டெக்சாஸ் மாநிலத்தில் பார்க்கவேண்டிய நகரங்கள் வரிசையில் இரண்டாவதாக இருந்தது சான் அண்டோனியோ. உலக வரலாற்றில் பாதுகாக்கப்படவேண்டியன என்று கருதும் நினைவுச்சின்னங்களைத் தனது பொறுப்பில் எடுத்துக்கொண்டு பாதுகாக்கும் பொறுப்பை வலியுறுத்துகின்றது யுனெஸ்கோ மரபுக்காப்பகம். சிறப்பு நிதி கிடைக்க ஏற்பாடுகிறது. சான் அண்டோனியோ நகரத்து    அலோமா ஆவணக்காப்பகம் அப்படிப் பட்டியலிடப்பட்ட ஒன்று. அத்தோடு நகரின் குறுக்கே ஓடும் ஆண்டோனியா நதியும் சிறப்பான சுற்றுலா வாய்ப்புகளை உருவாக்கித் தந்திருக்கிறது. 

சான் அண்டோனியோ நகரத்தை அதன் வரலாற்றைத் தேடி மொழிபெயர்ப்பதென்றால் புனித அந்தோனியார் நகரம் என்று மொழிபெயர்க்கலாம். போர்த்துகீசியப் பாதிரியார் செயிண்ட் அந்தோனி ஆப் பதுவா 1691 அங்கு வந்ததாகவும், அந்த நினைவுக்காக அவரது பெயர் வைக்கப்பட்டதாகவும் குறிப்புகள் சொல்கின்றன. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்காமல் ஸ்பானிய உச்சரிப்பிலேயே நகரம் அழைக்கப்படுகிறது. அவரது நினைவுநாள் கொண்டாட்டங்கள் ஜூன் 13 அன்று நடக்கும் என்றும் இந்த வாரத்தில் தான் அந்த விழா என்றும் ஏற்பாடுகள் காட்டின. நாங்கள் அதற்கு முந்திய வாரக்கடைசியில் போயிருந்தோம்.  கொண்டாட்டம் நடக்கும் இட த்திற்குச் செல்லாமல் நதிக்கரையில் நட ப்பதை முதல் விருப்பமாகத் தேர்வு செய்தோம்.

நகருக்குள் நுழைந்து வரும் ஒவ்வொரு சாலையும் சான் அண்டோனியோ நதி மீது கட்டப்பட்ட பாலத்தைக் கடப்பனவாக உருவாக்கப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்தாகப் பேருந்துகள் வருகின்றன. ஏதாவதொரு பாலத்திற்குப் பக்கத்தில் இருக்கும் நிறுத்தங்களில் இறங்கி நதிக்குச் செல்லப் படிக்கட்டுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சொந்த வாகனத்தில் வருபவர்கள் கட்டணம் செலுத்தி நிறுத்தும் வாகன நிறுத்தங்களைத் தேடி நிறுத்திவிட்டு ஒரு பாலத்திற்குப் பக்கத்தில் இருக்கும் படிக்கட்டுகளைப் பயன்படுத்தி இறங்கிக் கொள்ளலாம். நகரின் சாலை மட்டத்திலிருந்து ஆற்றோர நடைபாதை 10 அடிக்கும் கீழே இறங்கியுள்ளது.  நதியின் இருபக்கமும் இரண்டு நிலைச் சாலைகள் உள்ளன. தரைத்தளமான மேலடுக்கில் நடந்தபடியே ஓரங்களில் இருக்கும் காட்சிகளைப் பார்த்தபடியே சுற்றிவரலாம். விரும்பும் இட த்தில் அடுத்துள்ள ஆற்றங்கரைப் பாதையில் இறங்கியும் நடக்கலாம். 

