1. அசைவறு மதி

அசைவறு மதி கேட்டேன் என்று பாரதியின் ஒரு விண்ணப்பம் இருக்கிறது. எவ்வளவு நுணுக்கமான வரி.

ஒரு பொருள் அசைந்துகொண்டே இருப்பதில்தான் உயிர்ப்பான பல விசயங்கள் உணரமுடியும். இரவு நேரங்களில், அசாதாரணப் பொழுதுகளில், சாலைகளில், நாயோ, மாடோ, ஏதோ ஒன்று அசைவற்றுப் படுத்துக்கிடந்தால் ஒரு விதமான பதற்ற மனநிலை வருகிறது. ஏதேனும் அசைவு தெரிந்தால் அவை தூங்குகின்றன என்றோ உயிருடன்தான் இருக்கின்றன என்றும் தெரியும்.

ஒரே இடத்தில் தேங்கியிருத்தல்கூட அவ்வளவு சுவாரஸ்யமாய் இருப்பதில்லை. கண்மாய் நீரைக் காட்டிலும் ஓடுகின்ற ஆற்றின் நீர் ஆக்ஸிஜன் அதிகளவை வைத்திருக்கும். இப்படி இயங்குநிலையில் உயிர்ப்பானப் பல புற விசயங்களைப் பார்த்துக் கடக்கும் எனக்கு இந்த ஒற்றைவரி ‘அசைவறு மதி’ கேட்டேன் பிரமிப்பைத் தருகிறது.

அசைவறு என்றால் அசைவுகளற்ற என்றே அர்த்தம். ஆனால் அது மட்டுமே அர்த்தமல்ல. அசைவறு என்பது சலனமற்று கிடத்தல், மாறிவிடாத மனநிலையுடன் இருத்தல், கொண்டதொன்றைப் பற்றியபடியே இருத்தல், நினைவுகளைக் குவித்தல் இப்படி பொருள் துலங்கலாம்.

Unwavering என்பது அசைவறு என்பதற்கான ஆங்கில வார்த்தையாக எடுத்தால் கொஞ்சம் இலகுவாய் இருக்கும். அசைவறு மதி என்பதைச் சொல்லும்பொழுது நிறைய நண்பர்களுக்கு அது புரியவில்லை. Unwavering Mind என மொழிப்படுத்துவதைவிட Unwavering Intelligence என மொழிப்படுத்துவதே எனக்கு இலகுவாயிருந்தது.

இதை எப்படி ஒரு விண்ணப்பமாக பாரதி வைத்திருக்கலாம் எனப் பார்த்தால், தன் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படாத மனநிலை உள்ள அறிவு வேண்டும் எனலாம்.

முதல் பத்தியில் நான் கூறிய அசையும், அசையா காரணிகளுக்கான ஒப்பீடு எல்லாம் புறப்பொருளாய் இருந்தன. அசைவது அசையாதது என. அசைவறு மதி என்பது அகப்பொருளாய் அமைகிறது. ஒரு மனநிலைசார்ந்த, ஓர் உளவியல் கோட்பாட்டின் திடத்தன்மைச் சார்ந்ததாக அமைகிறது.

மருந்து விற்பனைத்துறையில் இருப்பதால் வியாபாரம்சார்ந்த மனிதர்களைத் தினமும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஒரு பொருளை விற்பது என்பது அவ்வளவு எளிதல்ல. குறிப்பாக மார்க்கெட்டிங் என களப்பணி மேற்கொண்டு வாடிக்கையாளர்களைச் சந்திப்பது. உங்கள் மூளையில் அந்தந்த மாதாந்திரத்திற்கான இலக்குக் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த இலக்கை/டார்கெட்டை முடிக்க எந்தெந்த வாடிக்கையாளர்களை நாம் பார்க்கவேண்டும் எனப் பட்டியல் தயார் செய்திருக்க வேண்டும். மனதிற்குள் ஓர் இராணுவக் கட்டுக்கோப்புடன் ஒரு மாதத்திற்கான பயணநிரலை நாம் முன்கூட்டியே செய்திருக்கவேண்டும்.

இந்த வாரத்தில் எந்தெந்த ஊர்களுக்குப் பிரயாணிக்கப் போகிறோம், எந்த தினத்தில் எந்த நேரத்தில் எந்த வாடிக்கையாளரிடம் எந்தப் பொருளை எவ்வளவு ஆர்டராக எடுக்கப் போகிறோமென்ற திட்டவட்டமான பட்டியலை அந்த வாரத்தின் ஞாயிற்றுக்கிழமையே ஒரு வெற்றிகரமான பிரதிநிதி வைத்திருப்பார்.

