Discussion designs, themes, templates and downloadable graphic elements on Dribbbleதிரைத்துறை நண்பர்களோடு அவ்வப்போது ஏதாவது கதை விவாதங்களில் கலந்து கொள்ளும் சூழல் அமையும். ‘டிஸ்கஷன்’ எனும் அந்த விவாதங்கள் பற்றி தனியாக நாவலே எழுதலாம். இரண்டு பேர் பேசும்பொழுது கருத்துப்பரிமாற்றம் எனும் அளவில் இருக்கும் அந்த ‘டிஸ்கஷன்’ நான்கைந்து பேராக மாறும்பொழுது எப்போதுவேண்டுமானாலும் பிரளயம் ஏற்படலாம் எனும் சூழலை அமைக்கும். ஏனெனில் நான்கு விதமான கோணம் என்பது எல்லாம் தாண்டி அறுங்கோணம் வரை ஓடும். இத்தனைக்கும், வெகு சாதாரண ஒரு காட்சியாகத்தான் இருக்கும்.

“அதெல்லாம் நீங்க அப்படி மட்டும் சொல்லாதீங்க ஜி, ஆடியன்ஸ கொறச்சு எட போடுற வேலையெல்லாம் நமக்கு சுத்தமாப் பிடிக்காது”

“என்னத்தயாவது சொல்லாதீங்க ஜி, பாட்ஷால நக்மா பாம்பேல சின்னப்புள்ளையா இருந்து ஜோடியா வளர்ற வரைக்கும் ரஜினி அப்பிடியேவா இருப்பாரு, எவனாச்சும் கேட்டானா? அப்பிடியே நெருப்பு மாதிரி திரைக்கதை இருந்தா போதும் ஜி. லாஜிக்லாம் ஒரு அளவுக்குத்தான்”

இப்படி இருவர் மாறி மாறிப் பேச மூன்றாமவர் கூர்ந்து பார்துக்கொண்டிருப்பார், ஏன் அவர் ஒன்றும் சொல்லவில்லை என நினைத்துக்கொண்டிருக்கும்போதே “இதுக்குத்தான் சொன்னேன், எங்குட்டாவது வெளில போய்ப் பேசுவோம்னு, பாண்டிச்சேரி, கொடைக்கானல்னா இப்பிடி பேசுனதயே பேசாம இந்நேரம் இண்ட்ரவல் ப்ளாக் போய்ருக்கலாம்”

இப்படி திசைக்கொன்றாய் பேச்சு போகும்பொழுது, “நாங்க பேசாத பேச்சாடா” என நினைக்கும் எதேனும் ஒரு மூத்த உதவி இயக்குநர், ஆட்காட்டி விரலையும் கட்டை விரலையும் அளவாக சைகை காட்டி “ஒரு டீயப்போட்டு வருவமா” என கூட்டத்தைக் கலைத்துவிடுவார்.

25 Relationship Red Flags To Look Out For - Ouch Galleryஅன்று அப்படித்தான், விவாதம் நடுவில் விதண்டவாதம் ஆகி மீண்டும் விவாதமாக சூடு பிடித்தது. விசயம் இதுதான், நாயகன் எவ்வளவு முயற்சி செய்தும் நாயகி சட்டை செய்ய மறுக்கிறாள். மீண்டும் இனி அவர்களுக்குள் காதல் எனும் சொல்லிற்கே இடமில்லை என்கிறாள்.

அவளை நாயகன் பக்கம் எப்பிடி மீண்டும் கவனம் திரும்பச் செய்வது.

“எதற்கும் சட்டை செய்யாத, கலங்காத, சலனமே இல்லாமல் இருப்பவர்களைக் கூட கோவமும் மூர்க்கமும் அழுகையுமாக மீண்டும் வந்து பேசச் செய்யக்கூடிய வலிமை, Possessiveness எனப்படும் ‘தனதேயான உணர்வு’ எனும் பதத்திற்கு உண்டு என்றேன்.