சிறியதும் பெரியதுமான உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள், விற்பனைக்கூடங்கள் வரிசையாக இருக்கின்றன. ஆற்றைப்பார்த்தபடி இருக்கும் விதமாகத் தங்கும் விடுதிகளின் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பலமாடிக்கட்டடங்களின் ஆற்றோர இருக்கையில் அமர்ந்தபடி ஆறு பார்க்கிறார்கள் சுற்றுலா வாசிகள். நதியின் திருப்பங்களின் முனைகளில் இசைக்கச்சேரி, நடனக்கச்சேரி நடக்கும் மேடைகள் உள்ளன. நதிக்குள் ஒரு தீவாகப் பெரும் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

 அமெரிக்க, ஐரோப்பிய நகரங்கள் பலவற்றிலும் ‘ரிவர் வாக்’ எனச் சுற்றுலா வாசிகளை ஈர்க்கும் வெளிகள் உண்டு. சான் ஆண்டனியோ நகரத்து நதிக்கரை  நடை அதிலிருந்து வேறுபட்ட ஒன்று. நடக்கவேண்டிய தூரம் 15 மைல். மொத்தத்  தூரத்தையும் நடந்தே பார்ப்பது நடக்காத காரியம். முடிந்த அளவு நடக்கலாம். விரும்பினால் படகில் ஏறிப்பயணத்தைத் தொடரலாம்.  30 முதல் 40 பேர் வரை பயணம் செய்யக்கூடிய படகுகளை வெவ்வேறு நிறுவனங்கள் ஓட்டுகின்றன. நேரம் குறித்து முன்னரே பதிவு செய்துவிட்டு அந்த நேரத்துக்குப் போய் ஏறிக்கொள்ளலாம். அல்லது நேரடியாகவே வரிசையில் நின்று சீட்டு வாங்கிக் கொண்டு பயணிக்கலாம். கிளம்பிய இட த்திலிருந்து ஒரு சுற்றுச் சுற்றி வர முக்கால் மணி நேரம்வரை ஆகும் என்பதை முன்னறிவிப்புச் செய்கிறார்கள். படகோட்டி வெறும் படகோட்டி மட்டுமல்ல. நதியின் ஆழம் பத்தடிக்கும் மேலே இருக்கும் என்ற தகவலைச் சொல்லும் சாரதிகள் படகு கடக்கும் இடத்தில் இருக்கும் காட்சிகள், கடைகள் போன்றவற்றைக் குறித்துச் செய்திகளைச் சொல்லும் வழிகாட்டியாகவும் இருக்கிறார்கள். படகோட்டும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களில் ஆண் – பெண் வேறுபாடுகள் இல்லை. 

நதிக்கரை நடைக்கு வருபவர்கள் பகல் நேரத்தை விடவும் இரவுநேரத்தில் அதிகம்.  கரையிலிருக்கும் ஒவ்வொரு வணிக நிறுவனமும் வண்ண விளக்குகள் தங்கள் இடங்களை ஜ்வலிக்க விடுகின்றன. நடனக்கச்சேரிகளும் இசைக்கச்சேரிகளும் மாலை தொடங்கி இரவில் நீள்கின்றன. இரவு நேர விருந்துகளும் நீளும் குடிகளும் நாகரிகத்தின் அடையாளங்கள் அல்லவா? நதியைச் சுற்றுலாவாக க்கருதும் வணிகமும் அரசும் மக்களின் நம்பிக்கைகளை இல்லாமல் ஆக்கிவிட முடியாது. நதியில் ஓடும்  படகில் பயணம் செய்தும், நதியோடு நடந்தும், சிற்றுண்டிச் சாலையில் சாப்பிட்டுவிட்டு  மேலேறி வந்தோம். ஒரு பாலத்தின் இருபுறமும் விதம்விதமாக பூட்டுக்களால் நிரம்பி வழிந்தது.  நின்று பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஒரு பெண் பூட்டொன்றைப் பூட்டி, அதன் சாவியை நதிக்குள் வீசினாள். அதன் காரணத்தை அவளிடம் கேட்கவில்லை. ஆனால் அந்தப் பாலத்தைப் பற்றி விசாரித்தபோது பூட்டுக்கும் சாவிக்கும் பின்னால் இருக்கும் கதையை அறிய முடிந்தது. அந்தக் கதை உலகெங்கும் இருக்கும் நம்பிக்கைகளின் வெளிப்பாடுகளில் ஒன்று. 

