டெக்சாஸ் மாநிலத்தில் பார்க்கவேண்டிய பெருநகரங்களில் ஒன்றாக ஹூஸ்டன் இருக்கிறது. எங்கள் பயணத்திட்டத்தில் அந்நகரைப் பார்க்கும் தேதியைக் குறித்து வைத்திருந்தோம். பக்கத்து மாநிலமான ஒக்லகாமாவிற்கு அடுத்துப் போகும் ஊராக ஹூஸ்டனே இருந்தது.காரணம் அங்கிருக்கும் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தைப் பார்ப்பது. பேரன் ஹர்ஷித் நந்தாவின் இலக்காக இருப்பது வான்வெளி சார்ந்த படிப்பும் பயணமும். சிறுவயது முதலே வான்வெளி குறித்து வாசிப்பதும் விண்ணில் பறக்கும் விமானங்கள், ராக்கெட்டுகள், விண்கலங்கள் போன்றவற்றையும் அவற்றை அனுப்பும் நிலையங்களையும் இணைத்துக்கட்டும் விளையாட்டில் ஆர்வமாய் இருப்பான். அவனது பிறந்தநாளுக்கு வாங்கித்தந்த பரிசுப்பொருட்கள் பெரும்பாலும்  ‘லெஹோ’ சேர்மானப் பாகங்களாகவே இருக்கும். 

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இருக்கும் லெஹோலாண்ட் குழுமம் உருவாக்கித்தரும் பொம்மை மாதிரிகளின் பாகங்கள் உலகச் சந்தையில் பெரும் வர்த்தக மதிப்புடையவை. பேரன் வசம் இருக்கும் விண்வெளி, வான் பயணம் சார்ந்த புத்தகங்கள், படங்கள் மட்டுமல்லாமல் லெஹோக்களின் மதிப்பே சில பத்தாயிரங்களுக்கு இருக்கும். அவனது  அந்த ஆர்வம் தான் அமெரிக்காவிற்குப் போகச் செய்தது என்று கூடச்சொல்லலாம். ஹூஸ்டன் நாசா ஆய்வு மையம் செல்லும் திட்டத்தை அவனே உருவாக்கியிருந்தான். இந்த நேரத்தில் தான் பழம் நழுவிப்பாலி விழுந்தது போல பொழில் வாச்சி நா. கணேசன் அவர்களிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது.  ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தமிழ் இருக்கை குறித்த சொற்பொழிவொன்றை அங்கு செயல்படும் பாரதி கலைமன்றத்தில் நிகழ்த்த வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தார். அதற்காக 25-06-2023 அன்று ஹூஸ்டன் நகருக்கு வரவேண்டும் என்றார். அதனை ஏற்றுக் கொண்டதால் ஹூஸ்டன் பயணத்தேதி மாறியது.

****

ஊர்ப்பெயரை முன்னொட்டாக கொள்வது தமிழ்ப் பெயரிடல் மரபு. அதனை அறிந்துள்ள நா. கணேசன் தனது பெயரை பொழில்வாச்சி நா.கணேசன் என வைத்துக்கொண்டுள்ளார். பொழில்வாச்சி என்பது பொள்ளாச்சி என அழைக்கப்படும் நகரத்தின் தொன்மைப் பெயர். நா.கணேசன் இப்போது   இருப்பது அமெரிக்காவின்   ஹூஸ்டன் நகரில். பணியாற்றியது அமெரிக்காவின் ‘நாசா’ வான்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானியாக.   ராக்கெட் தொழில் நுட்பப் பணியில் உயர்நிலை விஞ்ஞானியாகப் பணியாற்றியவர். இப்போது அமெரிக்காவின் விமானப்படைப்பிரிவுக்கு அறிவியல் தொழில்நுட்பங்களைத் தரும் நிறுவனமொன்றில் பணியாற்றுகிறார். 

