ஊரை அழித்த உறுபிணிகள்
(கொள்ளை நோய்களின் கதை)
அத்தியாயம்- 4
பரவக்கூடிய கொள்ளை நோய்கள், கிருமியினால் உண்டான நோயாக மட்டுமே இருக்க வேண்டுமா?
இந்த அத்தியாயத்தில் பார்க்கப் போகும் கொள்ளை நோயான நடன பிளேக் உறுபிணி, எந்தக் கிருமியாலும் உருவானது அல்ல. ஆயினும் ஒரு ஊர் முழுக்க பரவி இறப்புகளை உண்டாக்கியது. இதுவரை ஏற்பட்ட கொள்ளை நோய்களிலேயே மிகவும் வித்தியாசமானது இந்த நடன பிளேக் உறுபிணி.
முன்பு கிராமங்களில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில் பெண்கள் சாமியாடுவர். மேளச் சத்தம், கூட்ட நெரிசல், திருவிழா உற்சாகம் என பரபரப்பு உச்சத்தை அடையும்போது முதலில் ஒரே ஒரு பெண்ணுக்கு வரும். அவரைத் தொடர்ந்து பலருக்கும் சாமி வரும். கூட இருக்கும் நபர்களாலும் அவர்களைக் கட்டுப்படுத்த இயலாது. சிறிது நேரம் கழித்து ஆக்ரோசம் கழிந்து “சாமி” மலையேறும். நகரமயமாக்கல், பெண்கல்வியில் ஏற்பட்ட முன்னேற்றத்திற்குப் பிறகு இந்நிகழ்வுகள் இப்போது வெகு அரிதாகவே நடைபெறுகின்றன. அதுவும் படித்து வேலைக்குச் செல்லும் பெண்கள் மீது “சாமி” இப்போதெல்லாம் வருவதே இல்லை.
நடன பிளேக் உறுபிணிக்கும், சாமியாடுதலுக்கும் நிறைய ஒற்றுமைகளை நம்மால் அவதானிக்க முடிகிறது.
தற்போதைய பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்பெர்க் நகரம், அப்போது புனித ரோமப் பேரரசின் அங்கமாக இருந்தது. அங்கு கிபி 1518 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் ஒருநாளில் ஃப்ரூ ட்ரோபியா எனும் பெண்மணி திடீரென தனது வீட்டிற்கு வெளியே வந்து அங்கிருந்த தெருவில் உக்கிரமாக நடனமாட ஆரம்பித்தார். அவரது கணவர், அப்பெண்மணியை வீட்டிற்குள் அழைத்துச் செல்ல முயற்சித்தும் முடியவில்லை. நாள்முழுவதும் நடனமாடி, இரவு மயங்கி விழுந்தார். மறுநாள் விடிந்த உடனும் அவரது ஆட்டம் தொடங்கியது. கால்களில் இரத்தம் வழிய ஆடினார். வேறு சில பெண்களும் சேர்ந்து கொண்டனர். ஒரே வாரத்தில் 34 பெண்கள் இப்படி வெறித்தனமாக ஆட ஆரம்பித்தனர். ஒரு மாத முடிவில் 400 பேர் ஆடிக் கொண்டிருந்தனர்.
நடன பிளேக் உறுபிணி
காலம் : கிபி 1518
நோய் : உளவியல் நோய்
நோய்க்கிருமி : இல்லை
பரவும் முறை : உளவியல் தாக்கம்
அறிகுறிகள் : நடனம், நீர்ச்சத்து குறைபாடு
இடம் : ஸ்ட்ராஸ்பெர்க், பிரான்ஸ்
இறந்தவர்கள் எண்ணிக்கை : 10-30
சமூக வலைதள யுகத்தில் ஒரு தற்கொலைச் செய்தியை எதிர்கொள்ளும் போது அதைப் பற்றிய பல தகவல்களைப் பலரும் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கிறோம். சிலர் தனக்கும் அந்த எண்ணம் வருவதாகக் கூறுகின்றனர். அதற்கான மருத்துவ உதவியைக் கூட நாடுகின்றனர். சமூக வலைதள யுகத்திற்கு முன்னாலும், நெருங்கிய உறவினர்களிடன் ஏற்படும் தற்கொலை மரணம், மற்ற குடும்ப உறுப்பினர்களிடம் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
வரலாறு முழுவதிலும் பல்வேறு mass hysteria என்று அழைக்கப்படும் சமூக மனநோய்கள் இருந்திருக்கின்றன. 1962 ஆம் ஆண்டு தான்சானிய நாட்டில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்பட்ட சிரிப்பு நோயைக் குறிப்பிடலாம். குழந்தைகள் தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருந்தனர். 1000 குழந்தைகளுக்கு மேல் இந்த சிரிப்பு பரவியது. யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. 14 பள்ளிகள் இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்காக அடைக்கப்பட்டன.