தாலி வரம் கேட்டு மஞ்சள் கயிறு தொங்கவிடுதல், பிள்ளை வரம் வேண்டித் தொட்டில் கட்டித் தொங்க விடுதல் எல்லாம் தமிழ்நாட்டின் பல கோயில்களில் பார்த்த காட்சிகள். திருமணம் ஆகாத பெண்களுக்குத் தாலிவரம் கொடுக்கும் சாமிகளும், பிள்ளையில்லாத தம்பதிகளுக்குப் பிள்ளைவரம் கொடுக்கும் சாமிகளும் நாட்டுப்புறத் தெய்வங்களாக இருக்கின்றன. இந்தியாவில் மட்டுமல்லாமல், கீழைத்தேயங்கள் பலவற்றில் அத்தகைய நம்பிக்கைகள் உள்ளன. ஆனால் இங்கே திருமணத்திற்குப் பின்னாலோ, பிள்ளைப்பேற்றுக்குப் பின்னாலோ அப்படியான நம்பிக்கைகளும் நேர்த்திக்கடன்களும் இருப்பதாகத் தெரியவில்லை. அதற்குப் பதிலாக நீண்ட காலம் சேர்ந்து வாழவேண்டும் என விரும்பும் தம்பதியினரின் நம்பிக்கையாக இந்தப் பூட்டும் சாவியை ஆற்றில் எறிவதும் இருக்கிறது. கல்யாணம் கட்டிக்கொள்வது என உறுதியானவுடன் ஆணும் பெண்ணோ நல்ல பூட்டு ஒன்றை வாங்கி அந்த ஆற்றுப் பாலத்துச் சுவரில் உள்ள கம்பிகளில் பூட்டுகிறார்கள். பூட்டியபின் சாவியை ஆற்றில் எறிந்து விடுகிறார்கள். இப்படிச் செய்வதால் அவர்களின் திருமண வாழ்க்கையில் விவாகரத்து நிகழாமல் நீண்ட காலம் சேர்ந்துவாழும் வாய்ப்பு உண்டு என நம்புகிறார்கள். பாலத்தின்     கம்பிகளே தெரியாத அளவுக்கு பூட்டுகள் தொங்குகின்றன. அமெரிக்க/ ஐரோப்பியக் குடும்ப வாழ்க்கையில் விவாகரத்தைக் கண்டு பயப்படும் வாய்ப்பு இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.

*******

தமிழகத்தின் பெருநகரங்கள் பலவற்றிற்கும் போயிருக்கிறேன்.துறைசார்ந்த பணிகளுக்காகப் போனாலும் முன்னோ பின்னோ ஓரிருநாள் தங்கி அந்த நகரங்களைப் பார்த்து விடுவதில் விருப்பம் கொண்டவன் நான். தமிழ்நாட்டின் எந்தவொரு பெருநகரத்திலும்  சுற்றுலாத் தலங்களிலும் நீர்வழிப்போக்குவரத்தின் அனுபவம் கிடைத்ததில்லை. கொடைக்கானலிலும் ஊட்டியிலும் இருக்கும் படகுப் பயணங்கள், நீர்வழிப்பயணங்கள் தரும் எந்த அனுபவத்தையும் தந்ததில்லை. படகோட்டிக்குப் போட்டுத்தரப்படும் பாதையில் ஒரு சுற்றுச்சுற்றிவிட்டு வந்து இறக்கிவிடும் கடமையைத்தான் செய்வார்கள்.  நீர்வழிப் பயணம் செய்து பார்க்கவேண்டிய ஓரிடம் இருக்கிறதென்றால், அது கன்யாகுமரியின் விவேகானந்தர் பாறைதான். சூரிய உதயம் பார்த்தபின் கடலோர மணல்வெளியில் நடந்துவிட்டுக் கப்பலில் ஏறி கடலுக்குள் செல்ல வேண்டும். கன்யாகுமரியில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ள விவேகானந்தர் நினைவுப் பாறையையும் திருவள்ளுவர் சிலையையும் கடற்கரையிலிருந்து பார்த்தாலே அழகும் பிருமாண்டமும் வசப்படக்கூடும் என்றாலும் அத்தீவுப்பாறைகளுக்கே சென்று பார்த்துவிடுவதில் கூடுதல் அனுபவம் கிடைக்கவே செய்கிறது. ஏறியவுடன் இறக்கிவிடும் படகுப் பயணத்திற்காகக் காத்திருத்தலின் நேரம் பலமடங்கு அதிகம். 

