நண்பனின் அண்ணன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி. கிட்டத்தட்ட அத்தனை நண்பர்களையும் இணைத்த மாலை. காதல் திருமணம். இருவரும் பெங்களூரில் ஒரே இடத்தில் வேலை செய்கிறார்கள். இருவீட்டினரும் சம்மதித்து, ஆடல் பாடல் என பெண்ணும் ஆணும் சேர்ந்து ஆடிப்பாடி, திருமண நிகழ்வு என்பது எங்கோ இருந்து இவ்வளவு அற்புதமான ஒன்றாக பரிணாமம் அடைந்து இருப்பது மகிழ்ச்சியாக இருந்தது.
இரவு சாப்பாடு முடித்து கிளம்பும் போது ஐயப்பன் அந்த வாக்கியத்தைச் சொல்லி இருக்காவிட்டால் அப்படி அப்படியே கிளம்பி இருப்போம்.
“கொசு கடிச்சா டப்புனு அடிச்சு தூக்கிப் போடுற மானிக்க ஆகிருச்சுல்லடா இந்த லவ் மேரேஜ்லாம் இப்ப.. லவ் பண்றேன்ப்பா, அப்பிடியா மகளே, உன் லவ்வர கூட்டிவா கல்யாணம் பண்ணி வைப்போம்னு”
சிரித்தான். எங்களுக்கும் அவன் சொன்ன உவமைக்காக சிரிப்பு வந்தது. ஆனால் அவன் குறிப்பால் உணர்த்த நினைத்த சம்பவம் கண் முன் வந்தது.
நான் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தேன். அக்கா தான் எழுப்பினாள்.
“ஏண்டா ஊரே அல்லோலப்படுது, தூங்கிட்டு இருக்க”
என்ன ஏதென்று புரியாமல் விழித்தேன். எழுந்தவுடன் விழிக்கும் விழிப்பல்ல. ஒன்றும் புரியாமல் விழிப்பது.
“ஐயப்பனோட அக்காவக் காணமாம்டா.”
வெகு கவனமாக ஓடிப்போய்விட்டாளாம் என்ற சொல்லை அக்கா தவிர்த்திருந்தாள் என்பது பரபரப்பாக எழுந்து வெளியே ஓடி நண்பர்களுடன் இணைந்த பொழுது தான் புரிந்தது. பெரும்பான்மையானவர்கள் ஆரம்பிக்கும்போதே, “ஓடிப்போய்ட்டாளாம்ய்யா” என்பதாகத்தான் இருந்தது.
ஐயப்பனின் அம்மாவிற்குத்தான் நம்ப முடியவில்லை, தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவரின் உற்ற தோழி, பள்ளியில் இருந்தே உடன் படித்த தோழி, ராணி டீச்சர், அருகில் அமர்ந்திருந்தார். எதுவும் பேசவில்லை.
ஐயப்பன் வீட்டிற்குள் இருந்து அவர்கள் தாத்தாகாலம் கீத்தா காலம் என எதையோச் சொல்லிக்கொண்டு ஒரு பெரிய கத்தி போன்ற ஒன்றை எடுத்து வந்தான்.
“மாப்ள, தெப்பக்குளம் இல்லாட்டி வண்டியூர் பக்கம் தான் மாப்ள, கெடச்சா செதச்சிருவோம்”
என எம் 80யை எடுத்தான்.
அதற்காகவே காத்திருந்தது போல் நண்பர்கள் தத்தமது வண்டியை எடுத்துக்கொண்டார்கள்.
நான் ஐயப்பன் வண்டியில் அமர்வதைத் தவிர்த்து, ரமேஷ் வண்டியில் ஏறப்போனேன்.
முதல் வண்டி உருமல் சத்தம் கேட்டதும் வரிசையாக எங்கள் நான்கைந்து பேரின் வண்டியும் உரும அந்த இடம் புகை மண்டலமாகியது.
ஒரு நொடிதான்.
ராணி டீச்சர் எழுந்து வந்து ஐயப்பனை ஓங்கி ஓர் அறை விட்டார்.
மொத்த வண்டிச் சத்தமும் அப்படியே அமுங்கியது.
“கத்தி எடுத்துட்டுப் போறானாம், அக்காள வெட்ட, ஆளும் மண்டையும் பாரு”
அடுத்த பார்வை எங்களை நோக்கித்தான்.
ஐயப்பனின் அம்மாவை அழைத்துக்கொண்டு உள்ளே போனார், டீச்சர்.
