அசைவறு மதி

இந்த பரபரப்பான சூழ்நிலைகளில் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமா அல்லது நிம்மதியாக இருக்கிறோமா?

ஒரு நண்பர் சொன்னார், கொரோனோ பயத்தைக்காட்டிலும் அது பற்றியச் செய்திகள் தான் பயத்தைக் கூட்டுகின்றன என்று. ஆதலால் தான் கேட்கிறேன், இந்தப் பரபரப்பானச் சூழ்நிலைகளில் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமா அல்லது நிம்மதியாக இருக்கிறோமா?

ஏனென்றால், நாம் மகிழ்ச்சியாக இருப்பதும் நிம்மதியாக இருப்பதும் இன்னொரு பொருள் சார்ந்து அல்லது இன்னொரு காரணியைப் பொறுத்து என நாம் வளர்க்கப்பட்டுவிட்டோம் அல்லது வளர்ந்துவிட்டோம். அப்படித்தானே?

ஒரு விசயம் நமக்கு நடக்கும்பொழுது அதன் மூலம் நாம் கற்றுக்கொள்ளும் கற்பிதங்கள் என்ன? நாமாக உணரும் தருணத்தை விட நமக்குச் சொல்லிக்கொடுத்தபடியே சில நேரம் உணர்வுகளை மாற்றிக்கொள்கிறோம். அல்லது நெடுநாளைய பழக்கவழக்கமாக சில நிகழ்வுகளைக் காண்கிறோம். தலை சுற்றுகிறது அல்லவா?

நேரா பேசிரலாம்..

நாம் சின்னப்பிள்ளையாக இருக்கும்பொழுதிலிருந்து பார்க்கும் ஒரு நிகழ்வை இப்பொழுது பார்க்கலாம். யானையின் வன்முறைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அல்லது குறும்புத்தனங்களை. ஒரு மரத்தை அப்படியே வேரோடு சாய்க்கும். அல்லது பிடுங்கி எறியும். ஒரு பெரிய காரைத் தன் தும்பிக்கையில் அடித்துத் தகர்த்தும். யானைக்கு அவ்வளவு வலிமை உண்டு. அதற்கு மதம் பிடித்திருக்கிறது அதனால் அப்படிச்செய்யும் என்பதை விடுங்கள். யானைக்கு அவ்வளவு வலிமை உண்டு. ஆனால் கோயில்களில் சர்க்கஸ் கூடாரங்களில் யானை அதன் வலிமைக்குச் சற்றும் ஒப்பில்லாத ஒரு சிறிய சங்கிலியால் கட்டி ஒரு சிறு கம்பியில் சுத்தி நிறுத்தியிருப்பர். யானை நினைத்தால் அந்தக் கம்பியைப் பிடுங்கி எறிந்துவிட்டு அதன் கொட்டகையைப் பெயர்த்துவிட்டு ஓடிவிடலாம் தானே. ஆனால் யானைகள் அப்படிச் செய்வதில்லை.

காரணம் என்னவென்று நினைப்பீர்கள்?

யானைகளின் மனம் அந்தச் சங்கிலியை முறிக்கமுடியாது என்று நம்புகிறது.சில யானைகள் சிறுவயதிலிருந்தே வளர்க்கப்படும்போது அந்தச் சங்கிலி அதன் கால்களில் கட்டப்பட்டிருக்கும். எப்போதோ முயற்சி செய்து பார்த்திருக்கும். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல யானை பெரியதாகியிருக்கும். சங்கிலி அப்படியே தான் இருக்கும். ஒரு விசயம் நெடுநாட்களாக நடக்கிறது என்பதற்காக நம் நம்பிக்கை எப்படி மாறுகிறது என்பதற்கு இது தான் உதாரணம்.

