திக்குத் தெரியாத உலகில்

ஆறாவது பிரளயம் எப்போது ?

கொரானா மிரட்டல்தான்  வேறென்ன?

அப்படியா?

கொரானாதான் ஆறாவது பிரளயம் என்று நம்பும் கட்சியினர் அதிகரித்து வருகிறார்கள் .

கல்கியின் பத்தாவது அவதாரம் பற்றிக்கூட பலர் தீவிரமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.2012 இப்போது மறுபடியும் என்று அவர்களே சொல்லுகிறார்கள் .

வட அமெரிக்காவின் மெக்சிகோ நகரிலுள்ள புராதனமான மயன் நாள்காட்டியின்படி, உலகம் 2012இல் அழிந்து விடும் என்று கூறினர். மயன் நாள்காட்டியின் பல கணிப்புகள் நடந்துள்ளதாகவும் சிலர் வாதிட்டனர். 2012லிருந்து தப்பித்தோம் .

2012 என்றத் திரைப்படத்தில் ஒரு காட்சி: உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்டு ஒரு சிறு குன்றாக தண்ணீருக்கு மேல் நிற்பதையும் அதன்போது ஆபிரிக்காவில் வேறொரு மலை உருவாகி அதுவே அப்போதைய உலகின் உயர்ந்த சிகரம் என்றும் சொல்கிறார்கள் அதில் .. திரைப்படத்தில் கப்பலில் இடம் பிடித்து தப்பிப்பிழைப்பவர்கள் குன்றாகக் குறுகிப்போய் நிற்கும் எவரெஸ்டை தமது கப்பலில் பார்வையிட்டுச் சுற்றித்திரிவார்கள்

முந்தின ஐந்து வகையான பிரளயங்கள், கல்கி பற்றி…….

உலக முடிவைப் பிரளயம் என்று சைவம் சொல்லுகின்றது.. நைமித்திக பிரளயம்; அவாந்தர பிரளயம்; மத்திம பிரளயம். மகா பிரளயம் போன்றவை அதில்.

கலியுகம் மகாபாரத யுத்தம் முடிந்து கிருஷ்ண பரமாத்மா இவ்வுலக வாழ்வை நீத்த பின்னர் கி.மு. 3101 பெப்ரவரி மாதம் பதினேழாம் திகதி தொடங்கியது. ஆகவே கலியுகம் முடிய இன்னமும் நான்கு இலட்சத்து இருபத்தாறாயிரத்து எண்ணூற்று எண்பத்தெட்டு வருடங்கள் உள்ளன. இந்த கலியுகம் முடியும் தறுவாயில் விஷ்ணுவின் கல்கி அவதாரம் நிகழும். அவர் விஷ்ணுயசிரயன் (விஷ்ணுயசஸ்) என்னும் அந்தணனுக்கு மகனாக சாம்பலம் என்ற கிராமத்தில் பிறப்பார். மீண்டும் தர்மத்தை நிலை நிறுத்துவார். ஆனால் உலக முடிவு வராது. இந்த கலியுகம் முடிய இருபத்தொன்பதாவது சதுரயுகத்தின் முதலாவதுயுகமான கிருத யுகம் மீண்டும் தொடங்கும். இவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக எழுபத்தொரு சதுர்யுகங்களும் கழிந்த பின்னர் மன்வந்தர முடிவில் ஒரு பிரளய அழிவு உண்டாகும். அது எமது பூலோகத்துக்கு மட்டும் நிகழ்வது. பூலோகம் என்பது பூமி மட்டும் அல்ல; எமது சூரிய குடும்பம் உள்ளிட்ட இரண்டாயிரம் மில்லியனுக்கு மேற்பட்ட சூரிய குடும்பங்களை உடைய எமது ஆகாயகங்கை என்னும் இந்தப் பால்வீதியில் உள்ள அத்தனை அண்டத்தொகுதிகளும் இந்தப் பிரளயத்தில் அழியும். இதுவே நாம் வாழும் எமது உலகின் முடிவுக்காலமாகும். இவை யாவும் ஒரு கிருத யுக காலம் அதாவது பதினேழு இலட்சத்து இருபத்தெட்டாயிரம் வருடங்கள் நீருள் அமிழ்ந்திருக்கும். ஆன்மீகமற்ற மக்கள் உலகம் அழியப் போகிறது என்பதை கேள்விப்படும்போது, எவ்வளவு புலனின்பங்களை அனுபவிக்க முடியுமோ அவ்வளவு அனுபவிக்க வேண்டும் என்று துடிக்கிறார்கள். நிறைய குடிப்பதும், நிறைய உண்பதும், சுகிப்பதுமாக இருந்து அழிவை எதிர்கொள்கிறார்கள். அதைப் போலவே கொடிய நோய் ஏற்பட்டு எப்படியும் இறந்து விடுவோம் என்ற கட்டத்திலிருப்பவர்களும், சொத்தை பங்கிடுவதிலும் உண்பதிலும் கையில் தொலைக்காட்சி பெட்டியின் ரிமோட் கன்ட்ரோலை வைத்து திரைப்படங்களைப் பார்த்து சுகிப்பதிலும் இருக்கிறார்கள்  “ (கீதா கோவிந்த தாஸி ) என்றார்கள் முன்பே .