ஓரிரு நொடியில், ஐயப்பனிம் அம்மா ஓவென பெருங்குரலெடுத்து அழும் சத்தம் கேட்டு ஓடினான். நாங்களும் தொடர்ந்தோம்.
உள்ளே, அம்மா தரையில் அமர்ந்து தலையில் அடித்துக்கொண்டு அழ, எதிரே அமைதியாக ராணி டீச்சர் அமர்ந்திருந்தார்.
ஐயப்பனின் அப்பா, தலையை ஆட்டிக்கொண்டே எழுந்து வெளியே போனார்.
பெருமூச்சு விட்ட ராணி டீச்ச்சர், எங்களைப் பார்த்து,
“இங்க பாருங்கடா, எல்லாம் சொல்லிட்டேன். இன்னும் ரெண்டு நாள் போகட்டும். அதுவரைக்கும் பேசாம இருக்கணும்”
சிறு வயதில் இருந்தே ராணீ டீச்சர் எனில் எங்களுக்கு எல்லாம் பயமும் மரியாதையும். ஐயப்பனின் அம்மாவிற்கு நெருங்கிய தோழி என்பதால் அவன் செல்லப்பிள்ளை.
டீச்சர் அருகில் சென்றவன் ஒன்றும் புரியாமல் நிற்க,
அவன் கையைப் பிடித்து இழுத்து தரையில் உட்கார வைத்தார் டீச்சர்.
“ஒங்க அம்மாக்காரி இருக்காளே, நாங்க ஸ்கூல்ல படிக்கும்போது, டீச்சர் ஆகணும்னு இவதான் எந்நேரமும் சொல்லிட்டே இருப்பா, எங்க விட்டான் ஒங்க தாத்தன்? நல்லாக் கேட்டுக்க,
ஒங்க அக்கா எங்கயும் போகல. நாந்தான் பத்தரமா அனுப்பி வச்சுருக்கேன். ரெண்டு வருசம் முன்னாடியே சொன்னேன். ஒங்கம்மாக்கு ஒங்கப்பாக்கிட்ட பயம். ஏன் இத்துணூண்டு இருக்க அரவேக்காட்டுப்பய ஒன்னயப்பாத்தும் பயப்படுறா ஒங்கம்மா. இந்தா எப்பவோ ஒங்க கெழவன் வச்சுருந்த கத்திய எடுத்துட்டு வர்றியே, இதுக்குத்தான் பயந்துருக்கா போல, நாலு அப்பு அப்பினா எடுப்பியோ?”
எங்களுக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. ஆனாலும் அமைதியாக இருந்தோம்.
“ஏண்டா காலேஜ்ல லெக்ச்சரரா இருக்கான், நல்ல சம்பளம், ஒங்க அக்காவும் லெக்ச்சரரா இருக்கா. ரெண்டு பேருமே அடுத்து ஃப்ரபசர் ஆகிருவாங்க. வேற ஜாதின்றதுக்காக இவ்ளோ பண்ணுவீங்களாடா? முட்டாப்பயலுகளா, அங்க எங்க ஊர்ல இந்நேரம் ஜாம் ஜாம்னு கல்யாணம் நடந்து முடிஞ்சிருக்கும். ஊர்ல இருக்க எல்லாப் பெருசுகளும் சேர்ந்து நின்னு பண்ணி வச்சுருக்காங்க. அவ்வளவு நல்ல ஊர்க்காரங்க, இனி எல்லாம் நல்லாத்தான் இருப்பாங்க”
ராணி டீச்சரிடம் ஐயப்பனின் அக்கா தஞ்சம் அடைந்திருக்கிறாள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே. எவ்வளவோ சொல்லியும் கேட்காமல், கணவன், மகன், ஜாதி என காரணங்கள் நிற்க, சொந்தத்தில் திருமண ஏற்பாடு செய்திருக்கிறார் அம்மா. ராணி டீச்சர் மிக நேர்த்தியான ஏற்பாடு செய்து, உங்கள் வீட்டை நான் பார்த்துக்கொள்கிறேன் எனக் கூறி திருமணம் செய்து வைத்துவிட்டார்.
சில வருடங்கள் ராணி டீச்சருடன் பேசுவதை ஐயப்பனும் அவன் அப்பாவும் தவிர்த்தார்கள். ஆனால் டீச்சர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நேராக உள்ளே சென்று அவன் அம்மாவிடம் எப்பொழுதும் போல் சத்தமாகப் பேசிவிட்டு, சிரித்துவிட்டு, அம்மாவையும் சிரிக்கவைத்துவிட்டுப் போவார். குழந்தை பிறந்தவுடன் எல்லாம் சரியாகும் எனும் அற்புத வாக்கியம் இருக்கிறதல்லவா, அதுபோலவே நிகழ்ந்தது. டீச்சர்தான் குழந்தையை தூக்கிக்கொண்டு வந்தார்.
