ஊரை அழித்த உறுபிணிகள்
(கொள்ளை நோய்களின் கதை)
அத்தியாயம் – 5
சுவாசப்பாதை தொற்றை உருவாக்கும் கிருமிகள் எப்போதுமே கொள்ளை நோய்களாகப் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தவல்லவை. கண்ணுக்குத் தெரியாத சிறு வைரஸ் கிருமி சுவாசப்பாதையில் நுழைந்து மனிதனின் மூச்சையே நிறுத்தி உலகை ஆட்டம் காண வைப்பதை, இந்த கோவிட் -19 எனப்படும் கொரோனா உறுபிணியில் நேரடியாகக் காண்கிறோம்.
சரியாக 98 வருடங்களுக்கு முன்னால் 1918இல் உலகம் முழுவதும் பரவிய சுவாசத் தொற்று நோயாகிய ‘ஸ்பானிஷ் ஃப்ளூ’ காய்ச்சல் கிட்டத்தட்ட 5 கோடி மக்களைக் காவுவாங்கியது. சமீபகால வரலாற்றில் உலகத்தையே ஆட்டம் காண வைத்த உறுபிணிகளை வரிசைப் படுத்தினால், நிச்சயமாக அதில் ஸ்பானிஷ் ஃப்ளூவிற்குத்தான் முதல் இடம். அத்தனைப் பாதிப்புகளை உண்டாக்கியது.
என்னதான் ஸ்பானிஷ் ஃப்ளூ என அழைத்தாலும் இந்த உறுபிணி ஸ்பெயின் தேசத்தில் இருந்து பரவவில்லை. அப்போது முதலாம் உலகப்போர் உச்சத்தில் இருந்ததால் அனைத்து நாடுகளிலும் பத்திரிக்கைச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இதனால் ஃப்ளூ பற்றிய செய்திகளை வெளியிட அனுமதி மறுக்கப்பட்டது. ஸ்பெயின் தேசம் போரில் பங்கேற்காமல் நடுநிலை வகித்ததால் அங்கு பத்திரிக்கைகளுக்குக் கட்டுப்பாடு இல்லை. எனவே ஸ்பெயின் தேச பத்திரிக்கைகளில் மட்டும் ஃப்ளூ பற்றிய செய்திகள் அடிக்கடி வந்தன. இந்தக் காரணத்தால் ஸ்பானிஷ் ஃப்ளூ என்று அழைக்கப்பட்டது.
காலம் : கி.பி 1918-1920
நோய் : ப்ளூ காய்ச்சல்
நோய்க்கிருமி : H1N1 இன்புளூயன்சா வைரஸ்
பரவும் முறை : சுவாசப்பாதை தொற்று, இருமும் போதும், தும்மும் போதும் வெளிவரும் சளித்துகள் மூலம்
ஆரம்பித்த இடம் : பிரான்சு, அமெரிக்கா, சீனா
பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : சுமார் 50 கோடிப் பேர்
இறந்தவர்கள் எண்ணிக்கை : சுமார் 5 கோடிப்பேர்
நோயின் இன்றைய நிலை : இன்றும் அதிக ஆபத்து
தடுப்பூசி : உள்ளது. வருடம் ஒருமுறை, மாறும் வைரஸின் மரபணுவிற்கேற்ப மாற்றப்படுகிறது.
இந்த நோய் எப்படி ஆரம்பித்தது எனப் பல்வேறு கருத்தாக்கங்கள் உள்ளன. அமெரிக்காவின் கன்சாஸ் நகரத்தில் பறவைகளிடமிருந்து பன்றிக்குப் பரவிய காய்ச்சல் அங்கு முகாம் அமைத்திருந்த இராணுவ வீரர்களுக்குப் பரவியது, அவர்களிடம் இருந்து உலகம் முழுமைக்கும் பரவியது என்று ஒரு கருத்து உள்ளது. பிரான்சு தேசத்தில் இருந்த படைவீரர்களுக்கு, வலசை வந்த பறவைகளிடம் இருந்து தொற்று ஏற்பட்டு பரவியது என்றும் கருதப்படுகிறது. போரின்போது தொழிலாளர் பற்றாக்குறை நிலவியதால் சீனாவில் இருந்து 94,000 தொழிலாளர்களை இங்கிலாந்து தன் நாட்டிற்கு அழைத்து வந்தது. 1917இல் சீனாவில் சிறிய அளவில் இருந்த பறவைக்காய்ச்சல் அந்தத் தொழிலாளர்கள் மூலமாக ஐரோப்பாவில் பரவியது என்றும் கருதபடுகிறது.