ஈராண்டு ஐரோப்பிய வாழ்க்கையில் நீர்வழிப்பயணங்கள் தந்த அனுபவங்கள் சில உண்டு. ஐரோப்பியப் பெருநகரங்கள் பலவற்றை அவற்றைத் தொட்டுச் செல்லும் நதிகள் பிரித்துக்காட்டுகின்றன. போலந்தின் குறுக்காக ஓடும் விஸ்துலா ஆறு, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சிலவற்றின் வழியாகச் செல்லும் டான் நதி எல்லாம் ஓராண்டின் கால்வாசிக் காலத்தில் உறைபனியாய் மாறிவிடக்கூடியவை. அந்த நிலையிலும் அவை பயணிகளுக்கான படகுப்போக்குவரத்து அனுபவங்களைத் தரவே செய்கின்றன. டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரம் டான் நதியை இணைப்போக்குவரத்து வழித்தடமாகப் பயன்படுத்துகிறது. பேருந்துகள் செல்லும் நகரச்சாலைகள் ஒவ்வொன்றின் பக்கத்திலும் டான் நதியின் நீரைத்திருப்பிவிட்டு வழித்தடம் உருவாக்கியிருக்கிறார்கள். பெரும்படகுப் படகுகளும் சிறுபடகுகளும் செல்வதற்கான பிரிவுகளும் உண்டு. அதன் அருகிலேயே ட்ராம் வண்டிகள் ஓடும் தண்டவாளங்களும் இருக்கின்றன. ஒருவர் விரும்பினால் ஒவ்வொன்றிலும் மாறிமாறிப் பயணம் செய்யலாம். டான்நதியைப்போல – விஸ்துலாவைப்போலவே நெல்லைக்குத் தாமிரபரணி இருக்கிறது. 

நகரங்களும் நாகரிகமும் நதிகளோடு தொடர்புடையன என்பது சமூகவரலாற்றுப் பாடம் சொல்லித் தந்த ஒன்று.  நதிகளின் கரையில் இருக்கும் சிறுநகரங்கள் பெருநகரங்களாக மாறும்போது நதி நகரின் குறுக்கே ஓடும் ஒன்றாக மாறிப்போவதுண்டு. மதுரை நகரம், வைகை நதியின் தென்கரையில் இருந்த தாகவே சிலம்பு சொல்கின்றது. தாமிரபரணி ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்னால் நெல்லையின் கிழக்கு எல்லையாக இருந்துள்ளது. அவர்கள் உருவாக்கிய அரசு அலுவலகங்களும் கிறித்தவ ஆலயங்களும் நிரம்பிய பாளையங்கோட்டையும் ஒரு பாலத்தால் இணைக்கப்பட்ட நிலையில் இன்று இரட்டை நகரமாக மாறியிருக்கிறது. இருநகரங்களையும் செம்பாதியாகப் பிரித்து ஓடும் நதியாகத் தாமிரபரணி மாறியிருக்கிறது.  

