ஊரை அழித்த உறுபிணிகள் – அத்தியாயம் 8
“கோலன் உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டது. கடற் பயணத்தைத் தொடங்குங்கள்” இந்த வார்த்தைகளைக் கேட்க ஏழு வருடங்கள் கடுமையாகப் போராடினார் கோலன்.
இத்தாலியைச் சேர்ந்த கடலோடியான கோலன் போர்த்துக்கீசியப் பெண்ணை மணந்து போர்ச்சுகல் தேசத்து லிஸ்பன் நகரில் வசித்து வந்தார். அப்போது ஐரோப்பாவை ஆண்ட மன்னர்கள் தெற்காசிய நாடுகளுக்குப் புதிய கடற்பாதையைக் கண்டுபிடிப்பதில் மும்மரமாக இருந்தனர். கோலன், போர்சுக்கல் அரசரை அணுகி தனக்கு தேவையான வசதியை அளித்தால் தான் புதிய பாதைகளைக் கண்டறிவதாகக் கூறினார். அதற்காக கோலன் கேட்ட தொகையும் உரிமைகளும் அதிகமாக இருந்ததால் பேரம் படியவில்லை. மனம் தளராத கோலன் பிரித்தானிய அரசரிடம் சென்றார். அங்கும் வேலைக்காகவில்லை. மற்ற சிறிய ஐரோப்பிய தேசங்களும் ஒத்துக்கொள்ளவில்லை. இறுதியாக ஸ்பெயின் தேசத்தை ஆண்ட மன்னர் இரண்டாம் ஃபெர்டினாண்ட் அவரது மனைவி இஸபெல்லா இருவரும் கோலனை அழைத்துப் பேசினர். இரண்டு வருடமாக நடந்த பேரத்தின் முடிவில் ஓர் ஒப்பந்தம் எட்டப்பட்டது.
அதன் பிறகு தான் “கோலன் உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டது. கடற் பயணத்தைத் தொடங்குங்கள்” அரச மரியாதையோடு அனுப்பி ஸ்பெயினில் இருந்து மேற்கு நோக்கி அனுப்பி வைக்கப்பட்டார் கிரிஸ்தோபல் கோலன் என்று ஸ்பானிய மொழியில் அழைக்கப்பட்ட கிறிஸ்டோஃபர் கொலம்பஸ்.
ஐந்து வார கடல் பயணத்தின் முடிவில் கரீபியத் தீவுகளில் இறங்கிய கொலம்பஸ், தற்போதைய பஹாமாஸ், கியூபா என பல தீவுகளுக்குச் சென்றார். அத்தீவில் வசித்த மக்கள் தங்க ஆபரணங்கள் அணிந்திருந்ததைக் கண்டவுடன் சுற்றியுள்ள மற்ற தீவுகளில் தங்கப்புதையல் இருக்கும் என நினைத்து பயணத்தைத் தொடர்ந்தார். அவரது கப்பல் புயலில் சிக்கி ஹிஸ்பானியோலா தீவில் கரை தட்டியது. அங்கிருந்த நாடோடிக் கூட்டத் தலைவனிடம் அனுமதிபெற்று லா நாவிடாட் என்ற இடத்தில் தன் மக்களைக் குடியமர்த்தினார். 39 பேரை அத்தீவிலேயே விட்டுவிட்டு புதிய நாடு கண்டுபிடித்ததை அரசரிடம் கூற ஸ்பெயின் திரும்பினார். மீண்டும் 1493 ஆம் ஆண்டு 17 கப்பல்களில் 1500 பேரை அழைத்துக் கொண்டு திரும்ப வந்த கொலம்பஸுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. லா நாவிடாடில் அவர் உருவாக்கியிருந்த குடியிருப்புகள் உருத்தெரியாமல் அழிக்கப்பட்டிருந்தன.
39 பேரின் நிலை என்னவென்றே தெரியவில்லை. நாடோடிக் கூட்டத்தையும் காணவில்லை. பயந்து போன கொலம்பஸ் அங்கிருந்து கிழக்கே தூரமாகச் சென்று முதல் ஸ்பானிய குடியேற்ற நகரை அமெரிக்கக் கண்டத்தில் உருவாக்கினார். தனக்கு ஆதரவளித்த ஸ்பெயின் தேச அரசி இஸபெல்லா நினைவாக “லா இஸபெல்லா” என அதற்குப் பெயரிட்டார்.