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் கார் கண்ணாடியில் ஓட்டை விழுவதாக, கார் கண்ணாடிகள் நொறுங்குவதாக 1954 ஆம் ஆண்டு வதந்தி பரவியது. வதந்திக்குப் பின்தான் பலரும் தங்கள் கார் கண்ணாடியை உற்றுப் பார்க்க ஆரம்பித்தனர். ஏற்கனவே இருந்த சிறுகுறைகளையும் கண்டுபிடித்தனர். அணுகுண்டு சோதனை, வேற்றுகிரக வாசிகள், ரேடியோ அலைவரிசை எனப் பல காரணங்கள் பரப்பப்பட்டன.
எனக்கும் கூட இப்படியான நோயர்களை எதிர்கொண்ட அனுபவம் உண்டு. ஒரே அறையில் தங்கியிருந்த நான்கு நண்பர்களில் ஒருவருக்கு தொண்டையில் வலி வர, அவர் கண்ணாடியில் தொண்டையைப் உற்றுப் பார்த்திருக்கிறார். நாக்கின் அடிப்பாகத்தில் இருக்கும் circumvallate papilllae எனும் சுவை மொட்டைப் பார்த்து, கேன்சர் எனப் பயந்துள்ளார். (சாதாரணமாக மேலோட்டமாகப் பார்க்கும் போது நாக்கின் அடிப்பகுதியில் இருப்பதால் Circumvallate papillae தெரியாது. இவர் நாக்கை முடிந்தளவு வெளியே நீட்டி, கூர்ந்து பார்த்ததால் முதன்முறை இவர் கண்களுக்குத் தெரிந்துள்ளது) மற்ற அறை நண்பர்களும் அவர்களது நாக்கில் பார்க்க அவர்களுக்கும் அதேபோல இருந்துள்ளது. அனைவருமே பயந்து மருத்துவ உதவி தேடி வந்தனர்.
ஒருவரது உளவியல் பிரச்சனைகள் மற்றவர்களின் எண்ணங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதனால் தான் நடன பிளேக்கின் போது ஃப்ரூ ட்ரோபியா ஆட ஆரம்பித்த பிறகு 400 பேர் உடன் சேர்ந்து ஆடினர். ஜான் வாலர் “A time to dance A time to death” எனும் புத்தகத்தில் இந்நோயைப் பற்றி ஆராய்ந்து பலகருத்துகளை முன் வைக்கிறார்.
நடன பிளேக் உறுபிணி பரவுவதற்கு முன், அப்பகுதியில் எரிகல் ஒன்று விழுந்துள்ளது. தலை ஒட்டிய இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. பஞ்சத்தினால் விவசாயம் பொய்த்துப் போனது. கடவுளின் சாபம் ஏற்பட்டதாக மக்கள் கருதினர். உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவியது. உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க தங்களிடமிருந்த ஆடு, மாடுகளை கொன்று உணவு சமைத்தனர். இதனால் அவர்கள் கையிருப்பு மேலும் குறைந்தது. சிபிலிஸ் உள்ளிட்ட நோய்கள் பலரையும் தாக்கி பாதிப்பை உண்டாக்கின. மக்கள் வறுமையில் உழன்றனர். அரசுக்கும், வரி வசூல் செய்வோருக்கும் எதிராக சிறு சிறு கிளர்ச்சிகள் எழுந்தன. தொடர்ச்சியாக பல வருடங்கள் விவசாயம் பொய்த்துப் போனதால் மக்கள் கடனில் சிக்கினர். இவை அனைத்தும் சேர்ந்து சமூகத்தில் ஒரு இறுக்கத்தை உருவாக்கியிருந்தன. இந்த நடன பிளேக் பரவுவதற்கு சில மாதங்கள் முன் கடுமையான பனிப்புயல் பெய்து அனைத்து பயிர்களையும் அழித்துவிட்டுச் சென்றிருந்தது.
இப்படி தொடர்ச்சியாக மக்களிடம் ஏற்பட்ட மன அழுத்தம் இந்த உறுபிணி உருவாகி, பரவக் காரணமாக இருந்திருக்கலாம் என ஜான் வாலர் கருதுகிறார்.
