ஊரை அழித்த உறுபிணிகள்
(கொள்ளை நோய்களின் கதை)
அத்தியாயம் – 2
1994ஆம் ஆண்டு கிரேக்க நாட்டின் ஏதன்ஸ் மாநகரில், கெராமிகஸ் எனும் பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பதற்காக ஒரு பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. ஏதன்ஸ் நகரின் கெராமிகஸ் பகுதி வரலாற்றுச் சிறப்புமிக்கப் பகுதி. பண்டைய காலங்களில் இந்த இடத்தில் பானை செய்ய தேவைப்படும் தரமான களிமண் அதிக அளவில் கிடைத்தது. எனவே பானை செய்வோர் இந்த இடத்தைச் சுற்றி குடியேறினர். இப்பகுதியின் களிமண் கொண்டு செய்யப்படும் பானைகள் உலகம் முழுவதும் புகழ்பெற்றன. அவை கெராமிகஸ் சொல்லின் லத்தின் வடிவான “செராமிக்ஸ்” எனும் பெயரால் அழைக்கப்பட்டன. மண்ணால் செய்யப்படும் பாண்டங்களுக்கு இன்றும் அப்பெயரே நிலைத்துவிட்டது.
மற்றொரு விசயத்திற்காகவும் கெராமிகஸ் பகுதி முக்கியத்துவம் பெற்றிருந்தது. அக்கால ஏதென்ஸ் நகரின் வடமேற்கு மூலையில் ஒரு ஓரமாக இருந்ததால் இப்பகுதி பண்டைய ஏதன்ஸ் நகரின் பிரதான கல்லறைத் தோட்டமாகவும் ஒரு காலத்தில் இருந்தது.
கெராமிகஸ் பகுதியில் நிறைய இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடந்துள்ளன. ஏதன்ஸ் நகரின் முக்கிய சுற்றுலாப் பகுதியாகவும் கெராமிகஸ் கல்லறைத் தோட்டம் விளங்குகிறது. அதற்கு அருகில்தான் சுரங்கப்பாதை அமைக்க 1994ஆம் ஆண்டு ஒரு பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. தோண்டத் தோண்ட எலும்புக் கூடு குவியல்கள் தென்பட்டன. ஒரே இடத்தில் குவித்துவைத்து புதைக்கப்பட்டதைப்போல 150 மனிதர்களின் எலும்புக்கூடுகள் கிடைத்தன. அவற்றோடு மண் பானை ஓடுகளும், பூச்சாடிகளும் கிடைத்தன. அவற்றின் காலத்தை ஆராய்ந்து பார்த்ததில் அவை அனைத்தும் கிமு 430-420 ஆண்டுகளைச் சேர்ந்தவை எனத் தெரியவந்தது. புதைக்கப்பட்ட முறை, சந்தேகமே இல்லாமல் கொள்ளை நோயின்போது பின்பற்றப்படும் முறை.
இந்நிகழ்வு உலகம் முழுக்க இருந்த வரலாற்று ஆய்வாளர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், சமூக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் அனைவருக்கும் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் வரலாற்றில் முதன் முதலில் பதியப்பட்ட கொள்ளை நோயான “ஏதன்ஸ் பிளேக்” உறுபிணிக்கு நேரடிச் சான்றுகள் கிடைத்துவிட்டன.
ஆம். வரலாற்றில் முதன் முதலில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்ட உறுபிணி “ஏதென்ஸ் பிளேக்”, பதிவுசெய்தவர் கிரேக்க வரலாற்று ஆசிரியரும் இராணுவத் தளபதியுமான “துசிடிடஸ்”.