கலியுகம் என்பது ஒட்டுமொத்தமாக நான்கு லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள் என்று கூறப்படுகிறது. அதில் 5000 வருடத்துக்கு முன்பாக தான் கலியுகம் ஆரம்பித்திருக்கிறதாம் .அதனால் இந்த பூமியில் கல்கி அவதரித்து அழிப்பதற்கு இன்று சில லட்ச வருடங்கள் ஆகும் என்ற கதையை நம்பும் பெரும் மக்கள் தொகையினர் இந்தியாவில் இருக்கிறார்கள் .

அதற்குள்  2012, மயன் காலண்டர், கொரானா குத்தல் என்று மறுபடியும் தொடர்கிறது.

புதிய வைரஸ்களால்  இயற்கையின் சூழல் சங்கிலி அறுபட்டு வருகிறது

மனிதன் இயற்கையுடன் சேர்ந்து இணைந்தே வாழ்க்கையை ஓட்டுகிறான் அவனுக்கான தேவைகள் இயற்கையிடம் இருக்கின்றன. மொழி,  பண்பாடு பழக்க வழக்கம் எல்லாம் அவன் வாழ்கிற இயற்கை சூழலைச் சார்ந்தே வளர்கிறது.

பயோடைவர்சிட்டி -உயிர்ப் பன்மயம் என்பது -பூமியில் வாழும் உயிரினங்களைப் பற்றியது. அந்த உயிர்ப் பன்மயத்துடன் மனிதர்களின் வாழ்க்கையையும் இணைந்து இருப்பதை உயிர் பண்பாட்டு மையம் பயோ கல்சரல் டைவர்சிட்டி  என்கிறார்கள்.

பின்னால் சொல்லப்பட்டதை மூன்று பகுதிகளாக பிரிக்கிறார்கள் அதில் பண்பாடும் மொழியும் கூட முக்கியத்துவம் பெறுகிறது

 1. பூமியில் சுமார் 100 லட்சம் வெவ்வேறு வகையான உயிரின வகைகள் இருக்கின்றனவாம் உயிரினங்களின் வேறுபாட்டை உயிரிக்கோளம் –பயோஸ்பியர் – என்கிறார்கள் .உயிரிப் பன்மயம் என்பதை உயிரினங்களுக்கு இடையில் உள்ளவித்தியாசங்களை குறிக்கிறது..  இதில் விலங்குகள்,  நுண்ணுயிர்கள்,  தாவரங்கள் அனைத்துக்கும் இடையே உள்ள வித்தியாசங்களை குறிப்பதாகும்
 2. ஒருவன் புழங்கும் மொழி அவன் இருக்கும் மதம், சாதி மற்றும் வாழும் சுற்றுச்சூழல் அவன் சார்ந்த இனம் போன்றவற்றின் அடிப்படையில் ஒருவர் பல பண்பாட்டுக் குழுவில் இருப்பார். பல்வேறு பண்பாடுகள் அனைத்தையும் உள்ளடக்கியது. எத்தினோஸ்பியர் – மனிதப் பண்பாட்டு கோணம் என்பதாகும் .வெவ்வேறு மனிதர்களுக்கு இடையே நிலவுகின்ற வெவ்வேறு பழக்கவழக்கங்கள், வெவ்வேறு வாழ்க்கை முறை, பேச்சு வழக்கு,  வெவ்வேறு உணவு முறை , வெவ்வேறு உடை,  வெவ்வேறு நம்பிக்கைகள் என இவையெல்லாவற்றையும் ஒரு சேரக் கொண்டது பண்பாடு.

