ஊரை அழித்த உறுபிணிகள் – அத்தியாயம் 9
தற்போதைய கோவிட் 19 உறுபிணியின் போது நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதைத் தவிர பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இவை அனைத்தும் 1897 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் இயற்றப்பட்ட கொள்ளை நோய் பரவல் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் தான் செய்யப்படுகின்றன. இந்தக் கடுமையான சட்டம் உருவாக்கப்படுவதற்கு காரணமாக இருந்த உறுபிணி “பம்பாய் பிளேக்”.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பம்பாய் நகரில் டெக்ஸ்டைல் மில்கள் அதிக அளவில் துவங்கப்பட்டன. அதுவரை வெளிநாடுகளில் மட்டுமே இருந்து வந்த டெக்ஸ்டைல் மில் தொழில் இந்தியாவில் புகழ் பெறத் தொடங்கியது. பம்பாய் நகர பெரு வணிகர்கள் இங்கிலாந்து சென்று பயிற்சி பெற்று பம்பாயில் மில்கள் ஆரம்பித்தனர். பம்பாய் இந்தியாவின் மான்செஸ்டர் எனும் பெயரைப் பெற்றது.
இந்தத் தொழில்வளர்ச்சி, வறுமையில் இருந்த கிராம மக்களை பம்பாய் நகரம் நோக்கி இழுத்து வந்தது. எத்தனை பேர் பம்பாய் வந்தாலும் அனைவருக்கும் மில்களில் வேலை கிடைத்தது. தொடர் வறட்சியாலும் பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டு இருந்த மராட்டிய விவசாயிகள், மில் கூலிகளாக வேலையில் சேர பம்பாய் மாநகரம் நோக்கி வந்து கொண்டே இருந்தனர். 1890களில் பம்பாய் நகரின் மொத்த மக்கள் தொகையில் பத்து சதவிகிதத்தினர் மில் தொழிலாளிகள்.
புதிதாக நகருக்குள் வருபவர்கள் தங்குவதற்கு “ச்சால்” என்ற கட்டிடங்கள் அதிக அளவில் கட்டப்பட்டன. நமது ஊரில் லைன் வீடு என்று கூறுவோமே அதுபோல. ஆனால் அடுக்குமாடி கட்டிடங்கள். ஒரு வீடு என்பது ஒரே ஒரு அறை, அதற்கு ஒரே ஒரு வாசல். அதுபோல தீப்பெட்டியை அடுக்கி வைத்தது போல ஒரே கட்டிடத்தில் பலநூறு அறைகள். ஜன்னல் எதுவும் கிடையாது. ஒரு தளத்தின் ஒரு மூலையில் அனைத்து வீடுகளுக்கும் சேர்ந்து ஒரு கழிவறை வசதி இருக்கும். இந்த “ச்சால்”களின் தரைத்தளம் பெரும்பாலும் குடோன்களாக இருக்கும். குடோன் முழுவதும் எலிகளாக இருக்கும். மாடிகளில் நூற்றுக்கணக்கான அறைகள். அங்கு மில் தொழிலாளிகள் குடும்பம் குடும்பமாக வசித்து வந்தனர். இந்த வருணனை போதாது என நினைப்பவர்கள் “chawl mumbai” என கூகிளில் தேடினால் ஆயிரக்கணக்கான படங்கள் கொட்டும். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை இருபத்தியொன்றாம் நூற்றாண்டு ச்சால். அவற்றில் இருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு ச்சாலை நாம் கற்பனை செய்து கொள்ளலாம்.