பொதுவாக மொழிசார்ந்த/ இலக்கியம்சார்ந்த தங்கள் வேலைகள் அங்கீகரிக்கப்படவில்லை. வெகுமதிகள் கிடைக்கவில்லை; பதவிகளும் பட்டங்களும் வாய்க்கவில்லை என்ற வருத்தம் தமிழ் எழுத்தாளர்களுக்கும் தமிழ்ப் பேராசிரியர்களுக்கும் உண்டு. அவர்கள் அதனை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கத் தயங்குவதுமில்லை. அதேநேரம் தமிழ்ப் பேராசிரியர்களையும் எழுத்தாளர்களையும் தாண்டி தமிழ் மொழியின் வளர்ச்சியில் தனிநபர்கள் செய்யும் வேலைகளும் அர்ப்பணிப்பும் மதிப்பிடமுடியாத அளவினதாக இருக்கின்றன. எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் தகைமைகூறலுமின்றி பலர் வேலை செய்து கொண்டே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பலரைத் தமிழ்நாட்டிலும் சந்தித்திருக்கிறேன். தமிழ்நாட்டிற்கு வெளியேயும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. திரு. நா.கணேசனின்   தமிழ்சார்ந்த ஈடுபாடுகளும் ஆய்வுகளும் எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமலேயே தொடங்கியுள்ளது. அவரது அறிவியல் பங்களிப்புக்கு இணையாகவே தமிழ் மொழி வளர்ச்சிக்கான பங்களிப்புகளும் இருந்துள்ளன. அதனால் கவனம் பெற்றுள்ளன.     

ஆறுமாதங்களுக்கு முன்னால் பொள்ளாச்சியில் தனது மேடைப்பேச்சில் கவி. சிற்பி எனது பெயரை உச்சரித்தார். அப்போது அவர் முன்வரிசையில் இருந்துள்ளார். நான் அவருக்குப் பின்னே இருந்துள்ளேன். இதுமட்டுமே முன் அறிமுகம்.  ’நான் அமெரிக்கா வந்துள்ளேன்; டெல்லாஸில் இருக்கிறேன்’ என்ற தகவல் கிடைத்தவுடன் அழைத்துப் பேசினார். ஹூஸ்டன் பாரதி கலைமன்ற நிகழ்வில் உரையாற்றவேண்டும் என்றார். மறுக்காமல் ஏற்றுக்கொண்டபோது “ஒருநாள் முன்னதாகவே வந்து ஹூஸ்டனைச் சுற்றிப்பாருங்கள்; எங்கள் வீட்டில் தங்கவேண்டும்” என்று வலியுறுத்தினார்.  குடும்பத்தோடு போய்த் தங்கினோம். தமிழ்நாட்டிலிருந்து வரும் பேராசிரியர்களும் கவிஞர்களும் விஞ்ஞானிகளும் தங்கிச் சென்ற அறையில் நீங்களும் தங்கவேண்டும் என்ற விருப்பத்தோடு விருந்துப் பண்பாட்டை வெளிப்படுத்திய அவரையும் அவரது மனைவியாரையும் சந்தித்தது அண்மையில் கிடைத்த புது அனுபவம். 

ஆரம்பப்பள்ளி வகுப்புகள் முடியும்போதே, வானியல் துறையைத் தேர்வு செய்து கற்கவும் ஆய்வு செய்யவும் விருப்பம் கொண்டவனாக இருப்பதைச் சொன்னவன் எனது பேரன். அவனுக்கு அவரது சந்திப்பு ஒரு பெரும் தாவலைத் தந்துள்ளது. ஒன்பதாம் வகுப்புக்குள் நுழையவுள்ள பேரனுக்கு வானியல் துறைசார்ந்த கற்கை மற்றும் வாய்ப்புகளின் விரிவைத் திறந்து காட்டிவிட்டார். கார்ப்பயணத்தின்போதும் உணவு நேரத்திலும் அவனோடு பேசிக்கொண்டே இருந்தார். நானெல்லாம் இப்படிப் பேசும் இயல்பற்றவன் என்பதை நினைத்துக்கொண்டேன்.