இராணுவத் தளபதியான துசிடிடஸ் வரலாற்று ஆசிரியராக மாறியது ஒரு சுவாரசியமான கதை. தமிழகத்தின் சேர, சோழ, பாண்டியர்களைப் போலவே கிரேக்கத்தின் ஏதன்ஸ், ஸ்பார்ட்டன் போன்ற அரசுகளும் தங்களுக்குள் பிரிந்து ஒருவருக்கொருவர் சண்டைபோட்டுக் கொள்வதில் வல்லவர்கள். ஸ்பார்ட்டா தலைமையில் கிரேக்கத்தின் பெலோபொனேசிய தீபகற்ப பகுதியைச் சேர்ந்த அரசுகளும், ஏதன்ஸ் தலைமையில் மத்திய கிரேக்கத்தைச் சேர்ந்த அரசுகளும் கிமு ஐந்தாம் நூற்றாண்டில் ஏறத்தாழ முப்பது வருடங்கள் தொடந்து போரிட்டுக் கொண்டன. இப்போர் “பெலோபோனேசியன் போர்” என வரலாற்று ஆய்வாளர்களால் அழைக்கப்படுகிறது.
துசிடிடஸ் ஏதன்ஸ் அரசில் ஒரு இராணுவத் தளபதியாக இருந்தார். ஸ்பார்ட்டா அரசு, ஆம்பிபோலிஸ் எனும் ஏதன்ஸ் ஆளுகைக்குட்பட்ட நகரை முற்றுகையிட்டது. அந்நகரை மீட்க துசிடிடஸ் தலைமையில் ஒரு படை அனுப்பப்பட்டது. அப்படை சென்றடைவதற்குள் ஆம்பிபோலிஸ் நகரை ஸ்பார்ட்டா கைப்பற்றிவிட்டது. இதனால் கோபமடைந்த ஏதன்ஸ் அரசு துசிடிடஸை நாடு கடத்திவிட்டது. நாடற்றவராக மாறிப்போன துசிடிடஸ், எதிரிகள் இல்லாமல் ஏதன்ஸ், ஸ்பார்ட்டா ஆகிய இருதரப்பு வீரர்களுடனும் நல்ல தொடர்பைப் பெற்றார். தான் அறிந்த தகவல்களை விருப்பு வெறுப்பின்றி பதிவுசெய்து “பெலோபோனேசியன் போரின் வரலாறு” எனும் புத்தகத்தை எழுதினார். (அநேகமாக அரசுப்பணியில் இருந்து விலகியபின் எழுத்தாளராகும் தமிழ் இலக்கியவாதிகளுக்கு முன்னோடி இவராகத்தான் இருக்க வேண்டும்.) துசிடிடஸின் புத்தகம் கிரேக்க வரலாறு பற்றிய மிக முக்கியப் புத்தகமாகக் கருதப்படுகிறது. இப்புத்தகத்தில்தான் பெலோபொனேசியன் போரின்போது பரவிய ஏதன்ஸ் பிளேக் உறுபிணிகளைப் பற்றி பல தகவல்களைப் பதிவுசெய்து வைத்துள்ளார்.
துசிடிடஸின் சிறப்பான பணியால் வரலாற்றில் பதியப்பட்ட முதல் கொள்ளை நோயாக “ஏதன்ஸ் பிளேக் உறுபிணி” அறியப்படுகிறது.
ஏதன்ஸ் பிளேக்
காலம் : கிமு 430
நோய் : உறுதி செய்யப்படவில்லை, டைபாய்டு அல்லது எபோலா என நம்பப்படுகிறது.
இடம் : ஏதன்ஸ் நகரம்
இறந்தவர்கள் எண்ணிக்கை : 75,000 – 1,00,000 மக்கள் (ஏதன்ஸ் நகரின் மக்கள் தொகையில் 25%)
குறிப்பிடத்தக்க மரணம்: பெரிக்ளஸ் (ஏதன்ஸ் நகர ஆளுநர்)
பெலோபோனேசியன் போர் கிமு 430ஆம் ஆண்டு தொடங்கியது. ஏதன்ஸ் நகரை, ஸ்பார்ட்டா முற்றுகை இட்டது. அந்தக் காலத்தில் ஏதன்ஸ் நகரைச் சுற்றிலும் கோட்டை போன்ற மதில் சுவர் கட்டப்பட்டிருந்தது. ஏதன்ஸ் நகர ஆளுநரும், தலைமை இராணுவத் தளபதியுமான பெரிக்ளஸ் கோட்டைக்குள் பாதுகாப்பாக பதுங்கிகொண்டு, வெளியில் முற்றுகையிட்டிருந்த ஸ்பார்ட்டாமீது திடீர் திடீரென தாக்குதல் நடத்தி அதிக சேதத்தை விளைவித்தார்.
