3.அசைவறு மதி

இதற்குமுன் எழுதிய இரு பத்திகளையும் படித்துவிட்டு நண்பன் ஒருவன் தொலைபேசியில் அழைத்தான்.

“நீ எழுதிட்டு இருக்கியே, உயிர்மையில. அசையா மதியா? அசை மதியா? என்னது” என்று கேட்டான்.

பாரதி இருந்திருந்தால் வசம்பை வாங்கிக்கொண்டு வந்து அவன் வாயில் தேய்த்திருப்பார். இதை அப்படியே சொல்லி, அது அசைவறுமதி என்றேன்.

அதிகமாய் வாசிக்கும் பழக்கம் இல்லாத அந்த நண்பன் அந்த இரு பத்திகளைப் படித்திருக்கிறான். அதுவே மகிழ்ச்சியான விசயம்தான். எழுதுன இரண்டு பத்தியும் மார்க்கெட்டிங்கில் இருப்பவர்களுக்குக் கனக்கச்சிதமா இருக்கு. அசைவறுமதி பத்தி வியாபாரத் துறையில் இருப்பவர்களுக்கானதா என்று கேட்டான்.

selling materials என்பதற்கும் selling concept என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதா என்ன? ஒரு பொருளை விற்பதுபோல உங்கள் கருத்தை அடுத்தவருக்குத் தரவேண்டும்.

selling concept என்பது உங்கள் எண்ணத்தை அடுத்தவர்மேல் திணிப்பதன் ரகம். ஆனால் பொருளைக் கையாள்வதைபோல் மனிதர்களைக் கையாளமுடியுமா என்ன? தலை சுற்றுகிறதா. வாருங்கள்.

ஒரு கதை சொல்கிறேன்.

ஒரு பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் புதியதாய் பொறுப்பு எடுத்தார். உதவியாளரிலிருந்து சக ஆசிரியர்வரைக்கும் கூறிய ஒரே விசயம் ஒரு ஆசிரியரைப் பற்றியது. non cooperative பணியாளர்கள் எப்பொழுதும் எல்லா நிறுவனத்திலும் உண்டு. மற்றவர்கள் சுட்டிக்காட்டிய அந்த ஆசிரியர் சகப் பணியாளர்களுடன் ஒத்துப்போகமாட்டார். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். மாணவர்களுக்குத் தேவையான வகுப்புகளை நடத்துவதிலும் அவர்களைத் தேர்ச்சிபெறவைப்பதிலும் கெட்டிக்காரர். ஆனால் குழுசார்ந்து இயங்கமாட்டார். அனைத்து ஆசிரியர்களும் இணைந்து ஒரு விருந்து செல்ல ஆசைப்பட்டால் கலந்துகொள்ளமாட்டார். அனைவரும் சேர்ந்து கேளிக்கை சுற்றுலா என்றால்கூட கலந்துகொள்ளமாட்டார். தன் வகுப்பை இன்னோர் ஆசிரியருக்குக் கொடுக்கவும் மாட்டார் அவர்களது வகுப்பைப் பாடம் முடிக்கவேண்டுமென இரவலும் கேட்கமாட்டார்.

புது தலைமை ஆசிரியருக்கு ஒரு விசயம் புரிந்தது. அந்த ஆசிரியர் அவருண்டு அவர் வேலையுண்டு என இருக்கிறார் என. இச்சமூகத்தில் குழு சார்ந்து இயங்குகையில் தாமுண்டு தாம் வேலையுண்டு என்று இருத்தல்கூட குழுவுடன் சேர்ந்து இயங்காமை என்ற நோக்கில் பார்க்கப்படும். அப்படி அந்த ஆசிரியரின் செயல்பாடுகள் இருப்பதாகவே தலைமையாசிரியருக்குப்பட்டது. வாய்ப்புக் கிடைத்தபொழுது அவரிடம் உரையாடலை மேற்கொள்ள தலைமை ஆசிரியர் ஆசைப்பட்டார். ஆனால் அந்த ஆசிரியரோ அதில் உடன்படவில்லை.