மில்களின் வளர்ச்சியால் பம்பாய் துறைமுகத்தின் ஏற்றுமதியும் இறக்குமதியும் அதிகரித்தன. எந்நேரமும் கப்பல்கள் வந்து சென்ற வண்ணம் இருந்தன. அப்படி சீனாவிலிருந்து வந்த ஒரு கப்பலில் இருந்த எலிகள் மூலம் பிளேக் பம்பாய் நகரத்தில் இறக்குமதியானது. மாண்டவி பகுதியில் ஒரு ச்சாலில் குடியிருந்த தொழிலாளிக்கு 1896ஆம் ஆண்டு முதன்முதலில் பிளேக் நோய் கண்டறியப்பட்டது. அகாசியோ கேப்ரியல் வேகாஸ் எனும் மருத்துவர் தான் முதன்முதலில் கண்டறிந்தார். பெயரைப் பார்த்தவுடன் வெள்ளைக்கார மருத்துவர் என்று நினைக்க வேண்டாம். இந்திய மருத்துவர்தான். கோவாவில் பிறந்தவர், பிற்காலத்தில் பம்பாய் நகரசபைத் தலைவராகவும் பணியாற்றினார். இவருடைய சிலை இன்றும் மும்பையில் உள்ளது.
பம்பாய் பிளேக்
காலம் : 1896 முதல் 1898 வரை தீவிரமாக., அதன்பிறகு அவ்வப்போது
நோய் : நிணநீர்கட்டி பிளேக்
நோய்க்கிருமி : யெர்சினியா பெஸ்டிஸ்
பலியானோர் எண்ணிக்கை : சுமார் பத்து இலட்சம் பேர்
நோய் ஆரம்பித்த இடம் : மாண்டவி, பம்பாய் (மும்பை), பிறகு இந்தியா முழுமைக்கும்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பிளேக்கை முதலில் அலட்சியமாகத் தான் கையாண்டனர். அவர்களைப் பொறுத்தவரை பம்பாய் நகரம் அரசின் வரி வருமானச் சுரங்கம். அள்ள அள்ள குறையாத பொற்குவியல். மில்களின் மூலமும், ஏற்றுமதி இறக்குமதி மூலமும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு பம்பாய் கொட்டிக் கொடுத்துக் கொண்டே இருந்தது. ஒரு சிலருக்கு வியாதி வந்ததால் அந்த மொத்த நகரையும் முடக்கி அந்த வருமானத்தை இழக்க விரும்பவில்லை. ஊரெங்கும் கிருமிநாசினி மருந்து தெளிப்பது, நோயுற்றவரைத் தனிமைப்படுத்துவது போன்ற மேலோட்டமான செயல்களைச் செய்ததோடு விட்டுவிட்டது.
ஆனால் சில நாட்களிலேயே நிலைமை தலைகீழாக மாறியது. சரியான தடுப்பு நடவடிக்கை இல்லாததால் நோய் கட்டுக்கடங்காமல் பரவ ஆரம்பித்தது. தெருவெங்கும் நோயாளிகள். ஊரெங்கும் நோயாளிகள். வேலை தேடி பம்பாய் வந்த மக்கள், பயந்து தங்கள் சொந்த ஊருக்கே திரும்பிச் சென்றனர். சொந்த ஊரே இல்லாதவர்களும் கூட பம்பாயை காலி செய்து எதோ ஒரு ஊருக்கு ஓடினர். நாடு முழுவதும் பிளேக் பரவியது.
இது வேறு வகையில் விளைவை ஏற்படுத்தியது. தொழிலாளர்கள் நகரை விட்டுச் சென்றதால் மில்கள் ஓடவில்லை. மற்ற தொழில்கள் முடங்கின. ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டன. சுதாரித்த பிரிட்டிஷ் அரசாங்கம் முழுவேகத்தில் பிளேக் தடுப்புப் பணியை ஆரம்பித்தது. இதுநாள் வரை கோட்டைவிட்டதைச் சேர்த்துப் பிடிக்க தேவைக்கு அதிகமாக செயலாற்ற ஆரம்பித்தது.