நகரத்திற்கு வெளியே வசித்த மக்களுக்குப் போரின் பாதிப்புகளில் இருந்து தப்புவதற்கு ஏதாவது ஒரு தரப்பில் இணைய வேண்டியது கட்டாயமாயிற்று. அப்போது வெற்றியின் விளிம்பில் இருந்த ஏதன்ஸ் நகரை நோக்கி அவர்கள் அகதிகளாகச் சென்றனர். இதனால் திடீரென ஏதன்ஸ் நகர மக்கள்தொகை அதிகரித்தது. இப்படி அகதியாகச் சென்ற ஒருவரிடமிருந்துதான் ஏதன்ஸ் பிளேக் உறுபிணி, நகரம் முழுவதும் பரவியிருக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். எத்தியோபியாவில் இருந்து, எகிப்து வழியாக கிரேக்கத்திற்குள் அந்நோய் நுழைந்ததாக துசிடிடஸ் குறிப்பிடுகிறார். மேலும் மத்திய தரைக்கடல் நாடுகள் பலவற்றையும் பாதித்ததாகவும் எழுதியுள்ளார். துசிடிடஸையும் இந்த உறுபிணி தாக்கியது. ஆயினும் தப்பிப்பிழைத்தார். அதனால் நோயின் அறிகுறிகளையும் பாதிப்புகளையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
நோய் தாக்கியவர்களின் தலையும் உடலும் காய்ச்சலில் கொதிக்கும். கண்கள் இரத்தச் சிவப்பாக மாறும். நாக்கில் இருந்தும், தொண்டையில் இருந்தும் இரத்தம் கசியும். இருமல், தும்மல், சளி ஆகியவை ஏற்படும். கறுப்பு நிறத்தில் வாந்தி வரும். மலத்தில் இரத்தம் கலந்து சீதபேதியாகும். கால், கை விரல் நுனிகள் அழுகும். தோலில் கொப்புளங்கள் தோன்றி சீழும் நிணமும் ஒழுகும். நோயின் கோரத்தில் சுயநினைவை இழந்து மரணம் நேரிடும். ஆனால் வியாதியில் இருந்து குணமடைந்தோருக்கு வாழ்நாள் முழுவதும் அந்நோய்க்கான எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடும்.
இப்படி கொடூர பாதிப்பை ஏற்படுத்திய நோய் எது என்பதில் வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியிலும் மருத்துவர்கள் மத்தியிலும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.
2006ஆம் ஆண்டு கெராமிகஸ் கல்லறைத் தோட்டத்தில் கிடைத்த எலும்புக்கூடுகளின் பல்லின் உட்புறம் இருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏக்களை ஆய்வுசெய்தனர். பல்லின் உட்புறம் செல்லும் இரத்த ஓட்டமானது இறப்பிற்குப் பிறகு அடைபடுவதால், பல்லின் உட்புறம் புறச் சூழ்நிலைகளால் பாதிக்கப்படாமல் இருக்கும். எனவே அதில் உள்ள கிருமிகளின் டி.என்.ஏவை ஆராய்ந்தால் ஏதன்ஸ் பிளேக் என்ன நோய் எனத் தெரியவரும் என்பதுதான் நோக்கம். ஆனால் அந்த திசுக்களில் இருந்து ஒரே ஒரு நோய்க்கிருமி மட்டும் தான் கண்டறியப்பட்டது. அது சால்மொனெல்லா எண்டெரிக்கா எனப்படும் டைபாய்டு காய்ச்சலை உருவாக்கும் கிருமி.
