அசைவறு மதி 21
சில தாத்தா காலத்து வாட்சப் ஃபார்வர்ட்கள் இருக்கின்றன. அதில் சில நல்ல விசயங்கள் நம்மை வந்து சேரும். அப்படியான ஒன்று:
ஒரு கிராமத்தில் நெடுநாட்களாக மழை இல்லாமல் இருந்ததாம். மக்களைக் கூட்டி ஒரு பெரியவர் தியானம் செய்யலாம், அப்படிச் செய்தால் மழை பெய்யும் என்று அழைத்தாராம். ஊர் மக்கள் வந்து நின்றனர். கூட்டத்தில் ஒரு பொடியன் குடையுடன் வந்தானாம். எல்லோரும் அவனைப் பார்த்துக் கேலி செய்தனராம். பெரியவர் தியானம் செய்யச்சொல்ல அனைவரும் தியானம் செய்ய அன்றைக்குப் பெரிய மழை உடனே வந்ததாம். பொடியன் குடை பிடித்துக்கொண்டுச் சென்றானாம். இது தான் நேர்மறை சிந்தனை என்று ஒரு செய்தி வந்திருந்தது.அனைவருக்கும் வந்திருக்கும். பெரும்பாலும் தெரிந்த கதை தான் இது.
இன்னொரு கதை கூட இருக்கிறது.
ஒருவர் தன்னந்தனியாய் ஒரு ஹோட்டல் வைத்து நடத்திவந்தாராம். அவரது ஹோட்டலில் சுவை நன்றாக இருந்ததால், பெருங்கூட்டம் கூடுமாம். நல்ல வியாபாரமாம். கடைவீதியில் இருந்தோருக்கு எல்லாம் அவரது வியாபார வளர்ச்சியைப் பார்த்து பொறாமைபட்டனராம். ஒரு நாள் இரவு எதிர்பாராதவிதமாய் அவரது ஹோட்டலில் தீப்பிடித்துவிட்டதாம். எல்லாப் பொருள்களும் எரிந்து கருகிவிட்டன. காலையில் அவர் வந்து பார்க்கும்பொழுது ஒரு பொருள் கூட மிஞ்சவில்லையாம். கடைவீதியில் பொறாமைபிடித்தச் சிலர், இனி இவர் எப்படி வியாபாரம் செய்வார் என்று பார்க்கலாம் என்று நேரடியாகவே சொன்னார்களாம். ஹோட்டலுக்கு வந்த அந்த முதலாளி ஒரு கரும்பலகை எடுத்து, நாளை முதல் வழக்கம்போல் ஹோட்டல் செயல்படும் என்று எழுதிவைத்துவிட்டு ஒதுங்கவைக்கும் வேலையைப் பார்த்தாராம். இருப்பதைக்கொண்டு அடுத்தநாள் ஹோட்டலையும் திறந்தாராம்.
இப்படியானக் கதைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். உங்களுக்கே தெரிந்திருக்கும் இது எல்லாம் நேர்மறை சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகப் புனையப்படும் கதைகள்.
உண்மையில் நேர்மறை சிந்தனை எப்படி ஒருவருக்கு உருவாகிறது. அது என்னென்ன விளைவுகளை எல்லாம் ஏற்படுத்துகிறது என்று பார்ப்பது அவசியம்.
நேர்மறை சிந்தனை வைத்துக்கொள் என்று தன்னம்பிக்கை பேச்சாளர்களும், தன்னம்பிக்கைத் தொடர்களும் சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் சிலருக்கு எப்பொழுதெல்லாம் நேர்மறை சிந்தனை வேண்டும் என்பதில் சிக்கல் வந்துவிடுகிறது. நான் மருந்து விற்பனை துறையில் இருப்பதால் நேர்மறை சிந்தனைவாதிகளை அடிக்கடி பார்ப்பதுண்டு.
உதாரணத்திற்கு சில மருத்துவமனைகளில், நோயாளிகள் மற்றும் மருத்துவர் கலந்துரையாடுவதைப் பார்ப்பதுண்டு. அதில் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் எப்பொழுதும் நேர்மறையான வார்த்தைகளையே சொல்வர். நோயாளியின் மனதிற்குள் நேர்மறையான சிந்தனைகளையே விதைப்பர்.
