் எப்படி உருவாகிறது; அதற்குப் பின்னால் மனித மூளையின் அமைப்புக்கும் தொடர்பிருக்கிறது என்பதையெல்லாம் அவர் சொல்லவில்லை. 

திசைகள் நான்கு பாடத்தை மையமாக்கி அவ்வப்போது பாடம் நடத்துவார் கிருஷ்ணவேணி டீச்சர். பள்ளியின் வடக்கே குளம் இருக்கிறது என்று சொல்வார். அது நம் ஊரின் வடக்கெல்லை. ஆனால் தெற்கு எல்லையாக இருப்பது கண்மாய். அது குளத்தைவிடப் பெரியது. குளத்திற்கும் கண்மாய்க்கும் மழைக்காலத்தில் ஓடைகள் மூலம் தண்ணீர் வருகிறது. அந்தத் தண்ணீர் மழைத்தண்ணீர். தூரத்தில் தெரியும் குன்றுகளிலும் மலையிலும் பெய்யும் மழை ஒன்றாகத் திரண்டு ஓடிவரும் பாதைதான் ஓடை என்று சொல்வார். குளத்திலிருந்து நீர் வெளியேறும் பாதைக்கு மதகு என்று பெயர். கண்மாயில் அதுவே கொஞ்சம் பெரியதாக இருக்கும். அதற்குப் பெயர் மடை என்பதையும் சொல்லியிருக்கிறார். நீரே எல்லாவற்றுக்கும் ஆதாரம் என்று சொன்னதும் அவர்தான். நம் ஊருக்குக் கிழக்கு எல்லையாக இருப்பது கிழக்கோடை; மேற்கு எல்லையாக இருப்பது மேற்கோடை என்று சொன்ன பாடங்கள் தான் உயர்நிலைப் பள்ளியில் பூகோளமாக – நிலவியலாகச் சொல்லித்தரப்பட்டது. 

திசைகள் பாடத்தை நடத்திய கிருஷ்ணவேணி நான் முதல் வகுப்பில் சேர்ந்த ஆண்டில் அந்தப் பள்ளிக்கு வந்த புது ஆசிரியை.   அதனால் முதல் வகுப்புக்கு ஆசிரியர். ஐந்து வகுப்புகள் கொண்ட அந்தப் பள்ளியில் மூவர் பெண்கள். இருவர் ஆண்கள். ஆண்களில் மூத்தவர் பள்ளியின் தலைமை ஆசிரியர்; அடுத்தவர் நான்காம் வகுப்பாசிரியர். பெண்களில் மூத்தவர் மூன்றாம் வகுப்புக்கு. வயதுதான் வரிசையை உருவாக்குகிறது என்பது அப்போது தெரியாது.  

நான்கு திசைகள் என்ற அறிவு உயர்நிலைப் பள்ளிக்குப்போன போது கொஞ்சம் குழம்பியது. கிழக்கை முதன்மைப் படுத்திய அறிவு ஒதுக்கப்பட்டது. வடக்கிலிருந்து திசையைச் சொல்ல வேண்டும் என்று சொல்லிக் காட்டினார் ஆறாம் வகுப்பு ஆசிரியர் நீலாசீர் பாண்டியன். வகுப்பில் ஒரு இந்திய வரைபடத்தையும் உலகவரை படத்தையும் தொங்கவிட்டுத் திசைகளை வேறுவிதமாகக் கற்பித்தார். வடக்கு – தெற்கை வைத்தே உலகம் வரைபடங்களை உருவாக்கியிருக்கிறது. தொங்க விடப்படும் வரைபட த்தின் மேல்பக்கம் வடக்கு; அடிப்பக்கம் தெற்கு என்று சொன்னார். பயணங்களுக்குப் பயன்படும் திசைகாட்டியில் இருக்கும் காந்தமுனை எப்போதும் வடக்குத்திசையையே காட்டும் என்றும் சொன்னார். 