இப்படித்தான் நாம் வாழும் சமூகமான வீட்டில் அலுவலகத்தில் தெருவில் சில மனிதர்கள் தன் இறுக்கமான குணநலன்களுடன் இருப்பார்கள். சிலநேரங்களில் அவர்களையும் அனுசரித்து அவர்களின் பங்களிப்பையும் வைத்தே நம் வெற்றி பெறவேண்டிய சூழல் இருக்கும்.

ஒருமுறை ஆசிரியர்களை அழைத்து தலைமை ஆசிரியர் ஒரு கூட்டம் நடத்தினார். பள்ளியின் வளர்ச்சி குறித்தான கலந்துரையாடல் அது. அந்தக் கூட்டத்தின் இறுதியில் தலைமை ஆசிரியர் பேசினார்.

அவர் பேசுகையில் “தான் எல்லா வகுப்பறைகளையும் அவ்வப்போது போய் பார்ப்பதாகவும் அப்படிப் பார்த்தபோது ஒரு வகுப்பறையில் கவனிக்கும்படியாக அந்த வகுப்பறையின் கரும்பலகை ஓரத்தில் ‘எண்ணங்களே நம் வாழ்வைக் கட்டமைக்கின்றன’ என்ற ஒரு சொற்றொடர் எழுதப்பட்டிருந்தது. அது எந்த வகுப்பறை” எனக் கேட்டார். தலைமை ஆசிரியருக்குத் தெரியும் அது அந்த யாருடனும் ஒத்துழைக்காத ஆசிரியரின் வகுப்பறை என்று. தெரியாததுபோல் கேட்டதும் “என் வகுப்பறைதான்” என அவர் பதிலளித்தார்.

உடனே தலைமை ஆசிரியர் “அருமை சார்” எனக் கைக் கொடுத்தார். எல்லா வகுப்பறைகளிலும் மாணவர்களுக்கு இதுபோல் நல்ல வாசகங்கள் எழுதலாமே என்று ஆலோசனையும் கூறினார்.

எல்லா வகுப்புகளும் எந்தெந்த வாசகங்கள் எழுதலாம் என இருக்கிறீர்கள் என ஒரு கடிதமாய் எழுதி நாளைக்குத் தாருங்கள் என்றார். எல்லா வகுப்பு ஆசிரியர்களும் தர, தலைமையாசிரியர் அவற்றை ஒரு சந்தர்ப்பத்தில் அந்த யாருடனும் ஒத்துழைக்காத ஆசிரியரை அழைத்து எதிரே அமரவைத்து எந்தெந்த வாசகங்கள் எழுதலாம் என எனக்கு ஆலோசனைத் தாருங்கள் என்று ஒவ்வொரு வாசகமாய்ப் படித்துக் காண்பிக்க அவர் சிலவற்றைத் தேர்ந்தெடுத்தார். அந்த ஆசிரியரின் முகம் கொஞ்சம் மாறியிருந்தது. புன்னகையுடன் வேலை செய்தார்.

இந்த நிகழ்வில் நீங்கள் யோசிப்பதை ஒரு காகிதம் எடுத்து எழுதிப்பாருங்கள். என்னவெல்லாம் நிகழலாம் என்னென்ன நிகழ்ந்திருக்கிறது என்று எனக்குத் தெரிந்த ஒரு பட்டியல் போடுகிறேன்.

1. முதல் விசயம், ஒரு குழுவில் இருக்கும் non cooperative அல்லது ஒரு குடும்பத்தில் இருக்கும் முரண்பாடான கருத்துள்ளோரை, அப்படியே எதிரெதிர் வாதம் செய்து நமக்கும் அவருக்கும் உள்ள தூரத்தை அதிகமாக்காமல் தூரத்தைக் குறைக்கும் விதத்தில் நடவடிக்கை எடுப்பது. அப்படிப்பட்ட நண்பர்களை உறவுகளை அப்படியே விட்டுவிடாமல் அரவணைத்துச் செல்வதில் நமக்கு ego என்பது இருக்கக்கூடாது.