நான்கில் இரண்டு பேர் ஏற்க மறுத்தனர்.

“அதெல்லாம் ஒரு மேட்டரா ஜி, அவனே வேணாம்னு போய்ட்டா அவ, அப்பறம் அவன் மேல எப்பிடி பொசசிவ் வரும்?”

அதற்கு இன்னொருவர் “அட ஆமாப்பா, இன்னைக்கு பாதி சண்டை இதுனாலதான் என் ஆளுகூட, அத ஏன் லைக் பண்ண, இத ஏன் ஷேர் பண்ண, அவ எதுக்கு இப்பிடி கமெண்ட் பண்றான்னு”

உண்மைதான். ஆனால் நிரந்தரமாகப் பிரிந்துபோய்விட்ட பிறகு கூட இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள், எவருடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என எட்டிப்பார்க்க வைக்கும் மனம் பெரும்பான்மையினருக்கு உண்டு.

நிரந்தரப் பிரிவிற்கே அப்படி எனில், சிறிய ஊடல் எல்லாம் எம்மாத்திரம்.

அதனால்தான் நிறைய திரைப்படங்களில் அப்படியானக் காட்சியை வைத்து எளிதாக முடிவிற்கு கொண்டு வந்துவிடுவார்கள் என விளக்கினேன்.

பாய்ஸ் படத்தில்  அவ்வளவு முயற்சிகள், உருக்கங்கள் என எல்லாமும் செய்தாலும், நாயகன் செய்த தவறை மன்னிக்க மனம் வராமல்  இறுதிக்காட்சியில் நீதிமன்றத்தில் விவாகரத்திற்கு தயாராகும் நாயகி, அங்கே வேறு ஒரு பெண்ணுடன் நாயகன் சிரித்துப் பேசுவதைப் பார்த்ததும் பொசுபொசுவென பொங்கி, அவனிடம் சண்டைக்குப்போய் சுபம் என முடியும். கிளாஸிக் வகைப் படமான ஆண்பாவத்திலும் இப்படியான காட்சி, பாண்டியராஜனுக்கு பெண் வேடம் போட்டு பேசிக்கொண்டிருக்கும் பாண்டியனைப் பார்த்ததும், அப்பா தான் முக்கியம் எனப் போன சீதா ஓடி வந்து பாட ஆரம்பிதுவிடுவார். குருசிஷ்யனில் பொம்மையை வைத்து கெளதமியை வழிக்கு கொண்டுவரும் ரஜினி  என ஆரம்பித்து சமீபத்தில் வந்த

லவ் டுடே படத்தின் உருட்டு உருட்டு வரை என அமைந்த காட்சிகளின் பட்டியல் மிகப் பெரியது.

இந்த பொசசிவ் என்பதன் அளவுகள் மீறும்பொழுதும் மாறுபடும் பொழுதும் அது வேறு வகையான பிரச்சனையாக மாறுகின்றன. ஏனெனில் பொசசிவிற்கும் நம்பிக்கைக்கும் இடையில் நூலிழை எல்லாம் இல்லை பெரிய வேறுபாடு இருக்கிறது. அடிப்படை நம்பிக்கை இருக்கும் இடத்தில் பொசசிவ்கள் சிறிய ஊடல்களாக மாறி பின்னர் கூடி முயங்கப் போய்விடுவர். அதிலும் ஆண் தன் இணையிடம் காட்டும் இந்த ‘என் உடமை’ எனும் காரணத்தால் பலர் பிரிவை நோக்கிப் போயிருக்கிறார்கள். பெண் காட்டும் பொசசிவ்கள் வேறு வகை. வள்ளுவர் சொல்லும் யாருள்ளித் தும்மினீர் வகைகள்.