 படிப்பு கிண்டி பொறியியல் கல்லூரியில். முதுநிலைப் பொறியியல் திருச்சியில்.    முனைவர் பட்டம் அமெரிக்காவில். நாசா விண்வெளி ஆராய்ச்சிக் கூடத்தில் பணி கிடைத்து அங்கேயே தங்கிவிட்டார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அறிவியல் ஆய்வுப் பணி காரணமாகத் துறைசார்ந்து இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளோடு பழகியிருக்கிறார். அவர் துறை சார்ந்த சாதனைகளுக்காக அமெரிக்க அரசு பல தகுதிப்பாடுகளை அளித்துள்ளது. அந்த நிறைவான வாழ்க்கையின் இன்னொரு பகுதி, தனது தாய்மொழிக்கும் தமிழ்ப்பண்பாட்டிற்கும் தனது பங்களிப்புகளைச் செய்யவேண்டும் என்ற எண்ணம். 

வானியல்துறை சார்ந்த அறிவுக்கு இணையாகவும் கூடுதலாகவும் சொல்ல வேண்டியதாக இருக்கிறது அவரது மொழிப்பற்று. தமிழ்மொழியை உலகமெலாம் பரவும் வகை செய்தல் என்ற அடிப்படையில் டெக்சாஸ் மாநில ஹூஸ்டனில் நடக்கும் தமிழ் சார்ந்த நிகழ்வுகளில் அவரது பங்களிப்புகள் உள்ளன. அங்குள்ள மீனாட்சி அம்மன் கோயில் வளாக உருவாக்கம் தாண்டி, ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை தொடங்குவது வரை அங்கு செயல்படும் பாரதி கலைமன்றத்தின் பொறுப்பாளர்களின் பின்னணியில் அவரது பங்களிப்பு உள்ளது.  திரு கணேசனின் நினைவாற்றலும் படிக்கும் வேகமும் ஆச்சரியமூட்டக்கூடியதாக இருக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்கள், இடைக்காலக் காப்பியங்கள், பக்தி இலக்கியம் என அவரது நினைவில் சில ஆயிரம் பாடல்கள் மனப்பாடமாக இருக்கின்றன. மொழி, இலக்கியத்தைத் தாண்டித் தொல்லியல், கலை வரலாறு, ஓவியம் எனப் பலவற்றில் ஈடுபாடு கொண்டவர். 

கணினிக்குள் தமிழ் உலவுவதற்குக் காரணிகளாக இருந்த தமிழ்மணம் தன்னார்வக்குழுவோடு இணைந்து, எழுத்துரு உருவாக்கம் தொடங்கிப் பலவேலைகளைச் செய்யத்தூண்டியிருக்கிறார். இ-கலப்பை என்பது அக்குழுவின் பங்களிப்பு. தமிழ் மணத்தின் பின்னணியில் அறிவு, பணம், நேரம் எனச் செலவழித்தவர் கணேசன. அவரது வீட்டில் அடுக்கப்பட்டுள்ள நூலகத்தில் இருக்கும் நூல்களின் வகைப்பாடு அவரது விருப்பத்துறைகளைக் காட்டுகின்றன. கொங்குப்பகுதியின் வரலாற்றையும் பண்பாட்டையும் ஆய்வுசெய்யத் தேவையான ஏராளமான நூல்களைக் கொண்டிருக்கிறது அவரது நூலகம். அச்சிட்ட நூல்கள் மட்டுமல்லாது ஏடுகளையும் தொகுத்து வைத்துள்ளார். 

