ஏழெட்டு மாதங்களுக்கு முன்னர், ஒரு மதியப்பொழுதின் சலனமற்ற அமைதியைக் குலைக்கும் வண்ணம் பெரிய வண்டி வந்து நிற்கும் ஓசைக் கேட்டது. என்னவென்று வெளியே எட்டிப்பார்த்தால், பிரம்மாண்ட ராட்சச உருவில் கட்டிடத்தை இடிக்கும் வண்டி.
பஞ்சம் பிழைக்க, சொந்த ஊரைவிட்டு சென்னை போன்ற பெருநகரத்தில் இத்தனை ஆண்டுகளாக, ஊரில் இருப்பதை விட அதிக வசதிகளோடும் மகிழ்ச்சியோடும் வாழ்ந்து வந்தாலும் ஒரு சிறிய சிக்கல் உள்ளது, அது இப்படி தெருவில், பிரம்மாண்ட அடுக்கக வளாகங்களில், தினமும் பார்த்து சிரித்துக்கொண்டாலும் எதிர்படும் நபர்களின் பெயரோ பிரச்சனைகளோ அன்றாடமோ தெரியாமலே இறுதிவரை இருந்துவிட்டுப் போய்விட முடியும் என்பது தான். அதில் என்ன சிக்கல் என்கிறீர்களா. திடீரென இரவில் ஏரியா குரூப் வாட்சப்பில் இன்னார் இறந்துவிட்டார் என்று பெயரையும் வயதையும் மட்டும் போட்டுவிடுகிறார்கள். நாம் யாரையெல்லாம் இறந்துவிட்டாரே பாவம் என நினைக்கிறோமோ அவர்கள் எல்லாம் வரிசையாக ஒரு டவுசரைப் போட்டு அதிகாலையில் தெருவில் நடைபயிற்சிக்கு கிளம்பி, என்றைக்கும் இல்லாததாய் நம்மைப் பார்த்து ஒரு புருவ உயர்த்தல், ஒரு புன்சிரிப்பு வேறு. ‘அப்ப செத்தது இவர் இல்லையா’ எனும் நம் மனக்குரலைக் கேட்காமல் கடந்துவிடுவார்கள், பாவம்.
அப்படித்தன இத்தனையாண்டுகள் எதிர்வீட்டில் இருந்தாலும் அந்த முதியவர் இப்படி திடீரென தன் தனிவீட்டை இடித்து நான்கைந்து வீடுகள் கொண்ட அடுக்ககமாக கட்டப்போகும் திட்டமே இந்த இடிக்கும் வண்டி வந்து நிற்கும் வரை. தெரியவில்லை, விசாரித்ததில் அவருக்கே இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் தெரியும் என்றும், வாரிசுகள் வெளிநாட்டில் இருந்து இந்தக் கட்டுமான நிறுவனத்தோடு உடன்படிக்கை செய்துகொண்டதாகவும் வேலை முடியும் வரை தந்தை தாயை ஊருக்கு வெளியே இருக்கும் காப்பகத்தில் தங்க அனைத்து வித வசதிகளையும் செய்துகொடுத்துவிட்டதாகவும் கண்கள் மினுங்க சொல்லிக்கொண்டிருந்தார்.
போகட்டும். முதலில் நிலைப்படி, பிறகு கதவுகள், ஒரு பெரிய கண்ணாடி என சுற்றுச்சுவரில் சாய்த்துவைத்துவிட்டு, மொத்தமாக இடித்துவிட்டார்கள். ஒரு மூலையில் கிணறு. சுற்றுச்சுவர் என காலியாகக் கிடந்தது எதிர்மனை..
மீண்டும் கட்டி எழுப்பத் துவங்கினார்கள்.
நாள் ஒன்றில் இருந்து இந்த இடித்தல், அகற்றல், தோண்டல் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர், முதலில் கரடுமுரடாகத் தெரிந்தார். நிறைய வேலை ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தாலும் இவர் மட்டும் அங்கேயே இருந்தார். மேஸ்திரிக்கு கீழே, வேலையாட்களுக்கு மேலே எனும் இடைப்பட்ட வேலை அவருக்கு.