2. ஒவ்வொருவருக்கும் தனி உலகம் உள்ளது. அவர்களது உலகத்தில் தோன்றும் எண்ணங்களுக்கு அவரே எஜமானன். அந்த எண்ணங்களின் அடிப்படையில் அவர்கள் செயலாற்றுவார்கள். அலுவலகரீதியான நட்புகளில், நீங்கள் எதிர்பார்க்கும் குழு சம்பந்தமான முயற்சிகளில், அவர்களது தனிப்பட்ட குணநலன்களை மையமாக வைத்து நீங்கள் உறவைத் தொடரக்கூடாது. இதே அந்த தலைமையாசிரியர் அந்த ஆசிரியரை அழைத்து ஏன் நீங்கள் இப்படி இருக்கிறீர்கள் போன்ற உரையாடல்களை ஆரம்பித்திருந்தால் முடிந்தது கதை. இருவருக்குமான தூரம் இன்னும் அதிகமாயிருக்கும்.

நீங்கள் தொடரும் குடும்பம் சம்பந்தமான உறவுகளில் முரண்பாடான கருத்துகள் உள்ளவர்களை நீங்கள் எதிர்நோக்குகையில் அவர்களது குணநலனுக்கு நீங்கள் மரியாதை அளிக்கும் விதமாய்த்தான் நடக்கவேண்டும். அவர்களது இயல்பை ஏற்றுக்கொண்டு அதன் போக்கிலேயே நீங்கள் விரும்பியதை அவர்கள் மூலமாகச் செயலாற்ற வைக்கவேண்டும்.

3. அவர்தான் நம்மிடம் வர வேண்டும். நாம் சொல்வதை அவர் கேட்டே ஆக வேண்டும் என்ற எண்ணம் ஒரு குடும்பத் தலைவனாக ஒரு அலுவலகரீதியான தலைவனாக உங்களுக்கு இருக்குமேயானால், மன்னிக்கவும் உங்களுக்குத் தலைமைப் பண்பில் பிரச்சினை ஆரம்பித்துள்ளது.

4. தலைமையாசிரியரின் ஆளுமை என்பது, நாம் சொன்னால், ஆசிரியர்கள் கேட்கவேண்டும் என்பது அல்ல. நமக்குத் தேவையான வேலை நடக்க ஆசிரியர்களைப் பயன்படுத்துவது. இந்த இரண்டு சொற்றொடர்களும் ஒரே அர்த்தம்தான் ஆனால் வெவ்வேறான பரிமானங்களில். நமக்குத் தீர்வுதான் வேண்டும் என நகர்வதுதான் அசைவறுமதி கொண்டோரின் நுட்பம்.

5. பள்ளியில் இருக்கும் பிரச்சினையைத் தீர்ப்பது என்பது வேறு. பிரச்சினையையும் தீர்க்கவேண்டும் நமக்கு வேலையும் நடக்கவேண்டும் அதை நோக்கி நகர்வதில்தான் எமோசனல் இண்டெலிஜென்ஸ் வேலை செய்கிறது.

இப்பொழுது உங்கள் குடும்பத்தில் அப்படி ஒரு ஆசிரியர் போன்று குணநலன் கொண்ட ஒருவர் உறவாக இருப்பார். அவரிடம் நீங்கள் எப்படி நடந்துகொண்டீர்கள் என எழுதிப் பாருங்கள். ஒருவர் தவறு இழைப்பது வாடிக்கைதான் அதற்கு நாம் எவ்வாறு எதிர்வினையாற்றி பிரச்சினைகளைக் களைந்து நேர்மறையாய் நிகழ்வை அதன் மூலமாக அந்த நாளை அந்த தருணத்தை வாழ்வை நிம்மதியான ஒரு ஞாபகமாய் மாற்றினோம் என்பதுதான் கதை.

உங்கள் எண்ணங்களை அடுத்தவர்களின் எண்ணங்களுடன் உரையாடவிட்டு மீளப் பெற்று அதை அனுபவமாக உணர்வதில்தான் வாழ்வின் நுட்பம் இருக்கிறது.

பள்ளிக்கூடத்தில் அந்த ஆசிரியரைப் போல, ஒரே வீட்டில் உங்கள் மனைவிக்கும் உங்களுக்கும் அது போதாத காலமாக இருக்கலாம். அல்லது உங்கள் மாமனார் மாமியார். உங்கள் மகனுடன் ஒரு பிணக்கு ஏற்படலாம்.
உடன் வேலையில் இருப்பவர்க்குகூட நீங்கள் பதில் சொல்லவேண்டிய நிலை வரலாம்.

