பாலின பேத வன்முறை (Gender Based Violence) – 1

ஜனவரி 16. 2020.
டாக்கா நகரம்

பொங்கல் தினம், தமிழர்களின் திருவிழா. தமிழ்நாட்டில் பொங்கல் கொண்டாடுவது குறித்து நினைத்துக்கொண்டிருந்தேன். ஊரிலிருந்தால் பொங்கலை விரும்பி சாப்பிட்டு இருக்கலாம் என்று நினைத்தேன், நேற்று தொழிற்சங்க வாதியும் பின்னலாடைத் துறைசார்ந்த போராளியுமான கல்பனோ அத்தர் அவர்களுடனானச் சந்திப்பில் அவர் அளித்த ஐந்துவகை இனிப்பு பண்டங்களைச் சாப்பிடாமலே பார்த்துக்கொண்டிருந்தேன். பெயர் எதுவும் தெரியவில்லை. நமக்குத் தெரிந்த ரசகுல்லா அதிலில்லை. பக்கமிருந்த சமூகச் செயல்பாட்டாளர் வியாகுல மேரி சாப்பிடுங்கள் வங்கதேச இனிப்பு பதார்த்தங்கள் தனித்தன்மை வாய்ந்தவையாக இருக்கின்றன என்றார், ஆனால் தொடர்ந்து இனிப்புப் பதார்த்தங்களை உட்கொள்ளுவதைக் கவனமாகத் தவிர்த்தும், இயலாதபோது குறைந்த அளவில் எடுத்துக்கொண்டு இருந்து வந்திருக்கிறேன். அவர் வேண்டுகோள் விடுத்த பின்னால் ஐந்துவகை இனிப்பு பதார்த்தங்களிலிருந்து சிறு துண்டை ஒவ்வொன்றிலும் எடுத்துச் சுவைத்தேன். ஒவ்வொன்றும் இனிப்பின் ஒவ்வொரு தரத்தையும் வகையையும் காட்டியது. மிதமான இனிப்பு என்பது ஆறுதல் ஊரில் இருந்தால் இப்படித்தான் இனிப்புப் பொங்கலைத் தொலைக்காட்சியுடன் ரசித்திருக்கலாம் என்று நினைத்தேன். அப்போது என் எதிரில் இருந்த டாக்காவின் முக்கிய ஆங்கில தினசரியான நியூஏஜில் வந்திருந்த ஒரு செய்தி அதிர்ச்சியும் சங்கடமும் தந்தது.

அந்த நிகழ்ச்சி முதல்நாள் நடந்திருக்கிறது. அன்றைக்கு நாங்கள் அந்த பகுதிக்குத்தான் சென்றிருந்தோம். அங்கு பின்னலாடைத்துறையில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களுடைய நிலையை அறிந்துகொள்வதற்கும் பாலின வேறுபாடு சார்ந்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சார்ந்த கலந்துரையாடலுக்கும் சென்றிருந்தோம். பாலின வேறுபாடு சார்ந்த வன்முறை சார்ந்த ஒரு நிகழ்ச்சிக்காக வங்கதேசம் டாக்கா நகருக்கு வந்திருந்தோம். எங்கள் குழுவில் பெங்களூரைச் சேர்ந்த சமூக சேவைகி கீதா மேனன், திருச்சியைச் சார்ந்த தொழிற்சங்க தலைவர் மாதேஸ்வரன் (அமைப்புசாரா தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள் சார்ந்த பிரச்சினைகளில் அக்கறைக்கொண்டு நெடுங்காலமாய் இயங்கி வருபவர்) திருப்பூர் சமூக செயல்பாட்டாளர்கள் திருப்பூர் சேவை அமைப்பின் பணியாளர்களும் சமூக சேவை அக்கறைக் கொண்டவருமான முனைவர் ராஜேஸ்வரி கலாமோணி மற்றும் அழகர் பாலாஜி ஆகியோரைக் கொண்டது எங்கள் குழு.
அந்தப் பத்திரிக்கையில் தென்பட்ட செய்தி இதுதான்: பின்னலாடை துறை சார்ந்த ஒரு பெண் ஊழியர், தொழிலாளி நான்கு பேரால் ஜம்காரா பகுதி -அசிலியா நகர் – டாக்கா நகரத்தின் வெளிப்புறப் பகுதியில் உள்ள இடம் நான்கு பேர்களால் பாலியல் பலாத்காரம் வன்முறை செய்யப்பட்டு இருக்கிறார். அந்தப் பின்னலாடைத் தொழிலாளிக்கு வயது 20. இரவு 12 மணிக்கு அந்தப் பெண் குடியிருக்கும் வீட்டுச் சொந்தக்காரர் அபுல்கலாம் (நாற்பது வயது) மற்றும் நான்கு பேருடன் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். 2000 டாக்கா பணம் வாடகையாக அவள் தரவேண்டியிருக்கிறது. அதைக் கேட்டிருக்கிறார்கள் அவர் கணவர் ஒரு பேருந்து ஓட்டுநர். அவளும் அவளின் கணவனும் இப்போதைக்கு வாடகை தர முடியவில்லை. சம்பளம் கிடைத்த பின்னால் தருகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அவளின் கணவனைப் பக்கம் இருந்த ஒரு அறைக்கு இழுத்துச் சென்று அங்கு வைத்து உள்ளே போட்டிருக்கிறார்கள். அதன்பின் அதி காலைவரை ஒவ்வொருவராக மாறிமாறி அந்தப் பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் வீட்டில் வைத்திருந்த தங்க நெக்லஸ் காது கம்மல் போன்றவற்றை எடுத்துக்கொண்டு அவர்கள் விடிகாலை நான்கு மணிக்குக் கிளம்பிப் போய்விட்டார்கள் அந்தப் பின்னலாடை தொழிலாளி பக்கத்து அறையில் இருந்த தன் கணவனை அங்கிருந்து விடுவித்து காவல்நிலையத்திற்குக் கூட்டிச் சென்று புகார் அளித்திருக்கிறார்.

