மதராஸின் புகழ் நம்பமுடியாத கதைகளால் வளர்க்கப்பட்டதல்ல. சுவையான உண்மைச் சம்பவங்களால் அடையப் பெற்றது. மதராஸின் கதை, மனதை லயிக்கவைக்கும் ஒரு பகுதியாக சரித்திரத்தில் அமைந்துள்ளது.
– கிளின் பார்லோ
கால எந்திரமொன்றில் பயணித்து மதராஸ் என்ற தொன்மையான வரலாற்றுப்புத்தகத்தின் கடந்தகால பக்கங்களின் சில சுவையான நிகழ்வுகளைப் பார்க்கும் ஒரு காலவெளி பயணம் இந்தத் தொடர்…
மதராஸ் – மண்ணும் , கதைகளும் -6
பிரிட்டிஷ்காரர்களில் சிலர் ஒதகமந்து, கொடைக்கானல் போன்ற குளிர்மிக்க மலைப்பிரதேசங்களிலும் வசிக்கவும், பலர் மதராஸில் வசிக்கவும் ஆர்வம்காட்டியுள்ளார்கள். மதராஸின் கடும்கோடையும், கொசுக்கடியும் தாங்கமுடியாமல் சிலர் ஓய்வெடுக்க மலைப்பிரதேசங்களை நோக்கிச்சென்றாலும் பலருக்கு மதராஸே விருப்பமாக இருந்துள்ளது. மதராஸ் நாள்தோறும் கப்பல்கள் வந்துபோகும் ஊர். இங்கிருந்து லண்டனுக்கு நாள்தோறும் விலை உயர்ந்த பொருட்களை ஏற்றிச்சென்று அங்கிருந்து நவீன எந்திரங்களை இறக்குமதி செய்துக்கொண்டே இருந்தார்கள். எனவே இயல்பாகவே பணம் கொழிக்கும் வியாபார தலைநகராக மதராஸ் இருந்தது. குறிப்பாக மதுவிடுதிகளும், கேளிக்கைகளும், விளையாட்டு பொழுதுபோக்குகளும் நிறைந்த ஊர்.
மதராஸில் ஒரு வேட்டை விடுதி (Hunting Club) இருந்ததுபோல ஒதகமந்துவிலும் ஒரு வேட்டை விடுதி இருந்தது. மதராஸ்போன்ற சமவெளியில் குதிரையில் சென்று வேட்டையாடுவது ஒருவித அனுபவம் என்றால் காடும், மலைகளும் மிக்க ஒதகமந்துவில் வேட்டையாடுவது இன்னொருவித அனுபவமாக இருந்தது. ஒதகமந்துவில் புலி, சிறுத்தை, கரடி, காட்டுமான்கள் , யானைகள் என்று எண்ணற்ற விலங்குகள் அவர்களுக்கு வேட்டையாட கிடைத்தன. அதேநேரம் மதராஸ் மாகாணம் முழுக்க அந்நாட்களில் குள்ளநரிகள் அதிகமாக இருந்தன. இவற்றை குதிரைகளில் துரத்தி வேட்டையாடுவதை மதராஸில் வசித்த ஆங்கிலேயர்கள் வாடிக்கையாக வைத்திருந்தார்கள். குள்ளநரிகளைத் துரத்திச் சென்று தாக்க பிரத்யேகமான இரும்பு மட்டைகளையும், துப்பாக்கிகளையும் வைத்திருந்தார்கள். நரிகளை வேட்டையாட பாக்ஸ்ஹவுண்ட் நாய்களை இங்கிலாந்திலிருந்து கப்பல் மூலமாக கொண்டு வந்து இறக்கினார்கள். ஆம். அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் நரிவேட்டை என்னும் விளையாட்டு புகழ்பெற்றிருந்தது. பெரிய விலங்குகளை வேட்டையாட ராஜபாளையம் நாய்களைப் பயன்படுத்திய அதேநேரம் இங்கிலாந்து பாக்ஸ்ஹவுண்ட்களை வைத்து குள்ளநரி, காட்டுமுயல் போன்ற சிறுவிலங்குகளை வேட்டையாடினார்கள். பாக்ஸ்ஹவுண்ட்கள் இந்தியக்கோடையைத் தாங்காது. எனவே கோடை வந்ததும் அவற்றைப் பராமரிக்கமுடியாமல் சுட்டுத் தள்ளிவிட்டு மீண்டும் புதிய பாக்ஸ்ஹவுண்ட்களைக் கப்பலில் இருந்து இறக்குவார்கள். பிரிட்டிஷாரின் இந்த நரிவிளையாட்டு என்ற வேட்டைவெறியின் முடிவில் மதராஸை சுற்றி இருந்த நரியினமே முற்றிலும் அழிந்து போனது. மெட்ராஸை சுற்றி எண்ணற்ற ஏரிகள் இருந்தன. ஆங்கிலேய அதிகாரிகளின் மனைவிமார்களுக்கு ஏரிகளில் நீந்தும் வாத்துகளையும், பறவைகளையும் சுடுவது விருப்பமான விளையாட்டாக இருந்துள்ளது. The Graphic, Madras Courier, Madras Musings போன்ற பத்திரிகைகளில் ஆங்கிலேயர்கள் பறவை சுடும் கருப்பு+வெள்ளை புகைப்படங்களைப் பார்க்கலாம்.