தமிழ்ப்பல்கலைக்கழகத் தொல்லியல் துறை ஆய்வுகளைக் காலக்கணிப்பு செய்யும் கார்பன் டேட்டிங் செய்ய அமெரிக்கச் சோதனைச்சாலை ஒன்றிற்குத் தனது சொந்தப் பணத்தைக் கட்டி ஆய்வை ஊக்கப்படுத்தியிருக்கிறார். அந்த ஆய்வில் ஈடுபட்ட பேரா. ராஜனோடு தொடர்பில் இருக்கிறார். இதற்கெல்லாம் சிகரமாக அமைந்த பணி ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தமிழ் இருக்கைக்கான முயற்சி. அதற்கெனத் தொடங்கப்பட்ட தனி அமைப்பில் பொருளாளராக இருந்து பெருந்தொகையைத் திரட்டி ஹூஸ்டன் பல்கலைக்கழக விதிப்படி அளித்துள்ளனர். இப்போது இந்தக் கல்வி ஆண்டுமுதல் தமிழ் இருக்கை செயல்பட உள்ளது. அவரோடு சாம் கண்ணப்பன் போன்ற அனுபவஸ்தர்களும் பெருமாள் போன்ற அடுத்த தலைமுறை நிர்வாகிகளும் உடன் நின்றுள்ளனர். இந்தியாவைத் தாண்டித் தொடங்கப்படும் தமிழ் இருக்கைகளின் செயல்பாடுகளும் ஆய்வுகளும் நீண்டகால நோக்கில் பயன்களைத் தரக்கூடியன. 

நா. கணேசனோடு தங்கியிருந்து, உரையாடிக் களித்த நினைவுகளின் தொடர்ச்சியாகப் பல சிந்தனைகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. முதன்மையாக அவரிடம் வெளிப்பட்ட பல்திறன் அறிவும், முன்னேற்றத்தை நோக்கிய வாழ்க்கை முறையும் எதிர்காலத்தமிழ் இளைஞர்களுக்குப் பாடமாக இருக்கவேண்டிய ஒன்று. அடுத்ததாக, மொழிப்பற்றும் மரபின் மீது காட்டும் புரிதலும் விவாதிக்கும் திறனும் அனைவரும் அறிந்து பின்பற்ற வேண்டியது. மொழிசார்ந்த, அதன் வழி உருவாகும் பண்பாட்டு அடையாளங்கள் சார்ந்த வாழ்க்கையைத் தொலைக்காமல் இருக்கவேண்டும் என்ற நிலைப்பாடு. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். அவற்றின் மொத்த அடையாளமாகவே அவரது பெயரான பொழில்வாச்சி நா. கணேசன் என்பதைப் புரிந்துகொண்டேன். 

******

திரு.நா.கணேசனின் அழைப்பை ஏற்றுப் பாரதி கலைமன்ற நிகழ்வுக்குச் சென்றேன்.     அயல் பல்கலைக்கழகங்களில் அமையும் தமிழ் இருக்கைகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்; எப்படி இருக்கலாம் என்பதை எனது வார்சா அனுபவத்தோடு சொல்லும் திட்டத்தோடு எனது மனம் ஹூஸ்டன் என்னும் பெருந்துறைமுக நகரைப் பார்ப்பதையும் நினைத்துக்கொண்டது. புதிதாக அமையும் தமிழ் இருக்கையும் தென்னாசியவியல் துறையின் பகுதியாகவே ஹூஸ்டன் பல்கலைக்கழகத்திலும் அமைகிறது. அதன் முதல் வருகைநிலைப் பேராசிரியராக முனைவர் விஜயலெட்சுமி  கேரளப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை) பொறுப்பேற்கவுள்ளார். அவர் எனது கல்விப்புலம் சார்ந்த நண்பர்தான். தான் தேர்வு செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது என்பது தெரிந்தவுடன் என்னோடு தொடர்பில் இருந்தார். செப்டம்பரில் தொடங்கும் கல்வியாண்டின்போது அவர் அங்கு இருப்பார். அவருக்கான சம்பளம் வழங்குதல் போன்ற வகையில் ஒன்றிய அரசின் பங்களிப்பு இருக்கும். மொத்தமாகப் பல்கலைக்கழகத்திற்கு அளித்த வைப்பு நிதிக்கு தமிழக அரசும் நிதியுதவி அளித்துள்ளது. இப்போதைய திராவிட முன்னேற்றக்கழக அரசு மட்டுமல்லாமல், முந்தைய அரசும் உதவியுள்ளதாகச் சொன்னார்கள். 