நாம் கற்றுகொள்ளும் கற்பிதமாக, நெடுநாட்களாக இது தான் நடக்கிறது என்ற கட்டப்பட்ட அல்லது பழக்கப்படுத்தப்பட்ட யானை போல் நம் மனதை வைத்துக்கொண்டிருக்கிறோம். மனதை நாம் அவ்வப்போது ஒரு காரை சர்வீஸ் விடுவது போல் முழுதாய் சுத்தீகரிக்கவேண்டும்.

ஒரு வண்டியை சர்வீஸ் விட்டால் என்னவெல்லாம் சொல்கிறார்கள்,

இன் ஜீன் ஆயில் பார்க்கிறார்கள்.

ப்ரேக் ஷீ பார்க்கிறார்கள்

செயின் தேய்மானம் பார்க்கிறார்கள்.

மேலும் இப்பொழுதெல்லாம் டெஃப்லான் கோட்டிங்க் என்று ஒரு ஆயிரம் ரூபாய்க்கு மொய் வைப்பார்கள்.

ஒரு வண்டிக்கே இவ்வளவு பகுமானம் பார்க்கிறோம். ஓர் இயந்திரத்திற்கு ஏன் இதெல்லாம் செய்கிறோம். வண்டியின் நெடுநாளைய ஓட்டத்திற்காக, அதன் பயனை நெடு நாட்களுக்குப் பெறுவதற்காக, ஒரு வண்டியின் உன்னதத்தை முழுதாய் பயன்படுத்துவதற்காக, பாதுகாப்பான பயணத்திற்காக.

எப்போதாவது பயணிக்கும் ஒரு வண்டிக்கே இவ்வளவு விசயங்களை மூன்று மாதத்திற்கு ஒரு முறை சோதித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லப்படுகிறோமே, நம் வாழ்நாள் முழுதும் நம்முடன் பயணிக்கும் மனதிற்கு நாம் என்னென்னலாம் சுத்திகரிப்பு வேலைகளை முன்னெடுக்கிறோம்.

*நம் மனதை எதை நம்பவேண்டும் எதை நம்பக்கூடாது என்று        பழக்கப்படுத்தியிருக்கிறோமா,

* எது எல்லாம் முடியாது என்று நம்புகிறதோ, அதை முடியும் என்று நம்பவைக்க மனதை எது தடுக்கிறது என்று ஆராய்ந்திருக்கிறோமா,

* சுக துக்கக் காலங்களில் மனம் என்னவெல்லாம் ஆகியிருக்கிறது என்று மனத்துடன் பேசியிருக்கிறோமா,

* மனம் எதிர்கொண்ட நேர்மறை எண்ணங்களுக்கு என்னென்ன விளைவுகள்    விழைந்திருக்கின்றன, அதே போல் மனம் எதிர்கொண்ட எதிர்மறை எண்ணங்களுக்கு என்னென்ன விளைவுகள் விழைந்திருக்கின்றன என்று பரிசோதித்திருக்கிறோமா,

* ஒரு மகிழ்ச்சி / வெற்றி  ஏற்பட்டால் அதற்கானக் காரணத்தையோ ,

ஒரு துயரம் / தோல்வி ஏற்பட்டால் அதிலிருந்து வேகமாக மீளத் தேவையானக் காரணிகளையோ நாம் மனதிற்கு இனம் காணச் சொல்லியிருக்கிறோமா..

இது எல்லாம் புதிது அல்ல. நாம் எப்போதாவது கடந்து வந்திருப்போம். ஏதாவது ஒரு காலகட்டத்தில் செய்திருப்போம்.

ஆனால் நண்பர்களே, நம் வாழ்வை ஒழுங்கானத் தகவமைப்புடன் வடிவமைக்க,  நமது வாழ்வியல் முறையை நம் நண்பர்கள் மற்றும் நமது அடுத்தத் தலைமுறையும் ஒரு பாடமாக கடைபிடிக்கும் படியாக மாற்றவேண்டுமென்றால் அதற்கானக் கடமைகளை நாம் எப்போதாவது ஒரு முறை மட்டும் செய்யக்கூடாது.

