அமெரிக்காவிற்கு வந்து இரண்டாவது வாரத்தின் கடைசி நாட்களான சனி, ஞாயிறில் பார்க்க விரும்பிய முக்கிய இடம் சான் அண்டோனியா. அங்கிருக்கும் அருங்காட்சியகங்களும் நதியில் மிதக்கும் படகுப்பயணமும் தவிர்க்கக்கூடாதவை என்ற பட்டியலில் இருந்தன. அத்தோடு சான் அண்டோனியா போகும் வழியில் தான் டெக்சாஸ் மாநிலத்தின் நிர்வாகத்தலைநகரமான ஆஸ்டினும் இருக்கிறது. 

ஐக்கிய அமெரிக்கக்குடியரசில் 10 ஆவது பெரிய நகரமாகவும், டெக்சாஸ் மாநிலத்தில் இரண்டாவது பெரியதாகவும் இருக்கும் சான் அண்டோனியோ நகரம் அதன் தலைநகரான ஆஸ்டினிலிருந்து ஒரு மணிநேரப்பயணத்தில் இருக்கிறது. முதல் பெரிய நகரம் ஆஸ்டின்.  நாங்கள் ஒரு வாரக்கடைசியில் ஆஸ்டினையும் சான் அண்டோனியாவையும் பார்த்துவிடும் திட்டத்தோடு சென்றோம். எனது மகள் குடும்பம் இருப்பது டெக்சாஸின் வணிகத்தலைநகரான டல்லாஸில். 

அதிகாலை ஐந்துமணிக்கு டல்லாஸிலிருந்து கிளம்பி மூன்று மணி நேரப்பயணத்தில்  ஆஸ்டின் போய்ச் சேர்ந்தபோது பிரமாண்டமான சட்டப்பேரவையின் முதல் பார்வையாளர்களாக நாங்களே இருந்தோம். திறப்பதற்கு முன்னால் அக்கட்டடம் இருக்கும் வளாகப்பூங்காவில் உள்நாட்டுப் போர்க்களக் காட்சிகளின் சிற்பங்கள் ஆங்காங்கே நின்றன. இந்த வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் படிமங்கள் புதிதாகச் செய்யப்பட்ட படிமங்கள். அந்தக் காட்சிப்படிமங்களின் ஆதாரங்களும் போர்க்கருவிகளுமே சான் அண்டோனியோ அருங்காட்சியகங்களில் தொகுத்து வைக்கப்பட்டிருந்தன என்பதை அங்கு போனபோது உணர முடிந்தது.  

டெக்சாஸ் மாநிலச் சட்டப்பேரவைக்கட்டடம் பழைமையும் புதுமையும் ஒருங்கே மிளிரும் கட்டடமாக விளங்குகிறது. நம்மூர்ச் சட்டசபைகளைப் போல அல்லாமல் எல்லா இடங்களிலும் பார்வையாளர்கள் சென்று பார்க்க அனுமதிக்கிறார்கள். வட்டமான சுற்றுப்பாதை நடுவில் இருக்க, நான்கு புறமும் அமைச்சர்கள், உறுப்பினர்கள், அதிகாரிகளின் செயலகங்கள் என விரிகின்றன. அத்தோடு அரசியல், வரலாறு தொடர்பான ஆவணக்காப்பகமும் அங்கே இருக்கிறது. சுற்றிப்பார்க்கக் குறைந்தது மூன்று மணி நேரத்திற்கும் குறையாமல் தேவை. ஆஸ்டின் தகவல் தொழில்நுட்பக் கூடாரங்கள் நிரம்பிய நகரம். அதனால் ஏராளமான அந்நியர்களின் வாசத்தைக் காணமுடிந்தது. தகவல் தொழில் நுட்பக் கூடாரங்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் இந்தியர்கள் – குறிப்பாகத் தமிழர்களும் தெலுங்கர்களும் கன்னடர்களும் நிரம்பிக் கிடக்கிறார்கள். ஆஸ்டினும் அதற்கு விலக்கல்ல.  

*****

ஆஸ்டினில் வேறு முக்கியமான இடங்களைப் பார்ப்பதைவிடவும் சான் ஆண்டனியோவைப் பார்ப்பதே எங்கள் முதல் விருப்பம் என்பதால் அன்று பிற்பகலே அங்கு சென்றுவிட்டோம். முதலில் அருங்காட்சியகம் பின்னர் நதிக்கரை நடை என்று முடிவுசெய்துகொண்டோம். நதியோடும் நகரமான சான் அண்டோனியாவின்   கலைப்பொருள் கண்காட்சி அலாமோ தேவாலயத்தோடு இணைந்திருக்கிறது.   கலைப்பொருள் கண்காட்சியகம் என்று சொல்லப்பட்டாலும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளவை பெரும்பாலும் போரோடு தொடர்புடையனவே. பழைமை மாறாமல் இருக்கும் போர்க்களச் சிதைவுகள் விரிவாகத் தரைத்தளத்தில் பரப்பி வைக்கப்பட்டுள்ளன. இன்னொரு அருங்காட்சியகத்தில் தனி நபர் ஒருவர் சேகரித்த போர்க்கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