உதாரணமாக ஞாயிற்றுக்கிழமையே, வரும் வியாழக்கிழமை காலை எந்த ஊரில் இருக்கவேண்டும் என்று தன்னுடைய மேலதிகாரிக்கு அவர் தெரிவித்திருக்கவேண்டும். இடையில் வேலைக்குச் செல்கையில் அவருடைய சொந்த வேலைகள் குறுக்கிடலாம். ஊரிலிருந்து வந்த நண்பர் உணவகத்திற்குக் கூப்பிடலாம். ப்ரியமானவர்கள் திரைப்படத்திற்குக்கூட கூப்பிடலாம். எல்லாவற்றிலிருந்தும் அகலாது, அணுகாது வாடிக்கையாளர் பார்ப்பதை டார்கெட் முடிப்பதை மனதில் வைத்துச் செயலாற்றிட வேண்டும்.
இரண்டு காரணிகள் அங்குப் பேசப்படும்.

1. பிரயாண நிரல் முன்கூட்டியே தீட்டப்படுவதால் இன்று சந்திக்கவேண்டிய வாடிக்கையாளரை நாளை பார்த்துக்கொள்ளலாம் எனத் தள்ளிப்போடுதல் ஆகாது.

2. நாம் இன்று செல்லாவிடில் நம் போட்டியாளர் உள் நுழைந்துவிடுவார்.

இதுபோன்று கவர்ச்சிகரமானப் புறக்காரணிகளால் ஈர்க்கப்படும்பொழுது டார்கெட்டை நினைவில் வைத்து எது கொள்கையோ அது நோக்கி நகர்வதுகூட அசைவறு மதிதான்.

எந்தப் புறக்காரணிகளாலும் நம் மனநிலையின் சமநிலையைத் (balancing Mind) தவறவிடாமல் இருப்பதுகூட எமோஷனல் இண்டெலிஜென்ஸ் ஆகும்.

விற்பனைப் பிரதிநிதியாக நான் பணியாற்றிய ஒரு மல்டிநேஷனல் கார்ப்பரேட் கம்பெனியில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ந்தது. மேலாளர்கள் பிரதிநிதிகள் எனச் சங்கமித்திருந்த அன்றைய மாலை அது. மார்க்கெட்டிங் மேனேஜர் கரன்தீப் அவர்கள் ஒரு கேள்வியை முன்வைத்தார். வெயிலில் அலைய வேண்டும் மழைக்கு ஒதுங்கவேண்டும். மருத்துவர்களின் அறைக்கு வெளியே நோயாளிகளுடன் நிற்கவேண்டும். சரியான நேரத்தில் முறையான சாப்பாடு இல்லாத வேலை. ஒவ்வொரு மாதமும் டார்கெட். இந்தவருடம் முடித்தால் அடுத்தவருடம் அதைவிட அதிகமான டார்கெட், அதற்கேற்றபடி ஆர்டர்கள் கிடைப்பதில்லை, விரக்தியைத் தருமளவிற்கு வெற்றி தராத பயணங்கள். இத்தனை இருக்கின்றன. எது உங்களை இன்னும் இந்தத் தொழிலில் நிலைநிறுத்திவைக்கிறது என்று கேட்டார்.

பொதுவாக நமக்கு மேலிருப்பவர்கள் கேள்வி கேட்பது ஏதோ அந்தந்த நேரத்து கேள்வியாக மட்டும் அதைப் பார்க்கக்கூடாது. கேள்வி கேட்டமாத்திரத்தில் நான்குபேரும் அமைதியாக இருந்தோம். ஆனால் பதில் சொல்லித்தானே ஆகவேண்டும். முதலாவதாக பதில் சொன்னவர் பொத்தம்பொதுவான குடும்ப வறுமையைக் காரணமாக முன்வைத்தார்.

இரண்டாவதாகப் பேச முன்வந்தவர் பதினைந்து வருடங்களாய் இருப்பதால் அடுத்து என்ன வேலை போக முடியும் என்றார்.