பண்பாட்டு பன்மையம் என்பது மனிதர்களுக்கு இடையில் உள்ள வெவ்வேறு வித்தியாசங்களைக் கோடிடுகிறது.

 1. இந்த பூமி இதுவரை ஐந்து முறை பேரழிவைச் சந்தித்துத் தப்பியிருக்கிறது . கடைசியாக பேரழிவு நடந்தது பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு . இப்போது ஆறாவது பிரளயம் மனிதனின் செயல்களால் நிகழலாம் என்கிறார்கள் முன்பு.

இம்முறை கொரானா அவ்வகைப்பேரழிவே என்போர் பலர்.

முந்தின ஐந்து முறை பேரழிவும் இயற்கையாக நடந்தவை.  இம்முறை அழிவில் உயிரினங்கள் , பண்பாடும் மொழியும் இடம்பெற்றுள்ளன

கடந்த 50 ஆண்டுகளில் உலக மொழிகளில் 20% அழிந்திருக்கிறது.  பெரிய ஆதிக்க மொழிகளின் வளர்ச்சியில் சிறிய மொழிகள் அழிந்திருக்கின்றன .மொழி பண்பாட்டு அறிவு இயற்கையுடன் மனித விரிசலை ஏற்படுத்தி சுற்றுச்சூழல் அழிவதற்குக் கொண்டு செல்கிறது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நாட்டு மாடுகளைக் காப்பது முக்கியக் கோரிக்கையாக இருந்தது . நாட்டு மாடுகளை இல்லாமல் ஆக்கி இறக்குமதி செய்யப்படும் மாடுகளால் கால்நடை வளத்தை நிரப்புவது சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்தும்.  இந்த ஒற்றைத் தன்மையை கால்நடையை  விடுத்து மொழி,  பண்பாடு,  இனம் பழக்கவழக்கம் என்று ஒற்றைத் தன்மையைத்  திணிப்பதால் உலக சமனற்ற நிலைக்குச் செல்லும்.

ஒற்றை மயமான உலகு ,ஒற்றை மயமான பொருளாதாரக் கொள்கை,  ஒற்றைமயமான அரசியல் போன்றவற்றின் தொடர்ச்சியாய்  எல்லாம் நிகழ்கிறது. அவை  இயற்கையைப் பாதிக்கிறது.  ஒற்றை மைய திணிப்பு காரணமாக ஒன்றின் அழிவு மற்றவற்றின் அழிவை வேகப்படுத்துவதைச் சொல்ல்லாம் .சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புகள் பண்பாடு,  மொழியை பாதித்துவிடுகிறது .

செம்மரக்காடோ  தேக்கு மரக் காடோ  மட்டும் இருப்பது காட்டின் அடையாளத்தை முழுவதும் அழித்துவிடுவது போலத்தான் பண்பாடு,  மொழி,  சுற்றுச்சூழல் விஷயத்திலும் நிகழ்கிறது.  எனவே பன்முகத்தன்மை எல்லா விஷயங்களிலும் தேவையாக இருக்கிறது .