சான் அண்டோனியா என்ற பெயரோடு தொடர்புடையவர் டேவிக்ராக்கெட் . புகழ்பெற்ற அமெரிக்க எல்லைப்புறத்தில் இருந்த கிராமிய மக்களின் தலைவர்களின் முதன்மையானவர் அவர். 1836 இல் நடந்த போர்களில் முதன்மையானவராகப் பங்கேற்ற க்ராக்கெட்டையும் அவரோடு இறந்த மற்ற மனிதர்களையும் நினைவுகொள்ளும் வகையில் விரியும் அலாமோ அருங்காட்சியும் அங்கிருக்கும் தேவாலய்த்தோடு இணைந்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  காட்சிப்படுத்தப்பட்டுள்ள அருங்காட்சியகத்தையும் போர்க்கருவிகளையும் ஒருசேரப்பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இரண்டு காட்சியகங்களின் ஒன்றுக்கு அனுமதிக்கட்டணமும் இன்னொன்றுக்கு இலவசமும் என்பது அங்கு நடைமுறையாக இருக்கிறது. 

அனுமதிக் கட்டணம் செலுத்திய/ முன்பதிவு செய்த குறிப்பைக் காட்டினால் அந்த இடத்தின் வரைபடத்தினையும், எண்ணிட்டுப் பதிவு செய்த அலைபேசி போன்ற வாக்கி டாக்கியையும் தருகிறார்கள். தரைத்தளத்தில் உள்ளறைகளாகவும் வெளியில் விரியும் காட்சிகளாகவும் பரப்பி வைக்கப்பட்டுள்ள பழங்கருவிகளையும் மாதிரிகளையும் பார்த்துக்கொண்டே நடக்கலாம். நடக்கும்போது ஒவ்வொரு அறைக்கும் வெளிக்கும் தரப்பட்டுள்ள எண்ணை, வரைபட த்தோடு ஒத்துவைத்துப் பார்ப்பதோடு அலைபேசி எண்ணையும்  அழுத்திக் காதில் வைத்தால் அந்த இடம் பெற்றிய முழுவிவரத்தையும் ஒருவர் அழைத்துச் சொல்வதுபோலக் கேட்கலாம். தனியாக விளக்கும் சுற்றுலா விவரிப்பாளருக்குப் பதிலாக அலைபேசிப் பதிவுகள்.  எல்லாவற்றையும் பார்த்து முடித்தபின் அங்கங்கே வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகளுக்குள் அந்த வாக்கி- டாக்கி கருவியைப் போட்டு விடலாம்.  

 ஒவ்வொரு ஆண்டும் இந்நகருக்கு 1.6 மில்லியன் சுற்றுலா வாசிகள் வருவதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. 2014 -க்குப் பின் அலாமோ வருபவர்களுக்குக் கூடுதலாக ஒரு அருங்காட்சியகத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இரண்டு மாடிகள் கொண்ட ஒரு கட்டடத்தில் தனியொரு மனிதர் சேகரித்த ஆயுதங்களின் தொகுப்பு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அப்படித் தொகுத்தவர் புகழ்பெற்ற ராக் இசைப்பாடகர் பில் காலின்ஸ் ஆவார். தனது ஐந்தாவது வயதிலிருந்தே அலாமோ போர்க்கதைகளைக் கேட்டு வளர்ந்த காலின்ஸ், அப்போரின் வீர சாகசங்களையும் கதைகளாகவும் பாடல்களாகவும் ஆல்பம் செய்து புகழ்பெற்று பெரும் தொகையைச் சம்பாதித்தவர். இசைப்பிரியத்தோடு போர்க்கருவிகளையும் சேகரிக்கத் தொடங்கிய அவர் அலாமோ போரின் வீர ர்களான க்ராக்கெட், அண்டானியோ, லோபஸ் டி சாண்டோ போன்றவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி, வாள் போன்றவற்றைச் சேகரித்து வைத்திருந்தார். அந்த ஆர்வம் பின்னர் புதியதும் பழையதுமான போர்க்கருவிகளின் ஆவணமாக மாறிவிட்டது.  தான் சேகரித்த போர்க்கருவிகளைக் கொடுத்துவிட்டு இன்னும் சிறப்பான கதைகளையும் பாடல்களையும் அலாமோ குறித்துச் செய்யும் அனுமதியைப் பெற்றுக்கொண்டுள்ளார். அவர் சேகரித்த கருவிகள் தனியாக வைக்கப்பட்டுள்ளன. அத்தோடு அலாமோ போர்கள் குறித்த குறிப்புகள், கடிதங்கள், அரசுத்துறை வரலாற்று ஆவணங்களின் கையெழுத்துப் பிரதிகளும் தொகுக்கப்பட்டுள்ளன. அலாமோ பழைய ஆவணங்களும் பில் காலின்ஸின் சேகரிப்புகளும் இப்போதுள்ள இட த்தில் வைக்க முடியாத இடப்பற்றாக்குறையால் ரால்ஸ்டன் குடும்பத்தினரின் சேகரிப்போடு தனியாக வைக்கப்பட்டுள்ளன என்ற தகவலும் அங்கே கிடைக்கிறது.

