7. திக்குத் தெரியாத உலகில்
ராம் பிரகாஷ் இரண்டு சாக்குப்பையில் கொஞ்சம் வீட்டுச்சாமான்களையும் துணிமணிகளையும் எடுத்துக்கொண்டு தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் தொடர்வண்டி ஏறி திருப்பூர் வந்து சேர்ந்துவிட்டார். அவரின் ஒடியாகிராமத்திலிருந்து இதுவரை 120 பேர் இங்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். ‘நீயும் வாயேன்’ என்று தசராவுக்கு வந்தபோது திரூப்பூர்வாசிகள் சிலர் கூப்பிட்டார்கள். அவருக்குப் போக விருப்பமில்லை. அப்புறம் சில நாட்கள் உள்ளூரிலே கழிந்தது. ஒரு கட்டத்தில் வேலையில்லாத காரணத்தாலும் உள்ளூர் தாக்கூர்கள் செய்யும் சாதிய அடக்குமுறைகளாலும் திரூப்பூர் போக தீர்மானித்தார். அதுமட்டுமில்லாமல், இளையவன் அடிபட்டு உயிருக்குப் போராடுகிறான். பக்கத்து வீட்டுப் பெண், பத்து வயதில் பாலியல் வன்முறைக்கு ஆளானபோது எதுவும் செய்யமுடியவில்லை போன்ற காரணங்கள்வேறு இருந்தது. அவர்களின் வன்முறை சலித்துப்போன ஒரு நாள் கிளம்புவது என்று தீர்மானித்துவிட்டார்.
பொது கம்பார்ட்மெண்டில்தான் நெருக்கி மூச்சுவிடத் திணறி பயணம் செய்தார். திருப்பூருக்கு வந்தபின் சகலையின் கைபேசி எண் கிடைக்கவில்லை. ஸ்விட்சுடு ஆப். வேறு யாரும் ஊரில் தெரியவில்லை. யாருடைய எண்ணும் அவனிடம் இல்லை. ‘வா’ என்று கட்டாயப்படுத்திக் கொண்டிருந்த ரமேஷ் எண்ணும் இல்லை. அவனது குழந்தைகள் அழ எங்கோ நடைமேடையில் கிடைத்த இட்லியும் வடையும் ஆறுதல் தந்தது. பின்பு மனைவியும் அழ ஆரம்பித்தபோது ஒருவர் ஆறுதலாய் சொன்னார்:
“பீகாரா, ஒடியாவா, மணிப்பூரா இல்ல வங்காளமா…? புரோக்கர் யாராச்சும் வருவாங்க. எங்கிட்ட ஒரு ஆள் நெம்பர் இருக்கு… வரச் சொல்றேன்.”
வேலைக்கு ஆள் எடுக்கும் இடங்களில் ஒன்றாகிவிட்டது தொடர்வண்டி நிலைய நடை மேடை(ரயில்வே பிளாட்பாரம்). வெளியூர்களிலிருந்து வேலைக்காக திருப்பூர் இடம்பெயர்ந்து வரும் தொழிலாளர்கள் முதலில் வந்திறங்கும் முக்கிய இடம் தொடர்வண்டி நிலைய நடை மேடைதான் (பிளாட்பாரம்). தினமும் 500 பேராவது திருப்பூருக்கு வந்திறங்குகிறார்கள். ஜனவரி மாதத்தில் மட்டும் 37000 பேர் வட மாநிலத்திலிருந்து வந்திருக்கிறார்கள்.
இப்படியாக, பீகாரிலிருந்து வந்திறங்கியத் தொழிலாளர்களை வரவேற்று,‘உணவு, எங்கே செல்ல வேண்டும், என்ன வேலை இருக்கிறது’ என்று உபதேசித்தும், நிபந்தனைகள் தந்தும் ஆட்களைப் பிடிக்கும் கும்பல் ஒன்றை திருப்பூர் தொடர்வண்டி நிலைய நடைமேடையில் சமீபத்தில் கண்டேன். நடைமேடையிலேயே அவர்களது தொழிலுக்கான அனைத்து நேர்காணல்களும் நடந்துமுடிந்துவிடுகின்றன.
