5.அசைவறு மதி

தன்னம்பிக்கைப் பயிற்சியாளர்களிடம் எப்போதுமே ஒரு தாத்தா காலத்து ஃபார்முலா இருக்கும். புரியுறமாதிரி சொல்லனும்னா ஒரு டெம்ப்ளேட்.

அவங்களே கண்டுபிடிச்ச மாதிரி ஒரு கதைய சொல்வாங்க. சொல்லிமுடிச்சுட்டு இந்தக் கதைமூலமா என்ன தெரிஞ்சுக்கிட்டனு கேட்பாங்க. கூட்டத்துல அவனவன் தனக்குத் தெரிஞ்ச நீதிகளை சின்னகவுண்டர் விசயகாந்தாட்டம் தோளில் துண்ட போட்டுக்கிட்டு சொல்வாங்க.

அதுல சில, ‘க் ங் ச்’ போட்டு தன்னம்பிக்கைப் பயிற்சியாளர் சில தத்துவ நீதிக்கதைகளைச் சொல்வார். அப்படி சில ‘இந்தக் கதை மூலமா நீ என்ன தெரிஞ்சுக்கிற’ன்ற டெம்ப்ளேட்டுகளைப் போட்டால் தான் தன்னம்பிக்கைத் தொடர் படிக்கிறவங்களுக்கும் எழுதுறவங்களும் அது பூரணமாக இருக்கும் போல. அந்த ஸ்டைல்லுல வாங்களேன் ஒரு கதைக்குப் போகலாம்.

ஒரு பெருநகரத்தின் புறநகர் பகுதில ஒரு கல்லூரி. சில விடுதி நண்பர்கள்.
வகுப்பு நண்பர்கள் தவிர விடுதி சார் நண்பர்கள் என்பது தனி ரகம். வேறு வேறு துறை நண்பர்கள் ஒரே அறையில் இருப்பார்கள். அப்படி ஒரு குழு.

கல்லூரி நண்பர்கள் என்றாலே பகிர்தல் என்பது எளிதாக இருக்கும். சீப்பு, பணம், ஆடை, பை, புத்தகம், பேனா இப்பொழுது கொஞ்சம் முன்னேற்றமாய் அலைபேசி, ஏடிஎம் கார்டு, பாஸ்வேர்ட். இப்படி.

அப்படி நான்கு நண்பர்கள் அடங்கிய குழு ஒன்று ஞாயிற்றுக்கிழமை வாடிக்கையான அவுட்டிங்க் செல்ல நினைக்கிறது. நால்வரில் ஒருவர் வரவில்லை என்றும் தன் ஏடிஎம் கார்டை மீதியிருக்கும் மூன்று நண்பர்களின் கையில் கொடுத்து வரும்பொழுது ஆயிரம் ரூபாய் மட்டும் எடுத்துவிட்டு வாருங்கள் என்று கொடுத்துவிடுகிறான். இது விடுதிக்குள் நண்பர்களுக்குள் வாடிக்கையான ஒன்று. ஏற்கனவே அப்படி நடந்ததும் உண்டு.

மூன்று நண்பர்களும் வெளியே செல்கிறார்கள். அவர்களது வேலையை முடித்துவிட்டு நண்பனுக்காக அந்த ஏடிஎம்மில் ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறார்கள். விடுதி திரும்பியதும் பணத்தையும் கார்டையும் கொடுத்துவிடுகிறார்கள். விடுதிக்குள் எட்டு மணிக்குள் வந்துவிடவேண்டும் என்பது விதி. உள்ளேதான் இருக்கிறார்கள். இரவு பதினோரு மணிக்கு அந்த ஏடிஎம் கார்டிலிருந்து 15000 ரூபாய் எடுக்கப்படுவதாக ஒரு செய்தி அந்த மாணவனின் தந்தைக்குக் குறுஞ்செய்தியாகச் சென்றடைய, அவர் தன் மகன் ஏதோ பணம் எடுத்திருப்பான்போல என அவரும் அதைத் தன் மகனுக்கு ஃபார்வர்ட் செய்கிறார்.