அந்நாட்களில் அடையாறு வேட்டை விடுதியைப்போல கிண்டி குதிரைப்பந்தய மைதானமும் பிரசித்தமாக இருந்துள்ளது. உயர்ரக குதிரைகளைக் கப்பலிலிருந்து இறக்கி பயிற்சி கொடுத்து பந்தயத்தில் கலந்துகொள்ள வைத்துள்ளார்கள். ஆனால் இந்த குதிரைப் பந்தயத்தில் பிரிட்டிஷ்காரர்களும், இந்திய ஜமீன்தார்களும், வசதிபடைத்த உயர்குடி மக்களுமே கலந்துள்ளார்கள். The Prince of Wales Edward VII சென்னை வந்தபொழுது கிண்டி குதிரைப்பந்தயத்தை பார்வையிட்டுள்ளார். ஆண்டு 1875. அப்போது கிண்டி குதிரைப்பந்தய விடுதியில் நிதிநிலைமை மோசமாக இருந்ததால் விடுதியை மூடிவிடுகிறார்கள். 1896 ஆம் ஆண்டு ஜனவரியில் மீண்டும் மெட்ராஸ் ரேஸ் கிளப்பை ஆரம்பிக்கிறார்கள். அப்போது ஏற்கனவே மூடப்பட்ட விடுதியின் பேலன்ஸ் ஷீட்டை சரிபார்த்து பழைய பாக்கியைப் புது விடுதியின் கணக்கில் சேர்த்துள்ளார்கள். அந்தத் தகவல்களை எல்லாம் பிரிட்டிஷார் துல்லியமாக ஆவணப்படுத்தியுள்ளார்கள். புதுக்கணக்கில் சேர்க்கப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா? பதினோரு ரூபாய் பதிமூன்று அணா பன்னிரெண்டு பைசாக்கள். குதிரைப்பந்தயம், அடையாறு வேட்டை விடுதி, அதில் நடந்த ஊழல்கள், நரிவேட்டை, அதன் பின்னால் இருந்த அரசியல், வேட்டைக்கு ஆங்கிலேயர்களுக்கு உதவியாட்களாகச் சென்ற ஒடுக்கப்பட்ட மக்கள், அவர்களின் வாழ்க்கைச்சூழல் பற்றியும் எனது ‘வலம்’ என்ற நாவலில் விரிவாகப் பதிவு செய்துள்ளேன்.
பிரிட்டிஷ் காலத்தில் மதராஸில் கொண்டாடப்பட்ட மிகப்பெரிய திருவிழாவாக பொங்கல் பண்டிகை இருந்துள்ளது. மக்கள் தீபாவளியைக்கூட அவ்வளவு ஆர்வமாகக் கொண்டாடவில்லை. பொங்கல் பண்டிகையையொட்டி விளையாட்டு விழாக்கள் நடந்துள்ளன. அதில் ரேக்ளா ரேஸ், பளுதூக்குதல், படகுப்போட்டி என்று பல்வேறு விளையாட்டுகள் நடந்துள்ளன. ஒருசில போட்டிகளில் ஆங்கிலேயர்களும் உற்சாகமாக இந்தியர்களோடு கலந்து பங்கேற்றுள்ளனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆங்கிலேய அதிகாரிகள் பரிசும், பதக்கமும் கொடுத்து கெளரவித்துள்ளார்கள். The Graphic பத்திரிகையில் 1887ஆம் வருடம் பிப்ரவரி 12 அன்று வெளிவந்த சில புகைப்படங்களில் அன்றைய பொங்கல் பண்டிகை பற்றிய சில புகைப்படங்கள் உள்ளன. பிரிட்டிஷ்காரர்களும் ரேக்ளா ரேஸில் கலந்துகொண்டு ஆர்வமாக குதிரையோட்டினார்கள் என்பதை அந்தப் படங்களிலிருந்து பார்க்கமுடிகிறது.