திருப்பூர் போன்ற நகரங்களில் வீட்டு வேலை, கட்டிட வேலைக்கென்றில்லாமல் நேரடியாக தொழிற்சாலைகளுக்கே இந்தத் தொழிலாளர்கள் அனுப்படுகிறார்கள். உணவு விடுதியில் மேசை துடைப்பதிலிருந்து கட்டிட வேலை, அலுவலக உதவியாளர்கள்வரை இவர்கள்தான் நிறைந்திருக்கிறார்கள். இவர்களில் நிரந்தர வேலை வாய்ப்புகள், தற்காலிக வேலை வாய்ப்புகள், இவற்றுக்கிடையிலானவர்கள் என்றே பல பிரிவுகளில் தங்களை உட்படுத்திக்கொள்கிறார்கள். விவசாய சூழல் மாறிப்போனதும், வறுமையும், சாதீய அடக்குமுறையில் காலம்காலமாக இருந்து சிரமப்பட்டு வெளியேறத்துடிக்கும் ஆவலும் இந்தக் கூட்டத்தை அதிகரிக்கச் செய்துகொண்டே இருக்கிறது.
திருப்பூரின் மக்கள் தொகையில் (10 லட்சத்தில்) 5லட்சம் பேர் இந்த வெளி மாநில மக்கள்தான் இருக்கிறார்கள். இப்போதெல்லாம் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து திருப்பூர் வந்து வேலை செய்வது என்பது பழைய கதை. மேற்கு வங்கம், அஸ்ஸாம் பீகார், ஒடியா, ஜார்கண்டிலிருந்து என்று 5 மாநில மக்கள் ஒட்டுமொத்தமாக குவிந்திருக்கிறார்கள். பெரும்பாலும் தலித் மக்கள்தான் இந்த வேளைகளில் காணப்படுகிறார்கள். உயர்சாதிமக்கள் வெகுகுறைவு. இந்த 5 லட்சம் பேரில் 70-80 சதவீதம் இளைஞர்கள். 20 சதவீதம் குடும்பத்தினர். குடும்பத்தினர் என்றால் வயதானவர்கள் இருப்பதில்லை. பெரும்பாலும் தம்பதிகள், சிறு குழந்தைகள். வயதிற்கு வந்த பெண்களை ஊரிலேயே பாதுகாப்பு கருதி விட்டுவிட்டு வருகிறார்கள்.
1940களில் முதல் இலங்கை, மலேசியா, கிழக்காசிய நாடுகளுக்கு கஞ்சிக்கூலிகளாக தமிழர்கள் சென்றார்கள். கணினி நுகர்வு பொறியாளர்களை கடந்த முப்பது ஆண்டுகளில் ஐரோப்பியாவிற்கும் அமெரிக்காவிற்கும் அதிகமானவர்களைத் தள்ளி உள்ளது. குறிப்பாக திருப்பூர் வரும் இவர்களின் வாழ்விடங்கள் மிகவும் மோசமாக உள்ளன. பம்பாய் தாராவியை சேரிக்கு முன் அடையாளங்களாக முன்பு சொல்வார்கள். இப்போது சேரிகள் இல்லாத ஊர்களில் கூட இவர்களால் புது சேரிகள் உருவாக்கப்படுகின்றன. தொழிற்சாலைகளின் முத்தரப்பு ஒப்பந்தமோ, எந்த ஒப்பந்தமோ இவர்களுக்குத் தேவையில்லை. குறைந்த கூலி போதும், ஒரு தமிழனுக்கு, ஒரு கேரளத்துக்காரனுக்கு கொடுப்பதில் பாதி கூலி இந்த வட மாநிலத் தொழிலாளர்களுக்குத் தந்தால்போதும்.
வேலை செய்யும் உரிமை எங்கு சென்றாலும் உண்டுதான். ஆனால் உள்ளூர் தொழிலாளி இவர்களை விரோதமாகப் பார்க்கும் மனோபாவம் வளர்ந்துகொண்டே இருக்கிறது. மருத்துவமனைகளில் இந்தியில் அறிவிப்புகள், கட்டண விகிதங்களைச் சொல்லும் அட்டைகள் காணப்பட ஆரம்பித்து இப்போது பிரபல தொழிற்சங்கங்களே அவர்களின் பிரச்சினை பற்றி இந்தியில் பிரசுரங்களை அடித்து விநியோகிக்கிறார்கள் இங்கு. இடம்பெயர்ந்தத் தொழிலாளர்களை ஒருங்கிணைப்பது, தொழிற்சங்க நடவடிக்கைகளுக்குள் கொண்டு வரும் முயற்சிகள் வெற்றி அடைவது இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் அடிமைத்தனத்திருந்து அவர்கள் விடுபடவும், தொழிற்சங்க நடவடிக்கைகளுக்குள் வரவும் தொழிலாளர்களாகத் தங்களை உணர்வதும் நிகழ வாய்ப்பாக அமையும். கணினி துறையின் சிரமங்கள் காரணமாக ஊர், நாடு திரும்பும் கணினி பொறியாளர்கள், தொழிலாளர்கள் மத்தியில் இடம்பெயர்ந்தத் தொழிலாளர்கள் ஊர் திரும்புவது திருவிழா, பண்டிகை, திருமண சாவு காலங்களிலே மட்டுமே.