காலை விடுதி களேபரம் ஆகிறது. பணத்தை அந்த மாணவன் எடுக்கவில்லை.
இரவு ஏடிஎம் கார்ட் காணாமல் போயிருக்கிறது. கார்ட் காணாமல் போனாலும் பாஸ்வேர்ட் எப்படித் தெரியும். இது அந்த மாணவனின் கேள்வி.

மற்ற நண்பர்கள் மூவரும், “பின் நம்பரை வேறு யாருக்கும் தெரியப்படுத்தினாயா?” எனக் கேட்கிறார்கள். அன்று காலையில் இன்னொரு அதிர்ச்சி. அடுத்த 15000 பணம் எடுக்கப்பட்டதாகச் செய்தி. மற்றுமொரு அதிர்ச்சி. அடுத்த 15000 பணம் எடுக்கப்பட்டதாகச் செய்தி. மொத்தமாய் முதல் நாளும் சேர்த்து 45000 ரூபாய்.

மாணவனின் குற்றச்சாட்டு உங்களுக்குத்தான தெரியும் பின் நம்பர். நண்பர்களின் வாதம்- நாங்கதான் கார்டையே உன்னிடம் கொடுத்துட்டோமே என்று. மூன்று நண்பர்களுக்கும் பின் நம்பர் தெரியும் அவர்கள்தான் இப்படிச்செய்தார்கள் என்று பாதிக்கப்பட்ட மாணவன், யாரோ சொன்னார்கள் என்று, அருகிலிருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கிறான். காவல் துணை ஆய்வாளர் அந்த மூன்று நண்பர்களையும் அலைபேசியில் அழைத்து காவல் நிலையம் வரச் சொல்கிறார். மூன்று நண்பர்களும் விடுதி காப்பாளருக்குத் தகவலைச் சொல்லி அவரையும் அழைத்துக்கொண்டு செல்கிறார்கள். காவல்துறையின் துணை ஆய்வாளர் மாணவர்களின் படிப்பைக் கருத்தில்கொண்டு வழக்குப்பதியாமல் மிரட்டி வழக்கை முடிக்கப் பார்க்கிறார்.

மாலைவரை கால அவகாசம். உங்களில் ஒருத்தன்தான் உங்கள்மீது புகார் அளித்திருக்கிறான். அவனிடம் பேசுங்கள் என்கிறார். மூன்று நண்பர்களும் அந்த மாணவனிடம் மன்றாடிப்பார்க்கிறார்கள். அவர்களுக்கு அதில் சம்பந்தமில்லை என்று கூறுகிறார்கள். மாணவன் அசைந்தபாடில்லை. காவல் துணைஆய்வாளர் ஒரு வார காலஅவகாசம். பணத்தை அவனுக்குக் கொடுத்துவிடுங்கள்! ‘இல்லாவிடில் வழக்குப் பதிவுசெய்யப்படும். ஒரு வாரம் கழித்து என்ன என்று சொல்’ என அந்த மாணவனிடம் கூறி அனுப்பிவிடுகிறார்.

விடுதி காப்பாளர் மூலமாக அடுத்த நாள் இந்தப் பிரச்சினை கல்லூரி நிர்வாகத்திற்குச் சொல்லப்படுகிறது. கல்லூரியின் முதல்வர் ஒழுங்கு கமிட்டி பேராசிரியர்கள் ஒன்று கூடி நால்வரையும் விசாரிக்கிறார்கள். காவல்துறை வரைக்கும் சென்று விசாரனைக்கு உள்ளான அந்த மூன்று நண்பர்களையும் காலவரையற்ற இடைநீக்கம் செய்கிறார் முதல்வர். இதில் ஒரு வாரத்தில் பருவத் தேர்வு. நண்பர்கள் மன்றாடிப்பார்க்கிறார்கள். முடியவில்லை. இடைநீக்கம் உறுதியாகிறது. நண்பர்கள் கல்லூரியின் வளாகத்திற்கு வெளியில் நின்று வாக்குவாதம் செய்கிறார்கள்.

இடைநீக்கம் என்று நண்பர்கள் ஊருக்குப் போய்விட்டால் பணம் கிடைக்காதே என்று பணத்தைப் பறிகொடுத்தவன் காவல்நிலையத்திற்குச் செல்கிறான். துணை ஆய்வாளரின் நட்சத்திரங்கள் துடிக்கின்றன. மறுபடியும் அலைபேசி. மறுபடியும் நண்பர்கள் காவல் நிலையத்தில். இந்தமுறை இன்றே பணத்தைக் கொடு இல்லாவிட்டால் வழக்கு என்ற மிரட்டல்.