காய்ச்சல் உள்ளிட்ட சில முக்கிய அறிகுறிகள் டைபாய்டு காய்ச்சலோடு ஒத்துப்போகின்றன. பல நூற்றாண்டுகளுக்குமுன் நோயும் வேறுவடிவில் வெளிப்பட்டிருக்கலாம், எனவே ஏதன்ஸ் பிளேக் என்பது டைபாய்டு காய்ச்சல்தான் என்பது சில ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
துடிசியஸ் எழுதிவைத்த நோய் அறிகுறிகளில் சில முக்கிய அறிகுறிகள் டைபாய்டு காய்ச்சலோடு ஒத்து வந்தாலும், முழுவதுமாக ஒத்துப் போகவில்லை. அக்கால ஏதன்ஸ் நகரில் டைபாய்டு கிருமி நீரின் மூலம் பரவி கொள்ளைநோயாக இல்லாமல் சாதாரண நோயாக அவ்வப்போது வியாதிகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கலாம். இக்கொள்ளை நோய் வந்தவர்களுக்கும் ஏற்கனவே டைபாய்டு வந்திருக்க வாய்ப்புள்ளது. அதனால்கூட அக்கிருமி அவர்கள் இரத்தத்தில் இருக்கலாம் எனவும் சிலர் கருதுகின்றனர்.
துசிடிடஸ் கூறியுள்ள பெரும்பான்மை அறிகுறிகள் சமீபத்தில் ஆப்ரிக்காவில் பரவிய எபோலா வைரஸ் இரத்தக்கசிவுக் காய்ச்சலின் அறிகுறிகளோடு பெருமளவு ஒத்துப்போகின்றன.
ஆப்ரிக்காவில் பரவலாக இருக்கும் தன்மை, ஒருமுறை நோய் தொற்றில் இருந்து தப்பினால் எதிர்ப்புசக்தி கிடைத்துவிடுவது, அதிக இறப்பு எண்ணிக்கை, கடுங்காய்ச்சல், இரத்தக்கசிவு ஆகியவை எபோலா இரத்தக்கசிவு காய்ச்சலின் தன்மைகள். எனவே ஏதன்ஸ் பிளேக் என்பது எபோலா இரத்தக்கசிவு காய்ச்சல்தான் என சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். எபோலா உறுபிணி பற்றித் தனியாக ஒரு அத்தியாயத்தில் காண்போம்.
எனினும் உறுதியான முடிவை எட்ட முடியாததால், வரலாற்றில் பதியப்பட்ட முதல் உறுபிணியான ஏதன்ஸ் பிளேக் இன்னும் ஒரு புதிராகத்தான் உள்ளது. அதைப்பற்றிய ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் தற்போதும் நடந்து கொண்டுள்ளன.
எபோலாவோ டைபாய்டோ ஆனால் அது ஏற்படுத்திய பாதிப்பு ஏதன்ஸ் நகரின் பொற்காலத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டது. ஏதென்ஸ் நகர இளைஞர்கள் ஆரம்பத்தில் மிக ஆர்வத்துடன் ஸ்பார்ட்டா வீரர்களை எதிர்த்துப் போரிட்டனர். உறுபிணி பரவிய பிறகு ஏதன்ஸ் நகர மக்கள் தொகையில் 25% பேர் மாண்டனர். நாள்தோறும் இடைவெளியில்லாமல் இறுதிச் சடங்குகள் நிகழ்ந்தன. இறந்தவர்கள் குவியல் குவியலாகப் புதைக்கப்பட்டனர். நகரமெங்கும் மரண ஓலம். இதையெல்லாம் கோட்டைக்கு வெளியில் இருந்து கண்ட ஸ்பார்ட்டா வீரர்கள் போரிடாமல் பயந்து பின்வாங்கினர்.
