ஹார்மோன் மாயாஜாலங்கள் – 5

காலை ஆறு மணிக்கெல்லாம் வீட்டு கதவை தட்டிக்கொண்டு நிற்கும் சூரியன் பனிரெண்டு மணிக்கெல்லாம் பெட்ரோல் விலைபோல அனல்பறந்து மாலை ஆறுமணிக்கெல்லாம் சமத்தாய் வீட்டிற்கு போய்விடுவது ஊரறிந்த கதைதான். இப்படி நேரம் பார்த்து வேலை செய்யும் சூரியன் வீட்டு கடிகாரத்தில் ஏதேனும் பிரச்னையென்றால் அது சூரியனை பாதிக்காது. ஆனால் நேரம் காலம் பார்க்காது வேலை செய்யும் உங்கள் உயிர்கடிகாரத்தில் ஏதேனும் பிரச்னையென்றால்  கட்டாயம் உங்களை அது பாதிக்கும்…

சுவர்கடிகாரம், கைக்கடிகாரம் சரி அதென்ன உயிர்கடிகாரம்? 

இயற்கையாகவே அந்த சூரியன் போலத்தான் நம் உடல் ஒரு சுழற்சி அடிப்படையில் இயங்குகிறது. காலையில் விழிப்பு வருவது, இரவில் தூக்கம் வருவது, நேரத்திற்கு பசி எடுப்பது என எல்லா செயல்களும் இயல்பாகவே நமக்கு நடக்கிறது இல்லையா, அதைத்தான் அறிவியலில் உயிர்கடிகாரம் என்று சொல்கிறார்கள். நம் உடலின் ஒவ்வொரு செல்லுக்குள்ளும் இந்த உயிர்கடிகாரம் இருக்கிறது. அதை நாம் தொந்தரவு செய்யாத வரை அதுவும் நம்மை தொந்தரவு செய்யாது. எப்படி நம் வீட்டு கடிகாரத்திற்கெல்லாம் பேட்டரியோ, சாவியோ கொடுத்துவிட்டால் அது சிவனே என்று ஓடிக்கொண்டிருக்கிறதோ, அதுபோல இந்த உயிரியல் கடிகாரத்தை கட்டுப்படுத்துவது மூளையில் அமைந்திருக்கும் பினியல் சுரப்பி (Pineal Gland). இது வெளிவிடும் மெலடோனின் (Melatonin) என்ற ஹார்மோன் தான் இந்த உயிரியல் கடிகாரத்தின் சாவி.

மெலட்டோனினும் உயிர்கடிகாரமும்:

பீனியல் சுரப்பி என்பது மூளையில் ஒரு கூம்பு வடிவில் அமைந்திருக்கும் சிறிய சுரப்பி. ஏழு வயதுவரை இது வளரும். பிறகு இதன் வளர்ச்சி குறைந்துவிடும். இது சுரக்கும் மெலட்டோனின் ஹார்மோன் பகல் நேரத்தில், அதாவது அதிக வெளிச்சத்தில் மிகக்குறைந்த அளவிலும்,  இருளில் அதிகமாகவும் சுரந்து மனிதனின் தூக்கத்தையும், அதன் மூலமாக அவனது ஆரோக்கியத்தையும் நிர்ணயம் செய்கிறது. உங்கள் பினியல் சுரப்பியின் முக்கிய செயல்பாடு, கண்களின் விழித்திரையிலிருந்து தினசரி ஒளி-இருட்டு சுழற்சியைப் (Dark-Light) பற்றிய தகவல்களைப் பெறுவதும், அதற்கேற்ப மெலட்டோனினை உற்பத்தி செய்து வெளியிடுவதும் ஆகும். இதன் காரணமாக, மெலட்டோனின் “தூக்க ஹார்மோன்” என்று அழைக்கப்படுகிறது. மெலட்டோனின் தூக்கத்திற்கு அவசியமில்லை என்றாலும் கூட உங்கள் உடலில் அதிக அளவு மெலட்டோனின் இருக்கும் போது நீங்கள் நன்றாக தூங்குவீர்கள்.

மெலட்டோனின் அதிகம் சுரக்கும் இரவில் விழித்திருந்தும், மெலட்டோனின் குறைவாகச் சுரக்கும் பகலில் உறங்கியும் நாம் செய்யும் குளறுபடிகள் தான் நோய்களுக்கெல்லாம் முக்கியக் காரணம்’ என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். உயிர்க் கடிகார சுழற்சி அனைவருக்கும் பொதுவானது எனினும், ஒவ்வொருவருக்கும் சிறிது வேறுபடும். குறைந்தபட்ச சுழற்சி நேரம் 22 மணி நேரம் அதிகபட்ச சுழற்சி நேரம் 25 மணி நேரம். மெலடோனோனும் உயிர்கடிகாரமும்:

பொதுவாக உயிர்கடிகாரம் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. 

