ஹார்மோன் மாயாஜாலங்கள் 2      

நேர்முக தேர்வில் ஆடையின் நிறத்திற்கென மெனக்கெட்டு தனிக்கவனம் செலுத்துவது ஏன்?  திருவிழா, திருமணம் என வண்ணமயமான இடங்களுக்கு சென்றால் மனம் ஒருவித மகிழ்ச்சியில் இருப்பதை உணர்ந்து இருக்கிறீர்களா? அதை கூட விட்டு தள்ளுங்கள். பளிச்சென உடுத்தும் நாளில் ஒன்றுக்கு இரண்டு முறை கண்ணாடியை பார்த்து புன்னகைத்து கொள்வோம் தானே! அதற்கான காரணத்தை என்றேனும் யோசித்தது உண்டா நீங்கள்?

ஏனென்றால் வண்ணங்கள் கொண்டாட்டத்தின் குறியீடு! நிறங்களுக்கு மனதையும் உடலையும் உற்சாகமாய் வைத்திருக்கும் ஆற்றல் இருக்கிறது. ஒவ்வொரு நிறங்களுக்கும் வெவ்வேறு ஆற்றல், அதிர்வெண் மற்றும் அலைநீளம் உண்டு. இந்த நிறங்கள் நேரடியாக தன்னியக்க நரம்பு மண்டலத்தை (Autonomic Nervous System – ANS) குறிவைக்கின்றன. இதன் மின்தூண்டல்களுக்கு உட்பட்ட உடல் நடத்தையிலும், முடிவுகளிலும் கட்டாயம் மாற்றத்தை ஏற்படுத்துமென ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

செரட்டோனின், டோபமைன், ஆக்ஸிடோசின், எண்டோர்பின் போன்றவை மகிழ்ச்சி ஹார்மோன்கள் (Happy Hormones) என்று அழைக்கப்படுகின்றன. இந்த நான்கு ஹார்மோன்கள் தான் மகிழ்ச்சி உணர்வு ஏற்படுவதற்கு காரணமானவை. இதில் ஆக்ஸிடோசின் காதல் ஹார்மோன் என்று அழைக்கப்படுகிறது. மஞ்சள், நீலம், பச்சை நிறங்கள் இந்த ஹார்மோன்களின் அளவை அதிகரித்து உடலுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். இப்படி சூழலின் நிறங்கள் மனநிலையை தீர்மானிப்பது போலவே உணவின் நிறங்கள் உடல் நிலையை தீர்மானிக்கும்.

அது எப்படி நிறங்கள் உடல்நலனை தீர்மானிக்கும்?

நாம் உண்ணும் உணவு ஊட்டச்சத்துகளையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் சரிவிகித உணவாக இருக்க வேண்டியது அவசியம். இதில் புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நல்ல கொழுப்புகள் சரியான விகிதத்தில் இணைக்கப்பட வேண்டும். இதை இன்னும் எளிமையாக சொன்னால் ரெயின்போ டயட் (Rainbow Diet).

ரெயின்போ டயட் என்பது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ணங்களில் உள்ள பழங்கள், காய்கறிகள் மற்றும் கீரைகளை சாப்பிடுவதை உள்ளடக்கியது. மனிதர்களின் நிறத்திற்கு எப்படி மெலனின்கள் பொறுப்போ அதுபோல  தாவரங்களில் உள்ள நிறமிகள் அல்லது பைட்டோநியூட்ரியன்கள் தான் அவற்றின் நிறத்திற்கு பொறுப்பு. இந்த ரெயின்போ டயட்டை பின்பற்றுவதன் மூலம்  ஹார்மோன்களின் சுரப்பை தூண்டவும், கட்டுக்குள் வைக்கவும் முடியும்.

சிவப்பு: பிளம்,ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி,செர்ரி,பீட்ரூட்

ஆரஞ்சு: கேரட் பப்பாளி,ஆரஞ்சு மட்டும் சிட்ரஸ் பழவகைகள்

 மஞ்சள்: அவகேடோ,மஞ்சள் குடைமிளகாய், வாழைப்பழம்,

 பச்சை: பச்சை இலை காய்கறிகள்,முட்டைக்கோஸ்,ப்ரோக்கோலி

 நீலம் ப்ளூபெர்ரிஸ்

 ஊதா நாவல் பழம், உலர்திராட்சை, கத்தரிக்காய்

வெள்ளை: முள்ளங்கி,காலிஃபிளவர்,காளான்கள்

இப்படி நிறம், சுவை என பார்த்து பார்த்து நீங்கள் சாப்பிடும் உணவுப்பொருட்கள் உடலுக்குள் என்னென்ன மாற்றத்தை ஏற்படுத்துமென என்றேனும் நீங்கள் யோசித்தது உண்டா?

புரதசத்துதசைகளின் கட்டமைப்புக்கு புரதம் மிக முக்கியம். பொதுவாக மனித உடலுக்கு ஒரு நாளைக்கு 2000 முதல் 2500 கலோரிகள் வரை தேவைப்படுகிறது. அதில் பத்து முதல் முப்பத்தி ஐந்து சதவீத கலோரிகள் புரதசத்தால் பெறப்பட்டவையாக இருக்க வேண்டியது அவசியம். கிட்டத்தட்ட ஒரு கிலோ எடைக்கு 0.8 கிராம் புரதம் அவசியம்.