பாலின பலாத்காரம் வன்முறையின் உச்சம் இந்த வகையான பாலியல் சம்பவம். பாலியல் சார்ந்த வன்முறை என்று வந்தால் பலருக்குப் பாலியல் உணர்வுசார்ந்த வன்முறை என்பதுதான் ஞாபகம் வரும். ஆனால் இது உச்சபட்சமான வன்முறை. அந்தவகை வன்முறை எப்படியெல்லாம் தொழிற்சாலைகளில் குறிப்பாகப் பின்னலாடை துறையிலும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகளிலும் வங்கதேசத்திலும் இந்தியாவிலும் இருந்து வருகிறது என்பதற்கான ஒரு நிகழ்ச்சி அடுத்த நாள் நடக்கவிருந்தது.

நியூஸ் ஏஜ் பத்திரிகையில் வந்த சம்பவம் எங்கள் குழு குழுவினரை வெகுவாகப் பாதித்தது. என்னே முரண். இதுபோல் தினமும் பாலியல் வன்முறைகள் உலகமெங்கும் தொடர்ந்து நடக்கின்றன என்பதே அடுத்த நாள் நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக வெளிப்படும் என நினைத்தேன். மற்றவர்களிடம் பரிமாறியும் கொண்டேன்.

பாலின பேத வன்முறை

1. ராஜாமணி நான்கு வருடமாகப் பின்னலாடை தொழிற்சாலையில் அதிக நேரம் வேலை பார்த்து உழைக்கிறாள். அவள் குடும்பத்திற்கு அந்த வருமானம் தேவையாக இருக்கிறது. பிரசவத்துக்குப் பிறகு வேலைக்குத் திரும்புகிறாள். இப்போது அதிக நேரம் தற்போது தர இயலாது என்கிறார்கள். அதனால் பதவி இறக்கம் செய்து சம்பளம் குறைவாகக் கொடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் உடன் வேலை செய்யும் சக ஆண் தொழிலாளிக்கு அவர் கேட்டுக்கொண்டர். கூடுதல் நேரம் தரப்படுகிறது. பதவியிலும் சம்பளத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் பெண் என்ற வகையில் ராஜா மணிக்கு பாதகம் உள்ளது.

2. ராஜேஸ்வரிக்கு பாலின வேறுபாட்டால் கீழே நகர்த்தப்படும் என்பதை மெல்ல யோசித்த போதுதான் தெரிந்தது, அவருடைய மருத்துவ பாலிசியில் அவருடைய கணவர் குழந்தைகள் இடம்பெறவில்லை. கேட்டால் கணவருடைய பாலிசியில் அதெல்லாம் இணைக்கப்பட்டு இருக்கும் என்று சொல்கிறார்கள்.

3. மேரிக்கு அவள் வேலை செய்யும் பெண்கள் ஆடை தொழிற்சாலையில் சம வேலைக்குச் சம கூலி என்கிற அடிப்படையில் சம்பளம் தருவதில்லை. ஆண்களைவிடக் குறைவாகவே தரப்படுகிறது. பெண்களைக் குறைந்த கூலிக்கு நியமிப்பதை மேரியும் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறாள்.

