7. அசைவறு மதி

அவனுக்கு ‘செவலை’ என்று பெயர்.

‘செவலை’ என்பது பெயரா என்றால் ஆமாம். அது பெயர்தான்.

‘செவலை’ என்பது கொஞ்சம் ஊர்நாட்டானுக்கு உரியப் பெயராக இருக்கிறது.

அதுதான் அவனுக்கு அவ்வளவு பொருத்தம்.

1995-97வாக்கில் வெகுஜன நடமாட்டம் இருந்த ஒரு பகுதியிலிருந்து நகரின் புறநகர் பகுதிக்கும் வெளியே ஒரு பகுதிக்கு வீடு பெயர்ந்து வந்திருந்தோம். எங்கள் வீட்டிலிருந்து பேருந்து நிறுத்தம் செல்வதற்குச் சரியாக 17 லிருந்து 19 நிமிடம் ஆகும். வேகமாக நடந்தால் 16 நிமிடங்கள் என்பது உத்தேசம். இரவு ஏழு மணிக்குக்கூட ஊர் அடங்கியதுபோல் இருக்கும் பகுதி அது.

அப்பொழுதுதான் அந்தப் பகுதி பிரசித்தமாகிக்கொண்டிருந்தது. வீட்டடிமனை விலை குறைவு என்று யாரோ கிளப்பிவிட்டதன் விளைவாக அப்பொழுதுதான் வீடுகள் கட்டப்பட்டுக்கொண்டிருந்தன. ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்கும் இடையே ஐந்தாறு வீடுகள் வருவதற்கு முன் காலி மனைகளாய் அப்பொழுது இருந்தன. தெருவிளக்கும் அப்பொழுதுலாம் இல்லை. பதினொன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். பள்ளி முடிந்து ட்யூஷன்லாம் முடிந்து வீட்டுக்கு வர இரவு எட்டாகிவிடும். அப்பொழுதுதான் ‘செவலை’யைத் தெரியும்.

‘செவலை’ என்பது ஒரு வீட்டு நாய். ஆனால் தெருவில்தான் இருப்பார். ஊருக்கு நேர்ந்துவிட்டதுபோல் அவர் அந்தக் குறுகியத் தெருவிற்கு நேர்ந்துவிட்டவர். நாய்க்குத்தான் இவ்வளவு பில்டப்பா என்பீர்கள். 96இல் இரவு எட்டு மணிக்குமேல் அந்தத் தெருவில் ஒரு ஐந்து வீடுகளைத் தாண்டவேண்டும் என்றால் நீங்கள் ‘செவலை’யை முதலில் தாண்டவேண்டும். ஆம் – ‘செவலை’ ஒரு டான்.

நாய்களுக்கு எல்லை குறைவு. ஆனால் அவற்றின் உலகம் பெரியது. பிடித்தவர்கள் என்ன செய்தாலும் பொறுத்துக்கொள்வதும், பிடிக்காதவர்கள் என்ன செய்தாலும் குரைத்துக்கொள்வதும் அப்படியே ஒரு சராசரியான மனிதனின் மனநிலையைக் கொண்டவை. கொஞ்சம் வளைந்து வளைந்து செல்லும் அந்த 2 கிலோ மீட்டர் தூரத்தில் ‘செவலை’ உலாவும் 200 மீட்டர் தூரம்தான் இருட்டைவிட பயமுறுத்தும்.

முதன்முதலில் நானும் ‘செவலை’யும் நேருக்கு நேராய் பார்த்தபோது ‘செவலை’ நல்ல மனநிலையில் இல்லை போலும். அது பார்க்கவில்லை. முறைத்தது.

ஏன் இப்படிப் பார்க்கிறது என்று யோசித்து முடிப்பதற்குள் அது உறும ஆரம்பித்தது. அன்றைய நாளைக் கடந்துவிட்டேன். நான் செய்த தவறுகளில் ஒன்று, அடுத்த நாள் அந்த வழியில் வராமல் வேறுவழியைத் தேர்ந்தெடுத்ததுதான்.

பல சமயங்களில் நாம் இப்படித்தானே. ஒரு பிரச்சினையை எதிர்கொள்ளும்போது அதனை எதிர்கொள்வதற்குத் தயங்கிக்கொண்டு பிரச்சினையை ஆறப்போடுவோம். பிரச்சினையைக் கண்டு ஓடி ஒளிவோம்.