கூட்டம் நடந்த வளாகம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகம் என அழைக்கப்படுகிறது.  ஹூஸ்டன் நகரில் வசிக்கும் தமிழர்களின் செயல்பாடுகளுக்கென இருக்கும் அந்த  வளாகம் பல்நோக்கு வளாகமாகத் திகழ்கிறது. தமிழறிவு சார்ந்த கலை, இலக்கியம், பண்பாட்டு நிகழ்வுகள் நடக்கும் அரங்குகள் இருக்கின்றன. தமிழர்களின் வீட்டுத் திருமணங்கள், தமிழுக்கான தனி வகுப்புகள் போன்றனவற்றோடு ஒரு நூல் நிலையமும் அங்கே இருக்கிறது. நிகழ்வுகள் நடந்த வளாகத்தில் தமிழ்நாட்டு உணவுப்பண்டங்கள் கிடைக்கும் விடுதியும் இருக்கிறது. தமிழர்களின் குடும்ப நிகழ்வுகளை அங்கேயே நடத்திக்கொள்ளமுடியும். தமிழ் மட்டுமல்லாமல் இந்தியமொழிகள் பலவற்றிலும் வந்துள்ள நூல்கள் கொண்ட நூலகம் இருக்கிறது. வெவ்வேறு வகையான தமிழ் நிகழ்வுகள் நடக்கின்றன. ஆண்டுதோறும் பொங்கல் விழாவைச் சிறப்பாக நடத்துகின்றனர் என்பதை அதன் இணையதளம் காட்டுகிறது.

 

அமெரிக்க மாணவர்கள் தமிழ்ப்படிக்க ஆர்வமாக இருப்பார்கள் என்பதை எனது பட்டப்படிப்புக் காலத்திலேயே அறிவேன். விஸ்கான்சின் பல்கலைக்கழகத்திலிருந்து வந்து அமெரிக்கன் கல்லூரியின் ஆசிரியர்களின் உதவியோடு தமிழ்மொழி, பண்பாடு, வரலாறு போன்றவற்றைக் கற்றுக்கொண்டு போவார்கள். மதுரைப் பல்கலைக் கழகத்தில் முதுகலை படிக்கும்போது பாரிஸ் நகரத்திலிருந்து வந்த எலிசபெத் பின்னிருக்கையில் அமர்ந்து வகுப்புகளைக் கவனித்துக்கொண்டிருப்பார். பல்கலைக்கழகமே பிறநாட்டு மாணவர்களுக்கு நகர்மையத்தில் தனி வகுப்புகளை நடத்தியது. ஏற்கெனவே சிகாகோ, பெர்க்லி, ஹார்வர்ட் பல்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கைகள் உள்ளன.  

தமிழ் இருக்கையில் மாணவர்கள் சேர்க்கை எவ்வாறு இருக்கவேண்டும், அப்படிப்பில் உருவாக்கப்படும் பாடத்திட்டம் எப்படி இருக்கலாம் என்பது குறித்து முன்பே வருகைதரு பேராசிரியராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள முனைவர் தி. விஜயலெட்சுமியோடு தொடர்பு கொண்டு பேசியிருப்பதை எனது உரையில் குறிப்பிட்டு விட்டு, தமிழ்மொழி என்பது தொன்மையில் மட்டும் இருப்பதாக நினைக்கக் கூடாது; அதன் தொடர்ச்சியிலும் இருக்கிறது என்பதை வலியுறுத்துப் பேசினேன்.சமகால இலக்கியப்போக்குகளைக் கற்பிக்கும் இருக்கையாக ஆகும் நிலையில் தான் அவ்விருக்கைக்கான பொருத்தம் முழுமை அடையும் என்பதையும் சொன்னேன். 

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ள தமிழ் இருக்கை அமெரிக்க மாணவர்களுக்கும் தமிழ்நாட்டிலிருந்து அங்கு குடியேறியிருக்கும் தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும் எந்தெந்த வகையில் பயன்படும்விதமாகத் திட்டமிடலாம் என்பது குறித்து ஓர் உரையை நிகழ்த்தினேன். இவ்வுரைக்கு எனது வார்சா அனுபவங்கள் உதவியாக இருந்தன. ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் இருக்கும் இந்தியவியல்/ தென்கிழக்காசியவியல் துறைகளின் செயல்பாடுகளைத் தேடி அறிந்திருந்த நிலையில் புதிதாகத் தொடங்கப்படும் தமிழ் இருக்கைக்குச் சில வழிகாட்டிக்குறிப்புகளாக அந்த உரை இருந்தது. அத்தோடு தமிழ் இலக்கியப்பரப்பில் எதுவெல்லாம் உலகத்திற்குச் சொல்லப்பட வேண்டும் என்ற விரிவுரையாகவும் இருந்தது.