சாதாரண காய்ச்சலாக ஆரம்பித்த ஒரு நோய், நிமோனியாவாக மாறி நுரையீரலில் நீர்கோர்த்து அதிக பாதிப்பை உண்டாக்கியதை இராணுவ முகாம்களில் இருந்த மருத்துவர்கள் கண்டறிந்தனர். ஆனால் முதல் உலகப்போர் நடந்து கொண்டிருந்ததால் அவற்றைப் பற்றி எந்த செய்திகளையும் வெளியிட அரசுகள் அனுமதிக்கவில்லை. நெருக்கமான முகாம்களில் வசித்து வந்த இராணுவ வீரர்களுக்கு எளிதில் அந்த நோய் பரவியது. போரின்போது நடந்த இடப்பெயர்ச்சியும், இராணுவ நகர்வும் அந்த நோயை உலகம் முழுவதும் பரப்பின. போர் முடிந்து வீட்டிற்குச் சென்ற வீரர்களிடம் இருந்து மற்றவர்களுக்கும் பரவியது.
மற்ற நோய்களைப்போல் அல்லாமல் ஸ்பானிஷ் ஃப்ளூ உறுபிணி இளவயது திடகாத்திரமான நபர்களை அதிகம் பலி கொண்டது. வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒப்பீட்டளவில் குறைவான பாதிப்பே உண்டானது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. இந்த உறுபிணி ஏற்படுவதற்கு முன் வந்த சாதாரண ஃப்ளூ காய்ச்சல்களால் குழந்தைகளும் பெரியவர்களும் பாதிக்கப்பட்டு ஃப்ளூ கிருமிக்கு எதிர்ப்பு சக்தி பெற்றிருந்தனர். சாதாராண ப்ளூவால் பாதிக்கப்படாத உடல்நலமிக்க இளைஞர்களை ஸ்பானிஷ் ஃப்ளூ தாக்கி அதிக இறப்பை உண்டாக்கியது என ஒரு கருதுகோள் உள்ளது.
‘சைட்டோகைன்’ எனப்படும் ஒரு இரசாயனம், நோய் தாக்கும்போது உடலில் உற்பத்தியாகும். இந்த சைட்டோகைன்தான் நோய் எதிர்ப்பு வெள்ளை அணுக்களை எச்சரித்து நோய் தாக்குதலை எதிர்த்துப் போராடத் தூண்டும். ஸ்பானிஷ் ஃப்ளூ இந்த சைட்டோகைனை அளவுக்கு அதிகமாக தூண்டியதால், ஆர்வக்கோளாறு வெள்ளை அணுக்கள் நோயுற்ற நபரின் சொந்த உடல் பாகங்களையே தாக்கி மரணத்தை விளைவித்தன என்ற கருதுகோளும் உண்டு. இதனால்தான் நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் உடைய இளவயது நபர்கள் பாதிக்கப்பட்டனர் என்று கருதப்படுகிறது.
ஸ்பானிஷ் ஃப்ளூ உறுபிணியில் மூன்று அலைகளாக நோய் தாக்கியது. முதல் அலை 1918 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. சிறிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு மறைந்தது. வீரியமிக்க இரண்டாவது அலை 1918ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. மிக அதிக அளவில் இறப்பை ஏற்படுத்தியது. உலகின் எந்த அரசாலும் இந்நோயைக் கட்டுப்படுத்த இயலவில்லை. வலிமைமிக்க அமெரிக்க அரசாங்கமே திணறியது. பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ் இருந்த இந்தியாவிலும் சுமார் ஒன்றரைக் கோடிப்பேர் இறந்தனர். (சைவம் சாப்பிட்டால் வராது, நமஸ்தே சொன்னால் வராது, இந்தியக் கலாச்சாரத்தில் வராது என அப்போதும் யாராவது புரளி கிளப்பியிருப்பார்கள் என ஆர்ட்டிபிசியல் இண்ட்டெலிஜென்ஸ் கணிப்புகள் கூறுகின்றன)
பல நாடுகளில் இறந்தவர்களைப் புதைக்கக்கூட ஆட்கள் இல்லை. அமெரிக்காவில் ஒவ்வொரு நாள் காலையிலும் மிகப்பெரிய டிரக் ஊருக்குள் வருமாம். ஒவ்வொரு வீட்டிலும் இறந்தவர்களின் உடலை துணியில் சுற்றி அந்த டிரக்கில் போட்டுவிட வேண்டும். அவர்கள் மொத்தமாக அடக்கம் செய்துவிடுவர். பல அமெரிக்க மாகாணங்களில் திரையரங்குகள் மூடப்பட்டன. பொது இடங்களில் கூட்டம் போடுவது தடைசெய்யப்பட்டது. கூட்டத்தைத் தவிர்க்க, காலையில் சில கடைகள் மாலையில் சில கடைகள் என ஷிப்ட் முறையில் கடைகள் திறக்கப்பட்டன. சில மாகாணங்களில் பொது இடத்தில் இருமுவதும், தும்முவதும் குற்றமாக்கப்பட்டது. ஆயினும் காவலர்கள் இருமல், தும்மல் உடையவர்களை நெருங்கி கைது செய்ய அஞ்சினர். அதிக பாதிப்பை உண்டாக்கிய இரண்டாவது அலைக்குப் பிறகு நோய் தன்னால் அடங்கியது. மூன்றாம் அலை பெரிய பாதிப்பை உண்டாக்கவில்லை.