இப்படி பிரிட்டிஷ்காரர்களும் , இந்தியர்களும் அநேக விளையாட்டுகளில் ஒன்றாகக் கலந்துகொண்டு விளையாடினாலும் பிரிட்டிஷ்காரர்கள் ஒரேயொரு விளையாட்டில் மட்டும் வெகுகாலம்வரை இந்தியர்களைச் சேர்த்துக்கொள்ளவில்லை. வேட்டை, ரேக்ளா ரேஸ், பளுதூக்குதல் ஏன் மல்யுத்தம் போன்ற போட்டிகளில்கூட இந்தியர்களோடு ஆர்வமுடன் கலந்துகொண்டவர்கள், ஏன் அந்த விளையாட்டில்மட்டும் சேர்த்துக்கொள்ளவில்லை? வேறொன்றுமில்லை அந்த விளையாட்டு காட்டுத்தனமான இந்தியர்களுக்கு சரிபட்டுவராது என்றுதான் ஒதுக்கிவைத்தார்கள். பிரிட்டிஷ்காரர்கள் அந்த விளையாட்டை ராயல் விளையாட்டாக நினைத்து பெருமைபட்டுக்கொண்டார்கள். பிரிட்டிஷ் உயரதிகாரிகள் அதை தங்கள் பாரம்பரிய விளையாட்டாகவும், தனித்துவமிக்க விளையாட்டாகவும் கருதினார்கள்.
அந்த விளையாட்டு எங்கிருந்து வந்தது என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் வரலாற்றுத்தகவல்களை வைத்துப் பார்க்கும்போது அது கடலோடிகளால் ஏதாவது ஒரு தீவில் தொடங்கியிருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். ஆம். பிரிட்டிஷாரே கடலோடிகள்தானே. அந்நாட்களில் கடலில் வருடக்கணக்கில் சுற்றும் மாலுமிகள் ஏதாவது தீவில் சிலநாட்கள் இளைப்பாறுவது வழக்கம். அப்படி ஓய்வெடுக்கும்போது அங்குள்ள தென்னை மரங்களிலிருந்து விழுந்த தேங்காய்களை கேட்ச் பிடித்து விளையாடியுள்ளார்கள். அதிலிருந்துதான் இன்றைக்கு நாம் ரசித்துக்கொண்டிருக்கும் பிரிட்டிஷ் கிரிக்கெட் விளையாட்டு தோன்றியுள்ளது. எங்கோ ஒரு தீவில் தொடங்கிய ஒரு சல்லித்தனமான விளையாட்டுதான் பின்னாட்களில் மெருகேற்றப்பட்டு பிரிட்டிஷாரின் ராயல் விளையாட்டான கிரிக்கெட்டாக மாறியது. இங்கிலாந்திலிருந்து இங்கு அறிமுகமான கிரிக்கெட் முதன்முதலில் எங்கு விளையாடப்பட்டது என்று தெளிவான குறிப்புகள் இல்லை. 1721ஆம் வருடம் குஜராத் மாநிலத்தின் பரோடா அருகே பிரிட்டிஷ் கப்பல் மாலுமிகள் சிலர் கிரிக்கெட் விளையாடியதாக தகவல்கள் உள்ளன. ஆனால் 1792இல் மதராஸ் தீவுத்திடல் மைதானத்தில் பிரிட்டிஷார் கிரிக்கெட் ஆடிய ஓவியங்கள் உள்ளன. தாமஸ் மற்றும் வில்லியம் டேனியல் வரைந்த இந்த ஓவியங்கள் பற்றி ‘சென்னை மறுகண்டுபிடிப்பு’ நூலில் எஸ்.முத்தையா குறிப்பிட்டுள்ளார். 1892ஆம் வருடம் இலங்கையிலிருந்து வந்த தி சிலோன் ஐரோப்பியன் XI அணியும், மதராஸ் கிரிக்கெட் கிளப்பில் இருந்த பிரிட்டிஷ் அணியும் இங்கு மாபெரும் போட்டி நடத்தியுள்ளார்கள். இதுதான் இங்கு நடந்த முதல் வெளிநாட்டு கிரிக்கெட் போட்டியும்கூட.
