திக்குத் தெரியாத உலகில்
பாலின பேத வன்முறை
(Gender Based Violence) – 6
“இலவச மிக்சி… ஃபேன் இப்பதா குடுத்தீங்க… கவர்மெணட் ஸ்கூல் எப்போ குடுப்பீங்க…” இந்த வார்தைகளின் ஒலி சோளகர் பழங்குடிகளிடமிருந்து சற்று உரக்கவே கிளம்புகிறது.
பர்கூர் மலைப்பகுதி. 25 கி.மீ.க்கு போக்குவரத்து வசதியே இல்லை. எந்தவகைப் பேருந்தும் இல்லை. அந்தியூரிலிருந்து 60 கி.மீ தூரத்தில் உள்ளது. தாமரைக்கரை வரை பேருந்து இருக்கிறது. அதிலிருந்து 25 கி.மீ.க்கு பெரும்பாலும் மோசமான பாறைகள், கற்கள், மண் பாதைத்தான்.
சுண்டைப்போடு கிராமக் குழந்தைத் தொழிலாளர்களின் பள்ளியில் 15 குழந்தைகளைக் கண்டேன். அது அரசு பள்ளி இல்லை. 1 கி.மீ.க்கு ஒரு தொடக்கப்பள்ளி இருக்கவேண்டும் என்பது அரசு சட்டம். அது குழந்தைகளின் அடிப்படை உரிமை. ஆனால் அரசு பள்ளிகள் இல்லாமல் தற்காலிகமாக சில வருடங்களாய் மூன்று கி.மீ.க்கு ஒரு குழந்தைத் தொழிலாளர் பள்ளியைச் நடராஜ் என்பவரின் ‘சுடர்’ தன்னார்வ அமைப்பு நடத்துவதைக் காணமுடிந்தது.
இப்படி 33 ஊராட்சிகளைக் கொண்ட அந்த மலைப்பகுதியில் 7 பள்ளிகளை ‘சுடர் அமைப்பு’ நடத்துகிறது. குழந்தைகளைத் தொடக்கக்கல்விக்காக இப்படி அலைக்கழிப்பது மனித உரிமைமீறல் என்று போடப்பட்ட ஒரு வழக்கின் காரணமாய் தற்போது கொங்காடையில் ஒரு தொடக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்படித்தான் போரே தொட்டி, பேட்ரொல்லா, அக்னிபாவி கிராமங்களில் இருக்கும் குழந்தைத் தொழிலாளர் பள்ளிகளைப் பார்த்தேன். ஒவ்வொன்றுக்கும் 3 கி.மீ தூரம். குழந்தைகள் தனியே செல்ல முடியாத கரடுமுரடான பாதைகள்.
இன்று 6-14 வயது குழந்தைகளுக்குக் கல்வி அடிப்படை உரிமையாகும். ஆனால் இன்றைய கல்விக்கொள்கை நமது குழந்தைகளில் பாதிபேருக்கு (பள்ளி வயதுக் குழந்தைகளின் மக்கள்தொகையான 20 கோடியில் 10 கோடிப் பேர் பள்ளிகளில் இல்லை. தொழிற்சாலைகளில் இருக்கிறார்கள்.) இந்த அடிப்படை உரிமையைக்கூடத் தரத் தவறிவிட்டது அரசு. பள்ளிகளில் சேர்ந்தோரில் கூட பெரும் பகுதியினர் குறிப்பிட்டக் கல்வித் திறமைகளைவிடக் குறைவாகவே இருக்கிறார்கள். பழங்குடியோருக்கான கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. தாராளமயக் கொள்கைகளையொட்டி அரசு தனது கல்விப் பொறுப்புகளிலிருந்து நழுவிவிட்டதை பர்கூர் மலைவாழ் பழங்குடியினரின் குழந்தைகளைக் கண்டபோது அறிந்தேன்.
கல்வி, ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சமத்துவச் சமுதாயத்திற்கு வழிகோலும் அருமையான கருவியாக இல்லாமல் இந்த உலகமயமாக்கல் சூழலில் ஏற்றத்தாழ்வுகளை நிரந்தரப்படுத்துகிற, அதை நியாயப்படுத்துகிற சாதனமாக மாறிவிட்டது. இந்த விபரீதநிலை வந்துவிடக்கூடாது என்று 50 ஆண்டுகளுக்குமுன்பான கோத்தாரி கமிசன் ‘ நம் நாட்டிற்கு பொதுப்பள்ளி கல்விமுறை தேவை’ வலியுறுத்தியது.