ஹிஸ்பானியோலா தீவு தற்போதைய டொமினிக் குடியரசு, ஹைதி ஆகிய நாடுகளை உள்ளடக்கியத் தீவு. “லா இஸபெல்லா” தற்போதைய டொமினிக் குடியரசு நிலப்பரப்பில் இருந்தது. ஹிஸ்பானியோலா தீவில் பூர்வகுடி மக்களான “தய்னோ” இன மக்கள் வாழ்ந்து வந்தனர். சரியான எண்ணிக்கை தெரியவில்லை எனினும் கொலம்பஸ் குடியேற்றம் அமைத்த போது இருபது முதல் முப்பது இலட்சம் தய்னோ மக்கள் அத்தீவில் வாழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
கொலம்பஸுடன் வந்த 1500 பேர் ஹிஸ்பானியோலாவில் குடியேறிய சில நாட்களிலேயே அவர்களிடமிருந்து அத்தீவு முழுவதும் ஒரு கொள்ளை நோய் பரவியது. ஐரோப்பிய நோய்களுக்கு எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருந்த பூர்வகுடி மக்களான தய்னோ மக்களை கூட்டம் கூட்டமாகக் கொன்றது.
1493 ஹிஸ்பானியோலா உறுபிணிகள்
காலம் : 1493-1498,
நோய் : இன்ஃப்ளூயன்சா அல்லது டைபஸ்
பலியானோர் எண்ணிக்கை : சுமார் பத்து இலட்சம்
நோய் ஆரம்பித்த இடம் : லா இசபெல்லா, ஹிஸ்பானியோலா தீவு
காலம் : கிபி 1520 முதல்
நோய் : பெரியம்மை
பலியானோர் எண்ணிக்கை : சுமார் இருபது இலட்சம்
கொரொனா பரவலுக்கு முன்பு வரை சமூக வலைதளங்களில் “டிராவல் அடிக்ட், யாத்திரிகன், நாடோடி, ஊர் சுத்தி” இப்படி விதவிதமாக சுயவிவரக் குறிப்பு வைத்து புகைப்படம் பதிவேற்றியவர் பலர். ஆனால் கொரொனா பரவலுக்குப்பின் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. வரவேற்பரையில் இருந்து அடுப்படி வரைச் செல்வதே தொலை தூரப் பயணமாக உள்ளது.
பயணங்களுக்கும் நோய்களுக்குமான தொடர்பு காலங்காலமாக இருந்து வருவது தான். எதிரிகளின் தோட்டாவால் இறந்தவர்களை விட, சக மனிதர்களின் தும்மலால் இறந்தவர்கள் தான் அதிகம். ஒவ்வொரு மனிதனுமே ஒரு உயிரியல் ஆயுதம் தான். நோய் பரப்பும் நுண்ணுயிர் கிட்டங்கி தான். மனிதப் பயணங்களை, நுண்ணுயிர் கிட்டங்கிகளின் நகர்வு எனலாம்.
கடந்த ஆயிரம் ஆண்டுகால வரலாற்றில் மிக முக்கியமான பயணமாக கருதப்படும் கொலம்பஸின் அமெரிக்கக் கண்டுபிடிப்பு பயணமும் இதற்கு விதிவிலக்கல்ல.
லா இஸபெல்லா நகருக்கு பன்றிகளை இறைச்சிக்காக கப்பலில் கொண்டு வந்திருந்தனர் கொலம்பஸ் குழுவினர். அவர்களது குடியிருப்பில் இருந்து காட்டிற்குள் தப்பிச் சென்ற பன்றிகளில் இருந்து பன்றிக் காய்ச்சல் (ஸ்வைன் ஃப்ளூ) பூர்வ குடி தய்னோ இன மக்களுக்கு பரவ ஆரம்பித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
அமெரிக்க பூர்வ குடி மக்களின் மரபணுக்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் எந்த மரபணுக்களும் இல்லை என்பது பிற்காலத்தில் அவர்கள் உடல் எச்சத்தை மரபணு சோதனைக்கு உள்ளாக்கும் போது தெரிய வந்தது. கொலம்பஸ் பயணத்திற்கு முன் வரை அமெரிக்கக் கண்டத்தில் வசித்த மக்கள் வெளியுலகத் தொடர்பே இல்லாமல் வசித்தனர். அதனால் அவர்களிடம் எந்த நோயும் பரவியது இல்லை. எந்த நோய்க்குமான எதிர்ப்பு சக்தியும் கிடையாது.
கொலம்பஸ் குழுவினர் வந்திறங்கிய ஓரிரு மாதங்களில் பல நோய்கள் பரவ ஆரம்பித்தது. முதலில் ஃப்ளூ காய்ச்சல். இப்படி ஒரு காய்ச்சலை வாழ்நாளில் சந்தித்தே இருந்திருக்காத தய்னோ மக்களில் 50% பேர் மாண்டனர். ஸ்பானியர்கள் செல்லாத தீவுகளுக்கும் பூர்வ குடி மக்களின் நகர்வு மூலமே நோய் பரவியது. 1493ஆம் ஆண்டு தொடங்கிய ஃப்ளூ காய்ச்சல் அடுத்த ஐந்து வருடங்களில் பத்து இலட்சம் பூர்வகுடி மக்களைக் கொன்றது. ப்ளூ மட்டுமல்லாது வேறுவகை காய்ச்சல்களும் ஐரோப்பியர்களோடு நெருக்கமான தொடர்பில் இருந்த பூர்வகுடி மக்களுக்கு வந்தன. அவற்றாலும் மாண்டனர்.