வேலைக்குச் சேர்ந்து அல்லது இந்தத் தொழிலுக்கு வந்து இரண்டே வருடங்கள் ஆன மூன்றாவது நபராக நான் பதில் சொல்லவேண்டும். சிறுபிள்ளைத்தனமான மாஸ் இண்டெலிஜென்ஸ் இருக்கிறது. இதுபோன்ற கார்ப்பரேட் ஆட்கள் கூட்டங்களில் கேள்வி கேட்டதும் அவர்களுக்குப் பிடித்தப் பதிலைக் கூறுவது. தனிப்பட்ட அளவில் அது பொய்யாகக்கூட இருக்கலாம். ஆனால் கேள்விகேட்போரின் மனதைக் குளிரவைப்பது. அதைத்தான் கூட்டங்களில் இலக்கணமாக ஒரு கூட்டம் செய்யும். அப்படி பொத்தம்பொதுவான பதிலாக இந்த வேலை எனக்குப் பிடித்தது அதனால் சேர்ந்தேன் எனக் கூறினேன்.

புதியதாய் வேலைக்குச் சேர்பவர்கள் எந்தப் பிரச்சினைக்கும் உள்ளேபோகாமல் கூட்டத்தோடு ஐக்கியமாகும் வகை மனிதர்கள் தனக்கு முன் நிற்பவர் என்ன சொன்னாரோ அதையே சொல்வது என்று எனக்கு அடுத்த நபர் வேலை பிடித்தது சேர்ந்தேன் என நான் கூறியதையே கூறினார்.

கரன்தீப் சற்று நேரத்திற்கு எங்கள் இருவரை மட்டும் பார்த்தார். குடும்ப வறுமை, வேறுவழியில்லை எனக்கூறிய சீனியர்களை விட்டுவிட்டு எங்களைப் பார்த்தது எங்களுடைய பதிலில் அவர் திருப்தியடையவில்லை என்று தெரிந்தது.

மறுபடியும் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன. உங்கள் வீட்டில் உங்கள் உறவினர்கள் உங்கள் நண்பர்கள் உங்கள் வேலையின் அயர்ச்சியை ஒவ்வாமையை உங்களிடம் வெளிப்படுத்துவார்கள். உங்கள் மீதான அக்கறையில் உங்களுடன் அப்படிச் சொல்வார்கள். உங்கள் நண்பர்கள் ஏதாவது அலுவலகத்தில் அமர்ந்தபடி வேலை பார்ப்பார்கள். உங்களைப்போல வெயிலில் மழையில் அலையாமல் சம்பாதிப்பார்கள். அதைப் பார்த்து அந்தமாதிரி வேலை பார்க்க ஆசைவரவில்லையா என்றார்..

இப்பொழுதுதான் கரன்தீப் எங்கு வருகிறார் என எனக்குத் தோன்றியது. ஆனால் நான்காவது நபர் அதை யோசிக்காமல் பதில் கூறினார்…. ஆம் சார் ஆசையாகத்தான் இருக்கிறது. இது ஒரு Wavering Mind.

நிறுவனத் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் அவ்வப்பொழுது தங்கள் குழுவில் இருக்கும் வேலையாட்களின் மன ஓட்டத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டே இருப்பதுதான் அவர்களுக்கு வெற்றி.

எந்தத்தொழிலைச் செய்தாலும் அதில் முழு ஈடுபாட்டுடன் இருந்தால் மட்டுமே நம்மால் சாதிக்கமுடியும். அசைவறுமதி என்பது அதுதான். தனது Wavering Mindஐ பதிலாகக் கூறிய நான்காவது நபர் மூன்றே மாதத்தில் நிர்வாகத்தில் இருந்து நீக்கப்பட்டார் அல்லது நீங்கினார்.

இந்த நிகழ்வில் இரண்டு காரணிகளை எடுக்கலாம்.

1. உங்களது அசைவறு மதியின் தரத்தை யார் வேண்டுமானாலும் பரிசோதிக்கலாம். மனிதர்களோ நீங்கள் நம்பும் கடவுள் போன்ற சக்திகளோ அல்லது நமக்கு மாறிக்கொண்டே வரும் சுழல்களோ. எல்லாவற்றிலும் கலந்தூறிய பிறகும் நம் மனநிலை அப்படியே இருக்கவேண்டும்.

2. கொள்கை பிடிப்பற்ற Wavering Mind இருக்கும் கூட்டாளிகள் இணைந்து செயல்படும் குழு செயல்பாட்டின் வேகத்தைப் பின்னுக்குத் தள்ளுபவர்கள் என்பதைத் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் கண்டறியவேண்டும்.
அதற்கான கலந்துரையாடலைத் தொடர்ந்து நடத்திச்செல்லல் வேண்டும்.