சான் அண்டோனியோ நகருக்கு வருபவர்களில் பெரும்பாலோர் அலமோ அருங்காட்சியகங்களைப் பார்ப்பதை முதன்மை நோக்கமாகக்கொண்டிருக்கிறார்கள். அதன் பிறகு நதியில் படகுச்சவாரியும் அவர்களது விருப்பம்.  பொதுவாக அமெரிக்க நகரங்கள் பலவற்றில் இருக்கும் அருங்காட்சியகங்களில் போர்கள் குறித்த குறிப்புகளும் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் காட்சியாக்கப்பட்டிருப்பது பொதுவான நிலையாக இருக்கிறது. அமெரிக்கக்கண்காட்சிகளில் இருக்கும் ஆயுதங்களும் குறிப்புகளும் பெரும்பாலும் உள்நாட்டுப் போர்களோடு தொடர்புடையனவாகவே உள்ளன. அதிலும் தெற்கு மாநிலங்களில் இருக்கும் காட்சியகங்களில் இன்றுள்ள ஐக்கிய அமெரிக்கக் குடியரசுக்குள் வெவ்வேறு மாநிலங்களை இணைப்பதற்காக நடத்தப்பெற்ற போர்களும், அதில் பங்குபெற்றவர்களின் வரலாறும், பயன்படுத்திய ஆயுதங்களுமே அதிகம் இடம்பெற்றுள்ளன. அதேபோல் ஆபிரகாம் லிங்கன் குடியரசுத்தலைவர் ஆவதற்கு முன்பே அவர் சார்ந்த குடியரசுக்கட்சி, அமெரிக்க மாநிலங்கள் பலவற்றில் இருந்த அடிமைமுறையை ஒழிக்க மறுத்தபோது அதனை எதிர்த்துப் போராடியவர்களின் வரலாறும் ஆயுதங்களும் கூடக் கண்காட்சியகங்களில் இருக்கின்றன. 

சான் அண்டோனியோவிற்கும்  அப்படியொரு நீண்ட வரலாறு உண்டு. அந்தப் பகுதியில் ஒரு புறக்காவல் நிலையமாக 1718 இல் உருவான இடம் அது. அப்போது அந்து ஸ்பெயின் நாட்டின் காலனியாட்சியில் இருந்துள்ளது.   பின்னர் அரசுக்கருவூலக் கணக்கர்கள் குடியிருக்கும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பானிய குடியரசின் காலனியாக இருந்த காலகட்டத்திற்குப் பிறகு மெக்சிகோ குடியரசின் பகுதியாக மாறியிருக்கிறது. அதன் பிறகு நடந்த உள் நாட்டுப் போர்களைத் தொடர்ந்து 2018 இல் தனது 300 வது ஆண்டுவிழாவைக் கொண்டாடிய டெக்சாஸ் மாநிலத்தின் மிகப் பழைமையான நகராட்சி என்ற பெருமையைக் கொண்டதாக சான் அண்டோனியா விளங்கியிருக்கிறது .