ஒரு வகை பூஞ்சையில் இருந்து பரவிய “மூளையைத் தாக்கும் நச்சு” காரணமாக இருக்கலாம். அந்த நச்சு உணவுப் பொருட்களில் கலந்ததால் இப்படி ஏற்பட்டிருக்கலாம் எனவும் சிலர் கூறுவர். ஆனால் இதற்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
இந்நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் ஸ்ட்ராஸ்பெர்க் நகர நிர்வாகம் திணறியது. அக்கால மருத்துவர்கள் இரத்தத்தில் சூடு அதிகமானதால் இது ஏற்பட்டதாகக் கருதினர். சூடு குறையும் வரை ஆடவிட்டால் சரியாகிவிடும் எனவும் பரிந்துரைத்தனர். எனவே நகர நிர்வாகமே மேடை, வாத்தியங்களை ஏற்பாடு செய்தது. ஆனால் மேலும் பலரும் புதிதாக ஆட ஆரம்பித்தனர். தொடர்ச்சியான நடனத்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்து சிலர் மரணமடைந்தனர். பலரும் இரவு பகலாக ஆடிக் கொண்டே இருந்தனரே தவிர நிலைமை சரியாகவில்லை.
நிலைமை கைமீறிப் போவதைக் கண்ட நகர நிர்வாகம் மேடையைப் பிய்த்துப் போட்டு அனைவரையும் வீட்டினுள் அடைக்க உத்தரவு போட்டது. பொது இடங்களில் நடனமாடுவது தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டது. ஃப்ரூ ட்ரோபியாவை 34 மைல்கள் தள்ளியிருந்த புனித வைட்டஸ் தேவாலயத்திற்கு அனுப்பி வைத்தது. அதன் பின் அவர் என்ன ஆனார் என்பது பற்றிய தகவல் இல்லை. புனித வைட்டஸ் நடன நோய்களை உண்டாக்குபவராகவும், அதனைத் தீர்த்து வைப்பவராகவும் கருதப்படுகிறார். கடுமையான நடவடிக்கைகளுக்குப் பிறகு நடன பிளேக் உறுபிணி கட்டுப்படுத்தப்பட்டது.
இன்று இப்படி பொதுவெளியில் நடனமாடும் உளவியல் நோய்கள் குறைந்திருந்தாலும், வேறு வடிவங்களில் மாஸ் ஹிஸ்டீரியா நோய்கள் இன்னும் இருக்கின்றன. கூர்ந்து கவனித்தால் சாதி, மதம் கூட மாஸ் ஹிஸ்டீரியா தானே?
முந்தைய தொடர்கள்:
3.பேதிமேளா – இந்தியன் காலரா உறுபிணி – https://bit.ly/2J0uEq6
2.ஏதன்ஸ் பிளேக் – https://bit.ly/33syIZm
1.அந்தோனைன் பிளேக் / காலன்ஸ் பிளேக் –https://bit.ly/2IUryDY
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- எயிட்ஸ்:நோய் எதிர்ப்பைக் கொல்லும் நோய்-சென் பாலன்
- தவிக்கவைத்த தட்டம்மை (measles)- சென் பாலன் ( ஓமான்)
- 'கா டிங்கா பெப்போ' எனும் கெட்ட ஆவி- சென் பாலன்
- சிபிலிஸ்: பதறவைக்கும் பால்வினை நோய்
- எல்லை தாண்டாத எபோலா- சென் பாலன்
- கொசுக்கள் பாடும் மரண கானா : மலேரியா- சென் பாலன்
- பஞ்சாய் பறந்த உயிர்கள் : பம்பாய் பிளேக்- சென் பாலன்
- ஹிஸ்பானியோலாவின் காலன் ஆன கோலன் – சென் பாலன்
- கலங்க வைத்த 'கறுப்புச் சாவு ' : பிளேக்- சென் பாலன்
- சார்ஸ்: ‘கொரோனோ’ என்ற திகில் படத்தின் ட்ரைலர்- சென் பாலன்
- ஸ்பானிஷ் ஃப்ளூ - சென்பாலன்
- பேதிமேளா - இந்தியன் காலரா உறுபிணி - சென் பாலன்
- ஏதன்ஸ் பிளேக் - சென் பாலன்
- அந்தோனைன் பிளேக் / காலன்ஸ் பிளேக் - சென் பாலன்