மூவரும் அப்பொழுதுதான் தங்கள் வீடுகளுக்கு விசயத்தைத் தெரிவிக்கிறார்கள். அந்தந்த ஊரிலிருந்து பெற்றோர்கள் வருகிறார்கள். அதில் ஒரு நண்பனின் பெற்றோர், எங்கள் பங்கை 15000 கொடுத்து விடுகிறோம். வழக்கு வேண்டாம். அடுத்த வாரம் பருவத் தேர்வு. என் மகனின் படிப்பு வீணாகக் கூடாது. அதே நேரத்தில் என் மகன் அந்தப் பணத்தை எடுக்கவில்லை. அந்தப் பையனுக்கு எப்பொழுது விசாரணை முடிந்து என் மகன் எடுக்கவில்லை என்று தெரிகிறதோ அன்று இந்தப் பணத்தைத் தாருங்கள் என்று கோரிக்கை வைக்கிறார்கள். துணை ஆய்வாளர் ஒரு கடிதமாய் அதை எழுதி வாங்கி பாதிக்கப்பட்ட மாணவனிடமும் இந்தப் பையனுக்கும் இந்த திருட்டுக்கும் சம்பந்தம் இல்லைதான். பணம் எடுத்தது யாரென்று தெரிந்ததும் இந்தப் பணத்தைத் தந்துவிடுகிறேன் என ஒரு கடிதமும் வாங்கிவிடுகிறார்.

பணம் கொடுத்த பெற்றோர் அங்கிருந்தே, உங்கள் வாயாலேயே கல்லூரி முதல்வருக்கு அலைபேசியில் விசயத்தைச் சொல்லி மறுபடியும் சேர்க்கச் சொல்லுங்க என்று கெஞ்சுகின்றனர். துணை ஆய்வாளரும் கல்லூரி முதல்வரை தொலைபேசியில் அழைத்து விசயத்தைக் கூறி இந்தப் பையனைக் கல்லூரியில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார். காவல் நிலையத்திலிருந்து கல்லூரிக்கு ஓடி வருகிறது அந்தக் குடும்பம். கல்லூரி முடிந்து பேராசிரியர்களுடன் கலந்துரையாடலில் இருப்பதால் ஒருமணி நேரம் காத்திருக்கின்றனர்.

மறு நாள் காலை வந்தால் விவரமாய் பேசலாம் என்று திருப்பி அனுப்பப்படுகின்றனர். ஒரு கிராமத்திலிருந்து மகனின் படிப்பிற்காக பெரு நகரம் வந்தக் குடும்பத்திற்கு அடுத்த நாளும் வர வேண்டும் என்பது பெரும் வலி. 320 கிமீ. ஊர் போக. ஆகையால் அங்கேயே ஒரு தனியார் விடுதியில் ஒண்டிக்கொண்டு மறு நாள் காலையில் வந்து முதல்வரைப் பார்க்கிறார்கள்.

ஒரு போலீஸ்காரன் சொல்லி நான் கேட்கனுமா… முடியாது. குற்றம் யார் செய்ததுனு இந்த மூணு பேருக்கும் தெரியும். அவர்கள் அதை ஒத்துக்கொள்ளும் வரை டிஸ்மிஸ்தான். பரிட்சையெல்லாம் எழுத அனுமதிக்கமுடியாது என்று கூறிவிடுகிறார் முதல்வர்.

சரியான விழிப்புணர்வு இல்லாத அந்த பெற்றோர் கெஞ்சிப் பார்க்கின்றனர். முடியவில்லை.

இதுவரை நடந்ததில் ஒவ்வொருவரின் நியாய அநியாயங்களை கொஞ்சம் பார்க்கலாமா…

1. அந்த மாணவன் நண்பர்களை நம்பி கார்ட் கொடுக்கிறான். பின் நம்பர் தருகிறான். அப்படி தரலாமா? // நண்பர்களுக்குள் இது நடப்பது தானே..அதனால் என்ன?