மதராஸ் சிவில் சர்வீஸில் வேலைபார்த்த விளையாட்டுப் பிரியரான ஆர்பத்நாட் என்பவர் 1846ஆம் வருடம் மதராஸ் கிரிக்கெட் கிளப்பை தொடங்குகிறார். அப்போது ஆர்பத்நாட்டின் வயது இருபத்திநான்குதான். அன்றைய மதராஸ் கவர்னராக இருந்தவர் ஹென்றி போட்டிங்கர். அவரே கிளப்பின் முதல் தலைவராக இருந்தார். அதற்குபிறகு தொடர்ந்து வந்த டேனியல் எலியட், ஹாரிஸ் போன்ற மதராஸ் கவர்னர்களே அந்த கிளப்பின் தலைவர்களாக இருந்தார்கள். கிரிக்கெட் கிளப்பில் இந்தியர்கள் யாரும் சேரமுடியாது. கிட்டத்தட்ட நூறு வருடங்கள் அப்படித்தான் இருந்தது. இந்த கிளப்பில் உறுப்பினர்களாக இருந்தவர்களும், பிரிட்டிஷ் இராணுவ வீரர்களும் மட்டுமே கிரிக்கெட் விளையாடியுள்ளார்கள். மதராஸ் கிரிக்கெட் கிளப் போட்டிகள் பெரும்பாலும் கூவம் நதியையொட்டி இருந்த தீவுத்திடலிலே நடந்துள்ளன. ஆனாலும் விளையாட்டு போட்டிகள் நடத்த கிளப்புக்கென்று நிரந்தர இடமில்லை. கோட்டையைச் சுற்றி இராணுவவீரர்கள் வசித்ததால் அங்கே நிரந்தர விளையாட்டு மைதானம் அமைப்பது பாதுகாப்புக்கு உகந்தது இல்லை என்று காரணம் சொல்லி கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணை கட்டிய புகழ்பெற்ற பிரிட்டிஷ் பொறியாளர் ஜான் பென்னிகுவிக் அப்போது மதராஸ் கிரிக்கெட் கிளப்பில் உறுப்பினர். கிரிக்கெட் பைத்தியமும்கூட. அவர் ஆர்பத்நாட்டிற்கு கடிதமெழுதி சேப்பாக்கமருகே தனி மைதானம் கொடுங்க என்று கேட்கிறார். சேப்பாக்கம் மைதானம் ஆற்காடு நவாப்பின் வசமிருந்தது. வரி கட்டமுடியாத பஞ்சாயத்தில் அந்த நிலம் பிரிட்டிஷ்காரர்களுக்கு சென்றிருந்தது. ஆர்பத்நாட் கவர்னரிடம் கேட்க அனுமதி வருகிறது. நிலத்தைச் சீர்படுத்தி மைதானம் அமைக்கிறார்கள். பிரிட்டிஷ் பொறியாளர் ராபர்ட் சிஸ்ஹோல்ம்தான் பெவிலியனை அமைக்கிறார். இதுபற்றி எஸ்.முத்தையாவின் புத்தகத்தில் விரிவாகவே பதிவுசெய்யப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் செவ்வக வடிவில் இருந்த மைதானத்தின் நீளமான பக்கங்கள் வடக்கு தெற்காக இருந்தன. மரத்தாழ்வாரத்துடன் இருந்த சிறிய பெவிலியன் கிழக்கு பக்கமாக வாலாஜா சாலை – பெல்ஸ் சாலை சந்திப்பைப் பார்த்து இருந்தது. வாலாஜா சாலை நீளத்துக்கு ஆடுகளம் இருந்துள்ளது. அன்றைய பஞ்சத்தின் விளைவாக மதராஸ் நோக்கி படையெடுத்த மக்களை வைத்து பக்கிங்ஹாம் கால்வாயை வெட்டினார்கள் என்று கடந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அதே பணியாட்களை அழைத்து மைதானத்தின் கிழக்கே சீர்படுத்தியுள்ளார்கள். பிறகு அது சர்ச்சையாகியுள்ளது. பஞ்சநேரத்தில் விளையாட்டா என்று பலர் விமர்சிக்க இரண்டு வருடங்கள் மீண்டும் தீவுத்திடல் சென்று விளையாடியுள்ளார்கள். பிறகு கால்வாய் பணி முடிந்ததும் மீண்டும் சேப்பாக்கத்துக்கே திரும்பி வந்துவிட்டார்கள்.