காவலர்களையும், மருத்துவர்களையும் இணைத்து பல படைகள் உருவாக்கப்பட்டன. எந்த வீட்டிற்குள் எப்போது வேண்டுமானாலும் நுழைந்து சோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. நோயுற்றவரை மருத்துவமனையில் கட்டாய அனுமதி செய்ய அதிகாரம் வழங்கப்பட்டது. வீடுகள், கடைகளை ஆராயவும், நோய் தொற்று ஆபத்து இருந்தால் அவற்றை இடித்துத் தள்ளவும் உத்தரவிடப்பட்டது. நோய் இருப்பவரை மறைத்து வைத்தல் கடும் குற்றமாக்கப்பட்டது. நோயைப் பரப்பும் வகையில் செயல்பட்டவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து இந்திய கொள்ளைநோய் பரவல் தடுப்புச் சட்டம் 1897 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் தான் இன்று வரை கொள்ளை நோய் பரவலின் போது இந்திய ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
பிரிட்டிஷ் அரசின் அளவு கடந்த அடக்குமுறைகளால் மக்கள் வெறுப்படைந்தனர். நிணநீர்க்கட்டி பிளேக் நோய் அக்குள், தொடையிடுக்கில் கட்டிகளை உண்டாக்கும் என்பதை முந்தைய அத்தியாயங்களில் கண்டுள்ளோம். இந்தியப் பெண் நோயாளிகள் தங்கள் அக்குள், தொடையிடுக்குகளை ஆண் மருத்துவர்கள் பரிசோதிப்பதை விரும்பவில்லை. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் நோயாளிகள் வெள்ளைக்காரர்களால் விசம் வைத்து கொல்லப்படுவதாக புரளி பரவியது. இது தவிர பம்பாயின் மக்கள் தொகையை குறைக்க அரசே இப்படி நோயைப் பரப்புவதாகவும் புரளி பரவியது. இதனால் பொதுமக்கள் சுகாதாரக் குழுவினர் இடையே அடிக்கடி மோதல்கள் எழுந்தன. மருத்துவமனைகள் சூறையாடப்பட்டன. பதிலுக்கு இராணுவத்தினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு வெறுப்பு அதிகமானது.
ஆங்கில அரசை எதிர்க்க பிளேக்கை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார் பாலகங்காதர திலகர். அவர் தனது “கேசரி” பத்திரிக்கை மூலமாக தொடர்ந்து ஆங்கில அரசுக்கு எதிரான கருத்துகளை எழுதி வந்தார். மராட்டிய மன்னன் சிவாஜி காலத்தில் பிறர் வீட்டுப் பெண்களை யாரும் பார்க்கக் கூட முடியாது, இப்போது இரயிலில் ஆண்களும் பெண்களும் ஒன்றாகப் பயணம் செய்வதால் தான் இது போன்ற கொள்ளை நோய்கள் வருகின்றன. விநாயகரின் வாகனமாகக் கருதப்படும் எலிகளை, பிளேக் எனும் காரணத்தைக் கூறி ஹிந்து விரோத ஆங்கில அரசு அழிக்கிறது. ஆங்கிலப் படைகள் பூட்ஸ் காலோடு வீட்டிற்குள், கோவிலுக்குள் நுழைகின்றனர். இதுபோன்ற கருத்துகளை தொடர்ச்சியாக எழுதிவந்தார். மராட்டிய மாநிலத்தின் பூனா நகரத்தில் இந்து பிளேக் மருத்துவமனையை ஆரம்பிப்பதில் திலகர் பெரும்பங்கு வகித்தார். ஆனால் அந்த மருத்துவமனையில் தாழ்த்தப்பட்டவர்கள், பிற மதத்தினர் நுழைய அனுமதி மறுக்கப்பட்டத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. மும்பையில் மருந்து தெளிக்கும் பணியில் இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள், மற்ற பிரிவினர் இருக்கும் தெருக்களில் நுழைய எதிர்ப்பு கிளம்பியது.