சிறந்த வாழ்வியல் முறை என்பது தொடர்ந்து நாம் நம்மை பழக்கப்படுத்திக்கொண்டிருக்கும் ஆரோக்கியமான உடல் நிலை மற்றும்  மனநிலையைச் சார்ந்தே அமைகிறது.

ஆரோக்கியமான மனநிலையைத் தக்கவைத்துக்கொள்வது ஒன்றே நம் நல வாழ்விற்கானச் சிறந்த முதலீடு ஆகும்.

ஓர் இயந்திரத்தின் உன்னதமான நெடுநாளைய பயன் களைப் பெற நாம் எந்தளவிற்கு முற்படுகிறோமோ அந்தளவில் பாதிகூட நாம் நம் மனநிலைக்காகச் செலவிடுவது கிடையாது. நமது நெடுநாள் ஓட்டத்திற்கு நல்ல உடல் நிலையும் வேண்டும். அதற்கு ஆயத்தமாக நல்ல  மன நிலையும் வேண்டும்.

கார்ப்பரேட் கம்பெனிகளிடம் SELF APPRAISAL என்று ஒன்று கேட்டு வாங்குவார்கள். மனிதவளத்துறை மூலமாக ஒவ்வொருவரின் மனநிலையையும் அவர்களது நடைமுறைகளையும் அலுவலகச் சாதனைகளையும் வைத்து மதிப்பிடுவார்கள்.

அது போன்ற சுய பரிசோதனை தான் மனதிற்கும் வேண்டும்.

அதைச் செய்கையில் தான் நாம் எதைச் செய்கிறோம் எதைச் செய்யவில்லை என்றுலாம் தோன்றும். அந்த மாதிரியானச் சோதனைகள் பார்ப்பதற்கு சிறு பிள்ளைத்தனமாகத்தான் இருக்கும். ஆனால் ஆரோக்கியமான மனநிலைக்கு அவை தான் வேண்டும்.

சில சுய பரிசோதனைத் திட்டங்கள்

* கடைசியாக சினிமா காமெடி தவிர்த்து எப்பொழுது சிரித்தீர்கள்.

அப்படியான நகைச்சுவையில் யாரையாவது ஏளனம் செய்யாமல் அந்த நகைச்சுவை இருந்ததா..

அப்படியானச் சிரிப்பைப் போல வேறொரு தருணம் எப்பொழுது நடந்தது என்று ஞாபகம் இருக்கிறதா..

* கோபப்படாமல் உங்களால் இருக்கமுடிகிறதா, உங்கள் துணையின் மீது , உங்கள் குழந்தைகளின் மீது, உறவினர் மீது, அலுவலக நண்பர்கள் மீது , யாரும் மீதும், யாருக்காகவும், எதற்காகவும் கோபப்படாமல் இருக்கிறீர்களா? உங்கள் கோபத்திற்கு உங்களுக்கு நியாயமானக் காரணம் இருக்கலாம். ஆனால் கோபம்? கோபம் ஒரு மனச் சலனம் தானே. அதை ஏற்றுக்கொள்வீர்களா?

* ஒரு நாளைக்கு உங்கள் அலைபேசி இல்லாமல் வெறுங்கையுடன் எவ்வளவு நேரம் அருகில் இருப்பவர்களுடன் பேசுகிறீர்கள்

* டி வி பார்ப்பது, படம் பார்ப்பது வீட்டு வேலை பார்ப்பது தவிர வேறு என்ன பொழுதுபோக்குகள் உங்களுக்கு இருக்கின்றன.

*வீட்டில் கரண்ட் இல்லாமல் , ஏசி வேலை பார்க்காமல் போன நேரம் தவிர்த்து எப்பொழுது உங்களுக்குக் கடைசியாக வியர்த்தது. அலுவலக வேலை வீட்டுச் சமையல் வேலை தவிர்த்து உங்களுக்கு உடற்பயிற்சியின் மூலமாக வியர்த்து இருக்கிறதா

* உங்கள் முன் ஒரு மன்னிப்பு கேட்ட நின்ற ஒருவருக்கு நீங்கள் அளித்த மறுமொழி யாது? மன்னிப்பு கேட்டவரிடம் மறுபடியும் அவரது தவறுகளைத்தான் பட்டியலிட்டீர்களா?