ஒரு புதிய மருந்தின் வேலையை நிர்ணயம் செய்வதற்கு ஆய்வக நடவடிக்கையாக நோயாளிகளுக்குக் கொடுத்துப்பார்ப்பர். அப்பொழுது அவர்களுக்கு ஆய்வு செய்யும் புதிய மருந்தையும் , எந்த மருந்தும் நிரப்பப்படாத காலி கேப்சூல் (ப்ளேஸிபோ) லையும் தருவார்கள். இது நோயாளியின் உளவியலோடு தொடர்புடைய ஆய்வாக அமையும். சில நோயாளிகள் முதல்நாள் பயங்கர கால்வலி என்றிருப்பார்கள். அவர்களுக்கு அந்த காலி கேப்சூல் அதாவது ப்ளேஸிபோ கொடுப்பார்கள். அடுத்த நாள் அந்த நோயாளி நேற்று மருந்து சாப்பிடதற்குப் பின் வலி குறைந்தது என்பார்கள். இது PLACEBO EFFECT ஆகும். இது எல்லாம் ஒரு நேர்மறை சிந்தனையின் அடிப்படையில் இருந்து எழுவது. மாத்திரை சாப்பிட்டால் நமக்குக் குணமாகும் என்பது நம்பிக்கை. நம்பிக்கையில் அது நேர்மறை.
குழந்தைப்பேறு இல்லாத்தம்பதியினருக்கு மகப்பேறு சிகிச்சை மருத்துவர்களில் சிலர் பல நேர்மறையான சிந்தனைகளை அந்தத் தம்பதியினருக்குச் சிந்திக்கச் சொல்லித்தருவர்.
ஒரு குழந்தையின் பெயரை யோசித்து வையுங்கள் என்று கூறுவர். குழந்தைகளை எப்படி வளர்க்கலாம் என்று திட்டம் போடுங்கள் என்றுலாம் கூறுவார்கள். அப்படியானச் சிந்தனைகள் அந்தத் தம்பதியினருக்கு, நமக்குக் குழந்தை உறுதி என்ற நேர்மறை சிந்தனையைத் தூண்டும்.
நமக்கே நமக்கான ஓர் இலக்கு இருக்கும்பொழுது, அதை அடைவதற்கான வழிகளில் ஒன்று, அது அடைந்துவிட்டால் என்னென்ன செய்வோம் என்று கற்பனை செய்வது தான்.
ஒரு உடற்பயிற்சி மையத்தில் எடை குறைக்கச் சேர்ந்த ஒருவனுக்கு, அந்த ஜிம் மாஸ்டர், ஒரு நைட் பேண்ட் தருகிறார். அது அவரின் இடுப்பளவில் சிறியதாக இருக்கிறது. அது தனக்குப் பொருந்தவில்லை மாஸ்டர் என்கிறார்.
அப்படியானால், பொருந்தும்படியாய் உங்கள் வயிற்றைக் குறையுங்கள் என்று மாஸ்டர் கூறினாராம்.
உடல் எடை குறைக்கவேண்டும் என்று நடவடிக்கைகளை ஆரம்பிக்கும்பொழுதே , உடல் எடையைக் குறைத்துவிட்டால் என்ன என்ன செய்யலாம் என்று கற்பனை செய்துவிடுவது நல்லது. நமக்கு ஃபிட்டாய் இருக்கும் ஆடைகளை உடுத்தலாம் என்று சிந்திப்பது கூட நேர்மறை சிந்தனை தான். இதை நான் கூடச் செய்திருக்கிறேன். இரண்டு வருடங்களுக்கு முன் உடல் எடை 88 கிலோவைத் தாண்டி போய்க்கொண்டிருந்தது. ஒரு செல்ஃபி எடுத்துப்பார்த்தால், ஜூம் செய்யாமலேயே முகம் வீங்கி மொபைல் ஸ்க்ரீன் முழுக்க நான் தெரிந்தேன். உடல் எடையைக் குறைக்க பல திட்டங்கள் போட்டு களத்தில் இறங்கினேன். முதற்கட்டமாக மூன்று ஆண்டுகளுக்கு முன் வாங்கிய டீ ஷர்ட்கள் எனக்கு இறுக்கமாய் இருந்தன. அவற்றைத் தூக்கி எறியாமல் பாதுகாத்தேன். இடுப்பளவை அளந்தேன். அதைக்குறித்துக்கொண்டேன். பழைய டீ ஷர் ட் தான் இலக்கு. அதைப் போட வேண்டும். ஆறு மாதங்கள் தான். டீ ஷர்ட்க்குள் நுழைந்துகொண்டேன். ஒரு வருடம் இடுப்பளவு குறைந்தது. ஒன்றைச் செய்யவேண்டும் என்றால் அதைச் சாதித்தபிறகு நாம் எப்படி உணர்வோம் என்பதை இப்பொழுதே உணர்வதே நேர்மறைச் சிந்தனைக்கான எரிபொருள்.
ஒரு கார் வாங்க வேண்டும். அது இலக்கு. கார் வாங்கிவிட்டால் எங்கு எங்கு செல்லலாம் என்று சிலர் கற்பனை செய்துகொள்வார்கள். உண்மையில் சொல்லப்போனால் அந்தக் கற்பனை தான் அவர்களின் கார் வாங்கவேண்டும் என்ற இலக்கை நீர்த்துப்போகாமல் இருக்கச்செய்யும். அது தான் நேர்மறை சிந்தனையின் விளைவு.