பகலெல்லாம் வேலை. இரவில் தனியாக அந்த கல் மண் இடிபாடுகளில் கொஞ்சமாய் ஒதுக்கி, படுத்துக்கொள்வார். இருளான அந்த இடத்தில் அவர் முகத்திற்கு நேராக மட்டும் மொபைல் வெளிச்சம் அடிக்கும். அவ்வளவு பெரிய வீடு இருந்த இடம் இப்போது இந்த ஒரு சிறிய வெளிச்சப்புள்ளியோடு இருண்டு கிடந்தது.
ஓரிரு வாரங்களில் காலையில் நான் வண்டியை எடுக்கும்போது சட்டென வந்து சிரித்து பின்னால் வரலாம் வரலாம் எனும்படியான செய்கைகள் என என் சினேகப்பரப்பிற்குள் நுழைந்தார்.
கனிகள், திண்பண்டங்கள் என ஏதேனும் வாங்கி வரும்போது, எதிர்பட்டால் தருவேன்.முதலில் தயங்கி பிறகு வாங்கிக்கொண்டு, பிஸ்கெட் இருந்தா குடுங்க சார் என வாங்கி அவரோடு இருக்கும் நாய்க்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு, வேலைகளுக்குள் புகுவார்.
ஆழம் தோண்டி, அடித்தளம் அமைத்து கட்டிடம் மெல்ல எழத்துவங்கியது. நட்பும்.
ஒரு ஞாயிறு மதியத்தில் வேலையாட்கள் யாருமற்ற வேளை. நன்றாக சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தவன் கண்களில் பட்டார்.
“சாப்டாச்சா?” என்ற என் கேள்விக்கு,
“போகணும் சார், வெய்யில்ல போகணுமேன்னு இருக்கு” என்றவர், சட்டென நெகிழ்ச்சியாய், தன் குடும்பம் பற்றிப் பேச ஆரம்பித்தார்.
“என்ன இருக்கோ இல்லையோ, வயிறார சாப்பாடு போட்ருவா மகராசி”
தொலைவு என்பது பெரும் துயரம். தொலைந்த பிறகே தேடல்கள் நிறையும். தொலைவான இடத்திற்கு வந்தபிறகே அருகில் இருந்தோர் அருமை புரியும். அப்படித்தன இருந்தன அவருடைய சொற்கள்.
இந்த இரண்டு மூன்று மாதத்தில் ஓரமாக சிறிய குடிசை ஒன்றைப் போட்டு வேண்டிய பொருட்களோடு இருந்தது அவருடைய அறை.
“பேசாம இங்க கூட்டிட்டு வந்துருர வேண்டியது தான அவங்களையும்”
பீடியின் நெருப்பு விரலைச் சுட்டதுபோல் பதறினார். பீடியை ஓரமாகப் போட்டு அணைத்துவிட்டு
“அதெப்பிடி சார், நாம இந்த கல்லுலயும் மண்ணுலயும் கெடந்து படுற கஷ்டமெல்லாம் நம்ம கூடயே போகட்டும் சார். அவ பிள்ளையோட நிம்மதியா நல்ல தரையில படுத்து தூங்கட்டும் பாவம்”.
சரி என்றே பட்டது.
“இந்தா இப்பிடி வாங்கிவச்ச சாப்பாட எப்பிடி மூடி வச்சு சாப்டாலும் நறநறனு கல்லு மண்ணு படிஞ்சுருது பாருங்க” எனக் காட்டினார். கொடுமையாக இருந்தது.
“அதான் அப்பப்ப போய்ட்டு வந்துர்றது சார். காசக்கொடுத்துட்டு, வேணுங்குறத வாங்கிக்கன்னு சொல்லிர்றது, நம்ம படுற கஷ்டம் அவங்களுக்கு எதுக்கு சார்”
பேசிக்கொண்டே சிமெண்ட் துகள்களை எல்லாம் லேசாக ஒதுக்கிவிட்டு, நல்ல சோறை அவர் காலைத் தோய்த்த நாய்க்கு அளித்தார்.