******* 

திரு.கணேசன் சொன்னபடி முதல் நாளே ஹூஸ்டனுக்குப் போய்விட்ட தால் அப்பெருநகரின் முதன்மையான இடங்களைக் காரிலிருந்தபடியே சுற்றி வந்தோம். கடற்கரை ஓரத்தில் நிற்கும் பெருங்கப்பலுக்குள் சென்று திரும்ப ப்போதிய நேரம் இல்லாத நிலையில் கடல்வாழ் உயிரினங்களின் அருங்காட்சியகம் ஒன்றைப் பார்க்கப் போனோம். பொதுவாக மேற்குலகத்தினரின் சுற்றுலாத்திட்டங்களின் பல்நோக்குத் திட்டமிடலைக் குறித்துச் சிலவற்றைச் சொல்லவேண்டும். ஒன்றை மையமிட்டுக் காட்டிவிட்டு அதே வளாகத்தில் இன்னும் சிலவற்றையும் வழங்குவார்கள். எல்லாவற்றுக்கும் சேர்த்துக் கட்டணம் வசூலிப்பதில்லை. ஆனால் சிலவற்றைப் பெறுவதற்குக் கட்டணம் இருக்கும். அப்படித்தான் மீன்வளம் மற்றும் கடல்சார் உயிரினக் காட்சியகத்தில் இருந்த சிறுவர் பூங்கா, ரங்கராட்டினம், சிறுவர் போட்டி விளையாட்டுகள் என எல்லாவற்றையும் இலவசமாக்கிவிட்டு கடல்சார் அருங்காட்சியகத்திற்கு மட்டும் கட்டணம் என வைத்திருக்கிறார்கள். அதற்குக் கட்டணம் செலுத்திவிட்டுப்போனால், வீட்டுச் சிறுவர்களுக்கு நல்ல பொழுதுபோக்கும் விளையாட்டுகளும் கிடைக்கும். நாங்கள் போன நாள் வாரக்கடைசி – சனிக்கிழமை என்பதால் நல்ல கூட்டம். பிற்பகல் மூன்று மணியிலிருந்து 7 மணி வரை அங்கேயே கழிந்தது. ஆனாலும் எல்லாவற்றையும் அனுபவித்துவிட முடியவில்லை. 

கடல்வள அருங்காட்சியகத்தைப் பார்க்கும் யோசனையைச் சொன்னவர் ஹேமிகிருஷ் என்ற சிறுகதை எழுத்தாளர். மிக அண்மையில் அவர் எழுதிய கதையொன்று ஆனந்த விகடனில் வந்திருந்தது. அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான நெட்டுயிர்ப்பைக் கனலி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதனை வாசித்து விமரிசனம் எழுதியதின் தொடர்ச்சியில் அவரோடு தொடர்பிருந்தது. விமரிசனம் எழுதியபோது இந்தியாவில் இருந்தார். அமெரிக்காவில் டல்லாஸ் நகருக்கு வருவது தெரிந்தபின், தான் ஹூஸ்டன் நகரில் இருப்பதாகத் தெரிவித்து வீட்டிற்கு வரவேண்டும் என்றார். அழைப்பை ஏற்றுப் போனபோதுதான் தெரிந்த து அவரது கணவர் கிருஷ்ணனின் பெயரையும் பாதியாக்கித் தனது புனைபெயரை உருவாக்கியிருக்கிறார் என்பது. அடுத்தநாள் சொற்பொழிவுக்கு அவர்களும் வந்தார்கள். அவர்களது வீடு ஹூஸ்டன் நகரின் மையப்பகுதியில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்தது. அவர்கள் வீட்டுக்குப் பக்கமாகத்தான் கடல்வாழ் உயிரினக்காட்சியகம். 