உங்கள் நோக்கத்தை உங்கள் கருத்தை இன்னொருத்தருக்கு அவர் விருப்பப்படி அல்லது ஏற்றுக்கொள்ளும்படி தருவது அதி முக்கியமானது.

பணம் கட்டுவதற்காகச் சில தானியங்கி இயந்திரங்களை சில வங்கிகள் வைத்துள்ளன. ரூபாய் நோட்டுகள் மடித்து வைக்கப்பட்ட அச்சு இருந்தாலோ கசங்கி இருந்தாலோ ரூபாய் நோட்டின் நான்கு மூலைகளில் ஒன்றுகூட கசங்கி இருந்தாலோ அந்த இயந்திரம் வாங்கிக்கொள்ளாமல் திருப்பிவிடும். எந்த உணர்வும் இல்லாத ஓர் இயந்திரமே தனக்குத் தேவையான ஒன்றை தேவையான தரத்தில் ஏற்கிறது. வெட்கம், கோபம், ஏமாற்றம், கர்வம், வன்மம் என எல்லாம் ஊறிப்போன ஒரு மனிதனுக்கு ஒரு விசயத்தை எப்படி நாம் தரவேண்டும்.

அப்படிப் பக்குவம் பார்த்துத்தான் நாம் நம் உணர்வை உணர்ச்சியை அதுசார் வெளிப்படும் சமிக்ஞைகளை வார்த்தைகளை வெளிப்படுத்துகிறோமா.

concept selling இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. குடும்பத்தில் பொதுவெளியில் அலுவலகத்தில் என இருவருக்கு இடையிலான மனக் குமுறல்களை இருவரில் யாரேனும் ஒருவர் பக்குவப்பட்டு அனுப்புவாரெனில் இங்கு பல பிரச்சினைகள் இல்லாமல் போகும்.

அதற்கான முதலடியை நாம் எடுத்துவைக்கிறோமா என்பதுதான் கேள்வி.

முந்தைய தொடர்:

2.இந்தப் பிரபஞ்சத்தின் அலைக்கு அளப்பரியச் சக்தி இருக்கிறது – https://bit.ly/3dbEeUR

1. ஒரு பொருள் அசைந்துகொண்டே இருப்பதில்தான் உயிர்ப்பு இருக்கிறது – https://bit.ly/393NmHE

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. கடைசியாய் எப்பொழுது முரண்பட்டீர்கள்? : பழனிக்குமார்
 2. "நல்லதை நினைப்போம், நல்லதே நடக்கும்" : பழனிக்குமார்
 3. "ஊட்டிக்குப் போகிறோம்..எப்படி ஆனாலும் போகிறோம்" -பழனிக்குமார்
 4. நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? நிறுவ முடியுமா?-பழனிக்குமார்
 5. யுவராஜ்ஜின் சவாலும், சச்சினின் அசைவறு மதியும்....பழனிக்குமார்
 6. தனித்துவமும், சுவாரஸ்யங்களும்-பழனிக்குமார்
 7. உங்கள் அக வயது என்ன?-பழனிக்குமார்
 8. குழந்தைமையிலிருந்து ஆளுமை -பழனிக்குமார்
 9. உங்களுக்குள் ஒரு அற்புதம் நிகழும்- பழனிக்குமார்
 10. தோல்வி தரும் மகிழ்ச்சி-பழனிக்குமார்
 11. கொரோனோ: எல்லோரும் வாழ்வோம் - பழனிக்குமார்
 12. பிரச்சினைகளைக் கண்டு அச்சப்படாதீர்கள் - பழனிகுமார்
 13. நமக்கு நேர்கின்ற வினைகளுக்கு நாம் எதிர்வினை ஆற்றுவதில் கவனம் வேண்டும் - பழனிக்குமார்
 14. உங்கள் முன் நீங்கள் அவிழ்க்கும் நிகழ்தகவுகள் யாவை? - பழனிக்குமார்
 15. ஒரு ‘தீ’க்கு இன்னொரு தீ தேவைப்படாது - பழனிக்குமார்
 16. இந்தப் பிரபஞ்சத்தின் அலைக்கு அளப்பரியச் சக்தி இருக்கிறது - பழனிக்குமார்
 17. ஒரு பொருள் அசைந்துகொண்டே இருப்பதில்தான் அதன் உயிர்ப்பு இருக்கிறது -பழனிக்குமார்