****** 

2016 இல் அமெரிக்கா வந்தபோதும் வார்சா பல்கலைக்கழகப் பணியின்போதும் பல்வேறு அருங்காட்சியகங்களைப் பார்த்திருக்கிறேன். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருக்கும் பெரிய நகரங்களின் அருங்காட்சியகங்கள் ஒவ்வொன்றிலும் போர்களை மையப்படுத்திய பகுதிகளே முதன்மைப் பகுதிகளாக இருக்கின்றன. ஆனால் இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் உண்டு. ஐரோப்பிய நகரங்களின் அருங்காட்சியகங்கள் பெரும்பாலும் இரண்டு உலகப்போர்களை நினைவூட்டுவதை நோக்கமாக க்கொண்டு பொருட்கள் தொகுக்கப்பட்டு அடுக்கப்பட்டிருக்கும். முதல் உலகப்போரை விடவும் இரண்டாம் உலகப்போர் அழிவுகளே இன்னும் அப்படியே பல நகரங்களில் பாதுகாக்கப்படுகின்றன. ஹிட்லரின் நாஜிப் படைகள் உருவாக்கிய அழிவுகளைப் போலந்து பல வார்சா, க்ராக்கோ போன்ற நகரங்களில் அப்படியே வைத்துள்ளது. தனித்தனி அருங்காட்சியகமாகவும் இருக்கின்றன. இந்த நிலையை ஹாலந்து, ஹங்கேரி, ஆஸ்திரியா, செக்கோஸ்லாவேகியாவிலும் பார்த்திருக்கிறேன்.  ஆனால் அமெரிக்காவின் அருங்காட்சியகங்கள் இரண்டு உலகப்போர்களின் நினைவுகளைப் பத்திரப்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக உள்நாட்டிலேயே காலனிய அதிகாரத்திற்கெதிராக நடந்த கிளர்ச்சிகளையும் போர்களையும் ஆவணப்படுத்தியுள்ளன.  அதேபோல் ஐக்கிய அமெரிக்காவாக உருவாக்குவதற்காக நடந்த உள்நாட்டுப் போர்களின் தொகுதிகளும் இருக்கின்றன. அதே நேரம் அமெரிக்காவைத்தாண்டி வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் மீது அமெரிக்கா நட த்திய யுத்தங்களின் நினைவுகள் அருங்காட்சியகங்களாக இல்லாமல்  வீரர்களை நினைவில் வைத்துக்கொள்ளத்தூண்டும் நினைவுச்சின்னங்கள் ஆங்காங்கே இருக்கின்றன. 

இந்திய நகரங்கள் பலவற்றிலும் அருங்காட்சியகங்களைப் பார்த்திருக்கிறேன். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருக்கும் போர்க்கள நினைவுகளைத் தரும் அருங்காட்சியகம் போல இங்கு எதுவும் இல்லை. போரோடு தொடர்புடைய அருங்காட்சியகம் என ஒன்றையும் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் எதுவும் பார்க்கவில்லை. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றைக்கூடச் சரியாக ஆவணப்படுத்திக் காட்சிப்படுத்தத் தவறியவர்களாகவே இந்தியர்கள் இருக்கிறார்கள். பெரும்போர்கள், பெரும் நிகழ்வுகள், பெரும் போராட்டங்கள் எனத் தனித்தனி அருங்காட்சியகங்களுக்குப் பதிலாகத் தலைவர்களின் வாழ்க்கையை நினைவூட்டும் அருங்காட்சியகங்களே இந்தியாவில் அதிகம் இருக்கின்றன. 

மகாத்மா காந்திக்குப் பல்வேறு நகரங்களில் அருங்காட்சியகங்கள் இருக்கின்றன. விடுதலைப்போராட்ட காலத்தில் அவர் சென்ற இடங்களையெல்லாம் நினைவுபடுத்தும் காட்சிக்கூடங்கள் இருக்கின்றன. நான் முதன் முதலில் பார்த்த அருங்காட்சியகம் மதுரையில் உள்ள காந்தி மியூசியம் தான். நான் பயின்ற அமெரிக்கன் கல்லூரிக்கருகில் இருந்ததால் அடிக்கடி பார்த்த காட்சியகமாக அதுவே இருக்கிறது. காந்தியை நினைவூட்டும்- அகிம்சையை நினைவூட்டும் அருங்காட்சியகங்கள் நிரம்பிய நமக்கு போர்களை நினைவூட்டும் அமெரிக்காவின்  காட்சிப்படுத்தும் பண்பாடு எதிர்நிலையில்தான் இருக்கிறது.

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. மேற்கின் மேற்கே 8 : கொண்டாட்ட த்திற்கான நெடும்பயணம் - மேற்கின் மேற்கே
  2. மேற்கின் மேற்கே 7 : ஹூஸ்டன்: தமிழ் இருக்கையும் நாசாவும் - அ.ராமசாமி
  3. மேற்கின் மேற்கே 5 :சான்அண்டோனியோ: நதியோடும்நகரம் ….. – அ.ராமசாமி
  4. மேற்கின் மேற்கே 4 : நெடுங்கொம்பு மாடுகள்: டெக்சாஸின் அடையாளச்சின்னம் - அ.ராமசாமி
  5. மேற்கின் மேற்கே 3 : ஒக்கலகாமா:  திரும்ப நிகழ்த்தும் பயங்கரம் - அ.ராமசாமி
  6. மேற்கின் மேற்கே 2 : மாறியது திசை; மாற்றியது - அ.ராமசாமி
  7. மேற்கின் மேற்கே - 1 : கிழக்கென்பது திசையல்ல. மேற்கென்பதும். - அ.ராமசாமி