சான் அண்டோனியோ நகரில் கிடைத்த நதியோர நடைப் பயணத்தையும் படகுப் பயணத்தையும் தமிழ்நாட்டில் உருவாக்கித்தரும் வாய்ப்புள்ள ஒரு நகரம் உண்டென்றால் அது தாமிரபரணி நதியோடும் நெல்லைதான்.  2013 இல் வார்சாவிலிருந்து திரும்பிய பின் திருநெல்வேலியாகவும் பாளையங்கோட்டையாகவும் பிரித்துக்காட்டும் தாமிரபரணியைப் படகோடும் நதியாக நினைத்துப் பார்த்துக் கற்பனை மட்டுமே செய்து கொண்டிருருந்தேன். ஒன்றிய அரசு- ஸ்மார்ட்சிட்டி என்னும் சீர்மலி நகரங்களை உருவாக்கும் திட்டத்தில் திருநெல்வேலியையும் பட்டியலிட்டபோது அரசு அதிகாரி ஒருவரிடம் எனது கற்பனைக்கு வடிவம் கொடுக்கும் முறையைச் சொன்னேன். சங்கர் சிமெண்ட ஆலைக்குப் பின்னால் தாமிரபரணியில் ஒரு தடுப்பணையைக் கட்டி நீரைத்தேக்க வேண்டும். அந்நீர்ப்பெருக்கு மேலப்பாளையம் வரை, குறுக்குத்துறை முருகன் கோயில் வரை உயரும். குறுக்குத்துறை முருகன் கோயிலில் தொடங்கி மூன்று கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் போய்த்திரும்பும் படகோட்டத்திற்கு வாய்ப்புண்டு. முதல் கட்டமாக இப்போதுள்ள நதியில் படகோட்டலாம். பின்னர் தனியார் நிறுவனங்களின் உதவியோடு கம்பாநதிக் கால்வாயை அகலமும் ஆழமும் படுத்தினால்,  நெல்லையப்பர் கோயிலுக்குப் பக்கத்தில் இருக்கும் நயினார் குளத்தில் படகோட்டலாம். அங்கிருந்து இன்னொரு கால்வாய் மூலம் சிந்துபூந்துறையில் இறக்கிச் சதுரமாகப் படகுப்பாதையை உருவாக்கலாம். அதேபோல் பாளையங்கோட்டை ரயில் நிலையத்திற்குப் பக்கத்தில் வெட்டப்படும் கால்வாய்மூலம்  வி.எம்.சத்திரம் வரை நீரோடச் செய்து, கட்டபொம்மன் நகர்வழியாகப் படகுப்போக்குவரத்து உண்டாக்கிச் சீவலப்பேரிப் பாலத்தோடு இணைக்கலாம். இப்படி உண்டாக்கப்படும் படகுப்பயணம் உலக நகரங்களில் இருக்கும் நதிக்கரைப் பயணங்களில் ஒன்றாக இருக்கும் என்று சொன்னேன். அவர் கேட்கும்போது சிரித்துக்கொண்டார். ஒருவேளை இந்த த்திட்ட த்தை அரசியல்வாதி/ அமைச்சர் ஒருவரிடம் சொல்லும் வாய்ப்பு கிடைத்திருந்தால் திட்டப்பணிக்கான வரைபடம் உருவாக்கப்பட்டிருக்கலாம். தமிழ்நாட்டு நதிகளில் திருநெல்வேலி ஆண்டு முழுவதும் நீரோடும் நதி.

 

நதிக்கரை நகரங்கள் பல தமிழ்நாட்டில் உண்டு. நீண்ட காலத்திற்கான திட்டங்களைத் தீட்டும் அரசுகள் முயன்றால் வைகைக்கரையில் இருக்கும் மதுரையிலும் தேனியிலும் படகுத்துறைகள் உருவாக்கமுடியும். பேரூர் வழியாக ஓடிய நொய்யல் நதியைக் காணவில்லை. ஆனால் உக்கடம், சிங்காநல்லூர் ஏரிகள் ஆண்டில் சில மாதங்களாகவது நிரம்பி நிற்கின்றன. அங்கெல்லாம் படகுப்பயணங்களுக்கு வாய்ப்புண்டு. காவிரியைத் தடுத்தி நிறுத்தித் திருச்சியிலும் தஞ்சையிலும் படகுகள் ஓட்ட முடியும். சோழர் பெருமை பேசும் அரசுகள் காவிரிவளநாட்டின் அடையாளத்தைக் காட்ட நதிக்கரை ஊர்களுக்குப் படகுப் பயணங்களைச் சாத்தியமாக்கலாம்.  சென்னையில் ஓடிய ஆறுகளைத் திருத்திக் கட்டுவதின் மூலம் சென்னைக்கு மாற்றுப்  போக்குவரத்துக்குரிய நீர்வழிப் பாதைகளைக் கண்டறியமுடியும்.  

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. மேற்கின் மேற்கே 8 : கொண்டாட்ட த்திற்கான நெடும்பயணம் - மேற்கின் மேற்கே
  2. மேற்கின் மேற்கே 7 : ஹூஸ்டன்: தமிழ் இருக்கையும் நாசாவும் - அ.ராமசாமி
  3. மேற்கின் மேற்கே 6 : ஆஸ்டினும் பேரவைக்கூடமும் அலாமோ போர்க்காட்சி நினைவுகளும் - அ.ராமசாமி
  4. மேற்கின் மேற்கே 4 : நெடுங்கொம்பு மாடுகள்: டெக்சாஸின் அடையாளச்சின்னம் - அ.ராமசாமி
  5. மேற்கின் மேற்கே 3 : ஒக்கலகாமா:  திரும்ப நிகழ்த்தும் பயங்கரம் - அ.ராமசாமி
  6. மேற்கின் மேற்கே 2 : மாறியது திசை; மாற்றியது - அ.ராமசாமி
  7. மேற்கின் மேற்கே - 1 : கிழக்கென்பது திசையல்ல. மேற்கென்பதும். - அ.ராமசாமி