ஹார்மோன் மாயாஜாலங்கள் –  4   

ஆளு வளந்த அளவுக்கு அறிவு வளந்து இருக்கா பாரு என்ற அர்ச்சனையை கடக்காமல் நாம் வளர்ந்திருக்கவே முடியாது. உண்மையில் மனிதனின் உடல் வளர்ச்சிக்கும் அறிவு வளர்ச்சிக்கும் துளியும் சம்மந்தமே இல்லை தெரியுமா?

ஆம்! எலும்பு, தசை உள்ளிட்ட உடலின் மொத்த வளர்ச்சிக்கும் காரணமாக இருப்பது பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் வளர்ச்சி ஹார்மோன். குறிப்பாக, ஒருவரின் உயரத்தையும் அதற்கான உடலமைப்பையும் கவனித்துக்கொள்வது இதுதான். விதிவிலக்காக, மூளை வளர்ச்சி, முடி வளர்ச்சி, பாலுறுப்பு வளர்ச்சி இந்த மூன்றையும் இது கவனிப்பதில்லை.

பிட்யூட்டரி சுரப்பியின் முன்பகுதியான அடினோஹைப்போபிஸிஸ் (Adenohypophysis) ஐந்து விதமான ஹார்மோன்களை சுரக்கிறது.

  1. GH எனப்படும் வளர்ச்சி ஹார்மோன் (Growth hormone) அல்லது ஸொமேடோட்ரோடிபின் (Somatotrophin)
  2. TSH எனப்படும் தைராய்டு ஊக்குவிப்பு ஹார்மோன்
  3. ACTH எனப்படும் அட்ரினோ கார்ட்டிகோட்ரோபிக் ஹார்மோன் (Adrinocorticotrophic hormone)
  4. PRL எனப்படும் ப்ரோலாக்ட்டின் (Prolactin) அல்லது லாக்டோட்ரோபின் ஹார்மோன் (Lactotropin hormone)
  5. GTH எனப்படும் கோனாடோட்ரோபிக் ஹார்மோன் (Gonadotropic hormone)

 

  1. GH எனப்படும் வளர்ச்சி ஹார்மோன்:

இந்த ஹார்மோன்களே தசைகள், எலும்புகள் மற்றும் குருத்தெலும்புகளின் வளர்ச்சியை ஊக்குவித்து உடல் வளர்ச்சியை தூண்டுகிறது. இதன் சுரப்பு குறைந்தால் குள்ளத்தன்மையும் (Dwarfism), சுரப்பு அதீதமானால் நெட்டைத்தன்மையும் (Gigantism) ஏற்படுகின்றன. பதின்பருவத்தை கடந்து இந்த வளர்ச்சி ஹார்மோன்களின்  சுரப்பு அதிகரித்தால் அது “அக்ரோமெகலி” என்ற நோய்க்கு வழிவகுக்கும். இதனால் கை, கால் மற்றும் மண்டை எலும்புகள் விரிவடையும். தடையின் எலும்புகள் விரிவடைந்து அந்த பகுதி மட்டும் தனித்து தெரியும். சரியான சிகிச்சைகள் மேற்கொள்ளாத பட்சத்தில் மரணத்திற்கும் வாய்ப்புண்டு.

  1. TSH எனப்படும் தைராய்டு ஊக்குவிப்பு ஹார்மோன்:

இது தைராய்டு சுரப்பியின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி அதன் செயல்பாட்டை கட்டுக்குள் வைக்கிறது. இது தைராய்டு சுரப்பியை தூண்டி தைராக்ஸின் (Thyroxine), டிரைஅயோடோதைரோனின் (Triiodothyronine) எனும் இரண்டு  ஹார்மோன்களைச் சுரக்க வைக்கிறது. இவை உடல் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துகிறது, இதயம் மற்றும் ஜீரண மண்டலத்தின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது.  இந்த TSH சுரப்பில் ஏற்படும் மாற்றங்கள் தைராய்டு சுரப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி அதன் அளவை அதிகரித்து ஹைபோதைராய்டு (Hypothyroid) மற்றும் ஹைப்பர்தைராய்டு (Hyperthyroid) பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