* கடைசியாக யாரைப் பாராட்டி இருக்கிறீர்கள், எதற்காக? அது வெறும் வாய்மொழியா இல்லை மனதார அமைந்ததா?

* கடைசியாக யாருக்கு நன்றி சொன்னீர்கள்? யாருக்காக? உங்களுக்கு உங்கள் மகன் எடுத்துவந்து கொடுத்த ஒரு தேநீர் கோப்பைக்காகக் கூட இருக்கலாம். ஆனால் சொன்னீர்களா? அப்படி கடைசியாக நீங்கள் சொன்ன வேறு வேறு நன்றிகளை ஞாபகப்படுத்தமுடியுமா?

* உங்கள் மீது தவறு என்ற போதும் , தவறு இல்லாதக் காரணத்திலும் ஒரு நெடிய மனக் கசப்பைத் தவிர்க்க நீங்கள் ஒரு மன்னிப்பு கேட்க முனைந்தது உண்டா? உங்களால் ஒரு மன்னிப்பைக் கேட்க முடிகிறதா?

இந்தப் பரிசோதனைத் திட்டங்கள் எல்லாம் ஏதோ அலாவுதீன் விளக்கில் தேய்க்கப்பட்டதில்லை. ஆனால் இந்தக் காரணிகளை நேர்மறையாக வாழ்வியல் முறையாக ஏற்றுக்கொண்டீர்கள் என்றால் பல அற்புத ஜீனி பூதங்கள் உங்களுக்காகப் பல அற்புதங்களை நிகழ்த்தக் கூடவே இருக்கும்.

அசைவறு மதி ஓர் அற்புதப் பூதம்….

 

 

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. கடைசியாய் எப்பொழுது முரண்பட்டீர்கள்? : பழனிக்குமார்
 2. "நல்லதை நினைப்போம், நல்லதே நடக்கும்" : பழனிக்குமார்
 3. "ஊட்டிக்குப் போகிறோம்..எப்படி ஆனாலும் போகிறோம்" -பழனிக்குமார்
 4. நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? நிறுவ முடியுமா?-பழனிக்குமார்
 5. யுவராஜ்ஜின் சவாலும், சச்சினின் அசைவறு மதியும்....பழனிக்குமார்
 6. தனித்துவமும், சுவாரஸ்யங்களும்-பழனிக்குமார்
 7. உங்கள் அக வயது என்ன?-பழனிக்குமார்
 8. குழந்தைமையிலிருந்து ஆளுமை -பழனிக்குமார்
 9. தோல்வி தரும் மகிழ்ச்சி-பழனிக்குமார்
 10. கொரோனோ: எல்லோரும் வாழ்வோம் - பழனிக்குமார்
 11. பிரச்சினைகளைக் கண்டு அச்சப்படாதீர்கள் - பழனிகுமார்
 12. நமக்கு நேர்கின்ற வினைகளுக்கு நாம் எதிர்வினை ஆற்றுவதில் கவனம் வேண்டும் - பழனிக்குமார்
 13. உங்கள் முன் நீங்கள் அவிழ்க்கும் நிகழ்தகவுகள் யாவை? - பழனிக்குமார்
 14. ஒரு ‘தீ’க்கு இன்னொரு தீ தேவைப்படாது - பழனிக்குமார்
 15. 'எண்ணங்களே நம் வாழ்வைக் கட்டமைக்கின்றன' - பழனிக்குமார்
 16. இந்தப் பிரபஞ்சத்தின் அலைக்கு அளப்பரியச் சக்தி இருக்கிறது - பழனிக்குமார்
 17. ஒரு பொருள் அசைந்துகொண்டே இருப்பதில்தான் அதன் உயிர்ப்பு இருக்கிறது -பழனிக்குமார்