இப்போது ஓரளவு விவாதம் ஒருமனதாக இந்த பாயிண்ட் நல்லாருக்கே ஜி, எனும் கோணத்திற்குள் புகத் துவங்கி இருந்தது. ஆனாலும் இதைவிட இன்னும் பெரிய விசயமாக ஏதேனும் என்று ஒருவர் இழுக்க,

“ஏங்க, கோவலன் ஏன் செத்தான்னு சொல்லுங்க பாப்பம்”

“அது , ராணியோட சிலம்பத் திருடிட்டான்னு தப்பா தண்டனை குடுத்து, அதான”

சிரித்தேன்.

“ஊழ்வினையோ என்னமோ சொல்வாங்களே பாஸ்”

Silappadikaram - Post Sangam Literature - Ancient India History Notes“பொசசிவும்  ஒரு காரணம்னு சொன்னா நம்புவீங்களா? இளங்கோவடிகள் அப்பிடித்தான் சொல்றதா எனக்குத் தோணுச்சு”

மூத்த உதவி இயக்குநர், “தெளிவா சொல்லுங்க பாஸ், நல்லாருக்கே இந்த மேட்டர், மாதவியோட பொசசிவா? எதுவும் பொன்னியின் செல்வன் நந்தினி மாதிரி?”

“அட அதெல்லாம் இல்ல”

என விளக்கினேன்.

அதாவது, கோவலன் அங்கே பொற்கொல்லனிடம் போய் எவ்வளவு கிடைக்கும் என கண்ணகியின் சிலம்பைக் காட்டி விசாரித்தான் அல்லவா, பொற்கொல்லனும் கோவலனை மாட்டிவிடலாம் என கோவலனிடம் பேசி அங்கேயா அமரச்செய்துவிட்டு அரண்மனை நோக்கி வந்த அதே வேளையில்,

அரண்மனையில் என்ன நடந்துகொண்டிருந்தது என்றால்,

அரணமைனை கூடத்தில் பாண்டிய மன்னனும் ராணியும் அமர்ந்திருக்க அவர்கள் முன்னர் நடனமும் பாடலும் அரங்கேறிக்கொண்டிருந்தது.

அழகான பெண்களின் ஆட்டமும் பாட்டும் கண்ட மன்னன் தன் அருகில் ராணி அமர்ந்திருப்பதை மறந்து, அந்த நடனத்தைப் பார்த்து சற்று அதிகப்படியாக ரசித்திருக்கிறான்.

மன்னர் இப்படித் தன் கண் முன்னால் வேறு பெண்களை ரசிக்கிராறே எனும் பொசசிவ் வர, பாதி நிகழ்ச்சியில் சட்டென எழுந்து போகிறார்.

அதைப்பார்த்துப் பதறும் பாண்டியனுக்குத் தான் செய்த செய்கை உடனே புரிந்துவிட, ராணியின் பின்னால் ஓடுகிறான், என்ன ஆனது ஏது ஆனது என அவளை சமாதனம் செய்துகொண்டே பின்னால் நடக்கும்போது,

ராணி, பெண்கள் ஈராயிரம் ஆண்டுகளாக இன்றுவரை சொல்லும் அதே காரணத்தைச் சொல்கிறாள், “தலைவலி”

மன்னருக்கு சகலமும் புரிந்துவிட, சமாதானம் செய்யும் நோக்கில் பதற்றமாக இருக்கும்பொழுது, மிகச்சரியாக வாயிற்காவலன் வந்து “ராணியின் சிலம்பைத் திருடியவனைப் பிடித்துவிட்டோம்” என்றதும்

ராணியின் கோவத்தால் சலனத்தில் இருந்த மன்னர், தன் வாழ்வில் முதன்முறையாக, எதையும் ஆராயாமல், யோசிக்காமல், “கொன்று கொணர்க” என்று ஆணையிடுகிறான்.

இதை  ‘வினைவிளை காலம்’ என்கிறார் இளங்கோவடிகள்.

வியப்பாக இருக்கிறதல்லவா? எனக்கும்தான்.