கலப்பின மாடுகளை நம் நாட்டில் இறக்குமதி செய்வது ஆரம்பித்துவிட்டது  அபாரமானதாகும்.. கலப்பின மாடுகளின் பால் கறக்கும் கொள்ளளவு அதிகம் . பண நோக்கம் கருதி அந்த மாதிரி அந்நிய வகை கறவைப் பசுக்களை வாங்கினர் பலர். விவசாயத்தில் பலவகை இயந்திரங்கள் குறிப்பாக கதிரடிப்பு  இயந்திரம்,  டிராக்டர் போன்றவை உழவு மாடுகளின் அவசியத்தை இரண்டாம்பட்சமாகி விட்டது. நாட்டுப் பசுமாடுகள், நாட்டுக்காளை மாடுகள் பயன்பாட்டைத் திட்டமிட்டுக்  குறைத்து விட்டனர்.

கொங்கு பகுதியில் காங்கேயம் காளை,  தென்னகத்தில் கழுகுமலைக் காளைகள் , மயிலைக் காளை மச்சக்காளை,  கோம்பைக்  காளை என சுமார் 100 வகையான காளை  இனங்கள் பாரம்பரியமாக இருக்கின்றன.  ஆனால் சிந்தி,  ஜெர்சி  போன்ற கலப்பின மாடுகள் வந்து பாலைத் தரும் செயற்கை மாடுகளை அதிகரிக்கிறத் திட்டம் கால்நடை விவசாயத்தில் ஒற்றை தன்மையை நிர்பந்தப் படுத்துகின்றன

இந்தியா போன்ற பன்முக்க் கலாச்சாரம் கொண்ட நாட்டில் ஒற்றைத் தன்மையை நிர்பந்திப்பது சமநிலையைக் குலைப்பதை  மொழி பண்பாடு சார்ந்து செய்யப்படும் மாறுதல்கள் விளைவித்திருக்கும் சீர்குலைவை மக்களின் எதிர் விளைவுகள் மூலம் அறியமுடிகிறது.

சுற்றுச்சூழலை மாசுபடாமல் காப்பதும் உயிரின வேறுபாட்டைக் பாதுகாப்பதும் வெப்பச் சூழல் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துதலும் உயிர் பண்பாட்டு பன்மையத்தைக் காப்பாற்ற உதவும்.

பிற்போக்குத் தனங்களை நிராகரித்து ஆரோக்கியமான உயிர் பண்பாட்டுச்சூழல் உருவாக்க வேண்டியிருப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. பூமியில் மனித உயிர்கள் இயல்பாய் வாழ அந்த நீண்ட பாதை தெரிந்து கொண்டே இருக்கிறது.

அதற்கு மத்தியில் இயற்கையின் சூழல் சங்கிலி அறுபட்டு வருவது கொரானா தொற்றால் தெளிவாகவேத் தெரிகிறது.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. வேடந்தாங்கலுக்கு வைத்த வேட்டு-சுப்ரபாரதிமணியன்
 2. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியைச் சூழும் அழிவின் மேகங்கள்-சுப்ரபாரதிமணியன்
 3. கொரோனா காலத்துக் கொடுங்கதைகள்-சுப்ரபாரதிமணியன்
 4. ஒரு கிராம் வைரஸ் படுத்தும் பாடு- சுப்ரபாரதிமணியன்
 5. 'டீ ஷர்ட்’களாக மாறும் தண்ணீர் பாட்டில்கள்- சுப்ரபாரதி மணியன்
 6. தகியாய் தகிக்கும் பூமி- சுப்ரபாரதி மணியன்
 7. எழுத்தாளனும் காய்கறியும்—சுப்ரபாரதிமணியன்
 8. பசுமை வியபாரம் : சுப்ரபாரதிமணியன்
 9. புது அகதிகளின் உலகம் - சுப்ரபாரதிமணியன்
 10. பொதுப் பள்ளிக்கல்வியும், பாடாய்படுத்தும் தொடக்கக்கல்வியும் – சுப்ரபாரதிமணியன்
 11. குழந்தைத் திருமணம்: பாதிக்கப்படும் பெண் குழந்தைகள் - சுப்ரபாரதிமணியன்
 12. வங்கதேசப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி - சுப்ரபாரதிமணியன்
 13. டாக்கா நகர பெண்களின் குரல்களைக் கேட்டோம்
 14. பாலியல் கொடுமைகளின் நூறு முகங்கள்
 15. வேலையிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல், பாலின பாகுபாடு -சுப்ரபாரதிமணியன்