4. மல்லிகா நல்ல திறமையான பெண்தான். அவளுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி செல்ல வாய்ப்பு அளிக்கப்படவில்லை கேட்டால் கர்ப்பிணியாக இருக்கிறாள். இந்தமுறை பதவி உயர்வு கிடையாது. மருத்துவ விடுப்பு வேறு. அதிக விடுப்புகள் செல்லுவார் அதனால் பதவி உயர்வு கிடையாது. திருமணமானால் வேலையை விட்டு கணவன் வீட்டுக்குச் சென்று விடுவாள். அவளுக்கு எதற்குப் பதவி உயர்வு என்று முன்புகூட அவரிடம் கேட்கப்பட்டது வீட்டிற்குச் செல்ல வேண்டும் சமைக்கவேண்டும். வயதான அப்பா அம்மாவைப் பார்க்க வேண்டும் மாமியார் அத்தையைக் கவனிக்க வேண்டும். கல்யாணம் கருமாதி என்று போய்விடுவார் என்பதாக நினைத்துக்கொண்டு கூடுதல் நேரம் தரப்படுவதில்லை. கூடுதல் நேரத்தைச் செலவிட்டு வேலையை முடிக்க மாட்டார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது ஒன்று

5. பாத்திமா வேலையில் சேரும்போது பாலின பாகுபாடு இருப்பதை அறிந்துகொள்ள அவருக்கு அந்தப் பிரிவில் எல்லா அனுபவங்களும் இருந்தும் பலவிதங்களில் நிலை குறைக்கப்பட்டார். புறக்கணிக்கப்பட்டார். மாதவிடாய் கால பராமரிப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை. அவரின் கூடவேலை செய்யும் பெண்களுக்கு மகப்பேறு கால சட்ட சலுகைகள் வழங்கப்படவில்லை. தேர்வின்போது விசித்திரமாய் கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது கர்ப்பம் தரித்து உள்ளாயா என்று கேட்டார்கள். கர்ப்பமாக இல்லை என்று சான்றிதழ் தரச் சொன்னார்கள்.

6. ஜோதி வேலை நீக்கத்தில் பாலின பாகுபாடு காட்டப்பட்டது. குறைந்த உற்பத்தியின்போது வேலையில்லை வேலை இல்லை என்று சொல்லி வேலைக்கு வரவேண்டாம் என்று சொன்னார்கள். மாதவிடாய் காலங்களில் விடுமுறை கேட்பாள் என்பதற்காகத் தவிர்க்கப்பட்டாள். மாதவிடாய் காலங்களில் அவள் எதிர்பார்க்கும் உற்பத்தியைத் தரமாட்டார் என்று அவள் காதுபடவே பேசப்பட்டது. திருமணமான, குழந்தைகள் உள்ள பெண்கள் வேண்டாம், குழந்தைகளுக்கு அடிக்கடி பாலூட்டச் செல்வதால் சிரமம் குழந்தைகள் பராமரிப்பு வயதில் இருப்பதால் அவளை வைத்துக்கொண்டிருப்பதில் சிலம்பு ஆட்டம் என்று சொன்னார்கள்.

7. கனகத்திற்குப் பதவியில் பாலின பாகுபாடு காட்டப்பட்டுள்ளது. வெளி பணியிடங்களுக்குத் தொழில் சம்பந்தமாகச் செல்லமுடியவில்லை. குடும்ப பொறுப்பு இருப்பதால் கூடுதல் நேரம் வேலையில் கவனம் செலுத்த இயலவில்லை குடும்பத்தலைவனைப் பெண்ணுக்கே பதவியேற்பு தேவையில்லை என்று தட்டிக் கழிக்கிறார். ஒரே துறையில் பெண்ணை உதவி செய்வதற்காக மாற்றுவதும் ஆணுக்கு வேலை. உதவித்தொகை உயர்வு தருவதும் சாதாரணமாகிவிட்டது

இந்தவகையில் பெண்களுக்கு இழைக்கப்படும் இவையெல்லாம் பாலியல் பாகுபாடு வன்முறைதான் உடலியல் கூறுகள், மாற்றங்கள் சமூகத்தால் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்படும் குணங்கள் இவை, ஒவ்வொரு சமூகத்திற்கு மாறுபடும்.

இவற்றை வைத்துக்கொண்டு பாலின பாகுபாடு என்பது பாலியல் உறுப்புகள் சார்ந்த பாலின பார்வையினால் அளவு இரண்டும் கலந்தோ காட்டப்படுவது குற்றம்தான் என்பது வருத்தப்பட வேண்டியிருக்கிறது.