சிபிலிஸ் பூர்வகுடி அமெரிக்கர்களிடம் இருந்து ஐரோப்பியர்களுக்கு சென்றிருக்கலாம் என்ற கருத்தும் உண்டு. ஐரோப்பாவில் 1500களில் சிபிலிஸ் பரவியதற்கு அமெரிக்காவில் இருந்து திரும்பிய இத்தாலிய மாலுமிகளே காரணம் என்று கருதப்படுகிறது.
கி.பி 1500 – 1600க்குள் சுமார் 200க்கும் மேற்பட்ட கப்பல்கள் பயணங்களை மேற்கொண்ட ஐரோப்பியர்கள் லட்சக்கணக்கில் அமெரிக்க கண்டத்தில் குடியேறினர். நவீன ஆயுதங்களை வைத்து ஆயுதமே அறிந்திராத பூர்வகுடி மக்களை அடிமைப் படுத்தினர். பலரையும் அடிமைகளாக ஐரோப்பாவிற்கு கொண்டு சென்றனர்.
ஐரோப்பா அமெரிக்கா இடையே போக்குவரத்து அதிகமாகிய பின் 1518 ஆம் ஆண்டில் பெரியம்மை நோய் பூர்வகுடி மக்களிடையே பரவ ஆரம்பித்தது. அம்மை என்றால் என்னவென்றே அறிந்திருக்காத பூர்வகுடி மக்களின் உடல் அம்மைக் கொப்புளங்களால் வெந்தது. காட்டுத் தீ போல பரவிய பெரியம்மை நோயால் ஹிஸ்பானியோலா தீவில் இருந்த 90% தய்னோ மக்கள் இறந்தனர். மீதி இருந்த 10% பூர்வ குடி மக்களும் ஐரோப்பியர்களின் கொடுமையான அடிமை முறையால் அடுத்து வந்த காலங்களில் இறந்தனர் அல்லது ஐரோப்பியர்களையும் ஆப்ரிக்கர்களையும் மணம் புரிந்து அவர்களோடு கலந்து தனித்தன்மையை இழந்தனர். 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஹிஸ்பானியோலா தீவில் இருந்த தய்னோ பூர்வ குடிமக்கள் முற்றிலும் அழிந்தனர்.
சுமார் எழுபத்தாறாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பில், மூவாயிரம் கிலோமீட்டர் கடற்கரையும் கொண்டு காடு மலை என இயற்கை எழில் கொஞ்ச தனித்தீவில் வசித்த 30 இலட்சம் தய்னோ இன மக்களால் புதிதாக வந்த நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராட முடியவில்லை.
ஸ்பெயின் அரசின் உதவியுடன் இத்தாலிய மாலுமியால் கரீபியன் தீவுகளுக்கு பரவிய வியாதிகளால் கரீபியன் மக்கள் அழிந்தனர். காலச்சக்கரம் சுழன்று, 500 வருடங்களுக்குப் பிறகு கரீபியத் தீவு நாடுகளில் ஒன்றான கியூப மருத்துவர்கள் இத்தாலியில் பரவும் கொள்ளை நோய்க்கு உதவுகிறார்கள். ஸ்பெயின் தேச ஆண்ட பரம்பரை இளவரசி கூட அதே கொள்ளை நோயால் இறந்துவிட்டாராம்.
வரலாறு தன்னுள் எத்தனை முரண்களை வைத்துள்ளது.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- எயிட்ஸ்:நோய் எதிர்ப்பைக் கொல்லும் நோய்-சென் பாலன்
- தவிக்கவைத்த தட்டம்மை (measles)- சென் பாலன் ( ஓமான்)
- 'கா டிங்கா பெப்போ' எனும் கெட்ட ஆவி- சென் பாலன்
- சிபிலிஸ்: பதறவைக்கும் பால்வினை நோய்
- எல்லை தாண்டாத எபோலா- சென் பாலன்
- கொசுக்கள் பாடும் மரண கானா : மலேரியா- சென் பாலன்
- பஞ்சாய் பறந்த உயிர்கள் : பம்பாய் பிளேக்- சென் பாலன்
- கலங்க வைத்த 'கறுப்புச் சாவு ' : பிளேக்- சென் பாலன்
- சார்ஸ்: ‘கொரோனோ’ என்ற திகில் படத்தின் ட்ரைலர்- சென் பாலன்
- ஸ்பானிஷ் ஃப்ளூ - சென்பாலன்
- நடன பிளேக் உறுபிணி - சென்பாலன்
- பேதிமேளா - இந்தியன் காலரா உறுபிணி - சென் பாலன்
- ஏதன்ஸ் பிளேக் - சென் பாலன்
- அந்தோனைன் பிளேக் / காலன்ஸ் பிளேக் - சென் பாலன்