இன்னொரு நாள், நான் என்னை மறந்துவிட்டு ‘செவலை’யின் தெரு வழியே வரவேண்டியதாகிவிட்டது. ‘செவலை’ முதலாளி ஒரு துணி துவைத்து வீட்டின் வெளியே இஸ்த்ரி போடுபவர். நம் நல்ல நேரம் அவரோ அவர் மனைவியோ அல்லது அவரது மகனோ இருந்தால் ‘செவலை’யைக் கட்டுப்படுத்துவார்கள் என்ற நப்பாசை எனக்கு. நம் பிரச்சினைகளைக் களைவதற்கு நமக்கு மீட்பர் தேவை என்பது ஒருவகையான மூடநம்பிக்கை ஆகும்.

அன்று ‘செவலை’ நல்ல மனநிலையில் இருந்தது. ஆனாலும் அது பார்க்கவில்லை. முறைத்தது. நான் ‘செவளை’யின் கண்களைப் பார்க்கவே இல்லை.

ஒரு படத்தில் வடிவேலு சுந்தர்.cயைப் பார்ப்பதைத் தவிர்க்க முகத்தைத் திருப்பிக்கொண்டே நேராய் நடப்பார். அதைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அப்படித்தான் செவலைப் பார்க்காமல் நடந்தேன். ஆனால் அது என்னை நோட்டம் விட்டுக்கொண்டிருக்கிறது என்பதை என்னால் உணர முடிந்தது. ‘செவலை’ இருக்கும் தெரு ஒரு ஐநூறு மீட்டர் தானிருக்கும். ‘செவலை’யின் வீட்டைத் தாண்டியதும் தெரு வளைந்து அடுத்தத் தெருவிற்குள் நுழைந்துபோவதுபோல் அமைப்பு.

ஒருமுறை காலையில் பள்ளிக்குச் செல்லும்பொழுது ‘செவலை’யின் தெருவழியே சென்றேன். அப்பொழுது சைக்கிளில் செல்லும் வாய்ப்பு இருந்தது. நடு ரோட்டில்தான் ‘செவலை ‘ படுத்திருந்தது. டான் வாழ்க்கையில் இதுலாம் சகஜம்தானே.

நாம்தான் ஒதுங்கி போகவேண்டும்.

எனக்கு முன்னால் காலையில் பேப்பர் போடும் ஒரு அண்ணன் போய்க்கொண்டிருந்தார்.

அவருக்கும் ‘செவலை’க்கும் வாய்க்கால் தகராறு இருக்கும்போல. அவரைக் கண்டதும் எழுந்துகொண்டது. எனக்கு சப்த நாடிகளும் நின்றுவிட்டன.

என்முன் சென்ற பேப்பர் அண்ணனை செவலை விரட்ட ஆரம்பித்தது. அவர் வேகமாக அழுத்தியபடி. “ச்சூ..ச்சூ…” என்று ‘செவலை’யின் வீட்டைத் தாண்டிவிட்டார்.

நாய்கள் புத்திசாலிகள். அவைகள் தன் எல்லைகளுக்குள்தான் தன் பலத்தையும் பராக்கிரமத்தையும் காண்பிக்கும். தன் எல்லைக்கு வெளியில் தன்னுடைய ஆளுமையைத்தான் காண்பிக்கும். தன் எல்லையின் வெளியில் நின்றுகொண்டு குரைத்துக்கொண்டே என் பக்கம் திரும்பியது.

‘செவலை’யை நேருக்கு நேராக உக்கிரமாக இருக்கும்பொழுது கண் கண் பார்த்தத் தருணம் அது. மனிதர்களுடன் பழகி பழகி, அவர்களைப் போல் வேறு எங்கோ இருக்கும் கோபத்தை ஒரு எளியன் சிக்கிவிட்டால் கடித்துக் குதறிவிடும் மனித இயல்பில் ‘செவலை’யும் அப்படி செய்துவிடுமோ என்ற பயம் எனக்கு.

என்னைப் பார்த்தும் ஏதோ சொல்லிக் குரைத்தது. ஆனால் விரட்டவில்லை. இருந்தாலும் பெடலை ஓங்கி அழுத்தினேன். எனக்கு எப்பொழுதும் முக்கியமானத் தருணங்கள் எனக்குச் சாதகமாய் இருந்ததில்லை. சைக்கிளின் செயின் அவிழ்ந்தது. ‘டொடக்க்..’னு ஒரு சத்தத்துடன் பெடலிலிருந்து கால் நழுவ நான் ‘செவலை’யின் முகத்தைப் பார்த்தேன். ஆகச்சிறந்த கருணை மனுவிற்கு நிகரான ஒரு பார்வையாக என்னைப் பார்த்ததுபோல். ‘போய்த்தொலை’ என்பதை ஒரு செருமலுடன் கலைந்துபோனது. வண்டியை ஓரமாய் நிறுத்தி செயினை மாட்டிக்கொண்டு நகர்ந்தேன். செயின் பற்களில் செயினை அமர்த்தியபடி சக்கரத்தின் ஃபோகஸ் கம்பிகளினூடே தூரமாய் கொட்டாவிவிட்ட ‘செவலை’யின் பற்களைப் பார்த்தேன். ஒரு அச்சுக்கு கால் கிலோ கறி கிடைக்கும் அந்தப் பற்களுக்கு. ‘செவலை’யின் பகுதியில் சைக்கிளை நிறுத்தி நகர்ந்ததில் ஒரு விசயம் என்னவென்றால் பயம் கொஞ்சம் விலகியிருந்தது.