சட்டமானது தனியார் மாநில மற்றும் மத்திய அரசில் உள்ள பத்து அல்லது மேற்பட்ட தொழிலாளர்கள் ஒரு வருடத்திற்குத் தொடர்ந்து வேலை செய்யும் இடத்தில் சட்டத்திற்கு உட்பட்டு பாலின பாகுபாடு காட்டப்படாத முறை இருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. சட்டம் இருக்கிறது. உடல் சூழல் தட்பவெப்பம் தீப்பொறிகள் மற்றும் காற்றோட்டம் போன்ற வேலைக்கு ஊழல் தீங்குவிளைவிப்பதாக பெண்களுக்கும் இருக்கின்றன பெண் பாதுகாப்புநிலை குறித்து சட்டப்படி வேலை நேரம் வேலைகளைச் சூழல் பெண்களுக்கான தொழில் தொழிற்சாலை சட்டத்தில் இருப்பதற்கு மாறாக நடப்பதும் பாலின பாகுபாடு ஆகிறது. பாலியல் தொந்தரவு என்பது அதில் ஒரு வடிவம் பாலியல்சார்ந்து வெவ்வேறு விதங்களில் வேலைக்கு நியமிப்பது நீக்குவது பதவி சலுகைகள் சம்பள பாகுபாடு பாலின தொடரும் அடக்குமுறை பயன்பாடு போன்றவைகளால் பாகுபாடு நிகழ்கிறது. சில சமயங்களில் அவை நேரடியாக இருக்காது. உதாரணத்திற்கு சூப்பர்வைசர் ஒருவர் பெண் தொழிலாளர்களைச் சிறுமிகள் விபச்சாரிகள் என்று கூறுவது.

வேலையிடத்தில் பாலியல் பாலின பாகுபாடு அல்லது உடல் மன பாலியல்ரீதியான வன்முறையோடு நிகழ்த்தப்படுவது ஆகும். இந்த வகையில் பாலின வன்முறையில் இருந்து வெளியேறும் முன் தொழிற்சாலையில் இருக்கும் குறைதீர்க்கும் குழுவிற்குப் புகார் அளிக்கலாம்.

*மாநில பெண்கள் ஆணையத்தில் புகார் அளிக்கலாம்.
*தொழிற்சங்கங்களுடன் இணைந்து செயலாற்றலாம்.
*சட்ட வல்லுநர் துணையோடு இவற்றை எதிர்கொள்ளலாம் .
*இவற்றை எதிர்கொள்ளப் பல சட்ட முறைகள் உள்ளன.

சம ஊதிய சட்டம், மகப்பேறு சலுகை திட்டம், வேலை இடத்தில் பெண்கள் பாலியல் தொந்தரவு சட்டம், பாலியல் வன்முறையிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் போக்சோ, தொழிற்சாலை சட்டம் போன்றவை பெண்களுக்கு இந்த வகையில் உதவும்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. வேடந்தாங்கலுக்கு வைத்த வேட்டு-சுப்ரபாரதிமணியன்
 2. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியைச் சூழும் அழிவின் மேகங்கள்-சுப்ரபாரதிமணியன்
 3. கொரோனா காலத்துக் கொடுங்கதைகள்-சுப்ரபாரதிமணியன்
 4. கொரோனா: மாயன் காலண்டர் சொன்ன உலக அழிவா? - சுப்ரபாரதிமணியன்
 5. ஒரு கிராம் வைரஸ் படுத்தும் பாடு- சுப்ரபாரதிமணியன்
 6. 'டீ ஷர்ட்’களாக மாறும் தண்ணீர் பாட்டில்கள்- சுப்ரபாரதி மணியன்
 7. தகியாய் தகிக்கும் பூமி- சுப்ரபாரதி மணியன்
 8. எழுத்தாளனும் காய்கறியும்—சுப்ரபாரதிமணியன்
 9. பசுமை வியபாரம் : சுப்ரபாரதிமணியன்
 10. புது அகதிகளின் உலகம் - சுப்ரபாரதிமணியன்
 11. பொதுப் பள்ளிக்கல்வியும், பாடாய்படுத்தும் தொடக்கக்கல்வியும் – சுப்ரபாரதிமணியன்
 12. குழந்தைத் திருமணம்: பாதிக்கப்படும் பெண் குழந்தைகள் - சுப்ரபாரதிமணியன்
 13. வங்கதேசப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி - சுப்ரபாரதிமணியன்
 14. டாக்கா நகர பெண்களின் குரல்களைக் கேட்டோம்
 15. பாலியல் கொடுமைகளின் நூறு முகங்கள்