உண்மையில் கரன்தீப்பிற்கு நான்கு பதில்களில் மோசமான பதில் எது என்று கண்டறிந்தார். அந்த மனநிலையை மாற்ற முயற்சிப்பது எல்லாம் ஒரு காலகட்டத்தில் பயிற்சி அளிப்பார்கள். இப்பொழுதெல்லாம் அந்தக் காலஅளவு எல்லாம் கொடுப்பதில்லை. ஆளை மாற்றிவிட்டு வேறோரு ஆளை நியமித்துவிடுவார்கள்.

அசைவறு மதி என்பது தனக்கு மட்டும் தேவைப்படுவது அல்ல. ஒரு குழுசார்ந்த வளர்ச்சிக்கும் அத்தியாவசியப்படுகிறது.

நான்காவது நபரின் பதிலை விவரித்து எழுதியதில் நான் கூறிய பதிலைச் சொல்லவில்லை. “ஒரு தொழில் நமக்கு ஒத்துவருமா என்பதற்கு முழுதாய் நாம் அதைப் புரிந்துகொள்ள குறைந்து மூன்றுவருடம் ஆகுமே சார், மூன்றுவருடம் கழித்து பதில்சொல்கிறேன் என்றேன்”.

இதில் கரன்தீப் வைத்த சோதனை யார் யார் நம் நிறுவனத்தில் தொடர்ந்து இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள் என்பதே. தொர்ந்து நிர்வாகத்தில் இருக்க நினைப்பவன் நிர்வாகத்தின் அத்தனைப் போக்குகளையும் ஏற்றுக்கொள்வான். நிர்வாகத்தை முழுதாய் ஏற்றுக்கொள்பவனுக்கு நிர்வாகத்தில் இருந்தாகவேண்டிய பற்றும் கட்டாயமும் உண்டாகும். தன்னை இருத்திக்கொள்வதற்கு அவன் உழைப்பைக் கொடுத்தாக வேண்டும். அதற்கு இடையூறாய் வரும் எல்லாப் புறக்காரணிகளையும் புறந்தள்ளி நிர்வாகம் சொல்லும் இலக்கை அடையும் மனத்திடமாய் ‘அசைவறு மதி’ நிலையுடன் இருப்பர்.

இங்கு நிர்வாகம் எனக்குறிப்பிடப்பட்ட இடத்தில் எல்லாம் நண்பர்களுக்கான வெளியில், குடும்பத்திற்குள் என ஒப்பிட்டுப் படித்தால் உங்களுக்கு அசைவறு மதி இருக்கிறது என்றுகூட நினைத்துக்கொள்ளலாம்.

இன்னும் தெளிவுபெற இல்லை என்றால் அசைவறுமதி வேண்டுமெனக் கேட்போம்..

-தொடரும்

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. கடைசியாய் எப்பொழுது முரண்பட்டீர்கள்? : பழனிக்குமார்
 2. "நல்லதை நினைப்போம், நல்லதே நடக்கும்" : பழனிக்குமார்
 3. "ஊட்டிக்குப் போகிறோம்..எப்படி ஆனாலும் போகிறோம்" -பழனிக்குமார்
 4. நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? நிறுவ முடியுமா?-பழனிக்குமார்
 5. யுவராஜ்ஜின் சவாலும், சச்சினின் அசைவறு மதியும்....பழனிக்குமார்
 6. தனித்துவமும், சுவாரஸ்யங்களும்-பழனிக்குமார்
 7. உங்கள் அக வயது என்ன?-பழனிக்குமார்
 8. குழந்தைமையிலிருந்து ஆளுமை -பழனிக்குமார்
 9. உங்களுக்குள் ஒரு அற்புதம் நிகழும்- பழனிக்குமார்
 10. தோல்வி தரும் மகிழ்ச்சி-பழனிக்குமார்
 11. கொரோனோ: எல்லோரும் வாழ்வோம் - பழனிக்குமார்
 12. பிரச்சினைகளைக் கண்டு அச்சப்படாதீர்கள் - பழனிகுமார்
 13. நமக்கு நேர்கின்ற வினைகளுக்கு நாம் எதிர்வினை ஆற்றுவதில் கவனம் வேண்டும் - பழனிக்குமார்
 14. உங்கள் முன் நீங்கள் அவிழ்க்கும் நிகழ்தகவுகள் யாவை? - பழனிக்குமார்
 15. ஒரு ‘தீ’க்கு இன்னொரு தீ தேவைப்படாது - பழனிக்குமார்
 16. 'எண்ணங்களே நம் வாழ்வைக் கட்டமைக்கின்றன' - பழனிக்குமார்
 17. இந்தப் பிரபஞ்சத்தின் அலைக்கு அளப்பரியச் சக்தி இருக்கிறது - பழனிக்குமார்