”கொஞ்சம் பாத்துக்கோங்க சார் போய் சாப்ட்டு வந்துர்றேன்” என கிளம்பினார்.
அவர் படுக்கும் இடமும் சாப்பிடும் இடமும் கல்லும் மண்ணுமாக நெருட, கொஞ்சம் கொஞ்சமாய் பளிங்கு போல் அந்த அடுக்ககம் நிமிர்ந்து கொண்டிருந்தது.
பிரிவையும் தலைவனின் வருகையையும் எப்படி சங்ககாலப் பெண்கள் கையாண்டார்களோ அதேபோலத்தான் இப்போது இருக்கும் பெண்களும் கையால்கிறார்கள் என்று நினைப்பேன். இவரைப் பார்த்ததும் ஒரு சங்ககாலத் தலைவன் நினைவிற்குள் வந்தான்.
ஜெயமோகன் எழுதிய ஊமைச்செந்நாய் என்ற அற்புதமனா புதினத்தின் அந்தத் தலைப்பைக் கேட்டமாத்திரத்தில் நினைவிற்குள் வரும் சொல் “வேட்டச் செந்நாய்” என்ற குறுந்தொகைப் பாடல். இனி இந்த மனிதரும் மனதிற்குள் அந்த சங்கப்பாடல் தலைவன் போல் வந்து போவார்.
ஆம். அந்தத் தலைவனும் இவரைப் போலத்தான் சொல்லியவன். “பாலை நிலத்தில் வேட்டையாடும் செந்நாய், தரையில் குழிபறித்து நீர் அருந்திவிட்டுப் போகும். அந்தக் குழியில் மிச்சமிருக்கும் நீரில் காட்டு மல்லிகள் விழுந்து, அழுகிப்போய் மிதக்கும். அந்த நீரைப் பருகி வாழ்ந்திருக்க வேண்டிய சூழல் வாய்த்திருக்கும் ஒருவேளை என்னுடன் என் தலைவியும் இந்த பாலை நிலத்தில் இருந்திருந்தால், பாவம் அவள். எப்போதும் என் மனதில் இருப்பவள், இப்படி வந்து அவதிப்படாமல் இருப்பதே நல்லது,
அந்தப்பாடல் :
வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்
குளவி மொய்த்த அழுகற் சின்னீர்
வளையுடைக் கையள் எம்மொடு உணீஇயர்
வருகதில் அம்ம தானே ;
அளியளோ அளியள்என் நெஞ்சு அமர்ந் தோளே.
–சிறைக்குடி ஆந்தையார்.
குறுந்தொகை. பாடல் : 56
*கிளைத்து = கிளறுதல் ; மிச்சில் =மிஞ்சி இருப்பது ; குளவி=மலர் ; சின்னீர்=சிறிதளவு நீர்; அளியள் = இரங்கத்தக்கவள், பாவம்.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 16: தெறூஉம் தெய்வம் - நர்சிம்
- மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 14 : முலையிடைப் பள்ளம் பெருங்குளம் ஆனதே - நர்சிம்
- மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 13 : உன் சும்மா அழகையே கண்ணால் தாண்டுதல் அரிய காரியம். - நர்சிம்
- மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 12. பையுள் மாலையில் எமியமும் தமியரும். – நர்சிம்
- மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 11. “நெசமாவா சொல்ற?” - நர்சிம்
- மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 10: அறத்தொடு நிற்றல் - நர்சிம்
- மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 9 : செங்காற் பல்லியும் உகிர்நுதி ஓசையும். - நர்சிம்
- மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 8 : ளாக்கம்மா கையைத் தட்டு - நர்சிம்
- மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 6 : நீயலேன் – நர்சிம்
- மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 5 : பூ உதிரும் ஓசை - நர்சிம்
- மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 4 : பூவிடைப்படினும் யாண்டு கழிந்தன்ன – நர்சிம்
- மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 3 : ரோஜா மொக்கும் குருவித்தலையும். - நர்சிம்
- மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 2 : உயிரை வாங்கும் Possessiveness - நர்சிம்
- மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 1 : வில்லோன் காலன கழலே - நர்சிம்