இந்தியாவின் வடக்கெல்லை இமயமலை; தெற்கெல்லை இந்தியப் பெருங்கடல் என்ற நிலவியல் பாடம் கிழக்கிலும் மேற்கிலும் இருக்கும் கடல்களை எல்லைகளாகச் சுட்டிக்காட்டியது. கிழக்குக்கடல் வங்காள விரிகுடாக்கடல்; மேற்கெல்லை அரபிக்கடல் என்று அறிந்த பாடங்கள் எல்லாம் நான்கு திசைகளை மையமிட்டே இருந்தன. கிழக்கும் மேற்கும் திசைகளின் பெயர்கள் என்று பள்ளி ஆசிரியர்கள் சொன்ன பாடத்தை மாற்றிச் சொன்ன ஆசிரியர் ஒருவர் உண்டு. அவர் எனக்கு வகுப்பறைக்கல்விகளில் பாடம் எடுத்த ஆசிரியர் அல்ல. தனது புனைவுகள் வழியாகப் புதிய திறப்புகளைக் காட்டிய ஆசிரியர். வாழுமிடங்கள் சார்ந்து பார்த்தும் கேட்டும் உரையாடியும் பழகியும் சந்தித்த மனிதர்களின் உடலைக் காட்டாமலும் மனிதர்கள் உள்ளத்தால் ஆனவர்கள் என்று சொன்ன ஆசிரியர். கல்லூரியில் சேர்ந்து புகுமுக வகுப்பிலேயே அறிமுகமாகிவிட்ட அந்த ஆசிரியரின் பெயர் ஜெயகாந்தன்.

The wholeness of a water drop - Frontlineஜெயகாந்தன் என்ற பெயரை எனக்கு அறிமுகம் செய்தவர் ஒரு வகுப்பறைக் கல்வித்திட்டத்திற்குள் இருந்த ஆசிரியரே. புகுமுக வகுப்புக்குத் தமிழ் கற்பிக்க வந்த  சாமுவேல் சுதானந்தா என்ற இளைய ஆசிரியர் தான் ஜெயகாந்தன் என்ற பெயரைச் சொன்னார். பாடத் திட்டத்திற்குள் இடம்பெறாத புதுமைப்பித்தனையும் ஜெயகாந்தனையும் அவர்களின் கதைகளை வாசிக்கும் முறையையும் சொன்னார். அப்படிச் சொன்ன கதைகளில் ஒன்றாக இருந்த கிழக்கும் -மேற்கும் இருந்தது. அந்தக் கதை கிழக்கு, மேற்கு என்பதை மனிதர்களாக முன்வைத்த து. மனிதர்களின் மனப்பாங்காக முன்வைத்தது. மனிதர்களின் நம்பிக்கையாக நினைக்க வைத்தது. மனிதர்களின் அறிவாக – அறிவைப் பெறும் முறையியலாக எனக் கிழக்கும் மேற்கும் எனக்குள் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. 

இந்தியத் துணைக்கண்டம் கிழக்கின் அடையாளம். இன்னொரு கிழக்கின் அடையாளம் பெருஞ்சீனம். இவ்விரு பேரடையாளங்களோடு கீழ்த்திசை அடையாளங்களைச் சுமந்துகொண்டிருக்கின்ற சிறுசிறு நாடுகள் பத்துக்கும் மேலே இருக்கின்றன. இந்தியாவின் மேற்கே இருக்கும் எல்லா நாடுகளும் மேலைத் தேய நாடுகள் என்று வரையறைக்குள் வந்துவிடாது. எனது முதல் விமானப் பயணமாக அமைந்த பயணம் சௌதி அரேபிய பயணம்(மே, 2010) மேற்குத்திசையில் சென்ற பயணம் தான். ஆனால் அது மேலைத்தேய அடையாளங்கொண்ட நாடல்ல என்பதை 2011 இல் போலந்திற்குச் சென்று இரண்டு ஆண்டுகள் இருந்தபோது புரிந்தது. 

ஈராண்டு போலந்து வாழ்க்கையில் மேற்கு ஐரோப்பியநாடுகளான டென்மார்க், ஆஸ்திரியா, ஹாலந்து, நார்வே, செக் குடியரசு எனச் சில நாடுகளில் சுற்றுலாப் பயணியாகப் பயணம் செய்திருக்கிறேன். எனக்கு மேற்கை திசையாக இல்லாமல் அறிய வைத்த காலகட்டம் அது. அங்கிருந்து வந்த பின்பே கீழ்த்திசை நாடுகளான  மலேசியாவிற்கும்(2015) இலங்கைக்கும்(2016,2019) பயணம் செய்தேன். அந்தப் பயணங்கள் மேற்கையும் கிழக்கையும் பாரிய வேறுபாடுகள் கொண்ட நிலப்பரப்பாக, வாழ்வியலாக, மனப்பாங்காக எனக்குக் காட்டின. கிழக்காகவும் இல்லாமல் மேற்காகவும் இல்லாமல் தவிக்கும் சிங்கப்பூருக்கும் போனபோது இன்னும் கூடுதலாக கிழக்கின் பாங்கையும் மேற்கின் பாங்கையும் விளங்கிக் கொள்ள முடிந்தது.

