திக்குத் தெரியாத உலகில்

”  எழுத்தாளனுக்கு எதுவும் வீண்தான். அவனோட குடும்பத்துக்கு பிரயோஜனப்படறமாதிரி ஏதாவது வாங்கித் தந்தா குடும்பம் சந்தோசப்படும் . எழுத்தாளனும் சந்தோசப்படுவான். எனக்கு செகந்திராபாத் மோண்டா மார்கெட்லே ஒரு பை நிறைய காய்கறி வாங்கிக்குடுத்தா சந்தோசமா இருக்கும் “

போன வாரம் அசோகமித்திரன் அவர்களின் நினைவு தினம் வந்து சென்றது. அப்போது அவர் ஒரு உரையாடலில்   சொன்ன குருவி என்ற கதையையும் அவரின் மேற்கண்ட பேச்சையும் நினைத்துக் கொண்டேன். அந்த உரையாடல் 90ன் ஆரம்பத்தில் அவர் செகந்திராபாத்திற்கு வந்த போது என்னுடனான உரையாடல்தான். அவர் வந்திருந்தது செகந்திராபாத்தில் தமிழ்ப்புத்தகக்கண்காட்சியில் பேச. செகந்திராபாத்தில் தமிழ்ப்புத்தகக்கண்காட்சியா என்று உங்களுக்கு ஆச்சர்யம் வரும். நான் செகந்திராபாத்தில் இருந்த போது தமிழ்ப்புத்தக்கண்காட்சிகளை ஆண்டுதோறும் நடத்தினேன். சுஜாதா, நா.பார்த்தசாரதி., சுபா உட்பட பலரும் வந்து பேசியிருக்கிறார்கள். அதை ஆரம்பித்து வைத்தவர் விஜயா பதிப்பகம் வேலாயுதம் அவர்கள். முதல் ஆண்டு நான்கு பேருடனும் புத்தகமூட்டைகளுடனும் வந்து புத்தகக்கண்காட்சியை துவக்கினார்.

இரண்டாம் ஆண்டிலிருந்து நாங்களே பதிப்பகங்களிலிருந்து புத்தகங்கள்  பெற்று நடத்தினோம் ஆந்திர மாநிலத் தமிழ்ப் பேரவை நண்பர்களுடன்.  ஒரு முறை அப்படித்தான் அசோக மித்திரன் அவர்கள் வந்தபோது அவர் படித்த மெகபூப் கல்லூரியில் அந்தக்கண்காட்சியில் நடந்ததால், அக்கல்லூரியில் அவர் படித்த நினைவுகளை நெகிழ்ச்சியுடன் ரொம்ப நேரம் பேசினார். அசோக மித்திரன் ரொம்ப நேரம் பேசினார் என்பது பலருக்கு ஆச்சர்யமான தகவலாய் இருக்கலாம். அவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக பால்ய காலத்தை செகந்திரபாத்தில்  கழித்தவர் .

அவருக்கு ஏதாவது வாங்கித்தரலாம் என்று கேட்டபோது அவர் சொன்னது: ” எழுத்தாளனுக்கு எதுவும் வீண்தான். அவனோட குடும்பத்துக்கு பிரயோஜனப்படறமாதிரி வாங்கித் தந்தா குடும்பம் சந்தோசப்படும் . எழுத்தாளனும் சந்தோசப்படுவான். எனக்கு செகந்திராபாத் மேண்டா மார்கெட்லே ஒரு பை நிறைய காய்கறி வாங்கிக்குடுத்த சந்தோசமா இருக்கும் “

ஜெயமோகனும் நானும் தயாரித்த கனவு       ” அசோகமித்திரன் சிறப்பிதழினை”  கொண்டு வந்தோம் . அந்த இதழ் பின்னால் அவரின் 77 ம் வயதில்   “ அசோகமித்திரன் 77 “ என்ற பெயரில் இன்னும் சில கட்டுரைகளை இணைத்து அம்ருதா பதிப்பகம் மூலம் ஒரு தொகுப்பாக திருமதி திலகவதி அவர்கள் கொண்டு வந்தார்.

அசோகமித்திரன் அவரின் மரணத்தை ஒட்டி அவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தபோது அவரின் குருவிக்கூடு என்ற சிறுகதை ஞாபகத்திற்கு வந்த சமயத்தில் சூர்யா என்ற இளைஞரின் வனக் காட்சிகளையும் பறவைகளையும் புகைப்படங்களாகக் கண்டு  அவரின் ” வைல்ட் லைப் ஆப்  சென்ட்ரல் இந்தியா “  என்ற நூலிலிருந்து பலவற்றை ரசித்தேன்

முதலில் அசோகமித்ரனின்  குருவிக்கூடு .