இப்படித்தான் பிரச்சினைகளைக் கண்டு விலகாமல், பிரச்சினைகளின் தருணங்களில் பிரச்சினைகளோடே அமர்ந்து ஆழமாய் யோசிக்கும்பொழுது நமக்குப் பிரச்சினைகள் பற்றிய பயம் போக வாய்ப்பிருக்கிறது.

இதை விட ஒரு பெரிய அபத்தம் ஒருமுறை நிகழ்ந்தது. ஒரு காவி வேடமிட்ட ஒரு பிச்சைக்காரர் அந்த வழியே செல்ல ‘செவலை’ அவரைப் பார்த்துக் குரைத்தது. அவர் ‘செவலை’யுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரது உற்சாகப் பானம் அப்படி அவரைச் செய்யவைத்திருக்கலாம். நாம் அன்று தப்பித்தோம் என்று ‘செவலை’யின் வீட்டைத்தாண்டி அடுத்தத் தெருவிற்குள் நுழைய அந்தத் தெருவில் இன்னொரு குட்டி டான் இருந்தார். அவருக்கு அப்பொழுது பெயர் வைக்கவில்லை. இந்தக் கட்டுரைக்காக ‘பப்பி’ என்று கொள்ளலாம். எங்கோ ‘செவலை’யின் குரலைக் கேட்டுவிட்டு அந்த வழியாக வந்த என்னை ‘பப்பி’ வாங்கு வாங்கு என வாங்கிவிட்டார்.

சொல்லப்போனால் கடிக்காமல் விட்டதே அபூர்வம். ‘பப்பி’யை நான் ‘செவலை’ அளவிற்கு மதித்ததே இல்லை. அன்றிலிருந்து ‘பப்பி’ க்கும் ஒரு சலாம் வைக்கவேண்டிய கட்டாயம்.

இப்படித்தான் எங்கேயோ பிரச்சினை நடக்கும். என்ன பிரச்சினை என்றே தெரியாது. பாதி பிரச்சினைக்குள் நாம் நுழைந்துகொண்டு ‘பப்பியை’ப்போல் பிரச்சினையை விட்டுவிட்டு வேறொரு திசையில் ஆற்றலைச் செலவழித்துக்கொண்டிருப்போம். அது ஒரு குழு மனநிலையில் நடப்பது. ஆட்டுக் கிடைபோல். ஒருவர் சொல்கிறார் என்றதும் ஒட்டுமொத்தக் குழுவும் அப்படியே அதைச் செய்தல். ‘கிட்டத்தட்ட பப்பி’ மனநிலையில்தானே நாமும் செயல்படுகிறோம்.

‘செவலை’ யின் கதையை நீங்கள் ‘செவலையாகவே’ படிக்காதீர்கள். நம் அன்றாட நிகழ்வுகளில் பல ‘செவலைகளை’க் கடக்கிறோம். நாயின் உருவமாக மட்டும் இல்லை. மனிதனின் உருவமாக, பிரச்சினைகளின் உருவமாக. அலுவலகத்தில், வீட்டில், தெருவில். கடையில், பல ‘செவலைகள்’ இருக்கிறார்கள். நம்மை முறைத்துக்கொண்டு. வேறு ஒருவர் மீது கோபத்தைவைத்துக்கொண்டு நம் மீது அதைத் திணிப்பார்கள்.

அவர்கள் வீட்டில் தண்ணீர் வரவில்லை என்றாலும் நம்மை துவைத்து எடுப்பர்.

‘செவலை’களைக் கண்டு நாம் ஓடக்கூடாது. நேருக்கு நேராய் கண்களைச் சந்திப்பது போல் பிரச்சினைகளைப் பார்க்கவேண்டும்.