  1. ACTH எனப்படும் அட்ரினோ கார்ட்டிகோட்ரோபிக் ஹார்மோன் (Adrinocorticotrophic hormone):

இந்த ஹார்மோன் அட்ரினல் சுரப்பியை தூண்டும் வேலையே செய்கிறது. இந்த ஹார்மோன் சுரப்பு அதிகரித்தால் அது “குஷிங்” நோய்க்கு (Cushing disease) வழிவகுக்கும். இதனால் திடீர் உடல் பருமன், முதுகில் கூனல், எலும்புகள் பலவீனமடைதல் மற்றும் கடுமையான மனஉளைச்சல் ஏற்படும். முறையான மருத்துவ சிகிச்சைகள் மூலம் இதை சமாளிப்பது சாத்தியமே.

  1. PRL எனப்படும் ப்ரோலாக்ட்டின் (Prolactin):

புரோலாக்டின் ஹார்மோன் பெண்களுக்கு மார்பக வளர்ச்சியைக் கவனிக்கிறது. பேறுகாலத்தில் பால்சுரப்பியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, பிரசவத்துக்குப் பிறகு தாய்ப்பால் சுரப்பைத் தூண்டுகிறது. புரோலக்டின் அதீத சுரப்பு ஈஸ்ட்ரோஜென், டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோன் சுரப்பை குறைக்கிறது.

  1. GTH எனப்படும் கொனாடோட்ரோபிக் ஹார்மோன் (Gonadotropic hormone):

இது இருவகையான ஹார்மோன் சுரப்பை தூண்டுகிறது

  1. FSH எனப்படும் ஃபாலிக்கிள்களைத் தூண்டும் ஹார்மோன்:

இது ஆண்களுக்கு விந்து செல்கள் உருவாவதையும், பெண்களுக்கு கருமுட்டை உருவாவதையும் ஊக்குவிக்கிறது. பெண்களின் உடலில் இந்த ஹார்மோன் சுரப்பு அதிகரித்தால் வயதிற்கு தகுந்த கருவுறுத்தலுக்கான வாய்ப்பை குறைகிறது.

  1. LH எனப்படும் லூட்டினைசிங் ஹார்மோன்:

இது ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. இனப்பெருக்க ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென்(Estrogen), ப்ரோஜெஸ்டெரோன்(Progesterone), டெஸ்டோஸ்டெரோன் (Testosteron) உற்பத்தியை தூண்டுகிறது. இந்த ஹார்மோன் சுரப்பு அதிகரித்தால் பருவ வயதினருக்கு கருமுட்டை வெளியாவதில் சிக்கல் ஏற்படும். வயது முதிர்ந்தோருக்கு மாதவிடாய் நிற்கும் தருணத்தில் இது நிகழும்.

– மாயாஜாலங்கள் தொடரும்

ndeepika98@gmail.com

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. அண்டகம் சுரக்கும் ஹார்மோன்கள் - தீபிகா நடராஜன்
  2. கணையம் - தீபிகா நடராஜன்
  3. அட்ரினல் சுரப்பி - தீபிகா நடராஜன்
  4. தைமஸ் சுரப்பி - தீபிகா நடராஜன்
  5. நாளமில்லா சுரப்பிகள் - தீபிகா நடராஜன்
  6. கேடயசுரப்பி - தீபிகா நடராஜன்
  7. உயிர்கடிகாரம் - தீபிகா நடராஜன்
  8. சுரப்பிகளின் நடனம் -தீபிகா நடராஜன்
  9. உணவில் பிறக்கும் உணர்வுகள் - தீபிகா நடராஜன்
  10. ஹார்மோன் மாயாஜாலங்கள் - தீபிகா நடராஜன்