முதல் நாள் சுற்றல் அத்தோடு முடிந்த து. இரவில் நா.கணேசன் வீட்டில் தங்கல்; இரவு உணவுக்கு இந்திய -மெக்சிக க்கலவை உணவகம் ஒன்றில் விருந்து. மறுநாள் முற்பகல் நா. கணேசனின் ஆலோசனைப்படி நாசாவுக்குச் சென்றோம். 1500 ஏக்கர் நிலப்பரப்பில் பல்வேறு தளங்களில் ஆய்வுக்கூடங்கள், தகவல் கூடங்கள், காட்சிக்கூடங்கள், ராக்கெட் இணைப்புக்கூடங்கள் என விரிந்து கிடைக்கிறது நாசா மையம். எல்லாவற்றையும் பார்க்கவும் முடியாது. சிலவற்றிற்கு அனுமதி உண்டு. சிலவற்றைத் திரைப்படமாக க்காட்டுகிறார்கள். சிலவற்றை நேர்க்காட்சியில் வைத்திருக்கிறார்கள். தகவல் கூட த்தில் நுழைந்தால் வான்வெளி குறித்த அடிப்படைத் தகவல்களைத் தரும் காட்சியகம் இருக்கிறது. ஒவ்வொன்றுக்குள்ளும் போய்வந்தால் ஓரளவு அமெரிக்காவின் வான்வெளி ஆய்வின் வரலாறும் செயல்பாடும் புரியும். அங்கிருந்து நமது விருப்பத்திற்கேற்ப ஏதாவது தளங்களைத் தேர்வுசெய்து, அதற்கென இருக்கும் தொடர்வண்டியில் ஏறி உட்கார்ந்தால், அங்கே கொண்டு போய் விடுவார்கள். அங்கே பார்த்துவிட்டு அடுத்த தளத்திற்குப் போகலாம்.  மிகப்பிரமாண்டமான போயிங்க் விமானம் ஒன்று அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. அதற்குள்ளேயே மூன்று அடுக்கு அரங்கம் இருக்கிறது. 

நாசா ஆய்வகம் வான்வெளிப் பயணங்கள், ராக்கெட்டுகள் ஏவுதல் என்று மட்டும் செயல்படும் நிறுவனம் அல்ல. அடுத்த நாடுகளின் ரகசியங்களை அறியும் நோக்கமும் அதற்குண்டு. அதேபோல் பல நாடுகளில் நடக்கும் போர்களில் தலையிடும் அதிகாரத்தை அமெரிக்காவிற்கு வழங்கும் பணியையும் அந்நிறுவனக் கண்டுபிடிப்புகள் உருவாக்கித் தருகின்றன. ராக்கெட் வீச்சு ஆயுதங்கள், ஆளில்லா விமானங்களைக் கொண்டு குறிப்பிட்ட இலக்கைத் தாக்கும் முறை போன்றன அங்கு சோதனையிடப்பட்டுக் காக்கப்படுகின்றன. இத்தகைய ஆய்வுக்கூட த்தில் அமெரிக்கர்கள் மட்டுமே பணியில் இருக்கிறார்கள் என்று சொல்லவும் முடியாது. இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் வந்து பணியாற்றும் விஞ்ஞானிகள் பலர் எனப் பரப்புரை செய்யும் மத அடிப்படைவாத நம்பிக்கையாளர்களும் அமெரிக்காவில் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் நாசா ஆய்வகத்திற்குச் செய்யும் செலவு வீண் விரயம் எனப் பேசுவதாகவும் அங்கே துண்டுப்பிரசுரங்கள் வைக்கப்பட்டுள்ளன