ஐரோப்பிய நாடுகள் மேற்கு நாடுகள் என்றால் அதற்கும் மேற்கு இருக்கின்றன அமெரிக்க ஐக்கியக்குடியரசும் கனடாவும். இவ்விரு நாடுகளுக்கும் ஏற்கெனவே சென்று வந்துள்ளேன். 2016 இல் இருமாத காலம் அவ்விரு நாடுகளின் பெருநகரங்கள் சிலவற்றில் குறுக்கும் நெடுக்குமான பயணங்களைச் செய்திருக்கிறேன். அதுவரையிலான எல்லாப் பயணங்களுக்கும் ஒரு பொதுத்தன்மை உண்டு. ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியராக – கல்வியாளனாகச் சென்று வந்த பயணங்கள் என்பதே அந்தப் பொதுத்தன்மை.  கல்வி மையத்தை அமைக்க, கற்பிக்க, கருத்தரங்குகளில் கட்டுரை வாசிக்க, பயிலரங்குகள்/ கருத்தரங்குகள்  நடத்திட அழைக்கப்பெற்ற அழைப்பின் பேரில் அல்லது அரசால் அனுப்பப்பட்ட ஒரு கல்வியாளனாகவே அந்தப் பயணங்கள் அமைந்திருந்தன. குறிப்பான வேலை என்பதோடு ஊர் சுற்றுப்பார்த்தல், மக்களோடு பழகுதல், விருந்துகளில் பங்கேற்றல் என்பன இருந்தன, இப்போது போகும் பயணம் அதிலிருந்து முற்றிலும் விலகியது. 

2023, மே, 29 இரவு கோவையிலிருந்து கிளம்பி திரும்பவும் ஆகஸ்டு 30 ஆம் தேதி கோவைக்கு வருவதாகத் திட்டமிட்டுள்ள மூன்று மாதப் பயணத்திட்டம் தனிப்பட்ட பயணத்திட்டம். அமெரிக்காவின் டல்லஸ் நகரில் இருக்கும் மகள் சிநேகலதாவின் குடும்பத்தினரோடும், கனடாவின் ஒட்டாவில் இருக்கும் மகன் ராகுலனின் குடும்பத்தினரோடும் சேர்ந்திருக்கும் விதமாகத் திட்டமிடப்பட்டுள்ள பயணம். அவர்களோடு சேர்ந்தும் நான் தனியாகவும் அங்கே பயணிப்பேன். எனது விருப்பங்கள் சார்ந்து நண்பர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் எனச் சந்திக்கும் வாய்ப்புகள் உண்டு. 

கலை, இலக்கிய நிகழ்வுகள் இருந்தால் பார்வையாளனாகப் பங்கேற்பேன். நிகழ்வுகளில் வளவாளராகச் செயல்படும் வாய்ப்புகள் கிடைத்தால் தவற விடவும் மாட்டேன். மொழி, இலக்கியம், கலை என்பனவற்றோடு தொடர்புடைய எனது சொற்கள் பயனுடையதாக அமையவேண்டும் என்று எப்போதும் நம்புபவன் நான். அந்த நம்பிக்கையோடு இந்தப் பயணத் தொடரைத் தொடங்குகிறேன். தொடர்ந்து எழுதுவேன்.. 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. மேற்கின் மேற்கே 8 : கொண்டாட்ட த்திற்கான நெடும்பயணம் - மேற்கின் மேற்கே
  2. மேற்கின் மேற்கே 7 : ஹூஸ்டன்: தமிழ் இருக்கையும் நாசாவும் - அ.ராமசாமி
  3. மேற்கின் மேற்கே 6 : ஆஸ்டினும் பேரவைக்கூடமும் அலாமோ போர்க்காட்சி நினைவுகளும் - அ.ராமசாமி
  4. மேற்கின் மேற்கே 5 :சான்அண்டோனியோ: நதியோடும்நகரம் ….. – அ.ராமசாமி
  5. மேற்கின் மேற்கே 4 : நெடுங்கொம்பு மாடுகள்: டெக்சாஸின் அடையாளச்சின்னம் - அ.ராமசாமி
  6. மேற்கின் மேற்கே 3 : ஒக்கலகாமா:  திரும்ப நிகழ்த்தும் பயங்கரம் - அ.ராமசாமி
  7. மேற்கின் மேற்கே 2 : மாறியது திசை; மாற்றியது - அ.ராமசாமி