ராம் பிரகாஷ், அவரின் மனைவிக்கு ஏதாவது வேலை கிடைத்துவிடும். ஏற்றுமதியாளர்களின் ஒப்பந்த சம்பளமெல்லாம் கிடைக்காது. தினக்கூலிதான். கொத்தடிமைபோல் தங்க இடமும் கிடைத்துவிடும். ஆனால் சுவாசிக்க நல்ல காற்று இல்லாமல் திணருவதுபோல் திண்டாட்டமாய் வாழ்க்கை தொடரும் அவருக்கு.
இவர்களுக்கான நிவாரணங்களோ சமூக நலத்திட்டங்களோ உருவாக்கப்படாத வரைக்கும் இவர்கள் கொத்தடிமைகளாக நீடிக்கிற வாய்ப்புகளே அதிகம். தொடர்வண்டி நிலைய மேடை கையசைத்து ஊர் அனுப்பும் காட்சிகள் இப்போதெல்லாம் நெகிழ்ச்சிமிக்கதாகவும், சங்கடங்களைத் தருவதாகவும் மாறி வருகிறது. அகதி முகாம் போன்றத் தோற்றங்களையே இவர்களின் குடியிருப்புகள் தோற்றமளிக்கின்றன. அகதிகளின் வேறொரு முகம் இது.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
6. பொதுப் பள்ளிக்கல்வியும், பாடாய்படுத்தும் தொடக்கக்கல்வியும் – https://bit.ly/2xT99Fl
5.குழந்தைத் திருமணம்: பாதிக்கப்படும் பெண் குழந்தைகள் – https://bit.ly/391FmXT
4.வங்கதேசப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி – https://bit.ly/2vxbzIM
3.டாக்கா நகர பெண்களின் குரல்களைக் கேட்டோம் – https://bit.ly/3b6jyvB
2.பாலியல் கொடுமைகளின் நூறு முகங்கள் – https://bit.ly/2vysACp
1.வேலையிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல், பாலின பாகுபாடு – https://bit.ly/33wiGhg
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- வேடந்தாங்கலுக்கு வைத்த வேட்டு-சுப்ரபாரதிமணியன்
- மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியைச் சூழும் அழிவின் மேகங்கள்-சுப்ரபாரதிமணியன்
- கொரோனா காலத்துக் கொடுங்கதைகள்-சுப்ரபாரதிமணியன்
- கொரோனா: மாயன் காலண்டர் சொன்ன உலக அழிவா? - சுப்ரபாரதிமணியன்
- ஒரு கிராம் வைரஸ் படுத்தும் பாடு- சுப்ரபாரதிமணியன்
- 'டீ ஷர்ட்’களாக மாறும் தண்ணீர் பாட்டில்கள்- சுப்ரபாரதி மணியன்
- தகியாய் தகிக்கும் பூமி- சுப்ரபாரதி மணியன்
- எழுத்தாளனும் காய்கறியும்—சுப்ரபாரதிமணியன்
- பசுமை வியபாரம் : சுப்ரபாரதிமணியன்
- பொதுப் பள்ளிக்கல்வியும், பாடாய்படுத்தும் தொடக்கக்கல்வியும் – சுப்ரபாரதிமணியன்
- குழந்தைத் திருமணம்: பாதிக்கப்படும் பெண் குழந்தைகள் - சுப்ரபாரதிமணியன்
- வங்கதேசப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி - சுப்ரபாரதிமணியன்
- டாக்கா நகர பெண்களின் குரல்களைக் கேட்டோம்
- பாலியல் கொடுமைகளின் நூறு முகங்கள்
- வேலையிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல், பாலின பாகுபாடு -சுப்ரபாரதிமணியன்