“தேசிய ஒருமைப்பாட்டை அடைவதில் கல்வியின் பங்கு முதன்மையானது. ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டு மக்களைப் பல மட்டங்களாகப் பிரிகின்ற இந்திய சமுதாயத்தில் அடிமட்டத்து மக்கள் மேலெழுவதற்கு வாய்ப்புகளில்லை. பல வர்க்கங்களுக்கிடையிலான இடைவெளி குறிப்பாக, பணக்காரர்-ஏழை, கற்றோர்-கல்லாதோர் ஆகியோரிடையிலான இடைவெளி பெருகிக் கொண்டு போகிறது. பொதுக்கல்வி முறை ஒரு தேசிய கல்வி அமைப்பை உருவாக்குவதற்கான அடித்தளமாக இருக்கவேண்டும். இதன்மூலம் பல சமுதாய வர்க்கங்களையும் பிரிவுகளையும் ஒன்றாக இணைத்து அதன்மூலம் ஒரு சமத்துவ, ஒருமைப்பட்ட சமுதாயம் உருவாவதை ஊக்குவிக்கலாம்”
பச்சைப்பசேலென்று விரிந்து கிடக்கிறது பீமா காடு… பழங்குடி மக்கள் அரசுக்கு வரி கொடுத்துவிட்டு குத்தகை போல் விவசாயம் செய்கிறார்கள். ராகி, சோளம், கொஞ்சம் யூரியா உபயோகம். பெரும்பாலும் இயற்கை விவசாயம் செய்கிறார்கள். கொஞ்சம் ஊழல் அதிகாரிகளுக்கு குறைந்த விலையில் போகவும் செய்கிறது. முக்கிய விளைச்சலில் ராகியைச் சாப்பிட்டு உரமேறிய திடகாத்திரமான உடல் மனிதர்கள். சோளகர் என்ற பழங்குடிகள் அப்புறம் லிங்காயத்துகள்.
பசுமை வீடு திட்டம், நமது திட்டம் ஆகியவற்றில் கட்டப்பட்ட சிறுசிறு கான்கிரிட் வீடுகள் துருத்தித் தெரிகின்றன. கொஞ்சமாய் மிளிர்கின்றன. மனே, கூரெ என்று செல்லமாய் தங்கள் படல் வீடுகளை அழைத்துக் கொள்கிறார்கள். தாள்களைச் சுருட்டி அதைப் பந்தாக்கி குழந்தைகள் உற்சாகமாய் நகோரி விளையாட்டை விளையாடுகிறார்கள்.
பர்கூர் மலைப்பகுதியில் மக்கள் பேசும் மொழி ஊராளி. இது உள்ளூர் மொழி. எனவே குழந்தைத் தொழிலாளர் பள்ளிகளில் அவர்களுக்குக் கல்வி தர வரும் ஆசிரியர்கள் ஓரளவு உள்ளூர் மொழியையும் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் கன்னடம். அக்னிபாவி கிராமம் அதிலொன்று. கிரெனைட் அதிகம் காணப்படும் பகுதி என்பதால் சர்ச்சையில் உள்ளது. கல்குவாரி ஒன்றும் அங்கு காணப்பட்டது. கிரைனெட் இருக்கிற அனுமானத்தில் தோண்டப்பட்ட பகுதிகளை மக்கள் முற்றுகை செய்து நிறுத்தி வைத்திருக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் இந்த மலைப்பகுதிகள் குண்டு வைத்து வெடிக்கப் படலாம். மக்களின் தேவைகளையும் அறியாமைகளையும் கூத்துப்பாட்டைப் பாடும் ஆதிப்பெண் பல வகைகளில் மக்களுக்குப் புரியும்படி பட்டாய்பாடிச் சொல்லியும் அவர்களுக்கு இது எவ்வளவு பெரிய பிரச்சினை என்று தெரியவில்லை. “நாசமாய் போன மக்கள் தொலைக்காட்சியில் மூழ்கிக் கிடக்கிறார்கள்” என்கிறாள்.