“என்ன ஜி சொல்றீங்க, செம்ம” என Possessiveness எனும் பதத்தின் வீரியம் உணர்ந்து அதன்படியே காட்சியாக வைக்கலாம் என முடிவெடுத்து, அப்போதைய டிஷ்கசன் எனும் விவாதம் முடிந்தது.

வெளியே டீக்குடித்துக்கொண்டிருக்கும்போது, மூத்த உதவி இயக்குநர்,

“டோட்டலா வேற மாதிரி ஆகிருச்சே சிலப்பதிகாரமே நீங்க சொன்ன இந்த சீனக் கேட்டதும்” என்றார்.

“புரியலண்ணே”

“இல்ல, ஊழ்வினை, மாதவி,கண்ணகினு போகுமே, ராணியோட பொசசிவ்ல வந்து முடிச்சு போட்டுட்டீங்களே, அதான் யோசிக்கிறேன்”

“இத இப்படி யோசிங்க, மாதவிய பாதிலயே அத்துவிட்டு எதுவுமே சொல்லாம வந்துட்டான்ல கோவலன். மாதவி ஒரு ஆடல் மகளிர் தான, அந்தப் பாவம், அந்த ஊழ்வினைதான், மதுரைல ஆடிக்கிட்டு இருந்த ஒரு ஆடல் பெண்ணோட ரூபத்துல வந்து மன்னனோட சலனத்துக்கு காரணமாகி இப்பிடி ஆகிருக்கு, இப்ப சொல்லுங்க ஊழ்வினை வந்துருச்சுல்ல”

குடித்துக்கொண்டிருந்த டீயை நிறுத்தி விட்டு என்னைப் பார்த்தார். அப்பார்வையில் அவ்வளவு வியப்பு நிறைந்திருந்தது.

ஆம், சங்கத்தில் பாடப்படாத பாடு பொருள்களே இல்லை.

 

அந்தப்பாடல்

 

‘கூடல் மகளிர் ஆடல் தோற்றமும்

பாடல் பகுதியும், பண்ணின் பயங்களும்

காவலன் உள்ளம் கவர்ந்தன  என்று தன்

ஊடல் உள்ளம் உள் கரந்து ஒளித்துத்

தலைநோய் வருத்தம் தன்மேல் இட்டுக்

குலமுதல் தேவி கூடாது ஏக

….

….

எனப் போகும் பாடல்.  ‘ காவலன் உள்ளம் கவர்ந்தன – இங்கே காவலன் என்பது கோப்பெரும் தேவியின் காவலன், மன்னர்.

சிலப்பதிகாரம், பாடல் எண் : 135. 

இளங்கோவடிகள்.

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 16: தெறூஉம் தெய்வம் - நர்சிம்
  2. மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 15: அளியள் - நர்சிம்
  3. மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 14 : முலையிடைப் பள்ளம் பெருங்குளம் ஆனதே - நர்சிம்
  4. மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 13 : உன் சும்மா அழகையே கண்ணால் தாண்டுதல் அரிய காரியம். - நர்சிம்
  5. மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 12. பையுள் மாலையில் எமியமும் தமியரும். – நர்சிம்
  6. மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 11. “நெசமாவா சொல்ற?” - நர்சிம்
  7. மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 10: அறத்தொடு நிற்றல் - நர்சிம்
  8. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 9 : செங்காற் பல்லியும் உகிர்நுதி ஓசையும். - நர்சிம்
  9. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 8 : ளாக்கம்மா கையைத் தட்டு - நர்சிம்
  10. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 6 : நீயலேன் – நர்சிம்
  11. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 5 : பூ உதிரும் ஓசை - நர்சிம்
  12. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 4 : பூவிடைப்படினும் யாண்டு கழிந்தன்ன – நர்சிம்
  13. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 3 : ரோஜா மொக்கும் குருவித்தலையும். - நர்சிம்
  14. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 1 : வில்லோன் காலன கழலே - நர்சிம்