கோவில்களில் தஞ்சமடைந்த அகதிகள்தான் முதலில் பாதிக்கப்பட்டனர். அவர்கள் கவனிப்பார்கள் இன்றி கோவில்களிலேயே செத்துக்கிடந்தனர். தெய்வங்கள் தங்களுக்கு நோயைப் பரப்பி எதிரிகளான ஸ்பார்ட்டா மக்களுக்கு உதவுவதாக ஏதன்ஸ் மக்கள் தெய்வங்கள்மீது கோபம் கொண்டனர். கோவிலகள் சூறையாடப்பட்டன. நோயில் இறந்தோர் பிணங்கள் கேட்பாரற்று வீதிகளில் கிடந்தன. நோயில் இருந்து தப்பியவர்களில் சிலர் எதிர்ப்பு சக்தியைப் பெற்றதால் நோய் தாக்கிய இடங்களில் தைரியமாகச் சென்று கொள்ளை அடித்தனர். நோய் எதிர்ப்பு சக்திபெற்ற சிலர் நோயால் இறந்தவர்களுக்கு தைரியமாக இறுதிச்சடங்கு செய்யும் பணிகளையும் மேற்கொண்டனர். நாடெங்கும் திருட்டும் கொள்ளையும் சர்வசாதாரணமாக நடந்தது. ஏதன்ஸ் நகரைச் சிறப்பாக நிர்வகித்து வந்த பெரிக்ளஸும் நோயால் மரணமடைந்ததால் குழப்பம் அதிகரித்தது. பதட்டத்தில், அடுத்துவந்த ஆட்சியாளர்கள் மேலும் தவறுகளைச் செய்தனர். அகதிகளால்தான் இந்நோய் பரவியது என்று குடிமக்கள் பதிவேட்டை உருவாக்கி வேறு நாட்டு மக்கள் என பலரையும் அடித்துத் துரத்தினர். அக்காலத்திலேயே CAAவை அமல்படுத்தினர். சிறுகுற்றங்களுக்குக்கூட நாடு கடத்தல் தண்டனை வழங்கப்பட்டது. ஆட்சியாளர்களைக் குறை கூறியோர் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர். அரசின்மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்தது. மீண்டும் மீண்டும் பல நோய்கள் ஏதன்ஸ் நகரைத் தாக்கின. உறுபிணிக்கு முன் இருந்த ஏதன்ஸ் நகரின் பொற்காலம் மீண்டும் திரும்பவே இல்லை.
என்னப்பா, எப்பப் பார்த்தாலும் “ஏதன்ஸ் மாநகரிலே, ரோமப்பேரரசிலே”ன்னு இழுக்குற? இங்கிட்டு நம்ம பக்கம் வந்த வியாதி எல்லாம் கண்ணுக்குத் தெரியாதா? என கேட்கும் நண்பர்களுக்காக… அடுத்த வாரம்…
முந்தைய தொடர்கள்:
1.அந்தோனைன் பிளேக் / காலன்ஸ் பிளேக் –https://bit.ly/2IUryDY
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- எயிட்ஸ்:நோய் எதிர்ப்பைக் கொல்லும் நோய்-சென் பாலன்
- தவிக்கவைத்த தட்டம்மை (measles)- சென் பாலன் ( ஓமான்)
- 'கா டிங்கா பெப்போ' எனும் கெட்ட ஆவி- சென் பாலன்
- சிபிலிஸ்: பதறவைக்கும் பால்வினை நோய்
- எல்லை தாண்டாத எபோலா- சென் பாலன்
- கொசுக்கள் பாடும் மரண கானா : மலேரியா- சென் பாலன்
- பஞ்சாய் பறந்த உயிர்கள் : பம்பாய் பிளேக்- சென் பாலன்
- ஹிஸ்பானியோலாவின் காலன் ஆன கோலன் – சென் பாலன்
- கலங்க வைத்த 'கறுப்புச் சாவு ' : பிளேக்- சென் பாலன்
- சார்ஸ்: ‘கொரோனோ’ என்ற திகில் படத்தின் ட்ரைலர்- சென் பாலன்
- ஸ்பானிஷ் ஃப்ளூ - சென்பாலன்
- நடன பிளேக் உறுபிணி - சென்பாலன்
- பேதிமேளா - இந்தியன் காலரா உறுபிணி - சென் பாலன்
- அந்தோனைன் பிளேக் / காலன்ஸ் பிளேக் - சென் பாலன்