  1. அதிகாலை 4 மணி முதல் மதியம் 12 மணிவரை, ‘எலிமினேஷன்’ (elimination) எனப்படும் கழிவுகளை வெளியேற்றும் நேரம்.
  2. மதியம் 12 மணிமுதல், இரவு 8 மணிவரை, ‘ஆப்ரோபிரியேஷன்’ (appropriation) எனப்படும் உணவு உட்கொள்ளும் நேரம்.
  3. இரவு 8 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை, ‘அஸிமிலேஷன்’ (assimilation) எனப்படும் செரிமானமான உணவினை கிரகித்துக் கொள்ளும் நேரம்.

இது சரியாக நடக்கும் போது உடலில் உள்ள உணவின் சக்திகள் எரிக்கப்பட்டதும் பசியைத் தூண்டி, உணவு கிடைக்கவில்லை என்றால், ஏற்கெனவே உடலில் சேமிக்கப்பட்டுள்ள கலோரிகளைப் பயன்படுத்தி, மூளைக்கு ஆக்சிஜன் செல்வது குறைந்ததும், தூக்கம் வரச்செய்து கொண்டிருந்த உயிரியல் கடிகாரம், இப்போது மூளை அலைவரிசைச் செயல்பாடு (Brain wave activity), ஹார்மோன் சுரப்பு (Hormone production), புதிய செல் உற்பத்தி (Cell regeneration) மற்றும் உயிரியல் செயல்பாடுகள் (Biological activities) ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் தடுமாற ஆரம்பித்திருக்கிறது.

உங்கள் பினியல் சுரப்பியின் செயல்பாடு மற்றும் மெலடோனின் வெளியிடும் திறன் ஆகியவை பின்வரும் சூழ்நிலைகளால் பாதிக்கப்படலாம்:

பினியல் சுரப்பி கட்டிகள்.

பீனியல் சுரப்பியை பாதிக்கும் காயங்கள்.

பினியல் சுரப்பி கால்சினேற்றம் .

பினியல் சுரப்பி கட்டிகள் மிகவும் அரிதானவை. இந்த  கட்டிகள் எப்போதும் புற்றுநோயாக இருக்காது, ஆனால் அவை உங்கள் மூளையின் மற்ற பகுதிகளை  அழுத்துவதால் அவை வளரும்போது இன்னும் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.

TBI எனப்படும் (Traumatic brain injury) புறவழி மூளைக் காயம் அல்லது மண்டையோட்டிற்குள்ளான காயம் பீனியல் சுரப்பியை கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கும். புறவழி மூளைக் காயம் உலகளவில் உயிரிழப்பு மற்றும் ஊனத்திற்கான முதன்மைக் காரணங்களில் ஒன்றாக விளங்குகிறது. கீழே விழுதல், வாகன விபத்துகள், வன்முறை ஆகியவற்றால் இவை ஏற்படுகின்றன.

பீனியல் சுரப்பியில் கால்சியம் படிவது மிகவும் பொதுவானது. அதிகப்படியாக கால்சியம் படிவதால் திசு கடினமாகி உங்கள் பினியல் சுரப்பி சரியாக செயல்படுவது தடைபடலாம். அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பினியல் சுரப்பியின் கால்சியம் படியும் அளவு அதிகமாக இருப்பதாக சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

பீனியல் சுரப்பியில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அறுவைசிகிச்சை, கதிர்வீச்சு(Radiation) மற்றும் கீமோதெரபி (Chemotherapy) சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. மெலடோனின் இயல்பை விட குறைவாக சுரக்கும் ஒரு நிலை இருக்கும் சமயங்களில் மருந்து வடிவிலும் அது பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும் நாளமில்லா சுரப்பிகளில் கடைசியாக கண்டறியப்பட்ட சுரப்பி இதுவேயாகும். ஆன்மீகத்தில் மூன்றாவது கண் என்று அழைக்கப்படும் இதன் செயல்பாடு முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை.

– மாயாஜாலங்கள் தொடரும் –

                                                                                                                                                                                                        (ndeepika98@gmail.com)

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. அண்டகம் சுரக்கும் ஹார்மோன்கள் - தீபிகா நடராஜன்
  2. கணையம் - தீபிகா நடராஜன்
  3. அட்ரினல் சுரப்பி - தீபிகா நடராஜன்
  4. தைமஸ் சுரப்பி - தீபிகா நடராஜன்
  5. நாளமில்லா சுரப்பிகள் - தீபிகா நடராஜன்
  6. கேடயசுரப்பி - தீபிகா நடராஜன்
  7. உடல் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் - தீபிகா நடராஜன்
  8. சுரப்பிகளின் நடனம் -தீபிகா நடராஜன்
  9. உணவில் பிறக்கும் உணர்வுகள் - தீபிகா நடராஜன்
  10. ஹார்மோன் மாயாஜாலங்கள் - தீபிகா நடராஜன்