திலகரின் கருத்துகளால் தூண்டப்பட்ட “சேப்பாகர் சகோதரர்கள்” பூனா நகரத்தின் பிளேக் கமிஷனராக இருந்த WC ரண்ட் எனும் ஆங்கிலேய அதிகாரியையும் அவரது பாதுகாவலரையும் சுட்டுக் கொன்றனர். (சேப்பாகர் சகோதரர்களில் ஒருவரான தாமோதர் ஹரி சேப்பாகர் நினைவாக மத்திய அரசு 2018 ஆம் ஆண்டு தபால் தலை வெளியிட்டது. )
பம்பாய் நகரத்தில் இருந்து பெருமளவு மக்கள் வெளியேறியதால் நகரின் மக்கள் தொகை அடர்த்தி குறைந்தது. 1898 ஆம் ஆண்டு ஆங்கில அரசு பம்பாய் நகரை மேம்படுத்தும் அமைப்பை உருவாக்கியது. தங்குமிடங்கள், வடிகால் வசதிகள் போன்றவற்றை மேம்படுத்த கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. எலிகளின் பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டது. புதிதாகக் கண்டறியப்பட்ட ஹாப்கின் பிளேக் தடுப்பூசி முழுமையான பாதுகாப்பை அளிக்காவிட்டலும் ஓரளவு பாதுகாப்பை வழங்கியது. இந்தத் தடுப்பூசியும் பம்பாய் நகர மக்களுக்கு அளிக்கப்பட்டது. இதனால் பம்பாய் நகரில் நோயின் தாக்கம் குறைந்தது. அதேநேரம் பம்பாயை விட்டு வெளியேறிய மக்களால் பிற பகுதிகளில் பிளேக் நோய் பரவியது. அகமதாபாத், கராச்சியிலும் கொள்ளை நோயாக பரவியது.
பம்பாய் நிலைமை சீரடைந்ததைக் கேள்விப்பட்டு மக்கள் மீண்டும் பம்பாய் திரும்பினர். அவர்கள் மூலம் மீண்டும் சிறு அலையாகப் பிளேக் பரவியது. இப்படிப் பல ஆண்டுகள் பம்பாய் நகரத்தோடும் இந்தியாவோடும் பிளேக் கண்ணாமூச்சி ஆடியது. மூன்றாவது பிளேக் பாண்டமிக்கின் ஒரு பகுதியான இந்த பம்பாய் பிளேக் காலத்தில் காலனி இந்தியா முழுவதும் சுமார் ஒரு கோடிப் பேர் இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
ஒரு சிறு தீப்பொறியில் துவங்கும் காட்டுத் தீயின் முடிவு, அதன் ஆரம்பத்தைப் போல எளிதான உடனடி நிகழ்வாக இருப்பது இல்லை. நின்று நிதானமாக எரிந்தே முடிவுக்கு வருகிறது. ஊரை அழித்த உறுபிணிகளும் அப்படியே.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- எயிட்ஸ்:நோய் எதிர்ப்பைக் கொல்லும் நோய்-சென் பாலன்
- தவிக்கவைத்த தட்டம்மை (measles)- சென் பாலன் ( ஓமான்)
- 'கா டிங்கா பெப்போ' எனும் கெட்ட ஆவி- சென் பாலன்
- சிபிலிஸ்: பதறவைக்கும் பால்வினை நோய்
- எல்லை தாண்டாத எபோலா- சென் பாலன்
- கொசுக்கள் பாடும் மரண கானா : மலேரியா- சென் பாலன்
- ஹிஸ்பானியோலாவின் காலன் ஆன கோலன் – சென் பாலன்
- கலங்க வைத்த 'கறுப்புச் சாவு ' : பிளேக்- சென் பாலன்
- சார்ஸ்: ‘கொரோனோ’ என்ற திகில் படத்தின் ட்ரைலர்- சென் பாலன்
- ஸ்பானிஷ் ஃப்ளூ - சென்பாலன்
- நடன பிளேக் உறுபிணி - சென்பாலன்
- பேதிமேளா - இந்தியன் காலரா உறுபிணி - சென் பாலன்
- ஏதன்ஸ் பிளேக் - சென் பாலன்
- அந்தோனைன் பிளேக் / காலன்ஸ் பிளேக் - சென் பாலன்