‘செவலை’கள் சமயத்தில் நமக்கு நல்ல பழக்கவழக்கங்களைச் சொல்லிக்கொடுப்பவை. தன் எல்லைக்குள் பராக்கிரம்மத்தையும் தன் எல்லைக்கு வெளியே தன் ஆளுமையையும் காண்பிப்பது போல் நாமும் சக மனிதர்களுடனான உறவுகளில் நம் உறவுக்கான உரிமையின் எல்லைவரைதான் செல்ல முடியும். நம் உரிமைக்கு அப்பாலான தூரத்தில் நம் உரிமையைப் பயன்படுத்தமுடியாது. மாற்றாக நம் ஆளுமைத்திறனைத் தான் பயன்படுத்த முடியும்.

நான் மருந்து விற்பனை பிரதிநிதியாக இருந்தபோது எனக்கு ஒரு மேலாளர் இருந்தார். U.பாலசுப்பிரமணியம் அவரது பெயர். இன்று அவர் இல்லை என்றாலும் அவர் சொல்லிக்கொடுத்த மற்றும் எப்பொழுதும் அவர் சொல்லும் ஒரு ஆங்கில சொற்றொடர் என்னுள் இருக்கிறது.

‘ IF YOU WANT TO OVER RULE SOMEBODY, YOU MUST WIN THEIR HEARTS FIRST’ என்பார்.
ஒருவரை தன் ஆளுமைத்திறனிற்குள் நீங்கள் கொண்டு வர விரும்பினால் அவர்களை அன்பினால் அரவணையுங்கள்.

அசைவறுமதி அன்பின் நிழலில் படரட்டும்…..

முந்தைய தொடர்கள்:

6.நமக்கு நேர்கின்ற வினைகளுக்கு நாம் எதிர்வினை ஆற்றுவதில் கவனம் வேண்டும் – https://bit.ly/392tVzh

5.உங்கள் முன் நீங்கள் அவிழ்க்கும் நிகழ்தகவுகள் யாவை? – https://bit.ly/3a3Ta5k

4.ஒரு ‘தீ’க்கு இன்னொரு தீ தேவைப்படாது – https://bit.ly/2xQQp9r

3.‘எண்ணங்களே நம் வாழ்வைக் கட்டமைக்கின்றன’ – https://bit.ly/2Quz6RQ

2.இந்தப் பிரபஞ்சத்தின் அலைக்கு அளப்பரியச் சக்தி இருக்கிறது – https://bit.ly/3dbEeUR

1. ஒரு பொருள் அசைந்துகொண்டே இருப்பதில்தான் உயிர்ப்பு இருக்கிறது – https://bit.ly/393NmHE

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. கடைசியாய் எப்பொழுது முரண்பட்டீர்கள்? : பழனிக்குமார்
 2. "நல்லதை நினைப்போம், நல்லதே நடக்கும்" : பழனிக்குமார்
 3. "ஊட்டிக்குப் போகிறோம்..எப்படி ஆனாலும் போகிறோம்" -பழனிக்குமார்
 4. நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? நிறுவ முடியுமா?-பழனிக்குமார்
 5. யுவராஜ்ஜின் சவாலும், சச்சினின் அசைவறு மதியும்....பழனிக்குமார்
 6. தனித்துவமும், சுவாரஸ்யங்களும்-பழனிக்குமார்
 7. உங்கள் அக வயது என்ன?-பழனிக்குமார்
 8. குழந்தைமையிலிருந்து ஆளுமை -பழனிக்குமார்
 9. உங்களுக்குள் ஒரு அற்புதம் நிகழும்- பழனிக்குமார்
 10. தோல்வி தரும் மகிழ்ச்சி-பழனிக்குமார்
 11. கொரோனோ: எல்லோரும் வாழ்வோம் - பழனிக்குமார்
 12. நமக்கு நேர்கின்ற வினைகளுக்கு நாம் எதிர்வினை ஆற்றுவதில் கவனம் வேண்டும் - பழனிக்குமார்
 13. உங்கள் முன் நீங்கள் அவிழ்க்கும் நிகழ்தகவுகள் யாவை? - பழனிக்குமார்
 14. ஒரு ‘தீ’க்கு இன்னொரு தீ தேவைப்படாது - பழனிக்குமார்
 15. 'எண்ணங்களே நம் வாழ்வைக் கட்டமைக்கின்றன' - பழனிக்குமார்
 16. இந்தப் பிரபஞ்சத்தின் அலைக்கு அளப்பரியச் சக்தி இருக்கிறது - பழனிக்குமார்
 17. ஒரு பொருள் அசைந்துகொண்டே இருப்பதில்தான் அதன் உயிர்ப்பு இருக்கிறது -பழனிக்குமார்