குருவிக்கூடு  ஒன்றை வீட்டில் காப்பாற்ற ஒரு சிறுவன் பல முயற்சிகளை செய்கிறான் ஆனால் அவனின் முயற்சியில் தோற்றுக் கொண்டே இருக்கின்றன. ஆனால் குருவியுடன் பேசிக்கொண்டே இருப்பான். பிற உயிர்கள் மீது மனிதர்கள் கொஞ்சம் இரக்கம் கொள்கிறார்கள். அது போலித்தனமாக இருக்கிறது. இந்த போலித்தனத்தை தங்களுக்குள்ளாகவே வைக்கலாம். இதை ஏன் பிற உயிரினங்கள் மீது செலுத்த ஆசைப்படுகிறார்கள்? குருவிகள்,  பறவைகள் அவர்கள் இவ்வுலகில் மகிழ்ச்சியாகவும்,  ஆறுதலாகவும்  இருக்கக்கூடும் என்பதை கொஞ்சம் கோபப் பார்வையில் சொல்லும் கதை அது.

அசோகமித்திரன் புகைப்படக்கலையில் ஆர்வம் இருந்தது.  புகைப்படக்கலையில் ஆர்வம் கொண்ட இளைஞர்களில் ஒருவர்   சூர்யா.  இவரும் பறவைகள் புறக்கணிக்கப்படுவதை  எண்ணிக் கோபப்படுபவர்.  படித்தவர் தனியார் தொலைக்காட்சிக்கு வனவிலங்குகளைப் படங்களாக எடுக்க ஆரம்பித்திருக்கிறார் .பல்வேறு விஷயங்களைப் புகைப்படங்கள் எடுத்திருக்கிறார் . நிறைய இயற்கையாளார்களிடம்  பேசி தெளிவு பெற்றிருக்கிறார். அவர்கள் அவரை ஒரு கதை சொல்லியாக மாற்றிவிட்டார்கள்.

கதைசொல்லி என்றால் மனத்தில் உள்ள பறவைகள் பிராணிகள் காட்டுயிர் அம்சங்கள் இங்கு சொல்வதுதான் . சத்புரா சரணாலயத்தில்  அவர் வேலைக்கு சேர்ந்தது அவரின் வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது .வனத்தைச் சுற்றி பார்க்க வரும் மக்களுக்கு வனம் பற்றி கதைகளை  விளையாட்டு மூலம் , விவரங்களாகவும் சொல்வது அவருக்கே சுவாரஸ்யமாக இருந்தது.

இது வேலை இல்லை வாழ்க்கை என்பதை திடமாக நம்புகிறார் ” தினம் தினம்  வனம் புதுப்புது ரகசியங்களை சொல்லிக் கொண்டே இருக்கிறது . வனத்தை தரிசிப்பது,  புரிந்துகொள்வது, உணர்வது தவம்.  அந்த தவத்தை மேற்கொண்டிருக்கிறேன்  “

பெருநகரத்தில் வளர்ந்தாலும் சிறு நகரத்தில் பிறந்து வளர்ந்தாலும் குழந்தைகளை வனத்திற்குக் கூட்டிச் செல்லுங்கள்.  குறைந்தது உள்ளூர் பூங்காக்களுக்குக்ச் கூட்டிச் செல்லுங்கள் என்கிறார் சூரியா என்ற தமிழர் .

ஓர்  உயிரினத்தை படம் எடுக்கும்போது படத்தின்  அளவில் அதிகபட்சம் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே அதன் உருவம் உள்ளதாக பிரேம்  அமைய வேண்டும் .மிச்சமுள்ள பகுதி அதன் இருப்பிடத்தைக் காட்ட வேண்டும். குறிப்பிட்ட அந்த உயிருக்கும் சூழலுக்குமான உறவை  அறிய இது உதவும் “  என்பது சிறந்த படத்திற்கான அளவுகோல் என்பதை அவரின் இப்புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் புகைப்படங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

அட்டைப் படத்தில் இடம்பெற்றிருக்கும் இரு புலிகள் ஒன்றையொன்று சீண்டிக்கொண்டு சீறும் புகைப்படம் அப்படி ஒரு சிறந்த புகைப்படமாக அமைந்திருப்பதைப் பார்த்தபோது புலிகளை மனிதர்கள் ஏன் வேட்டையாடுகிறார்கள் என்ற கேள்விக்கான ஜேகேயின் பதிலை திரும்பத் திரும்ப மனதில் கொண்டு வரச் செய்தது ஜே கிருஷ்ணமூர்த்தி இப்படி சொல்கிறார் :