ஸ்பானிஷ் ஃப்ளூ பரவியபோது மருத்துவப் பணியாளர்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவியது. அதைச் சரிகட்ட பெண்களுக்குக் குறுகியகால பயிற்சி அளிக்கப்பட்டு செவிலியர் பணி தரப்பட்டது. அதன் பிறகே மருத்துவத்துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகமானது.
கடுங்குளிர் பிரதேசமான அலாஸ்கா பகுதியில் ஒரு கிராமமே இந்த ஃப்ளூ காய்ச்சலால் இறந்தது. அங்கு புதைக்கப்பட்ட உடல்களில் இருந்து வைரஸ் கிருமியைப் பிரித்தெடுத்து அதன் மரபணுக்களை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அந்த ஆய்வில் இருந்து ஸ்பானிஷ் ஃப்ளூ, H1N1 இன்புளூயன்சா வைரஸால் உண்டானது என்பதைக் கண்டறிந்தனர். இதே வைரஸ் நோய்தான் பிற்காலத்தில் பறவைக் காய்ச்சலாக பலநாடுகளுக்குப் பரவியது.
இன்புளூயன்சா வைரஸின் மரபணு எளிதில் மாறும் தன்மை உடையது. தன்னை உருமாற்றி, அடிக்கடித் தாக்கி நோயை உண்டாக்கவல்லது. இதனால் ஒவ்வொரு வருடமும் புதிது புதிதாக இன்புளூயன்சா தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. இந்தத் தடுப்பூசி மூலம் இன்புளூயன்சா நோயைத் தடுக்கலாம்.
தற்போது பரவி வரும் கொரோனா உறுபிணிக்கும் இந்த ஸ்பானிஷ் ஃப்ளூ உறுபிணிக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. ஸ்பானிஷ் ஃப்ளூ நோயில் இருந்து கற்ற அனுபவத்தை வைத்து கொரோனாவைத் தடுக்க என்ன செய்யலாமென பல ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஸ்பானிஷ் ஃப்ளூ பரவிய காலத்தில் பாக்டீரிய நிமோனியாவைத் தடுக்கும் ஆண்டிபயாட்டிக் மருந்துகள் கண்டறிந்திருக்கப்படவில்லை. இப்போது இருப்பதுபோல செயற்கை சுவாசம், வெண்டிலேட்டர், ஐசியூ வசதிகள் இல்லை. ஆனால் இன்று மருத்துவம் எவ்வளவோ முன்னேறிவிட்டது. ஸ்பானிஷ் ஃப்ளூவையே எதிர்கொண்ட மனித இனம், இந்த கொரோனாவையும் தாண்டிச் செல்லும்.
முந்தைய தொடர்கள்:
4.நடன பிளேக் உறுபிணி – https://bit.ly/2QqTnIf
3.பேதிமேளா – இந்தியன் காலரா உறுபிணி – https://bit.ly/2J0uEq6
2.ஏதன்ஸ் பிளேக் – https://bit.ly/33syIZm
1.அந்தோனைன் பிளேக் / காலன்ஸ் பிளேக் –https://bit.ly/2IUryDY
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- எயிட்ஸ்:நோய் எதிர்ப்பைக் கொல்லும் நோய்-சென் பாலன்
- தவிக்கவைத்த தட்டம்மை (measles)- சென் பாலன் ( ஓமான்)
- 'கா டிங்கா பெப்போ' எனும் கெட்ட ஆவி- சென் பாலன்
- சிபிலிஸ்: பதறவைக்கும் பால்வினை நோய்
- எல்லை தாண்டாத எபோலா- சென் பாலன்
- கொசுக்கள் பாடும் மரண கானா : மலேரியா- சென் பாலன்
- பஞ்சாய் பறந்த உயிர்கள் : பம்பாய் பிளேக்- சென் பாலன்
- ஹிஸ்பானியோலாவின் காலன் ஆன கோலன் – சென் பாலன்
- கலங்க வைத்த 'கறுப்புச் சாவு ' : பிளேக்- சென் பாலன்
- சார்ஸ்: ‘கொரோனோ’ என்ற திகில் படத்தின் ட்ரைலர்- சென் பாலன்
- நடன பிளேக் உறுபிணி - சென்பாலன்
- பேதிமேளா - இந்தியன் காலரா உறுபிணி - சென் பாலன்
- ஏதன்ஸ் பிளேக் - சென் பாலன்
- அந்தோனைன் பிளேக் / காலன்ஸ் பிளேக் - சென் பாலன்