கொழுப்பு: தேங்காய், கொட்டை வகைகள், தயிர், யோகர்ட், பால், போன்ற ஆரோக்கியமான கொழுப்பை மட்டுமே சாப்பிட வேண்டும். கொழுப்பில் கரைய கூடிய வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே2 ஆகியவை நெய்யில் இருப்பதால், தினசரி உணவில் நெய்யை சேர்த்து கொள்ளலாம். தவிர ஹார்மோன் உற்பத்திக்கு ஆலிவ் எண்ணெய் பெரிதும் உதவுகின்றன.

நட்ஸ் & தேங்காய் எண்ணெய்:  மனித உடலினால் உற்பத்தி செய்ய முடியாத ஒமேகா3 யானது உப்பில்லா நட்ஸ்கள் மற்றும் அக்ரூட் பருப்புகளில் அதிக அளவு அடங்கிஉள்ளது. இந்த ஒமேகா 3 ஹார்மோன் சமநிலைக்கு பெரும் பங்களிக்கிறது.  டோபமைனை உற்பத்தி செய்ய, உங்கள் உடல் டைரோசின் எனப்படும் ஒரு அமினோ அமிலத்தை உடைக்க வேண்டும், இது பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள் மற்றும் ஆளி விதைகள் போன்ற விதைகளில் ஏராளமாக உள்ளது.

முட்டை மஞ்சள் கரு:  மஞ்சள் கருவில் ஏ, டி, ஈ, கால்சியம், இரும்பு மற்றும் செலினியம் உள்ளிட்ட பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இந்த வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இயற்கையாகவே ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகின்றன.

அசைவ உணவு:  கோழி, முட்டை மற்றும் இறைச்சி முதல் மீன் மற்றும் இறால்கள் வரை புரதச்சத்து நிறைந்த அனைத்தும் டைரோசின் நிறைந்ததாக இருக்கும் என்று அமெரிக்காவின் வேளாண்மைத் துறை (யு.எஸ்.டி.ஏ) தெரிவித்துள்ளது. உங்கள் அசைவ உட்கொள்ளலை அதிகரிப்பது உங்கள் டோபமைன் அளவை அதிகரிக்கும் என்பதே இதன் பொருள்.

சைவ புரதம்:  நீங்கள் ஒரு சைவ பிரியர் என்றால், டைரோசினை தாராளமாக பெற சோயா, பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ளலாம். இது உங்கள் டோபமைன் உற்பத்தியை அதிகரிக்கும்.

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள்: சீஸ், பால், தயிர் மற்றும் அடிப்படையில், அனைத்து பால் பொருட்களும் டைரோசினின் சிறந்த மூலமாகும். இது உங்கள் டோபமைன் உற்பத்தியை அதிகரிக்கும் சிறந்த வழியாகும்.

சாக்லேட்டுகள்:  இனிப்புகள் இரண்டு வழிகளில் செயல்படுகின்றன. முதலாவதாக, அவை உடலில் செரடோனின் ஹார்மோனை உருவாக்குகின்றன. இது மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும். இரண்டாவதாக, சாக்லேட்டுகளில் சிறிய அளவிலான ஃபைனிலெதிலாமைன் (Phenylethylamine) உள்ளது, இது உங்கள் மூளை செல்கள்  டோபமைனை வெளியிட தூண்டுகிறது

காபி: காபியில் உள்ள காஃபின் மூளையை எச்சரிக்கையாக வைப்பதுடன் டோபமைன் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. இதனால்தான் நீங்கள் காஃபினேட்டட் பானத்தை குடித்த பிறகு அதிக விழிப்புணர்வையும் கவனம் செலுத்துவதையும் உணர முனைகிறீர்கள்.

இந்த உணவு கட்டுப்பாடுகளுடன் தியானம் மற்றும் சிறு சிறு எளிய உடற்பயிற்சிகள் மூலம் ஹார்மோன் சமநிலையை எளிதாக கட்டுக்குள் வைக்கலாம்.

அதெல்லாம் சரி உயிரிவர்க்கத்தை இப்படி பாடாய் படுத்தும் இந்த ஹார்மோன்கள் எங்கிருந்து உற்பத்தியாகிறது?

தெரிந்துகொள்ள காத்திருங்கள்?

 – மாயாஜாலங்கள் தொடரும் –

 -ndeepika98@gmail.com-

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. அண்டகம் சுரக்கும் ஹார்மோன்கள் - தீபிகா நடராஜன்
  2. கணையம் - தீபிகா நடராஜன்
  3. அட்ரினல் சுரப்பி - தீபிகா நடராஜன்
  4. தைமஸ் சுரப்பி - தீபிகா நடராஜன்
  5. நாளமில்லா சுரப்பிகள் - தீபிகா நடராஜன்
  6. கேடயசுரப்பி - தீபிகா நடராஜன்
  7. உயிர்கடிகாரம் - தீபிகா நடராஜன்
  8. உடல் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் - தீபிகா நடராஜன்
  9. சுரப்பிகளின் நடனம் -தீபிகா நடராஜன்
  10. ஹார்மோன் மாயாஜாலங்கள் - தீபிகா நடராஜன்