ஒன்றைக் கொல்வதால் அவர்களுக்குக்  கிடைக்கும் கிளர்ச்சியைப்  பெறுவதற்காக வேட்டையாடுகிறார்கள். பூச்சியில் இறக்கையைப் பிய்த்து  அதற்கு என்னவாகிறது  என்று பார்க்கிறோம் . நம்  உணவிற்காக மிருகங்களை வதைத்துக் கொல்கிறோம். அமைதி  என்று அழைக்கப்படும் அந்தப் போலித்தனத்திற்காகக்  கொல்கிறோம். தாய்நாட்டிற்காக்க் கொல்கிறோம். நம் கோட்பாட்டிற்காகக் கொல்கிறோம். அக் கொடூரத்தின் அம்சம் அது நமக்குள் இருக்கிறது. அவ்வாறு இருப்பதைப் புரிந்து கொண்டு அவ்வுணர்வைத்  தள்ளி வைத்து விட்டால் புலி நடமாட்டத்தை  மிகவும் ரசித்து மகிழ்ச்சியுடன் பார்ப்போம். இப்படித்தான் பம்பாய்  அருகிலிருந்த ஒரு இடத்தில் ஒரு நாள் மாலை புலியை மிகவும் ரசித்துப் பார்த்தோம். அப்பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதை பார்த்தகாக  ஒருவர் சொல்லவே நண்பர் அருகிலிருந்த காட்டுப்பகுதியில் எங்களை காரில் அழைத்துச் சென்றார் . திரும்பியபோது ஒரு வளைவில் மஞ்சளும் கருப்புமான உடலில் கோடுகளுடன் பளபள்க்கும் தோலுடன்,  ஒடிசலான உடல்வாகுடன் அழகானதோர் காட்சியாய் ஒரு புலி நின்று கொண்டிருந்தது . காரின் முகப்பை அணைத்து விட்டபின் புலி உருமிக்கொண்டே எங்களை நோக்கி வந்தது.  புலி உரசியது .அது ஒரு அற்புதமான காட்சி . துப்பாக்கியை எடுத்துக் கொண்டு செல்லாமல் இம்மாதிரியான காட்சியை காண்பது மிகவும் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். இதில் சிறப்பு மிக்க அழகு உள்ளது.

இந்த அனுபவத்தை சூர்யாவும் உணர்ந்திருப்பதைப்  போல் இந்த புகைப்படங்களில் நேர்த்தியும் அழகும் ஒரு புகைப்படக் கருவி ஒரு மனத்தையே சுமந்து இருப்பது போல் தோன்ற வைக்கிறது.

” புலிக்கலைஞன் “ என்பது அசோகமித்திரன் அவர்களின் சிறந்த கதைகளில் ஒன்று என்பதும் எல்லோருக்கும் ஞாபகம் வரும் .

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. வேடந்தாங்கலுக்கு வைத்த வேட்டு-சுப்ரபாரதிமணியன்
  2. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியைச் சூழும் அழிவின் மேகங்கள்-சுப்ரபாரதிமணியன்
  3. கொரோனா காலத்துக் கொடுங்கதைகள்-சுப்ரபாரதிமணியன்
  4. கொரோனா: மாயன் காலண்டர் சொன்ன உலக அழிவா? - சுப்ரபாரதிமணியன்
  5. ஒரு கிராம் வைரஸ் படுத்தும் பாடு- சுப்ரபாரதிமணியன்
  6. 'டீ ஷர்ட்’களாக மாறும் தண்ணீர் பாட்டில்கள்- சுப்ரபாரதி மணியன்
  7. தகியாய் தகிக்கும் பூமி- சுப்ரபாரதி மணியன்
  8. பசுமை வியபாரம் : சுப்ரபாரதிமணியன்
  9. புது அகதிகளின் உலகம் - சுப்ரபாரதிமணியன்
  10. பொதுப் பள்ளிக்கல்வியும், பாடாய்படுத்தும் தொடக்கக்கல்வியும் – சுப்ரபாரதிமணியன்
  11. குழந்தைத் திருமணம்: பாதிக்கப்படும் பெண் குழந்தைகள் - சுப்ரபாரதிமணியன்
  12. வங்கதேசப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி - சுப்ரபாரதிமணியன்
  13. டாக்கா நகர பெண்களின் குரல்களைக் கேட்டோம்
  14. பாலியல் கொடுமைகளின் நூறு முகங்கள்
  15. வேலையிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல், பாலின பாகுபாடு -சுப்ரபாரதிமணியன்