2. பணத்தை வாங்கி அவர்களும் கொடுத்துவிடுகிறார்கள், நண்பர்கள் அப்படி அவனிடம் கார்ட் வாங்க ஒத்துப்போகலாமா. // நண்பனுக்காக இது போன்ற பகிர்தல் இயல்புதானே என்று அவர்களும் செய்திருக்கலாம் தானே.

3. மாணவன் கல்லூரியில் புகார் அளிக்காமல் காவல் நிலையம் செல்வது எப்படி நியாயம் ஆகும். /// கல்லூரிக்குள் நடப்பது கல்லூரிக்குள் தானே இருக்கவேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாத ஒரு மாணவன் பணத்தைப் பறிகொடுத்த பதற்றத்தில் அப்படிச் சென்றிருக்கலாம்.

4. காவல் நிலையத்திலிருந்து நண்பர்களுக்கு அழைப்பு வந்ததும் உறவினர்களுக்கு, கல்லூரிக்கு துறைத்தலைவருக்குத் தெரியப்படுத்தாமல் நண்பர்கள் ஏன் காவல் நிலையம் சென்றனர். //// வீட்டிற்குத் தெரிந்தால் பிரச்சினை வரும் என்ற பயமாகக்கூட இருக்கலாம்.

5. வெறும் ஒரு எஸ்.எம்.எஸை. வைத்துக்கொண்டு காவல்துறை எப்படி ஒருவனின் குற்றச்சாட்டை நம்புகிறது ///// பின் நம்பர் தெரியும் என்பதால் தானே காவல் துறை நடவடிக்கை எடுக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா?

6. காவல்துறைக்குச் சென்ற ஒரு காரணத்தில் எப்படி மாணவர்களை இடை நீக்கம் செய்ய முடியும் ////// கல்லூரியின் முதல்வருக்கு இருக்கும் அழுத்தம் அப்படி. கையை மீறி போய்விட்டால் கல்லூரியின் பெயர் வெளியில் கெட்டுவிடும் என்பதால் அப்படி செய்திருப்பாரா..?

7. ஒரு போலிஸ் சொல்லி நான் கேட்கனுமா என்பது எதன் குறியீடு / அப்படி ஒவ்வொருவனும் ஒரு ஃபோனை பிடித்துக்கொண்டு வந்து பேசு என்பானே. முதல்வர் என்னதான் செய்வார்.

நண்பர்களே! பள்ளிக்கூடம் படிக்கையில் கணக்குப் பாடத்தில் நிகழ்தகவு என்று ஒரு பிரிவு வந்து போயிருக்கும். சுருக்கமாக, உங்கள் பரமபதத்தில் எத்தனை தாயங்கள் விழும் என்பதான அனுமானப் பிரிவு. அது. அப்படி நிகழ்தகவுகளைக் கொஞ்சம் அலசிப் பார்க்க மேலே சொன்ன நிகழ்வு உதவியாயிருக்கும் என நினைக்கிறேன்.

UNWAVERING அதாவது அசைவறு என்று நம் மனக்குவியலை வைத்துக்கொள்வதன் அவசியம் அது. இப்பொழுதெல்லாம் iq பற்றிப் பேசுவது போக EQ பற்றிப் பேசுகிறார்கள். எமோஷனல் கோஷன்ட். எமோஷனல் கோஷன்ட் என்பது ஒரு அளவீடு. எமோஷனல் இன்டெலிஜென்ஸ் எனபதிலிருந்து நாம் பெறுவது. எமோஷனல் இன்டெலிஜென்ஸ் என்பது பாரதி கேட்ட அசைவறு மதியிலிருந்து பூப்பது.

ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் என்ற மொழிபெயர்ப்பு நூலில் அதன் மொழிபெயர்ப்பு ஆசிரியர் தோழர் இரா.முருகவேள், “வாழ்க்கை தற்செயல்களால் ஆனது. அதற்கு எப்படி நாம் எதிர்வினை புரிகிறோமோ அப்படி வாழ்க்கை” என்று மேற்கோள்காட்டியிருப்பார்.