அடுத்த பள்ளிக்கு 3 கிமீ. நடக்கணும்… கொங்காடை பகுதியில் பொதி சுமக்க கழுதைகள் பயன்படுத்தப்படுகின்றன. அங்கங்கே ‘கத்தே’ கழுதைகள் திரிகின்றன. கழுதை லத்திகள் மற்றும் தூரத்தில் யானை லத்திகள் காணமுடிகிறது. கழிப்பறைகள் இல்லையென்றாலும் மனிதக்கழிவுகள் நேரிடையாக கண்ணில் படாதது ஆறுதலாக இருந்தது. ஒவ்வொரு வீட்டிலும் மாடுகள் இருந்தாலும பால் கறப்பதில்லை. எல்லோர் வீடுகளிலும் பால் இல்லாத தேனீர்தான்… விவசாயம்தான் அவர்களின் முதல் தொழில்…. அங்கு குழந்தைகளும் தொழிலாளிகளே…
எழுபது ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்கள் காலத்தில் தரப்பட்ட ஒரு அறிக்கையின் பெயர் சார்ஜண்ட் அறிக்கை. அது: “6-14 வயது வரை கட்டாய இலவச தொடக்கக் கல்வி தரவேண்டும். 3-6 வய்து வரை முன்தொடக்கக் கல்வி தரவேண்டும். இங்கிலாந்தில் இருப்பதைப்போல் அடுத்த 40 ஆண்டிற்குள் இந்தியர்களுக்குக் கல்வி தரவேண்டும் என்று சொன்னது.”
இன்று 3-6 வயது வரைக்குமான முன் தொடக்கக் கல்விக்கான பிளே-ஸ்கூல்கள் நகரங்கள் முதல் கிராமங்கள்வரை மலிந்துவிட்டன. 6-14 வயது வரை கட்டாய இலவசக்கல்வியில் கூட ஆங்கிலம் முன்நிலையில் இருக்கிறது.
பர்கூர் பகுதி விவசாயிகளின் குழந்தைகள் அடிப்படைத் தொடக்க கல்விக்காக அரசு பள்ளிகள் இல்லாமல் இன்னும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அம்மாவின் ஆட்சியில் இலவசப் பொருட்கள் வாரி இரைத்துக் கொண்டிருக்கும் காலத்தில் இந்த மாதம்தான் இலவசப் பொருட்கள் அங்கே விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. கொஞ்சம் தாமதமாகவே எட்டியிருக்கிறது.
“இலவச மிக்சி… ஃபேன் இப்பதா குடுத்தீங்க… கவர்மெணட் ஸ்கூல் எப்போ குடுப்பீங்க…” என்று உரக்கவே கேட்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
முந்தைய தொடர்கள்
5.குழந்தைத் திருமணம்: பாதிக்கப்படும் பெண் குழந்தைகள் – https://bit.ly/391FmXT
4.வங்கதேசப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி – https://bit.ly/2vxbzIM
3.டாக்கா நகர பெண்களின் குரல்களைக் கேட்டோம் – https://bit.ly/3b6jyvB
2.பாலியல் கொடுமைகளின் நூறு முகங்கள் – https://bit.ly/2vysACp
1.வேலையிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல், பாலின பாகுபாடு – https://bit.ly/33wiGhg
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- வேடந்தாங்கலுக்கு வைத்த வேட்டு-சுப்ரபாரதிமணியன்
- மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியைச் சூழும் அழிவின் மேகங்கள்-சுப்ரபாரதிமணியன்
- கொரோனா காலத்துக் கொடுங்கதைகள்-சுப்ரபாரதிமணியன்
- கொரோனா: மாயன் காலண்டர் சொன்ன உலக அழிவா? - சுப்ரபாரதிமணியன்
- ஒரு கிராம் வைரஸ் படுத்தும் பாடு- சுப்ரபாரதிமணியன்
- 'டீ ஷர்ட்’களாக மாறும் தண்ணீர் பாட்டில்கள்- சுப்ரபாரதி மணியன்
- தகியாய் தகிக்கும் பூமி- சுப்ரபாரதி மணியன்
- எழுத்தாளனும் காய்கறியும்—சுப்ரபாரதிமணியன்
- பசுமை வியபாரம் : சுப்ரபாரதிமணியன்
- புது அகதிகளின் உலகம் - சுப்ரபாரதிமணியன்
- குழந்தைத் திருமணம்: பாதிக்கப்படும் பெண் குழந்தைகள் - சுப்ரபாரதிமணியன்
- வங்கதேசப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி - சுப்ரபாரதிமணியன்
- டாக்கா நகர பெண்களின் குரல்களைக் கேட்டோம்
- பாலியல் கொடுமைகளின் நூறு முகங்கள்
- வேலையிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல், பாலின பாகுபாடு -சுப்ரபாரதிமணியன்