டெக்சாஸிலிருந்து 400 மைல் தொலைவில் உள்ள ஹூஸ்டனுக்கு நாங்கள் காரிலேயே சென்றோம். அந்தக் கார்ப் பயணத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்றாகச் சாலையோர வாகன நிறுத்தங்களின் இருப்பை நினைக்கிறேன். தமிழ்நாட்டின்/ இந்தியாவின் நெடுஞ்சாலைப் பயணங்களில் இடையில் நிறுத்திக் கழிப்பறைகளுக்குச் செல்ல நினைப்பவர்களுக்குக் கடந்த 10 ஆண்டுகளில் முகஞ்சுளிக்காத அளவுக்குக் கழிப்பறை வசதிகள் கிடைக்கின்றன. அதற்கு முன்பு பெரும்பாலும் திறந்தவெளிதான். பயணிக்கும் பெண்களின் பாடு பெரும்பாடு. இப்போது பேருந்து அல்லது கார்களில் சென்றாலும் பெரும் உணவுச்சாலைகளின் நிறுத்துமிடங்களில் நிறுத்திக்கொள்ளலாம். அங்கிருக்கும் கழிப்பறைகள் பெரும்பாலும் கட்டணக்கழிப்பறைகளாக இருக்கின்றன. அவர்கள் கேட்கும் பணத்தைத் தரவேண்டும். இப்போது சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கழிப்பறைகளும் சிற்றுண்டிச்சாலைகளும் உருவாகியுள்ளன. சுங்கச்சாவடிகளின் ஓரத்தில் விரியும் வாகன நிறுத்தங்களிலும் இப்போது இந்த வசதிகள் கிடைக்கின்றன.


அமெரிக்க/ஐரோப்பிய நாடுகளின் நெடுந்தூரப் பயணங்கள் இதற்கு மாறானவை. அங்கும் உணவுச்சாலைகளோடு கூடிய எரிபொருள் நிலையங்கள் இருக்கின்றன. அவையெல்லாம் ஓய்வெடுக்கும் பகுதி எனவும், சிற்றுலாப் பகுதி எனவும் சாலையோரங்கள் இருக்கின்றன. அங்கிருக்கும் கழிப்பறை, ஒய்வறை, நீர்க்குடுவை போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பை போக்குவரத்தோடு தொடர்புடைய ஏதாவது ஒரு பெரும் வணிகக்குழுமம் பொறுப்பேற்றுச் செய்கின்றன. நெடுஞ்சாலையிலிருந்து கொஞ்சம் விலகி இருக்கும் நிறுத்தங்களில் நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கலாம். கார்களுக்குத் தனியாகவும் சாமான்கள் ஏற்றிச் செல்லும் பெரும் வாகனங்களுக்குத் தனியாகவும் நிறுத்துமிடங்கள் இருக்கின்றன. சிற்றுலா போன்ற பகுதிகள் நெடுஞ்சாலையிலிருந்து கூடுதலான தூரம் விலகி இருக்கின்றன. அங்கும் ஓய்வெடுக்கவும் உண்ணவும் இடங்கள் இருக்கின்றன.


பார்த்த காட்சிகள் மனத்தில் இருப்பதுபோல, இடையில் ஓய்வெடுத்த இடங்களும் நினைவில் இருக்கின்றன. 







 

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. மேற்கின் மேற்கே 8 : கொண்டாட்ட த்திற்கான நெடும்பயணம் - மேற்கின் மேற்கே
  2. மேற்கின் மேற்கே 6 : ஆஸ்டினும் பேரவைக்கூடமும் அலாமோ போர்க்காட்சி நினைவுகளும் - அ.ராமசாமி
  3. மேற்கின் மேற்கே 5 :சான்அண்டோனியோ: நதியோடும்நகரம் ….. – அ.ராமசாமி
  4. மேற்கின் மேற்கே 4 : நெடுங்கொம்பு மாடுகள்: டெக்சாஸின் அடையாளச்சின்னம் - அ.ராமசாமி
  5. மேற்கின் மேற்கே 3 : ஒக்கலகாமா:  திரும்ப நிகழ்த்தும் பயங்கரம் - அ.ராமசாமி
  6. மேற்கின் மேற்கே 2 : மாறியது திசை; மாற்றியது - அ.ராமசாமி
  7. மேற்கின் மேற்கே - 1 : கிழக்கென்பது திசையல்ல. மேற்கென்பதும். - அ.ராமசாமி