ஐயப்பனின் அக்கா எங்கள் வீட்டிற்கு வரும்போதெல்லாம் அக்காவிடம் அடிக்கடி கூறுவது “ராணி டீச்சர் மட்டும் எங்கம்மாக்கு ஃப்ரெண்டா இல்லாட்டி அவ்ளோதான்”
எனக்கு வியப்பாக இருக்கும். பொதுவாக டீச்சர் மட்டும் இல்லாட்டி என்றுதானே சொல்வார்கள். இங்கே அம்மாவின் நட்பு எனும் பதம் என்னை இப்போது வரை ஈர்த்துக்கொண்டே இருக்கிறது. தலைவி கூற்று தலைவன் கூற்று என்பதற்கு இணையாக தோழி கூற்று எனும் பாடல்கள் நிறைந்தவை நம் இலக்கியம். ஒரு பாடலின் தோழி இன்னொரு பாடலில் தலைவியாக இருந்திருக்கலாம் எனத் தோன்றும்.
மகளைக் காணவில்லை என அழுது புலம்பும் தாயைத் தேற்றும் தாயின் தோழி கூற்றுப் பாடல் இது.
அழகிய கழலை அணிந்த, வேல் ஏந்திய வீரனோடு உன் மகள், கை நிறைய வளையல்கள் அணிந்துகொண்டு சென்றுவிட்டாள், இரண்டு விடலைகளும், நாலூர் எனும் ஊரின் தொன்மையான ஆலமரத்தடியில் அமர்ந்து கோசர் சொல்லும் சொற்கள் எல்லாம் உண்மையாவதைப்போல முரசு இயம்ப சங்கொலிக்க திருமணம் செய்துகொண்டுவிட்ட மகளும் காதலனும் இப்போது பெரியவர்கள் ஆகிவிட்டனர் என்பதும் உண்மையாகிவிட்டது தோழி, கவலைப்படாதே”
எனத் தேற்றுகிறாள்.
இதை, அறத்தொடு நிற்றல் என்கிறது .சங்கப்பாடல். அதாவது, தோழி, பின் தோழியின் தாய், இருவரும் தலைவிக்கு உதவுவது. பின்னர் அதை, தலைவியின் பெற்றோருக்கு, முதலில் தாயிடம், எடுத்துச் சொல்லி புரியவைப்பது, அறத்தொடு நிற்றல். ஏனெனில் தூய்மையான காதலை அறம் என்று நம்பியது, சங்க காலம்.
பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி ஆய்கழற்
சேயிலை வெள்வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே.
- ஒளவையார்
குறுந்தொகை பாடல் : 15
ஆய்கழல் – அழகிய கழல் அணிந்த. ;தொகுவளை- வளையல்கள் வரிசையாக தொகுப்புபோல் அணிந்த கைகள். ; பறைபட- முரசு இயம்ப,; பணிலம்- சங்கு, ஆர்ப்ப- ஒலிக்க
தொன்மூதாலத்து- தொன்மையான முதுமையடைந்த ஆலமரத்து.
*
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 16: தெறூஉம் தெய்வம் - நர்சிம்
- மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 15: அளியள் - நர்சிம்
- மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 14 : முலையிடைப் பள்ளம் பெருங்குளம் ஆனதே - நர்சிம்
- மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 13 : உன் சும்மா அழகையே கண்ணால் தாண்டுதல் அரிய காரியம். - நர்சிம்
- மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 12. பையுள் மாலையில் எமியமும் தமியரும். – நர்சிம்
- மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 11. “நெசமாவா சொல்ற?” - நர்சிம்
- மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 9 : செங்காற் பல்லியும் உகிர்நுதி ஓசையும். - நர்சிம்
- மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 8 : ளாக்கம்மா கையைத் தட்டு - நர்சிம்
- மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 6 : நீயலேன் – நர்சிம்
- மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 5 : பூ உதிரும் ஓசை - நர்சிம்
- மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 4 : பூவிடைப்படினும் யாண்டு கழிந்தன்ன – நர்சிம்
- மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 3 : ரோஜா மொக்கும் குருவித்தலையும். - நர்சிம்
- மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 2 : உயிரை வாங்கும் Possessiveness - நர்சிம்
- மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 1 : வில்லோன் காலன கழலே - நர்சிம்