பல வருடங்களாக நாமும் கிரிக்கெட் விளையாடவேண்டும் என்ற மதராஸ் மக்களின் கனவை நிறைவேற்றியவர் புஜ்ஜிபாபு நாயுடு என்பவர். பாரி நிறுவனத்தில் வேலைபார்த்தவர். பிரிட்டிஷ் காரர்களிடம் மொழிபெயர்ப்பாளராக (துபாஷி) இருந்தவர். மதராஸ் யுனைடெட் கிரிக்கெட் கிளப் என்ற பெயரில் புதிய கிளப் ஒன்றை தொடங்கி இந்தியர்களை சேர்த்துக்கொள்கிறார். மிகவும் ஏழ்மையில் இருந்த ஆனால் விளையாட்டு ஆர்வமிக்க வடசென்னை இளைஞர்களைத் திரட்டி அவர்களுக்கு தனது சொந்தச்செலவில் உணவு, உடை, விளையாட்டுக்கருவிகள் வாங்கிக் கொடுத்து மிகச்சிறந்த விளையாட்டு டீமை உருவாக்குகிறார். வேலைவெட்டிக்கு போகாம விளையாடிக்கிட்டு இருக்கியே என்று அந்த இளைஞர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் திட்டியுள்ளார்கள். ஆனால் புஜ்ஜிபாபு அவர்களை சமாதானப்படுத்தி அந்த தமிழ் இளைஞர்களை அழைத்துச்செல்கிறார். பயிற்சிபெற முறையான மைதானம் இல்லை. எஸ்பிளனேடு பகுதியில் இருந்த ஒரு கரடுமுரடான மைதானத்தில் பயிற்சி பெற்றுள்ளார்கள். புஜ்ஜிபாபுவின் நீண்ட போராட்டம், தொடர் கோரிக்கைகளுக்குப் பிறகு பிரிட்டிஷ்காரர்கள் சேப்பாக்கம் மைதானத்தைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி தருகிறார்கள். ஆனால் தமிழர்களுக்கு அந்த பெவிலியனில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி இல்லை. மரத்தடியில் உட்கார்ந்து சாப்பிட்டுள்ளார்கள். அதையும் புஜ்ஜிபாபு தனது நீண்ட போராட்டத்துக்குப் பிறகு மாற்றியமைக்கிறார். தமிழர்களுக்கென்று ஓரமாக தனி டேபிள் தருகிறார்கள். இப்படி நிறவெறியும், ஜாதிவெறியும் மிக்க அந்தச் சூழலில்தான் எல்லா அவமானங்களையும் பொறுத்துக்கொண்டு வீரர்கள் பயிற்சி எடுக்கிறார்கள்.