அப்படித்தான் சில நிகழ்வுகள் நம்முன் நடக்கும். மேற்சொன்ன நிகழ்வில் நீங்கள் இப்பொழுது பாதிக்கப்பட்ட மாணவன்முன் நில்லுங்கள். இல்லாவிடில் பணம் எடுக்காமல் வழக்கிற்குப் பயந்து பருவத்தேர்வு எழுதிவிட இடைநீக்கம் ரத்து செய்யச்சொல்ல எத்தனிக்கும் மூன்று நண்பர்களில் ஒரு மாணவனின் பெற்றோராக, அண்ணனாக, அக்காவாக, நண்பனாக நில்லுங்கள். எது சரி, எது தவறு என்பது ஒரு பக்கம் விசாரணை நடக்கட்டும்.

உங்கள் முன் நீங்கள் அவிழ்க்கும் நிகழ்தகவுகள் யாவை.

விரக்தி அடைகிறீர்களா.
கோபம் அடைவீர்களா.
இலக்கு இல்லாமல் ஏதோ ஒரு வழியைக் காண்பிப்பது போல் வழக்குதொடுங்கள் போன்ற அறிவுரை வழங்குவீர்களா…
எந்த மனநிலையில் அந்தப் பிரச்சினையை அணுகுவீர்கள்.
உங்களின் நிகழ்தகவு என்ன இருக்கிறது. அதைக் கொஞ்சம் அவிழ்த்து வையுங்கள்.

அடுத்தவாரம் சண்டை செய்யலாம்…

அதுவரை அசைவறு மதி கொஞ்சம் சூடேறட்டும்….

முந்தைய தொடர்:

4.ஒரு ‘தீ’க்கு இன்னொரு தீ தேவைப்படாது – https://bit.ly/2xQQp9r

3.‘எண்ணங்களே நம் வாழ்வைக் கட்டமைக்கின்றன’ – https://bit.ly/2Quz6RQ

2.இந்தப் பிரபஞ்சத்தின் அலைக்கு அளப்பரியச் சக்தி இருக்கிறது – https://bit.ly/3dbEeUR

1. ஒரு பொருள் அசைந்துகொண்டே இருப்பதில்தான் உயிர்ப்பு இருக்கிறது – https://bit.ly/393NmHE

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. கடைசியாய் எப்பொழுது முரண்பட்டீர்கள்? : பழனிக்குமார்
 2. "நல்லதை நினைப்போம், நல்லதே நடக்கும்" : பழனிக்குமார்
 3. "ஊட்டிக்குப் போகிறோம்..எப்படி ஆனாலும் போகிறோம்" -பழனிக்குமார்
 4. நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? நிறுவ முடியுமா?-பழனிக்குமார்
 5. யுவராஜ்ஜின் சவாலும், சச்சினின் அசைவறு மதியும்....பழனிக்குமார்
 6. தனித்துவமும், சுவாரஸ்யங்களும்-பழனிக்குமார்
 7. உங்கள் அக வயது என்ன?-பழனிக்குமார்
 8. குழந்தைமையிலிருந்து ஆளுமை -பழனிக்குமார்
 9. உங்களுக்குள் ஒரு அற்புதம் நிகழும்- பழனிக்குமார்
 10. தோல்வி தரும் மகிழ்ச்சி-பழனிக்குமார்
 11. கொரோனோ: எல்லோரும் வாழ்வோம் - பழனிக்குமார்
 12. பிரச்சினைகளைக் கண்டு அச்சப்படாதீர்கள் - பழனிகுமார்
 13. நமக்கு நேர்கின்ற வினைகளுக்கு நாம் எதிர்வினை ஆற்றுவதில் கவனம் வேண்டும் - பழனிக்குமார்
 14. ஒரு ‘தீ’க்கு இன்னொரு தீ தேவைப்படாது - பழனிக்குமார்
 15. 'எண்ணங்களே நம் வாழ்வைக் கட்டமைக்கின்றன' - பழனிக்குமார்
 16. இந்தப் பிரபஞ்சத்தின் அலைக்கு அளப்பரியச் சக்தி இருக்கிறது - பழனிக்குமார்
 17. ஒரு பொருள் அசைந்துகொண்டே இருப்பதில்தான் அதன் உயிர்ப்பு இருக்கிறது -பழனிக்குமார்