நமக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. ஒரு விசயம் செய்யவேண்டும் என்று நினைக்கும்பொழுது, இது எப்படி நடக்கப்போகிறதோ என்ற பதட்டம் இருக்கும். அந்தப் பதட்டத்தைப் பொத்திபொத்தி வைத்து மனதிற்குள் வளர்த்துக்கொண்டிருப்போம். ஆனால் இது நடந்தே ஆக வேண்டும் என்றோ, நடத்திக்காட்டுவோம் என்ற நம்பிக்கையையோ வளர்க்கமாட்டோம். அது தான் POSITIVE THINKING நேர்மறை சிந்தனை.
நம் மனதை நேர்மறை சிந்தனை நோக்கி நாம் தான் ஒழுங்குபடுத்தவேண்டும். நாம் சந்திக்கும் சந்தர்ப்பங்களை வாய்ப்பாக மாற்றும் வல்லமை நேர்மறை சிந்தனைக்கு உண்டு. சந்திக்கும் சந்தர்ப்பங்களில் வாய்ப்புகளைத் தேடும்படிக்கு நம் மனதிற்கு நாம் சொல்லித்தரவேண்டும். ஒவ்வொரு சந்தர்ப்பமும் சொல்லிக்கொண்டு வராது. நாம் தான் சூழ்நிலைக்கேற்றபடி மனதில் நேர்மறையான எண்ணங்களைத் திரட்டி ஒவ்வொரு தருணத்திலும் ஆகச்சிறந்த வாய்ப்புகளை உருவாக்கவோ, தருவிக்கவோ வேண்டும்.
நாம் தோல்விகளையே சந்திக்கவில்லை என்றால் நாம் பெற்ற வெற்றிக்கு அவ்வளவு அனுபவம் இல்லை என்று அர்த்தம். பல தோல்விகளுக்குப் பிறகு கிடைக்கும் வெற்றி பல அனுபவங்களைத் தரும். கீழே விழுந்ததற்கும் திரும்ப எழுவதற்கும் உள்ள கால வித்தியாசம் தான் வெற்றியைத் தீர்மானிக்கிறது. அந்த வித்தியாசத்தில் தான் நமது நேர்மறை சிந்தனைகள் தேவைப்படுகின்றன.
ஜென் நம்பிக்கைகளில் ஒன்று, இந்தப் பிரபஞ்சத்திற்கு நம் நேர்மறை சிந்தனைகளைக் கிரகிக்கும் சக்தி உண்டு. அந்த நேர்மறை அலைகள் நமக்கு நேர்மறையான விளைவுகளையே கொண்டு வந்து தரும்.
சுருக்கமாய் முன்னோர்கள் சொல்லிச்சென்றிருக்கிறார்கள்.
நல்லதை நினைப்போம், நல்லதே நடக்கும்.
அசைவறு மதி அதைச் செய்யும்…..
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- கடைசியாய் எப்பொழுது முரண்பட்டீர்கள்? : பழனிக்குமார்
- "ஊட்டிக்குப் போகிறோம்..எப்படி ஆனாலும் போகிறோம்" -பழனிக்குமார்
- நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? நிறுவ முடியுமா?-பழனிக்குமார்
- யுவராஜ்ஜின் சவாலும், சச்சினின் அசைவறு மதியும்....பழனிக்குமார்
- தனித்துவமும், சுவாரஸ்யங்களும்-பழனிக்குமார்
- உங்கள் அக வயது என்ன?-பழனிக்குமார்
- குழந்தைமையிலிருந்து ஆளுமை -பழனிக்குமார்
- உங்களுக்குள் ஒரு அற்புதம் நிகழும்- பழனிக்குமார்
- தோல்வி தரும் மகிழ்ச்சி-பழனிக்குமார்
- கொரோனோ: எல்லோரும் வாழ்வோம் - பழனிக்குமார்
- பிரச்சினைகளைக் கண்டு அச்சப்படாதீர்கள் - பழனிகுமார்
- நமக்கு நேர்கின்ற வினைகளுக்கு நாம் எதிர்வினை ஆற்றுவதில் கவனம் வேண்டும் - பழனிக்குமார்
- உங்கள் முன் நீங்கள் அவிழ்க்கும் நிகழ்தகவுகள் யாவை? - பழனிக்குமார்
- ஒரு ‘தீ’க்கு இன்னொரு தீ தேவைப்படாது - பழனிக்குமார்
- 'எண்ணங்களே நம் வாழ்வைக் கட்டமைக்கின்றன' - பழனிக்குமார்
- இந்தப் பிரபஞ்சத்தின் அலைக்கு அளப்பரியச் சக்தி இருக்கிறது - பழனிக்குமார்
- ஒரு பொருள் அசைந்துகொண்டே இருப்பதில்தான் அதன் உயிர்ப்பு இருக்கிறது -பழனிக்குமார்