ஆனாலும் மதராஸ் கிரிக்கெட் கிளப்பில் இருந்த பிரிட்டிஷ் உயரதிகாரிகள் மதராஸ் யுனைடெட் கிரிக்கெட் கிளப் வீரர்களை ஏளனத்துடன் பார்த்தே பரிகாசம் செய்துள்ளார்கள். அந்த இளைஞர்கள் துவண்டுபோகும்போதெல்லாம் புஜ்ஜிபாபு அவர்களுக்கு நம்பிக்கையும், உற்சாகமும் கொடுத்துள்ளார். மிக நீண்ட போராட்டத்துக்குப் பிறகு புஜ்ஜிபாபுவின் கனவு நிஜமாகிறது. இரண்டு கிளப்புகளுக்கும் இடையில் போட்டி வைத்துக்கொள்ள முடிவெடுக்கப்படுகிறது. மண்ணின் மைந்தர்களும், வந்தேறி பிரிட்டிஷ்காரர்களும் மோதப்போகிறார்கள். ஆனால் இந்த விதையை தூவி நீருற்றிய புஜ்ஜிபாபு இறந்துவிடுகிறார். வீரர்கள் அனைவரும் கலங்கிநிற்க புஜ்ஜிபாபுவின் உதவியாளர் சுப்ரமணியம் களமிறங்குகிறார். சோர்ந்திருந்த வீரர்களுக்கு உற்சாகமூட்டி பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக களத்தில் இறக்குகிறார். மழையால் மீண்டும் ஆட்டம் தள்ளிப்போகிறது. பிறகு மீண்டும் போட்டி ஆரம்பமாகிறது. புஜ்ஜிபாபு நினைவு கிரிக்கெட் போட்டி என்ற பெயரில் தொடங்கப்பட்ட அந்தப் போட்டியே பின்னாட்களில் மதராஸ் கிரிக்கெட் அணி தொடர்ந்து பலபோட்டிகள் நடத்த தூண்டுகோலாக இருந்தது. ஒவ்வொரு வருடமும் மதராஸில் பிரம்மாண்டமாக நடந்த பொங்கல் விழாவில் இந்த கிரிக்கெட்டும் இடம்பெறத் தொடங்கியது. புஜ்ஜிபாவுவின் தியாகத்தை இந்திய வீரர்கள் மட்டுமல்ல பிரிட்டிஷாரும் நினைவுகூர்ந்தார்கள்.
ஒருகாலத்தில் கடலோடிகளால் விளையாடப்பட்டு பின்னாட்களில் இங்கிலாந்தின் ராயல் விளையாட்டாக மாறியது, அதேதான் இங்கும் நடந்தது. இந்த மண்ணின் அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களால் விளையாடப்பட்டு இந்தியர்களுக்கென்று மரியாதையை ஏற்படுத்திக்கொண்ட விளையாட்டு மெல்ல மெல்ல பின்னாட்களில் உயர்குடி சமூகத்தின் கைகளுக்குச் சென்று பெரும் வணிகமும், சூதும் புரளும் விளையாட்டாக மாறியது பெரும்சோகம்.
முந்தைய தொடர்கள்:
5.பின்னிமில்லின் கதை – https://bit.ly/2QtMPs9
4.ஒரு கால்வாய் மறைந்த கதை – https://bit.ly/3b5ypq7
3.தேசத்தை அளந்த கால்களின் கதை – https://bit.ly/2IZXNBK
2.ஆர்மீனியர்கள்: வாழ்ந்துகெட்ட வம்சத்தின் கதை – https://bit.ly/3db1vWN
1.தறிப்பேட்டையும், மஸ்லின் துணியின் கதையும் – https://bit.ly/2J0okyC
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- சென்னை வானிலை ஆய்வு மையத்தின் கதை-விநாயக முருகன்
- சென்னையின் முகமான தி.நகர்- விநாயக முருகன்
- சென்னையும், வேல்ஸ் இளவரசரின் வருகையும் - விநாயக முருகன்
- ஏழுகிணற்றின் வரலாறு- விநாயக முருகன்
- அது ஒரு டிராம் வண்டிகள் காலம் - விநாயக முருகன்
- அடையாறும், ஆல்காட் இயக்கமும்- விநாயக முருகன்
- ஒரு வங்கி திவாலான கதை - விநாயக முருகன்
- மைனர் மாளிகையும் ஒரு நள்ளிரவுப் படுகொலையும்
- சென்னையின் சிவப்பு மாளிகைகள்- விநாயக முருகன்
- சென்னையின் சில பெயர்களும், காரணங்களும்- விநாயக முருகன்
- கன்னிமாராவின் கதை-விநாயக முருகன்
- பிரிட்டிஷாரின் ஆவணங்கள் காட்டும் உண்மைகள்- விநாயக முருகன்
- கோஷா மருத்துவமனையின் கதை – விநாயக முருகன்
- பின்னிமில்லின் கதை - விநாயக முருகன்
- ஒரு கால்வாய் மறைந்த கதை - விநாயக முருகன்
- தேசத்தை அளந்த கால்களின் கதை - விநாயக முருகன்
- ஆர்மீனியர்கள்: வாழ்ந்துகெட்ட வம்சத்தின் கதை - விநாயக முருகன்
- தறிப்பேட்டையும், மஸ்லின் துணியின் கதையும் - விநாயக முருகன்